ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Millions march in France as strikes against Macron pension cut spread

மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் பரவுகையில், பிரான்சில் மில்லியன் கணக்கானோர் அணிவகுக்கின்றனர்

By Anthony Torres and Alex Lantier
10 January 2020


“குடியரசு சதுக்கத்தில் போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர்"

பிரான்சில் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மற்றும் அவரின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக மாதக் கணக்கில் நீண்டுள்ள போக்குவரத்துத்துறை வேலைநிறுத்தத்திற்கு மத்தியில், நேற்று மில்லியன் கணக்கானோர் வேலைநிறுத்த நடவடிக்கை எடுத்ததுடன் பாரிய போராட்டங்களில் அணிவகுத்தனர். இந்த புத்தாண்டில் தொழிற்சங்கங்கள் அங்கீகரித்துள்ள முதலாவது இந்த தேசிய போராட்ட தினம், பெருவாரியான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியிலும் அதனூடாக அவரின் வெட்டுக்களை முன்னெடுப்பதற்கான மக்ரோனின் நகர்வுக்கு வேலைநிறுத்தக்காரர்கள் மத்தியில் கோபம் அதிகரித்த நிலையிலும் மற்றும் வேலைநிறுத்தத்தில் குறிப்பிடத்தக்களவில் தொழிலாளர்களின் புதிய அடுக்குகளும் இணைந்த நிலையில் இது நடந்தது.

டிசம்பர் 31 இல் அவரின் புத்தாண்டு வாழ்த்துக்கான தொலைக்காட்சி உரையில் ஓய்வூதிய வெட்டுக்களில் எந்த மாற்றமும் அவர் செய்யப் போவதில்லை என்று அறிவுறுத்திய பின்னர், மக்ரோன் அதை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கும் தயாரிப்புக்காக திங்களன்று அந்த வெட்டுக்களை வரைவு சட்டமசோதாவாக அரசு நிர்வாக சபைக்கு (Conseil d'État) அனுப்பினார். இந்த முடிவு, தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே இன்று தொடங்கும் புதிய சுற்று பேச்சுவார்த்தைகளின் பிரயோஜனமற்றத்தன்மையை எடுத்துக்காட்டியது. மக்ரோனுக்கு அவரது வெட்டுக்களில் ஒரு இம்மியளவுக்கும் எந்த மாற்றங்களையும் செய்ய உத்தேசமில்லை. தொழிற்சங்கங்களும் மக்ரோனும் இரண்டு தரப்புமே அவர் மனசாட்சிக்குச் செய்யும் முறையீடுகள் அவரின் போக்கை மாற்றிக் கொள்ளச் செய்யும் என்ற பொய்யான நம்பிக்கைகளுடன் வேலைநிறுத்தக்காரர்களைக் குழுப்புவதற்காக பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தி வருகின்றன.


“பாரீஸ் வெகுஜன போக்குவரத்து தொழிலாளர்கள்: ஓய்வூதிய வெட்டுக்களை நிறுத்து"

மக்ரோனைப் பதவியிலிருந்து கீழிறக்குவதற்குப் பரவி வரும் அழைப்புகளுக்கு மத்தியில், 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் பிரான்சில் இப்போது மிக நீண்ட தொடர்ச்சியான வேலைநிறுத்த நடவடிக்கையாக உள்ள டிசம்பர் 5 இல் தொடங்கப்பட்ட இரயில்வே, வெகுஜன போக்குவரத்து மற்றும் அரசு பள்ளி தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள், துறைமுக தொழிலாளர்கள் மற்றும் ஏர் பிரான்சின் சில குறிப்பிட்ட பணியாளர்களும் இணைந்தனர். மக்ரோனுடன் பேரம்பேசி வரும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, மக்ரோனின் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்குவதற்காக, ஒரு நனவுபூர்வமான போராட்டத்தை தொடுப்பதே இந்த வெட்டுக்களை நிறுத்துவதற்கு இந்த இயக்கத்திற்குள்ள ஒரே வழியாகும்.

