ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Thousands of Sri Lankan estate workers strike over workloads and wages

இலங்கையில் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் வேலைச்சுமையை அதிகரிப்பதற்கு எதிராகவும் சம்பள உயர்வு கோரியும் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

M. Thevarajah and K. Kandipan
05 Deacember 2019

இலங்கையில் ஹொரன பெருந்தோட்டத்துக்குச் சொந்தமான நான்கு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 5,000 தோட்டத் தொழிலாளர்கள், நவம்பர் 29 அன்று தோட்ட நிர்வாகத்தால் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் அடையாள அட்டை மற்றும் மின் தராசு முறையை அறிமுகப்படுத்தியமைக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்தனர்.

இந்த மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தில் சாமிமலை பிரதேசத்தில் அமைந்துள்ள ஓல்டன், கவரவில, ஸ்டொக்ஹொம் மற்றும் மானெலி ஆகிய தோட்டங்களிலேயே இந்த வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. ஹொரன பெருந்தோட்டங்களை ஹேலிஸ் நிறுவன குழுமம் பராமரிக்கின்றது.

பெருந்தோட்ட நிறுவனம் தயாரித்த டிஜிட்டல் அடையாள அட்டையில் தொழிலாளர் விவரங்களுடன் சிம் அட்டையும் உள்ளது. தொழிலாளி காலையில் வேலைக்குச் செல்வதற்கு முன்பு டிஜிட்டல் தராசிற்கு அடையாள அட்டையை காட்டி பதிவு செய்ய வேண்டும். கொழுந்து பறிக்கும் போதும் தொழிலாளி அடையாள அட்டையை தன்னுடன் வைத்திருக்க வேண்டும். நாளின் முடிவில், தராசுக்கு மீண்டும் அடையாள அட்டையை காட்டி வேலை முடித்ததை தொழிலாளி பதிவு செய்ய வேண்டும். 18 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட கொழுந்து பறித்திருந்தால் மட்டுமே மட்டுமே தொழிலாளிக்கு முழு நாள் ஊதியம் கிடைக்கும். அவர் இலக்கை அடையத் தவறினால், அவருக்கு அரை நாள் ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது.

அடையாள அட்டையை தயாரிக்க கம்பனி நிர்வாகம் ஏற்கனவே தொழிலாளர்களிடமிருந்து 5,000 ரூபாயை சுரண்டிக்கொண்டுள்ளது. ஒரு சில தொழிலாளர்கள் மட்டுமே அட்டையைப் பெற்றுக்கொண்டுள்ளனர். எந்த ஓய்வும் இல்லாமல் வேலையில் ஈடுபட தொழிலாளரை கட்டாயப்படுத்தவே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அக்டோபரில், ஓல்டன் தோட்டத்து தொழிலாளர்கள் புதிய டிஜிட்டல் தராசு அறிமுகப்படுத்தப்பட்டபோது அதை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தனர். ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தினதும் (NUW) அதிகாரத்துவத்தினர் இதை செயல்படுத்துவதை தாமதப்படுத்துமாறு கம்பனிகளைக் கேட்டுக்கொண்ட அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை தொழிலாளர்களை காத்திருக்குமாறு கூறியுள்ளனர். NUW, ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனும் அணிதிரண்டனர்.

ஸ்டொக்ஹொம் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் மற்றும் மேலாளருடன் வாதிடுகின்றனர்

கம்பனி தற்காலிகமாக இந்த முறையை நிறுத்தி வைத்து, அதை நவம்பர் 29 அன்று மீண்டும் அறிமுகப்படுத்தியது. தொழிலாளர்கள் உடனடியாக வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கு தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமனை சந்தித்தபோது, தான் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த கம்பனியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், தொழிலாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளுமாறு கோரியதாகவும் தலைவர்கள் கூறினர்.

ஜனாதிபதி இராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சரான தொண்டமான், சுரண்டலை தீவிரப்படுத்துவதற்காக கம்பனிகளுடன் மூடிய அறைக்குள் ஒரு துரோக உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளார் என்பதையே இது வெளிப்படுத்துகிறது. தொழிலாளர்கள் அவரை மீறி வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர்.

நவம்பர் 29 அன்று இரவு, மஸ்கெலியா பொலிஸ், ஓல்டன் தோட்டத்திலுள்ள இ.தொ.கா. தலைவி பெருமாள் ராணியின் வீட்டிற்கு வந்து அவரை கைது செய்ய முயன்றது. கோபமடைந்த தொழிலாளர்கள் அவரை கைது செய்வதைத் தடுத்தனர். பொலிசார் ராணியை அடுத்த நாள் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு சொல்லி விட்டுச் சென்றனர். நவம்பர் 30 அன்று அவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வேலைநிறுத்தம் குறித்து வாக்குமூலம் அளித்தார். தொண்டமானின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராணி தொழிற்சங்கத்திலிருந்து விலகியுள்ளார்.

