ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Syrian army, Iran threaten counterattack against Turkish invasion of Syria

சிரியாவில் துருக்கிய படையெடுப்புக்கு எதிராக சிரிய இராணுவமும், ஈரானும்  எதிர்தாக்குதலுக்கு அச்சுறுத்துகின்றன

By Alex Lantier
14 October 2019

முன்னர் அமெரிக்க ஆதரவு பெற்ற குர்திஷ் படைகளை இலக்கில் வைத்து சிரியா மீதான துருக்கியின் படையெடுப்பால் கட்டவிழ்த்துவிடப்பட்ட போர், சிரிய ஆயுதப்படையும் ஈரானும் எதிர்தாக்குதல் நடத்த நகர்ந்ததும், இவ்வாரயிறுதியில் கட்டுப்பாட்டை மீறி தீவிரமடைந்தன. துருக்கிய துருப்புகளும் அதனுடன் அணி சேர்ந்துள்ள அல் கொய்தா ஆயுதக் குழுக்களும் சிரியாவில் குர்திஷ் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்குள் ஆழமாக முன்னேறி வருகின்ற நிலையில், அப்பிராந்திய பிரதான சக்திகளுக்கு இடையிலான முழு அளவிலான போரிலிருந்து மத்திய கிழக்கு வெறும் வெகுசில நாட்கள் தொலைவில் நிற்கிறது. இத்தகைய ஒரு போர் அணுஆயுதமேந்திய உலக சக்திகளுக்கு இடையிலான ஓர் உலகளாவிய மோதலைத் தூண்டிவிடக்கூடியதாகும்.

துருக்கிய தாக்குதலுக்கு மத்தியில் 130,000 சிரியர்கள் போரிலிருந்து தப்பிப்பதற்காக அவர்களின் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக ஐ.நா. அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன, துருக்கிய அதிகாரிகளோ அவர்கள் குறைந்தபட்சம் 415 குர்திஷ் போராளிகளை "செயலிழக்க" செய்திருப்பதாக வாதிட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் துருக்கிய வான்வழி தாக்குதல்கள் உட்பட கடுமையான சண்டைக்கு மத்தியில் துருக்கிய துருப்புகள் டல் அப்யாத் மற்றும் ரஷ் அல்-அய்ன் நகரங்களைக் கைப்பற்றியதுடன், கொபானியில் அமெரிக்கா மற்றும் குர்திஷ் துருப்புகளின் நகர்வைத் துண்டிக்கும் ஒரு குறுக்குச் சாலையைக் கைப்பற்றின. கொபானிக்கு அருகே அமெரிக்க துருப்புகளை நோக்கி துருக்கிய துருப்புகள் பீரங்கிகளையும் பிரயோகித்தனர். இதை முன்னாள் அமெரிக்க தூதர் பிரெட் மெக்குர்க் "தவறுதலாக நடத்தப்பட்ட ஒன்றல்ல" என்றார். இருப்பினும் துருக்கிய அதிகாரிகள் பின்னர் இத்தாக்குதலை மறுத்தனர்.


ரஷ் அல்-அய்ன் நகர இலக்குகள் மீது துருக்கிய படைகள் நடத்திய குண்டுவீச்சில் உண்டான நெருப்பிலிருந்து வெளியேறிய புகைமூட்டம் [படம்: “AP Photo/Emrah Gurel”]

பல்வேறு செய்திகளின்படி, துருக்கியின் சிரிய "கிளர்ச்சிகர" கூட்டாளிகள், அதாவது முன்னர் சுதந்திர சிரிய ஆயுதப்படை என்றிருந்த இஸ்லாமிக் சிரிய தேசிய ஆயுதப்படை (SNA), அவை கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் பகுதிகளில் குர்திஷ் அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றன. குர்திஷ் அரசியல்வாதி ஹெவ்ரின் கலாஃப் படுகொலை செய்யப்பட்டார்; தோட்டாக்களால் துளைக்கப்பட்ட அப்பெண்மணியின் கார் SNA போராளிகள் சுற்றி வளைத்த ஒரு காணொளியில் காணப்பட்டது. சமயப்பற்றில்லாதவர்களை அழிப்பதற்கான அல் கொய்தா தொடர்புபட்ட அழைப்புகளுக்கு அப்பாற்பட்டு, பிரிட்டிஷ் நாளிதழ் டெய்லி டெலிகிராப் குறிப்பிடுகையில், SNA இன் முக்கிய நோக்கமே "குறுங்குழுவாதம் தான்: அவர்கள் குர்திஷ் எதிர்ப்பாளர்கள், அரபு பேரினவாதிகள்,” என்றது.

