ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The global youth radicalization and the fight for socialism

உலகளாவிய இளைஞர்களின் தீவிரப்படலும், சோசலிசத்திற்கான போராட்டமும்

Eric London
30 October 2019

உலகெங்கிலும், ஈக்வடோர், லெபனான், பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, ஈராக், சிலி மற்றும் ஹைட்டி போன்ற கலாச்சாரரீதியில் தனித்துவமான நாடுகளில், தொழிலாள வர்க்க இளைஞர்களின் ஒரு புதிய தலைமுறை உலகளாவிய வர்க்க போராட்ட களத்தில் பலமாக நுழைந்து வருகிறது.

சமீபத்திய வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் சர்வதேச அளவை மேற்கோளிட்டு, கார்டியனின் சைமன் டிஸ்டால் சமீபத்தில் எழுதினார்: “ஒவ்வொரு நாட்டின் போராட்டங்களும் விபரங்களில் வேறுபட்டுள்ளன என்றாலும் சமீபத்திய எழுச்சிகள் ஒரு முக்கிய காரணியை பகிர்ந்து கொள்வதாக தெரிகிறது: இளைஞர்கள் [...] உலகளவில் இளைஞர்களினது நிறைவேறாத இந்த அபிலாஷைகளின் புலப்பாடு, வெடிப்பதற்கான மணித்துளிகள் ஓடிக் கொண்டிருக்கும் அரசியல் வெடிகுண்டுகளை உருவாக்கி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும், ஒரு மில்லியன் பேர் 18 வயதடைந்து, வாக்களிக்கும் நிலையை அடைகிறார்கள். மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில், மதிப்பிடப்பட்ட அளவில் 27 மில்லியன் இளைஞர்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் தொழிலாளர் சந்தையில் நுழைவார்கள்.”

வரலாற்றில் பெரிதும் கல்வியறிவு பெற்ற, தொழில்நுட்பரீதியில் ஒருவரோடு ஒருவர் இணைந்த நகர்புற தலைமுறையின் இந்த அரசியல் விழிப்புணர்வு ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் அத்தியாவசிய மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.


மிச்சிகன், டெட்ராய்டில் வாய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவர்கள்

1990 களின் ஆரம்பத்தில் பிறந்த, இன்றைய இளைஞர்கள், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு "வரலாற்றின் முடிவை" குறிக்கிறது என்றும், இளைஞர்கள் தாராளவாத ஜனநாயகத்தின் வெற்றியால் குறிக்கப்பட்ட, வர்க்க போராட்டம் மற்றும் போர் இல்லாத ஓர் உலகில் வளர்வார்கள் என்ற அனைத்து வாதங்களையும் மறுத்துரைக்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இப்போது நிலவும் முதலாளித்துவ நிலைமை சகிக்கவியலாததாக ஆகி விட்டது என்பதால் மில்லியன் கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கி வருகிறார்கள். அவர்கள் இனம், பாலினம் அல்லது தனி அடையாளம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மீது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை மாறாக அவர்கள் சமூகத்தின் ஆதாரவளங்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன என்பதற்காக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அவர்கள் குறுங்குழுவான பிளவுகளை நிராகரித்து, அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக தங்களின் உயிரையே பணயம் வைத்து வருகிறார்கள் ஏனென்றால் ஏகாதிபத்திய போர், பாசிசவாத பிற்போக்குத்தனம், நிதியியல் நெருக்கடிகள் மற்றும் பாரியளவில் சமூக சமத்துவமின்மை என 20 ஆம் நூற்றாண்டில் எதிர்நின்ற அதே தீர்க்கப்படாத வரலாற்று கேள்விகளை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். இது எல்லாவற்றுக்கும் மேலாக காலநிலை மாற்ற பேரிடர்கள் என்ற பேராபத்து தொங்கி கொண்டிருக்கிறது.

இப்போது 30 வயதுக்குக் குறைந்த இளைஞர்கள், உலக மக்கள்தொகையில் பாதிக்கு அதிகமாகவும் மற்றும் துணை-சஹாரன் ஆபிரிக்கா, மத்தியக் கிழக்கு மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா என உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களின் மக்கள்தொகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உள்ளனர்.

இளைஞர்களினது தீவிரமயமாகும் நிகழ்ச்சிப்போக்கு வளரும் நாடுகளுக்குள் மட்டுப்படுத்தப்படவில்லை. கையடக்க தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களால் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டப்படும் தொழில்நுட்ப மாற்றங்கள் உலகெங்கிலும் தொழிலாள வர்க்க இளைஞர்களின் அரசியல் கண்ணோட்டத்தை ஒன்றுபடுத்தி வருகிறது.

