ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French public sector strike: Build independent committees of action for political struggle against Macron

பிரெஞ்சு பொதுத்துறை வேலைநிறுத்தம்: மக்ரோனுக்கு எதிரான அரசியல் போராட்டத்திற்கு சுயாதீன நடவடிக்கை குழுக்களைக் கட்டமையுங்கள்

By Anthony Torres
5 December 2019

பின்வரும் அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர்களால் பிரான்ஸ் எங்கிலும் வியாழக்கிழமை பொதுத்துறை வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்து வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

பிரான்சில் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான இன்றைய வேலைநிறுத்தம் வர்க்க போராட்டத்தின் மிகப்பெரிய தீவிரப்பாட்டைக் குறிப்பதாக இருக்கும். சமூக சமத்துவமின்மைக்கு எதிராக "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் வெடித்து ஓராண்டுக்குப் பின்னர், அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த மட்டுமே செய்துள்ளது. இப்போது, இரயில்வே தொழிலாளர்கள், தரைவழி போக்குவரத்து, விமானத்துறை, மருத்துவத்துறை, எரிசக்தித்துறை தொழிலாளர்களும் மற்றும் துறைமுக தொழிலாளர்களும், மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழுக்களுடன் இணைந்து, வேலைநிறுத்தத்திலும் அணிவகுப்பிலும் இறங்குவார்கள். உடலுழைப்பு சார்ந்த தொழிலாளர்களில் 74 சதவீதத்தினர் மற்றும் பொதுத்துறை தொழிலாளர்களில் 70 சதவீதத்தினர் உள்ளடங்கலாக பொதுமக்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவை இந்த வேலைநிறுத்தம் பெற்றிருப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.


பிரான்ஸ் சாம்ப்ஸ் எலிசேயில் மஞ்சள் சீருடை போராட்டங்கள் 2018 நவம்பர்

இது இந்தாண்டு வர்க்க போராட்டத்தின் பரந்த சர்வதேச மீளெழுச்சியின் பாகமாக உள்ளது. சிலி, பொலிவியா, ஹாங்காங், ஈராக், லெபனான், சூடான், அல்ஜீரியா மற்றும் அதற்கு அப்பாலும், தொழிலாளர்களும் இளைஞர்களும் சமூக சமத்துவமின்மையின் வெறுப்பூட்டும் மட்டங்களை எதிர்ப்பதால் உந்தப்பட்ட போராட்டங்களில் அணித்திரண்டு வருகின்றனர். போலாந்தில் ஸ்ராலினிச ஆட்சி 1989 இல் முதலாளித்துவ மீட்டமைப்பு செய்ததற்குப் பின்னர், நாற்பதாயிரம் போலாந்து ஆசிரியர்கள் முதல் தேசிய வேலைநிறுத்தம் நடத்தி இருந்தனர் மற்றும் அமெரிக்காவில் ஜிஎம் வாகனத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்குவதில் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்தனர்.

இந்த அதிகரித்து வரும் சமூக கோபத்தால் பீதியுற்றும் இந்த இலையுதிர் காலத்தில் பிரெஞ்சு இரயில்வே தொழிலாளர்களின் தன்னிச்சையான வேலைநிறுத்தங்களால் எச்சரிக்கை அடைந்தும், பிரெஞ்சு தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் அவற்றுடன் அணி சேர்ந்துள்ள போலி-இடது அரசியல் கட்சிகளும், விருப்பமின்றி இந்த வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்காவிட்டால் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி வேலைநிறுத்தங்கள் வெடிக்கக்கூடும் என்று அஞ்சி, இந்த வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்க முடிவெடுத்தன. இப்போது, தொழிற்சங்கங்களால் விருப்பமின்றி வழங்கப்பட்ட இந்த சந்தர்ப்பத்தைத் தொழிலாளர்கள் பெரும் உத்வேகத்துடன் முன்னெடுத்து வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு எச்சரித்தாக வேண்டும்: “மஞ்சள் சீருடை" போராட்டங்களை எதிர்த்த இந்த தொழிற்சங்கங்கள் மக்ரோனுக்கு எதிரான ஓர் இயக்கத்தையும் எதிர்க்கின்றன. இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதற்கு முந்தைய காலகட்டத்தில் நிலவியதைப் போலவே, அவை அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்களின் ஒரு பாரிய இயக்கத்தைத் தடுக்க அவற்றால் ஆன அனைத்தையும் செய்யும். இவ்விதத்தில் தான், சுயாட்சி தொழிற்சங்கங்களின் தேசிய சங்கத்தின் (UNSA) லோரோன் எஸ்க்யூர் (Laurent Escure) முதலாளிமார்களை எச்சரிக்கையில், “சில தொழில்துறைகளில் கோபம் பீற்றிட்டு கொண்டிருக்கிறது" என்று கூறியதுடன், “5 ஆம் தேதிக்கு பின்னரும் நாங்கள் நடத்தினால், நாங்கள் ஆபத்தான பகுதியில் இருப்போம்,” என்பதால் "சீர்திருத்தங்கள் மீது சாத்தியமான அளவுக்கு விரைவாக முடிவெடுக்குமாறு" அவர்களுக்கு முன்மொழிந்தார்.

