ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

World Bank economist warns of worsening crisis in Sri Lanka

இலங்கையில் நெருக்கடி மோசமடைவதாக உலக வங்கி பொருளாதார நிபுணர் எச்சரிக்கிறார்

By Saman Gunadasa
12 December 2019

தென் ஆசியாவிற்கான உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஹன்ஸ் டிம்மர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் புதிய சிறுபான்மை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வரிக் குறைப்புக்கள், பொருளாதாரத்தை சீர்குலைத்து நாட்டின் நிதி நெருக்கடியை ஆழமாக்கும் என்று எச்சரித்துள்ளார். கொழும்பில் டிசம்பர் 3 அன்று இலங்கை மத்திய வங்கி  நடத்திய அவரது பகிரங்க விரிவுரையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை டிம்மர் ஒப்புக் கொண்ட போதிலும், அதன் “ஊக்குவிப்பு பொதி” ஆபத்தானது என்று எச்சரித்ததோடு, சர்வதேச நாணய நிதியம் கோரிய “கட்டமைப்பு மறுசீரமைப்பை” செயல்படுத்த வலியுறுத்தினார்.

"இலங்கை எதிர்பார்க்கின்ற ஊக்குவிப்புக்குத் தேவையான நிதி அதனிடம் இருக்காது," என்று அவர் கூறினார். புதிய வரிச்சலுகைகள், பாதீட்டு ஒழுக்கத்தை தகர்த்துவிடும் என்று உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங் முன்னர் எச்சரித்திருந்தது. "நிதி ஒழுக்கத்தை" நடைமுறைப்படுத்துவது என்பது சர்வதேச நாணய நிதியம் கோரியபடி நாட்டின் வலவு செலவுதிட்ட பற்றாக்குறையை குறைப்பதாகும். இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாக உயர்ந்துள்ள பாதீட்டுப் பற்றாக்குறையை இலங்கை அரசாங்கம் 3.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோருகிறது.

சிறுபான்மை அரசாங்கத்தின் சமீபத்திய சலுகைகளில், தனிநபர் வருமான வரி விகிதங்களை 24 லிருந்து 18 சதவீதமாகக் குறைப்பது; பங்கிலாபம் மற்றும் வட்டி மீதான 5 சதவீத பிடித்து வைத்திருக்கும் வரியை நீக்குதல்; தேசத்தை கட்டியெழுப்பும் வரியை ஒழித்தல்; விவசாயம், மீன்பிடி, கால்நடை மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை வருமான வரியிலிருந்து விலக்குதல்; மற்றும் பெறுமதி சேர் வரிய (வட்) 15 முதல் 8 சதவீதமாகக் குறைத்தல் ஆகியவை அடங்கும். முந்தைய அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவின் பேரில், வட் வரியை அதிகரித்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) அரசாங்கமும் ஊடகங்களும், வரி குறைப்பானது வணிகத்தையும் வலுவிலந்த பொருளாதாரத்தையும் உயர்த்துவதுடன் நுகர்வையும் அதிகரிக்கும் என்று வலியுறுத்தியுள்ளன.

எவ்வாறாயினும், வரி குறைப்புக்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 முதல் 1.5 சதவிகிதம் வரை அரசாங்க வருமானத்தை குறைக்கும் என்று மூடி முதலீட்டாளர்கள் சேவை கணித்துள்ளது. இதனால் ஆண்டுக்கு 500 முதல் 550 பில்லியன் ரூபாய் (3 பில்லியன் அமெரிக்க டாலர்) வருமான குறைவு ஏற்படும் என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது.

தெற்காசியா, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியமாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வளர்ச்சி கணிப்புகளில் கடும் குறைப்பை சந்தித்து வருவதாக டிம்மர் குறிப்பிட்டார். முன்னதாக உலகப் பொருளாதாரத்தின் இயந்திரங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி இந்த ஆண்டு 5 சதவீதத்திற்கும் குறைவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் வளர்ச்சி 2.7 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

“வர்த்தகப் போர்கள், கொள்கை நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றுடன் வளர்ச்சிச் சந்தைகளில் பெரும் நிச்சயமற்ற தன்மைகள்” ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி பொருளாதார வல்லுநர் குறிப்பிட்டுள்ளதுடன் தெற்காசியாவில் பொருளாதார சிக்கல்களை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். "தெற்காசியாவில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால், இங்கு நிதி விதிமுறை எதுவும் இல்லை, இது பேரினப் பொருளாதார சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன்" "தரகு முதலாளித்துவம்" இப்பிராந்தியம் முழுவதும் ஒரு பொதுவான பிரச்சினையாக இருப்பதாகவும் கூறினார்.

