ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Washington green lights Turkish attack on Kurdish forces in Syria

சிரியாவில் குர்திஷ் படைகள் மீதான துருக்கிய தாக்குதலுக்கு வாஷிங்டன் பச்சைக்கொடி காட்டுகிறது

By Alex Lantier and Ulaş Atesci
8 October 2019

ஞாயிறன்று இரவு, அமெரிக்க போர் கொள்கையில் ஒரு பிரதான மாற்றமாக, வடக்கு சிரியா மீதான துருக்கிய படையெடுப்புக்கு வெள்ளை மாளிகை பச்சைக் கொடி காட்டியது. இவ்வாறு செய்கையில், இரத்த ஆற்றில் ஒடுக்கப்பட வேண்டிய பயங்கரவாதிகளாக துருக்கிய அரசாங்கம் கண்டனம் செய்து வந்த குர்திஷ் தேசியவாத போராளிகள் குழுக்களின் தலைவிதியைக் அது கைத்துறந்துள்ளது, இக்குழுக்கள் நேட்டோவின் சிரிய போரில் 2015 இல் இருந்து வாஷிங்டனின் பிரதான பினாமியாக சண்டையிட்டு வந்தவையாகும்.

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்து பேசிய பின்னர், வெள்ளை மாளிகை ஞாயிறன்று இரவு பின்வருமாறு குறிப்பிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டது: “துருக்கி விரைவிலேயே வடக்கு சிரியா மீது, நீண்டகாலமாக திட்டமிட்டு வந்துள்ள அதன் நடவடிக்கையை முன்னெடுக்க நகரும். அமெரிக்க ஆயுதப் படைகள் இந்நடவடிக்கையை ஆதரிக்காது அல்லது அதில் ஈடுபடாது, ISIS இன் பகுதியான 'கலிஃபாவை" (Caliphate) தோற்கடித்துள்ள அமெரிக்க படைகள் இனி அப்பகுதியின் மிக அருகில் இருக்காது.”

நேற்று, துருக்கிய-சிரிய எல்லையை ஒட்டிய முகாம்களில் இருந்து அமெரிக்க துருப்புகள் திரும்ப பெறப்பட்ட நிலையில், எர்டோகன் கூறுகையில் துருக்கிய தாக்குதல் எந்நேரத்திலும் தொடங்கலாம் என்றார். “நாங்கள் முடிவெடுத்து விட்டோம்,” என்று அறிவித்த அவர், “'ஒரு நாள் இரவு திடீரென நாங்கள் வருவோம்' என்பதை நாங்கள் கூறியிருந்தோம்.” நாங்கள் எங்கள் தீர்மானத்தைத் தொடர்கிறோம்... இத்தகைய பயங்கரவாத குழுக்களிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை இனியும் சகித்துக் கொண்டிருப்பது என்பது எங்களைப் பொறுத்த வரையில் முற்றிலும் கேள்விக்கிடமற்றது,” என்றார்.


வடக்கு சிரியாவின் டல் அப்யாத் நகருக்கு அருகே துருக்கிய எல்லையை ஒட்டிய சிரிய தரப்பில் "பாதுகாப்பு மண்டலம்" என்றழைக்கப்படுவதில் துருக்கிய கவச வாகனங்கள் அமெரிக்க படைகளுடன் சேர்ந்து, வெள்ளியன்று அக்டோபர் 4, 2019 இல் நடத்திய ஒரு கூட்டு ரோந்து நடவடிக்கை.

