ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

J’accuse (An Officer and a Spy): Roman Polanski’s masterpiece on the Dreyfus Affair

திரைப்படம் J’accuse (ஓர் அதிகாரியும் ஓர் உளவாளியும்): ட்ரேஃபுஸ் விவகாரம் மீது ரோமான் போலன்ஸ்கியின் தலைசிறந்த படைப்பு

By Alex Lantier
19 November 2019

நவம்பர் 13 இல் பிரெஞ்சு திரையரங்குகளில் வெளியிடப்பட்ட பிரெஞ்சு-போலாந்து இயக்குனர் ரோமான் போலன்ஸ்கியின் J’accuse (நான் குற்றஞ்சாட்டுகிறேன் — ஆங்கில தலைப்பு: An Officer and a Spy) திரைப்படம், 1894 இல் ஜேர்மனிக்காக உளவுபார்த்தார் என்று அநீதியாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு பிரெஞ்சு யூத அதிகாரியான கேப்டன் ஆல்பிரட் ட்ரேஃபுஸ் (Alfred Dreyfus 1859-1935) இன் 12 ஆண்டு கால வரலாற்று போராட்டமான ட்ரேஃபுஸ் விவகாரத்தை நினைவூட்டும் ஒரு சக்தி வாய்ந்த திரைப்படமாக உள்ளது. அரசியல் ஸ்தாபகத்தின் பெரும்பான்மையினரால் ஆதரிக்கப்பட்டு நடைமுறையளவில் ஒட்டுமொத்த பிரெஞ்சு இராணுவ தளபதிகளும் பங்குகொண்ட குற்றகரமான நடத்தைகளை இதன் மூலம் வெளிக்கொணர்ந்ததன் விளைவு, பிரெஞ்சு அரசை அதன் அடித்தளங்களில் இருந்து உலுக்கியது.

86 வயதான போலன்ஸ்கியின் குறிப்பிடத்தக்க திரைப்பட தொழில் வாழ்க்கை, அவரின் சொந்த நாடான போலாந்தில் இயக்கப்பட்ட குறும்படங்களுடன், 60 ஆண்டுகளுக்கும் முன்னர் 1950 களின் மத்தியில் தொடங்கியது. Knife in the Water (1962), Rosemary’s Baby (1968), Macbeth (1971), Chinatown (1974), Tess (1979), The Pianist (2002), Oliver Twist (2005) மற்றும் The Ghost Writer (2010) ஆகியவை அவரின் முக்கிய திரைப்படங்களில் உள்ளடங்கும் சில படங்களாகும். இந்த புதிய திரைப்படமும் அவரின் மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாக உள்ளது.


J'Accuse (An Officer and a Spy)

ஒழுங்குமுறையின்றி நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் யூத-எதிர்ப்புவாத அதிகாரிகளின் முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட ட்ரேஃபுஸ் மீதான தீர்ப்பு, ஆரம்பத்தில் நடைமுறைரீதியாக சவால் செய்யப்படவில்லை. உளவுத்துறை நபர்களை வெளிக்காட்டுவதைத் தவிர்ப்பதற்காக ஆதாரங்களை வெளியிட முடியாது என்ற வாதங்களை, ட்ரேஃபுஸ் குடும்பமும் மற்றும் அதன் சில ஆதரவாளர்களும் எதிர்கொண்டனர். இது, இன்றைய திரைப்பட இரசிகர்களுக்கு பரிச்சயமானதே. ஆனால், ஆண்டுகள் கடந்த போது, நிஜமான உளவாளி இன்னமும் பணியில் இருக்கிறார் என்பதும், ட்ரேஃபுஸ் மீதான தீர்ப்பும் மற்றும் பிரெஞ்சு கியானா (Guiana) கடற்கரையை ஒட்டிய தண்டிக்கப்பட்டவர்கள் அடைக்கப்படும் குடியேற்றப் பகுதியான டேவில் தீவில் (Devil’s Island) அவர் தனியாளாக அடைக்கப்பட்டிருந்தார் என்பதும் ஒரு கொடூரமான குற்றரமான மோசடி என்பதைத் தொடர்ச்சியாக வெளியான விபரங்கள் வெளிப்படுத்தின.

