ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Statement of the International committee of the Forth International on the situation in Sri Lanka and the Political Task of the Revolutionary Communist League

ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை

19 Novembre 1987

இலங்கை நிலைமை தொடர்பாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 32 வருடங்களுக்கு முன்னர் பிரசுரித்த அறிக்கையை மீண்டும் மறுபிரசுரம் செய்கிறோம்.

1. இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற எண்ணற்ற துன்பகரமான அனுபவங்கள் பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவத்தின் துரோகத்தனத்தையும், பிற்போக்குத்தனத்தையும் ஏற்கனவே நிறுவிக்காட்டியுள்ளன. இவற்றிலே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டதும், இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களிலே இந்தியாவின் ஆக்கிரமிப்பும் ஒடுக்கப்பட்ட உழைப்பவர்களுக்கு கிடைத்த இன்னுமொரு கசப்பான அனுபவமாகும். ஜெயவர்த்தனாவினதும் காந்தியினதும் செயல்களிலே ஏதாவது ஒருமைப்பாடு இருந்தது என்றால் அவர்களின் கூட்டு சதித்திட்டத்தை நிறைவேற்ற இருவரும் இணைந்து செய்த வஞ்சனையும், கொடுமையும்தான். இந்த தேசிய முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களான கொலைகாரர் இருவரும் செய்தது மறக்கவும், மன்னிக்கவும் முடியாததாகும். ஏகாதிபத்திய அடிவருடிகளான சியாங் கேய் ஷேக், சதாத், மொபுட்டு போன்றோருக்கு அருகில் இடம்பிடிக்கவேண்டியவர்களாவர். ஜெயவர்த்தனாவினதும் காந்தியினதும் அரசியலானது தமது நாடுகளில் தேசிய முதலாளித்தும் எதிர்காலத்தில் ஏதாவது ஒரு முற்போக்கு பாத்திரம் வகிக்கும் என்ற அற்ப சொற்ப பிரமைகளைக்கூட அழித்துவிட்டது.

2. பல தசாப்தங்களாக இந்திய முதலாளித்துவம், காந்தியம் என்றறியப்பட்ட வரலாற்று தப்பெண்ணத்தின் மகிமையில் திளைத்திருந்துகொண்டு, வெகுஜனங்களின் குழப்பத்தையும் மற்றும் மகாத்மாவின் அரசியல் சூழ்ச்சிமிக்க சன்னியாசித்தனத்தையும் சாதகமாக பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி சுறாக்களின் ஊழல்களுக்கு ஒரு மூடுதிரையை போர்த்தி வைத்திருந்த்தது. “அணிசேராமை” என்ற புனிதப் போர்வையால் தன்னை மென்மையிலும் மென்மையானதாக உலகத்திற்கு காட்டும் உலகின் நான்காவது பெரிய ஆயுதப்படையை கொண்டுள்ள இந்திய முதலாளித்துவம், தெற்காசியாவில் ஏகாதிபத்தியத்தின் நலனை மிக மௌனமாகவும், கொடுங்கோன்மையாகவும் பாதுகாத்துக்கொண்டு,  தனது சொந்த நாட்டினுள்ளேயே மிக ஒடுக்கப்பட்ட எண்ணற்ற தேசிய இனங்களின் ஜனநாயக அபிலாஷைகளை ஏறிமிதித்துள்ளது. தேசிய விடுதலைக்கான போராட்ட வரலாற்றில், ஒரு சிறிய கௌரவங்கூட இல்லாத இலங்கை முதலாளித்துவம் வேண்டுமென்று தனது புவியியல் சூழலின் நிலைப்பாட்டையும், விஜயன், துட்டகைமுனு, பாராக்கிரமபாகு போன்ற கர்ண பரம்பரைக் கதைகளையும் தனது மேலாதிக்கத்தினை நியாயப்படுத்திக்கொள்வதற்கான காரணங்களாக காட்டுகின்றது.

3. 1948 இல் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை இல்லாதொழித்ததில் இருந்து, 1956 தமிழ்மொழிக்கான சம அந்தஸ்த்தை நிராகரித்ததனூடாக, 1983 தமிழ் விரோதப் படுகொலை செய்ததோடு, இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஆக்கிரமித்ததன் மூலமாக ஒரு தொடர்ச்சியான வரலாற்றை கொண்டுள்ள இலங்கை முதலாளித்துவம், தனது இரத்தம் தோய்ந்த குற்றங்களை இலங்கையின் ஒற்றையாட்சி அரசின் இறையாண்மையை பாதுகாக்க முயல்வதாகக் கூறி நியாயப்படுத்திக்கொண்டது. தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்திற்கு வெகு ஜனங்களின் பேராதரவை பெறுவதற்காக இந்திய தேச விஸ்தரிப்பிற்கு எதிராக சிங்கள இனமானது தனது ஒரு கடைசி நிலைப்பாட்டை எடுக்கத்தள்ளப்பட்டுள்ளதாக மிகவும் கீழ்த்தரமான இனவாத உணர்வுகளுக்கு அழைப்புவிட்டது. கிராமப்புற வெகுஜனங்களுக்கு அத்தியாவசிய ஜீவாதாரத்தேவைகளை நிராகரித்த இந்த முதலாளித்துவ கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விவசாயிகளுக்கு தமிழ் விரோத நஞ்சை ஊட்டியது.