அமெரிக்க ஒப்புதலுடன் சேர்ந்து, துருக்கிய அரசாங்கம் சிரியாவில் குர்திஷ் படைகளுக்கு எதிராக ஓர் இரத்த ஆற்றுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது. துருக்கிய-சிரிய எல்லையில் 480 கிலோ மீட்டர்களை (300 மைல்களில் 19 மைல்கள்) ஒட்டி, வடக்கு சிரியாவுக்குள் 30 கி.மீ. உள்ளடக்கிய ஒரு பகுதியைத் துருக்கிய துருப்புகளின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வாஷிங்டனும் அங்காராவும் உடன்பட்டுள்ளன. சிரியாவில் எட்டாண்டு கால நேட்டோ பினாமி போரின் போது துருக்கிக்குத் தப்பி சென்ற 3.6 மில்லியன் சிரிய அகதிகளில் 1 இல் இருந்து 2 மில்லியன் பேரை இந்த பகுதியில் பலவந்தமாக மறுகுடியேற்றம் செய்ய அங்காரா திட்டமிடுகிறது, மேலும் அவசியமானால் இந்த பகுதிக்கு அப்பாற்பட்டும் அதன் தாக்குதலைத் தொடர அச்சுறுத்தி உள்ளது.

டல் அப்யாத்தில் இருந்து ரஸ் அல்-அன் வரையில் எல்லையை ஒட்டிய 100 கி.மீ. தூர இந்த இடைவெளியில் துருக்கிய துருப்புகள் தாக்குதல் நடத்த அனுமதிக்கும் வகையில், அமெரிக்க துருப்புகள் அங்கிருந்து திரும்ப பெறப்பட்டிருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆனால் எல்லை மீதான படையெடுப்பு குறித்த அங்காரா அச்சுறுத்தல்களின் வெளிச்சத்தில் பிபிசி அறிவிக்கையில், “நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பிரிட்டன் மற்றும் அமெரிக்க சிறப்பு படைகள் அப்பகுதியிலிருந்து பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ படைகளைத் திரும்ப பெறுவதற்கான தயாரிப்புகளைப் பல மாதங்களாக செய்து வருகின்றன,” என்று குறிப்பிட்டது.

குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயக படை (SDF) போராளிகள் குழு "துருக்கிய தாக்குதலில் இருந்து நமது தாய்நிலத்தைப் பாதுகாக்க" குர்தியர்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், “ஒட்டுமொத்த எல்லையை ஒட்டி முற்று-முழுதான போருக்கு" சூளுரைத்தது. SDF செய்தி தொடர்பாளர் கினொ காப்ரியல் வெள்ளை மாளிகை அறிக்கையை ஒரு காட்டிக்கொடுப்பாக கண்டித்தார்: “அந்த அறிக்கை ஆச்சரியமாக இருந்தது, அது SDF இன் முதுகில் குத்துவதாக நாங்கள் கூற முடியும்,” என்றார்.

துருக்கிய ஆயுதப்படையின் பணியில் இறக்கி விடப்பட்டுள்ள கனரக ஆயுதமேந்திய 402,000 சிப்பாய்களுக்கு எதிராக வெறும் 60,000 போராளிகளைக் கொண்ட SDF தொடர்ந்து குறிப்பிடுகையில், “அந்த பிரதேசத்தில் எந்தவொரு துருக்கிய இராணுவ நடவடிக்கைகளையும் அனுமதிக்க போவதில்லை என்று அமெரிக்காவிடம் உத்தரவாதங்கள்" பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டது.

உண்மையில், சிரியாவில் அதன் ஆட்சி மாற்றத்திற்கான போரில் SDF ஐ ஆயுதமயப்படுத்தி கட்டமைத்துள்ள வாஷிங்டன் இப்போது அதன் குர்திஷ் "கூட்டாளிகளை" நசுக்கி படுகொலை செய்ய அங்காராவுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து வருகிறது. ட்ரம்ப் அவரின் தீர்மானம் குறித்து நேற்று வெளியிட்ட சரமாரியான ட்வீட் செய்தியில், துருக்கிய துருப்புகள் குர்திஷ் போராளிகள் குழுக்களைத் தாக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதன் மீது அவரின் இறுதி வார்த்தைகளைக் கூறி உத்தேசித்ததைத் தெளிவுபடுத்தினார்.