ஆண்டுக் கணக்கான ஆழமான சர்ச்சைகளுக்குப் பின்னர், அந்த மோசடி, பிரெஞ்சு சமூகத்தின் கீழமைந்திருந்த பதட்டங்களை உடைத்தெறிந்தது. 1899 இல் ட்ரேஃபுஸ் மீதான முதல் மறு-விசாரணையின் போதும் அதற்குப் பின்னரும், அரசாங்கங்கள் பொறிவின் அச்சத்தில் இருந்தன, உள்நாட்டு போரின் விளிம்பில் பிரான்ஸ் தள்ளாடிக் கொண்டிருந்தது.

மறுபுறம், ட்ரேஃபுஸ் ஆதரவாளர்கள் (dreyfusards) பிரெஞ்சு புரட்சியால் உந்தப்பட்ட சமத்துவம் மற்றும் நீதிக் கருத்துக்களைக் கையிலெடுத்தனர். உலக புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியரும் 1884 அன்ஜின் நிலக்கரி சுரங்க தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை மையப்படுத்திய புகழ்பெற்ற 1885 நாவலான Germinal இன் ஆசிரியருமான எமில் ஸோலா (Émile Zola, 1840-1902) 1898 இல் அப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி ஃபீலிக்ஸ் ஃபோர் (Félix Faure) க்கு அவரின் புகழ்பெற்ற பகிரங்க கடிதம், J’accuse, என்பதை எழுதினார். இது L’Aurore (லோறொர், 1897 முதல் 1916 வரை பிரான்சின் பாரிஸில் வெளியிடப்பட்ட ஒரு இலக்கிய, தாராளவாத மற்றும் சோசலிச செய்தித்தாள்.) இல் பிரசுரிக்கப்பட்டது. இக்கடிதத்தில், ஸோலா துணிச்சலுடன் ட்ரேஃபுஸ் மீது பழி சுமத்துவதிலும் பின்னர் இராணுவத்தின் துஷ்பிரயோகத்தை மூடிமறைப்பதிலும் உயர்மட்ட இராணுவ தலைமை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் குற்றகரமான நடத்தையைக் குற்றஞ்சாட்டினார்.


Alfred Dreyfus c. 1894

ட்ரேஃபுஸ் விவகாரத்தை இராணுவ அதிகாரிகளுக்குள் நடந்த வெறும் சண்டை என்று புறக்கணித்து அதில் சம்பந்தப்பட்டிருந்த அரசியல் பிரச்சினைகளைக் கைவிட்டிருந்த ஜூல் கேய்ட் (Jules Guesde) தலைமையிலான சோசலிச இயக்கத்தில் தொழிற்சங்கவாதிகளின் எதிர்ப்பைக் கடந்து செல்வதற்குப் பிரெஞ்சு சோசலிச தலைவர் ஜோன் ஜோர்ரெஸ் (Jean Jaurès) க்கு ஸோலாவின் எழுத்துக்கள் உதவின. ட்ரேஃபுஸ் ஐ பற்றி தெளிவுபடுத்தும் ஒரு பிரச்சாரத்தில் ஜோர்ரெஸ் பிரெஞ்சு சோசலிச இயக்கத்தை வழிநடத்த தொடங்கினார்.

மறுபுறம், இராணுவம், தேவாலயம் மற்றும் பிரான்ஸின் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் ட்ரேஃபுஸ் க்கு எதிரான அநீதியான தீர்ப்பை பாதுகாத்தன. ட்ரேஃபுஸ் இன் விரோதிகள் (antidreyfusards) பிரெஞ்சு தேசியவாதம், பிரெஞ்சு புரட்சியை எதிர்த்த முடியாட்சி, யூத-எதிர்ப்புவாதம், இராணுவவாதம் மற்றும் சோசலிச வெறுப்பை உமிழும் பிரமுகர்களில் அவர்களின் மிகவும் தீவிர அரசியல் மற்றும் இதழியல் ஆதரவாளர்களை கண்டனர். இந்த இயக்கங்களின் முன்மாதிரி வடிவம், 1898 இல் நிறுவப்பட்டு சார்ல் மோராஸ் (Charles Maurras) தலைமையில் வழிநடத்தப்பட்ட முன்னோடி-பாசிசவாத அக்ஸியோன் பிரான்ஸேஸ் (Action française) இயக்கத்தின் வடிவத்தை போன்று இருந்தது.