4. இதற்கிடையில் குள்ளத்தனம் வாய்ந்த புதுடில்லி சதிகாரர்கள், இலங்கை தமிழ் மக்களின் அவலநிலை குறித்து நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட முதலைக் கண்ணீர் வடித்ததோடு தாமே சிங்கள இனப்படுகொலையை தடுக்கவந்த காவலர்கள் என்று போலியாக காட்டிக்கொண்டு விடுதலை இயக்கங்களின் கொள்கைகள் மீது முழுமையாக கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பாவித்தார்கள்.

5. இறுதியில், கொலைகார வர்க்க நலன்களால் நீண்ட காலமாக வழிநடத்தப்பட்ட ஏமாற்று நாடகங்கள் அனைத்தும் அப்பட்டமாக அம்பலமாகியது. ஜெயவர்த்தனாவின் சிங்கள தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கும் தன்மையும் ராஜீவ் காந்தியின் தமிழ் மக்களின் விடுதலையை பாதுகாப்போம் என்பதும் எதிர்பார்த்த மாதிரியே எந்த மக்களுக்காக அவர்கள் பேசுவதாகக் கூறினார்களோ அம்மக்களுக்கு எதிராக ஒரு ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கையை எடுக்கையில் உருக்குலைந்து கோணங்கி வேடமாகியது. ஜெயவர்த்தனா வட-கீழ் மாகாணங்களை எல்லையற்ற காலத்திற்கு இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டார். தமிழ் மக்களை வேட்டையாட நான்கு வருடங்களாக பாவிக்கப்பட்ட இலங்கை இராணுவம் இன்று வறிய சிங்களத் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் நசுக்க தெற்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய முதலாளித்துவத்தை பொறுத்தவரையில் தமிழ் மக்களை பாதுகாப்பதென்பது, அவர்களை பூண்டோடு அழிப்பதற்கான முற்றுமுழுதான தாக்குதலை தொடுப்பதாகிவிட்டது. அவர்களின் செயல்களானது, வியட்நாமில் கியூ (Hue) பிரதேசத்தை தரைமட்டமாக்கியபோது "ஒரு நகரத்தை காப்பாற்ற வேண்டுமானால் சில வேளைகளில் அதனை அழிக்க நேரிடுகின்றது" என்ற அமெரிக்க தளபதி ஒருவரின் வார்த்தைகளை நினைவூட்டுகின்றது. இங்கு இந்திய முதலாளித்துவமும், ஒரு தேசத்தை "காப்பாற்ற" அதன் மக்களையே பூண்டோடு அழிக்க முன்மொழிகின்றது.

6. இலங்கை முதலாளித்துவத்தின் செயல்களை எத்தனையோ வரலாற்றுச் சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். இதற்கு ஒப்புமையாக நாம் கடந்தகால புரட்சிகர வரலாறுகளில் காணமுடியும். இந்த சந்தர்ப்பத்தில் வரலாற்று சமாந்தரத்தை மிகப்பொருத்தமாக நினைவூட்டுவது, பிரெஞ்சு பூர்சுவாக்களும், பிரெஷ்சிய பூர்சுவாக்களும் 1871ல் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த பாரிஸ் தொழிலாளர்களை நசுக்குவதற்காக ஐக்கியப்பட்டமையும், இந்தச் சம்பவத்திற்கு 46 வருடங்களிற்கு பின்பு கெரென்ஸ்கி போல்ஷிவிக் புரட்சியிலிருந்து தப்புவதற்காக பெட்ரோகிராட்டை ஜேர்மனியிடம் ஒப்படைக்க முற்பட்டதுமாகும். ஜெயவர்த்தனாவின் துரோகத்திலிருந்து கற்கும் பாடம் என்னவெனில் தேசிய முதலாளித்துவத்தின் "தேசபக்தியில்" வரலாற்று உள்ளடக்கம் ஏதும் இல்லாதிருப்பதுடன், அது முதலாளித்துவ பேராசையின் பலவீனமான வெளிப்பாடாகும். அது எப்பொழுதும் அவர்களின் வர்க்க நலன்களுக்கு அடிபணிந்ததாகும். இலங்கை முதலாளித்துவத்தின் ஆட்சியானது இப்போது வட-கிழக்கு மாகாணத்தில் இந்திய ஆக்கிரமிப்பிலும் தெற்கிலே தமிழ் விரோத இனவாதமும் என்ற இரு தூண்களிலிலேயே தங்கியுள்ளது. இந்நிலைமைகள் ஒரு வரலாற்று உண்மையை வெளிப்படுத்துகின்றன. அதாவது, எந்தவொரு நாட்டிலுள்ள தேசிய இனங்களினதும், இன மற்றும் மதக் குழுக்களினதும் ஜனநாயகரீதியான சமத்துவம் என்பது பாட்டாளி வர்க்கத்தால் தலைமை தாங்க்கப்பட்ட சோசலிசப் புரட்சியால் மட்டுமே அடையப்பட முடியும் என்பதாகும்.

