ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Modi’s assault on Kashmir and the Indian working class

காஷ்மீர் மற்றும் இந்திய தொழிலாள வர்க்கம் மீதான மோடியின் தாக்குதல்

By Keith Jones
5 November 2019

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவரது நம்பிக்கைக்குரிய ஆதரவாளரான உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மூத்த இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் குழு ஆகியோர் ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக அரசியலமைப்பு சதித்திட்டத்தை செயல்படுத்தி சரியாக மூன்று மாதங்களாகிவிட்டதை இன்றைய தினம் குறிக்கிறது.

மோடியும் அவரது இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (BJP) அரசாங்கமும் நிர்வாக உத்தரவை பிறப்பித்து, இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் தனித்துவமான, பகுதியளவிலான தன்னாட்சி அரசியலமைப்பு அந்தஸ்தை பறித்ததுடன், அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளனர். அதன் மூலம் அரசியல் ரீதியாக கொந்தளிப்பான அப்பிராந்தியம் நிரந்தரமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.


இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில், ஸ்ரீநகரில், செப்டம்பர் 27, 2019, வெள்ளிக்கிழமை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போது முட்கம்பி தடுப்பிற்கு அருகே ஒரு இந்திய துணை இராணுவ சிப்பாய் காவலில் ஈடுபட்டுள்ளார். வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் இந்திய மற்றும் பாகிஸ்தானிய தலைவர்கள் ஐ.நா. பொதுச்சபையில் பேசுவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அதை எதிர்நோக்கி இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் வசிப்பவர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். (AP Photo/ Dar Yasin)

புது தில்லி, ஏற்கனவே உலகிலேயே மிகவும் தீவிரமாக இராணுவமயமாக்கப்பட்ட மற்றும் பொலிஸ் காவலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பிராந்தியமான அம்மாநிலத்தை முன்நிகழ்ந்திராத வகையில் முற்றுகையிடுவதன் மூலமாக அதன் வெளிப்படையான சட்டவிரோத அரசியலமைப்பு மாற்றங்களை அங்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

முழு ஊரடங்கை திணிப்பதற்கும், எதிர்ப்பிற்கான எந்தவொரு அடையாளத்தையும் மிருகத்தனமாக நசுக்குவதற்கும், மேலும் மக்களை அச்சுறுத்துவதற்கும் துன்புறுத்துவதற்கும் என பல்லாயிரக்கணக்கான இந்திய இராணுவ துருப்புக்களும் துணை இராணுவத்தினரும் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

“கல் எறிபவர்கள் என அடையாளம் காணப்படக்கூடிய” ஆயிரக்கணக்கானோர் எவ்வித குற்றச்சாட்டுமின்றி காலவரையின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் அந்தளவுக்கு மிகவும் தனிமைப்படுத்தப்பட்டு, வெகுஜன எதிர்ப்பு நிகழும் என அது மிகவும் அஞ்சுகின்ற நிலையில், கூடுதலாக மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் டசின் கணக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் உட்பட, அப்பிராந்தியத்தின் இந்திய சார்பு முஸ்லீம் அரசியல் உயரடுக்கினரையும் அது “தடுப்புக்காவலில்” வைத்திருக்கிறது.

பாதுகாப்பு படையினர் பயங்கரவாதத்தை பரவலாக்கியுள்ளதுடன், கிராமங்களில் இரவு சோதனைகளை நடத்துகின்றனர். மேலும் சித்திரவதைக்கு ஆளாகின்றவர்களின் வேதனைமிக்க ஓலங்களை ஒலிபரப்ப ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகின்றனர்.

புது தில்லியின் அடக்குமுறையின் முக்கிய நோக்கம், ஜம்மு காஷ்மீரின் 12.5 மில்லியன் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதையும், மற்றும் இந்திய அரசின் குற்றவியல் நடவடிக்கைகளிலிருந்து இந்தியாவின் எஞ்சிய பகுதியும் உலகமும் எச்சரிக்கையடைவதையும் தடுப்பதாகும். இரண்டு மாதங்களுக்கும் மேலாக, ஜம்மு காஷ்மீரில் அனைத்து கைத்தொலைபேசி சேவைகளுக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒடுக்குமுறை தொடங்கப்பட்டு தொண்ணூற்றி இரண்டு நாட்களுக்குப் பின்னர் கூட, காஷ்மீரிகள் குறுஞ்செய்திகளை அனுப்பவும், முன்தொகை செலுத்தப்பட்ட கைத்தொலைபேசி அழைப்புக்களை பயன்படுத்தவும் தொடர்ந்து தடை விதிக்கப்படவுள்ளது, மேலும், பெரும்பாலும் இன்னமும் கூட இணையத்தையும் சமூக ஊடகங்களையும் அணுகுவது மறுக்கப்பட்டு வருகிறது.

