ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French strikers oppose “Christmas truce” called by Macron and trade unions

மக்ரோன் மற்றும் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த "கிறிஸ்துமஸ் சமாதானத்தை" பிரெஞ்சு போராட்டக்காரர்கள் எதிர்க்கிறார்கள்

By V. Gnana and Alex Lantier
24 December 2019

பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வருமாறு அல்லது ஜனவரி 9 பேரணி வரையில் தாமதப்படுத்துமாறு அழைப்பு விடுத்து வருகின்ற நிலையில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சிக்கன கொள்கைகள் மீது தொழிலாளர்களிடையே கோபம் தொடர்ந்து கட்டமைந்து வருகிறது. பிரான்ஸ் எங்கிலும் வெகுஜன தரைவழி மற்றும் இரயில்வே போக்குவரத்தை நிறுத்திய டிசம்பர் 5 இல் தொடங்கிய வேலைநிறுத்தம் தொடர்கிறது, வேலைநிறுத்தக்காரர்கள் அதிகரித்தளவில் அரசுடன் பேரம்பேசும் தொழிற்சங்க தலைவர்களிடம் இருந்து சுயாதீனமாக அவர்களின் சொந்த நடவடிக்கைகளைத் தீர்மானிக்க கோரி வருகின்றனர். மக்ரோனை பதவியிறக்குவதே தொழிலாள வர்க்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இந்த மோதலில் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரே சாத்தியமான முற்போக்கு விளைவாக இருக்கும்.

வேலைநிறுத்தக்காரர்கள் சனிக்கிழமை பாரீசில் நடந்த "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டத்தில் WSWS உடன் உரையாற்றினர். பப்லோவாத சோலிடாரிட்டி சங்கத்தைச் சேர்ந்த ஒரு வேலைநிறுத்தக்காரர் ஹமார் கூறுகையில், தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து வேலைநிறுத்தத்தை தொழிலாளர்கள் தங்கள் கையில் எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்: “சாமானிய தொழிலாளர் குழு அதன் சொந்த போராட்டங்களை அதுவே கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும் என்ற உண்மையை இன்று உணர்ந்துள்ளது. இந்த இயக்கம் எவ்வாறு கட்டவிழும் என்பதை அதுதான் தீர்மானிக்க வேண்டும்,” என்றார்.


ஒரு போராட்டக்காரரின் "கிறிஸ்துமஸ் பட்டியல்": அற்பத்தனமான சுற்றி வளைத்துச் செல்லும் நோக்கம், நயவஞ்சக ஒடுக்குமுறை நடவடிக்கைகள், உண்மையைக் கூற வைக்கும் செரிம் மருந்து, 'மஞ்சள் சீருடையாளர் திரும்ப போராடு'

இந்த இயக்கத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டியவர்கள் "தொழிற்சங்க தலைவர்கள் இல்லை, அவர்கள் களவாடுபவர்கள், அவர்களுக்கு மாதத்திற்கு 4,000 இல் இருந்து 5,000 யூரோக்கள் கிடைக்கின்றன, அவர்களுக்கு சொந்த அலுவலகங்கள் உள்ளன, அவர்கள் மக்ரோனைச் சென்று சந்தித்து அவரின் எல்லா அமைச்சர்களுடனும் கைக்குலுக்கி, அவர்களுடன் மதிய விருந்தும் இரவு விருந்தும் சாப்பிட்டு உடன்படிக்கைகளை எட்டும் வெறும் அயோக்கியர்கள் அவர்கள்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

வேலைநிறுத்தம் செய்து வரும் தீயணைப்புத்துறையினர் மற்றும் "மஞ்சள் சீருடையாளர்களுக்கு" எதிரான பொலிஸ் காட்டுமிராண்டித்தனம் மீதான கண்டனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு இடையே, ஹமார் மக்ரோனுக்கு எதிரான இந்த வேலைநிறுத்தம் மீது பொலிஸ் ஒடுக்குமுறைக்கும் அவரின் கோபத்தை வலியுறுத்தினார்.

