ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Growing inequality risks social revolution, hedge fund chief warns

அதிகரித்து வரும் சமத்துவமின்மையால் சமூக புரட்சியின் ஆபத்து, தனியார் முதலீட்டு நிறுவன தலைவர் எச்சரிக்கிறார்

By Nick Beams
8 November 2019

சுமார் 17 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் மிகப் பெரிய பணக்காரரான அமெரிக்க தனியார் முதலீட்டு நிறுவன தலைவர் ரே டாலியோ (Ray Dalio) வின், அதிகரித்து வரும் சமத்துவமின்மை வன்முறையான சமூக புரட்சியின் அச்சுறுத்தலைக் கொண்டு வருகின்றன என்ற கருத்துக்கள், கடந்தாண்டு நெடுகிலும் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வர்க்க போராட்ட எழுச்சியின் உந்துசக்திகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

எல்லா விதமான போலி-இடது போக்குகளாலும் ஒரு புரட்சிகரமான சக்தி என்பதிலிருந்து கைத்துறக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கம், தசாப்த காலமாக வர்க்க போராட்டம் நசுக்கப்பட்டதற்குப் பின்னர் அதன் வழியையும் குரலையும் காண தொடங்கி உள்ள நிலையில்—சிலி, வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பா வரையில்— உலகெங்கிலும் இப்போது வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடித்து வருகின்றன.

சந்தியாகோ மெட்ரோ போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதற்கு விடையிறுப்பாக வெடித்த சிலியின் ஆர்ப்பாட்டங்களில் மிகவும் திடுக்கிட வைக்கும் கோஷங்களில் ஒன்று, “இது 30 பிசோ சம்பந்தப்பட்டதில்லை, இது 30 ஆண்டுகள் சம்பந்தப்பட்டது,” என்றது — தசாப்தங்களாக வாழ்க்கை தரங்கள் மற்றும் சமூக நிலைமைகள் கீழுக்கு இழுக்கப்பட்டு சகிக்க இயலாததாய் ஆகியுள்ள நிலையில் ஐயத்திற்கிடமின்றி இதே உணர்வு அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.


சீனாவின் சூஹாயில் உள்ள மின்னணு தொழிற்சாலை [Credit: http://www.flickr.com-people-76224602atN00]

இவ்வாரம் கனக்டிக்கட் கிரீன்விச் வணிக மாநாட்டில் டாலியோ உரையாற்றுகையில், சமூக சமத்துவமின்மை தேசிய அவசர நிலைமை என்றார். உலகம் "முட்டாள்தனமாக" ஆகிவிட்டது என்றுரைத்த அவர், தற்போதைய அமைப்புமுறை "முறிந்து" விட்டது, அது "சீர்திருத்தப்பட" வேண்டும் இல்லையென்றால் அங்கே புரட்சி நடக்கும் "அதில் நாம் அனைவரும் ஒருவரையொருவர் கொல்ல முயன்று கொண்டிருப்போம்.”

அவரைப் போலவே உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அவரின் சக தனியார் முதலீட்டு நிறுவன தலைவர் போல் டூடர் ஜோன்ஸூம் (Paul Tudor Jones) சமூக சமத்துவமின்மை மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

“பெருநிறுவன இலாபங்கள் 2 ட்ரில்லியன் டாலராக உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், அவற்றில் ஒரு ட்ரில்லியன் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது … அது சமூகங்களுக்குச் சென்றிருக்க வேண்டும். அது வாடிக்கையாளர்களுக்குச் சென்றிருக்க வேண்டும். இப்போது அது, அதிகரித்தவகையில், 1 சதவீதத்தினருக்கு தான் செல்கிறது,” என்றார்.

பொது நிறுவனங்களில், இதன் நிர்வாக குழுக்களில் அவரும் அவர் உதவியாளர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்ற நிலையில், அங்கே ஆறு மில்லியன் தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களால் வாழ்க்கைக்கான சம்பளத்தை பெற முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். “ஐம்பதாண்டுகளுக்கு முன்னர், பெருநிறுவன வருவாயில் 6.5 சதவீதம் பங்குதாரர்களுக்குச் சென்றது. இன்றோ, இது 13 சதவீதமாக உள்ளது,” என்றார்.