மோடியின் காஷ்மீர் சதி ஒரு ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற பூகோள மூலோபாய அதிகார பலப்பரீட்சையாகும். இது, தெற்காசியாவின் 1947 வகுப்புவாத பிரிவினை மூலம் இரு நாடுகள் உருவானதன் பின்னர் இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராகவும், மற்றும் சீனாவுக்கு எதிராகவும் இந்தியாவின் கைகளை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, அதனை முன்னிட்டு, சந்தைகள், முதலீட்டு, வளங்கள் மற்றும் பூகோள அளவிலான செல்வாக்கு ஆகியவற்றிற்காக இந்திய உயரடுக்கு போட்டியிடுகிறது.

இந்திய இராணுவம், எந்தவொரு பொது கட்டுப்பாடு அல்லது விமர்சனத்தில் இருந்து விடுபட்டு, போக்குவரத்து மற்றும் எல்லை உட்கட்டமைப்பை பெரியளவில் விஸ்தரிப்பதற்கான அதன் திட்டங்களை பாரியளவில் கட்டியெழுப்புவதற்கான தனது நடவடிக்கைகளை உறுதிசெய்ய, மோடி அரசாங்கம், சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தின் எல்லையாக இருக்கும் புதிய யூனியன் பிரதேசமான லடாக், அடையாள சட்டமன்றக் குழுவை கூட கொண்டிராது என அறிவித்துள்ளது.

இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளுமாறு இஸ்லாமாபாத்தை கட்டாயப்படுத்தும் மோடியின் உந்துதல், தெற்காசியாவின் போட்டி அணுவாயுத நாடுகளுக்கு இடையில் முழுப் போரை தூண்டுவதற்கு அச்சுறுத்துகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் மீண்டும் எச்சரித்தார்.

அமெரிக்காவின் தலைமையில், மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் இந்த எச்சரிக்கைகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளன. இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரின் ஆளுகை மாற்றத்தை அவர்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாக அறிவித்துள்ளனர், அத்துடன் புது தில்லியின் கடுமையான அடக்குமுறை குறித்து மௌனம் சாதிக்கின்றனர்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து கொதிநிலையில் உள்ளன. புது தில்லியும் இஸ்லாமாபாத்தும் இரத்தத்தை உறையச் செய்யும் அச்சுறுத்தல்களை தொடர்ந்து பரிமாறிக் கொள்கின்றன – இந்திய இராணுவத் தலைவர் பிபின் ராவத் (Bipin Rawat) தனது படைகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள “ஆஷாத் காஷ்மீரை” “விடுவிக்க” தயார்நிலையில் உள்ளது என்று பெருமை பீற்றியுள்ளார். மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரை பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதிலும் அவர்கள் தொடர்ந்து ஆபத்தான பீரங்கித் தாக்குதல்களை நடத்துகிறார்கள்.

சமீபத்திய பல வாரங்கள் மற்றும் மாதங்களின் நிகழ்வுகளின் போக்கு எதுவாக இருந்தாலும், வாஷிங்டனால் அனுமதிக்கப்பட்ட மோடியின் சதி, தெற்காசியாவின் துருவப்படுத்தலை போட்டி இராணுவ-மூலோபாய குழுக்களாக மாற்றியுள்ளது. பாகிஸ்தான் மீதான இராணுவ அழுத்தத்தை அதிகரிக்க வாஷிங்டனின் மூலோபாய “உதவிகளை” மோடி பயன்படுத்துகின்ற அதேவேளை, முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்திய-அமெரிக்க “பூகோள அளவிலான மூலோபாய கூட்டை” கட்டமைப்பதை முன்னிட்டு, சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில் இந்தியாவை இன்னும் முழுமையாக அவர் ஒருங்கிணைத்துள்ளார். இதற்கு, பெய்ஜிங்கும் இஸ்லாமாபாத்தும் தங்களது நீண்டகால இராணுவ-மூலோபாய பங்காண்மையை இரட்டிப்பாக்குவதன் மூலம் பதிலிறுத்துள்ளன.

