ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The police murder of Isiah Murrietta-Golding

ஐசாயா முர்ரியெட்டா-கோல்டிங்கின் பொலிஸ் படுகொலை

Tom Carter
26 October 2019

கலிபோர்னியாவின் ஃபிரெஸ்னோவில் ஏப்ரல் 2017 இல் ஐசாயா முர்ரியெட்டா-கோல்டிங் மீதான பொலிஸ் படுகொலையைக் காட்டும் ஒரு காணொளி புதன்கிழமை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் அதிர்ச்சியும் சீற்றமும் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

அதுவொரு வெயில் கொளுத்தும் ஞாயிற்றுக்கிழமை, 16 வயது சிறுவன் தடுப்புச்சுவரைத் தாண்டி ஓர் ஆரம்ப பள்ளியின் வெறுச்சோடிய புல்வெளிக்குள் ஒரு சில அடிகள் எடுத்து வைப்பதை அந்த காணொளி காட்டுகிறது. பின்னர், சில கணத்தில் அந்த பசுமையான புல்வெளியில் வெறிச்சோடிய சூழலில் பயங்கர கதறலுடன், அச்சிறுவன் திடீரென தரையில் சுருண்டு விழுகிறான் — வேலிக்கு மறுபக்கம் கண்ணுக்குத் தெரியாமல் இருந்த பொலிஸ் அதிகாரி Ray Villalvazo சுட்ட ஒரு தோட்டா அச்சிறுவனின் மூளையைத் துளைத்திருந்தது.

அந்த துப்பாக்கிச்சூட்டைப் பதிவு செய்திருந்த ஒரு ஒலிப்பதிவு, அச்சிறுவனின் உடல் தரையில் சரிந்த உடனேயே, மற்றொரு அதிகாரி "அருமையான சூடு!” என்று உரக்க கூறுவதைக் காட்டுகிறது. அந்த குரலின் வெளிப்பாடும் தொனியும், அந்த அதிகாரிகள் ஒரு வேட்டையாடும் பயணத்தில் இருக்கையில், அவர்களில் ஒருவர் சற்று முன்னர் ஒரு சிறந்த மிருகத்தைச் சுட்டு வீழ்த்தியதைப் போல ஒலிக்கிறது.

நடைபயிற்சியில் ஈடுபட்டிருக்கும் மற்றொரு அதிகாரி அச்சிறுவனின் துவண்டு கிடந்த உடலுக்கு அருகே சென்று, அதை ஒரு கையால் தூக்கிப் பார்த்து, எட்டி உதைத்தார், பின்னர் கைகளை மடக்கி கட்டி வைத்து செல்லும் —ஒரே நேரத்தில் மூர்க்கமான மற்றும் அபத்தமான ஓர் இயந்திரத்தனமான நடவடிக்கையை— காட்டும் இந்த காட்சி, ஏதோவொரு விதத்தில் உண்மையிலேயே அமெரிக்க சமூகத்தின் மிகவும் மோசமான நிலையை எடுத்துக்காட்டுகிறது.

அந்த காணொளி அந்த துப்பாக்கிச்சூட்டின் உத்தியோகபூர்வ விபரங்களை வெட்ட வெளிச்சமாக்குகிறது, அதன்படி அச்சிறுவன் "பல முறை அவனின் இடுப்பு பகுதிக்குக் கைகளைக் கொண்டு சென்றான்,” அதுதான் அவரின் உயிருக்கு அஞ்சி தற்காப்புக்காக அந்த அதிகாரியை சுடச் செய்ததாம்.

கிடைத்துள்ள விபரங்களின்படி, ஐசாயா அவர் பள்ளியில் ஒரு நல்ல மாணவர், அங்கே அவர் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். 5 அடி 4 அங்குல உயரத்தில் 109 பவுண்ட் எடையில் இருந்த அவர் "சின்ன பையன்" என்று அழைக்கப்படுகிறார். மருத்துவமனையில் அவர் அருகில் அவர் தாயார் கவலையுடன் இருந்த நிலையில், மருத்துவமனையில் பல நாட்கள் கழித்தே அவர் உயிரிழந்தார்.