கடந்த காலத்தை றோஜா நிறத்தில் அலங்கரிப்பது ஒருபுறம் இருக்க, ஜோன்ஸின் கருத்துக்கள் முதலாளித்துவ பொருளாதார செயல்பாடுகளில் ஒரு தீர்க்கமான மாற்றத்தை நோக்கி கவனத்தை செலுத்தியிருந்தன.

ஐம்பதாண்டுகளுக்கு முன்னர், இலாபங்களில் ஒரு கணிசமான பகுதி புதிய முதலீடுகளுக்குத் திருப்பப்பட்டு, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைகளில் அதிகரிப்பைக் கொண்டு வந்தது, அத்துடன் நிஜமான கூலிகளும் உயர்ந்தன. ஆனால் டாலியோ மற்றும் ஜோன்ஸ் குறிப்பிடுவதைப் போல அந்நேரத்தில் அங்கே பல தரப்பட்ட "வணிக கலாச்சாரம்" இருந்ததால் அல்ல, அதுபோன்ற முதலீடுகள் அதிகரித்த இலாப தேடலில் இறக்கி விடப்பட்டிருந்தன — இன்றைய முதலாளித்துவ பொருளாதாரத்திலும் இதே தான் உந்துசக்தியாக உள்ளது.

எவ்வாறிருப்பினும் கடந்த காலத்தில், இலாபங்கள் மீண்டும் முதலீடு செய்யப்பட்டமை பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி வாழ்க்கை தரங்களை அதிகரித்ததால், அடியிலிருந்த சமூக யதார்த்தத்தை மறைத்து வைக்க முடிந்திருந்தது. மூலதனமும் தொழிலாள வர்க்கமும் சமரசமற்ற எதிரெதிர் சமூக சக்திகள் இல்லை என்றும் மாறாக ஏதோவொரு விதத்தில் ஆதாயத்திற்கான பரஸ்பர பங்காண்மையில் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருப்பதாக கருத்து முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கென்னடியின் வார்த்தைகளில், “மேலுயரும் அலை எல்லா படகுகளையும் மேலுயர்த்துகிறது.”

ஆனால் 1970 களின் மத்திய காலப்பகுதியில், ஒரு சீரான இலாப விகிதம் மற்றும் அதிகரித்த நிஜமான சம்பளங்களையும் கொண்டு வந்த போருக்குப் பிந்தைய வளர்ச்சி, இலாப விகிதங்கள் கீழ்நோக்கி திரும்பியதும் நிஜமாக மற்றும் முறையாக முடிவுக்கு வர இருந்தன.

இது இரண்டு விடையிறுப்புகளைக் கொண்டு வந்தது: 1980 களின் தொடக்கத்தில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வெறித்தனமான மற்றும் முடிவில்லா தாக்குதல் —சில மதிப்பீடுகளின்படி அமெரிக்காவில் நிஜமான சம்பள மட்டம் 1973 இல் இருந்தே உயரவில்லை— அடுத்து, நிஜமான பொருளாதாரத்தில் இலாப விகிதங்கள் சரிந்ததிருந்த போது அதனூடாக முதலீடுகள் இன்றி, மாறாக ஒட்டுண்ணித்தனமான நிதியியல் ஊகவணிக வழிவகைகள் மூலமாக இலாபத்தைத் திரட்டுவதற்கான ஒரு திருப்பம் நடந்தது.

ரீகன் நிர்வாகத்தின் கீழ் தொடங்கி, பங்குச் சந்தை இத்தகைய நடவடிக்கைகளின் முக்கிய செயற்களமாக மாறியது. இதற்கு சட்ட அமைப்புமுறையில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது, இதில் மிகவும் முக்கியமானவற்றில், நிறுவனங்கள் அவற்றின் சொந்த பங்குகளை வாங்கி விற்பதை அனுமதித்து, அவ்விதத்தில் பங்குகளின் எண்ணிக்கையைக் குறைத்து அவற்றின் விலைகளை உயர்த்துவதை அனுமதிக்க, பங்குச் சந்தையை நெறிப்படுத்துவதற்குப் பொறுப்பான ஆணையம், அதாவது பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற ஆணையத்தின் 1982 முடிவு முக்கியமானவற்றில் ஒன்றாக இருந்தது.