ட்ரேஃபுஸ் விவகாரம் சம்பந்தமாக லியோன் ட்ரொட்ஸ்கி 1915 இல் எழுதினார், "அங்கே மதகுருவாதத்திற்கு எதிராக, பிற்போக்குத்தனத்திற்கு எதிராக, தனது ஆதரவாளர்களுக்கு சலுகை காட்டும் நாடாளுமன்ற நெபோடிசத்திற்கு எதிராக, இன வெறுப்பு மற்றும் இராணுவவாத விஷமப் பிரச்சாரத்திற்கு எதிராக, இராணுவ தளபதிகள் மத்தியில் இருந்த பின்புல சூழ்ச்சிகளுக்கு எதிராக, நீதிமன்றங்களின் அடிமைத்தனத்திற்கு எதிராக, அதன் நோக்கத்தை எட்டுவதற்காக சக்தி வாய்ந்த பிற்போக்குத்தன கட்சியை உயிரூட்டக்கூடிய அனைத்து இழிவார்ந்த சக்திகளுக்கும் எதிராக அங்கே தொகுப்பான மற்றும் துரிதமான போராட்டம் இருந்தது."


Jean Dujardin and Louis Garrel in J'accuse (An Officer and a Spy)

இதுதான் அந்த மாபெரும் சட்ட போராட்டத்தை நாடகமாக்கிய ஒரு திரைப்படத்திற்கு அசாதாரண பலத்தை வழங்குகிறது. உண்மையில் சொல்லப் போனால், ட்ரேஃபுஸ் விவகாரம் ஏற்கனவே போல் முனியின் The Life of Emile Zola (1937, William Dieterle), மற்றும் ஜோஸ் ஃபெர்ரேர் நடித்து இயக்கிய I Accuse! (1958) உட்பட முக்கிய திரைப்படங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்திருந்தது. போலன்ஸ்கியின் திரைப்படம் ஏற்கவே இந்தாண்டு வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தலைச்சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது, அதில் நடத்த நடிகர்கள் பல விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ட்ரேஃபுஸ் (Louis Garrel லூயி காரல்) ஐ பகிரங்கமாக தரைக்குறைவாக காட்டும் உள்ளத்தை உருக்கும் முதல் காட்சியிலேயே திரைப்படம் சுட்டிக்காட்டிவிடுவதைப் போல, படத்தின் ஒவ்வொன்றும் நிஜமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டுள்ளன. அனைத்திற்கும் மேலாக போலன்ஸ்கியின் திரைப்படம் இந்த சம்பவங்களை நினைவூட்டுகிறது என்பது மட்டுமல்ல, மாறாக 1890 களின் பிரான்ஸ், உலகின் அசாதாரண செழிப்பை, மற்றும் உண்மையை ஸ்தாபிப்பதற்காக அரசுக்கு எதிராக அரசியல்ரீதியில் போராடியவர்களின் தைரியத்தையும் கொள்கைகளையும் உயிரோட்டத்துடன் முன்நிறுத்துகிறது.

ட்ரேஃபுஸ் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பின்னர், எதிரியின் உளவு பார்த்தலுக்கு எதிராக உளவு பார்க்கும் இராணுவப் பிரிவின் (military counterintelligence) தலைவராக ஆகும் லெப்டினென்ட் கர்னல் ஜோர்ஜ் பிக்கார் (Georges Picquart) (நடிகர் Jean Dujardin ஜோன் டுஜார்டான்) நடத்தும் விசாரணைகள் மீது இப்படம் மையமிடுகிறது. ட்ரேஃபுஸ் குற்றமற்றவர் என்பதைத் திட்டவட்டமாக நிரூபிக்கும் ஆவணங்களை, பல மாதங்களாக பிக்கார் ஒன்று திரட்டினார்.