அவர் கூறினார், “பிரான்ஸ், மனித உரிமைகளின் தேசம் என்று கூறிக் கொள்கிறது, சுதந்திரத்தின் தாய்வீடு என்று ஒட்டுமொத்த உலகிற்கும் உபதேசிக்கிறது. ஆனால் இன்றோ இந்த முகத்திரை அகன்றுள்ளதுடன், இந்நாடு துணிந்து பேசுபவர்களை ஒடுக்கும் என்பதை நாம் உணர்கிறோம். … பொலிஸ் குடிமக்களின் சேவைக்காக இல்லை, பொலிஸ் பெருநிதியங்களுக்குச் சேவையாற்றுகிறது. எங்கள் வரிகளில் இருந்து சம்பளம் பெறும் பொலிஸ், இப்போது மக்களுக்குச் சேவை செய்யவில்லை,” என்றார்.

வேலைநிறுத்தக்காரர்களும் "மஞ்சள் சீருடையாளர்களும்", மக்ரோன் மற்றும் வங்கிகள் நிறுவி வரும் பொலிஸ்-அரசு ஆட்சிக்கு அவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், மக்ரோன் இப்போது எதை நீக்க முயல்கிறாரோ அந்த அடிப்படை சமூக ஜனநாயக உரிமைகள் பெறப்பட்ட 20 ஆம் நூற்றாண்டின் வர்க்க போராட்ட பாரம்பரியங்களுடனான அவர்களின் இணைப்பையும் வலியுறுத்தினர்.

ஹமார் கூறினார், இரண்டாம் உலக போரின் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களின் மேலெழுச்சிக்கு மத்தியில், “ஓய்வூதியங்கள், வேலைவாய்ப்பற்றோருக்கான காப்பீடுகள், தொழிற் சட்டம் ஆகியவற்றில் இன்று நாம் வெட்டுக்களைப் பார்க்கிறோம், 1945 இல் உருவாக்கப்பட்ட சமூக திட்டங்களைக் கூட தொழிலாளர்கள் பாதுகாக்க முடியாமல் இருப்பதைக் காண்கிறோம்,” என்று கூறிய அவர், மக்ரோன் "அவற்றைத் தகர்க்க விரும்புகிறார். அவர் அவற்றை அழிக்க விரும்புகிறார்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.


செலின்

“மஞ்சள் சீருடையாளர்" செலின் WSWS க்கு கூறினார்: “நான் 1968 இல் போலாந்தில் இருந்து இங்கே வந்தேன். என் பெற்றோர்கள் இரண்டாம் உலக போர் குறித்து, அவர்கள் என்ன கண்டனரோ அதை கூறினார்கள்: மந்தைமந்தையாக யூதர்கள் அடைக்கப்பட்ட இரயில்கள் புறப்பட்டன. பிரான்ஸ் மீண்டும் அவ்விதத்தில் சரிவதை நான் விரும்பவில்லை, நான் அதற்காக நிற்க மாட்டேன். ஏனென்றால் வரலாற்றில் ஒவ்வொரு முறையும், இது சிறிய விடயங்களில் இருந்து தான் தொடங்குகிறது,” என்றார்.

அவர் "ஏழ்மைக்கு எதிராக" போராடுவதாக தெரிவித்த செலின் கூறினார், “... ஒவ்வொரு நாளும் ஒன்பது மில்லியன் பிரெஞ்சு மக்கள் சரியாக சாப்பிடுவதில்லை, அவர்கள் வறுமை கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள்,” என்றார். “மக்ரோன் வந்ததில் இருந்தே, அவர் நமது திட்டங்களில் மிகவும் தலைச்சிறந்த மற்றும் மிகவும் நியாயமான மருத்துவச் சிகிச்சை முறையை நீக்க விரும்புகிறார் என்பதை நாம் அறிவோம். அவருக்கு அரசு மருத்துவச் சிகிச்சை அவசியமில்லை, ஆகவே அவர் அதை தனியார்மயமாக்க திட்டமிடுகிறார், அவ்விதத்தில் மருத்துவச் சிகிச்சை அமெரிக்காவில் இருப்பதைப் போல ஆகவிடும்: உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள் மருத்துவரிடம் சென்று பார்க்கலாம், நீங்கள் செல்லவில்லை என்றால் … நீங்கள் எங்கேயாவது சென்று ஒரு மூலையில் சாக வேண்டியது தான்.”