7. காந்தியினதும் ஜெயவர்த்தனாவினதும் சதியானது இந்திய உபகண்டத்தில் உள்ள தேசிய முதலாளித்துவத்தின் கொடூரமான தன்மையை வெளிப்படுத்துகையில், இந்த புதிய வரலாற்று அனுபவமானது, குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் திவாலான தன்மையையும் அம்பலப்படுத்துகிறது. அதாவது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க குட்டி முதலாளித்துவ தேசியவாதம் இலாயக்கற்றதென்பதை இது நிறுவிக் காட்டியுள்ளது. வரலாற்று நெருக்கடியான காலகட்டங்களிலே முழு மக்களினதும் தலைவிதி தத்தளித்துக் கொண்டிருக்கையிலே மற்றவரின் மனம் நொந்துவிடும் என்று சிந்திப்பதற்கு எதுவுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தின் நிலைமையைப் பற்றியோ, அதன் போராளிகளின் தலைவிதியில் அனுதாபங்கொண்டோ கூறவேண்டிய உண்மையை கூறாது விடமுடியாது: ஜூலை 29, 1987இல் இருந்து தேசிய விடுதலை போராட்டம் சந்தித்த கடுமையான பின்னடைவுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கைகளே பிரதான பொறுப்பாகும்.

8. பிரபாகரன், தான் புதுடில்லிக்கு பறந்துசென்றதும், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டதும், இந்தியாவினது தந்திரத்தினதும் கபடத்தினதும் விளைபொருள் என்கின்றார். இந்த “சாக்குப்போக்கு” LTTE இன் அறியாமையையும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் அரசியல் திறனற்றதன்மையையுமே அம்பலப்படுத்துகிறது. LTTE இன் தலைவர் ஏன் காந்தியினால் ஏமாற்றப்படக் கூடியவராக இருந்தாரென்றால், அவரது முழு கொள்கையுமே தமிழீழத்தின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கு இந்திய முதலாளித்துவத்தை வருந்தி அழைத்து உதவி செய்யும்படி கேட்ட அரசியலின் அடித்தளத்திலேயே கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்த பேரழிவுகரமான தவறான கணிப்பீட்டிற்கான மூலவேர்கள், முதலாளித்துவ தேசியவாத வேலைத்திட்டத்திலேயும் மற்றும் வர்க்க முன்னோக்கிலுமே உள்ளது.

70 வருடத்திற்கு முன்பு லெனின் எச்சரித்தது போன்று, ஓர் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதலாளித்துவத்தின் தேசிய சுயநிர்ணய உரிமை பற்றிய எண்ணக்கரு என்னவெனில் தனது சொந்த பிரத்தியேக முன்னுரிமைகளை பாதுகாத்துக்கொள்வதும் மற்றும் ஒரு “சுதந்திரமான” நாட்டினுள் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் சுரண்டுவதற்கான சிறப்பான நிலைமைகளை உருவாக்கிக்கொள்வதுமாகும். இந்த சுயநலமானது, தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதனூடாக உழைப்பிலிருந்து உபரி இலாபத்தை சுரண்டுவதில் தன்னை அடித்தளமாக கொண்டுள்ள முதலாளித்துவத்தின்  வர்க்க குணாம்சத்தில் புறநிலைரீதியாக வேரூன்றியுள்ளது. முதலாளித்துவ தேசியவாதத்தின் அனைத்து கன்னைகளின் கொள்கைகளையும், LTTE போன்ற தீவிர போக்குகளின் கொள்கைகளையும், இந்த வர்க்க காரணிகளே வழிநடத்துவதுடன் அவர்களின் அரசியல் சாமுத்திரிகா இலட்சணத்தையும் தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் முதலாளித்துவத் தேசியவாதிகள் விடுதலைப் போராட்டம் தங்கள் "கட்டுப்பாட்டிலிருந்து கைநழுவி" முதலாளித்துவ ஆட்சியை பாதுகாப்பதற்கு ஒரு அச்சுறுத்தலாக மாறாமல் பாதுகாத்துக் கொள்வார்கள்.

9. ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் நுகத்தடியிலிருந்து தமது நாட்டை விடுவிப்பதற்கான தவிர்க்கமுடியாத முன்நிபந்தனையான சர்வதேச நிலைப்பாட்டை எடுப்பதற்கு இயல்பாகவே தகமையற்ற ஒடுக்கப்பட்டதும் பின்தங்கியதுமான நாடுகளிலுள்ள முதலாளித்துவவாதிகள், ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களை அணிதிரட்டுவதை கட்டுப்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அக்டோபர் 16, கம்கறுமாவத்தை பத்திரிகை பின்வருமாறு சரியாக குறிப்பிட்டது:

"தேசிய பிரத்தியேக (புறநீங்கல்) வாதத்தையும் தமது உரிமையை மட்டும் அடையும் இலக்கையும் மாத்திரம் அடிப்படையாக கொண்ட ஓர் இயக்கத்தால் ஒருபோதும் தேசிய விடுதலையை அடையமுடியாது. எமது சகாப்தத்தில் அப்படியான ஒரு இயக்கம், அது எவ்வளவுதான் பாரிய வெகுஜன இயக்கத்தை உருவாக்ககூடிய பலத்தை கொண்டிருந்தாலும் அது முதலாளித்துவ நாடுகளிடையே தனிமைப்படுத்தப்பட்டுவிடும். ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் விடுதலை இயக்கமானது, முற்றுமுழுதாவும் தடையின்றியும் ஜனநாயகத்திற்காகப் போராடும் இயக்கத்தின் பாகமாக இருந்தால் மட்டுமே முன்னேறிச் செல்லமுடியும்.

‘‘தேசிய பிரத்தியேகவாதம், (புறநீங்கல்வாதம்) ஓர் ஒடுக்கப்பட்ட தேசத்தின் தேசிய விடுதலைப் போராட்டம் அவ்வாறான ஒரு ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் பாகமாவதை தடை செய்யும். ஏனெனில், இறுதிப் பகுப்பாய்வில், தேசிய பிரத்தியேகவாதமானது (புறநீங்கல் வாதமானது) தனது சொந்த நாட்டுத் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் சுரண்டும் தேசிய முதலாளித்துவத்தின் பிரயத்தனத்தோடு பின்னிப் பிணைந்ததுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் இயலாமையின் ஊற்றிடம் இதுவேயாகும்.

10. இந்திய இராணுவத்தினால் செய்யப்பட்ட கொடூரமான படுகொலைகளை உள்ளடக்கிய இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை LTTE ஏற்றுக்கொண்டதன் துன்பகரமான விளைவுகள் இருந்தபோதிலும், மீண்டும் காந்தி ஆட்சியுடனான அதன் இழிந்த கூட்டணியில் எஞ்சியுள்ளவற்றை தக்க வைக்க முயற்சி செய்கிறது. இந்திய இராணுவத்தின் இனப்படுகொலை சம்பவத்தை அடுத்து அக்டோபர் 14, பிரபாகரன் அறிக்கை வெளியிடும் பொழுது, இந்த இனப்படுகொலை நிகழ்ச்சி தப்பபிப்பிராயத்தால் ஏற்பட்டது என்று பாசாங்கு செய்தார். அவர் காந்திக்கு அனுப்பிய செய்தியில், ‘தனது அரசியற் தலைவிதியை நிர்ணயிக்கும் ஜனநாயக சுதந்திரம் உள்ள மக்கள் மீது, இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாடு தனது விருப்பத்தை துப்பாக்கி முனையில் திணிப்பது வியப்பானது’ என்று கூறினார். இந்திய “ஜனநாயகம்” பற்றிய பிரபாகரனது கண்டுபிடிப்பானது, அவரின் அப்பாவித்தனத்திற்கான சிறந்த உதாரணமாகும். இது தமிழ் வெகுஜனங்களை ஏமாற்றும் கபடம் நிறைந்ததாகும். இதன் நோக்கு கொழும்பு, புதுடெல்லி மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள தமது வர்க்க எதிரிகளுக்கு எதிராக தொழிலாளர்களினதும்  விவசாயிகளினதும் சுயாதீனமான அணிதிரளலை தடுக்கும் நோக்கத்தை கொண்டதாகும்!

11. LTTE இன் தோல்வியானது தேசிய சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை பெறுமதியற்றதாக்கிவிடவோ அல்லது அவ்வாறான ஒரு போராட்டம் நம்பிக்கையற்றது என்றோ அர்த்தப்படவில்லை. இது, தேசிய ஜனநாயக இயக்கமானது ஒடுக்கப்பட்ட நாட்டின் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தோடு பின்னிப் பிணைந்ததையே மீண்டும் எடுத்துக்காட்டுகின்றது. தீர்க்கப்படாத ஏனைய ஜனநாயகக் கடமைகளோடு தேசிய சுயநிர்ணய உரிமையையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம்தான் அடையப்பட முடியும். நான்காம் அகிலத்தின் இந்த வரலாற்று முன்நோக்கானது, இலங்கையிலுள்ள சிங்கள தமிழ் மக்களின் 40 வருட அனுபவத்தால் மீண்டும் துன்பகரமான முறையில் நிறுவிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த கால் நூற்றாண்டாய் பப்லோவாத திரிபுவாதிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட லங்கா சம சமாஜ கட்சியின் (LSSP) வரலாற்றுத் துரோகம் இல்லையெனில், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டமும் ஸ்ரீலங்கா பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டிருக்கமாட்டாது.