போராட்டத்தைத் தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து வெளியில் எடுத்து, தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளிடம் இருந்து சுயாதீனமான, தங்களின் சொந்த நடவடிக்கை குழுக்களைக் கட்டமைப்பதே தொழிலாளர்களுக்கு முன்னிருக்கும் பாதையாகும். “இந்த வேலைநிறுத்தம் வேலைநிறுத்தக்காரர்களுக்கே சொந்தம்!” என்று ஏற்கனவே கூட்டங்களில் தொழிலாளர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

“மஞ்சள் சீருடையாளர்கள்" சமூக ஊடகங்கள் மூலமாக சுயாதீனமாக எவ்வாறு ஒழுங்கமைந்தார்கள் என்பதை தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். அவர்களுக்கு அவர்களின் சொந்த நடவடிக்கை குழுக்கள் தேவைப்படுகின்றன, அங்கே அவர்களால் சுதந்திரமாக விவாதித்து, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென முடிவெடுத்து, தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் சர்வதேச இயக்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்.


1918 போர் நிறுத்த உடன்படிக்கை நினைவு தினத்தில் தனியாக நிற்கும் இமானுவல் மக்ரோன் [படம்: விக்கிமீடியா, 2018]

மக்ரோனுடன் பேரம்பேசுவதற்கு அங்கே ஒன்றும் இல்லை, அவர் தொழிலாளர்களுக்குக் கண்ணீர் புகைகுண்டுகளை மட்டுமே வழங்குவார். தசாப்த காலங்களாக முதலாளித்துவ பூகோளமயமாக்கலுக்குப் பின்னால், கோடீஸ்வர பிரத்துவத்தால் எந்த தேசிய "சீர்திருத்தமும்" வழங்கப்படாது.

வங்கியாளராக இருந்து ஜனாதிபதி ஆன மக்ரோனால் பிரான்சில் பிரதிநிதித்துவம் செய்யப்படும் நிதியியல் பிரபுத்துவத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு சர்வதேச புரட்சிகர மோதல் மேலெழுந்து வருகிறது. சர்வதேச அளவில் போராட்டங்களுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் சமூக சமத்துவமின்மை மற்றும் இராணுவ-பொலிஸ் ஒடுக்குமுறை ஆகிய சர்வதேச பிரச்சினைகளுக்கு ஒரே முற்போக்கான தீர்வு நிதியியல் பிரபுத்துவத்தைப் பறிமுதல் செய்வதாகும்.

இந்த வெடிப்பார்ந்த உலகளாவிய உள்ளடக்கத்தில், தொழிற்சங்கங்கள் ஒழுங்கமைக்கும் "சமூக பேச்சுவார்த்தை" என்பது தொழிலாள வர்க்கத்திற்கு எதையும் வழங்காது. ஒவ்வொரு நாட்டிலும் தொழிற்சங்கங்கள் வெற்று கூடுகளாக உள்ளன, அவற்றின் தொழிலாள வர்க்க அடித்தளத்தை இழந்து, அதற்கு பதிலாக வணிகங்கள் மற்றும் அரசிடம் இருந்து நிதி பெற்று வருகின்றன. இது, உலக சந்தை மீது அவர்களினது முதலாளித்துவவாதிகளின் போட்டித்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தசாப்த காலமாக கூலிகள் மற்றும் சலுகைகள் மீது திணிக்கப்பட்ட வெட்டுக்களைத் தொடர்ந்து வருகிறது. “மஞ்சள் சீருடை" போராட்டங்களை எதிர்த்த பிரெஞ்சு தொழிற்சங்கங்கள், இப்போது அரசு மற்றும் முதலாளிமார்களின் குழுக்களுடன் ஒரு அழுகிய விற்றுத் தள்ளப்பட்ட உடன்படிக்கையைப் பெறுவதற்கும் தொழிலாளர்கள் மீது அதை திணிப்பதற்கும் சூழ்ச்சி செய்து செய்யும்.