“மஞ்சள் சீருடை" இயக்கம் தொடங்கியதில் இருந்து 10,000 பேர் கைது செய்யப்பட்டு, இரப்பர் தோட்டாக்களுக்கு 25 பேர் தங்களின் கண்களை இழந்துள்ள நிலையில், செலென் பிரெஞ்சு பொலிஸ் அரசு மீது அவர் கோபத்தை வெளிப்படுத்தினார்: “பொலிஸ் மூர்க்கத்தனம் ஏதோவிதத்தில் பார்க்க கொடூரமாக உள்ளது. உங்களுக்கே தெரியும், நான் என்னுடைய மஞ்சள் சீருடையைக் கழற்ற மறுத்ததற்காக 9 மணி நேரம் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டிருந்தேன். கிளர்ச்சி செய்த குற்றச்சாட்டுக்களின் பேரில் ஒன்பது மணி நேரம் தடுப்புக் காவலா? சமூக எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்னை விட வயதில் குறைந்த ஒரு நண்பியும் என்னுடன் இருந்தார், ஓர் இரப்பர் தோட்டா ஏறக்குறைய அவரின் முகத்தில் பாதியை இல்லாமல் ஆக்கிவிட்டது,” என்றார்.

உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்ட்னருக்கு "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களின் பரந்த எதிர்ப்பைக் குறித்து செலென் பேசினார்: “திரு. காஸ்ட்னர் கூறுகையில், 'பாரீசில் அங்கே 1,500 வன்முறை ஆர்ப்பாட்டக்காரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியும்.' … ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு போராட்ட அணிவகுப்புக்கு செல்லும் போதும், நீங்கள் நிச்சயமாக தேடப்படுவீர்கள். என் முன்னால் இருந்த ஒருவர் அவர் சட்டைக்குள் பேஸ்பால் மட்டை வைத்திருந்தார், ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.” “இப்போது சொல்லப் போனால் 'வன்முறை ஆர்ப்பாட்டக்காரர்கள்' [அரசால்] அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று கூறி அவர் நிறைவு செய்தார்.


'மக்களிடம் இருந்து திருடியதைத் திரும்ப கொடுங்கள்' என்று இந்த பீரங்கியில் எழுதப்பட்டிருக்கிறது

தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் போர்குணம் மற்றும் அரசியல் விழிப்புணர்வும் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் மீது அவர்களின் அவநம்பிக்கையும் எதிர்கால நம்பிக்கைக்கான முக்கிய அறிகுறியாக செலின் பார்த்தார். “தொழிற்சங்கங்கள் இதை தொடங்கவில்லை, சாமானிய தொழிலாளர்கள் தான் இதை தொடங்கினார்கள். இதன் அர்த்தம், மக்கள் 'போதும்!' என்று கூறுகிறார்கள், இது மிகவும் முக்கியமானது ஏனென்றால் இது வரையில் அரசுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான எல்லா பேச்சுவார்த்தைகளும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்தன. அதன் அர்த்தம் அதுவொரு மறைமுக கொள்கையாக இருந்தது, அவர்கள் என்ன விவாதித்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது, அவர்கள் என்ன உடன்படிக்கைகளை எட்டினார்கள் என்று எங்களுக்குத் தெரியாது.”

தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைப்பதே வேலைநிறுத்தக்காரர்களுக்கும், “மஞ்சள் சீருடையாளர்கள்,” மற்றும் போராட்டத்தில் நுழையும் இளைஞர்கள் மற்றும் ஏனைய சக்திகளுக்குமான முன்னோக்கிய பாதையாகும். அரசாங்கத்துடன் பேரம்பேசுவதற்கு அங்கே ஒன்றுமில்லை, அது பெருவாரியான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஓய்வூதிய வெட்டுக்களைத் திணிக்கும் என்பதை அது வலியுறுத்தி உள்ளது. மக்ரோன் மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தைப் பதவியிலிருந்து கீழிறக்குவதற்கான ஒரு போராட்டத்திற்குத் தயாராக உள்ளனர் என்பதற்கு நடவடிக்கையில் எடுத்துக்காட்டி வரும், பிரான்சிலும் சர்வதேச அளவிலும் உள்ள முன்பினும் அதிக தொழிலாளர்களின் பிரிவுகளை அணிதிரட்டும் நடவடிக்கைக் குழுக்களை, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைப்பதே தீர்க்கமான கேள்வியாகும்.