அதற்கு முந்தைய நாள் அவர் மூத்த சகோதரருடன் சென்ற கார் பேராபத்தான விபரத்தில் சிக்கிய ஒரு சம்பவம் நடந்ததாக கூறப்படுவது புதிராக உள்ளது. அச்சிறுவன் தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்திருக்கலாம். ஏதோவிதத்தில் அச்சிறுவன் மரணகரமான குற்றத்திற்கு உரியவராக இருந்தார் என்றாலும் கூட, பருவ வயதடையாத அச்சிறுவன் இரகசிய சிறுவர் நீதிவிசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அவருக்கு மறுவாழ்வுக்கான முயற்சிகள் செய்யப்பட்டிருக்க வேண்டுமே தவிர, ஒரு பொலிஸ் அதிகாரியே நீதிபதியாக, நீதி விசாரணைக் குழு நீதியரசராக மற்றும் மரண தண்டனை வழங்குனராக இருந்து நீதி விசாரணையின்றி படுகொலை செய்திருக்கக்கூடாது.

அச்சிறுவன் பொலிஸால் தடுக்கப்பட்ட போது, ஐசாயா ஆரம்பத்தில் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்படிந்தார். அவர் நிராயுதபாணியாக இருந்தார், ஒருபோதும் யாரையும் மிரட்டவில்லை, ஒருபோதும் யாரையும் தாக்கவில்லை. அவர் தப்பித்து ஓடத்தான் முயன்றார். அச்சிறுவனின் கடைசி நிமிடங்களை, பீதியடைந்த தருணங்களை ஒருவரால் கற்பனையும் செய்யவியலாது.

அச்சிறுவனின் பெற்றார்கள் தாக்கல் செய்த சட்டவழக்கின்படி, அந்த அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் மருத்துவ உதவிக்கு அழைப்பு விடுப்பதை தாமதித்தனர். அவசர மருத்துவ வாகனம் வந்தடைந்த போது, அச்சிறுவன் சுய நினைவின்றி இருந்தபோதும் கூட, உடலில் கைகள் கட்டப்பட்டிருந்ததை நீக்க வேண்டுமென்ற மருத்துவ உதவியாளர்களின் கோரிக்கையைப் பொலிஸ் மறுத்தது.

அமெரிக்க இராணுவம் வெளிநாடுகளில் "உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை" கணக்கிட மறுக்கிறது, அதேபோல அமெரிக்க அரசோ நாட்டின் எல்லைகளுக்குள் பொலிஸ் மரணகதியில் பலத்தைப் பிரயோகிப்பதைக் குறித்த புள்ளிவிபரங்களைச் சேகரிப்பதைத் தடுக்கிறது. எவ்வாறிருப்பினும், வாஷிங்டன் போஸ்ட் தகவல் விபரங்கள், ஒவ்வொரு ஆண்டும் பொலிஸால் சுமார் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படுவதாகவும், 2019 இல் இது எழுதப்படும் வரையில் 717 பேர் கொல்லப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இந்த புள்ளிவிபரங்கள், போதை மருந்து அதிகமாக எடுத்துக் கொண்டதால் ஏற்பட்ட உயிரிழப்புகள், தற்கொலைகள், அல்லது "இயற்கையாக ஏற்பட்ட" அல்லது "அதிக சித்தபிரமையால்" ஏற்பட்ட உயிரிழப்புகள் என்று பொலிஸ் மூடிமறைக்கும் படுகொலைகளை விட்டுவிடுவதால், நிஜமான எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதாக இருக்கக்கூடும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் தொழில்துறை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது, இதுவே ஆயிரங்களில் இருக்கும் நிலையில், மில்லியன் கணக்கில் இருக்கும் தவிர்த்திருக்கக்கூடிய விபத்துக்கள் மற்றும் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையையே அது விஞ்சி விடுகிறது. அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்படுகின்ற அதேவேளையில், முகத்தாடை மற்றும் பற்கள் உடைப்பு, கண்கள் இழப்பு, பொலிஸ் நாய்களால் குதறப்படுவது, மண்டை உடைப்பு, நிரந்தர நரம்பு பாதிப்பு, புற அதிர்ச்சியால் மூளை பாதிப்புகள், கால்கள், முதுகு, தோள்பட்டைகள் மற்றும் கழுத்து உடைவு ஆகியவை என ஒவ்வொரு ஆண்டும் பொலிஸால் ஏற்படுத்தப்படும் தவிர்த்திருக்கக்கூடிய காயங்களின் எண்ணிக்கை பத்தாயிரக் கணக்கில் அல்லது நூறாயிரக் கணக்கில் என்று அதிகரித்து கொண்டே செல்கிறது.

பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தின் ஒவ்வொரு சம்பவத்தை அடுத்தும், பாதிக்கப்படுபவர்களும் அவர்களின் குடும்பங்களும் ஒட்டுமொத்த அரசால் கீழ்நிலை குற்றவாளிகளாக பார்க்கப்படுகிறார்கள்.

பொலிஸால் இரகசியமாக நடத்தப்பட்ட ஓர் "உள்விசாரணை", ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏறத்தாழ வேறுபாடின்றி "கொள்கைக்கு உட்பட்டே" அதிகாரிகள் நடந்து கொண்டதாக ஒரு தீர்மானத்தில் போய் முடிகிறது, இவ்விதத்தில் இத்தீர்மானம் இன்னும் பரந்தளவில் வன்முறைகளை அனுமதிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட தெளிவற்ற கொள்கைளைப் பலப்படுத்துகிறது.

இதற்கிடையில், கணக்கில் கொண்டு வருவதில் இருந்து அதிகாரிகளைக் காப்பாற்ற உதவுவதற்காக, வட்டார வழக்குரைஞர் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவார், பொலிஸ் அதிகாரியை "எதிர்த்தமை, தாமதிக்க செய்தமை, அல்லது முட்டுக்கட்டையாக இருந்தார்" என்பது போன்ற ஒன்றுக்கும் உதவாத குற்றச்சாட்டுக்கள் அதில் உள்ளடங்கி இருக்கும். வேறு சில வழக்குகளில், பொலிஸ் நாயால் கடிபட்ட ஒருவர் மீது "பொலிஸ் நாயைத் தாக்கினார்" என்ற குற்றச்சாட்டு பதியப்படும்.

பிரெஸ்னோவில், ஐசாயா முர்ரெட்டா-கோல்டிங் மீதான துப்பாக்கிச்சூடு மீதான உள்விசாரணையின் முடிவுகள் கடந்தாண்டு மார்ச்சில் அறிவிக்கப்பட்டன: “சார்ஜென்ட் Villalvazo இன் நடவடிக்கைகள் துறைசார் கொள்கைக்கு உட்பட்டிருந்தன,” என்று அதில் கூறப்பட்டது.

ஏறக்குறைய 1985 இன் கடைசியில், Tennessee v. Garner வழக்கில், அமெரிக்க உச்ச நீதிமன்றம் எழுதியது: “சந்தேகத்திற்குரியவர் அதிகாரிக்கு உடனடி அச்சுறுத்தலை முன்நிறுத்தவில்லை மற்றவர்களுக்கும் எந்த அச்சுறுத்தலையும் முன்நிறுத்தவில்லை என்றால், அவரைப் பிடிக்க தவறியதில் இருந்து ஏற்படும் பாதிப்பு அதை செய்வதற்கு மரணகதியிலான பலத்தைப் பிரயோகிக்கப்பதை நியாயப்படுத்தாது. சந்தேகத்திற்குரிய ஒருவர் கண்பார்வையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கையில் சந்தேகத்திற்கிடமின்றி அது துரதிருஷ்டவசமாக ஏற்பட்டிருக்கலாம், ஆனால் பொலிஸ் சற்று தாமதமாக வந்தடைந்தது அல்லது சற்று மெதுவாக வந்தடைந்தது என்ற உண்மை சந்தேகத்திற்குரியவரைக் கொல்வதை எப்போதும் நியாயப்படுத்திடாது. ஒரு பொலிஸ் அதிகாரி நிராயுதபாணியான, ஆபத்தில்லாத ஒரு சந்தேகத்திற்குரியவரைச் சுட்டு வீழ்த்துவதன் மூலம் பிடிக்கக் கூடாது.”