ஜேர்மன் இராணுவ அதிகாரிகளுக்கு முகவரியிட்டு ட்ரேஃபுஸ் எழுதிய இராணுவ இரகசியங்களின் ஒரு பட்டியல், bordereau (போர்டுரோ), பிரெஞ்சு அதிகாரிகளின் கைகளில் கிடைத்திருந்தது, இந்த குற்றச்சாட்டுத்தான் ட்ரேஃபுஸ் தீர்ப்பின் மையத்தில் இருந்தது. Bordereau ஆவணத்தில் இருந்த கையெழுத்து ட்ரேஃபுஸ் கையெழுத்துடன் பொருந்தவில்லை என்பதை அரசு நிபுணர்கள் ஒப்புக் கொண்டனர் என்றாலும், ட்ரேஃபுஸ் அவர் கையெழுத்தை மாற்றி எழுதி மறைக்கிறார் என்று கூறி அதை உதறிவிட்டனர். இது ட்ரேஃபுஸிடமிருந்து ஒரு கசப்பான கருத்தைத் தூண்டியது: உளவாளியின் கையெழுத்துடன் அவரது கையெழுத்து பொருந்தவில்லை என்பதற்காக தான் குற்றம் சாட்டப்பட்டு வருவதாக அந்த விசாரணையில் கடுமையாக குறிப்பிட வேண்டியிருந்தது.

ஆனால் ட்ரேஃபுஸ் மீது குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், bordereau இல் இருந்த கையெழுத்து மற்றொரு அதிகாரியான கேப்டன் Ferdinand W. Esterhazy (ஃபேர்டினாண்ட் டபிள்யூ. எஸ்ரெராஸி) (நடிகர் லோரோன் நட்ரெல்லா Laurent Natrella) இன் கையெழுத்து என்பதை பிக்கார் கண்டறிந்தார். இவர் இறுதியில் அவமரியாதையடைந்து இங்கிலாந்துக்குத் தப்பிச் செல்லும் வரையிலும் ஜேர்மனிக்காக தொடர்ந்து உளவு பார்த்து வந்தார்.

ட்ரேஃபுஸை டேவில் தீவில் அடைப்பதென தீர்மானித்திருந்த தலைமை தளபதிகளின் குழு அதன் தவறை ஒப்புக்கொள்ள மறுத்து, உளவாளி எஸ்ரெராஸி ஐ பாதுகாத்ததுடன், பிக்கார் அவரது விசாரணையைத் தொடர்வதில் இருந்து அவரை அதைரியப்படுத்த முயன்றது. பிக்கார் மறுத்ததுடன், அவரை மவுனமாக்க அல்லது காலனி நாடுகளது போர்க்களங்களில் கொல்லப்படுவதற்காக அவரை கப்பலேற்றுவதற்கான ஒரு இடைவிடாத உத்தியோகபூர்வ பிரச்சாரத்தின் இலக்கில் அவர் இருப்பதைக் கண்டார். இதனால், உத்தியோகபூர்வ வழிவகைகளுக்கு வெளியே செயல்பட ஓர் அதிகாரியாக இருந்த தனது ஆழ்ந்த மனக்கட்டுப்பாடுகளை கடந்து வரவும் மற்றும் L’Aurore இல் பிரசுரிப்பதற்காக J’accuse எழுத முக்கிய ஆவணங்களை ஸோலாவுக்கு (நடிகர் ஆண்ட்ரே மார்கோன் André Marcon) வழங்கவும் பிக்கார் முடிவெடுத்தார்.

பிக்காரின் விசாரணைகள் மீது கவனம்செலுத்தப்பட்டதன் மூலமாக, போலன்ஸ்கி ஒரு குறிப்பிடத்தக்க அடியை எடுத்து வைக்கிறார்: அனைத்து விதமான உத்தியோகபூர்வ பொய்கள், ஆத்திரமூட்டல்கள் மற்றும் படுகொலைகளால் மறைக்கப்பட்டிருந்த ஒரு சிக்கலான மோசடியின் மிகவும் முக்கிய சம்பவங்களை ஒத்திசைவான இரண்டு மணி நேர விவரிப்புக்குள் உள்ளடக்குகிறார். குறிப்பிடத்தக்க அளவிற்கு சுருக்கமாக உள்ள திரைக்கதை, படத்தின் பார்வையாளர் தன்னையே சம்பவங்களில் சம்பந்தப்பட்ட ஆணாகவோ பெண்ணாகவோ நிறுத்திப் பார்க்க உதவும் வகையில் மற்றும் கதையில் வரும் நிறைய கதாபாத்திரங்களைப் புரிந்து கொள்ளும் விதத்தில் வார்த்தைகள் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

