ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கையின் வடக்கில் பத்தாயிரக்கணக்கானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்

By our correspondents
13 December 2019

இலங்கையில் கடந்த வாரங்களாக பெய்துவரும் மழை காரணமாக நாடு பூராவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பரந்தளவு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. செய்திகளின்படி நாடுபூராவும் 44,952 குடும்பங்களைச் சேர்ந்த 153,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தினதும் அதிகாரிகளதும் அலட்சியம் காரணமாக இந்த தொடர் மழை மக்களின் சமூக மற்றும் வாழ்க்கை பிரச்சினைகளை மேலும் உக்கிரமாக்கியுள்ளது.

யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வட மாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் 13,686 குடும்பங்களைச் சேர்ந்த 44,098 பேர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவற்றில் இந்த மோசமான காலநிலை முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை கடுமையாகப் பாதித்துள்ளது. 224 குடும்பங்களைச் சேர்ந்த 757 பேர் பாதுகாப்பான இடங்கள் என்று கூறப்படும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் 8,959 குடும்பங்களைச் சேர்ந்த 28,764 பேர், யாழ்ப்பாணத்தில் 1,858 குடும்பங்களைச் சேர்ந்த 6,298 பேர், முல்லைத்தீவில் 1,393 குடும்பங்களைச் சேர்ந்த 4,189 பேர், மன்னாரில் 1,073 குடும்பங்களைச் சேர்ந்த 3,527 பேர் மற்றும் வவுனியாவில் 403 குடும்பங்களைச் சேர்ந்த 1,320 பேர், பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு கிணற்றில் தவறி வீழ்ந்தும் மரம் முறிந்து வீழ்ந்ததாலும் இரண்டு சிறுவர்கள் இறந்துள்ளனர். வட மாகாணம் முழுதும் 423 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. பரந்தன்-முல்லைத்தீவு இடையிலான ஏ-32 வீதியில் ஒரு பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கிராமங்களில் “கம்பெரலிய” திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட வீதிகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சிதைந்து போயுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் படி கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 40,000, மட்டக்களப்பு மாவட்டத்தில் 10,000, மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 1,400 அளவிலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ள அனர்த்தத்திற்கான பொறுப்பை இயற்கை மீது போடுவதையே ஆளும் வர்க்கங்கள் வழமையாக கடைப்பிடிக்கின்றன. ஆனால், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ அரசாங்கங்களின் அலட்சியங்களே இதற்குப் பொறுப்பாகும்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தம் முடிவடைந்த பின் மீளக் குடியேறியுள்ள மக்களில் பலர் இன்னமும் தற்காலிக கொட்டில்களில் வாழ்வதோடு கடும் வருமையிலும் வாடுகின்றன. வன்னிப் பிரதேசம் என அழைக்கப்படும் இந்த பகுதிகள் குளங்கள் மற்றும் சிற்றாறுகள் நிறைந்த பிரதேசமாகும். உட்கட்டமைப்புகள் முறையாக பூரணப்படுத்தப்படாமையால், குளங்கள் ஆறுகள் நிரம்பி வழியும் போது குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் நுழைகின்றது.

கிளிநொச்சி மாவட்ட்டத்தின் மிகப்பெரிய குளமான இரணமடுவின் வான் கதவுகள் அனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ளன. கடலை நோக்கி ஓடும் வெள்ள நீரால் வழியில் உள்ள பல விவசாயக் கிராமங்களில் நெல் மற்றும் மரக்கறித் தோட்டங்களும் அழிவுக்குள்ளாகின்றன. யாழ்ப்பாணத்திலும் இம்முறை மரக்கறித்தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

யுத்த காலத்தின்போது நாசமாக்கப்பட்ட உட்கட்டைப்புகள் சர்வதேச முதலீடுகளையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் நோக்கில் துரிதமாக மீளக் கட்டியெழுப்பப்பட்ட போது, பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அக்கறைகாட்டப்படவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். வீதிகள் மற்றும் இரயில் பாதைகள் அமைக்கப்பட்ட போது முறையான வடிகால்கள் அமைக்கப்படாமையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருடா வருடம் வெள்ள நீர் நிரம்புகின்றது. அரசாங்கம் அவ்வப்போது நிவாரணப் பொருட்களை வழங்குவதுடன் நிறுத்திக்கொள்கின்றது.

தொற்று நோய் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றவற்றுக்காக நாளாந்தம் 1,300 பேர் சிகிச்சை பெறுவதாகவும், 60 பேர்வரை வாட்டுகளில் அனுமதிக்கப்படுவதாகவும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான யாழ்ப்பாண மாநகர சுற்றாடலில், சரியான வடிகாலமைப்பு மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் போதாமை காரணமாக நுளம்பு பெருக்கமும் நோய் பரவலும் காணப்படுகின்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதன் மூலம் அரசியல்வாதிகள் தங்களை மக்கள் மீது அக்கறையுள்ளவர்களாக வஞ்சத்தனமாக காட்டிக்கொள்கின்ற அதே நேரம், மூன்று தசாப்த காலமாக கொடூரமான போரை முன்னெடுத்து வந்ததாலும் பிரதேசத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதாலும் வெகுஜனங்களின் வெறுப்புக்கு உள்ளாகியுள்ள இராணுவம், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மனித நேய முகத்தைக் காட்ட முனைகின்றது.