திங்களன்று NUW மற்றும் அதன் உள்ளூர் அமைப்பாளர்கள், டிஜிட்டல் அடையாள அட்டை இன்றி, பழைய முறைகளின்படி வேலை செய்யுமாறு தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினர். அதன்படி, தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றனர், ஆனால் அன்று மாலை தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் பறித்த கொழுந்தை பொறுப்பேற்க மறுத்துவிட்டது. NUW உள்ளூர் தலைவர் ஜெயா பாலன் தொழிலாளர்களை வேலைக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டதோடு பின்னர் டிஜிட்டல் முறையை கைவிடச் செய்ய முடியும் என்று தொழிலாளர்களை நம்ப வைக்க முயன்றார். கோபமடைந்த தொழிலாளர்கள் அவருடன் வாக்குவாதம் செய்தனர். தொழிலாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து இன்று முடிவு செய்வதாக கூறினர்.

ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் கூறியதாவது: “இந்த புதிய முறையை அமுல்படுத்துவதில் எங்களது விருப்பம் இல்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தொண்டமானுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்? இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் எங்களை விற்றுவிட்டார்கள். இந்த முறை ஃபோர்டைஸ், பட்டல்கல மற்றும் டிக்கோயா தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையை ஏற்க வேண்டாம் என்று அந்த தொழிலாளர்கள் எங்களிடம் சொன்னார்கள். ஆனால் தொண்டமான் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படி கேட்கிறார், இல்லையென்றால் நாங்கள் வேலை இல்லாமல் சாக வேண்டும்.”

கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஊதிய உயர்வை வழங்க கோரி, நவம்பர் 26 முதல் மஸ்கெலியா, கேகல்ல மற்றும் நமுனுகுல பெருந்தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,500 தோட்ட நிர்வாக ஊழியர்கள் இன்னொரு வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். வேலைநிறுத்தம் செய்பவர்களில் அலுவலக ஊழியர்கள், கள அதிகாரிகள், தோட்ட மருந்தகங்களில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள், லாரி சாரதிகள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் சிறு ஊழியர்களும் அடங்குவர். எதிர்க்கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த தொழிற்சங்க அதிகாரத்துவம், வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்க முயன்ற போதும், தொழிலாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.

அந்த தொழிலாளர்களின் சம்பளத்தை 25 சதவிகிதம் அதிகரிப்பதாக முதலாளிமார் சம்மேளனம் அக்டோபர் 1 அன்று இலங்கை தோட்ட நிர்வாக ஊழியர்கள் சங்கத்துடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும், குறித்த தோட்டக் கம்பனிகள் இந்த அதிகரிப்பை அவர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கவில்லை. கம்பனிகள், இதை எந்த நேரத்திலும் நிறுத்தக்கூடிய ஒரு கொடுப்பனவாகவே வழங்கியுள்ளன.

நிறுவனத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரவுஸ்விக் தோட்டத்தில் சுமார் 300 ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மஸ்கெலியா நகரத்தை நோக்கி மூன்று கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றனர். ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்கான பொலிசின் முயற்சியை அவர்கள் முறியடித்தனர்.

கம்பனியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தோட்ட நிர்வாக ஊழியர் சங்கத் தலைவர் சதுர சமரசிங்க தெரிவித்தார். திங்கள்கிழமை முதல் மற்ற தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் சேருவார்கள் என்று அவர் பொய்யாக கூறிய போதிலும், எதுவும் நடக்கவில்லை. ஒன்றிணைந்த நடவடிக்கைக்கு இந்த தொழிற்சங்கம் ஏனைய தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் செவ்வாயன்று நிர்வாகத்துடன் மற்றொரு பேச்சுவார்த்தையை நடத்திய போதும் அதுவும் தோல்வியடைந்தது. கோபமடைந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். பிரவுஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு ஊழியர், உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசும் போது, "சம்பள உயர்வு ஒரு கொடுப்பனவாக வழங்கப்படும் போது, ​​ஓய்வூதிய நிதியை அதிகரிக்க இது உதவாது," என்றார்.

கவரவில தோட்டத்தில் வருமான பகிர்வு திட்டம் என்று அழைக்கப்படுவது அமுல்படுத்தப்பட்ட போது, அவர் அங்கிருந்து விலகி பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் சேர்ந்தார். இந்தத் திட்டத்தின் காரணமாக தொழிலாளர்கள் மட்டுமல்ல, அலுவலக ஊழியர்களும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என அவர் கூறினார். இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு தொழிலாளிக்கும் சுமார் 1,000 தேயிலைச் செடிகள் ஒதுக்கப்படுகின்றன. அதை பராமரிக்க அவர் / அவள் மற்றும் அவர்களது முழு குடும்பமும் உழைக்க வேண்டும். கம்பனியானது அது வழங்கிய பொருட்களுக்கான விலை, அலுவலக பராமரிப்பு மற்றும் இலாபத்தையும் கழித்துக்கொண்ட பின், தொழிலாளர்களுக்கு ஒரு அற்ப வருமானப் பங்கே கிடைக்கும்.

