ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French prime minister vows to impose pension cuts despite growing strikes

அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில், பிரெஞ்சு பிரதம மந்திரி ஓய்வூதிய வெட்டுக்களைத் திணிக்க சூளுரைக்கிறார்

By Anthony Torres and Alex Lantier
12 December 2019

மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக போராடும் தொழிலாளர்கள்

மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரால் எதிர்க்கப்படும் திட்டமிட்ட ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக, பிரெஞ்சு பொதுத்துறை தொழிலாளர்கள் வெகுஜன போக்குவரத்து, இரயில் போக்குவரத்து மற்றும் கல்வித்துறையை முடக்கி, டிசம்பர் 5 இல் இருந்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று, பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் (Conseil économique, social et environnemental - CESE) தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார்களின் குழுக்களுக்கு முன்னால் உரையாற்றி, அதிகரித்து வரும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அவர் வெட்டுக்களை முன்னெடுக்க போவதாக அறிவித்தார். வேலைநிறுத்த நடவடிக்கையை முடித்துக் கொள்ளுமாறு கோரிய அவர், தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைகள் அதிகரிக்கப்படும் என்றார், ஆனால் இந்த தொழிற்சங்கங்களோ 2017 இல் இருந்தே மக்ரோனுடன் இந்த வெட்டுக்களைப் பேரம்பேசி வந்தவையாகும்.

வேலைநிறுத்தக்காரர்களின் அனைத்து முக்கிய கோரிக்கைகளையும் ஆத்திரமூட்டும் விதத்தில் நேரடியாக நிராகரித்த பிலிப், பொதுத்துறையில் சிறப்பு ஓய்வூதிய முறைகளை நீக்கி "புள்ளிகளை அடிப்படையாக கொண்ட" ஓய்வூதிய முறையைத் திணிக்கவும், மற்றும் சட்டபூர்வ ஓய்வு பெறும் வயதை 62 இல் இருந்து 64 ஆக உயர்த்தவும் சூளுரைத்தார்.

அவர் CESE முன்னிலையில் கூறுகையில், “இந்த சீர்திருத்தத்தை நிறைவேற்ற நான் தீர்மானகரமாக உள்ளேன். நாங்கள் படிப்படியாக இந்த ஓய்வூதிய முறைக்கு மாற்றுவோம்... சற்றே நீண்ட காலத்தில் செயல்பட்டு இந்த சிறப்பு ஓய்வூதிய முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம், உறுதியான நிதிய அடித்தளங்கள் மீது ஒரு நியாயமான முறையைக் கொண்டு வருவோம்,” என்றார். இந்தாண்டு இறுதியில் அவர் ஒரு வரைவு சட்டமசோதா தயாரிக்க இருப்பதாகவும், அது ஜனவரி 22 இல் மந்திரிகள் சபைக்குச் சமர்பிக்கப்பட்டு, பெப்ரவரியில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றார்.

சமரசம் செய்து கொள்ள பிரெஞ்சு அரசாங்கத்திற்கு எந்த உத்தேசமும் இல்லை என்பதையும், மக்ரோனால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் நிதியியல் பிரபுத்துவத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடையும் என்பதையுமே இது உறுதிப்படுத்துகிறது.

ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அரசாங்கத்துடன் பேரம்பேசுவதற்கு அங்கே ஒன்றுமில்லை. தொழிற்சங்கங்களுடன் அது நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னால், அரசாங்கம், பெருவாரியான மக்களிடையே, அதுவும் முக்கியமாக தொழிலாளர்களிடையே, எதிர்ப்பை முகங்கொடுத்துள்ள ஒரு சீர்திருத்தம் மூலமாக ஒருதலைபட்சமாக ஓய்வூதியங்களைக் குறைக்க திட்டமிட்டு வருகிறது. மக்ரோன் அரசாங்கத்தைக் கீழிறக்கும் முன்னோக்கின் அடிப்படையில் வேலைநிறுத்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

மக்ரோன், செல்வ வளத்தை தொழிலாளர்களிடம் இருந்து சமூகத்தின் செல்வந்தர்களுக்கு பாரியளவில் திசைதிருப்பி விட, ஒவ்வொரு ஆண்டும் பத்து பில்லியன் கணக்கான யூரோக்களைப் பிரெஞ்சு அரசிலிருந்து எடுப்பதற்காக, ஓய்வூதியதாரர்களின் மொத்த தொகையையும் வெட்ட தீர்மானகரமாக உள்ளார். இப்போது உலகின் மிகப் பெரிய செல்வந்தராக விளங்கும் பேர்னார்ட் அர்னோல்ட் கடந்த ஆண்டு மட்டும் 23 பில்லியன் யூரோ நிகர செல்வ வள அதிகரிப்பைக் கண்டார். இது மட்டுமே கூட ஓய்வூதிய முறையின் கணிக்கப்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்க போதுமானதாகும், இந்த பற்றாக்குறை 2025 க்குள் 8 இல் இருந்து 17 பில்லியன் யூரோவாக அதிகரிக்கக்கூடும். ஆனால், பெரும் செல்வந்தர்களுக்கு பாரிய வரி வெகுமதிகளை வழங்குகின்ற அதேவேளையில், அது பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களைச் சீரழிக்கக் கூடிய வகையில் ஓய்வூதியங்களில் ஆழ்ந்த வெட்டுக்களைச் செய்ய திட்டமிடுகிறது.

