ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The lessons of the Hong Kong protests for the working class

ஹாங் காங் போராட்டங்களில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்கான படிப்பினைகள்

By Peter Symonds
26 November 2019

ஏறக்குறைய ஆறு மாதங்களாக, அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கோரியும் மற்றும் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்தும் ஹாங் காங்கில் மில்லியன் கணக்கானோர் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால் அந்த போராட்ட இயக்கம் ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறது: ஹாங் காங் நிர்வாகம் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு எந்த குறிப்பிடத்தக்க விட்டுக்கொடுப்புகளும் வழங்கவில்லை என்பதுடன் பொலிஸ் ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்தி வருகிறது. அதேவேளையில் மாணவ பிரிவினரது போர்குணமிக்க தந்திரோபாயங்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கு மட்டுமே இட்டுச் சென்றுள்ளன.

இத்தகைய பாரிய போராட்டங்களின் அடித்தளத்தில், பெய்ஜிங்கின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினதும் (CCP) மற்றும் ஹாங் காங் நிர்வாகத்தில் உள்ள அதன் அரசியல் கைக்கருவிகளினதும் ஜனநாயக-விரோத அணுகுமுறைகள், அத்துடன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுத்து வரும் சீரழிந்து வரும் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் மீதான பரந்த கவலைகளும் உள்ளன.

ஆனால், ஒரு புரட்சிகர சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கை நோக்கியும் ஹாங் காங் மற்றும் சீனா முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தை நோக்கியும் ஒரு திருப்பம் இல்லாததால், அந்த போராட்ட இயக்கம் வெளிப்படையாகவே வலதுசாரி, கம்யூனிச-விரோத மற்றும் ஏகாதிபத்திய-சார்பு அமைப்புகள் உட்பட பல்வேறு முதலாளித்துவ-சார்பு கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்குப் பின்னால் தடுக்கப்பட்டு வருகிறது.


ஹாங்காங்கில் பிடிக்கப்பட்ட எஞ்சிய போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துவதற்காக முகத்தை மறைத்த போராட்டக்காரர்கள் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஒன்றுகூடி போது அவர்களின் ஸ்மார்ட்போன் வெளிச்சத்தைக் காட்டுகின்றனர். திங்கட்கிழமை, நவம்பர், 25, 2019. (படம்: அசோசியேடெட் பிரஸ்/ Ng Han Guan)

அந்த அரசியல் அபாயங்கள், ஹாங்காங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாவட்ட தேர்தல்களில் வெளியாகின, அது அந்நகரின் பழமைவாத அரசியல் எதிர்ப்பை அமைத்துள்ள ஜனநாயக சார்பு குழுவாக்கம் (pan-democrat grouping) என்றழைக்கப்படுவதன் பெருவாரியான வெற்றியில் போய் முடிந்தது. பெய்ஜிங் ஆதரவு நிர்வாகத்திற்கு பணிவுடன் அடிபணிந்த அவர்களின் முன்வரலாற்றின் காரணமாக ஜனநாயக சார்பு கட்சியினர் (pan-democrats), பல மக்களிடம் இருந்து, அதுவும் குறிப்பாக இளைஞர்களிடம் இருந்து அன்னியப்பட்டிருந்தனர் என்பதுடன் போராட்டங்களில் பெரிதும் ஓரங்கட்டப்பட்டு இருந்தனர்.

இருப்பினும், ஓர் அரசியல் மாற்றீடு இல்லாததால், வாக்காளர்கள், பெய்ஜிங்கின் ஜனநாயக-விரோத அணுகுமுறைகள் மற்றும் ஹாங்காங்கில் பொலிஸ் வன்முறைக்கு எதிராக எதிர்ப்பு வாக்குகள் இட்டதால், பரந்த பெய்ஜிங் விரோதத்திலிருந்து இத்தகைய கட்சிகள் ஆதாயமடைந்தன. மொத்தத்தில் ஒருமித்த-ஜனநாயக கட்சியினர் 452 மாவட்ட கவுன்சில் ஆசனங்களில் 347 இல் ஜெயித்து இப்போது 18 கவுன்சில்களில் 17 ஐ கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர் — இது, இத்தேர்தலுக்கு முன்னர் வரையில் அனைத்து கவுன்சில்களிலும் மேலாதிக்கம் செலுத்தி வந்த பெய்ஜிங் ஆதரவு கட்சிகளுக்கு கூர்மையான நிராகரிப்பாக இருந்தது.

