ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Protest marches called this week as French public sector strike continues

பிரெஞ்சு பொதுத்துறை வேலைநிறுத்தம் தொடர்கின்ற நிலையில், இவ்வாரம் எதிர்ப்பு பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

By Alex Lantier
9 December 2019

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் சிக்கன கொள்கைகளுக்கு எதிராக நூறாயிரக் கணக்கான பிரெஞ்சு பொதுத்துறை தொழிலாளர்கள் போராடி வருகின்ற நிலையில் இன்றும் பிரெஞ்சு பொதுத்துறை வேலைநிறுத்தம் தொடர உள்ளது. நாளை புதிய வேலைநிறுத்த நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்பு பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

பிரான்சில் இந்த பொதுத்துறை வேலைநிறுத்தமானது, சிலி, பொலிவியா, ஈக்வடோர், லெபனான் மற்றும் ஈராக்கில் தொழிலாள வர்க்கத்தின் கணிசமான பிரிவுகளையும், அமெரிக்க மற்றும் மெக்சிகன் வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களைக் கண்டுள்ள உலகளாவிய வர்க்க போராட்ட எழுச்சியின் பாகமாகும்.

“திங்கட்கிழமையும் எங்கள் பயணியர் அனைவருக்கும் கடும் சிக்கலாக இருக்கும், இரயில்வே வலையமைப்பு இன்னமும் முற்றிலும் தடைபட்டுள்ளது,” என்று பிரெஞ்சு தேசிய இரயில்வேயின் (SNCF) செய்தி தொடர்பாளர் Agnès Ogier அறிவித்தார். நீண்ட தூர அதிவேக இரயில்கள் (TGV) மற்றும் பிராந்திய விரைவு இரயில்கள் (TER) உள்ளடங்கலாக, வெறும் 15 இல் இருந்து 20 சதவீத இரயில்கள் மட்டுமே செயல்படும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்துக்கான International Eurostar, Thalys மற்றும் Lyria இரயில்களும் வேலைநிறுத்தங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


தென்மேற்கு பிரான்சின் Hendaye இல் வெள்ளியன்று, டிசம்பர் 6, 2019 இல் இரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் (அசோசியேடெட் பிரஸ்/ பாப் எட்மி)

பாரீசின் சுயாட்சி போக்குவரத்து ஆணையம் (RATP), மெட்ரோ மற்றும் பிராந்திய விரைவு வழித்தடங்களும் கடுமையாக தொந்தரவுக்குள்ளாகும் என்று குறிப்பிட்டது. ஒரு சில மெட்ரோ வழித்தடங்களில் மட்டும் கூட்ட நெரிசலான நேரத்தில் பகுதியான சேவைகள் இயக்கப்படும், அதேவேளையில் RER மற்றும் டிராம் போக்குவரத்தில் சிறிதளவும் மற்றும் பேருந்துகளில் அரைவாசி மட்டும் செயல்படுத்தப்படும்.

பிரெஞ்சு பொதுத்துறை கல்வித்துறையில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை கலந்து கொண்ட மூன்றில் இரண்டு பங்கினர் வேலைநிறுத்தத்தில் இருந்து 1 மில்லியனுக்கு அண்மித்து பத்து ஆயிரக் கணக்கானவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையங்களிலும் வேலைநிறுத்தங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, பொது விமானச் சேவை போக்குவரத்து இயக்குனரகம் (DGAC) விமானங்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு மீண்டும் விமானச் சேவை நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மருத்துவமனைகள், எரிசக்தி மற்றும் துறைமுகங்கள் உள்ளடங்கலாக கடந்த வாரம் வேலைநிறுத்தம் செய்த பொதுத்துறை தொழிலாளர் சக்தியின் பரந்த பிரிவுகளும், அத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்களும் மீண்டும் நாளை வேலைநிறுத்தத்தில் இறங்கி பேரணியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் வியாழக்கிழமை போராட்டங்கள் மீது நடத்தப்பட்ட பொலிஸ் ஒடுக்குமுறை மீது தொடர்ந்து கோபம் நிலவுகிறது என்றாலும், தொழிற்சங்கங்கள் ஒரு விற்றுத் தள்ளலுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்பதை தொழிலாளர்களுக்கு எச்சரித்தாக வேண்டும். வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து வெளியே எடுத்து, வேலைநிறுத்த நடவடிக்கையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குகளை உள்ளீர்த்து, மக்ரோன் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான ஒரு போராட்டமாக இதை முன்னெடுக்க வேண்டியது மிக மிக முக்கியமாக உள்ளது. இது மட்டுமே தொழிலாளர்களுக்கு எதிரான மக்ரோன் அரசாங்கத்தின் தாக்குதலை நிறுத்துவதற்கான ஒரே வழியாகும்.