பெரியகுளம் வீதி

கிளிநொச்சி நகரில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கண்டாவளை, முரசுமோட்டை, ஊரியான், பெரியகுளம் மற்றும் பன்னங்கண்டி போன்ற கிராமங்களே வருடாவருடம் வெள்ளத்தின் பாதிப்புக் உள்ளாகும் கிராமங்களாகும். இந்தக் கிராமங்களுக்கு செல்லும் வீதிகளும் சேதமடைந்திருக்கின்றன.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் இந்த இடைத்தங்கள் முகாம்களில் தங்கியிருந்த அகதிகளுடன் உரையாடினர்.

பன்னங்கட்டி தமிழ் பாடசாலையில் சுமார் 165 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளன.

மருதநகர் கிராமத்தை சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி ராஜினி (48) தனது 3 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்துவிட்டதாகவும் கடந்த வருடமும் வெள்ளத்தினால் விவசாயம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். “அரசாங்கம் ஒருசிலருக்கே நட்டஈடு வழங்கியது. குளங்களில் இருந்து வெளியேறும் தண்ணீரை கடலுக்கு அனுப்புவதற்கான திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தாமையினாலேயே இவ்வாறான அழிவுகளை நாங்கள் எதிர்கொள்கின்றோம். தூர்ந்துபோன வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாரி விடுமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தும், அவர்கள் அதை கணக்கெடுப்பதில்லை. ஆதனால் இந்த அழிவுகள் தொடர்கதையாகவே இருக்கின்றன,” என அவர் முறைப்பாடு செய்தார்.

கிராமசேவகர் அலுவலகம்

பெரியகுளம் கிராமசேவகர் அலுவலகத்தில் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளன.

“பெரிய குளத்தின் கட்டுக்களை உயர்த்திக் கட்டி அதைப் பாராமரித்து வந்தால் எங்களுக்கு வெள்ளப்பாதிப்பை தடுத்து நிறுத்த முடியும்” என்று பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்த தயாபரன் (42) தெரிவித்தார்.  “கடந்த வருட வெள்ளப் பெருக்கின்போது எனது 110,000 ரூபா பெறுமதியான மாடுகள் இறந்தன. அதற்கான நட்ட ஈடுகள் கிடைக்கவில்லை. கடந்த ஆட்சியிலும் எமது கோரிக்கைகள் தீர்க்கப்படவில்லை. புதிய அரசாங்கமும் உதவி திட்டங்களை வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலை நோக்கமாகக் கொண்டே அரசாங்கம் இப்போது வரிகளைக் குறைத்துள்ளது.”

முரசுமோட்டை பாடசாலையில் தங்கியிருக்கும் நான்காம் கட்டையை சேர்ந்த மரியாம்பிள்ளை செனவாம்மா (70), போரின் பின்னர் மீண்டும் குடியேறியவராவார். “கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கினால் எனது வயல் அழிந்த்துடன் 46 கோழிகளும் அடித்துச் செல்லப்பட்டன. எனக்கு வாழ்வாதாரம் அரை ஏக்கர் வயலும் கோழிவளர்ப்பும் தான். ஆனாலும், தற்போது ஏதாவது அன்றாடப் பொருட்களை வாங்குவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை. சலரோகம், பிறசர் போன்ற நோயுடன் நான் அவதிப்படுகின்றேன். கடந்த ஆண்டு வெள்ளப் பெருக்கு நட்ட ஈடாக வெறும் பத்தாயிரம் மட்டுமே தந்தார்கள்,” என அவர் குறிப்பிட்டார்.

அதே முகாமில் தங்கியிருந்த க. சந்திரவதி (71) கூறியதாவது: “நான் தனிமையாக வாழ்கிறேன். எனது வயலுக்கு பசளை போடுவதற்கு கூலிக்கு ஆள் பிடிப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. கடன்பட்டு வாங்கிய பசளையை வீட்டில் வைத்துவிட்டுதான் இந்த முகாமுக்கு வந்துள்ளேன். அந்தப் பசளை நீரில் கரைந்துவிட்டிருக்கும். நான் தற்காலிக குடிசையில் வசித்து வருகின்றேன். அதுவும், பழுதடைந்துவிட்டது. திருத்துவதற்கு என்னிடம் காசு இல்லை.”

யாழ்ப்பாணத்தில் அராலி மேற்கு கிராம மக்கள் மீனவத் தொழிலையும் அன்றாட கூலித் தொழிலையும் நம்பி வாழும் வறியவர்களாவர். தாழ்நிலப் பகுதியான அந்த கிராமம் வருடாவருடம் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றது. இந்த கடற்கறை கிராமம் குடிநீருக்கு பௌசரையே நம்பியுள்ளது. ஒன்றை விட்டு ஒரு நாள் 40 லீட்டர் தண்ணீர் பிரதேச சபையினால் வழங்கப்படுகின்றது. அதற்கு மாதாந்தம் 100 ரூபா கட்டணமாக கட்ட வேண்டும்.

