ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan SEP holds presidential election meeting in Hatton

இலங்கை சோ.ச.க. ஹட்டனில் ஜனாதிபதி தேர்தல் கூட்டத்தை நடத்தியது

By our correspondents
6 November 2019

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) அதன் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நவம்பர் 3 அன்று ஹட்டனில் ஒரு வெற்றிகரமான பொதுக் கூட்டத்தை நடத்தியது. இந்த நகரம் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தமிழ் பேசும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும்.

கடந்த டிசம்பரில் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது சோ.ச.க.வின் அரசியல் உதவியுடன் உருவாக்கப்பட்ட எபோட்சிலி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள் உட்பட தோட்டத் தொழிலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இலங்கையில், கிட்டத்தட்ட 200,000 தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுமாக சுமார் ஒரு மில்லியன் பேர் முறையான சுகாதாரத வசதிகள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் சிறிய வரிசை (லயின்) அறைகளில் தோட்டங்களில் வாழ்கின்றனர். தோட்ட தொழிற்சங்கங்களோ தோட்டக் கம்பனிகள் மற்றும் அரசாங்கத்தினதும் கருவிகளாக செயல்பட்டு, அவற்றின் அடிமை-தொழிலாளர் நிலைமைகளையும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தலைமுறை தலைமுறையான வறுமையையும் திணிக்கவே உதவுகின்றன.

சோ.ச.க. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சோ.ச.க.வின் தேர்தல் அறிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகளை, தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் விநியோகித்திருந்தனர். ஃபோர்டைஸ், டில்லரி, டிக்கோயாவில் இன்ஜெஸ்றி, என் ஃபீல்ட், அபோட்ஸ்லீ மற்றும் ஹட்டனில் உள்ள பன்முர், மற்றும் ஓல்டன், க்ளனூஜி மற்றும் கவரவில உள்ளிட்ட சாமிமலைப் பிரசேத்திலும் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தனர். சோ.ச.க.வின் சோசலிச வேலைத் திட்டம் சம்பந்தமாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

இன்iமும் பெரிய தோட்டத் தொழிற்சங்கமாக உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) ஜனாதிபதி வேட்பாளர் கோடாபய இராஜபக்ஷக்கு ஆதரவளித்து வருகிறது. மற்ற மூன்று பெருந்தோட்ட தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகியவை ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றன.


கே. காண்டீபன்

சோசலிச சமத்துவக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான கே. காண்டீபன், ஹட்டன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். "ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று டஜன் நபர்களில் ஒரே ஒரு வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன மட்டுமே ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டவராவார்” என்று அவர் பார்வையாளர்களிடம் கூறினார். இலங்கையில் எண்ணற்ற சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முதலாளித்துவ அமைப்பினுள் முற்போக்கான தீர்வு கிடையாது, என அவர் விளக்கினார்.

பிரதான பாராளுமன்ற அமைப்புகளுக்கு பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கொடுக்கும் ஆதரவு இந்த வலதுசாரிக் கட்சிகளுடன் தொழிலாளர்களை பிணைத்து வைப்பதற்கான ஒரு முயற்சியே என்று சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா தெரிவித்தார். ஜ.தொ.கா. தலைவர் மனோ கணேசன் வீரகேசரி பத்திரிகைக்கு கொடுத்திருந்த பேட்டியை அவர் சுட்டிக் காட்டினார். தோட்டத் தொழிலாளர்களை குட்டி முதலாளிகளாக மாற்றுவதன் மூலம் "தோட்டங்களை மறுசீரமைப்பதற்கு" தனது தொழிற்சங்க முன்னணி சஜித் பிரேமதாசவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கணேசன் தனது செவ்வியில் கூறியுள்ளார்.

