ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: The indefinite strike by 48,000 Telangana transport workers at crossroads

இந்தியா: 48,000 தெலுங்கானா போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளது

By Kranti Kumara
19 November 2019

தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், அவர்களது மிருகத்தனமான வேலை நிலைமைகள் மற்றும் மிக மோசமான ஊதியங்களின் மேம்பாட்டிற்காகவும் 48,000 தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (Telangana State Road Transport Corporaiton-TSRTC) தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் தற்போது முக்கிய முடிவு எடுக்கப்பட வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தும் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (Joint Action Committee-JAC), பகுதியளவு சுயாதீனமான ஆனால் அரசாங்க மேற்பார்வையில் செயல்படும் இந்நிறுவனம் தெலுங்கானா மாநில அரசாங்கத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற வேலைநிறுத்தத்தின் முக்கிய கோரிக்கையை இப்போது வெளிப்படையாக கைவிட்டுவிட்டது.

இந்த நடவடிக்கை, ஆறு வார கால போராட்டம் முழுவதுமாக JAC பின்பற்றிய  திவாலான கொள்கையை அப்பட்டமாக அம்பலமாக்கின்றது. ஆரம்பத்திலிருந்தே அதன் குறிக்கோள் சில சலுகைகளை பெறுவதற்காக, கே.சி.ஆர். என்று பொதுவாக அறியப்படும், தீவிர வலதுசாரி மற்றும் கடுமையான வணிக சார்பு மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் மீது அழுத்தம் கொடுத்து வரும் அதேவேளை நீதிமன்றங்கள் போன்ற அரசு எந்திரத்தின் பிற துறைகளையும் அவை சார்ந்திருந்தன.

TSRTC தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் சம்பளமின்றி மிகுந்த கஷ்டத்தை சகித்துக் கொண்டிருக்கின்ற போதிலும், முதலமைச்சரின் பரந்த பணிநீக்க அச்சுறுத்தலை அவர்கள் மீறி மேலும் முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பது குறித்து அவர்கள் மீது மிகப்பெரிய அனுதாபமும் மரியாதையும் அங்கு நிலவுகிறது.

இந்த வேலைநிறுத்தம், தனியார்மயமாக்கல், ஊதியங்கள் மீதான தாக்குதல், கொடூரமான வேலை நிலைமைகள் மற்றும் வேலை பாதுகாப்பின்மை ஆகியவற்றிற்கு எதிரான பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மாநில மற்றும் தேசிய அளவிலான பிற தொழிலாளர்களையும் அணிதிரட்டுவதற்கான ஒரு குவிமையப் புள்ளியாக இருக்கக்கூடும். என்றாலும், இற்றுப்போன இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (BJP), ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் (CPM) ஆகியவை உட்பட, மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனை மற்றும் ஆதரவின் பேரில் தொழிற்சங்க எந்திரம், நீதிமன்றங்கள், கே.சி.ஆர். மற்றும் நரேந்திர மோடியின் அரசாங்கங்கள் போன்ற தொழிலாளர்களுக்கு எதிராக அணிதிரட்டப்பட்ட சக்திகளிடம் தான் விண்ணப்பிக்கிறது.

பல வாரங்களுக்கு முன்னதாக, பிஜேபி உள்துறை அமைச்சரும் மற்றும் மோடியின் தலைமை அரசியல் கையாளுமான அமித் ஷாவை சந்திக்க வேண்டுமென JAC கோரியது, 2002 இல் குஜராத் மாநிலத்தில் நடந்த மிக மோசமான முஸ்லீம் விரோத படுகொலைகளில் ஒன்றை மேற்பார்வையிடுவதில் மோடியின் பங்காளியான இவர் இந்திய தொழிலாளர்களின் உறுதியான எதிரி ஆவார். TSRTC ஐ தனியார்மயமாக்குவதற்கான கே.சி.ஆர். இன் இந்த நடவடிக்கை மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் இணக்கமாக இருப்பதால் ஷா இந்த கோரிக்கையை அலட்சியம் செய்தார்.

இந்த ஆண்டு ஜனவரியில், மோடி அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் மிக வறிய நூற்றுக்கணக்கான மில்லியன் ஏழைகளுக்கு மலிவான பேருந்து போக்குவரத்தை வழங்கும் “வணிகத்தில்” இருந்து வெளியேறும் படி மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதாவது, பொது-தனியார் கூட்டாண்மை என்றழைக்கப்படுவதற்கு மாறாக, ஒட்டுமொத்த பொது போக்குவரத்தையும் தனியார் பெருநிறுவன இலாப நலன்களுக்கு மாநிலங்கள் கீழ்ப்படுத்த வேண்டும் என்று கட்கரி பரிந்துரைத்தார்.