கிருபாகரன்

கடற்றொழில் செய்யும் மன்னவன் கிருபாகரனின் குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். அவரது காணிக்குள் வெள்ளம் நிரம்பியிருந்தது. அத்திவாரமிடப்பட்ட நிலையிலேயே அவரின் வீடு இருந்தது. தற்போது அவரது குடும்பம் ஒரு சிறிய கொட்டிலுக்குள் வாழ்கின்றது. அரசாங்கத்தின் 5 அரை இலட்சம் பொறுமதியான வீட்டுத் திட்டம் வழங்கப்பட்ட போதிலும், 70 ஆயிரம் ரூபா மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் சகல கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனாலேயே அவர்கள் பெரும் பாதிப்பினைச் சந்தித்துள்ளார். இவ்வாறு பல குடும்பங்கள் இந்தக் கிராமத்தில் உள்ளன. பல வீடுகளுக்கு மலசல கூடங்கள் கிடையாது.

கிருபாகரன் கூறியாதாவது: “வெள்ளத்திற்குள் பல கஸ்ட்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அரசாங்க அதிகாரிகள் எங்களை வந்து பார்க்கவே இல்லை. இந்த வீட்டுத் திட்டத்தினை நம்பி இருந்த கொட்டிலையும் கழட்டிவிட்டோம். நாங்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோம். ஆனாலும் அரசாங்கம் எங்களுக்கு உதவவில்லை. பல காலமாக சொந்தக் காணி இல்லாமல் பல கஸ்ட்டங்களின் மத்தியிலேயை தாழ்வான பகுதியில் இந்த காணியை வாங்கினோம். அரசாங்கம் தான் இதை நிரப்பித்தர வேண்டும். கடந்த வருடம் வீசிய கடும் காற்றால் எனது படகு கடலோடு அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போய்விட்டது. அதற்கு கூட எங்களுக்கு நஸ்ட்ட ஈடு கிடைக்கவில்லை. தற்போது, குத்தகைக்கு ஒரு படகை வாங்கி தொழில் செய்கின்றேன். மாதம் 3000ரூபா குத்தகைப் பணம் கட்ட வேண்டும். அது ஒரு சுமையாக இருக்கின்றது.

மு. தெய்வானை

மு. தெய்வானையின் வீட்டில் அவரும் அவரது கணவரும் மட்டுமே உள்ளதுடன் அவர்களது வீட்டைச் சுற்றி வெள்ளம் நிற்கின்றது. “குளிர் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோம். நோயாளியான எனது கணவரால் வருமானம் ஈட்ட முடியாது. நான் ஒரு வீட்டில் சமையல் வேலைசெய்து 250 ரூபா பெறுவேன். அதைக் கொண்டுவந்து தான் சமைத்துச் சாப்பிட வேண்டும். நாங்கள் யுத்த்திலும் பாதிக்கப்பட்டோம். வெள்ளத்தினாலும் பாதிக்கப்படுகிறோம்.” என அவர் தெரிவித்தார்.

மு. ரத்தினசிங்கம்

மு. ரத்தினசிங்கத்தின் குடிசை மழையினால் ஏற்பட்ட மின்சார ஒழுக்கினால் முற்றாக எரிந்து நாசமாகிவிட்டது. உடுத்திய உடையுடனேயே அவரது குடும்பம் உள்ளது, சமையல் பாத்திரங்கள், 43 ஆயிரம் பணம், பொருட்கள் மற்றும் பிள்ளைகளின் பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளும் கூட எரிந்துவிட்டன. வீட்டில் ஒருவரும் இல்லாததால் உடல்பாதிப்புகள் ஏற்படவில்லை.

மு. ரத்தினசிங்கம் தெரிவித்ததாவது: “எங்களுக்கு வீட்டுத் திட்டம் தந்தார்கள். 120,000 ஆயிரம் மட்டுமே தந்தார்கள் அரசாங்கம் மாறிவிட்டதாக கூறி மீதிப் பணத்தை நிறுத்தி வைத்திருக்கின்றார்கள். அதனால் எங்கள் வீட்டை கட்டி முடிக்கவில்லை. இந்த வீட்டுக்காக மேலும் 2 லட்சம் கடன்பட்டும அதற்கு வட்டி கட்டிக் கொண்டிருக்கின்றோம். எமது நிலமை பற்றி அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்தும் ஒரு பிரயோசனமும் இல்லை. நான் கடற்றொழிலுக்கும் கூலி வேலைகளுக்கும் போகின்றேன். ஆனாலும் வருமானம் போதவில்லை. மழைநேரத்தில் வீடு இல்லாமல் எனது குடும்பம் தவித்துக் கொண்டிருக்கின்றது.” தற்போது ரத்தினசிங்கத்தின் குடும்பம் அவரது தாய் வீட்டிலேயே தங்கியுள்ளது.