ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan president appoints minority government and puts security forces on alert

இலங்கை ஜனாதிபதி சிறுபான்மை அரசாங்கத்தை நியமித்து பாதுகாப்புப் படையினரை விழிப்புடன் வைக்கிறார்

By Saman Gunadasa
29 November 2019

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, கடந்த வாரம் இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டு சில நாட்களுக்குள், நாட்டின் பாதுகாப்பு அமுலாக்கல் நிறுவனங்கள், “சமாதானத்துக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நபருக்கும் அல்லது குழுக்களுக்கும் எதிராக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், சட்டத்தை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தும்," என அறிவித்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டபய இராஜபக்ஷாவால் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட குணரத்ன, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான கொழும்பின் இரத்தக்களரிப் போரின்போது தடுத்து வைக்கப்பட்டிருந்த பல உறுப்பினர்களை மொத்தமாக படுகொலை செய்தமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கியிருந்தார்.

பொலிஸ் அதிகாரிகள் "நாட்டின் பாதுகாப்பு குறித்து அதிக விழிப்புடன் இருப்பார்கள், தங்கள் பகுதிகளின் பாதுகாப்பிற்கு அவர்கள் பொறுப்பாளிகளாக இருப்பர்" என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார். "சமீபத்திய ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் அரசியல் பழிவாங்கல் கடத்தல் அல்லது இடையூறுகள் ஏற்படலாம் என்ற எந்தவித தேவையற்ற பீதியும் மக்கள் மத்தியில் இருக்கக்கூடாது,” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலைத் தொடர்ந்து "அரசியல் பழிவாங்கல், கடத்தல் மற்றும் தொந்தரவுகள்" குறித்து இலங்கையர்களிடையே அச்சங்கள் நிலவினால் அது ஆச்சரியத்துக்கு உரியதல்ல. 2005 முதல் 2015 வரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகத்தின் கீழ், அதன் பாதுகாப்பு செயலாளராக கோடாபய இராஜபக்ஷ இருந்த போதும் இதுபோன்ற செயல்கள் பொதுவானவையாக இருந்து வந்துள்ளன. ஜனநாயக உரிமைகள் மீதான கொடூரமான மற்றும் இடைவிடாத தாக்குதலை மேற்பார்வையிட்ட கோடாபய, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது செய்யப்பட்ட போர்க்குற்ற குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டவர்.

குணரத்னாவின் கருத்தானது தங்களது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க போராடும் அனைவரையும் அச்சுறுத்தும் முயற்சியாகும். முந்தைய அரசாங்கம் அமுல்படுத்திய சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் 2018 முதல் வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த மாத ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இரயில்வே தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்கள் நடத்திய தேசிய வேலைநிறுத்தங்கள் தேர்தல் ஆணையரின் உத்தரவுகளை பின்பற்றி தொழிற்சங்கங்களால் நிறுத்திக்கொள்ளப்பட்டன.

இந்த போராட்டங்கள், இலங்கையில் அதிகரித்து வரும் கடன் மற்றும் பொருளாதார சிக்கல்களுடன் சேர்ந்து, கொழும்பின் ஆளும் உயரடுக்கை ஆழ்ந்த நெருக்கடியில் தள்ளியுள்ளன. பெருவணிகத்தின் பிரிவுகள் வெகுஜன எதிர்ப்பை அடக்குவதற்கு ஒரு "வலுவான ஆட்சியாளரை" கோருகின்றன. தேசிய வேலைநிறுத்தங்களும் ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான ஆர்ப்பாட்டங்களும் மீண்டும் தலைதூக்கினால் அதை அரசாங்கம் "அமைதிக்கு இடையூறு" என்று கூறுவதோடு அதை சட்டவிரோதமானதாக்கவும் கூடும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் முழு ஆளும் உயரடுக்கினரும், ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவால் ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை பற்றிக்கொண்டு உடனடியாக அவசரகால நிலையை அறிவித்ததுடன் நாடு முழுவதும் இராணுவத்தை நிலைநிறுத்தினர்.

மஹிந்த இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) அந்த அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்து, ஒரு இனவாத முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தைத் தூண்டியது. அது இராணுவ புலனாய்வுத்துறைக்கு குழிபறித்துவிட்டதாகவும் பலவீனப்படுத்திவிட்டதாகவும் அரசாங்கத்தை குற்றம் சாட்டியதுடன், கோடாபய இராஜபக்ஷவை அதன் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து, அவரை ஒரு "வலிமையான மனிதர்" ஆக ஊக்குவித்ததுடன் போரின் போதான அவரது கொடூரமான சாதனைகளை தூக்கிப் பிடித்தது.

கடந்த சனிக்கிழமையன்று, பாதுகாப்பு செயலாளர் ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்தபோது, ​​"மக்களுக்குள்ள ஜனநாய இடைவெளியை கட்டுப்படுத்தி ஒரு இராணுவ ஆட்சியை அமைக்க அரசாங்கம் திட்டமிடுகின்றது என்று சிலர் கூறிய கருத்துக்களில் ஒரு பகுதி கூட உண்மை கிடையாது" என்று அறிவித்தார். இருப்பினும், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கு பொலிசார் பொறுப்பு என்றும், எந்தவொரு சூழ்நிலையும் கட்டுப்படுத்த முடியாத நிலைமையை எட்டிவிட்டால் அதிரடிப் படையும் இராணுவமும் நிறுத்தப்படும் என்றும் குணரத்ன எச்சரித்தார்.