தொழிலாளர்களின் போராட்டங்களில் தலையீடு செய்து ஒழுங்கைச் சீர்குலைக்க, அடிபணிய செய்ய அல்லது வேறு ஏதேனும் விதத்தில் திணறடிப்பதற்கான தொழிற்சங்கங்களினதும் மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் (LO) போன்ற அவற்றின் குட்டி-முதலாளித்துவ அரசியல் கூட்டாளிகளினதும் இந்த அனுமானித்தக்க முயற்சிகளைத் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். அரசு நிதியுதவி பெறும் "சமூக பேச்சுவார்த்தையால்" அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த அதிகாரத்தின் அடிப்படையில் இத்தகைய கட்சிகளின் நடவடிக்கைகள் என்னவாக இருந்தாலும் அவற்றுக்கு எந்த சட்டபூர்வத்தன்மையும் இல்லை.

1991 இல் ஸ்ராலினிச ஆட்சியால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு அண்மித்து மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், மத்திய கிழக்கு ஏகாதிபத்திய போர்களும் மற்றும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மையும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சமூக பாசாங்குத்தனங்களை சிதைத்துள்ளன. பிரான்சில், இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களுடன் ஒத்துழைத்த பின்னர், ஆளும் வர்க்கம் "பொருளாதாரம் மீதான கட்டுப்பாட்டில் இருந்து, மிகப்பெரும் பொருளாதார மற்றும் நிதியியல் பிரபுத்துவங்களை வெளியேற்ற" வாக்குறுதி அளித்தது. ஆனால் இதை முதலாளித்துவத்தின் கீழ் செய்ய முடியாது என்பதுடன் நிதியியல் பிரபுத்துவம் இப்போது அதன் சொத்துக்களைப் பாதுகாக்கவும் மற்றும் தொழிலாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தவும் துரிதமாக பொலிஸ்-அரசு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது.


இமானுவல் மக்ரோன் அவரின் பதவி ஏற்பு விழாவின் போது பொன்மூலாம் பூசிய ஆசனத்தில் அமர்ந்துள்ளார் [படம்: விக்கிமீடியா]

2011 க்குப் பின்னர் இருந்து, நேட்டோ லிபியா மற்றும் சிரியாவில் அருவருக்கத்தக்க பினாமிப் போர்களில் அதன் சொந்த நோக்கங்களுக்காக இஸ்லாமிய பயங்கரவாத வலையமைப்புகளை பயன்படுத்தி உள்ளது. இந்த வலையமைப்புகள் பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய பின்னர், சோசலிஸ்ட் கட்சி (PS) 2015 இல் ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தம் செய்து அவசரகால நிலையைத் திணித்தது. தொழிற் சட்ட விதிமுறைகளை நடைமுறையளவில் இடைநிறுத்தம் செய்த ஒரு தொழிற் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை வன்முறையாக ஒடுக்க, அது இந்த பொலிஸ் அரசு நடவடிக்கையைத்தான் பயன்படுத்தியது. மக்களில் 70 சதவீதத்தினரின் எதிர்ப்பு மத்தியிலும், சோசலிஸ்ட் கட்சி அப்போது பிரெஞ்சு அரசியலமைப்பின் ஜனநாயக விரோத விதி 49.3 ஐ பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு கூட நடத்தாமல் அச்சட்டத்தை நிறைவேற்றியது.