ஏற்கனவே மூன்று அறிவிக்கப்பட்ட போர்களில் வெடித்து, ஏராளமான போர் நெருக்கடிகளை ஏற்படுத்திய இந்திய-பாகிஸ்தான் மோதல், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், சீனாவிற்கும் இடையிலான சம காலத்திய உலகின் மிக முக்கியமான புவிசார் மூலோபாய மோதலுடன் பிரிக்க முடியாத வகையில் சிக்கிப் போயுள்ளது. காஷ்மீர் குறித்த இந்திய-பாகிஸ்தான் மோதல் பூகோள அளவிலான மூலோபாய பரிமாணங்களைக் கொண்டுள்ளது, ஏனென்றால் இந்தியாவால் உரிமை கோரப்பட்ட பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரின் சில பகுதிகள் சீனாவின் சாலை இணைப்பு முன்னெடுப்புத் திட்டத்தின் (Belt Road Initiative) மையமாக உள்ளன.

வகுப்புவாதம், சர்வாதிகாரவாதம், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்

இப்படியான வளர்ச்சிகள் முக்கியமானதாக மற்றும் அச்சுறுத்தும் வகையில் இருந்தபோதிலும் இந்தியாவில் வர்க்கப் போராட்டத்திற்கு மோடியின் காஷ்மீர் சதித்திட்டத்தின் விளைவுகள் எந்த வகையிலும் முக்கியத்துவம் குறைந்தவை அல்ல.

பிஜேபி இன் ஆகஸ்ட் 5 அரசியலமைப்பு சதியும் மற்றும் முற்றுகையும் காஷ்மீர் மக்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய தொழிலாள வர்க்கத்தையும் குறிவைக்கிறது.

அவை, அரசின் தன்னிச்சையான சக்தியை பலப்படுத்துவதையும், அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு விதிக்கப்படும் தற்காலிகத் தடைகளுக்கு மக்களை பழக்கப்படுத்துவதையும், இந்து மேலாதிக்க உரிமையைத் தூண்டுவதையும், மேலும் முஸ்லீம் விரோத வகுப்புவாதத்தைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்பது, பிஜேபி மற்றும் அதன் இராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங்க (RSS) இந்து மேலாதிக்க வழிகாட்டிகளால் இந்தியாவை ஒரு இந்து ராஜ் அல்லது தேசமாக மாற்றுவதற்கான முக்கிய படியாக நீண்டகாலமாக பரிந்துரைக்கப்பட்டு வந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரேசிலின் போல்சனாரோ, மற்றும் ஜேர்மனியின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான நவ-நாஜி ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) தோற்றம் ஆகியவை எடுத்துக்காட்டியது போல, உலகெங்கிலுமான முதலாளித்துவ உயரடுக்கு, பெரும்பான்மையினருக்கு ஆழ்ந்த விரோதமான கொள்கைகளாக இருக்கும் – தொழிலாள வர்க்கத்தின் மீதான உக்கிரப்படுத்தப்பட்ட சுரண்டல், இராணுவ வாதம் மற்றும் போர் ஆகிய கொள்கைகளை திணித்து முன்னெடுத்து செல்வதற்கு, ஜனநாயக-அரசியலமைப்பு வடிவங்களிலான ஆட்சியுடன் முறித்துக் கொண்டு , பேரினவாத மற்றும் வெளிப்படையான பாசிச சக்திகளை பிரபல்யமாக்கவும் ஆட்சிக்கு கொண்டு வரவும் முன் தள்ளுகின்றன.

மோடியும், அவரது பிஜேபி யும் மற்றும் இந்திய ஆளும் வரக்கமும் ஒரு சமூக வெடிமருந்து கிடங்கின் மீது அமர்ந்திருப்பதை நன்கு அறிவார்கள். மூன்று தசாப்தங்களாக நிகழும் கொடூரமான முதலாளித்துவ வளர்ச்சியானது இந்தியாவின் பில்லியனர் (பெரும் கோடீஸ்வரர்) வர்க்கத்தில் ஒரு அதிவேக வளர்ச்சிக்கு வழிவகுத்தது, அதாவது 1990 இன் மத்தியில் வெறும் இரண்டாக இருந்தது இன்று சுமார் 120 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், பெரும்பான்மையான இந்தியர்கள் வறுமையிலும் தேவையிலும் மூழ்கியிருக்கிறார்கள். 2019 உலகளாவிய பசி குறியீட்டின் படி 6-23 மாத வயது குழந்தைகளில் வெறும் 9.6 சதவிகிதம் குழந்தைகள் மட்டுமே போதுமான ஊட்டச்சத்தைப் பெறுகின்றனர்.