ட்ரம்ப் எழுதினார், “நான் முன்பே உறுதியாக குறிப்பிட்டுள்ளதைப் போல, வெறுமனே மீண்டுமொரு வலியுறுத்தலாக கூறுகிறேன், எனது தலைச்சிறந்த மற்றும் ஈடிணையற்ற அறிவின்படி, வரம்புமீறலாக நான் கருதும் எதையேனும் துருக்கி செய்தால், நான் துருக்கியின் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்து நிர்மூலமாக்குவேன் (ஏற்கனவே இதை நான் செய்துள்ளேன்!). ஐரோப்பா மற்றும் பிறருடன் சேர்ந்து, அவர்கள், கைப்பற்றப்பட்ட ISIS போராளிகள் மற்றும் குடும்பங்களைக் கவனிக்க வேண்டும். எவரும் ஒருபோதும் எதிர்பார்த்திராத அளவுக்கு அமெரிக்கா நிறைய செய்துள்ளது, ISIS இன் கலிஃபாவை 100 சதவீதம் கைப்பற்றியதும் அதில் உள்ளடங்கும்,” என்றார்.

குர்திஷ் படைகளைப் படுகொலை செய்ய சிரியா மீதான அமெரிக்க-ஆதரவிலான துருக்கிய படையெடுப்பானது ஒரு பயங்கர குற்றமாக இருக்கும், அமெரிக்கா தலைமையில் ஈராக்கிற்கு எதிரான முதல் போரில் இருந்து 2011 இல் லிபியா மற்றும் சிரியா மீது தொடங்கப்பட்ட நேட்டோ போர்கள் வரையில் பல தசாப்தங்களாக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள் மற்றும் பினாமி போர்களால் இரத்தம் சிந்தியுள்ள ஒரு பிரதேசத்தில் இது வன்முறையை இன்னும் பெரியளவில் தீவிரப்படுத்துவதாக அமையும். இது, ஈரானிய வான்எல்லையில் அமெரிக்க டிரோன் ஒன்றை ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக விமானத் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு வெறும் 10 நிமிடங்களுக்கு முன்னர் ட்ரம்ப் அத்தாக்குதல்களை நிறுத்திய சம்பவத்திற்குப் பின்னர் ஒரு சில மாதங்களில் நடைபெறுகிறது.

நேட்டோ ஆதரவிலான பினாமி போராளிகள் குழுக்களுக்கு எதிராக ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சியை ஆதரிக்க ஏற்கனவே ஈரானும் ரஷ்யாவும் சிரியாவில் சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், இந்த இராணுவத் தீவிரப்பாடு நீண்ட காலத்தில் பிரதான உலக வல்லரசுகளுக்கிடையிலான நேரடி மோதலாக ஆகக்கூடிய ஆபத்தை முன்நிறுத்துகிறது. சிரிய இறையாண்மை பகுதி மீது படையெடுத்து ஆக்கிரமிப்பதற்கான துருக்கிய திட்டங்களைச் சிரிய அரசாங்கம் மீண்டும் மீண்டும் கண்டித்து வந்துள்ளது. ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஜரீஃபும், “சிரியாவின் எல்லை ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதன் மூலமாக பாதுகாப்பை உருவாக்க முடியாது,” என்று அறிவித்து, துருக்கிய திட்டங்களை விமர்சித்தார்.

ஆனால் மாஸ்கோ, துருக்கிய இராணுவம் குர்திஷ்களை நசுக்க சிரியா மீது படையெடுத்தாலும் கூட, அங்காராவுடன் ஒத்துழைக்க இப்போதைக்கு உத்தேசித்திருப்பதாக சமிக்ஞை செய்துள்ளது. சிரிய எல்லை ஒருமைப்பாட்டின் மீது துருக்கியும் ரஷ்யாவும் ஒரு பொதுவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக கூறி, கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் சாந்தமாக அறிவிக்கையில், “எங்களின் துருக்கிய நண்பர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் இந்த நிலைப்பாட்டை உறுதியாக கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறோம்,” என்றார்.

