ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වෘත්තීය සමිති ඕල්ටන් වතු කම්කරු වර්ජනය නතර කරයි

இலங்கை: ஓல்டன் தோட்டத்தில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை நிறுத்திக்கொண்டன

By M. Thevarajah
12 October 2019

இலத்திரனியல் அடையாள அட்டை மற்றும் மின் தராசை அறிமுகப்படுத்துவதற்கு எதிராக ஹட்டனில் ஹொரன பெருந்தோட்டத்துக்கு சொந்தமான ஓல்டன் தோட்டத்தில் தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தத்தை அக்டோபர் 7 அன்று தொழிற்சங்கங்கள் தலையிட்டு நிறுத்திவிட்டன.

தோட்ட உரிமையாளர்களுக்கும் ஹட்டன் உதவி தொழில் ஆணையாளருக்கும் இடையில் நடந்த கலந்துரையாடலின் போது புதிய முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அக்டோபர் 13 அன்று தோட்டத்திற்கு வந்து தொழிலாளர்களுக்கு அது பற்றிய “விடயங்களை விளக்கிய” பின்னர் அதை செயல்படுத்துவதற்கும் தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. வேலைநிறுத்தம் நடந்த நாட்களுக்கு ஊதியம் கொடுக்க தோட்ட அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். இருப்பினும் தங்கள் அன்றாட இலக்குகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகும் தொழிலாளர்களுக்கு, அவர்களது ஊதியத்தைக் குறைக்க மாட்டோம் என்று நிர்வாகத்திடம் இருந்து எழுத்துபூர்வ வாக்குறுதி வேண்டும் என்றும், சம்பள வெட்டு தொடர்ந்தால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.

அக்டோபர் 3 அன்று தடங்கிய இந்த வேலை நிறுத்தத்தில் தோட்டத்தின் நான்கு பிரிவுகளில் இருந்தும் சுமார் 1,000 தொழிலாளர்கள் பங்குகொண்டனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), தேசிய தொழிலாளர் சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகிய தொழிற்சங்கங்களுக்கு வெளியில் இருந்தே தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தை தொடங்கினர். தொழிற்சங்கங்களின் அலட்சியத்தை பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தைரியமாகவும் போர்க்குணத்துடனும் தொடர்ந்தனர். வேலைகளை துரிதமாக்குவதற்கு புதிய வேலை முறைகளை அறிமுகப்படுத்துவது, சம்பள பற்றாக்குறை மற்றும் மோசமான வேலை நிலைமைகள் தொடர்பாகவும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடையும் சீற்றம் காரணமாக வேலைநிறுத்தம் மற்ற தோட்டங்களுக்கும் பரவக்கூடும் என்று அஞ்சியே தொழிற்சங்கங்கள் அதைத் தடுக்க தலையிட்டன.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி தெளிவுபடுத்துவதாகக் கூறப்படுவதானது, தொழிலாளர்களை அவற்றுக்கு அடிபணியச் செய்வதற்காக, தோட்ட நிர்வாகிகள், தொழிலாளர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களும் சேர்ந்து தீட்டுகின்ற சதித் திட்டமாகும். உற்பத்தியை அதிகரிப்பதற்கும் சம்பளத்தை வெட்டுவதற்கும் பயன்படுத்தப்பட உள்ள ஒரு திட்டத்தின் பகுதியாகவே இந்த மின் தொழில்நுட்பம் பிரேரிக்கப்பட்டுள்ளது என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

"மாறிவரும் உலகில் நமது வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்த புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால் அது முழுப் பொய். உண்மையில், அவர்களின் குறிக்கோள், எமது வேலை நாட்களைக் குறைத்து ஊதியங்களைக் குறைத்து அவர்களின் இலாபத்தை அதிகரித்துக்கொள்வதே ஆகும். தற்போது நாம் ஒவ்வொரு நாளும் 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும். பலத்த மழை மற்றும் வறட்சி நாட்களில், அந்த இலக்கை அடைவது மிகவும் கடினம்,” என தொழிலாளர்கள் கூறினர்.

18 கிலோகிராம் தினசரி இலக்கை அடையத் தவறும் தொழிலாளர்களின் ஊதியத்தை தோட்ட நிர்வாகிகள் வெட்டி விடுகின்றனர். நாளொன்றுக்கு 8 மணிநேரம் வேலை செய்தாலும் குறைந்த பட்சம் 12 கிலோ கொழுந்து பறிக்க முடியாத தொழிலாளர்களின் அன்றாட ஊதியம் பாதியாக வெட்டப்படுகின்றது. இதன் விளைவாக, சம்பளம் மட்டுமல்லாமல், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஏனைய சமூக நலன்களும் வெட்டப்படும்.