சமூக துருவமுனைப்பும், மற்றும் விவசாய துன்பம், முதலீடு வீழ்ச்சி, நுகர்வோர் தேவை குறைதல் மற்றும் பரந்த வேலையின்மை போன்ற இந்தியாவின் பொருளாதாரத்தை சூழ்ந்திருக்கும் எண்ணற்ற பிரச்சினைகளும் அதிகரித்தளவில் தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் தூண்டுகின்றன. கடந்த ஆண்டு, இந்தியாவின் உலகளவில் இணைக்கப்பட்ட வாகனத் துறைகளிலும், நிலக்கரி இந்தியா மற்றும் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் பிஜேபி அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராகவும் வேலைநிறுத்த அலைகள் எழுச்சி கண்டன. கடந்த ஜனவரியில், தொழிலாளர் தரநிலைகளை நீக்குதல் மற்றும் வேலைகளை தற்காலிகமாக்குவதை ஊக்குவித்தல் ஆகியவை உட்பட, மோடி அரசாங்கத்தின் வர்க்கப் போர் திட்ட நிரலை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரண்டு நாள் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

மோடியின் இராணுவவாத மற்றும் இந்து வகுப்புவாத விண்ணப்பங்களுக்கு  இணக்கமாக இருக்கும் ஒரு இழிவான வலதுசாரி எதிர்ப்பு மற்றும் இந்திய பெருநிறுவனங்களின் முழு ஆதரவின் காரணமாக, கடந்த வசந்த கால தேர்தலில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தது.

பிஜேபி அரசாங்கம் அதன் தலைமையிலான காஷ்மீர் மீதான தாக்குதலுடன், அதன் இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஐந்து மாதங்களில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நிலைப்பாடு மீதான அதன் ஒட்டுமொத்த தாக்குதலை மிகக் கடுமையாக தீவிரப்படுத்தியுள்ளது. இந்த அரசாங்கம், பெருநிறுவன வரிகளை குறைத்துள்ளது, தனியார்மயமாக்கலை துரிதப்படுத்தியுள்ளது, மேலும் இந்தியா முழுவதுமாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை விஸ்தரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க அழுத்தம் கொடுத்து வருகிறது, இதன் கீழ் அசாமில் இரண்டு மில்லியன் பேர், கிட்டத்தட்ட அனைவரும் முஸ்லீம்களான அவர்கள் நாடுகடத்தப்படுவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மீதான மோடியின் தாக்குதல், மற்றும் அவரது அரசாங்கம் இந்து வகுப்புவாதத்தை தூண்டுவது ஆகியவை குறித்த இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் மற்றும் எதிர்க்கட்சிகளின் பதில், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே சக்தி என்பது தொழிலாள வர்க்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க முடியும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்படுவதை முறையாக அங்கீகரிக்க தேவையான வாக்குகளை வழங்கி சில மணித்தியாலங்களுக்குப் பின்னர், மோடியின் சட்டவிரோதமான அரசியலைமைப்பு திருத்தத்திற்கு எதிர்க்கட்சி விரைந்து அதன் ஒப்புதலை வழங்கியது.

பல வாரங்களாக, இந்தியாவின் உச்ச நீதிமன்றம், “இயல்புநிலை” விரைவில் மீட்டெடுக்கப்படும் என்ற அரசாங்க மற்றும் பாதுகாப்பு சேவைகளின் கூற்றுக்கள் மீது நம்பிக்கை வைக்கும் படி வாதிகளை அறிவுறுத்தி, ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதற்கு சவாலாகவுள்ள வழக்குகளை விசாரணை செய்ய மறுத்துவிட்டது. இறுதியாக, காஷ்மீரில் முற்றுகை நிலை அதன் 50 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கையில், அப்பிராந்திய மக்களை காலவரையின்றி பணயக் கைதிகளாக வைத்திருக்க வெளிப்படையாக பச்சைக்கொடி காட்டும் ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.

இந்திய ஆளும் உயரடுக்கு சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொண்டதால் தைரியமூட்டப்பட்ட தெலுங்கானா மாநில அரசாங்கம், 48,000 தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் வெளிநடப்பு செய்து சில மணித்தியாலங்களில் அவர்களை தன்னிச்சையாக பணிநீக்கம் செய்தது.