திரைப்படக் குழுவினர், Belle Époque (செழிப்பான வாழ்க்கை காலம்) காலத்திய தோற்றம், நேர்த்தி மற்றும் உணர்வைத் துல்லியமாக மீண்டும் உருவாக்குவதில் பெரும் சிரமங்களை எடுத்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, மாறாக காட்சிமயப்படுத்தும் போது மலைப்பூட்டும் ஒரு திரைப்படமாக உருவாக்குவதற்காகவும் இதுபோன்ற அம்சங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த நுண்மையான வேலைப்பாடும் யதார்த்தத்தன்மையும், தாக்குதலுக்கும், சிறைவாசம் அல்லது படுகொலைக்கும் உள்ளாக கூடிய அதிகரித்து வரும் அபாயத்தில் இருப்பதாக உணரும் பெரும்பாலான பிரதான கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு படத்தின் கதையை மீளப்பலப்படுத்துகிறது.

போலன்ஸ்கியின் J’accuse அற்புதமான நடிப்பினாலும் பயனடைந்துள்ளது, அது இந்த சிக்கலான கதையின் பெரும்பாலும் எல்லா கதாபாத்திரங்களும் நம்பகமான முறையில் உயிர் பெற்றுள்ளது. பொய்யாக வெளியில் வேடிக்கை மனிதராகவும் ஆழமாக எரிச்சல் கொண்டவராகவும் கர்னல் ஹென்றி வேடத்தில் கிரிகோரி காடுபுவா (Grégory Gadebois) அருமையாக நடித்துள்ளார், இவர் இராணுவத்திற்கு அனுகூலமாக ட்ரேஃபுஸ் க்கு எதிராக ஆதாரங்களை ஜோடிக்க உதவியதை பிக்கார் வசம் ஏறத்தாழ முழுமையாக ஒப்புக் கொள்கிறார், அவரது குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் ஹென்றி தற்கொலையில் சிறையில் இறந்து போனதாக தோன்றுகிறார். ஊழியர்களுக்கு சரியான ஒரு மரணம்.

போலன்ஸ்கியின் மனைவி இம்மானுவல் சென்னியே (Emmanuelle Seigner), பொலின் மோன்னியே (Pauline Monnier) ஆக சிறப்பாக நடித்துள்ளார், இவருக்கும் பிக்கார் க்கும் இடையிலான இரகசிய உறவை இராணுவம் பிக்காரை அழிப்பதற்கான ஒரு முயற்சியில் அம்பலப்படுத்துவதில் போய் நிற்கிறது. அவரது கணவர் (Luca Barbareschi) அவரைக் கடிந்து விவாகரத்து செய்ய அவரை அச்சுறுத்திய பின்னர் நகரும் ஒரு காட்சியில் அவர் பிக்காரை சந்திக்கிறார், அப்போது பிக்கார் உடனடியாக கைது செய்யப்படக்கூடிய சூழலை எதிர்கொண்டிருக்கும் சூழலில், வெளிப்படையான அபாயங்களுக்கு மத்தியிலும், அவர் பிக்கார் தரப்பில் நிற்பதென முடிவெடுக்கிறார்.