அனுமானிக்கத்தக்க வகையில், மக்ரோன் அரசாங்க அதிகாரிகள் தங்களின் சீர்திருத்தத்தை வேகப்படுத்த தீர்மானகரமாக இருக்கிறார்கள் என்பதையும், அதிகபட்சமாக ஒரு சில அடையாள மாற்றங்களை வேண்டுமானால் செய்யக்கூடும் என்பதைத் தெளிவுபடுத்தி வருகிறார்கள், தொழிற்சங்க நிர்வாகிகளோ மக்ரோனுடன் ஓர் உடன்படிக்கையை அவர் எதிர்பார்த்து வருவதைச் சமிக்ஞை செய்து வருகிறார்கள்.

டிசம்பர் 5 தேசிய நடவடிக்கை தினத்திற்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை பல தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்திலேயே நின்றதும், பல தொழிற்சங்கங்களும் மீண்டும் புதிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்பந்திக்கபட்டதாக உணர்ந்தன. ஸ்ராலினிச சங்கமான தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT), தொழிலாளர் சக்தி (LO), Solidarity சங்கம் மற்றும் ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு (FSU) ஆகிய அனைத்தும் வெள்ளியன்று இரவு அடுத்த நாள் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்ட அணிவகுப்புகளுக்கு அழைப்பு விடுத்தன, மற்றும் "இயக்கத்தை நீண்டகாலத்திற்கு நீடித்து வைக்க" சூளுரைத்தன. CGT, FO, Solidarity மற்றும் FSU உம் எவ்வாறு தொடரலாம் என்பது குறித்து அடுத்த நாள் இரவு கூடி விவாதிக்க இருப்பதாகவும் அறிவித்தன.

CGT பொதுச் செயலாளர் பிலிப் மார்ட்டினேஸ், அரசாங்கம் அதன் திட்டமிட்ட வெட்டுக்களைத் திரும்ப பெற வேண்டுமென அழைப்பு விடுத்ததுடன், அந்த வெட்டுக்கள் "நாட்டின் வறுமையை அதிகரிக்கும்" என்றார். பின்னர் அவர் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப்புடன் ஒரு ஒத்துழைப்பை முன்மொழிந்தார், அவர் "நாங்கள் நாட்டின் கோபத்தைச் செவிமடுத்தோம், நாங்கள் இத்திட்டத்தை திரும்பப் பெற தொடங்குகிறோம் மற்றும் அதில் மறுவேலை செய்ய தொடங்குவோம்" என்று கூற தலையிடுமாறு கேட்டார்.

போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தாலும் இந்த தொழிற்சங்கங்கள் பகிரங்கமாகவும், பின்புலத்திலும் மக்ரோன் அரசாங்கத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன. அவை நாளை வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்ட அணிவகுப்புகளை அறிவித்த அதே நேரத்தில், அவை அவர்களின் திட்டங்களைக் குறித்து விவாதிக்க இன்று நல்லிணக்க அமைச்சர் அனியேஸ் புஸான் ஐ சந்திக்க இருப்பதாக அறிவித்தன. “பிரெஞ்சு மக்களின் கோபத்தைச் செவிமடுக்க முடிகிறது,” என்று புஸான் பதிலளித்தார்.

அரசாங்கம் அதன் ஓய்வூதிய வெட்டுக்களை ஆகக் குறைந்தது சில மாற்றங்களுடன் நிறைவேற்ற தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக செயல்படுவதே அதிகரித்து வரும் சமூக கோபத்திற்கு அரசாங்கத்தின் விடையிறுப்பாக உள்ளது என்பதை அது மிகவும் தெளிவுபடுத்தி உள்ள நிலையில், தொழிற்சங்கங்களினது நடவடிக்கை எரிச்சலூட்டும் உத்தியாக உள்ளது.