இந்த மறுசீரமைப்பு என்று அழைக்கப்படுவதானது தோட்டத் தொழிலாளர்களுக்கு சில தோட்ட நிலங்களை ஒதுக்குவதன் மூலமும், வருமானப் பங்கீடு முறையை திணிப்பதன் ஊடாக சுரண்டலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும் என தேவராஜா,கூறினார். "இதேபோல், இ.தொ.கா.வும் கூட ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய இராஜபக்ஷக்கு சமர்ப்பித்த 30 கோரிக்கைகளின் பட்டியலில், தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது."


தேவராஜா

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. மற்றும் ஐ.தே.க. வேட்பாளர்களுக்கு விடுத்த வேண்டுகோள்களில், தோட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கைகள் பற்றி எதையும் குறிப்பிடுவதை கைவிட்டன, அல்லது அதிக உற்பத்தித்திறன் மற்றும் சமூக நலன்களைக் வெட்டிக் குறைப்பதற்கான கம்பனிகளின் மற்றும் அரசாங்கத்தின் கோரிக்கைகளைப் பற்றிம் கூட எதுவும் அவை குறிப்பிடவில்லை என தேவராஜா சுட்டிக்காட்டினார். தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் பிரிவுகள் மீதான தாக்குதலின் ஒரு பகுதியாகும் என்றும் பேச்சாளர் விளக்கினார்.

பிரதான உரையை ஆற்றிய சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களால் வழங்கப்படும் நீண்ட வாக்குறுதிகள், இப்போது இலங்கை ஆளும் உயரடுக்கு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் கீழ், ஒருபோதும் நிறைவேறாது என்று அறிவித்தார்.

பிரதான பாராளுமன்றக் கட்சி வேட்பாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் கொடுக்கும் ஆதரவு குறித்து அவர் மேலும் கூறியதாவது: “முதலாளித்துவ வேட்பாளர்களின் பொய்யான வாக்குறுதிகளுக்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்ய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தீவிரமாக இருக்கும்போது, ​​தொழிலாளர்கள் இந்த வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்கவில்லை.” இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், ஆளும் வர்க்கம், சர்வதேச அளவில் அதன் சகாக்களைப் போலவே, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை விரைவாக அபகரிக்கும் என்று அவர் கூறினார்.

"அரை நூற்றாண்டுக்குப் பின்னர், சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சியை நாம் காண்கிறோம். இந்த போராட்டங்கள் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவத்திலும் சர்வதேசமயமானதாக உள்ளன,” என்று பேச்சாளர் தெரிவித்தார்.


பாணி விஜேசிறிவர்தன

மெக்சிக்கோவில் வேலைநிறுத்தம் செய்யும் வாகனத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தங்கள் சொந்த அடிமட்ட உறுப்பினர்கள் குழுவை அல்லது நடவடிக்கைக் குழுக்களை எவ்வாறு உருவாக்கியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டிய விஜேசிறிவர்தன, கடந்த ஆண்டு தேசிய வேலை நிறுத்தத்தின் போது, டிசம்பரில் அபோட்சிலீ தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுவை ஸ்தாபிக்க முடிவு செய்ததைப் பற்றியும் குறிப்பிட்டார்.

பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த எபோட்சிலீ தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் முன்னணி உறுப்பினர்களை வரவேற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், நடவடிக்கைக் குழுவை கட்டியெழுப்பியதானது “தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தீவு முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு, என்று கூறினார்."

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை விடுவிப்பதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும்  சர்வதேச பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்து எபோட்சிலி நடவடிக்கைக் குழு எடுத்த தீர்மானத்தை பற்றி விஜேசிறிவர்தன குறிப்பிட்டார். "அசான்ஜிற்கு எதிரான வேட்டையாடலானது உலகளவில் ஆளும் வர்க்கங்களால் ஜனநாயக உரிமைகள் மீது முன்னெடுக்கப்படும் தாக்குதல்களின் உச்ச கட்டமாகும்" என்று அவர் கூறினார். "எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்கள் அசான்ஜின் பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுத்துள்ளனர். பிற தொழிலாளர்கள், இங்கேயும், சர்வதேச அளவிலும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்த எதிர்த் தாக்குதலில் இணைய வேண்டும்.”