அதன் குர்திஷ் கூட்டாளிகள் விடயத்தில் வாஷிங்டனின் இரட்டை-வேடம், மத்திய கிழக்கில் குர்திஷ் மக்களின் ஜனநாயக மற்றும் கலாச்சார உரிமைகளை முன்னெடுக்கும் ஒரு மூலோபாயமான குர்திஷ் தேசியவாதத்தின் திவால்நிலைமையின் மற்றொரு கசப்பான படிப்பினையாகும். துருக்கி, சிரியா, ஈராக் மற்றும் ஈரான் எங்கிலும் பரந்து வாழும் மக்களுக்கு, இத்தகைய உரிமைகளை முன்னெடுக்க, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சர்வதேசரீதியில் ஒன்றிணைப்பதே ஒரே நம்பகமான வழிவகையாகும்.

எவ்வாறிருப்பினும் வரலாற்றுரீதியில் குர்திஷ் முதலாளித்துவ தேசியவாத இயக்கம் மீண்டும் மீண்டும் — "சோசலிச" வாய்வீச்சைப் பிரயோகித்தவாறே — சிஐஏ இல் இருந்து ஈரானின் ஷா மற்றும் இஸ்ரேல் வரையில் வெவ்வேறு முதலாளித்துவ தேசியவாத சக்திகள் மற்றும் வெவ்வேறு ஏகாதிபத்தியங்கள் உடனான கூட்டணிகள் மூலமாகவும், அத்துடன் சேர்த்து மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு முறையீடுகள் செய்ததன் மூலமாகவும் அதன் திட்டநிரலை முன்னெடுக்க முனைந்திருந்தது. இதன் விளைவு தொடர்ச்சியான காட்டிக்கொடுப்புகள் மற்றும் தோல்விகளாக இருந்துள்ளன.

ஈராக் மீதான 2003 அமெரிக்க படையெடுப்புக்குப் பின்னர், வடக்கு ஈராக்கில் குர்திஷ் கட்சிகள் அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரித்தன. சிரிய ஆட்சி, ரஷ்யா மற்றும் ஈரான் உதவியுடன், நேட்டோ ஆதரவிலான அல் கொய்தா தொடர்புபட்ட போராளிகள் குழுக்களைத் தோற்கடித்த பின்னர், குர்திஷ் மக்கள் பாதுகாப்பு அணிகள் (YPG) சிரியாவில் வாஷிங்டனின் நேரடி தலையீட்டில் அதன் பிரதான பினாமி சக்தியாக மாறி, ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசுக்கு (ISIS) எதிரான போர் என்ற பெயரில் சண்டையிட்டன.

இந்த குர்திஷ் போராளிகள் ஈராக் மற்றும் சிரியா மீதான அமெரிக்க போர் குற்றங்களில் மட்டும் உடந்தையாக இருந்திருக்கவில்லை, மாறாக வாஷிங்டன் மற்றும் துருக்கிய ஆட்சிக்கு இடையே முன்பினும் அதிக மோதல்களை தூண்டுவதிலும் உடந்தையாக இருந்தனர். வரலாற்றுரீதியில் அங்காரா குர்திஷ் மக்களை ஒடுக்கி வந்துள்ளதுடன் குர்திஷ் தொழிலாளர்கள் கட்சிக்கு (PKK) எதிராக தசாப்த காலமாக இரத்தந்தோய்ந்த உள்நாட்டு போரை நடத்தி உள்ளது. சிரியாவின் எல்லைக்குள் ஒரு குர்திஷ் அரசு நிலை பெறுவது துருக்கிக்கு உள்ளேயே குர்திஷ் பிரிவினைவாத உணர்வைப் பற்ற வைக்குமோ என்று அஞ்சி, அங்காரா, சிரியா கொள்கை சம்பந்தமாக வாஷிங்டனுடன் முன்பினும் அதிக கடுமையாக மோதியது.

துருக்கிய அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் எர்டோகனை படுகொலை செய்வதற்குமான ஒரு முயற்சியாக 2016 இல் ஒரு தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை வாஷிங்டனும் பேர்லினும் ஆதரித்ததில் இருந்து, இந்த மோதல்கள் அசாதாரண தீவிரத்தை எட்டியுள்ளன.