இந்த ஜனநாயக சார்பு குழுவாக்கத்தின் மிகப்பெரிய உள்ளடக்கங்களாக விளங்கும் ஜனநாயகக் கட்சியும் குடிமக்கள் கட்சியும் இரண்டுமே முதலாளித்துவ சார்பு கட்சிகளாகும், இவை தங்களின் வணிக நலன்கள் மீது பெய்ஜிங்கின் அத்துமீறல் மீது கவலை கொண்டுள்ள ஹாங் காங் உயரடுக்கின் அடுக்குகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. அவை தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு இயக்கத்திற்கும் விரோதமாக இருப்பதுடன், தங்களின் நிலைப்பாட்டை பாதுகாக்க சீன ஆட்சியின் மீது அழுத்தத்தை கொடுக்க வாஷிங்டன் மற்றும் இலண்டனை எதிர்நோக்குகின்றன.

ஜனநாயக சார்பு கட்சியினர் மீது இளைஞர்களிடையே உள்ள அவநம்பிக்கை ஏற்கனவே 2012 இல் ஒரு தேசப்பற்று கல்வி பாடத்திட்டத்தைத் திணிப்பதற்கு பெய்ஜிங்கின் முயற்சிகளுக்கு எதிராகவும் மற்றும் மீண்டும் 2014 இல் அப்பிராந்தியத்தின் உயர்பதவியான நிர்வாக தலைவர் பதவிக்குச் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தல்களைக் கோரிய குடை இயக்கம் (Umbrella Movement) என்றழைக்கப்பதிலும் வெடித்த பாரிய போராட்டங்களில் வெளிப்படையாக இருந்தது. 2014 இல், சிலபல விட்டுக்கொடுப்புகளுக்காக சட்டமன்ற கவுன்சிலில் ஒருமித்த-ஜனநாயகக் கட்சியினர் உபாயங்களை மேற்கொண்ட போது, பெருந்திரளான இளைஞர்கள் வீதிகளில் இறங்கியதுடன் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் வன்முறையைக் கொண்டு பொலிஸ் பீதியூட்டுவதை எதிர்த்தனர்.

"குடை" போராட்டங்களைப் பல்வேறு குழுக்களும் கட்சிகளும் சூழ்ந்திருந்தன — பெய்ஜிங்கில் இருந்து முற்றிலும் சுதந்திரமாக அல்லது அதிக சுயாட்சியை வலியுறுத்திய ஹாங்காங் பிராந்திய உரிமை கோரும் "உள்ளூர்வாத" முன்னோக்கு என்றழைக்கப்பட்டதன் மீது தங்களை அடித்தளமாக கொண்டிருந்த ஹாங்காங் தேசிய முன்னணி மற்றும் ஹாங்காங் பழங்குடியினர் Demosistō உட்பட பலவும் அவற்றில் உள்ளடங்கி இருந்தன. ஹாங்காங் பழங்குடியினர் மற்றும் குடிமக்கள் விருப்பு (Hong Kong Indigenous and Civic Passion) போன்ற மிகவும் வெறிபிடித்த மற்றும் கம்யூனிஸ்ட்-விரோத "உள்ளூர்வாதிகள்" (localists) சீனப் பெருநிலத்தைச் சேர்ந்தவர்களே விலைகளை உயர்த்தி வருகிறார்கள் என்றும் "உள்ளூர்வாசிகளுக்கு" வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளைத் தடுத்து வருகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டி, அவர்கள் மீது ஆத்திரமீட்டும் மற்றும் சிலவேளைகளில் வன்முறையான தாக்குதல்களில் ஈடுப்பட்டனர்.


ஹாங் காங் போராட்டத்தின் போது கலகம் ஒடுக்கும் பொலிஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறது, ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட், 25, 2019. (படம்: அசோசியேடெட் பிரஸ்/ Kin Cheung)

 

சீனப் பெருநிலத்திற்கு நாடு கடத்துவதை அனுமதிக்கும் சட்டமசோதாவை முன்நகர்த்துவதற்கான ஹாங் காங் நிர்வாகத்தின் முயற்சிகள் மீதுதான் ஜூன் மாத தொடக்கத்தில் சமீபத்திய போராட்ட இயக்கம் வெடித்தது. இது விமர்சகர்களையும் எதிர்ப்பாளர்களையும் மிரட்டவும் அடைத்து வைக்கவும் பெய்ஜிங்கால் சுரண்டிக் கொள்ளப்படும் என்று பரவலாக அஞ்சப்பட்டது. பழமைவாத மனித குடியுரிமை முன்னணி (Civil Human Rights Front) தான் மிகப்பெரும் போராட்டங்களை ஒழுங்கமைத்த அமைப்பாக இருந்தது. இது சுமார் 48 அரசு-சாரா அமைப்புகள், பல ஜனநாயக சார்பு கட்சிகள் மற்றும் ஏனைய அரசியல் குழுக்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் ஹாங்காங் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உட்பட தொழிற்சங்கங்களின் ஒரு குழுவாக்கமாகும்.