அப்பகுதியில் ஊடுருவப் போவதாக நேற்று மாலை சிரிய ஆயுதப்படை அறிவித்தது. உத்தியோகபூர்வ சிரிய அரபு செய்தி நிறுவனம் (SANA) அறிவித்தது: “சிரிய அரபு ஆயுதப்படை பிரிவுகள் சிரிய எல்லைக்குள் துருக்கிய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள வடக்கு நோக்கி நகர தொடங்கிவிட்டன. … இந்த நகர்வு வடக்கில் ஹசாகா மற்றும் ரக்கா மாகாண பகுதிகள் மீதும் மற்றும் நகரங்கள் மீதும் தொடர்ந்து நடந்து வரும் துருக்கிய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்காக செய்யப்படுகிறது, அவ்விடங்களில் துருக்கிய படைகள் உள்ளூர்வாசிகளுக்கு எதிராக படுகொலைகளை நடத்தி, சில பகுதிகளை ஆக்கிரமித்து, உள்கட்டமைப்பைச் சீரழித்துள்ளன.”

சிரிய ஆயுதப்படை குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயக படைகளினது (SDF) ஆயுதக் குழுக்களுடன் ஓர் உடன்படிக்கை எட்டியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன, அமெரிக்கா உடனான இவற்றின் கூட்டணியை வாஷிங்டன் ஒரு வாரத்திற்கு முன்னர் தான் முறித்திருந்தது. இந்த உடன்படிக்கையின் கீழ், சிரிய ஆயுதப்படை துருப்புகள் 48 மணி நேரத்தில் சிரிய-துருக்கிய எல்லைக்கு அருகே கொபானி நகரை எட்டும். சனிக்கிழமை அன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொபானியில் இருந்து எஞ்சிய 1,000 அமெரிக்க துருப்புகளைத் திரும்ப பெற உத்தரவிட்டிருந்தார், முன்னேறி வரும் துருக்கிய துருப்புகளினால் துண்டிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக இவ்வாரயிறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வடக்கு சிரியாவில் இருந்து பின்வாங்க செய்யப்பட்டன.

நேட்டோ தலைமையிலான பினாமி போருக்கு எதிராக சிரிய ஆட்சியை ஆதரிப்பதற்காக சமீபத்திய ஆண்டுகளில் சிரியாவுக்காக டிரோன்களையும் அத்துடன் பத்தாயிரக் கணக்கான துருப்புகளையும் பயன்படுத்தியுள்ள ஈரான், அது சிரிய இராணுவத்தை ஆதரிக்க இருப்பதாக சுட்டிக்காட்டியது.

ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமெனியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் அலி அக்பர் விளாயதி ஈரானுக்கான சிரிய தூதர் அட்னன் மஹமொத்தை நேற்று தெஹ்ரானில் சந்தித்தார். அவர் "சிரியாவின் இறையாண்மை மற்றும் எல்லை ஒருமைப்பாட்டுக்கு [ஈரானின்] முழு ஆதரவை" வழங்கியதுடன், “துருக்கிய படைகள் பின்வாங்குவதற்கு அழைப்பு விடுத்தார்" என்று SANA அறிவித்தது. விளாயதி தொடர்ந்து கூறுகையில், “ஈரானின் கோட்பாட்டுரீதியான கொள்கை சிரியா மக்களையும் மற்றும் அரசாங்கத்தையும் பாதுகாப்பதை, பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை முற்றிலுமாக ஒழிக்கும் வரையில் தொடர்ந்து அதன் ஒருங்கிணைந்த கூட்டுறவைத் தொடரும் விதத்தில் அவர்களின் உரிமை நிலைப்பாடுகளைப் பாதுகாப்பதை அடித்தளத்தில் கொண்டுள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

அதேநேரத்தில், ஈரான் மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையிலான இராணுவ பதட்டங்கள், உலக பொருளாதாரத்திற்கு அத்தியாவசியமான பாரசீக வளைகுடா எண்ணெய் வினியோகங்களைக் கொண்டு செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீதான பரஸ்பர தாக்குதல்களுக்கு மத்தியில் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் சவூதி அரசாங்கங்கள் சவூதி எண்ணெய் ஆலைகள் மீதான செப்டம்பர் 14 ஏவுகணை தாக்குதலுக்காக எந்த வித ஆதாரமும் இன்றி ஈரான் மீது பழி சுமத்தின, அது உலக எண்ணெய் விலைகளில் ஒரு கூர்மையான அதிகரிப்பை ஏற்படுத்தியது. பின்னர் அக்டோபர் 11 இல், இரண்டு ஏவுகணைகள் சவூதி அரேபியாவின் செங்கடலுக்கு அருகில் ஈரானிய எண்ணெய் கப்பல் Sabiti ஐ தாக்கின.

ஈரானிய அதியுயர் தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி ஷம்கானி நேற்று கூறுகையில் Sabiti எண்ணெய் கப்பல் மீதான தாக்குதலுக்காக பெயர்குறிப்பிடாத இலக்குகளுக்கு எதிராக ஈரான் பதிலடி வழங்கும் என்றார். “Sabiti கப்பல் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது … அதன் அறிக்கை விரைவில் அதிகாரிகளுக்கு முடிவெடுப்பதற்காக வழங்கப்படும்,” என்று ஷம்கானி ஃபார்ஸ் செய்திகளுக்குத் தெரிவித்தார். “வர்த்தகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பற்றதாக ஆக்கும் நோக்கில் சர்வதேச கடல் போக்குவரத்து பாதையில் கொள்ளை மற்றும் தீங்கு நடவடிக்கையில் ஈடுபடுவது பதிலளிக்கப்படாமல் போகாது,” என்றார்.

Sabiti எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் குறித்து சவூதி அதிகாரிகள் கருத்துரைக்க மறுத்தனர். வளைகுடா பஹ்ரென் ஷேக் ஆட்சியில் உள்ள அமெரிக்க ஐந்தாவது கடற்படை பிரிவு அதிகாரிகளும் அது குறித்து எந்த தகவலும் தெரியாது என்றார்கள். ஆனால் அந்த தாக்குதல் சவூதி அரேபியாவினாலோ அல்லது அதன் ஆதரவுடனோ நடத்தப்பட்டிருக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் பரந்தளவில் அனுமானிக்கின்றன.

மத்திய கிழக்கில் வெவ்வேறு முதலாளித்துவ ஆட்சிகளுக்கு இடையே வெடித்து கொண்டிருக்கும் மோதல்கள் அப்பிராந்திய மக்களுக்கு மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த உலகிற்கும் ஓர் உடனடி அச்சுறுத்தலை முன்நிறுத்துகிறது. தொழிலாளர்கள் இத்தகைய பிற்போக்குத்தனமான ஆட்சிகளின் போட்டியிடும் இராணுவ திட்டங்கள் மற்றும் மூலோபாய விருப்புகள் எதற்கும் ஆதரவளிக்கக்கூடாது. அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா மற்றும் சீனா அனைத்துமே சிரியாவில் ஆழமாக பினாமி போரில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், பெரியளவிலான ஒரு மத்திய கிழக்கு போர் உலக எண்ணெய் வினியோகத்தையே முடக்கி அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான போராக தீவிரமடையக்கூடும். தொழிலாள வர்க்கம் ஒரு மூன்றாம் உலக போரின் நிஜமான சாத்தியக்கூற்றை நேருக்கு நேர் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.

துருக்கிய படைகளுடன் ஒப்பிடுகையில் பாரியளவில் பின்தங்கி உள்ளதும் விமானத் தாக்குதல்களுக்குப் இலகுவாக பலியாக கூடியதுமான சிரியாவில் உள்ள குர்திஷ் தலைமையிலான SDF ஆயுதக் குழுக்கள், CNN கசியவிட்ட அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் துருக்கியைத் தாக்கவும் SDF ஐ மற்றும் சிரிய ஆயுதப்படைகளைப் பாதுகாக்கவும் அவர்கள் ரஷ்யாவுக்கு முறையீடு செய்யக்கூடும் என்று எச்சரித்தனர். துருக்கி சட்டரீதியில் வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய அதிகாரங்களின் நேட்டோ கூட்டாளி என்பதால், அதுபோன்றவொரு தாக்குதல் அமெரிக்காவையும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளையும் 70 ஆண்டுகால பழைய நேட்டோ கூட்டணியை முறித்துக் கொள்ளவோ அல்லது துருக்கியைப் பாதுகாக்க ரஷ்யாவுடன் போருக்குச் செல்லவோ நிர்பந்திக்கலாம்.