ஆனால், அந்த காணொளி வெளியிடப்பட்டதற்குப் பின்னரும் கூட, பிரெஸ்னோ பொலிஸ் அதிகாரிகள் அமைப்பு "அந்த சர்ஜென்டுக்கு முழு ஆதரவளிக்கிறது, அந்த துப்பாக்கிச்சூடு நியாயமானதே என்று அதன் உறுப்பினர்கள் நம்புவதாக தெரிவிக்கிறது,” என்று Fresno Bee குறிப்பிட்டது.

ஜனாதிபதி ட்ரம்ப் சட்ட ஒழுங்கிற்கான அவரின் பாசிசவாத முறையீட்டின் பாகமாக, “குண்டர்களை" “ஒழுங்குமுறையின்றி" கையாளும் காணொளிகளை அவர் காண விரும்புவதாக 2017 இல் நியூ யோர்க்கில் பொலிஸ் அதிகாரிகளின் ஒரு கூட்டத்தில் பிரசித்தமாக கூறி, மக்களுக்கு எதிராக பொலிஸைத் தூண்டிவிட அவர் பாணியில் சென்றார். “தயவுசெய்து மிகவும் மென்மையாக இருக்காதீர்கள்,” ட்ரம்ப் ஒத்தூதினார், அது அங்கே கூடியிருந்த காவலர்களிடையே பெரும் கரவொலியைப் பெற்றது.

ட்ரம்புக்குப் பக்கவாட்டில் அமெரிக்க கொடி மற்றும் பொலிஸ் அடையாள முத்திரைகளுடன் "ட்ரம்பின் காவலர்கள்" என்ற டி-சர்ட்கள் அணிந்த பொலிஸ் அதிகாரிகள் நிற்க, மின்னிசொடாவில் சமீபத்திய ஒரு பேரணியில் ட்ரம்ப் தோன்றினார். ட்ரம்ப் வெளிப்படையாகவே அதிகாரிகள் சீருடையில் இருப்பதை விரும்பினார், இது அரசியல் ஒப்புதலில் தடை செய்யப்பட்ட வடிவமாகும்.

இதற்கிடையே, ஜனநாயகக் கட்சியினர், கவலை தொனிக்கும் அவர்களின் அனைத்து தோரணைகள் மற்றும் வெளிப்பாடுகள் ஒருபுறம் இருக்க, சிகாகோ, நியூ யோர்க் மற்றும் லாஸ் ஏஞ்சல் போன்ற பொலிஸ் காட்டுமிராண்டித்திற்கு இழிபெயரெடுத்த நகரங்களில் தலைமை வகிக்கின்றனர். ஒபாமா நிர்வாகம், அதன் பங்கிற்கு, “தகுதியான விலக்கீட்டுரிமை" என்ற எதேச்சதிகார கோட்பாட்டைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்திற்கு வரும் உள்நாட்டு உரிமைகள் மீதான வழக்குகளில் பொலிஸ் தரப்பில் மீண்டும் மீண்டும் தலையீடு செய்தார்.

அமெரிக்கா எங்கிலுமான பள்ளிகள் மற்றும் அண்டைஅயலார் பகுதிகளில், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் மீதும் மற்றும் அதிகாரிகளின் ஆக்ரோஷமான விட்டுக்கொடுக்காத தன்மை மீதும் மக்களின் கோபம் சீறி வருகிறது. இந்த அரசு விவகாரங்கள் மீது சில குறிப்பிட்ட அரசியல் முடிவுகள் எடுத்தாக வேண்டும்.