புது தில்லியின் காஷ்மீர் மீதான தாக்குதல், பாகிஸ்தானுக்கு எதிரான அதன் போர் அச்சுறுத்தல்கள் மற்றும் வாஷிங்டன் உடனான பொறுப்பற்ற போர் கூட்டணி ஆகியவற்றை தொழிலாள வர்க்கம் எதிர்க்க வேண்டும். தெற்காசியா மற்றும் உலகெங்கிலுமான போர், பிற்போக்குத்தனம், மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு தொழிலாள வர்க்கத் தலைமையிலான இயக்கத்தை கட்டியெழுப்ப, இது பாகிஸ்தானில் உள்ள தொழிலாளர்களையும் (அதன் பிற்போக்குத்தன ஆளும் உயரடுக்கும் இதேபோல காஷ்மீர் மக்களை துஷ்பிரயோகம் செய்திருப்பதோடு, போர் அபாயமிக்க வகுப்புவாத தேசியவாதத்தையும் தூண்டியுள்ளது) சென்றடைய வேண்டும்.

மோடி ஆட்சி, சமூக சமத்துவமின்மை மற்றும் முற்றிலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒரு அரசியல் ரீதியான தாக்குதலை அபிவிருத்தி செய்வதற்கு, ஸ்ராலினிசத்தின் அழிவுகரமான செல்வாக்கிலிருந்து அது விடுவிக்கப்பட வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகியவை மோடி மற்றும் இந்து வலதுசாரிகளின் எழுச்சிக்கான அரசியல் தளத்தை தயார் செய்தன. உலகளாவிய மூலதனத்தின் மலிவு உழைப்பு புகலிடமாக இந்தியாவை உருவாக்கவும், மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் இராணுவ கட்டமைப்பு மற்றும் பாகிஸ்தானுடனான அதன் பிற்போக்குத்தன மோதல் உட்பட, அதன் பெரும் வல்லரசு அபிலாஷைகளுக்கு தங்களது ஆதரவை வழங்க அர்ப்பணிப்புடன் இருந்த தொடர்ச்சியான பெருவணிக அரசாங்கங்களை அவர்கள் தாங்கிப் பிடித்தனர்.

சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகள், இந்திய முதலாளித்துவம் மோடியை ஆதரிப்பதை பற்றி குறிப்பிடாமல், மோசமான நிலையிலுள்ள இந்திய முதலாளித்துவத்தை எதிர்த்து போராட தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்புவிடுத்து அதற்கு பதிலிறுத்துள்ளது. மாறாக, தொழிலாள வர்க்கத்தை உச்ச நீதிமன்றத்திற்கும் மற்றும் “ஜனநாயக” இந்தியாவின் பிற அரசு நிறுவனங்களுக்கும் அடிபணியச் செய்வதற்கான, மற்றும் இந்து வலதுக்கு உடந்தையாக இருக்கும், மற்றும் சாதியவாதம் மற்றும் பல்வேறு வகையான இன-பிராந்திய மற்றும் இந்திய பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வலதுசாரிக் கட்சிகளின் அணிவகுப்புக்கு அதை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை அவர்கள் இரட்டிப்பாக்கியுள்ளனர்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமான மகாராஷ்டிராவில், மிக சமீபத்தில் பிஜேபி உடன் முறித்துக்கொண்ட பாசிச சிவசேனா கட்சியுடன் அரசாங்க கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் கட்சி சூழ்ச்சி செய்து கொண்டிருந்தாலும் கூட, சிபிஎம் அதன் முன்னாள் மேற்கு வங்கக் கோட்டையில் காங்கிரஸ் கட்சியுடன் தனது தேர்தல் கூட்டணியை வெறுமனே ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

ஸ்ராலினிசத்துடனான ஒரு அரசியல் கணக்கீட்டிற்கு, மிகுந்த வர்க்க உணர்வுள்ள இந்திய தொழிலாளர்களும் இளைஞர்களும், 1953 முதல் அனைத்துலகக் குழுவால் வழிநடத்தப்பட்டுவரும், அதன் வரலாற்றை பற்றி அறிந்துகொள்ள நான்காம் அகிலத்தை நோக்கித் திரும்புவது தேவைப்படுகிறது. சோவியத் தொழிலாள வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தைப் பறித்து பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளை ஏகாதிபத்தியத்துடனான அதன் சூழ்ச்சிகளின் கருவிகளாக மாற்றிய, ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்டதான, நான்காம் அகிலம் மட்டுமே 1917 அக்டோபர் புரட்சிக்கு உயிரூட்டிய உலக சோசலிச புரட்சிக்கான திட்டத்தை பாதுகாத்ததோடு அபிவிருத்தி செய்துள்ளது என்பதுடன், உலக முதலாளித்துவத்தின் சமகால முறிவை எதிர்கொள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஒரே சாத்தியமுள்ள மூலோபாயத்தையும் வழங்குகிறது.