அவற்றின் தற்போதைய வடிவில், மக்ரோனின் வெட்டுக்கள் பொதுத்துறையில் சிறப்பு ஓய்வூதிய நிதிகளை நீக்குகிறது என்பது மட்டுமல்ல, மாறாக ஓய்வு பெறும் வயதை 62 இல் இருந்து 64 க்கு உயர்த்துகிறது, மற்றும் "புள்ளிகளை அடிப்படையாக" கொண்ட ஓர் ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டம் காலப்போக்கில் ஓய்வூதிய மதிப்பைக் குறைக்க அரசை அனுமதிக்கிறது, ஏனென்றால் இந்த ஓய்வூதிய முறைக்குள் பணம் பெறுவதற்காக தொழிலாளர்கள் பெற வேண்டிய "புள்ளிகளுக்கு" எந்த நிலையான பண மதிப்பும் இல்லை. தொழிலாளர்கள் ஓய்வூ பெறும் போது ஒவ்வொரு "புள்ளிக்கும்" அந்தாண்டு எவ்வளவு ஓய்வூதிய பணம் வழங்கலாம் என்பதை முடிவெடுக்க ஒவ்வொரு ஆண்டும் அரசு முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும்.

நேற்று Journal du dimanche (JDD) இல் பிரசுரிக்கப்பட்ட பிலிப் இன் ஒரு பேட்டியில், வெட்டுக்களை இறுதி நிமிடத்தில் மாற்றியமைப்பது குறித்து அறிவித்து அவர் புதன்கிழமை பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சிலில் (CESE) ஓர் உரை வழங்க இருப்பதாக அறிவித்தார். CESE என்ற இந்த அமைப்பில், அரசு அதிகாரிகள் சமூக வெட்டுக்கள் மற்றும் பிற சட்ட மசோதாக்கள் குறித்து விவாதிக்க முதலாளிமார்களின் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிப்பார்கள்.

மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் மீது CESE இல் கூடுதல் விபரங்களை அறிவிக்க இருப்பதாக பிலிப் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் மக்ரோன் அரசாங்கத்தின் வெட்டுக்களின் பொதுவான திசையிலிருந்து பின்வாங்கல் இருக்காது என்பதை அவர் வலியுறுத்தினார். “ஒரு முற்போக்கான சீர்திருத்தத்தை இப்போது நாம் செய்யவில்லை என்றால், பின்னர் வேறு எவரேனும் ஒருவர் இதை விட மூர்க்கமான ஒன்றை கொண்டு வருவார்,” என்று JDD க்கு பிலிப் தெரிவித்தார்.

மார்ட்டினேஸ் நேற்று மதியம் பிரான்ஸ் இன்டர் ரேடியாவில் தோன்றி, புதன்கிழமை பிலிப் உரையாற்றிய பின்னர் பிலிப்புடன் அவர் நெருக்கமாக செயல்பட இருப்பதைத் தெளிவுபடுத்தினார். “அவர்களின் கொள்கையையோ அல்லது வேறெதையோ அவர்கள் திரும்ப பெற வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை, அந்த முறையைத் திரும்ப பெற்றுக் கொண்டு உலகிற்குச் சிறந்த ஒன்றாக மேம்படுத்துங்கள் என்று தான் நாங்கள் கூறுகிறோம்,” என்றார்.

ஓய்வூதிய வெட்டுக்கள் மீதான மக்ரோனின் வாதங்களையே எதிரொலித்து மார்ட்டினேஸ் கூறினார்: “உலகிலேயே சிறந்த ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றை நாம் கொண்டிருக்கிறோம் என்றே நாங்கள் கூறுகிறோம், வெறுமனே அதை சில குறிப்பிட்ட யதார்த்தங்களுக்கு ஏற்புடையதாக நாம் மேம்படுத்த வேண்டும்.” வெட்டுக்களின் உள்ளடக்கங்களைத் திட்டமிட மக்ரோன் CGT உடன் இணைந்து செயல்பட வேண்டுமென அவர் அறிவுறுத்தினார். “இதுபோன்ற அதிருப்தி நிலவுகையில், 'இந்த சீர்திருத்தம் சரியானதில்லை,' என்பதைப் பிரதிபலித்து கூறுவதே சிறந்தது, அவ்விதத்தில் நாம் சான்றாக CGT இன் முன்மொழிவுகள் போன்ற மற்ற உத்தேசங்களைத் தொடங்கி அவற்றின் அடிப்படையில் செயல்படலாம் அல்லவா?” என்றார்.