2017 இல், மக்ரோன் தேசிய நாடாளுமன்றத்தில் நம்பத்தகாத பெரும்பான்மையை பெற்றார் — பாரிய பிரெஞ்சு வாக்காளர்கள் வாக்குப்பதிவை புறக்கணித்திருந்ததற்கு மத்தியில் அவர்களில் பாதிக்கும் குறைவானவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அவர் சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான தொழிற் சட்டத்தை கூர்மையாக்கும் கட்டளைகளை வெளியிட்டார். மக்ரோன் அவற்றை, பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் சம்பள வெட்டுக்களுக்கும், மில்லியன் கணக்கானவர்களுக்கான வேலைவாய்ப்பின்மைக்கான காப்பீட்டை குறைப்பதற்கும், மற்றும் தேசிய இரயில்வேயை (SNCF) பகுதியாக தனியார்மயப்படுத்தவும் அனுகூலமாக பயன்படுத்தினார். அவர் இந்த கொள்கைகள் அனைத்தையும் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன்தான் நடத்தினார், தொழிற்சங்கங்கள் அவசரகால நிலையை மவுனமாக ஏற்றுக் கொண்டதுடன், SNCF இல் வெகுசில கையாலாகாத்தனமான, அடையாள வேலைநிறுத்தங்களை மட்டுமே ஒழுங்கமைத்தன.

இப்போதோ மக்ரோன் பல்வேறு ஓய்வூதிய வேலைத்திட்டங்களை அழிக்கவும் மற்றும் "புள்ளிகளைக் கொண்ட" ஒரே ஓய்வூதிய முறையைக் கொண்டு அதை பிரதியீடு செய்யவும் விரும்புகிறார், இந்த திட்டத்தின் பண மதிப்பை ஒவ்வொரு தொழிலாளியும் ஓய்வூ பெறும் போது அரசே எதேச்சதிகாரமாக தீர்மானிக்க முடியும்.

இந்த தாக்குதலை எதிர்க்கும் தொழிலாளர்கள், மக்ரோன் அரசாங்கத்திற்கும் அவருக்குப் பின்னால் இருக்கும் சர்வதேச நிதியியல் சந்தைகளுக்கு எதிராகவும் ஒரு நேரடியான அரசியல் போராட்டத்தை முகங்கொடுக்கிறார்கள். “மஞ்சள் சீருடை" போராட்டங்களுக்கு எதிராக, மக்ரோன் பிரெஞ்சு பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தானை ஒரு "மாவீரராக" புகழ்ந்தும், அவ்விதத்தில் பெத்தானின் விச்சி ஆட்சியனதும் மற்றும் ஐரோப்பிய பாசிசத்தினதும் முன்வரலாறை மூடிமறைக்கவும், அவரின் நினைவுகளுக்கு புத்துயிரூட்ட முயன்றார். இது "மஞ்சள் சீருடையாளர்களை" வன்முறையாக ஒடுக்குவதற்கு முன்னறிவிப்பாக இருந்தது, NPA போன்ற தொழிற்சங்கங்களின் போலி-இடது கூட்டாளிகள் “மஞ்சள் சீருடையாளர்களை" "அதிவலது கும்பல்" என்று அழைத்தனர்.

“மஞ்சள் சீருடை" இயக்கம், பிரான்சில் மக்களின் பரந்த ஆதரவைப் பெற்றிருந்த அதேவேளையில், மக்களுக்கு "அரசியலற்ற" விழிப்புணர்வுக்கு அழைப்புகள் விடுத்தது, இது தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளிடம் ஆதரவைப் பெறவில்லை. இப்போது வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய கட்டம் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது. பொதுத்துறை தொழிலாளர்களின் பெரும் அடுக்குகள் அணிதிரண்டிருப்பது, உலகெங்கிலும் வெடித்து வரும் வர்க்க போராட்டத்தைத் தொடுப்பதற்கான முன்னோக்கின் மீது, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஓர் அரசியல் முறையீடு செய்ய வேண்டிய அவசியத்தை அடிக்கோடிடுகிறது.

தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் கூட்டாளிகளிடம் இருந்து குறுக்கீடு இல்லாமல் தொழிலாளர்கள் தங்களின் நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும் மற்றும் திட்டமிடவும் அனுமதிக்க, வேலையிடங்கள், பள்ளிகள் மற்றும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை அமைப்பது அவசியமாகும். சோசலிச சமத்துவக் கட்சி (PES) வர்க்கப் போராட்டத்தின் இந்த வளர்ச்சியை, தொழிலாள வர்க்கமே அதிகாரத்தை கையிலெடுத்து பொது வாழ்வை தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் மறுஒழுங்கமைக்க அனுமதிக்கும் வகையில், ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேசியவாத, சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு இயக்கத்தில் இணைக்க போராடும்.