1964 பண்டாரநாயக்கா கூட்டரசாங்கத்தில் LSSP நுழைந்தமையானது, வர்க்கப் போராட்டத்தினதும், தேசிய விடுதலைப் போராட்டத்தினதும் வரலாற்று திருப்பு முனையை குறிக்கின்றது. இந்த வரலாற்று துரோகத்திற்கு முன்னர், தமிழ் மக்கள் தொழிலாள வர்க்கத்தை தலைமைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததோடு இலங்கை முதலாளித்துவத்தை பாட்டாளி வர்க்கம் தூக்கி எறிந்தவுடன், இன ஒடுக்கு முறையும் இல்லாதுபோய்விடும் என்று உறுதியுடன் நம்பியிருந்தார்கள். இதை 1953 கர்த்தாலிலும் (பொதுவேலை நிறுத்தம்) 1963-64 21 அம்ச கோரிக்கை போராட்டங்களிலும் நிதர்சனமாக காணக்கூடியதாக இருந்தது. 1964 லிருந்து 1972 க்கு இடையே முழுநிலமைகளும் மாறியது, LSSP, முதலாளித்துவ அரசைப் பாதுகாக்க பொறுப்பெடுத்ததோடு, தேசிய ஒடுக்க முறையை நிறுவனமயப்படுத்திய அரசியலமைப்பு சட்டத்தை வரைவதிலும் பங்கெடுத்திருந்தது. LSSP ஆல் கைவிடப்பட்ட தமிழ் மக்கள் முதலாளித்துவ தேசியவாத அரசியலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

12. LSSP இன் துரோகங்கள் இருந்தபோதிலும், முதலாளித்துவ தேசியவாத முட்டுச்சந்தில் இருந்து மீழ்வதற்கான ஒரு வழியை காட்டிய முன்னோக்கு தமிழ் சிங்கள தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டம் ஒன்றேயாகும். இந்திய ஆக்கிரமிப்பானது, தமிழ் தேசிய இனத்தின் ஒடுக்க முறைக்கும் தெற்கிலுள்ள சிங்கள வெகுஜனங்களின் ஒடுக்கு முறைக்குமான வர்க்க அடித்தளத்தை அம்பலப்படுத்தியதோடு, வர்க்கப் போராட்டத்தையும், தேசிய விடுதலைப் போராட்டத்தையும் சிங்கள, தமிழ் தொழிலாள வர்க்கத்தின் மேலாதிக்கத்தின் கீழ் ஐக்கியப்படுத்த வேண்டிய அத்தியாவசியத்தையும் மீண்டும் எழுப்புகிறது. இது,  ஸ்ரீலங்கா தமிழீழ ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான பதாகையை உயர்த்துவது என்பதை சரியாக அர்த்தப்படுத்துகின்றது!

13. முதலாளித்துவ அரசுகளின் அழுகுகின்ற கட்டமைப்பு முறைக்குள்ளும் மற்றும் அவர்களின் செயற்கையான தேச எல்லைகளுக்குள்ளும் திக்குமுக்காடி திணறுவதை தவிர வெகுஜனங்களின் அடிப்படை பொருளாதாய தேவைகளையோ, ஜனநாயக அபிலாஷைகளையோ பூர்த்திசெய்ய முடியாது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து, வெவ்வேறுவிதமான மொழி, மத, இனக்கூறுகளின் உண்மையான ஜனநாயக சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித் தேசிய அரசை உருவாக்க ஏகாதிபத்தியம் அனுமதித்தது கிடையாது. மாறாக ஏகாதிபத்தியத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட "சுதந்திரம்" என்பது, ஜனநாயகக் கொள்கைகளின் ஒரு கேவலமான சமரசத்தின் அடிப்படையில் அமைந்த முறைதவறிப் பிறந்த அரசுகளாகும். இந்த அரசுகளின் உருவாக்கத்தினுள்ளே தேசிய முதலாளித்துவம் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களை விடுதலை செய்பவர் என்ற பாத்திரத்தை வகிக்காமல் ஏகாதிபத்திய கொள்ளையில் இளைய பங்காளியாக செயல்பட்டுள்ளது. இப்படி உருவாக்கப்பட்ட அரசுகள், உற்பத்தி சக்திகளின் முற்போக்கான அபிவிருத்தி சாத்தியமற்ற அழுகுகின்ற முதலாளித்துவத்தின் மறியல் வீடாகவே இருப்பதை தவிர வேறொன்றும் அல்ல.