நவம்பர் 22 அன்று, ஜனாதிபதி ராஜபக்ஷ, இலங்கை முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். இந்த தீர்மானமானது ஆகஸ்ட் மாதம், முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவால் அறிமுகப்படுத்தப்பட்ட 25 மாவட்டங்களிலும் நாட்டின் பிராந்திய நீர்நிலைகளிலும் ஆயுதப்படைகளை நிலைநிறுத்தும் நடவடிக்கையை தொடர்வதாகும்.

இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று பாதுகாப்பு செயலாளர் குணரட்ன தெளிவுபடுத்திய அதே வேளை, புதிய ஆட்சியானது அரசியல் ரீதியாக ஸ்திரமற்றுள்ளதோடு ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த எதிர்ப்பை முகங்கொடுக்கின்றது.

தேர்தலுக்குப் பின்னர், ஜனாதிபதி ராஜபக்ஷ தனது நிர்வாகத்தை தூக்கி நிறுத்தவும் பலப்படுத்துவதற்கும் அரசியல் கூட்டாளிகளை நியமிக்க முன்நகர்ந்தார். கடந்த  வாரம், அவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு பணித்ததோடு தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து, மேலும் 16 அரசியல் விசுவாசிகளுக்கு அமைச்சர் பதவிகளும் கொடுத்தார்.

புதிய அமைச்சரவைக்கு பிரதமர் ராஜபக்ஷ தலைமை தாங்குவார். அவர் நிதி, நகர அபிவிருத்தி, வீட்டுவசதி, நீர் வழங்கல் மற்றும் பௌத்த சாசன துறைகளை தன் கையில் வைத்திருக்கும் அதே வேளை, அரச அதிகாரத்தை விளைபயனுடன் கட்டுப்படுத்துவார். எவ்வாறாயினும், ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.வுக்கு பாராளுமன்ற பெரும்பான்மை கிடையாது.

ஜனாதிபதி ராஜபக்ஷ, “மிக விரைவில்" ஒரு பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக அறிவித்தார். தற்போதைய பாராளுமன்றத்தின் ஐந்தாண்டு காலம் அடுத்த ஆகஸ்டில் முடிவடைந்தாலும், பாராளுமன்றத்தை கலைத்து அடுத்த மார்ச் மாதம் புதிய தேர்தல்களை நடத்த தனது ஜனாதிபதி அதிகாரங்களைப் பயன்படுத்த அவர் விரும்புகிறார்.

இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமானது ஜனாதிபதி அமைச்சர் பதவிகளை வகிப்பதைத் தடுப்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. கோருகிறது, இதை ஒரு சிறுபான்மை அரசாங்கத்தால் மேற்கொள்ள முடியாது.

1994 மற்றும் 2015 க்கு இடையில் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கங்களில் அமைச்சர் பதவிகளை வகித்த கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் முன்னணி நபரான ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. தலைவர் ஜி.எல். பீரிஸ், இந்த வாரம், ஐ.தே.க. உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரினார்.

புதிய ஜனாதிபதியும் பிரதமரும் தன்னிச்சையாக செயல்படத் தயாராக இருப்பதாக பீரிஸ் சுட்டிக்காட்டினார். "கோடாபய-மஹிந்த இணைப்பு, எங்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் சும்மா இருக்காது. பாதுகாப்புத் துறையையும் தேசிய பொருளாதாரத்தையும் புதுப்பிப்பிப்பதாக அளித்த வாக்குறுதி உட்பட பிரதான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை அவர்கள் உறுதி செய்வர்,” என அவர் அறிவித்தார்.

ராஜபக்ஷ, உயர்மட்ட அரச நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். அவர்களில் பி.பி. ஜயசுந்தர ஜனாதிபதி செயலாளராகவும், எஸ.ஆர். ஆட்டிகல திறைசேரி செயலாளராகவும் நிதி அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதோடு இந்த நியமனங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

ஜயசுந்தர, 1990கள் மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பல்வேறு அரசாங்கங்களின் கீழ் முன்னாள் மத்திய வங்கியின் பொருளாதார நிபுணராகவும் நிதி அமைச்சின் செயலாளராகவும் இருந்தவர். சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை ஈவிரக்கமின்றி செயல்படுத்தியதில் அவர் பேர் போனவர். அட்டிகல, முன்னாள் மத்திய வங்கியின் துணை ஆளுநராகவும், கடந்த 10 ஆண்டுகளாக திறைசேரி துணை செயலாளராகவும், நிதி அமைச்சின் துணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த நியமனங்கள் ஒருபுறம் இருக்க, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியும் அவரது ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. சிறுபான்மை அரசாங்கமும் பலவீனமாக உள்ளன. கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அரசாங்கம், சர்வதேச நிதி மூலதனம் கோரும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த நிர்பந்திக்கப்படும். எவ்வாறாயினும், மில்லியன் கணக்கான இலங்கை தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீதான ஈவிரக்கமற்ற தாக்குதல்கள், தாமதமின்றி விரைவில், பெரும் வர்க்க மோதல்களைத் தூண்டும்.