அமெரிக்காவில், கம்யூனிச-விரோத அமைப்பான கம்யூனிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு அமைப்பு இவ்வாரம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பு, 23 இல் இருந்து 38 வயதுடைய இளைஞர்களில் 70 சதவீதத்தினர் அவர்கள் பதவிக்கு ஒரு சோசலிச வேட்பாளரை ஆதரிக்கக்கூடும் என்று கூறியதாக அறிவித்தது. ஐரோப்பா எங்கிலுமான கருத்துக்கணிப்புகள் இளைஞர்களிடையே சமூகப் புரட்சிக்கான ஆதரவு அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன. இந்த கோடையில், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மில்லியன் கணக்கானோர் சுற்றுச்சூழல் பேரிடர்களுக்கு எதிரான ஆர்பாட்டங்களில் பங்கெடுத்தனர்.

தீவிரமயப்பட்டு வரும் இளம் தலைமுறை தொழிலாளர்களை, முதலாளித்துவ அமைப்புமுறையின் உயிர்வாழ்வுக்கான அச்சுறுத்தலாக ஆளும் வர்க்கம் பார்க்கிறது. ஒரு சிந்தனை குழாமின் 2013 மூலோபாய ஆவணத்தின் வார்த்தைகளில் கூறுவதானால், “20-29 வயதுக்கு உட்பட்ட பருவ வயதடைந்த இளைஞர்கள் குறிப்பாக தீவிரமயப்படலுக்கு இயைந்து கொடுக்கும் தன்மை கொண்டவர்கள்" என்ற உண்மைக்கு எதிராக இந்த அமைப்புமுறையை பாதுகாக்க முதலாளித்துவ வர்க்கம் வல்லுனர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்களின் ஒரு படையையே நியமித்துள்ளது.

“பொருளாதார அபிவிருத்தியும், சமூகஅரசியல் நிலைகுலைவும்,” என்று தலைப்பிட்ட மற்றொரு சிந்தனை குழாமின் 2018 ஆய்வும் இதேரீதியில் பின்வருமாறு எச்சரிக்கிறது:

“இளைஞர்களின் இந்த விரைவான வளர்ச்சிக்கு மிகப் பெரியளவில் புதிய வேலைகளை உருவாக்க வேண்டியுள்ளது, இது ஒரு தீவிரமான பொருளாதார பிரச்சினையாகும், அதேவேளையில் இளைஞர் வேலைவாய்ப்பின்மையின் வளர்ச்சியானது குறிப்பாக வலுவான ஸ்திரமின்மை விளைவை ஏற்படுத்தி, உள்நாட்டு போர்கள், புரட்சிகள் மற்றும் அரசின் முறிவுகள் உட்பட பல்வேறு அரசியல் கொந்தளிப்புகளில் பங்கெடுக்கக்கூடியவர்களின் ஒரு "படையை" உருவாக்கிவிடும்.”

ஆனால் நிதியியல் பிரபுத்துவமோ உலகின் செல்வவளத்தைக் குவித்து வைத்துக் கொண்டு, போதிய வேலைகள், இலவச கல்வி, மருத்துவ கவனிப்பு அல்லது வீட்டு வசதி ஆகியவற்றுக்கு எந்த வழிவகையும் செய்வதில்லை. அதே 2018 ஆய்வு தொடர்ந்து குறிப்பிடுகிறது: “இளைஞர்களில் பெரும்பான்மையினர் கிராமப்புற-நகர்புற புலம்பெயர்ந்தவர்களாவர், ஆகவே 'இளமை துடிப்பும்' செறிவான நகரமயமாக்கல் காரணிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு,” ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் மீது "குறிப்பாக ஸ்திரப்பாட்டைக் குலைக்கும் பலமான பாதிப்பை உருவாக்குகின்றன.” “மக்கள்தொகையில் மிகவும் தீவிரத்தன்மையின் பக்கம் சாய்ந்த பாகம் எண்ணிக்கையில் அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல, மாறாக அது பிரதான நகரங்கள்/ அரசியல் மையங்களிலும் ஒன்றுதிரண்டுள்ளன.”

தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்துவரும் தீவிரமயப்படலை ஒடுக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகவும் கவனமாக தயாரிப்புகளைச் செய்து வருகிறது.