14. இந்த முதலாளித்துவ அரசுகளின் மீதான ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் பின்விளைவுகள் அனைவரும் நன்கு அறிந்ததே. இந்த நாடுகளில் தொடர்ந்து நிலைத்திருக்கக்கூடிய ஓர் உள்நாட்டுத் தொழிற்சாலையை அமைக்க முடியவில்லை. இவர்களின் பொருளாதார தலைவிதி சில மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்வதோடு மாத்திரம் விலங்கிடப்பட்டு மீண்டும் திருப்பிச் செலுத்த முடியாத மீளாக் கடனிலும் ஆறாத் துயரினிலும் பூதாகாரமான எழுத்தறிவின்மை, நோய்நொடி, பஞ்சம் பசி, பட்டினிச்சாவு என்பவையையே நிரந்தரமாக நிலவுகின்றன. இந்த பின்தங்கிய நாடுகளில் எங்காவது ஒரு உள்நாட்டு தொழிற்சாலை உருவாக்கப்பட்டிருந்தால், அவையும் பிரத்தியேகமாக ஏகாதிபத்தியத்தால் கட்டுப்படுத்தப்படும் பல்தேசிய உற்பத்தியின் ஒரு பாகமாகவும் ஏகாதிபத்திய அதீத இலாபத்தை சுரண்டும் ஊற்றிடமாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த போலிப் பொருளாதார அபிவிருத்தி ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் எந்த தேவையையும் நிறைவு செய்யப் போவதில்லை. இத்தகைய நிலைமைகளின் மத்தியில் ஏகாதிபத்தியத்தின் வாழ்த்துக்களோடு பெருக்கெடுப்பதுதான் இனக்கலவரங்களும், யுத்தக் களரிகளும். முதலாளித்துவ ஆட்சி முறை இருக்கும்வரை இதுவே நிலைமை, மாறாது. இந்திய பாக்கிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ், பர்மா போன்ற நாடுகளின் சுதந்திரத்திற்கு பிந்திய வரலாறு — உண்மையில், உலகெங்கிலுமுள்ள முன்னாள் காலனித்துவ நாடுகள் அனைத்திலுமே முதலாளித்துவத்தால் ஒருபோதும் உண்மையான தேசிய ஐக்கியத்தையோ, அரசியல் சுயாதீனத்தையோ நிறுவமுடியாது என்பதைத்தான் தீர்க்கரமாக நிரூபிக்கின்றன.

15. ஸ்ராலினிஸ்டுக்களதும், திரிபுவாதிகளினதும், குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளதும் எதிர்ப்பிற்கு மத்தியில் இந்தக் கடமைகளை செய்து முடிப்பதை வரலாறு பாட்டாளி வர்க்கத்திடமே ஒப்படைத்துள்ளது. இந்த ஒரேயொரு சமூக சக்தியால் மாத்திரந்தான் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை  யதார்த்தமாக்க முடியும். பாட்டாளி வர்க்கம் இதைச் செய்து முடிக்கும் பொழுது ஒருபோதும் முதலாளித்துவத்தின் சகபாடியாக செய்யாது. மாறாக பரம எதிரியாகவே செய்து முடிக்கும். பாட்டாளி வர்க்கம் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை தனது சொந்த ஆயுதத்தால், தனது சொந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை தனக்கு பின்னே அணிதிரட்டியே செய்து முடிக்கும். தேசிய சுயநிர்ணய உரிமையை பாட்டாளி வர்க்கம் சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாகவே செய்து முடிக்கும். பாட்டாளி வர்க்கத்தால் தலைமை தாங்கி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிர்மாணித்ததுடன் ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களுக்கும் அவர்களது ஜனநாயக உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கப்படும். தேசங்களின் உண்மையான சமத்துவம் என்ற கட்டமைப்பிற்குள், அது தாமே முன்வந்து ஒரு ஐக்கிய சோசலிச சமஷ்டிக் குடியரசை அமைக்கும்படி அறைகூவும், அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தாமே முன்வந்து ஐக்கிய குடியரசு அமைக்கும் பட்சத்தில் ஒடுக்கப்பட்ட இனங்களின் பொருளாதார, கலாச்சார முன்னேற்றங்களுக்கு அதிக வாய்ப்பு கிட்டுமென நம்பும் பாட்டாளி வர்க்கம் தனது சர்வாதிகாரத்தின் கீழ், பிரிந்து செல்ல விரும்பும் தேசிய இனங்கள் செல்வதற்கு உறுதி அளிக்கும். தமிழீழம்-ஸ்ரீலங்கா ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற வேலைத்திட்டத்தையே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தன் வேலைத் திட்டத்தின் முக்கிய சாராம்சமாக முன்மொழிந்துள்ளது.