தொழிலாளர்களைப் பிளவுபடுத்தும் தொழிற்சங்கங்களை விமர்சித்த தொழிலாளர்கள், தொழிலாளர்களின் பொதுவான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும் என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்நோக்கு இன்றியமையாதது என்றனர். வேலைத் தளங்கள் மற்றும் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் நடவடிக்கை குழுக்களை உருவாக்க சோ.ச.க. போராடுவதுடன், சோசலிச கொள்கைகளுக்காக போராடுமாறு தொழிலாளர்களை வலியுறுத்துகிறது.

இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் 100 சதவீத ஊதிய உயர்வு கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் 11 நாள் வேலைநிறுத்தம் உட்பட தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டனர். எவ்வாறாயினும், தொழிற்சங்கங்கள் போராட்டத்தை காட்டிக் கொடுத்ததுடன் தொழிலாளர்கள் 20 ரூபாய் சம்பள அதிகரிப்பு மட்டுமே பெற்றனர். தொழிற்சங்கங்கள் "வருமான பகிர்வு திட்டம்" என்று அழைக்கப்படுவதை செயல்படுத்த ஒத்துழைக்க ஒப்புக்கொண்டன.

தொழிலாளர்கள் தங்கள் வேலை நிலைமைகள், வருமானம் மற்றும் ஏனைய உரிமைகளை பாதிக்கும் இந்த முறையை எதிர்க்கின்றனர். தொழிலாளர்களுக்கு எதிராக தொழில்துறை பொலிஸாக மாறியுள்ள தொழிற்சங்கங்களின் முழு ஆதரவும் கம்பனிகளுக்கு உண்டு.

ஹேலிஸ் குழுமத்தின் தோட்டத் துறையின் தலைமை நிர்வாக அதிகாரியான ரொஷான் இராஜதுரை, சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு கூறியதாவது: “தனியார் வருமானத்தை பெருக்கும் சாத்தியமில்லாத, பற்றாகுறையான உற்பத்தி திறன்கொண்ட, முகாமைத்துவத்தில் தங்கியிருக்கின்ற, உரிமைகளோடு சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள மற்றும் நலன்புரி சேவை நோக்கம் கொண்ட, பெருந்தோட்ட இயக்க மாதிரியை மாற்றியமைக்க வேண்டும் மற்றும் நாள் சம்பள முறை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.”

இந்த ஒட்டுண்ணி முதலாளித்துவ வர்க்கம், உண்மையான செல்வத்தை உற்பத்தி செய்யும் தொழிலாளிகளை, தொழிற்சங்கங்களின் உதவியுடன் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துவதில் உறுதியாக உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பத்து நாட்களுக்குப் பின்னர் வெடித்துள்ள இந்த தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அடிநிலையில் காணப்படும் பெரும் எதிர்ப்பை சுட்டிக் காட்டுகின்றன. போலி இடது அமைப்புகளின் ஆதரவுடன், தொழிற்சங்கங்கள், தேர்தலை மேற்கோள் காட்டி வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நிறுத்திக்கொண்டன. அந்தப் போராட்டங்கள் இப்போது மீண்டும் தலைதூக்குகின்ற போதிலும், ஆளும் வர்க்கத்தால் பிரதானமாக வர்க்கப் போராட்டங்களை அடக்குவதற்காக அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய ராஜபக்ஷ ஆட்சியின் கீழ், ஆபத்துகளை எதிர்கொள்கின்றன.

வர்க்கப் போராட்டங்களை அபிவிருத்தி செய்யவும் தங்களது நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க போராடவும், அரசாங்கத்தினதும் பெருவணிகத்தினதும் தொழில்துறை பொலிஸாக மாறியுள்ள தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, தொழிலாளர்கள் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு சோ.ச.க. வேண்டுகோள் விடுக்கின்றது. இந்த குழுக்கள் ஒவ்வொரு வேலைத் தளத்திலும் தொழிலாள வர்க்க குடியிருப்பு பகுதிகளிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இந்த போராட்டம் சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் அந்த கொள்கைகளை செயல்படுத்த ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டும். இந்த போராட்டம் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்துடன் பிணைக்கப்பட்டதாகும். சோ.ச.க. இந்த முன்னோக்கை அபிவிருத்தி செய்வதோடு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது.