ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Collapse of Swedish “sexual misconduct” frame-up exposes political conspiracy against Assange

சுவீடனின் “பாலியல் முறைகேடு” ஜோடிப்பு வழக்கின் முறிவு அசான்ஜிற்கு எதிரான அரசியல் சதியை அம்பலப்படுத்துகிறது

Oscar Grenfell
20 November 2019

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர், சுவீடன் வழக்கறிஞர்கள் நேற்று, விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜிற்கு எதிரான “பாலியல் முறைகேடு” குற்றச்சாட்டுக்கள் தொடர்பான “ஆரம்பகட்ட விசாரணையை” இறுதியாக தாம் கைவிட்டுவிட்டதாக அறிவித்தனர். சுவீடனின் துணை தலைமை வழக்கறிஞர் ஈவ்-மேரி பேர்சன், இவ்வழக்கை மேற்கொண்டு தொடர “போதுமான ஆதாரங்கள்” இல்லை என்று ஒரு செய்தியாளர் கூட்டத்திற்கு தெரிவித்தார்.

ஒரு தசாப்த காலத்தினுள் மூன்று முறை கைவிடப்பட்டதும் “ஆரம்ப” கட்ட விசாரணையை ஒருபோதும் கடக்காத இந்த விசாரணையின் அவமானகரமான முறிவு, அது ஒரு அரசாங்கத்தின் ஜோடிக்கப்பட்ட மற்றும் கீழ்த்தரமான சூழ்ச்சி நடவடிக்கை என்பதையே குறிக்கிறது. இது, அமெரிக்காவின் தலைமையிலான, அத்துடன் சுவீடன், பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட அதன் நட்பு நாடுகளின் உதவி மற்றும் ஆதரவின் பேரிலான ஒரு முன்நிகழ்ந்திராத வகையிலான சர்வதேசியரீதியான அரசியல் சதித்திட்டத்தின் பலிகடாவாக அசான்ஜ் இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

சுவீடன் குற்றச்சாட்டுக்களின் ஒரே நோக்கம் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, அமெரிக்க சிறைக்கு அவரை அனுப்புவதற்கான ஒரு மாற்று வழியை உருவாக்குவதே என்று 2010 முதல் அசான்ஜ் செய்து வந்த எச்சரிக்கைகளின் முழுமையான நிரூபணமாகவே இந்த விசாரணையின் முடிவு உள்ளது.


ஜூலியன் அசான்ஜ்

போர்க்குற்றங்கள் மற்றும் உலகளாவிய இராஜதந்திர சதிகளை அம்பலப்படுத்தியதற்காக 175 ஆண்டுகள் வரையிலான ஆயுள் தண்டனையை அசான்ஜ் எதிர்கொள்ளவிருக்கும் அமெரிக்காவிடம் அவர் கையளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளுக்காக காத்திருக்கையில் அதிகூடிய பாதுகாப்புள்ள பிரிட்டிஷ் சிறையில் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, 10 ஆண்டுகால கேவலமான சூழ்ச்சிகள் மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டத்தின் அப்பட்டமான மீறல்களுக்குப் பின்னரும் கூட, சுவீடன் விசாரணை உடைந்து கொட்டியுள்ளது.

அசான்ஜ் ஒரு “பாலியல் குற்றவாளி” அல்லது “கற்பழிப்பாளர்” என்பதற்கு ஆதாரமாக பெருநிறுவன பத்திரிகைகளால் முடிவின்றி பரிகசிக்கப்பட்டதான அனைத்து அவதூறுகளும் ஒரு தைரியமிக்க ஊடகவியலாளரும் பதிப்பாசிரியருமான அவரை பழிவாங்குவதற்கும், அவமானப்படுத்துவதற்கும் மற்றும் துன்புறுத்துவதற்குமான பொய்களாகவும் இட்டுக்கட்டப்பட்ட கதைகளாகவும் இருப்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைமையிலான பழிவாங்கலில் இதுபோன்ற ஒரு முக்கிய பங்காற்றும் சுவீடன் விசாரணையின் முழுமையான மதிப்பிழப்பு, அசான்ஜிற்கு எதிரான ஒட்டுமொத்த நடவடிக்கையின் முற்றிலும் சட்டவிரோதமான தன்மையை அம்பலப்படுத்துகிறது.

கடந்த வாரம் பகிரங்கமாக வெளியிடப்பட்டதான சுவீடன் அரசாங்கத்திற்கு சித்திரவதை குறித்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நீல்ஸ் மெல்ஸர் எழுதிய ஒரு உத்யோகபூர்வ கடிதத்தில் அவர் குறிப்பிட்டதைப் போல, இந்த விசாரணை “பல நாடுகளில் திரு அசான்ஜிற்கு எதிரான நீடித்த மற்றும் ஒருமுகப்பட்ட அப்பட்டமான பழிவாங்கல் மற்றும் நீதித்துறையின் துன்புறுத்தல் குறித்த அடுத்தடுத்த பிரச்சாரத்திற்கு தூண்டுதலளித்த, செயல்படுத்திய மேலும் அதற்கு ஊக்கமளித்த முதன்மை காரணியாக இருந்தது, இந்த ஒட்டுமொத்த முயற்சிகளையும் உளவியல் சித்திரவதை என்று மட்டுமே விவரிக்க முடியும்.

குற்றவியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு அண்மித்துக்கூடவராத சுவீடன் விசாரணை, அசான்ஜை சட்ட அமைப்பிற்குள் சிக்கவைக்க அது பயன்படுத்தப்பட்டது என்பதுடன், அவரது தன்னிச்சையான தடுப்புக்காவலை செயல்படுத்துவதற்கான முக்கிய வழிமுறையாக அது இருந்தது.

2012 இல் ஈக்வடோர் இலண்டன் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரும் நிலைக்கு தள்ளப்பட்ட அசான்ஜ் “கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக” கையளிக்கப்பட வேண்டும் என்ற சுவீடனின் முன்னுதாரணமற்ற வேண்டுகோளுக்கு பிரிட்டனின் ஆதரவு இருந்தது. அத்துடன், பிரிட்டனின் தூதரகத்தை முற்றுகையிடுவதற்கும், மேலும் அசான்ஜ் கட்டிடத்தை விட்டு காலை வெளியே வைத்தால் அவர் கைது செய்யப்படுவார் என்ற அதன் அச்சுறுத்தல்களுக்கும் போலியான காரணத்தை சுவீடன் வழக்கு வழங்கியது.

இந்த விசாரணை, அசான்ஜை அவதூறு செய்வதற்கும், அவருக்கிருந்த பரந்த மக்கள் ஆதரவை கீழறுப்பதற்கும் இடைவிடாது பயன்படுத்தப்பட்டது. இது, இந்த ஆண்டு ஏப்ரலில் விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை பிரிட்டிஷ் காவல்துறை ஈக்வடோர் இலண்டன் தூதரகத்திலிருந்து வெளியே இழுத்து வருவதற்கான மற்றும் சட்டபூர்வமாக பாதுகாக்கப்பட்ட அவரது பிரசுரிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா அவரை வெளிப்படையாக தண்டிக்க முயலுவதற்குமான ஒரு அரசியல் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது.

அனைத்திற்கும் மேலாக, சுவீடன் குற்றச்சாட்டுக்கள், அசான்ஜிற்கு எதிராக இரத்தம் தோய்ந்த அமெரிக்க உளவு அமைப்புகளிலிருந்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அரசியல் கட்சிகள், பெருநிறுவன ஊடகங்கள், அடையாள அரசியலின்  போலி-இடது மற்றும் எண்ணற்ற ஆதரவாளர்கள் வரையிலுமாக ஒருங்கிணைந்த மோசமான கூட்டணிக்கு கருத்தியல் மற்றும் அரசியல் ரீதியான அடித்தளத்தை வழங்கியது.

அவர்கள் பாதுகாக்கும் சமூக மற்றும் அரசியல் ஒழுங்கை அவர் அம்பலப்படுத்தியதால் அசான்ஜிற்கு விரோதமான இந்த அமைப்புக்கள் அனைத்தும் அசான்ஜ் மீதான இரக்கமற்ற “பகிரங்க துன்புறுத்தல்” என மெல்ஸர் துல்லியமாக விவரித்ததை தொடரவும், மேலும் அவரது சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதற்கு அவர்கள் வழங்கும் ஆதரவை நியாயப்படுத்தவும் சுவீடன் குற்றச்சாட்டுக்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆயிரக்கணக்கான உதாரணங்களிலிருந்து ஒருசில மட்டும் பின்வருமாறு மேற்கோள் காட்டப்படுகிறது:

இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்ட அனைத்து அமைப்புக்களும் தனிநபர்களும் தாங்கள் பொய் தான் சொல்கிறோம் என்பதை அறிந்திருந்தார்கள். குற்றச்சாட்டுக்களின் போலித் தன்மை பொது பதிவில் இருந்தது.

இது, ஆகஸ்ட் 2010 இல் ஆரம்பகட்ட வழக்கறிஞராக இருந்த ஈவா ஃபின்னே இன் கண்டுபிடிப்புக்களையும் உள்ளடக்கியது, அதில் அவர் இவ்வாறு தெரிவித்தார்: “அவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டிருப்பார் என்று சந்தேகிப்பதற்கான காரணம் எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை.” மேலும் அவர், “நடத்தை குறித்து குற்றம்சாட்டப்பட்டது…. எந்த குற்றம் பற்றியும் வெளிப்படுத்தப்படவில்லை” என்று குறிப்பிட்டார். புகார்தாரர்களில் ஒருவரிடமிருந்து வந்த குறுஞ்செய்திகள் “காவல்துறையினரே குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்” என்று கூறின.

இந்த வழக்கில் உள்ள ஒரு தொடர் “முறைகேடுகளில்”, காவல்துறை அதிகாரிகள் புகார் அளித்தவர்களில் ஒருவரது அறிக்கையை சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிக்காமலேயே திருத்துவது, அமெரிக்க அரசுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட ஒரு வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான Claes Borgstrom இன் நெருக்கமான ஈடுபாடு, மற்றும் நூற்றுக்கணக்கான பிற வழக்குகளில் சுவீடன் வழக்கறிஞர்கள் செய்துள்ளது போல, காணொளி மூலம் அல்லது இலண்டனில் அசான்ஜை நேர்காணல் செய்வதற்கு அவர்கள் மறுத்தது ஆகியவற்றை உள்ளடக்கியது.

அசான்ஜ் சுவீடன் அதிகாரிகளின் காவலின் கீழ் வந்தால், அவரை அவர்கள் அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டார்கள் என்று உத்தரவாதமளிக்க தெளிவாகச் சொல்லமுடியாமல் வேறுவழியில் அவர்கள் மறுத்தாலும், மிகவும் மோசமாக, சுவீடன் ஜோடிப்பு வழக்கை ஊக்குவித்தவர்கள், அமெரிக்கா அசான்ஜை பின்தொடர்வதற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற கருத்தை கேலி செய்தனர்.

மேலும், இந்த குற்றச்சாட்டுக்கள், மூத்த அமெரிக்க அரசியல்வாதிகள் அசான்ஜ் தங்களது போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக அவரை படுகொலை செய்ய பகிரங்கமாக அழைப்பு விடுத்த நிலைமைகளின் கீழ், ஆகஸ்ட் 2010 இல் பொலிஸால் முதன் முதலில் இட்டுக்கட்டப்பட்டன. அமெரிக்க அரசாங்கம் “அளவிலும், தன்மையிலும் முன்னுதாரணமற்ற வகையில்” ஒரு விசாரணையை தொடங்கியுள்ளது, இது, விக்கிலீக்ஸை அழித்தொழிக்கும் பணியில் ஒரு நாளின் 24 மணித்தியாலங்களும் செயலாற்றும் FBI மற்றும் CIA முகவர்களின் ஒரு “போர் அறை” உருவாக்கப்பட்டதை உள்ளடக்கியது.

அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரியும், “நிழல் சிஐஏ” என்று விவரிக்கப்படும் Stratfor தனியார் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரியுமான Fred Burton இடமிருந்து கசியவிடப்பட்ட மின்னஞ்சல் ஜோடிப்பு வழக்கிற்கான பூர்வாங்க படிவத்தை பின்னர் வெளியிட்டது. அசான்ஜிற்கு எதிரான அமெரிக்க மூலோபாயம் என்னவென்றால், “அடுத்த 25 ஆண்டுகளுக்கு பல்வேறு குற்றச்சாட்டுக்களை அசான்ஜ் எதிர்கொள்ளும் விதமாக அவரை நாடு விட்டு நாடு கடத்த வழக்குகளை குவியுங்கள்” என்று ஒரு சக கூட்டாளருக்கு டிசம்பர் 2010 இல் அவர் எழுதினார்.

சுவீடன் விசாரணையை சட்டபூர்வமாக்கிய அனைவரும் இந்த சிஐஏ பிரச்சாரத்தின் கீழ்மட்ட உதவியாளர்களாக செயல்பட்டனர்.

என்றாலும், அசான்ஜ் மீதான ஜோடிப்பு வழக்கு, புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிகையாளர் ஜோன் பில்ஜெர் முதல், ரோஜெர் வாட்டெர்ஸ், பாமீலா ஆண்டர்ஸன் மற்றும் M.I.A. போன்ற இசைக் கலைஞர்கள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சியாளர்கள் வரையிலான மிகுந்த கொள்கை ரீதியான கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தது.

அசான்ஜிற்கு எதிரான அரசியல் சதியின் வெளிப்பாடு என்பது, அசான்ஜ் அமெரிக்காவிடம் கையளிக்கப்படுவதை தடுப்பதற்கு மற்றும் அவரது முழுமையான மற்றும் நிபந்தனையற்ற விடுதலையை பாதுகாப்பதற்கு என நடத்தப்பட வேண்டிய போராட்டத்தின் மையமாக உள்ளது.

ஏகாதிபத்திய போருக்கு எதிரான மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது குறித்த ஒரு பரந்த பிரச்சாரத்தில் முன்னணி வகிக்க வேண்டியதான, இந்த போராட்டத்தின் எரிந்து கொண்டிருக்கும் அவசரம் குறித்து, அசான்ஜ் சிறையிலேயே இறந்துவிடக் கூடும் என்பதாக அசான்ஜின் தந்தையும் மற்றும் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நீல்ஸ் மெல்ஸரும் விடுத்த எச்சரிக்கையின் மூலமாகவும், மற்றும் பிரிட்டிஷ் நீதித்துறையின் சட்டவிரோத நடத்தையின் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தின் பாகமாக, உலக சோசலிச வலைத் தளமும், சோசலிச சமத்துவக் கட்சியும் அசான்ஜின் துன்புறுத்தலுக்கு உலகம் முழுவதிலுமான எதிர்ப்பை ஒழுங்கமைக்க போராடுகின்றன. இந்த போராட்டத்தில் பங்கேற்க இன்றே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.