அனைத்திற்கும் மேலாக, வழமையாக ஒரு நகைச்சுவை நடிகரான டுஜார்டான் (Dujardin), தார்மீக கொள்கைகளில் உறுதியாக நிற்கும் பிக்கார் ஆக ஓர் அசாதாரண நடிப்பை வெளிப்படுத்துகிறார். பாரம்பரிய இசை கச்சேரிகளில் கலந்து கொண்ட மற்றும் லூவ்ர் சிலைகளின் முன்னால் ஆவண பரிவர்த்தனையாளர்களிடம் அவரின் இரகசிய ஆவணங்களை வழங்கும் ஒரு பண்பாடான மனிதராக பிக்கார், ஏறத்தாழ ஒட்டுமொத்த இராணுவ அதிகாரிகளிடமும் அவர் பகிர்ந்து கொண்ட அவரின் தனிப்பட்ட யூத-எதிர்ப்பு தப்பெண்ணங்களை, தைரியத்துடனும் கொள்கையுடனும் போராடி ஜெயித்தார். எஸ்ரெராஸியை அழிக்க ஒரு யூத சதித்திட்டத்திற்கு துணைபோனார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இராணுவ உயரதிகாரிகளின் முன்னால் போக்கினை மாற்றிக் கொண்டு, அவர் அவரின் உயரதிகாரிகளுக்குக் கூறுகையில் அவர்களின் விசாரணை கேலிக்கூத்தானது என்று கூறிவிட்டு, அவர்களின் முகத்தில் அறைந்தாற் போல கதவை பலமாக மூடிவிட்டு வெளியேறினார்.


Jean Dujardin in J'accuse (An Officer and a Spy)

J’accuse பத்திரிகை பிரசுரிக்கப்படுவது தான் அனேகமாக இப்படத்தின் உச்சக்கட்டமாக உள்ளது. இதை போலன்ஸ்கி அப்படத்தில் பாரதூரமான தாக்கத்தினை ஏற்படுத்த பயன்படுத்துகிறார். ஸோலா குற்றஞ்சாட்டும் ஒவ்வொரு அதிகாரியைப் பொறுத்த வரையில், அந்தந்த பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்கள் J’accuse இல் அவர்களுக்கு எதிராக கூறப்படும் ஸோலாவின் குற்றச்சாட்டை வாசிக்கின்றனர், அதேவேளை ஒளிப்பதிவுக்கருவி அவர்களின் பாத்திரத்தின் கோபத்தைக் காட்டுகிறது மற்றும் 300,000 நகல்கள் —இது வழமையாக அச்சிடப்படும் L’Aurore இன் பதிப்புகளை விட 10 மடங்கு அதிகம்— பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் குற்றஞ்சாட்டப்பட்டதை நிராகரிக்கின்றனர்.

அவமரியாதைப்படுத்துவதற்கான ஸோலாவின் 1898 வழக்கு விசாரணை மற்றும் 1899 மறுவிசாரணையில் பிக்கார் இன் சாட்சியம் ஆகியவற்றினூடாக நடக்கும் சம்பவங்களைத் திரைப்படம் தொடர்ந்து செல்கிறது — அவற்றில் இராணுவம், "பலவீனமான சூழ்நிலைகளுடன் பெரும் தேசத்துரோக குற்றத்தின்" மீது அர்த்தமற்ற மற்றும் இழிவான தீர்ப்பை ஏற்பாடு செய்து, தவறு செய்ததை ஒப்புக் கொள்ளாமல் ஆனால் ட்ரேஃபுஸ் இன் தண்டனைக் காலத்தை குறைப்பதன் மூலமாக மக்களின் சீற்றத்தைத் தணிக்க முயல்கிறது. 1906 இல் ட்ரேஃபுஸ் விடுவிக்கப்பட்டார், இருந்தபோதும் பிரெஞ்சு இராணுவம் 1995 வரையில் ட்ரேஃபுஸ் மீது குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளவில்லை.

ஐரோப்பிய வரலாற்றின் தலையாய சம்பவங்களில் ஒன்றை நிஜமாகவும் கலைத்துவத்துடன் எடுத்துக்காட்டும் இதுபோன்றவொரு படத்தை உருவாக்குவதே ஓர் அளப்பரிய சாதனையாகும். இப்போது மரீன் லு பென்னினது தேசிய பேரணியின் வட்டத்தில் செயல்பட்டு வரும் Action française மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது உட்பட ஐரோப்பா எங்கிலும் அதிவலது கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்து வரும் காலகட்டத்தில், இதற்கு வெறுமனே ஒருங்கிணைப்பும் திறமையும் மட்டுமல்ல, மாறாக புத்திஜீவித துணிச்சலும் அவசியமாகும். இதுவொரு தலைச்சிறந்த படைப்பு என்று கூறுவது மிகைப்படுத்தல் இல்லை.