அமெரிக்காவில் நிலவும் ஆழமான போர்-எதிர்ப்புணர்வு குறித்து அறிந்திருந்ததாலும் மற்றும் துருக்கி உடனான உறவுகள் இன்னும் படுமோசமாக சிதைந்துவிடும் என்று அஞ்சியும், ட்ரம்ப், ஏற்கனவே கடந்த டிசம்பரில், சிரியாவில் SDF உடன் செயல்பட்டு வரும் சில ஆயிரம் அமெரிக்க துருப்புகளைத் திரும்ப பெற அறிவித்தார். அவர் முடிவு பென்டகனால் நிராகரிக்கப்பட்டதுடன், வாஷிங்டனில் குடியரசு கட்சியினர் மற்றும் ஜனநாயக கட்சியினிடம் இருந்து ஒருசேர விமர்சன நெருப்புப்புயலை உண்டாக்கியது. இறுதியில், அமெரிக்க துருப்புகள் சிரியாவிலேயே நிறுத்தப்பட்டன, அங்காரா மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வந்தது.

அவர் நிர்வாகத்தின் உள்நெருக்கடியும் போர் நெருக்கடியும் புதிய உச்சத்தை எட்டியிருக்கின்ற இவ்வேளையில், ட்ரம்ப் இப்போது எர்டோகனுடன் மற்றொரு உடன்பாட்டை எட்டியுள்ளார். ட்ரம்ப் ஈரான் மீதான தாக்குதல்களை இரத்து செய்தும் மற்றும் ஈரான் மீதான போருக்கு உயர்மட்ட ஆதரவாளரான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டனைப் பதவியிலிருந்து நீக்கிய பின்னர், அவர் ஜனநாயக கட்சியின் தலைமையில் ஆளும் வர்க்கத்தினதும் மற்றும் வெளியுறவு கொள்கை ஸ்தாபகத்தினதும் பலமான கன்னைகளால் பதவி நீக்க குற்றவிசாரணையின் இலக்கில் வைக்கப்பட்டார்.

சிரியாவில் இருந்து திரும்ப பெறுவதற்கான ட்ரம்பின் சமீபத்திய உத்தரவு மீதான இந்த நெருக்கடி, பதவிநீக்க குற்றவிசாரணை முனைவின் அடியில் வெளியுறவு கொள்கை சம்பந்தமாக நிலவும் பிற்போக்குத்தனமான மோதலைப் பிரதிபலிக்கிறது. அந்த உத்தரவு ட்ரம்ப் எதிர்ப்பாளர்களிடம் இருந்தும், செனட்டர் லிண்டே கிரஹாம் போன்ற அவரின் குடியரசு கட்சி ஆதரவாளர்கள் சிலரிடம் இருந்தும் கூட பரந்த கண்டனங்களைத் தூண்டியது. ட்ரம்பின் திரும்ப பெறும் உத்தரவை எதிர்க்க 2018 இல் ISIS சம்பந்தமான அமெரிக்க கொள்கை ஒருங்கிணைப்பாளர் பதவியை இராஜினாமா செய்த பிரெட் மெக்குர்க் இன்றைய உத்தரவை "ரஷ்யா, ஈரான் மற்றும் ISIS இக்கான அன்பளிப்பு" என்றார்.

ட்ரம்பைப் பொறுத்த வரையில், அவர் அங்காராவின் அரசியல்ரீதியில் குற்றகர கொள்கைகளை ஆமோதிக்கிறார். சிரிய எல்லையின் ஒரு பகுதியில் மில்லியன் கணக்கான சிரிய அகதிகளை, இவர்களில் பெரும்பாலானவர்கள் அரபியர்கள் என்ற நிலையில், பலவந்தமாக கொண்டு சென்று நிரப்பும் முயற்சி இதில் உள்ளடங்கி உள்ளது. சிரியாவுக்குள் குர்திஷ் குட்டி-நாடு ஒன்று நிலை பெறுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த பிற்போக்குத் திட்டம் மில்லியன் கணக்கான அப்பாவி அரபியர்களைப் பலவந்தமாக போர் பகுதிக்குள் தள்ளுவதை உள்ளடக்கி இருப்பதுடன், அவர்களுக்கும் உள்ளூர் குர்திஷ் மக்களுக்கும் இடையே ஒரு நீண்டகால மோதலை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.