16. இந்திய இலங்கை ஆளும் வர்க்கத்தால் விலைக்கு வாங்கப்பட்ட LSSP மற்றும் ஸ்ராலினிஸ்டுக்களே இந்தப் போராட்டத்திலே உள்ள பிரதான தடைக்கற்களாகும். ஜெயவர்த்தனா ஆட்சியுடனான அவர்களது நடப்பிலுள்ள கூட்டணி, ஒற்றையாட்சி அமைப்பு முறையை பாதுகாத்தல் என்ற தவிர்க்க முடியாத அரசியலின் வெளிப்பாடாகும். இந்த இரண்டு கட்சிகளுமே முதலாளித்துவத்திலிருந்து இம்மியும் சுயாதீனமானவையல்ல, கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரமானது ஸ்ராலினிசத்தின் முழு வரலாற்றிலிருந்து வேரூன்றி வந்தது. LSSP தனது கடந்தகால பாரம்பரியம் முழுவதையும் உதறித்தள்ளிவிட்டது. வலிமைமிக்கவர்கள் எவ்வாறு வீழ்ந்துபோயினர்! கொல்வின் ஆர். டி. சில்வாவின் தேசிய இனம் பற்றிய கடந்தகால எழுத்துக்கள் மாக்சிச இலக்கியத்தின் வளம்மிக்க தாரக மந்திரங்களாகும். இன்று அவையே அவரால் தலைமை தாங்கப்பட்டு வழிநடத்தப்படும் கட்சியின் முழு அரசியலையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துகின்றது. LSSP வண்டியில் UNP குதிரைகளை பூட்டி, டி. சில்வா இந்த நாட்டிலேயுள்ள படுபிற்போக்கு சோவனிச சக்திகளுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார். சிங்கள அரசை பாதுகாப்பதில் எந்த அக்கறையும் இல்லாத தொழிலாள வர்க்கத்தின் விருப்பத்திற்கு மாறாக செயற்பட்டு ஜெயவர்த்தனா செய்த அத்தனை மோசமான குற்றங்களுக்கும் LSSP யும் தனது சக பங்கை ஏற்கிறது.

17. அதற்கும் மேலாக இவர்கள் வடக்கு கிழக்கிலே இந்திய ஆக்கிரமிப்பை  வரவேற்பதானது, ஒடுக்கப்பட்ட சிங்கள விவசாயிகளின் நியாயமான தேசிய உணர்வுகளை உதாசீனம் செய்வதாகும். இச்செயல்கள் அதிபிற்போக்கான JVP மற்றும் அதன் வழிகாட்டியான SLFP இன் கரங்களை பலப்படுத்தியுள்ளது. இச் செயல்கள், குட்டி முதலாளித்துவ வெகுஜனங்களின் கண்களிற்கு முன்னால் தொழிலாள வர்க்க இயக்கத்தை இழிவுபடுத்தி, சிங்கள பேரினவாதத்தை அடித்தளமாகக் கொண்ட பாசிச இயக்கத்தின் வளர்ச்சிக்கே உதவுகிறது. இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரானதும் இலங்கை முதலாளித்துவத்திற்கு எதிரானதுமான வர்க்கப் போராட்டத்தினுள்ளே சிங்கள, தமிழ் வெகுஜனங்களை ஜனநாயக ரீதியில் ஐக்கியப்படுத்த பிரயத்தனப்படாமல், LSSP இந்த நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து பிரிவுகளையும் விரோதிப்பதற்கு என்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கிறது. இது, இந்திய ஆக்கிரமிப்பை புகழுவதன் மூலம் தமிழ் மக்களை பூண்டோடு ஒழிக்க ஒத்தாசை வழங்குவதோடு, தெற்கிலே ஜெயவர்த்தனாவின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கிறது. சோசலிச ஜனநாயக வேலைத் திட்டங்களின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதை அடியோடு நிராகரிப்பதே LSSP இன் கொள்கைகளின் முக்கிய அம்சமாகும்.

18. நடந்து முடிந்த அனைத்து சம்பவங்களுமே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் வேலைத்திட்டம் அனைத்தையும் மீண்டும் மீண்டும் சரியென நிறுவிக்காட்டியுள்ளன. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே வடக்கிலுள்ள தமிழ் தொழிலாளர்களதும், தெற்கிலுள்ள சிங்கள தொழிலாளர்களதும் மத்தியில் பாட்டாளி வர்க்க சர்வதேசிய மூலோபாயத்தை உயர்த்திப் பிடித்தது. அதற்கும் மேலாக கடந்த வருடம் சக சகோதர இயக்கமான இந்தியாவின் சோசலிச தொழிலாளர் கழகத்தோடு நெருக்கமுற இணைந்து பல மில்லியன் இந்திய தொழிலாள வர்க்கத்தினுள்ளே ட்ரொட்ஸ்கிசத்திற்காக போராடியது. இதுவுங்கூட இந்திய இலங்கை தொழிலாளர்களின் தலைவிதியானது சிக்கறுக்க முடியாத மட்டத்திற்கு பின்னிப் பிணைந்தது என்பதை நனவுபூர்வமாக விளக்கியதோடு, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமானது இரண்டு தொழிலாளர்களினதும் இணைந்த போராட்டமென்பதையும் விளங்கியதன் அடிப்படையிலாகும்.

19. இந்த இக்கட்டான சூழ்நிலையிலே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தனது சக்திகளை எவ்வளவு வேகமாகப் பரப்ப முடியுமோ அவ்வளவு வேகமாகப் பரப்ப வேண்டும். UNP உடன் கூட்டுச் சேர்ந்துள்ள LSSP, CP க்கு எதிரான போராட்டத்தை உக்கிரப்படுத்த வேண்டும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சரியாக கூறியவாறு:

“இங்கேயுள்ள ஒரே முன்னேறும் வழி, தொழிலாள வர்க்கத்தை, முதலாளித்துவ கட்சியிலிருந்து சுயாதீனமாக அணிதிரட்டி, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இந்திய இலங்கை ஆக்கிரமிப்பு படைகளை அகற்றுவதோடு தமிழ் தேசத்தின் தேசிய ஜனநாயக உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதன் மூலம், சிங்கள, தமிழ் பேசும் மக்களாலான சோசலிச குடியரசிற்கான முன்னோக்கோடு UNP அரசாங்கத்தை தூக்கியெறிய போராட வேண்டும்”.

20. இப்போராட்டத்தின் முக்கிய சக்தியாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தெற்கிலே முதலாளித்துவ வர்க்கத்திற்கும் UNP க்கும் எதிரான தொழிலாள வர்க்க நானாவித போராட்டங்களிலே தன்னை அர்ப்பணிப்பதோடு, முன்னணி வகிக்கவும் வேண்டும். இன்று சீர்குலைந்து சின்னாபின்னப்பட்டுள்ள உலக பொருளாதார நெருக்கடியினால் உந்தப்பட்டு உலகிலுள்ள திருத்தல்வாதிகளால் மறக்கப்பட்ட தொழிலாள வர்க்கம் வரப்போகும் மாதங்களிலே புதிய தாக்குதல்களுக்கு வரவிருக்கிறது. இந்த புதிய தாக்குதலின் போது, சரியான புரட்சிகர கொள்கைகளினால் ஆயுதபாணியாகி, இலங்கையினதும் முழு இந்திய உபகண்டத்தினதும் அரசியற் சூத்திரங்களையும் உருமாற்ற வேண்டும். இன்று நாட்டுப் புறங்களிலே குளறுபடி செய்யும் JVP க்கான ஆதரவு LSSP-CP செய்த துரோகத்தின் அடிப்படையிலும் கிராமப்புற மக்களின் விரக்தியினாலும் உருவானதாகும். எதிர்வரவிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி சிங்கள விவசாயிகளுக்கு ஒரு புதிய முன்னோக்கை வழங்கினால் JVP இல்லாதொழிக்கப்படும்.

21. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, புரடசிக் கம்யூனிஸ்ட் கழகம் கடந்த சில மாதங்களில் கடுமையாக போராடிப்பெற்ற தாக்கம்மிக்க வெற்றியை எண்ணி பெருமைப்படுகிறது. அரசாங்கத்தினதும் சிங்கள இனவாதக் குண்டர்களினதும் ஒடுக்கு முறைக்கு மத்தியிலும் தொழிலாள வர்க்கத்திற்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. அனைத்து கடினமான நிலைமைகளின் மத்தியிலும் இது கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக செய்த வெற்றிகரமான பொதுக்கூட்டங்கள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தமிழ் சிங்கள மக்களிடையே பேராதரவை பெறுகின்றதென்பதும் தெற்கிலே LSSP-CP கட்சிகளிலிருந்தும், வடக்கிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தும் சக்திகளை வெற்றிகொள்கிறது என்பதையே காட்டுகிறது. இந்த வெற்றியின் தாற்பரியந்தான் அண்மையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்று முக்கிய அங்கத்தவர்களை நவம்பர் 12 ஆம் திகதி கொழும்பிலே கொலை செய்ய முயற்சித்தது காட்டுகின்றது.

மீண்டும் இலங்கை தொழிலாள வர்க்கத்தினுள்ளே ட்ரொட்ஸ்கிசத்தின் ஆதிக்கம் உதித்தெழுவதற்கு இலங்கை முதலாளித்துவம் பயப்படுவதற்கு இன்னுமொரு அடையாளம் அண்மையில் JVP, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அங்கத்தவர்களை கொல்லப்போவதாக பயமுறுத்தியதாகும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இந்தத் தாக்குதல்களையும் மிரட்டல்களையும் மிகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிகர வேலைகளை மேலும் உக்கிரமாக்க வேண்டும்.