நாடு கடத்தும் சட்டத்தைத் திரும்ப பெறுவது, பொலிஸ் வன்முறை மீது ஒரு சுதந்திரமான விசாரணை மேற்கொள்வது, போராட்டக்காரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைக் கைவிடுதல், முழு வாக்குரிமை அடிப்படையில் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தல்கள் என மக்கள் குடியுரிமைகள் முன்னணி தான் அந்த போராட்டங்களின் கோரிக்கைகளை நெறிப்படுத்தியது. இந்த கோரிக்கைகளின் மட்டுப்படுத்தப்பட்ட தன்மை அந்த அமைப்பின் முதலாளித்துவ வர்க்க குணாம்சத்தை பிரதிபலிக்கிறது, அந்த அமைப்பு பெய்ஜிங்கின் அதிகரித்து வரும் அத்துமீறலுக்கு விரோதமான வியாபார உயரடுக்கின் அடுக்குகளைப் பிரதிநிதித்துவம் செய்வதுடன், அந்த போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தைத் தூண்டிவிட்டுவிடுமோ என்று அஞ்சுகிறது. அந்த முன்னணி திட்டமிட்டே தான் தொழிலாளர்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் மோசமடைந்து வரும் சமூக நெருக்கடியைத் தீர்க்க எந்த கோரிக்கைகளும் வைக்கவில்லை.

ஆகஸ்ட் 5 இலும் மீண்டும் செப்டம்பர் 2-3 இலும் நூறாயிரக் கணக்கானவர்கள் ஈடுபட்ட நகரந்தழுவிய வேலைநிறுத்தங்களுக்குள் பல்வேறு தொழிலாளர் குழுக்களின் நடவடிக்கைகள் ஒன்றுதிரண்ட போது ஹாங்காங் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினது (HKCTU) பாத்திரம் அப்பட்டமாக அம்பலமானது. தொழில்துறை நடவடிக்கையை கட்டுப்படுத்தி வைக்கும் ஒரு முயற்சியில், HKCTU அதன் அமைப்புக்குட்பட்ட சங்கங்களை வேலைநிறுத்தம் செய்ய அழைப்புவிடுக்கவில்லை, மாறாக சுகவீன விடுப்பு எடுப்பது அல்லது வேலைக்கு வராமல் இருப்பதைத் தனிநபர்களிடமே விட்டு விட்டது. அதன் செய்தி தொடர்பாளர்கள் மனித குடியுரிமை முன்னணியின் கோரிக்கைகளை எதிரொலித்ததுடன், தொழிலாளர்களின் சமூக துன்பங்களை குறித்து குறிப்பிடவே இல்லை.

செப்டம்பர் வேலைநிறுத்தத்தை அடுத்து, தலைமை நிர்வாக பெண்மணி கேரி லாம் கூறுகையில் நாடுகடத்துவதற்கான சட்டமசோதாவை அக்டோபரில் உத்தியோகபூர்வமாக திரும்ப பெறுவதாக அறிவித்தார். இந்நடவடிக்கை மிகவும் சிறிய, மிகவும் தாமதமான நடவடிக்கையாக பரவலாக கண்டிக்கப்பட்டது. அதேநேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிக்கு விடையிறுப்பாக, பழமைவாத மற்றும் உள்ளூர்வாத எதிர்ப்பாளர்கள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களுக்குத் தலையிடுமாறு அழைப்புவிட்டதன் மூலமாக போராட்ட இயக்கத்தை வலதுசாரி திசையில் திசைதிருப்ப முனைந்தன.