முன்னர் குறித்த நேரத்துக்கு முன்னதாக தங்கள் இலக்குகளை பூர்த்தி செய்யும் தொழிலாளர்கள் சக ஊழியர்களுக்கு உதவி செய்ததாகவும் புதிய முறையின் கீழ் அவ்வாறு செய்ய முடியாது என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். நாளொன்றுக்கு மூன்று முறை கொழுந்து நெறுக்கப்படுவதோடு புதிய முறையின் கீழ், பறித்த கொழுந்து நிறுத்து முடித்த உடனேயே மொத்த சேகரிப்புக்கு நிலையத்துக்கு அனுப்பப்படும். இதனால் தனித் தனி தொழிலாளியின் உற்பத்தித் திறன் அந்த இடத்திலேயே குறிக்கப்படுகிறது. ஆகையால் பரஸ்பர ஒத்துழைப்பில் ஒன்றாக வேலை செய்வதற்கான வாய்ப்பை அவர்கள் இழக்கின்றனர்.

இலக்குகளை பூர்த்தி செய்யத் தவறும் தொழிலாளர்களின் ஊதியத்தை வெட்டும் நடவடிக்கை, மஸ்கெலியா சாமிமலை பகுதியில் கிளனியூஜி, காவராவிலா மற்றும் ஏனைய தோட்டங்களிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தோட்ட கம்பனிகள், தொழிற்சங்கங்களின் ஆதரவோடு வருமான பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், வேலை இலக்குகளை உயர்த்தி இலாபத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன. "தோட்டக் கம்பனிகள் எங்கள் தினசரி சம்பளமாக 1,000 ரூபா வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்டன. தொழிற்சங்கங்கள் எங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுத்து விட்டன. இப்போது அவர்கள் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் மூலம் எங்கள் வேலை நிலைமைகளை மோசமாக்குவதுடன் சம்பளமும் வெட்டப்படும். இப்போது கிடைக்கும் ஊதியம் மளிகை சாமான்களை வாங்க கூட போதாது,” என ஒல்டன் தொழிலாளர்கள் கூறினர்.

முறையான பராமரிப்பு இல்லாததால் தோட்டங்கள் செழிப்பாக இல்லை என்றும், அதனால் இலக்கை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் ஒரு பெண் தொழிலாளி கூறினார். “எங்கள் தோட்டம் காடு போல் உள்ளது. தோட்ட நிர்வாகம் தோட்டத்தை சுத்தம் செய்வதோ, உரமிடுவதோ இல்லை. நோய்களுக்கு மருந்து போடுவதில்லை. இந்த நிலைமையில்தான் அவர்கள் 18 கிலோ கேட்கின்றார்கள்,” என்று அவர் கூறினார்.

இரு பிள்ளைகளின் தாயான சபேஸ்வரி, ஆண்டின் சில மாதங்களில் வேலை இலக்குகளை அடைவது மிகவும் கடினம் என்றார். "ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கேட்கும் அந்த இலக்கை கொடுக்க முடியாது."

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை சிதைப்பதற்காக தோட்ட கம்பனிகளோடும் முதலாளித்துவ அரசாங்கங்களோடும் இணைந்து செயல்படும் தொழிற்சங்கங்கள், அதற்கு ஈடாக பொருளாதார மற்றும் அரசியல் சலுகைகளுக்காக முதலாளித்துவ அரசாங்கங்களிடம் பேரம் பேசுகின்றன மற்றும் முண்டியடிக்கின்றன.

NUW தலைவர் திகம்பரம், ம.ம.மு. தலைவர் வி. ராதாகிருஷ்ணன் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) தலைவர் மனோ கணேசன் ஆகியோர், ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகித்துக்கொண்டு ஆட்சியில் பங்காளியாக இருப்பதோடு இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான், முந்தைய மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். அவர் இப்போது இ.தொ.கா.வை ஏலத்தில் விட்டு ஜனாதிபதி தேர்தலில் பெரிய பங்கு கிடைக்கும் வரை காத்திருக்கிறார்.

பெருந்தோட்டங்கள், ஏனைய நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளிலும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பிக்கொண்டு, சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம், பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் முதலாளிகளினதும் தாக்குதல்களுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்காகவும், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற தொழிலாளர்களின் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்க போராடுவதன்மூலம் மட்டுமே, தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தால் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க முடியும்..

இந்த முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) மட்டுமே போராடுகிறது. இந்த போராட்டத்தின் பாகமாக ஜனாதிபதி தேர்தலில் சோ.ச.க. போராடுகின்றது. சோ.ச.க. இன் வேலைத் திட்டத்தைப் படிக்குமாறும் அதன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்குமாறும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.