“புள்ளிகளை அடிப்படையாக" கொண்ட ஓய்வூதிய முறையில், ஒரு தொழிலாளி அவரின் பணி வாழ்க்கை காலத்தின் போது, அவர் தற்போதைய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியங்களுக்குப் பணம் செலுத்தி உதவியதற்காக பின்னர் பிரதிபலனாக எதிர்காலத்தில் அவர் ஓய்வூதிய பண மதிப்பைப் பெறப்போவதில்லை, மாறாக தெளிவற்ற வெறும் எண்களாக "புள்ளிகளை" மட்டுமே பெறுகிறார். முன்னாள் பிரதம மந்திரி பிரான்சுவா ஃபிய்யோனின் 2016 காணொளி ஒன்று, இது இப்போது பரபரப்பாகி உள்ள நிலையில், இந்த சீர்திருத்தத்தின் பொருளை தெளிவாக விளக்குகிறது. இதுபோன்றவொரு முறை "எந்தவொரு அரசியல்வாதியும் ஒப்புக் கொள்ளாத ஒன்றை அனுமதிக்கிறது, ஒவ்வொரு மாதமும் அளவை குறைக்கவும், புள்ளிகளின் மதிப்பைக் குறைத்து ஓய்வூதியங்களின் மதிப்பை அவ்விதத்தில் குறைக்கவும் அனுமதிக்கிறது,” என்று அதில் கூறியிருந்தார்.

இந்த சீர்திருத்தத்தில் மற்றொரு முக்கிய பாகமாக இருப்பது, வங்கிகளின் கட்டளைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை நசுக்கும் முயற்சியை அவர்கள் தொடர்வதற்காக பாதுகாப்புப் படையினரை வாங்குவதற்கான மக்ரோனின் முயற்சியாகும். பொலிஸ், தீயணைப்புத்துறை மற்றும் இராணுவ சிப்பாய்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் 62 வயதில் ஓய்வூ பெற அனுமதிக்கப்படும் என்றும் பிலிப் அறிவித்தார்.

மக்களின் எதிர்ப்பைச் சமாதானப்படுத்துவதற்காக ஓய்வூதிய சீர்திருத்தம் சம்பந்தமான கருத்துக்களை பிலிப் வெளியிட்டார் என்றாலும், அது அதன் பிற்போக்குத்தன தன்மையை மாற்றுவதற்கு ஒன்றும் செய்யவில்லை. 1963 இல் பிறந்தவர்கள் இல்லை மாறாக 1975 இல் பிறந்தவர்களே இந்த சீர்திருத்தத்தால் பாதிகப்பட்டும் முதல் தலைமுறை தொழிலாளர்களாக இருப்பார்கள் என்றவர் வாக்குறுதி அளித்தார். பொதுத்துறை பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்த வரையில், “புதிய விதிகளை எந்திரத்தனமாக நடைமுறைப்படுத்துவது அவர்களின் எதிர்கால ஓய்வூதியங்களில் அவர்கள் கணிசமானளவுக்கு இழக்க இட்டுச் செல்லும். ஆசிரியர்களின் ஓய்வூதிய மட்டம் பொதுச் சேவை மட்டங்களுடன் ஒப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்பதற்கு ஓர் உத்தரவாதத்தை நாங்கள் அச்சட்டத்தில் உள்பொதிவோம் என்றார்.

எவ்வாறிருப்பினும் மக்ரோனின் சீர்திருத்தம் பொதுத்துறை சேவையின் ஓய்வூதியங்களையும் குறைக்கும் என்பதால், இது பொது மக்களுக்குத் தவறாக வழிகாட்டும் ஒரு குரூர முயற்சியாக உள்ளது.