அமெரிக்க கொடிகளை அசைத்தவாறு "நட்சத்திரங்கள் பரவிய பதாகை" என்று பாடியவாறும் செப்டம்பர் 8 இல் அமெரிக்க தூதரகம் நோக்கி ஓர் அணிவகுப்பு ஒழுங்கமைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் தூதரகத்திற்கு வெளியிலும் இதேபோன்ற போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. Demosistō இன் இளம் தலைவர் ஜோஸ்வா வொங் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்தார். அங்கே அவர் ஊடகங்களால் புகழப்பட்டதுடன், முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்திப்பதற்கும் அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றுவதற்கும் அனுமதிக்கப்பட்டனர்.

வாஷிங்டன் மற்றும் இலண்டனை நோக்கிய இந்த பகிரங்கமான திருப்பம் நேரடியாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்குச் சாதகமாகிறது. ஆரம்பத்திலிருந்தே அது வாஷிங்டனுக்கு சார்பான விரல்விட்டு எண்ணக்கூடிய ஏகாதிபத்திய-சார்பு கலகக்காரர்களின் நடவடிக்கை என்பதாக போராட்டங்கள் மீது பழியுரைக்க முனைந்துள்ளது. ஹாங்காங் போராட்டங்களுக்கு எதிராக எந்தவொரு இராணுவ ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்தவும் அத்துடன் பெருநிலத்தில் பொது கருத்துக்களை நஞ்சூட்டவும் பெய்ஜிங் ஐயத்திற்கிடமின்றி வெளிநாட்டு தலையீடு என்ற குற்றச்சாட்டுக்களைச் சாதகமாக்கிக் கொள்ளும். இந்த போராட்டங்களில் இணைந்த மில்லியன் கணக்கானவர்கள் அமெரிக்க-சார்பு கொடியை அசைத்ததால் உந்தப்படவில்லை என்றாலும், ஒரு தெளிவான அரசியல் மாற்றீடு இல்லாமல் இந்த போராட்ட இயக்கம் அந்த திசையில் வழி நடத்தப்படக்கூடிய அபாயம் உள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஹாங்காங்கில் ஜனநாயக உரிமைகள் மீதோ அல்லது வேறெந்த இடத்திலுமே கூட அந்த விடயத்தில் அதற்கு சிறிதும் அக்கறை இல்லை. அது அதன் சொந்த சூறையாடும் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை முன்னெடுப்பதற்காக ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் மற்றும் நவ-காலனித்துவ போர்களுக்கான ஒரு சாக்குபோக்காக "மனித உரிமைகளை" தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதில் நீண்ட வரலாறைக் கொண்டுள்ளது. மேற்கு மாகாணம் சின்ஜியாங்கில் வீகர்ஸ் (Uighurs)  மக்கள் மீதான சீன ஒடுக்குமுறை சம்பந்தமாக வாஷிங்டனின் பாசாங்குத்தனமான பிரச்சாரமானது, அது அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்திற்குப் பிரதான அச்சுறுதலாக கருதும் சீனாவைப் பலவீனப்படுத்தி அடிபணிய செய்வதற்கான அதன் மூலோபாயத்தின் பாகமாக உள்ளது.

அமெரிக்க அரசியல், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஸ்தாபகத்தின் பிரிவுகள் தெளிவாக ஹாங்காங்கின் “மனித உரிமைகள்” பிரச்சினையை சுரண்ட நகர்ந்து வருகின்றன. அது ஹாங்காங் உடனான சிறப்பு வர்த்தக உறவுகளைப் பேணலாமா என்பதையும், அத்துடன் நடவடிக்கையாளர்களை சித்திரவதை செய்வதற்குப் பொறுப்பான தனிநபர்கள் மீது தடை விதிக்கலாமா என்பதையும் கண்டறிவதற்காக ஹாங்காங்கின் சுயாட்சியை ஆண்டுதோறும் மீளாய்வு செய்வதைக் கட்டாயமாக்கும் ஒரு சட்டமசோதாவை அமெரிக்க காங்கிரஸ் இவ்வாரம் நிறைவேற்றியது. ட்ரம்ப் ஏறக்குறைய சமீபத்தில் கடந்த மாதம் ஹாங்காங் போராட்டங்களுக்குச் சீனாவின் விடையிறுப்பை பாராட்டி இருந்தார் என்றாலும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, போராட்ட இயக்கத்தின் மனக்குறைகளுக்கு அக்கறை செலுத்துமாறு ஹாங்காங் நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்து, இவ்வாரம் ஏதோவொரு விதத்தில் வேறுபட்ட குறிப்பை வழங்கினார்.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏகாதிபத்தியத்திடமான முறையீடுகள் பயனற்றவை என்பது மட்டுமல்ல. அவை ஓர் அபாயகரமான பொறியாக உள்ளன. ஹாங்காங்கில் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் தோல்வியிலோ அல்லது நாசத்திலோ முடியக்கூடாது என்றால், இளைஞர்களும் தொழிலாளர்களும் வாஷிங்டன் மற்றும் இலண்டனை நோக்கி அல்ல, தொழிலாள வர்க்கத்தை நோக்கி முதன்முதலாக சீனா எங்கிலுமான தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்ப வேண்டும். ஹாங்காங்கின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் போலவே, சீனப் பெருநில தொழிலாள வர்க்கமும் சீரழிந்து வரும் வாழ்க்கை நிலைமைகள், ஒடுக்கப்படும் வேலையிட நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இல்லாதிருப்பதை முகங்கொடுக்கிறது.