தெற்காசிய தொழிலாளர்களில் 80 சதவிகிதம் பேர் விதிமுறைப்படுத்தப்படாத துறையில் இருப்பதாகவும் பெண் தொழிலாளர்களை "பயன்படுத்தாது" இருப்பதாகவும் குறிப்பிட்ட டிம்மர், பொருளாதாரத்தை "விதிமுறைப்படுத்துவதை" அதிகரிக்குமாறு அழைப்பு விடுத்தார். உலக வங்கி, விதிமுறைப்படுத்தாத துறைகளை விதிமுறைப்படுத்தப்பட்ட துறைக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்துவது, அதனால் வரி வருமானம் அதிகரிப்பதாலேயே ஆகும், என அவர் தொடர்ந்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வணிக மற்றும் முதலீட்டு வரி விகிதங்களை மேலும் குறைப்பதற்கான நிலைமைகளை உருவாக்குவதாகும்.

இலங்கையானது பாதுகாப்புவாதத்தைக் குறைக்காவிட்டால், நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகள் இருண்டதாக இருக்கும் என்று டிம்மர் எச்சரித்தார். வரி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் அரசாங்க செலவினங்களைக் குறைத்தல் ஆகியவை உட்பட கட்டமைப்பு மாற்றங்கள் அவசியமாகும், என அவர் கூறினார் - அதாவது, சுகாதாரம் மற்றும் கல்வி மற்றும் கிராமப்புற மானியங்களை மேலும் வெட்டிக் குறைப்பதாகும்.

"அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் ஆளுகை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக" "தனியார் முதலீடு-வர்த்தகதுறை தலைமையிலான வளர்ச்சி மாதிரியை" நடைமுறைப்படுத்துவதன் மூலம் வணிகச் சூழல் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும், என அவர் தெரிவித்தார். இது அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கான நிதியைக் குறைப்பதைக் குறிப்பதுடன் அவற்றை லாபகரமானதாக ஆக்குவதற்கு தனியார்மயப்படுத்தலுக்கு நிர்ப்பந்திப்பதை அர்த்தப்படுத்துகிறது.

டிம்மர் "வேலையில்லாதவர்கள்" அல்லது "பயன்படுத்தப்படாத உழைப்பு" முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்த அதே வேளை, வயதானவர்கள் பொருளாதாரத்திற்கு ஒரு சுமை என்று கூறினார். திறன் மட்டத்தை உயர்த்துவதற்கும், உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், “நீண்ட உழைக்கும் வாழ்க்கையை” ஊக்குவிப்பதற்கும் ஏற்பாடுகள் தேவை என அவர் அழைப்பு விடுத்தார்.

இலங்கை பொருளாதாரம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் சுமையுடன் கடுமையான உள்நாட்டு நெருக்கடியை எதிர்கொண்டு வருவதால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் மற்றும் நாட்டின் வளர்ச்சி விகிதம் பாக்கிஸ்தான் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் மட்டங்களுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவித்தார்.

சமீபத்தில் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, தனது கடன்களை வழங்க தேவையான நிதியை திரட்டத் தவறினால், கிரேக்கத்தின் நிலைமையை இலங்கை எதிர்கொள்ளும் என்று எச்சரித்தார். கொழும்புக்கு, அதன் கடனை செலுத்த 2022 வரை ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது.

ஏப்ரல் மாதம் ஒரு பொதுத் தேர்தலை நடத்துவதன் மூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று தனது ஆட்சியை பலப்படுத்த ஜனாதிபதி ராஜபக்க்ஷ எதிர்பார்க்கிறார்.

ராஜபக்க்ஷ, சில சாதகமான பொருளாதாரச் செய்திகளை உருவாக்கி, தேர்தல் ஆதரவைப் பெற தீவிரமாக முயன்று வரும் நிலையில், அரசாங்கம் அனைத்து அரசாங்க அமைச்சுக்கள், திணைகளங்கள் மற்றும் சட்டரீதியான வாரியங்கள் மற்றும் முகவர் நிறுவனங்களுக்கு ஆரம்ப செலவினக் குறைப்புகளை அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர், டிசம்பர் 3 அன்று, 2019 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாக இருக்கும் என்றும், அரசாங்கம் “நடுத்தர காலப்பகுதியில் பற்றாக்குறை குறைப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாக்குவதை நோக்கிய நிலையான பாதையில் அதன் நடவடிக்கைகளை மறுசீரமைக்க, ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ளும் என்றும் கூறினார். அடுத்த நாள், நிதி அமைச்சு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு, “அனைத்து அத்தியாவசியமற்ற மற்றும் முன்னுரிமை அல்லாத செலவுகள்” ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் குறைக்கப்பட வேண்டும் என்று கூறியது.

முந்தைய அரசாங்கத்தால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு கடனின் கடைசி தவணை அதற்குத் தேவை என்று ராஜபக்க்ஷ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. புதிய ஆட்சி நிதி பற்றாக்குறையை கடுமையாக குறைத்து, அதன் சிக்கன திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெல்வார் என்று ராஜபக்க்ஷ நம்புகையில், தமது வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீதான மேலும் தாக்குதல்களை பொறுத்துக்கொள்ளாத ஒரு போர்க்குணம் கொண்ட தொழிலாள வர்க்கத்தை அவரது அரசாங்கம் விரைவில் எதிர்கொள்ளும்.