“குறைந்தபட்சம் கவனம் செலுத்த மதிப்புடைய விடயத்தில், மிகவும் பழக்கமான விடயத்தில், ஆழமாக வேரூன்றியவை மட்டுமின்றி, ஒருவர் ஸ்தம்பித்து நிற்கக்கூடியதாக கூறக்கூடிய அபிப்ராயங்களால் பரிசுத்தப்படுத்தப்பட்ட மேலோங்கிய கலாச்சார எதிர்ப்புவாதத்திற்கு வர்க்க-நனவுள்ள தொழிலாளர்களின் கவனம்" மீது எவ்வாறு பிரெடரிக் ஏங்கெல்ஸ் கவனத்தைக் கொண்டு வருகிறார் என்பதை அரசும் புரட்சியும் என்ற ஆய்வுரையில் விளாடிமீர் லெனின் விவரிக்கிறார்.

ஏங்கெல்ஸ் எழுதுகிறார், “அரசு, எப்போதும் என்றென்றும் இருந்ததில்லை. அது இல்லாத சமூகங்களும் இருந்துள்ளன, அவற்றுக்கு அரசு பற்றியோ மற்றும் அரசு அதிகாரம் பற்றியோ எந்த கருத்தும் இருந்திருக்கவில்லை. பொருளாதார அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அவசியத்திற்கேற்ப வர்க்கங்களாக சமூகம் உடைந்ததுடன் சம்பந்தப்பட்ட இதில், அரசு என்பது இந்த உடைவுக்கு ஏற்ப அவசியமானதாக ஆனது.”

ஆகவே, அரசு என்பது "அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சமூகத்தின் விளைபொருளாகும்; இந்த சமூகம் அதனுடனேயே தீர்க்கவியலாத முரண்பாடுகளில் சிக்கி கொள்கிறது, அது சமரசப்படுத்தவியலாத எதிர்விரோதங்களாக உடைந்து, அதை அது தீர்க்க சக்தியற்றுள்ளது. ஆனால் இத்தகைய எதிர்விரோதங்களின் காரணமாக, ஒன்றுக்கொன்று முரண்பட்ட நலன்களைக் கொண்ட இந்த வர்க்கங்கள், தங்களையும் சமூகத்தையும் பயனற்ற போராட்டத்தில் மூழ்கடித்துக் கொள்ள முடியாது. அவசியத்திற்கேற்ப, வெளிப்பார்வைக்குச் சமூகத்திற்கு மேலே உயர்ந்து நிற்கக்கூடிய, மோதல்களை நிவர்த்தி செய்யக்கூடிய மற்றும் அதை 'ஒழுங்கு' எல்லைக்குள் வைத்திருக்கும் ஒரு அதிகாரம் தேவைப்பட்டது; இந்த அதிகாரம், சமூகத்திலிருந்தே வெளிப்பட்ட ஆனால் அதற்கு மேலாக தன்னை நிறுத்திக் கொண்ட இதுதான், அதிலிருந்து இன்னும் இன்னும் அதிகமாக தன்னை அன்னியப்படுத்திக் கொண்ட இதுதான், அரசு என்பது.”

லெனின் வினவுகிறார், “இந்த அதிகாரம் பிரதானமாக எதை உள்ளடக்கி உள்ளது?” இது முக்கியமாக "ஆயுதமேந்தியவர்களின் சிறப்பு அமைப்புகளை" கொண்டுள்ளது, அத்துடன் சிறைகைதிகள் மற்றும் ஒடுக்குமுறையின் பிற வடிவங்களையும் கொண்டுள்ளது. ஏங்கெல்ஸை மேற்கோளிட்டு லெனின் விவரிக்கையில், வர்க்க எதிர்விரோதங்கள் மிகவும் கூர்மையாக ஆகும் போது விகிதாசார அடிப்படையில் இந்த அதிகாரமும் மிகவும் பலமாக ஆகிவிடுகின்றன.