அமெரிக்காவில் வேலைநிறுத்தம் செய்து வரும் வாகனத்துறை தொழிலாளர்கள், பிரான்சில் மஞ்சள் சீருடை இயக்கம் மற்றும் சிலி, ஈக்வடோர் மற்றும் லெபனானில் போராட்ட இயக்கங்கள் உட்பட வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சிக்கு மத்தியில், ஆதரவுக்கான ஒரு முறையீடானது உலகெங்கிலுமான தொழிலாளர்களை நோக்கி திருப்பி விடப்பட வேண்டும். இதற்கு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும் மற்றும் பெய்ஜிங், வாஷிங்டன், இலண்டன் மற்றும் உலகெங்கிலுமான அதன் பாதுகாவலர்கள் அனைவருக்கும் எதிராகவும் ஒரு சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் ஓர் ஒருங்கிணைந்த போராட்டம் அவசியப்படுகிறது.

தொழிலாளர்களை ஒருங்கிணைக்க, தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தையும் மற்றும் பிற்போக்குத்தனமான சீனத் தேசப்பற்று மற்றும் அதேயளவுக்குப் பிற்போக்குத்தனமான ஹாங்காங் "உள்ளூர்வாதம்" மற்றும் பிராந்தியவாதம் இரண்டையும், இவை முதலாளித்துவத்தால் தோற்றுவிக்கப்பட்ட சமூக நெருக்கடிக்கு "பெருநில மக்களை" பலிக்கடா ஆக்குகின்ற நிலையில், இந்த அனைத்து வடிவங்களையும் எதிர்ப்பது இன்றியமையாததாகும்.

சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிசத்தின் பாத்திரத்தை அரசியல்ரீதியில் தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. ஒரு மிக முக்கிய வரலாற்று சம்பவமான 1949 சீனப் புரட்சி, சீனா மீதான ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு முடிவுகட்டி பெருந்திரளான மக்களின் வாழ்க்கை தரங்களை உயர்த்தியது என்றாலும், அது மாவோ சேதுங் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினால் ஆரம்பத்தில் இருந்தே ஊனமுற்றிருந்திருந்தது. மாவோயிசத்தின் தேசியவாத முன்னோக்கு ஊனமுற்ற தொழிலாளர் அரசுக்கு ஒரு பேரழிவு என்பதை நிரூபித்தது என்றாலும், 1978 இல் இருந்து முதலாளித்துவ மீட்சியை நோக்கி திரும்புவது என்பதே CCP எடுத்த தீர்மானமாக இருந்தது, இது 1989 இல் தியானென்மன் சதுக்கத்தில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை வன்முறையாக ஒடுக்கியதற்குப் பின்னர் விரைவாக தீவிரப்படுத்தப்பட்டது.

சோசலிசத்திற்கான போராட்டத்தில், ஹாங் காங் உட்பட, சீனா எங்கிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்கான போராட்டத்திற்கு 20 ஆம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களின் படிப்பினைகளை உள்ளீர்த்த ஒரு புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பது அவசியமாகும். உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே, ஸ்ராலினிசம் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கு எதிராகவும் ஒரு இடைவிடாத போராட்டத்தைத் தொடுத்து வந்துள்ள ஒரே கட்சியாகும். ஹாங்காங் மற்றும் சீனப் பெருநிலத்தின் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் எங்களைத் தொடர்ந்து கொண்டு இத்தகைய முக்கிய அரசியல் பிரச்சினைகளைக் குறித்து விவாதிக்க தொடங்குமாறும் சீனாவில் ICFI இன் பிரிவைக் கட்டமைப்பதை நோக்கி செயல்படுமாறும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.