19 ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு பொருளாதாரவாதி பிரெடெரிக் பாஸ்டியா (Frédéric Bastiat) ஒருமுறை எழுதினார்: “சமூகத்தில் ஒருங்கிணைந்து வாழும் மனித குழுக்களின் வாழ்க்கை முறை சூறையாடப்படும் நிலைக்கு மாறும் போது, காலப்போக்கில் அதை அங்கீகரிக்கும் ஒரு சட்ட அமைப்புமுறையை மற்றும் அதை பெருமைப்படுத்தும் ஒரு தார்மீக நெறிமுறையை அவர்கள் உருவாக்குகிறார்கள்.”

பாஸ்டியா, “சுதந்திர சந்தைக்கு" வக்காலத்து வாங்கியதோடு சோசலிசத்திற்கு எதிராக உரக்க கூச்சலிட்ட ஓர் எதிர்ப்பாளராவார். ஆனால் அவரின் கருத்துக்கள் 1980 களில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பல நிகழ்வுபோக்குகளைப் படம் பிடித்திருந்தன. இலாபங்கள், நிஜமான பொருளாதாரத்தில் புதிய முதலீடுகள் மூலமாக நிறுவன நடவடிக்கைகளை விரிவாக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோட்பாடு "பங்குதாரர் மதிப்பு" என்ற மந்திரத்தின் மூலமாக பிரதியீடு செய்யப்பட்டது.

அதாவது, எல்லா வழிவகைகள் மூலமாகவும் — தனியார் முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் செயற்குழுக்கள் மேலாளுமை செலுத்தும் பல்வேறு முதலீட்டு நிறுவனங்கள் என— நிதி மூலதனத்தின் இலாப ஓட்டத்தை அதிகரிப்பதே நிறுவனத்தின் அவசியமான பிரதான பணியாக இருக்க வேண்டும். அவற்றில் மிகவும் முக்கியமானவை ஒருங்கிணைப்புகள் —இது அதிகரித்த பெருநிறுவன செல்வவள திரட்சிக்கும் ஏகபோகத்திற்கும் இட்டுச் செல்கிறது— மற்றும் வேலை வெட்டுக்களை நிறுவனம் அறிவிக்கும் போது இப்போது அதன் பங்கு விலை உயர்கிறது.

இன்று, பங்குகளை வாங்கி விற்கும் நடவடிக்கைகள் சந்தை உயர்வில் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. இந்த நிகழ்வுபோக்கைக் குறித்து நீண்டகால ஆய்வு செய்துள்ள பொருளாதார நிபுணர் வில்லியம் லசோனிக் (William Lazonick), 2008 மற்றும் 2017 க்கு இடையே மிகப் பெரிய மருத்துவத்துறை நிறுவனங்கள் பங்குகள் வாங்கிவிற்பதில் 300 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாகவும், பங்கு ஆதாயங்கள் வழங்குவதில் மேலும் 290 பில்லியன் டாலர் வழங்கி இருப்பதாகவும், இவை அவற்றின் மொத்த இலாபத்தில் 100 சதவீதத்திற்கும் சற்று அதிகத்திற்கு சமம் என்றும், அதேவேளையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு பின்னுக்கு சரிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுண்ணித்தனத்தின் இந்த வடிவம் அமெரிக்க பொருளாதாரத்தின் அனைத்து முக்கிய துறைகளுக்கும் விரிவடைந்துள்ளது. லாசோனிக் கருத்துப்படி, 2002 மற்றும் 2019 க்கு இடையே கணினி வலையமைப்புகளை அபிவிருத்தி செய்வதில் சம்பந்தப்பட்ட ஒரு பிரதான நிறுவனமான சிஸ்கோ சிஸ்டம்ஸ் (Cisco Systems) பங்குகளை வாங்கி விற்பதில் 129 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது, இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அந்நிறுவனம் செலவிட்டுள்ளதை விடவும் அதிகமாகும்.

பேர்க்க்ஷைர் ஹாத்தவே நிறுவன தலைவர் வாரன் பஃபெட் (Warren Buffett) பங்குச் சந்தையில் இலாபகரமான வாய்ப்புகளைத் தேடியதன் காரணமாக அந்நிறுவனம் 128 பில்லியன் டாலர் பணக்குவியல் மீது அமர்ந்துள்ளதாக இவ்வார தொடக்கத்தில் செய்திகள் வெளியாயின.

பங்குகள் வாங்கிவிற்பதன் வேகம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. 2017 இன் இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பெருநிறுவன வரி வெட்டு மசோதாவை நிறைவேற்றிய போது, அது அமெரிக்க பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்றும், நல்ல சம்பள வேலைகளை விரிவாக்கும் என்றும் வாதிட்டார். அது மாதிரியான எதுவும் நடக்கவில்லை, ஏனென்றால் நிறுவனங்கள் வரி வெட்டு மூலமாக கிடைத்த வெகுமதியில் பெரும்பான்மையைப் பங்குகள் வாங்கி விற்பதில் செலவிட்டன.

2018 இல் எஸ் & பி 500 இன் நிறுவனங்கள் அவற்றின் சொந்த பங்குகளை வாங்கி விற்பதில் சாதனையளவுக்கு 800 பில்லியன் டாலர்கள் செலவிட்டன மற்றும் இந்தாண்டு இந்த தொகை 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டக்கூடும்.

இந்த பணத்தில் எதுவுமே பொருளாதாரரீதியில் உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. அதன் செலவுகள் முற்றிலும் பங்கு மதிப்புகளை ஊதிப் பெரிதாக்கவும் மற்றும் நிஜமான முதலீட்டுக்கு ஒரு டாலரைக் கூட செலவிடாமல் அல்லது ஒரேயொரு வேலையைக் கூட உருவாக்காமல் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கருவூலப் பெட்டிகளுக்குள் பாயும் செல்வ வளத்தை அதிகரிப்பதை நோக்கியும் திருப்பி விடப்பட்டுள்ளன.

தங்களின் சம்பளங்கள் மற்றும் சமூக நிலைமைகளைப் பாதுகாப்பதற்காக போராட்டத்தில் இறங்கும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள தொழிலாளர்கள், “பணம் இல்லை,” என்ற ஒரே வாதத்தைச் சந்திக்கிறார்கள். இந்த பணக்குவியலை நிதியியல் உயரடுக்குகளின் கரங்களில் இருந்து பறித்தால் மட்டுமே ஒருவரால் அதை பொருளாதாரரீதியிலும் சமூகரீதியிலும் பயனுள்ள நோக்கங்களுக்காக பயன்படுத்துவது குறித்து நினைத்து பார்க்க முடியும்.

குறிப்பாக சமூக விளைவுகளின் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு மோசமான ஒரு வெளிப்பாடு தான் போயிங் விவகாரம். 2013 மற்றும் 2019 க்கு இடையே, அந்நிறுவனம் பங்கு வாங்கிவிற்பதிலும் பங்காதாயங்கள் மீதும் 60 மில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட்ட அதேவேளையில், நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பதற்கு இட்டுச் சென்ற இரண்டு விபத்துக்களில் சிக்கிய 737 மேக்ஸ் ஜெட்களின் (737 Max jets) கோளாறுகளைச் சரி செய்வதற்காக ஆதாரவளங்களைச் செலவிட மறுத்திருந்தது.

பங்குச் சந்தைகளின் உயர்வில் மற்றொரு முக்கிய காரணி, பணத்தைப் புழக்கத்தில் விடும் திட்டத்தின் கீழ் ட்ரில்லியன் கணக்கிலான டாலர் நிதியியல் சொத்திருப்புகளைக் கொள்முதல் செய்ததன் மூலமாகவும் மற்றும் சாதனையளவுக்கு வட்டி விகிதங்களைக் குறைத்ததன் மூலமாகவும் நிதியியல் அமைப்புமுறைக்குள் மலிவு பணத்தை பாய்ச்சி வருவதாகும்.