வளர்ந்து வரும் மற்றொரு உலகப் போர் அச்சுறுத்தல், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சமூக எதிர் புரட்சி மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலையும் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே சமாளிக்க முடியும் என்று விஜேசிறிவர்தன விளக்கினார். "தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமைத்துவத்தையும் முன்னோக்கையும் வழங்குவது இந்த போராட்டத்தில் முக்கியமானதாகும்" என்று அவர் முடித்தார். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சோ.ச.க.வில் சேரவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக அதைக் கட்டியெழுப்பவும் அவர் அழைப்பு விடுத்தார்.

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையின் ஒரு சக்திவாய்ந்த ஒரு வெளிப்பாடாக, இந்தியாவில் பழிவாங்கப்பட்டுள்ள 48,000 தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை ஆதரிக்கும் தீர்மானத்தை இந்தப் பொதுக் கூட்டம் ஏகமனதாக நிறைவேற்றியது. வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகளைப் பாதுகாப்பதற்காகப் போராடியதற்காக தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவின் அரசாங்கத்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்..

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் ஹட்டன் கூட்டத்தில் கலந்து கொண்ட பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் பேசினர்.

எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் கூறியதாவது: “இந்த கூட்டம் மற்ற தேர்தல் கூட்டங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான மூல காரணம் மற்றும் தொழிற்சங்கங்களின் துரோகம் ஆகியவை தெளிவுபடுத்தப்பட்டன, மேலும் கூட்டத்தில் கேள்விகள் கேட்கவும் இந்த பிரச்சினைகள் குறித்து பேசவும் பார்வையாளர்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராடும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே. சோ.ச.க.வை கட்டியெழுப்ப தொழிலாளர்கள் முன்வர வேண்டும்.”

எபோட்சிலி தோட்ட நடவடிக்கைக் குழுவின் தலைவர் பி. சுந்தரலிங்கம் தெரிவித்ததாவது: “இந்த கூட்டத்தில் முதலாளிகளால் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதிலிருந்து செல்வம் எவ்வாறு குவிக்கப்படுகிறது என்பதை நான் கற்றுக்கொண்டேன், உலக பொருளாதார நெருக்கடி மற்றும் உலகப் போரின் ஆபத்து பற்றி அறிந்து கொண்டேன். வேறு எந்த கூட்டத்திலும் தொழிலாளர்களுக்கு இந்த வகையான அறிவை வழங்குவதில்லை.”

எம். சாலினி, ஒரு மாணவியாவார். “என்னால் உயர் தரம் [பல்கலைக்கழக நுழைவு] வரை படிக்க முடியாது போனது, ஏனென்றால் எனது தந்தை தனியார் கல்வி வகுப்புகளுக்கு பணம் செலுத்துவதற்கும் வழக்கமான செலவுகளைச் செய்வதற்கும் போதுமான அளவு சம்பாதிக்கவில்லை. நான் ஒரு வேலையைப் பெற முயற்சிக்கிறேன், ஆனால் சரியான வேலைவாய்ப்பை தேடிப்பிடிக்க முடியவில்லை. நான் தற்போது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் ஆங்கிலம் மற்றும் கணினி திறன்களைப் படித்து வருகிறேன், அதை இரண்டு வருடங்கள் தொடர வேண்டும். ஆனால் அதற்குப் பிறகு எனக்கு சரியான வேலை கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. முதலாளித்துவ அமைப்பின் கீழ் ஏழை மாணவர்களுக்கு எதிர்காலம் இல்லை,” எனக் கூறினார்.

சோ.ச.க. கூட்டத்திற்கான பிரச்சாரத்தின் போது ஹட்டன் பகுதியில் உள்ள பல தொழிலாளர்களுடன் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பேசினர். பலர் முதலாளித்துவ கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் கண்டித்தனர்.