TSRTC தொழிலாளர்களுக்கு எதிரான கே.சி.ஆர். இன் இத்தாக்குதல், தேசியளவில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மோடி அரசாங்கம் தொடுத்துள்ள சமரசமற்ற தாக்குதலை பிரதிபலிக்கிறது. பெருவணிக சார்பு மோடி அரசாங்கம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவற்றின் விருப்பப்படி தொழிலாளர்களை தற்காலிகமாக பணியமர்த்தவும் மற்றும் பணிநீக்கம் செய்யவும் அனுமதிக்கும் வகையில் நாட்டின் தொழிலாளர் சட்டங்களை திருத்தியுள்ளது. மேலும் இது, தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா உள்ளிட்ட வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை விற்றதன் மூலம் ஒரு பெரும் தனியார்மயமாக்கல் இயக்கத்தின் மத்தியில் உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மோடி அரசாங்கம் 370 வது சட்டப் பிரிவை சட்டவிரோதமாக இரத்து செய்து, பின்னர் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தமை, 2014 இல் பிஜேபி அரசாங்கம் முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் அடையாளமாக காட்டிக்கொள்ளும், முஸ்லீம் விரோதம் மற்றும் மதவெறியை தீவிரப்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.

TSRTC போராட்டம் முழுவதிலுமாக JAC பிரயோகித்த மூலோபாயத்தினால், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களிடையே, ஆழ்ந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி 23 தொழிலாளர்கள் அவர்களது எதிர்காலத்தை நினைத்து அஞ்சி தற்கொலை செய்து கொண்டனர், அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகி மாரடைப்பால் இறந்து போயினர்.

TSRTC சம்பள தொழிலாளர்கள், சிறிதளவேனும் வேலை பாதுகாப்பையும் மற்றும் தற்போது அவர்களுக்கு கிடைக்காத பிற அரசாங்க நலன்களையும் பெறுவதற்கு முனைகின்ற நிலையில், அவர்களது 26 கோரிக்கைகளில், மிக முக்கியமான கோரிக்கையாக அரசாங்கத்துடன் இந்த நிறுவனம் இணைக்கப்பட வேண்டும் என்பது இருந்தது.

வேலைநிறுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கே.சி.ஆர். தலைமையிலான மாநில அரசாங்கத்தின் மிகுந்த பழிவாங்கும் நடவடிக்கையாக, தொழிலாளர்களின் செப்டம்பர் மாத சம்பளத்திற்கான காசோலை வேண்டுமென்றே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

JAC முக்கிய கோரிக்கையை கைவிடுவதானது, நவம்பர் 5 ஆம் தேதி வேலைக்குத் திரும்பும்படி தான் விடுத்த இறுதி எச்சரிக்கைக்கு தொழிலாளர்கள் சரணடைய மறுத்ததன் பின்னர், ஓரளவு பின்தள்ளப்பட்ட கே.சி.ஆர். ஐ பெருமளவில் தைரியப்படுத்தும்.

ஒரு இரக்கமற்ற வணிக சார்பு அரசியல்வாதியும், உருவெடுக்கவுள்ள சர்வாதிகாரியுமான கே.சி.ஆர்., இப்போது JAC இன் பலவீனத்தை உணர்ந்து, பல வாரங்கள் நீடிக்கும் ஒட்டுமொத்த ஆர்ப்பாட்டத்தையும் திணறடிக்கும் முயற்சிக்கு அதை பயன்படுத்துகிறார். தொழிலாளர்கள் உடனான எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் அவர் ஒப்புக்கொள்வதற்கு முன்னதாக, முதலில் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்பதையே அவர் பெரும்பாலும் கோருவார்.

JAC இன் ஒருங்கிணைப்பாளரான அஸ்வத்தாம ரெட்டி கடந்த வியாழக்கிழமை இணைப்பு கோரிக்கை கைவிடப்படுவதாக அறிவித்தார், அதாவது கே.சி.ஆர். உடனான பேச்சுவார்த்தைக்கு “தடையாக” இது இருப்பதை சரிசெய்ய “தற்காலிகமாக” தொழிற்சங்கம் இக் கோரிக்கையை கைவிடுவதாக அவர் தெரிவித்தார்.

ரெட்டியின் சரணடைதல் அறிவிப்புக்கு, முதலமைச்சரிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை, இவர் கூடுதலாக ஆளும் தெலுங்கானா இராஷ்ட்ர சமிதி (TRS) அரசியல் கட்சிக்கு தலைமையும் வகிப்பவராவார். இந்நிலையில், JAC உடனான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு தெலுங்கானா அரசாங்கம் ஒப்புக் கொள்ளும் வரை, தனது இல்லத்தில் இருந்தவாறே சனிக்கிழமை முதல் உண்ணாவிரதத்தை அவர் தொடங்கவிருப்பதாக ரெட்டி பின்னர் அறிவித்தார்.

