ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கை: தமிழ் மக்கள் பேரவையின் பேரணியில் இணையுமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் அழைப்பை நிராகரி!

சோசலிச சமத்துவக் கட்சி, யாழ்ப்பாண கிளை
16 செப்டெம்பர் 2019

இன்று தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் இணையுமாறு கல்விசாரா ஊழியர் சங்கம் விடுத்துள்ள அழைப்பை நிராகரிக்குமாறு நாம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ் மக்கள் பேரவையும் அதன் தமிழ் தேசியவாத பேரணியும், பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பரந்த மக்களின் நலன்களுக்கும் தீங்கு விளைவிப்பதாகும். அண்மைய காலம் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு தலைவராக இருந்த முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையானது ஒரு தமிழ் முதலாளித்துவ வர்க்க குழுவால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். அவர், தமிழ் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவப்பேறு பெற்ற நிலையில், தமிழ் மக்கள் கூட்டணி என்ற மற்றொரு கட்சியை ஸதாபித்திருந்தாலும் அதே கொள்கைகளையே பின்பற்றுகிறார்.

செப்டம்பர் 10 அன்று தொடங்கிய பல்கலைக்கழக தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம், ஊதிய உயர்வு மற்றும் சமூக நிலைமைகளின் அபிவிருத்தியை வெல்வதற்கு மிக முக்கியமானதாகும். இந்த போராட்டத்திற்காக தொழிலாளர்கள் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் என்ற இன எல்லைகளைக் கடந்து ஒன்றுபட்டுள்ளனர். கடந்த மாதங்களில் இதே போன்று தொழிலாளர் போராட்டங்கள் அபிவிருத்தியடைந்ததுடன் வரவிருக்கும் போராட்டங்களும் அதே வழியில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். உண்மையில், உலக முதலாளித்துவத்தால் சர்வதேச ரீதியில் தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் சர்வதேச அளவில் வளர்ந்து வருகின்றன. பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டம் இந்த சர்வதேச போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

கொழும்பின் ஏறக்குறைய மூன்று தசாப்த கால யுத்தத்தின் பேரழிவையும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின்படி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்களையும் எதிர்கொண்டுள்ள, வடக்கு மக்களின் சமூக மற்றும் ஜனநாயக பிரச்சினைகளை, தமிழ் முதலாளித்துவத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு சுயாட்சியை நிறுவுவதன் மூலம் தீர்க்க முடியும் என்ற தமிழ் மக்கள் பேரவையின் வழிமுறை பொய்யானதும் பிற்போக்கானதுமாகும். இந்த அமைப்பு, இந்திய மற்றும் சர்வதேச சக்திகளுக்கு அழைப்பு விடுப்பதுடன், இந்த சக்திகளை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் ஊதுகுழலான தமிழ் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் முதலாளித்துவ கட்சிகளும் கடந்த காலத்தில் இதையே பிரசாரப்படுத்தின.

தெற்கிலும் மற்றும் வடக்கு, கிழக்கிலும் முதலாளித்துவத்தின் இந்த வேலைத் திட்டங்கள், அடுத்தடுத்து பேரழிவையே கொண்டு வந்தன என்பது தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இரத்தத்தில் கற்றுக்கொண்ட படிப்பினைகளாகும்.

தொழிலாளர்களால் முதலாளித்துவக் கட்சிகள் மீது நம்பிக்கை வைக்க முடியாது. தேசியவாத தீர்வுக்கு உரிமை கோரும் தேசியவாதமானது முதலாளித்துவ கட்சிகளுக்குப் பின்னால் தொழிலாளர்களை பிளவுபடுத்திவிடும் ஒரு கொடூர விஷமாகும்.

மூன்றாவது தரப்பின் உத்தரவாதத்துடன், தமிழ் மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு எழுத்து மூலம் உறுதியளிக்கும் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் தனது கட்சி உட்பட தமிழ் கட்சிகள் ஆதரிக்க முடியும் என்று விக்னேஸ்வரன் சமீபத்தில் கூறினார் -விக்னேஸ்வரன் குறிப்பிடாவிட்டாலும் புது டில்லி அல்லது வாஷிங்டனின் உத்தரவாதத்தையே அவர் எதிர்பார்க்கிறார். என்னவொரு பிற்போக்கான நம்பிக்கை? அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட இந்த பெரும் வல்லரசுகள் ஜனநாயக உரிமைகளை மீறுவதில் பேர் போனவையாக இருப்பதோடு, அவை கொழும்பு அரசாங்கங்களின் இரத்தக்களரி யுத்தத்துக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கும் தெற்கில் அடக்குமுறை ஆட்சிக்கும் உதவியவை ஆகும்.

தொழிலாளர்கள் தெற்கிலும், இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளின் பக்கம் திரும்பி அவர்களுடன் ஒன்றிணைந்து தங்கள் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகப் போராட வேண்டும். சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலின் தோற்றுவாய், உலக முதலாளித்துவத்துடன் பிணைந்துள்ள முதலாளித்துவ முறைமையே ஆகும்.

தொழிற்சங்கங்களும் முதலாளித்துவ கட்சிகளும் தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்கு தடைகளாகும். தமிழ் முதலாளித்துவத்தின் ஒரு பிரிவினரின் இன்றைய பேரணியில் இணையுமாறு யாழ்ப்பாண, பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்துள்ள அழைப்பு, இந்த தடையை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது. முதலாளித்துவக் கட்சிகளை ஆதரிக்கும் தெற்கில் உள்ள தொழிற்சங்கங்களின் வகிபாகமும் இதுவேதான். அவை முதலாளித்துவக் கட்சிகளுக்கும் அரசாங்கத்துக்கும் வேண்டுகோள் விடுப்பதோடு கடைசியில் போராட்டங்களை காட்டிக் கொடுத்து விடுகின்றன.

அதனாலேயே, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகளுக்காகப் போராட தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, வேலைத் தளங்கள், தொழிலாளர் குடியிருப்புகளிலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. இத்தகைய நடவடிக்கைக் குழுக்கள் மாணவர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்கள் உட்பட இளைஞர்களினதும் ஆதரவுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

முதலாளித்துவத்தை தூக்கி வீசி சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டம், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதையும் சோசலிச சமத்துவக் கட்சி கவனத்திற்கு கொண்டு வருகிறது. மாற்றீடு என்பது எந்தவொரு முதலாளித்துவ கட்சிக்கும் அல்லது அதன் அரசாங்கத்திற்கும் ஆதரவளிப்பது அல்ல, மாறாக தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிச ஒன்றியங்களின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை, அதாவது ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதாகும்.

இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்.