“2030 இல் இருந்து 2050 வரையில் உலகில் ஆட்சிகளுக்கான சவால்கள்: இளைஞர்கள், வேலைவாய்ப்பின்மை, நகர்ப்புறம் மற்றும் கோபம்" என்று தலைப்பிட்ட 2018 அமெரிக்க இராணுவ எதிர்கால ஆய்வுகள் குழுவின் ஒரு பிரிவு குறிப்பிடுகையில், “சமூக விபரங்களின் தன்மைகள், சமத்துவமின்மையின் வளர்ச்சி, மிகப்பெரும் நகரங்களின் செல்வாக்கு மற்றும் புதுப்பிக்கப்பட்ட, குறைந்தபட்சம் அதிகரிக்கப்பட்ட, ஆதாரவளங்களின் போட்டிக்கான சாத்தியக்கூறு" ஆகியவை அண்மித்த எதிர்காலத்தில் "மேற்கொண்டும் கூடுதல் அரசு தோல்விகள் ஏற்படுவதற்கான நிஜமான சாத்தியக்கூறு" இருப்பதை அர்த்தப்படுத்துகிறது என்று வாதிடுகிறது.

உலகின் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் சமூக சக்தியும் புத்திக் கூர்மையும் அதிகாரத்திற்கான வரவிருக்கும் புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கான பலத்திற்கு மிகப்பெரும் ஆதாரவளங்களாகும். இளைஞர்கள் அழுத்தத்தை அளவிடும் கருவிகளாவர். தசாப்த காலமாக வர்க்க போராட்டங்கள் நசுக்கப்பட்ட பின்னர், இளைஞர்களின் தீவிரமயப்படலானது தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த இயக்கம் சர்வதேச அளவில் அபிவிருத்தி அடைந்து வருகிறது என்பதற்கு ஒரு தெளிவான சமிக்ஞையாகும்.

ஒரு புரட்சிகர தலைமையின் அபிவிருத்தியும், இத்தகைய மேலெழும் போராட்டங்களுக்குள் ஓர் அரசியல் மற்றும் வரலாற்று முன்னோக்கை உட்புகுத்துவதுமே முக்கிய கேள்வியாகும். இளைஞர்கள், 20 ஆம் நூற்றாண்டிலும் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களிலும் தொழிலாள வர்க்கத்தின் அதிமுக்கிய புரட்சிகர மற்றும் எதிர்புரட்சிகர வரலாற்று அனுபவங்களை தங்களின் புரட்சிகர நடவடிக்கைகளுக்கான அடித்தளமாக கொள்ள வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியால் இன்று பிரதிநித்துவம் செய்யப்படும் ட்ரொட்ஸ்கிச இயக்கம் மட்டுமே இந்த வரலாற்றின் உருவடிவமாக உலகில் உள்ள ஒரே அரசியல் போக்காகும். 1917 ரஷ்ய புரட்சியில் விளாடிமீர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கம் வரலாற்றில் முதல் முறையாக அதிகாரத்தைக் கைப்பற்றிய அந்த வரலாறு வரையில் ICFI அதன் சுவடுகளைக் கொண்டுள்ளது.

இன்று மில்லியன் கணக்கான இளைஞர்கள், சோசலிசத்துடனான மிகச்சிறிய உறவுகளைக்கூட கைவிட்ட ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், முதலாளித்துவ தேசியவாதம், முன்னாள் கொரில்லா மாவோயிச கட்சிகள் நடைமுறைப்படுத்திய கொள்கைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். தொழிலாளர்களும் இளைஞர்களும் மிகச் சரியாகவே அக்கட்சிகளினது முதலாளித்துவ-சார்பு, தேசியவாத வேலைத்திட்டங்களை நிராகரிக்கின்றனர். ட்ரொட்ஸ்கி முன்கணித்தவாறு, “மனிதகுலத்தின் மீது விழும் பிரமாண்டமான நிகழ்வுகள் இத்தகைய காலங்கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அமைப்புகளின் ஒரு துரும்பைக் கூட விட்டு வைக்காது.”

மற்றொரு சக்தி — தொழிலாள வர்க்கம் — மீண்டும் வரலாற்று அரங்கிற்கு திரும்ப வந்துகொண்டிருக்கிறது. புரட்சிகரமான இளைஞர்கள் இந்த சக்தியை நோக்கி திரும்பி, கடந்த கால போராட்டங்களின் படிப்பினைகளை உள்கிரகித்து, இந்த அடித்தளத்தில் அவசியமான புரட்சிகர தலைமையை அபிவிருத்தி செய்வதன் மூலமாக தங்களை ஆயுதபாணியாக்கி கொள்ள வேண்டும். சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பில் இன்றே இணைவதன் மூலமாக சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் அனைத்து இளைஞர்களையும் வலியுறுத்துகிறது.