2008 நிதியியல் நெருக்கடியில் இருந்து கடலளவில் மலிவு பணம் வழங்குவதற்கான வழிவகை, பங்குச் சந்தை மற்றும் நிதியியல் அமைப்புமுறையின் செயல்பாடுகளுக்கு எந்தளவுக்கு மத்திய விடயமாக ஆகியுள்ளது என்றால், மிகவும் பரந்தளவில் ஒரு சமயத்தில் "வழமையான" நாணய கொள்கை என்று கருதப்பட்டதை மீண்டும் கொண்டு வந்தால், அது மற்றொரு நிதியியல் உருதலுக்கு, ஒருவேளை ஒரு தசாப்தத்திற்கு முந்தையதை விட பெரிய ஒன்று நிகழாதிருக்கும் பொருட்டு அதற்கான முயற்சியும் கூட செய்ய மத்திய வங்கிகள் பயப்படுகின்றன.

அமெரிக்க பெடரல் அதன் சொத்து பங்குடைமைகளை ஏற்கனவே படிப்படியாக குறைப்பதைக் கைவிட்டுள்ள நிலையில், இது முந்தைய 800 பில்லியன் டாலர் முறிவில் இருந்து 4 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான பொறிவுக்கு விரிவடைந்துள்ள நிலையில், அமெரிக்க பெடரல் கடந்த மாதம் அதன் கூட்டத்தில், அதன் அடிப்படை வட்டிவிகிதத்தில் மூன்றாவது 0.25 சதவீத வெட்டை செய்தது. அதற்கும் கூடுதலாக, எதிர்நோக்கக்கூடிய எதிர்காலம் வரையில் அங்கே வட்டி விகித உயர்வுகள் இருக்காது என்பதை அது சுட்டிக்காட்டியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பங்குச் சந்தையின் கட்டளைகளுக்குப் பெடரல் முழுமையாக கடமைப்பட்டு இருந்தது.

சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பு, ஏதோ நிதியியல் செல்வ வளத்தில் பாரியளவிலான அதிகரிப்பின் துரதிருஷ்டவசமான பக்க விளைவு அல்ல. இவ்விரு நிகழ்வுப்போக்குகளுக்கும் இடையே சர்வசாதாரணமாய் இடைத்தொடர்பு உள்ளது. பங்குச் சந்தை மற்றும் பிற ஊகவணிக நடவடிக்கைகள் மூலமாக பணம் இன்னும் அதிக செல்வ வளத்தை உருவாக்கும் என்று தெரிந்தாலும், அனைத்து நிதியியல் இலாபங்களும் இறுதியில் தொழிலாள வர்க்கத்தின் உழைப்பில் இருந்து உறிஞ்சப்படும் உபரி மதிப்பு குவியல் மீது ஓர் உரிமைகோரலைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

இவ்விதத்தில், அதிக நிதி மூலதனம் அந்த குவியலில் இருந்து உறிஞ்ச முயல்கிறது, அது எந்தளவுக்கு அதிகமாக உறிஞ்சுவதை உறுதிப்படுத்த முயல்கிறதோ அந்தளவுக்கு அந்த குவியல் விரிவடைகிறது. இது அபாயகரமான வேலை ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் அமசன் பயன்படுத்தும் அடிமை-போன்ற வேலைமுறை ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதன் மூலமாக, இவை இப்போது பொருளாதாரத்தின் ஏனைய துறைகளுக்கும் விரிவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், சுரண்டல் மட்டத்தை அதிகரிப்பதன் மூலமாக எட்டப்படுகிறது.

கிடைக்கும் பாரிய உபரி மதிப்பிலிருந்து ஒரு குறைப்பை அது பிரதிநிதித்துவம் செய்வதால், தொழிலாள வர்க்கத்தின் சமூக கூலி —மருத்துவ சிகிச்சை வழிவகை, கல்வி, முதியோர் கவனிப்பு மற்றும் பிற சமூக சேவைகள் ஆகியவையும்— தொடர்ந்து கொண்டிருக்கும் சிக்கன நடவடிக்கை திட்டங்கள் மூலாமக வெட்டப்பட வேண்டியதாக உள்ளது.