கே.சி.ஆர். இன் உடனடியான பதில் மேலும் அடக்குமுறையை செயல்படுத்துவதாக இருந்தது. தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ரெட்டியை கைது செய்ய மாநில பொலிஸை அவர் அனுப்பி வைத்தார். ஞாயிற்றுக்கிழமை, அவர்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்து, அவரது குடும்பத்தினரையும் ஆதரவாளர்களையும் முரட்டுத்தனமாக கையாண்டதோடு, அவரை உஸ்மானியா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அதிகாரிகள் ரெட்டியை வற்புறுத்தி உணவு ஊட்டும் அபாயம் உள்ளது.

மேலும், தனது சொந்த இல்லத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ள மற்றொரு JAC தலைவரான ராஜி ரெட்டியும் இதேபோன்ற கையாளுகையை எதிர்கொண்டார். ஞாயிற்றுக்கிழமை, பொலிஸ் அவரது வீட்டுக் கதவை வன்முறையாக உடைத்து புகுந்து, அவரையும் அதே மருத்துவமனையில் சேர்ப்பதற்கு வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தனர்.

ஆரம்பத்திலிருந்தே, TSRTC ஐ தனியார்மயமாக்கும் தனது இலக்கில் இருந்து பின்வாங்க முதலமைச்சர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். மேலும், தெலுங்கானா உயர் நீதிமன்றம் தளர்வான உத்தரவுகளை பிறப்பித்த போதிலும், பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு பிடிவாதமாக அவர் மறுத்துவிட்டார். இச்சூழ்நிலையில், தனியார் பேருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து TSRTC இன் கிட்டத்தட்ட பாதியளவு வழித்தடங்களை தனியார்மயமாக்குவதாக நவம்பர் 2 அன்று அவர் அறிவித்தார்.

உயிரை இழந்த 23 தொழிலாளர்கள் அவர்களது வாழ்க்கையை இழந்து விட்டது பற்றி அவர் கடும் அலட்சியம் காட்டியதுடன், இறந்துபோன தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் சக தொழிலாளர்களுக்கு எந்தவித அனுதாபத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை. கே.சி.ஆர்., தனது எதேச்சதிகார உத்தரவிற்கு தொழிலாளர்கள் முற்றிலும் அடிபணிய வேண்டும் என்றும், நிபந்தனையின்றி வேலைக்கு திரும்ப வேண்டும் என்றும், மேலும் எந்தவொரு தொழிற்சங்கத்திலும் சேர மாட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அனைவரையும் விசாரணையின்றி பணிநீக்கம் செய்துள்ளதாக இரண்டு முறை முதலமைச்சர் அறிவித்துள்ளார், அதாவது தொழிலாளர்கள் அவர்களது வேலைநிறுத்தத்தை தொடங்கிய அக்டோபர் 5 அன்று முதலாவதாகவும், பின்னர் வேலைக்கு திரும்புமாறு தொழிலாளர்களுக்கு ஒரு புதிய உத்தரவை அவர் பிறப்பித்த நவம்பர் 2 அன்று இரண்டவதாகவும் அறிவிக்கப்பட்டது, இதை தொழிலாளர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

அங்கு தொழிலாளர்களுக்கு பரவலான பொதுமக்கள் ஆதரவும் அனுதாபமும் உள்ளது, ஏனென்றால், TSRTC பெரும்பான்மையினருக்கு தினசரி போக்குவரத்துக்கான இன்றியமையாத போக்குவரத்து முறையாக இருப்பதும், இந்தியா முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவும் அன்றாடம் ஒரே வகை துயரத்தை அனுபவிப்பதுமே அதற்கு காரணமாகும். இந்த தொழிலாளர்கள், இளைஞர்களின் பெரும் வேலையின்மைக்கு கண்டனம் தெரிவித்து, மேலும் வேலைகளுக்கு கோரிக்கை விடுத்தவர்களான, புகழ்பெற்ற உஸ்மானிய பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியினரின் சக்திவாய்ந்த ஆதரவையும் பெற்றுள்ளனர்.

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், கே.சி.ஆர், மோடி அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அரசியல் ரீதியான மற்றும் தொழில்துறை ரீதியான ஒரு எதிர்ப்பை அணிதிரட்டுவது மட்டும் தான் அவர்களது போராட்டத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரே வழியாக உள்ளது. மேலும், TSRTC தொழிலாளர்கள், கே.சி.ஆர்., மோடி அரசாங்கம் மற்றும் நீதிமன்றங்களின் நற்கருணைக்கு முறையீடு செய்யும் JAC இன் இற்றுப் போன மூலோபாயத்தை தொடர்வதற்கு மாறாக, தெலுங்கானாவிலும் மற்றும் தேசியளவிலுமான, அவர்களது சக அரசாங்க மற்றும் தொழில்துறை ஊழியர்களிடமிருந்து தங்களுக்கான ஆதரவைக் கோர வேண்டும்.