“நாங்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எங்களை விட்டு விட்டிருக்கிறீர்கள்,” என்று கடந்த வியாழக்கிழமை SDF தளபதி மஜ்லௌம் கொபானி அப்தி அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். “மக்களைப் பாதுகாக்க உங்களுக்கு விருப்பமில்லை, ஆனால் எங்களைப் பாதுகாக்க வேறொரு படை வருவதையும் நீங்கள் விரும்பவில்லை. நீங்கள் எங்களை விற்றுவிட்டீர்கள்.”

ரஷ்யாவுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டாமென்றும், அதற்கு பதிலாக துருக்கிய விமானப்படை தாக்குதல்களில் இருந்து பாரிய உயிரிழப்புகளை ஏற்றுக்கொள்ளுமாறு SDF க்கு கோரிக்கை விடுத்து அமெரிக்க அதிகாரிகள் பதில் அனுப்பிய போது மஜ்லௌம் அவர்களை நிராகரித்தார். அவர் கூறினார், “எங்கள் மக்களை பாதுகாக்க, எங்கள் மீது இந்த குண்டுகள் வீசப்படுவதைத் தடுக்க உங்களுக்கு ஆற்றல் இருக்கிறதா இல்லையா என்பதை தான் நான் அறிய விரும்புகிறேன். நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், ஏனென்றால் உங்களால் முடியாது என்றால், நான் ரஷ்யாவுடன் மற்றும் இப்போதிருக்கும் ஆட்சியுடன் ஓர் உடன்படிக்கை செய்ய வேண்டும். இந்த பிராந்தியத்தைப் பாதுகாக்க அவர்களின் விமானங்களுக்கு அழைப்பு விடுத்தாக வேண்டும்,” என்றார்.

எவ்வாறிருப்பினும் சிரியா எங்கிலும் அமெரிக்க படைகள் முழுமையாக பின்வாங்கின மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர் அமெரிக்க தொலைக்காட்சி செய்திகளுக்கு நேற்று கூறினார், துருக்கிய-குர்திஷ் மோதல் "ஒவ்வொரு மணி நேரமும் மோசமடைந்து வருகிறது.” சிரியா மற்றும் ரஷ்யாவுடன் ஒரு கூட்டணி அமைப்பதற்கான குர்தியர்களின் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், அவர் கூறினார், ட்ரம்ப் "வடக்கு சிரியாவில் இருந்து நாங்கள் வேண்டுமென்றே படைகளைத் திரும்ப பெறவேண்டும் என கட்டளையிட்டார்" என்றார்.

எஸ்பர் தெரிவித்தார், "துருக்கியர்களுக்கும் குர்தியர்களுக்கும் இடையிலான நீண்டகால மோதலுக்கு மத்தியில் அமெரிக்க இராணுவத்தினரை [அவர்] வைத்திருக்க மாட்டார், நாங்கள் சிரியாவில் இருப்பதற்கான நோக்கம் இதுவல்ல."

குர்தியர்கள் உடனான போர்நிறுத்தத்திற்கு பென்டகனின் முறையீடுகளை துருக்கிய இராணுவம் நிராகரித்து வருவதாகவும், அதற்கு பதிலாக சிரியாவுக்குள் அதன் போர் நோக்கங்களை விரிவாக்கி வருவதாகவும் எஸ்பர் தெரிவித்தார். "கடந்த 24 மணி நேரத்தில், அவர்கள் உண்மையில் திட்டமிட்டதை விட மேற்கொண்டு தெற்கிலும், மேற்கிலும் அவர்களின் தாக்குதலை விரிவாக்க உத்தேசித்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம்," என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், சிரியா மீது அவர்கள் படையெடுத்தால் இவையெல்லாம் நடக்கக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் அவர்களின் துருக்கிய சமபலங்களை எச்சரித்திருந்த "எல்லா துல்லியமான விடயங்களும்" இப்போது நடந்து வருகின்றன, வாஷிங்டனின் முன்னாள் குர்திஷ் கூட்டாளிகளால் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த பத்தாயிரக் கணக்கான இஸ்லாமிய அரசு (IS) ஆயுதக்குழுக்கள் விடுவிக்கப்படுவதும் இதில் உள்ளடங்கும் என்றார்.