புதன்கிழமை CESE இல் தொழிற்சங்கங்களுக்குப் பிலிப் உரையாற்றிய பின்னர், வேலைநிறுத்த இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர அவர் முன்வரக் கூடும் என்பதையும் மார்ட்டினேஸ் சுட்டிக் காட்டினார். “வியாழக்கிழமை நாம் என்ன செய்வதென்பதை புதன்கிழமை இரவு பார்த்துக் கொள்வோம்,” என்று மார்ட்டினேஸ் தெரிவித்தார்.

இத்தகைய அறிக்கைள், தொழிலாளர்களிடையே தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மீது அதிகரித்து வரும் அவநம்பிக்கையையும், மற்றும் தொழிலாளர்கள் அவர்களின் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களைக் கட்டமைத்து போராட்டத்தை தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து வெளியில் எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste – PES) விடுத்த அழைப்புகளையும் ஊர்ஜிதப்படுத்துகின்றன. தங்களின் போராட்டத்தைத் தொழிற்சங்கங்கள் மற்றொருமுறை விற்றுத் தள்ளுவதைத் தடுக்க சுயாதீனமான நடவடிக்கையே ஒரே வழியென தொழிலாளர்களின் அதிகரித்த பிரிவுகள் உணர்ந்து வருகின்றன.

பாரிஸ் பேரணியில் வியாழக்கிழமை WSWS உடன் பேசிய எதிர்ப்பு போராட்டத்துக்காக பாரிஸுக்கு வந்த தீயணைப்பு வீரர் செப், மக்ரோன் மீதான அவமதிப்பை வலியுறுத்தினார்: "அவர் செயல்படுத்தும் கொள்கை அவருடையது அல்ல, மக்ரோன் தனக்கு மேலேயும் ஐரோப்பாவை வழிநடத்த விரும்பும் தன்னலக்குழுவின் கைப்பாவை மட்டுமே, ... நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சொந்த பிரச்சினையை தீர்க்க முடியாது, அது எந்த நன்மையும் செய்யாது. ஆறு மாதங்கள் ஆகிவிட்டன, எங்கள் கோரிக்கைகளுக்கு நாங்கள் எப்போதும் ஒரே பதில்களைப் பெறுகிறோம்."

வேலைநிறுத்தம் செய்து வரும் விமான நிலைய தொழிலாளி டோரி WSWS க்குத் தெரிவிக்கையில், “நாங்கள் போதுமானளவுக்கு விட்டுக் கொடுத்துள்ளோம் என்பதால் தான் இங்கே நான் நிற்கிறேன். 30 ஆண்டுகளாக, ஓய்வூதியங்கள், கூலிகள், ஒவ்வொன்றின் மீதும் எல்லா தரப்பில் இருந்தும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இப்போது அவை அனைத்தையும் நாங்கள் முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறோம். … நாங்கள் பணத்தைத் திரும்ப பெற்றே ஆக வேண்டும், நாங்கள் தான் செல்வ வளத்தை உருவாக்கினோம், அது எங்களுடையது, அது வெறுமனே சமூகத்தின் ஒரு துருவத்தில் குவிக்கப்படுவதில் எந்த பகுத்தறிவார்ந்த காரணமும் இல்லை. கண்ணியமான சம்பளங்கள் மற்றும் ஒவ்வொருவருக்கும் வேலைகள் என எங்களுக்குச் சேர வேண்டியது எதுவோ அதை தான் நாங்கள் விரும்புகிறோம்,” என்றார்.

தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே, “அங்கே நியாயமான அதிருப்தி உள்ளது என்பது உண்மையே. அவர்கள் பலமுறை இயக்கத்தைக் காட்டிக் கொடுத்துள்ளனர். அதைக் கடந்து செல்ல, நாங்களே எங்களை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும், செயலூக்கத்துடன் இருக்க வேண்டும், உண்மையில் எங்கள் இயக்கம் குறித்தும், எவ்வாறு வேலைநிறுத்தம் செய்வது, நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைக் குறித்தும் நாங்களே முடிவெடுக்க வேண்டும்,” என்றார்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய அறிக்கைகள்:

பிரான்சில் பாரிய வேலைநிறுத்திற்கான முன்னோக்கிய பாதை

(9 December 2019)