ஒருவேளை ஏதேனும் ஒரு புள்ளியைக் குறிப்பிட வேண்டும் என்றால், ட்ரேஃபுஸ் விரோதிகளால் அணிதிரட்டப்பட்ட வன்முறையான யூத-எதிர்ப்புவாத குண்டர்களை இத்திரைப்படம் பலமாக சித்தரிக்கின்ற அதேவேளையில், ஒரு சாதாரண பார்வையாளருக்கு ஸோலா மற்றும் ஜோரேஸ் ஆல் அணித்திரட்டப்பட்ட பாரிய ட்ரேஃபுஸ் ஆதரவு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இது ஓரளவுக்கு படம் 1894-1899 காலகட்டத்தின் மீது கவனம்செலுத்தப்பட்டிருப்பதால் ஆகும். எவ்வாறிருப்பினும் குறிப்பாக ட்ரேஃபுஸ் விவகாரத்தின் பிந்தைய ஆண்டுகளில் முக்கிய பாத்திரம் வகித்த சோசலிச தொழிலாளர்கள் இயக்கம் இப்படத்தில் எந்த பாத்திரமும் வகிக்கவில்லை. இதன் காரணமாக, ஸோலா, பிக்கார் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் எவ்வாறு இராணுவத்தின் ட்ரேஃபுஸ் விரோத ஆதரவாளர்களைத் தோற்கடித்தார்கள் என்பதும், பிக்கார் கீழ்படிய மறுத்ததற்கு இராணுவம் ஏன் அவரை தடுப்புக்காவலில் வைப்பதன் மூலம் தனது விடையிறுப்பைக் காட்டவில்லை என்பதும் தெளிவின்றி இருப்பதாக தெரிகிறது.

ஆனால் இது, அத்திரைப்படத்தில் விளக்கமாகவும் பலமாகவும் உயிர் கொடுக்கப்பட்டிருக்கும் ட்ரேஃபுஸ் விவகாரத்தின் வெற்றியைப் பாதிக்காது. அமெரிக்க ஜனாதிபதியின் பாசிசவாத பிதற்றல்களில் இருந்து ஜேர்மன் இராணுவவாதத்திற்குப் புத்துயிரூட்டுவதற்காக நாஜிசத்தின் வரலாறை மாற்றி எழுதுவதற்கான ஜேர்மன் ஊடகங்களின் முயற்சி வரையில், குறிப்பாக ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் நவ-பாசிசவாத கட்சிகள் மற்றும் அதிகாரிகளின் புதிய மீளெழுச்சிக்கு மத்தியில், இது உலகெங்கிலுமான மக்கள் பார்க்க வேண்டிய மற்றும் பார்த்தே ஆக வேண்டிய ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது.

பிக்கார் எதிரியின் உளவு பார்த்தலுக்கு எதிராக உளவு பார்க்கும் இராணுவப் பிரிவின் தலைவராக அவருக்கு முன்பிருந்தவரிடம் இருந்து இரகசிய ஆவணங்களைப் பெறும் படத்தின் ஒரு காட்சியில், கர்னல் லூசியன் சான்டேர் (Lucien Sandher) (நடிகர் எரிக் ரூஃப், Eric Ruf) விசேடமாக அச்சமடைந்து போகிறார். syphilis (பாலியல் ரீதியாக பரவும்) நோயால் சான்டேர் மரணித்துக் கொண்டிருக்கையில், ஒரு கோப்பு முக்கியமானது என்று பிக்காருக்கு கூறுகிறார் — போரின் போது தேசத்தைத் தூய்மையாக்குவதற்காக சுற்றி வளைக்கப்பட இருந்த மற்றும் கைது செய்யப்பட இருந்த ஆயிரக் கணக்கான அரசியல் எதிர்ப்பாளர்களின் பட்டியல் அதில் இருந்தது. யூதர்களும் சுற்றி வளைக்கப்பட வேண்டும் என்பதை அவர் சேர்த்துக் கொள்கிறார்.