இந்த ஓய்வூதிய சீர்திருத்தமானது பாரிய வேலைவாய்ப்பின்மையின் அதிகரிப்புக்கும் மற்றும் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் கடுமையான பாதுகாப்பற்ற வேலையிட நிலைமைகளுக்கும் அவசியமான ஒரு விடையிறுப்பாக பிலிப் வாதிட்டார், அது தர்க்கரீதியானது மற்றும் தவிர்க்கவியலாதது என்று அவர் அதை முன்வைத்தார். “நீண்ட காலமாகவே பிரான்ஸ் அதிக வேலைவாய்ப்பின்மை மட்டத்தால் குணாம்சப்பட்டுள்ளது. கல்வி தொடர முடியவில்லை, தொழில் வாழ்க்கை தொந்தரவுக்கு உள்ளாகிறது, பகுதி நேர வேலை அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,” என்றார்.

இந்த நிலைமைகள் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவத்தின் திவால்நிலையை அடிக்கோடிட்டு காட்டுகின்றன. ஆனால் பிலிப்பைப் பொறுத்த வரையில், இது, ஓய்வூதிய சலுகைகளைக் குறைக்க அனுமதிக்கும் புள்ளிகள் அடிப்படையிலான மிகவும் வளைந்து கொடுக்கும் ஒரு முறையைக் கொண்டு, தொழிலாளர்கள் தங்களின் ஒட்டுமொத்த வாழ்நாள் வேலையுடன் நெருக்கமாக பிணைந்துள்ள தற்போதைய ஓய்வூதிய முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அவசியமாக காட்டப்படுகிறது.

தற்போதைய ஓய்வூதிய முறையைக் குறைப்பதில் இருந்தும் மற்றும் தனியார் ஓய்வூதிய கணக்குகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும் கிடைக்கும் பெரும் இலாபங்களை அறுவடை செய்யும் சர்வதேச நிதியியல் பெருநிறுவனங்களுடன் மக்ரோன் நெருக்கமாக செயலாற்றி வருகிறார். நையாண்டி வாரயிதழ் Canard enchaîné 2017 இல், மக்ரோன் அமெரிக்காவை மையமாக கொண்ட ஓர் உலகளாவிய முதலீட்டு நிறுவனமான BlackRock இன் நிர்வாகத்தைச் சந்தித்திருந்ததாகவும், அந்நிறுவனம் "பல ட்ரில்லியன் மதிப்பைக் கொண்டிருக்கக்கூடிய பிரெஞ்சு ஓய்வூதிய முறையின் சீர்திருத்தத்தால் எழும் சந்தர்ப்பங்களில் மிகவும் ஆர்வமாக" இருப்பதாகவும் விபரங்களை வெளியிட்டது.

மக்ரோனின் வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தில் அணித்திரண்டுள்ள தொழிலாளர்கள், பிரான்ஸ் மற்றும் சர்வதேச நிதியியல் பிரபுத்துவம் இரண்டுக்கும் எதிரான ஒரு போராட்டத்தை முகங்கொடுக்கிறார்கள் என்பதை அடிக்கோடிடுகிறது. இரயில்வே மற்றும் தரைவழி போக்குவரத்து தொழிலாளர்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள், பொதுக் கல்வி மற்றும் விமானத்துறை தொழிலாளர்கள் என பரந்த பிரிவுகள் வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்கி பிரான்சின் பெரும் பாகங்களை முடக்கி இருப்பதைக் கண்டுள்ள இந்த போராட்டத்தில், பிரெஞ்சு தொழிலாளர்களின் முக்கிய கூட்டாளிகள் சர்வதேச தொழிலாள வர்க்கமாகும்.

வர்க்க போராட்டத்தின் ஒரு பலமான சர்வதேச எழுச்சி நடந்து வருகிறது. அமெரிக்காவில் வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வெளிநடப்புகள், லெபனான் மற்றும் ஈராக்கில் இருந்து சிலி, பொலிவியா மற்றும் ஈக்வடோர் வரையில் வெகுஜன போராட்டங்களின் அலை என இவற்றைத் தொடர்ந்து, அல்ஜீரியாவில் டிசம்பர் 12 தேர்தல்களுக்கு எதிரான போராட்டத்தில் வேலைநிறுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சமூக சக்திகளை, மக்ரோன், நிதியியல் பிரபுத்துவம் மற்றும் அதன் கடுமையான வேலைவாய்ப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மீதான முடிவில்லாத சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக அணித்திரட்ட முடியும்.

இதற்கு போராட்டதைத் தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து வெளியில் எடுத்தாக வேண்டும், மக்ரோனுடன் நெருக்கமாக செயல்பட்டு வரும் இவை அவருடன் ஓர் உடன்படிக்கையைப் பேரம்பேச முயன்று வருகின்றன. தொழிலாளர்கள் திட்டமிடுவதற்கும், விவாதிப்பதற்கும், மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிராக வேலைநிறுத்தங்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பை ஒழுங்கமைக்கும் மற்றும் சர்வதேச அளவிலான போராட்டத்தில் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் இடங்களாக, அவர்களுக்கு அவர்களின் சொந்த நடவடிக்கை குழுக்கள் தேவைப்படுகின்றன.