அமெரிக்காவில், 19 ஆம் நூற்றாண்டு மத்திய காலம் வரையில் பொலிஸ்துறை குறிப்பிடத்தக்களவில் இருந்திருக்கவே இல்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல நகராட்சி பொலிஸ் துறைகள் அவற்றின் தற்போதைய மத்தியமயப்படுத்தப்பட்ட வடிவில் அபிவிருத்தி செய்யப்பட்டமை பாரியளவிலான தொழிலாளர் அமைதியின்மை அலையுடன் பொருந்தி இருந்தது. நவீன பொலிஸ் துறைகள், தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக, பெரும்பாலும் அதீத வன்முறையுடன், மற்றும் "பொது ஒழுங்கு" மீறல்களுக்காக தொழிலாளர்களைப் பாரியளவில் கைது செய்வதற்காகவும் "ஆயுதமேந்திய சிறப்பு அமைப்புகளாக" களத்தில் உருவாக்கப்பட்டன.

இந்த சமூக மற்றும் வரலாற்று வடிவமைப்பை மனதில் கொண்டு, 21 ஆம் நூற்றாண்டில் தீவிரப்படுத்தப்பட்டு வரும் இந்த பொலிஸ் வன்முறை சூழலை, முதல் எடுத்துக்காட்டில், ஒட்டுமொத்த சமூக ஒழுங்கமைப்பின் கூர்மையான நெருக்கடியினது செயல்பாடாக புரிந்து கொள்ள வேண்டும். தசாப்த காலமாக நடத்தப்பட்ட சமூக எதிர்புரட்சி, விண்ணை முட்டும் சமூக சமத்துவமின்மை, வெளிநாடுகளைச் சூறையாடுவதற்கான முடிவில்லா போர்கள், ஜனநாயக அமைப்புகள் முடங்கிப் போனமையும் பொறிவும், உலகெங்கிலும் பகிரங்கமாக தொழிலாள வர்க்க போராட்டங்களின் மீளெழுச்சி ஆகிய அனைத்தும் இந்த சமன்பாட்டில் சீற்றத்தை உண்டாக்கும் காரணிகளாக அமைகின்றன.

எதேச்சதிகார பொலிஸ் பயங்கரவாத ஆட்சியானது, எதிர்கால பாரிய ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கான தயாரிப்பில், மக்களையும் பொலிஸையுமே கூட தீவிர வன்முறைக்கு உட்படுத்த செயல்படுகிறது.

பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தின் பல தனித்தனி சம்பவங்களில் இனவாதம் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது, இதுபோன்ற தப்பெண்ணங்கள் மீதிருக்கும் கோபம் நியாயமானதே. ஆனால் பொலிஸ் காட்டுமிராண்டித்தனம் பிரதானமாக இனவாதத்தின் செயல்பாடு என்று கூறும், Black Lives Matter அமைப்பு மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றைச் சுற்றியிருப்பவர்கள், சமூக ஒழுங்கின் வீழ்ச்சியைக் குறித்த விமர்சனத்தைத் திசைதிருப்ப சேவையாற்றும் ஆழமான காரணங்களைத் தயாரித்து வருகிறார்கள்.  ஐசாயா முர்ரெட்டா-கோல்டிங் படுகொலையில் இன வகைப்பாடு குறித்து வெகு குறைவாக விவரிக்க முடியும், சான்றாக, படுகொலை புரிந்தவரும் ஒரு ஹிஸ்பானிக் பின்பெயரைக் கொண்டவராவார்.

பகுப்பாய்வின் இறுதியில், அமெரிக்காவில் அரசின் முழு ஆதரவை அனுபவித்து வரும் பொலிஸ் காட்டுமிராண்டித்தனம் எனும் கொள்ளைநோய், சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறையினது ஆழ்ந்த நெருக்கடியின் விளைபொருளாகும். அமெரிக்காவிலும் உலகெங்கிலும், இந்த அமைப்புமுறையைச் சீர்திருத்துவதை நோக்கி அல்லாமல் மாறாக தூக்கியெறிவதை நோக்கி திருப்பி விடப்பட்ட சோசலிச நனவு கொண்ட ஒரு புரட்சிகர மார்க்சிச தலைமையைக் கிளர்ச்சிகரமான சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் அபிவிருத்தி செய்வதே பணியாகும்.