வேலைநிறுத்தத்தை நிறுத்துவதற்காக "கிறிஸ்துமஸ் சமாதானம்" என்ற ஒன்றை திணிப்பதற்கான தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தினது முயற்சிகளுக்கு மத்தியில், எல்லா தரப்பில் இருந்தும் போராட்டங்கள் தொடர்ந்து வெடித்து வருகின்றன.

நோத்ர்-டாம் தேவாலய இசைக்குழு மற்றும் பாரீஸ் ஒப்பேரா இசைக்குழு உட்பட பல இசைக்குழுக்கள் வேலைநிறுத்தத்தில் உள்ளன, லியோன் நகர ஒப்பேரா இசைக்குழு வேலைநிறுத்தம் சமூக ஊடகங்களில் பரந்தளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. டிசம்பர் 17 ஆம் தேதி அவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியதற்காக அவர்களைத் தண்டிப்பதற்காக, நிர்வாகம் அந்நிகழ்ச்சியை டிசம்பர் 18 இல் ஏற்பாடு செய்ய முயன்றது. டிசம்பர் 18 இல் அரங்கின் திரை விலக்கப்பட்டதும் முழு அரங்கிற்கும் முன்னால் பாடகர்கள், அவர்கள் இன்னமும் வேலைநிறுத்தத்தில் இருப்பதாகவும் 17 ஆம் தேதி நிகழ்ச்சி நடத்தாததைப் போலவே 18 இலும் பாடப் போவதில்லை என்று அறிவித்து விடையிறுத்தனர்.

“டிசம்பர் 5 இல் இருந்து, மில்லியன் கணக்கானவர்கள் ஓய்வூதிய வெட்டுக்களை நிறுத்துமாறு கோரி பிரான்ஸ் எங்கிலும் அணிவகுத்துள்ளனர். இந்த இயக்கம் பலவீனமடையவில்லை; அதற்கு பதிலாக, இந்தவாரம் அது இரண்டாவது அலையைக் கண்டுள்ளது,” என்று தெரிவித்த அவர்களுக்கு, பார்வையாளர்களிடம் இருந்து கரகோஷமும் உற்சாகமாக விசில் சத்தமும் வந்தது. கலாச்சாரத்துறை தொழிலாளர்கள் மீதான மக்ரோனின் தாக்குதல்களைக் கண்டித்து, அவர்கள் கூறுகையில், “நமது நிர்வாகம், நேற்று நடக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சியைத் தள்ளி வைத்ததன் மூலம், இந்த இயக்கத்தில் கண்கூடாகவே நாங்கள் பங்களிப்பு செய்வதில் இருந்து எங்களைத் தடுக்க முயன்றுள்ளது. … ஆகவே, துரதிருஷ்டவசமாக, தொழிலாளர்களாகிய நாங்கள் இன்றிரவு நிகழ்ச்சி நடத்துவதில்லை என்று தீர்மானித்துள்ளோம்,” என்றனர்.

தங்களின் ஓய்வூதியங்களை பாதுகாக்க அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களை இலக்கில் வைத்து பொலிஸ் உணர்விழக்கச் செய்யும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தியதன் மீது அதிகரித்து வரும் கோபத்திற்கு இடையே தீயணைப்புத்துறை வீரர்களும் போராடி வருகின்றனர். விபரங்களின்படி, கலகம் ஒடுக்கும் பொலிஸைப் போலவே தீயணைப்பு வீரர்களும் அதே துணை இராணுவ சட்ட அந்தஸ்தைக் கொண்டிருந்தாலும் கூட, கலகம் ஒடுக்கும் பொலிஸ் காட்டுமிராண்டித்தனமாக அவர்களைத் தாக்கினர். அக்டோபரில், உணர்விழக்கச் செய்யும் ஒரு கையெறி குண்டின் உலோகத் துணுக்கில் ஒரு தீயணைப்பு வீரர் ஒரு கண்ணை இழந்தார். இப்போது, சமூக ஊடகங்களில் உலாவி வரும் டிசம்பர் 17 அணிவகுப்பின் காணொளிகள், அமைதியான தீயணைப்புவீரர்களை பொலிஸ் தாக்கும் மற்றும் அடிக்கும் காட்சிகளையும், அவர்கள் மீது உணர்விழக்கச் செய்யும் கையெறி குண்டுகளை வீசுவதையும் காட்டுகின்றன.