அரசு மற்றும் ஆளும் உயரடுக்கிடம் இருந்து தொழிற்சங்கங்கள் நிதியுதவி பெறுகின்றன மற்றும் அவற்றுடன் ஆழமாக ஒருங்கிணைந்துள்ளன, அச்சட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அவை தொடர்ந்து சூளுரைக்கின்ற அதேவேளையில், பிலிப் அவரின் ஓய்வூதிய வெட்டுக்களை நிர்வகிக்கவும் மேற்பார்வையிடவும் தொழிற்சங்கங்களைச் சார்ந்திருக்க அவர் திட்டமிட்டிருப்பதைத் தெளிவுபடுத்தி உள்ளார்:

“நாங்கள் ஆட்சிமுறை வேலைத்திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொண்டு வர இருக்கிறோம், அது சமூக பங்காளிகளுக்கு (அதாவது தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார்களின் கூட்டமைப்புகளுக்கு) பிரதான நிர்வாக கருவிகளை வழங்கும். அவர்கள் வரவு-செலவு திட்டக்கணக்கு சமநிலைப்படுத்தலுக்குத் திரும்ப ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்ள முடியும்,” என்றார்.

மக்ரோனுடன் சீர்திருத்தம் மீது பேரம்பேசி வரும் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கையின் வேகத்தைக் கட்டளையிட்டு வரும் அதே தொழிற்சங்கங்கள் பின்னர், அந்த வேலைத்திட்டம், ஒரு சமநிலைப்படுத்தப்பட்ட வரவு-செலவு திட்டக்கணக்கில் இருப்பதை உறுதிப்படுத்த, ஓய்வூதிய அளவைக் குறைக்க அரசுடன் செயல்படும், அதற்கு கணிசமான பண வெகுமதிகளைப் பெறும்.

இந்த அடிப்படையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர கேட்டுக் கொண்டு பிலிப் நிறைவு செய்தார்: “இன்றிலிருந்து, அரசுடைமை நிறுவனங்களின் தலைவர்கள் இத்தகைய வேலைநிறுத்தங்களை நிறுத்த தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டுமென நான் விரும்புகிறேன்,” என்றார்.

பிலிப்பின் உரை அமைதிப்படுத்தாது மாறாக தொழிலாளர்களின் அதிகரித்து வரும் கோபத்தை எரியூட்டும் என்பதில் நனவுபூர்வமாக உள்ள தொழிற்சங்கங்கள் வெளிவேஷத்திற்கு ஒரு சில விமர்சனங்களை வழங்கி உள்ளன. TF1 தொலைக்காட்சியில், தொழிலாளர் பொது கூட்டமைப்பின் (CGT) தலைவர் பிலிப் மார்ட்டினேஸ் கூறுகையில், “தெளிவாக, இங்கே சமூகத்தின் இரண்டு வெவ்வேறு கண்ணோட்டங்கள் போட்டியிட்டு வருகின்றன, அவருடையதும் மற்றும் CGT இன் உடையதும்… நாட்டின் கோபத்தைக் கொண்டு பார்க்கையில், அவருடையது ஏற்கப்படும் என்று நான்நினைக்கவில்லை,” என்றார்.

வழிவழியாக அரசு-சார்பாக இருந்துள்ள பிரெஞ்சு ஜனநாயக தொழில் கூட்டமைப்பு (CFDT) இன் லோரன்ட் பேர்ஜியே முழு ஓய்வூதியத்துடன் பிலிப் ஓய்வு பெறும் வயதை 64 ஆக உயர்த்துவதற்கு ஆட்சேபணை தெரிவித்தார். LCI இல், அவர் "நாங்கள் முன்மொழிந்துள்ள அனைத்து தொழிற்சங்க போராட்டத்தில் டிசம்பர் 17 இல் இணையுமாறு தொழிலாளர்களுக்கு" அழைப்பு விடுத்தார்.

தொழிற்சங்கங்கள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கின்ற அதேவேளையில், அவை அனைத்தும் தொழிலாளர்களுக்கு முன்வைக்கவும் ஒரு விற்றுத்தள்ளலை நியாயப்படுத்தவும் கூடிய மக்ரோன் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒருவிதமான உடன்படிக்கையை நெறிப்படுத்த முயன்று வருகின்றன. சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்க தொழிற்சங்கங்களில் இருந்து தொழிலாளர்களைச் சுயாதீனமாக ஒழுங்கமைத்து, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கைக் கொண்டு அவர்களை ஆயுதபாணியாக்குவதில் தான் மக்ரோனின் வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தில் தீர்க்கமான கேள்வி தங்கியுள்ளது.