பிரான்சில் பாசிசவாத ஆட்சியும் யூத இனப்படுகொலையும் பெரிதும் ட்ரேஃபுஸ் எதிர்ப்பாளர்கள் அதிகாரத்திற்கு வந்ததால் ஏற்பட்டிருந்தது. ட்ரேஃபுஸைக் குற்றத்திற்கு உட்படுத்தும் ஹென்றியின் பொய்யான ஆவணங்களை "முற்றுமுதலான உண்மை" என்று புகழ்ந்துரைத்து ஊடகவியலை தொடங்கிய மோராஸ், இரண்டாம் உலகப் போரின் முதலாண்டில் 1940 இல் பிரெஞ்சு இராணுவம் நாஜிக்களிடம் திடீரென சரணடைந்த பின்னர் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் மூலமுதல்வராக ஆகி இருந்தார். அவர் பரவலாக, மிகச் சரியாகவே, சர்வாதிகாரி பிலிப் பெத்தானைச் சுற்றி இருந்த ஒட்டுமொத்த பாசிசவாத ஆளும் குழுக்களுக்கான புத்திஜீவித தூண்டுதலாக பார்க்கப்பட்டார்.

விச்சியின் யூத-விரோத இனப்படுகொலை கொள்கையின் பல்வேறு கட்டங்களை மேற்பார்வை செய்த Raphaël Alibert, Xavier Vallat மற்றும் Louis Darquier; இழிபெயரெடுத்த நாஜி-ஆதரவு பிரச்சாரகர் ரோபர்ட் பிரசில்லா; விச்சி நிதி அமைச்சர் Pierre Bouthillier; மற்றும் எண்ணற்ற கீழ்மட்ட அதிகாரிகள், குண்டர்கள் மற்றும் படுகொலையாளர்கள் உட்பட Action française இன் உறுப்பினர்கள் ஒத்துழைப்பதில் முக்கிய பாத்திரம் வகித்தனர்.

இரண்டாம் உலக போர் முடிந்து பாசிசவாத ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் பெரும் தேசதுரோகத்திற்காக மோராஸ் (Maurras) க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவர், "இது ட்ரேஃபுஸின் பழிவாங்கல்!" என்று கூச்சலிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பல தசாப்தங்களுக்குப் பின்னர், ட்ரேஃபுஸ் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அடிப்படை பிரச்சினைகளில் எதுவுமே தீர்க்கப்படவில்லை. மிகவும் முக்கியமாக, #MeToo இயக்கத்தின் வலதுசாரி விஷம பிரச்சாரகர்கள், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கம் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தவாறு, சோசலிச இயக்க வரலாறில் மிக முக்கிய போராட்டங்களில் ஒன்றை நினைவூட்டும் ஒரு திரைப்படத்தை திரையிடுவதைத் தடுக்கும் முயற்சியில், J’accuse க்கு எதிராக ஒரு வெறித்தனமான பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளனர். அவமானகரமாக, இந்த திரைப்படத்திற்கு அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இந்த தருணம் வரையில் வினியோகஸ்தர்கள் இல்லை. J’accuse படத்திற்கு எதிராக #MeToo இன் வேட்டையாடலை உலக சோசலிச வலைத் தளம் (WSWS) எதிர்வரும் நாட்களின் கட்டுரைகளில் கவனம்செலுத்தும்.

ட்ரேஃபுஸ் விவகாரத்தின் வரலாறு இன்று மிகப்பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கடந்தாண்டு பெத்தானை "மாவீரர்" என்று புகழ்ந்துரைத்து, அதேவேளை சமூக எதிர்ப்பாளர்கள் மீது பொலிஸ் ஒடுக்குமுறையைத் தொடங்கிய பின்னர், பிரெஞ்சு கலாச்சார அமைச்சகத்தில் உள்ள சக்திகள் மோராஸின் படைப்புகளை மறுபிரசுரம் செய்ய முயலுகையில், அது வெறுமனே கடந்த காலத்திற்குரியது இல்லை என்பது முன்பினும் அதிகமாக தெளிவாகிறது. தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராக இந்த உண்மையின் வெற்றி சம்பந்தமான போலன்ஸ்கியின் இப்படம் பரந்த பார்வையாளர்கள் பார்ப்பதற்குத் தகுதியுடைய ஒரு முக்கிய பங்களிப்பாகும்.