மத்திய கிழக்கில் என்ன கட்டவிழ்ந்து வருகிறது என்றால் ஈராக்கில் 1991 வளைகுடா போரில் இருந்து வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் மூன்று தசாப்தங்களாக தொடுத்து வந்த ஏகாதிபத்திய போர்கள் உருவாக்கிய இரத்தக்களரியான அழிவு நடந்து வருகிறது. இந்த எண்ணெய் வளம் மிக்க பிரதேசத்தைப் பிரித்தாளுவதற்கான ஒரு முயற்சியில் அவர்கள் எரியூட்டிய தேசிய, இன மற்றும் குறுங்குழுவாத பிளவுகள் அப்பிராந்தியத்தை முற்றுமுதலான ஒரு மோதலின் விளிம்புக்குக் கொண்டு வந்துள்ளது. மத்தியக் கிழக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நூறு மில்லியன் கணக்கானவர்கள் இந்த போர்கள் மீதும் ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ அரசியல் ஒழுங்கமைப்பின் மீதும் ஆழமாக மதிப்பிழந்துள்ளதற்கு மத்தியில், அப்பிராந்தியம் எங்கிலுமான முன்னாள் அமெரிக்க கூட்டாளிகள் வாஷிங்டனுக்கு எதிராக திரும்பி வருகின்றனர்.

துருக்கிக்கு உள்ளே சிரியா எல்லையை ஒட்டியுள்ள ரேடியோ பிரான்ஸ் இன்டர்நேஷனல் பத்திரிகையாளர்கள், துருக்கிய மக்கள் மற்றும் சிப்பாய்களிடையே அமெரிக்க வெளியுறவு கொள்கை மீது நிலவும் தீவிர கோபத்தைக் குறித்து அறிவித்தனர். ஒருவர் RFI இக்கு தெரிவித்தார், "அமெரிக்காவுக்குக் கடவுள் மீது பயம் இல்லை, அவர்கள் பலத்தை நம்புகிறார்கள். ஆனால் இங்கே விமானம் மூலமாக வருவதற்கே அவர்களுக்கு 15 மணி நேரம் ஆகும், அதுவும் என்ன செய்வதற்காக? அவர்கள் எங்களின் விவகாரங்களில் தலையிடுகிறார்கள், தன்னால் யாரை தோற்கடிக்க முடியும் என்று தெரியுமோ அவருடன் மட்டுமே சண்டையிடும் ஒரு போராளியைப் போல நடந்து கொள்கிறார்கள். அவர்கள் ஒரு பலமான எதிர்ப்பாளரை முகங்கொடுக்கையில், ஓடிவிடுகிறார்கள்."

ஏகாதிபத்திய போருக்கு எதிராக இந்த அடிப்படையான கோபத்திற்கு ஒரு முற்போக்கான வெளிப்பாட்டை வழங்கும் ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமும் வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியும் ஆகும். ஈராக்கில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக்கு எதிரான மற்றும் அல்ஜீரியா மற்றும் சூடானின் இராணுவ சர்வாதிகாரங்களுக்கு எதிரான பாரிய போராட்டங்களும், மற்றும் அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் தீவிரமடைந்து வரும் வேலைநிறுத்த இயக்கமும், தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் தீவிரமயப்படலை ஊர்ஜிதப்படுத்துகின்றன. ஆனால் இந்த சர்வதேச இயக்கம் மிகப்பெரிய அபாயங்களையும் மிகப்பெரிய பணிகளையும் முகங்கொடுக்கிறது.

இந்த அதிகரித்து வரும் கோபம், எந்தளவுக்கு, போட்டியிட்டு வரும் முதலாளித்துவ தேசிய அரசுகளின் தேசிய அபிலாஷைகள் மற்றும் இராணுவ உயரதிகாரிகளுக்குப் பின்னால் திருப்பி விடப்படுகிறதோ, அந்தளவுக்கு — 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை நடத்தப்பட்டதைப் போலவே — உண்மையான பேரழிவுகரமான உலகளாவிய போர்கள் வெடிக்கும்.

போரிட்டு வரும் அனைத்து முதலாளித்துவ நாடுகளிலுள்ள தொழிலாளர்களையும் சுயாதீனமாக, சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பபு இயக்கத்தில் ஒன்றுதிரட்டுவதே அதிமுக்கியமாகும்.