டிகோயாவில் உள்ள இன்ஜஸ்றீ தோட்டத்தைச் சேர்ந்த ஜி. சிவகுமார், 2016 ஆம் ஆண்டில் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியப் போராட்டத்தின் போது நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டவராவார். “எங்கள் வேலை நிலைமைகள் தாங்க முடியாதவை,” என்று அவர் கூறினார்.

"ஊதியம் உணவுக்கு கூட போதாது, எனவே தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு வெளியே வேலை தேட வேண்டும். எங்கள் தோட்டத்தில் கடந்த மாதம், நான்கு தொழிலாளர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றுக்கொண்டு வேலைக்காக கொழும்பு சென்றனர்.

"உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும், எங்கள் ஊதியங்களைக் குறைப்பதன் மூலமும் கம்னி அதன் இழப்புகளை சமாளிக்க முயற்சிக்கிறது. நாங்கள் எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையைப் பற்றி தொழிற்சங்கங்களுக்குச் சொன்னோம், ஆனால் பயனில்லை. 2016 இல் நடந்த வேலைநிறுத்தத்தின் போது நாங்கள் பலிவாங்கப்பட்டோம், ​​உங்கள் கட்சி மட்டுமே எங்களுக்காக பிரச்சாரம் செய்து தொழிற்சங்கங்களின் துரோகத்தை விளக்கியது. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து விலகி நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்துக்காகவும் போராட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.”


வீட்டிற்கு வெளியே தேங்கி நிற்கும் அழுக்கு வடிகால் நீருடன் இராஜரத்தினமும் அவரது குடும்பத்தினரும்

அதே தோட்டத்தைச் சேர்ந்த எஸ். ராஜரத்தினம் கூறியதாவது: “எங்கள் தோட்டத்தின் தேர்தல்களில் பிரச்சாரம் செய்ய வரும் ஆளும் கட்சிகளையும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் தொழிற்சங்கங்களையும் நாங்கள் விரும்பவில்லை.

வீட்டுவசதி இங்கே கடுமையான பிரச்சினை என அவர் தொடர்ந்தார். “12 குடும்பங்கள் ஒரு லயன் அறைகளில் வாழ்கின்றன, அவை கூரைகள் உடைந்து மழை நீர் கொட்டுகிறது. சுவர்களும் உடைந்துள்ளன. இது குறித்து நாங்கள் தோட்ட நிர்வாகத்திடமும் மாகாண சபை மற்றும் ஏனைய அரசு நிறுவனங்களிடமும் மற்றும் தொழிற்சங்கங்களிடமும் புகார் செய்தோம், ஆனால் யாரும் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

"எங்கள் வீட்டுப் பகுதிகளுக்குள் அழுக்கு நீர் ஓடுவதால் எங்கள் குழந்தைகள் எப்போதும் நோய்வாய்ப்படுகிறார்கள். எங்கள் லயன் அறைகளுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய பாலம் சேதமடைந்துள்ளதுட்டன் இதனால் மழை நீர் நிரம்பி வழியும் போது நீர் தடைப்படுகின்றது. இதனால் தண்ணீர் நம் வீடுகளுக்குள் நுழைகிறது. பாலத்தை சரிசெய்ய 60,000 ரூபாய் [333 அமெரிக்க டாலர்] செலவாகாது, ஆனால் அதைச் செய்து அந்த குடும்பங்களை காப்பாற்ற யாரும் தயாராக இல்லை.

"பல்வேறு அரசியல்வாதிகள் இங்கு வந்து, பாலம் கட்டுவதாக உறுதியளித்து, கடந்த தேர்தல்களில் அவர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் தேர்தலுக்குப் பிறகு அவர்கள் திரும்பி வரவில்லை. இந்த வகையான சிறிய வேலைகளைச் செய்ய அவர்கள் தயாராக இல்லை, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 அல்லது 1,500 ரூபாய் தினசரி ஊதியத்தை வழங்கட்டும் பார்ப்போம். அவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை, ஆனால் அவர்களால் எப்போதும் எங்களை ஏமாற்ற முடியாது.”