டாலியோ, ஜோன்ஸ் மற்றும் அவர்களைப் போன்று சிந்திக்கும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் மற்றவர்களும், அனைத்திற்கும் மேலாக உலகளாவிய முதலாளித்துவத்தின் இருதய பெருநிலமான அமெரிக்கா உட்பட, இது ஒரு வர்க்க போராட்டம் மற்றும் சமூக புரட்சி வெடிப்பதற்கு இட்டுச் செல்லும் என்று சரியாகவே அஞ்சுகிறார்கள்.

சமூகரீதியில் அதிக பொறுப்பான பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி ஆளும் உயரடுக்குகளின் போக்கை மாற்றுவதே அவர்களின் சிகிச்சை முறையாக உள்ளது. ஆனால் அவர்கள் எதை சந்தோஷமான மற்றும் மிகவும் அமைதியான காலங்கள் என்று கருதினார்களோ அதை நோக்கி பின்னோக்கி திருப்ப முடியாது. இறுதி பகுப்பாய்வில், இது ஏனென்றால், தற்போதைய நிலைமை நிதியியல் செல்வந்த தட்டுக்களினது அல்லது அவர்களின் அரசியல் பிரதிநிதிகளினது மனோநிலையின் விளைவு அல்ல, அதை இன்னும் அதிக சமூக பொறுப்புகளின் ஒரு புதிய கண்ணோட்டத்தை ஏற்று தலைகீழாக்கி விட முடியாது.

அதற்கு பதிலாக, உற்பத்தி கருவிகள் மீதான தனியார் சொத்துடைமை அடிப்படையிலான முதலாளித்துவ உற்பத்தி முறையில் செல்வ வளத்தின் சமூக உற்பத்தி முற்றிலுமாக இலாபத்திற்கான முனைவுக்கு அடிபணிய செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது இது அதிகரித்தளவில் சர்வாதிகார, எதேச்சதிகார மற்றும் பாசிசவாத வகைப்பட்ட ஆட்சிகளாலும் கூட திணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது அதன் தீர்க்கவியலாத முரண்பாடுகளில் வேரூன்றி உள்ளது. டாலியோ மற்றும் வரவிருக்கின்ற ஏனைய சீர்திருத்தவாதிகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மூலமாக இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற முடியாது. சீர்திருத்தம் சாத்தியம் என்றால் அதை இப்போதே செய்திருக்கலாமே. அதற்கு பதிலாக, முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் அரசியலோ தவறுக்கிடமின்றி போர் மற்றும் சமூக எதிர்புரட்சியின் திசையில் செல்கிறது.

நேற்று அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சியின் 102 ஆம் நினைவாண்டைக் குறித்தது, அப்போது லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் புரட்சிகர கட்சியான போல்ஷிவிக் கட்சியின் கீழ் கட்டவிழ்த்து விடப்பட்ட சர்வதேச தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கிவீசி, வரலாற்றில் முதல்முறையாக ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தை ஸ்தாபித்தது.

ஒரு நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன, அதிகரித்து வரும் பாரிய போராட்டங்களில் எடுத்துக்காட்டப்படுவதைப் போல, உலகெங்கிலுமான தொழிலாளர்கள், தங்களின் சொந்த வாழ்க்கை அனுபவங்களில் இருந்து, அந்த போக்கை ஏற்பது ஏன் அவசியமாக இருந்தது என்பதை புரிந்து வருகிறார்கள். இந்த நனவுபூர்வமற்ற போராட்டத்திற்கு சோசலிச புரட்சியை நோக்கிய நனவுபூர்வமான வெளிப்பாட்டை வழங்குவதில் தான் முன்னோக்கிய பாதை அமைந்துள்ளது. அந்த நூற்றாண்டில் இருந்து ரஷ்ய புரட்சியின் படிப்பினைகள் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்கள்மீது தன்னை அடித்தளமாக கொண்டுள்ள உலகின் ஒரே கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டமைப்பதே இதன் அர்த்தமாகும்.