துறைமுக தொழிலாளர்கள் மத்தியில் வேலைநிறுத்தத்திற்கு அதிகரித்து வரும் கோரிக்கைகளை முகங்கொடுத்துள்ள துறைமுக தொழிலாளர் சங்கங்கள் அவற்றின் ஆரம்ப வேலைநிறுத்த அழைப்பை ஒரு நாளில் இருந்து மூன்று நாட்களுக்கு நீடிக்க நிர்பந்திக்கப்பட்டன. இறக்குமதிகள் துறைமுக வளாகங்களில் குவிந்து கிடைக்கின்ற நிலையில், பிரெஞ்சு இறையாண்மைக்குட்பட்ட தீவுகளில் (French Antilles) ஏற்கனவே உணவு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. பெருநகர பிரான்சில், இந்த துறைமுக வேலைநிறுத்தமானது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் அதிகரித்து வரும் வேலைநிறுத்த இயக்கத்தை நெருக்கமாக சார்ந்துள்ளது. செவ்வாய்கிழமை சுத்திகரிப்பு ஆலைகள் தனித்தனியாக வேலைநிறுத்தங்களைத் தொடங்கிய பின்னர் மொத்தம் எட்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் ஒரு தேசிய வேலைநிறுத்த இயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

தொழிற்சங்கங்களின் செயலின்மைக்கு மத்தியில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த பிரிவுகள் மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தில் இணைய விரும்புகின்றனர். Poissy இல் உள்ள PSA ஆலையிலிருந்து வாகனத்துறை தொழிலாளர்கள் தனித்தனியாக பாரீஸ் அணிவகுப்பில் இணைந்ததாக செய்திகள் குறிப்பிட்டன, அதேவேளையில் சோர்போன் மற்றும் நாந்தேர் பல்கலைக்கழகங்களை முடக்குவதற்கான அழைப்புகள் பரவி வருகின்றன. வழக்குரைஞர்களின் தொழில்சார் அமைப்பான தேசிய வழக்குரைஞர்களின் கவுன்சிலும் (CNB), அதன் 77,000 உறுப்பினர்கள் வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கையைத் தொடர பெருவாரியாக வாக்களித்திருப்பதாக குறிப்பிட்டது.


“36 நாட்களாக வேலைநிறுத்தத்தில், நாங்கள் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்"

தொழிற்சங்க புள்ளிவிபரங்களின்படி ஆசிரிய பணியாளர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவர்களும் வேலைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், போக்குவரத்துத்துறை வேலைநிறுத்தமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரெஞ்சு தேசிய இரயில்வே நிர்வாகத்தின் (SNCF) தகவல்களின்படி, இரயில் ஓட்டுனர்களில் அறுபத்தி ஏழு சதவீதம் மற்றும் இரயில்வே கட்டுப்பாட்டாளர்களில் 58 சதவீதத்தினர் நேற்று வேலைநிறுத்தத்தில் இருந்தனர், ஓட்டுனர்கள் இல்லாத 1 மற்றும் 14 வழித்தடங்களுக்கு அப்பாற்பட்டு பாரீஸ் மெட்ரோவின் கூட்ட நெரிசலான நேரத்தில் மட்டும் குறைந்தபட்ச சேவைகள் இருந்தன.

இந்த நிலைமைகளின் கீழ், ஒவ்வொரு திருப்பத்திலும் மக்ரோனுடன் ஓர் உடன்படிக்கையை பேரம்பேசும் ஒரு திவாலான தேசியவாத முன்னோக்கை ஊக்குவிப்பதன் மூலமாக போராட்டத்தின் வளர்ச்சியை மெதுவாக்கி தாமதப்படுத்தி வரும் தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து போராட்டத்தை வெளியில் எடுப்பதே தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் முக்கிய கேள்வியாகும். முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாளர்களினது அதிகாரத்திற்கான ஒரு போராட்டத்தின் பாகமாக மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தில் வேலைநிறுத்தக்காரர்கள், “மஞ்சள் சீருடையாளர்கள்" மற்றும் இளைஞர்களை மறுகுழுவாக்கம் செய்து, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களைக் கட்டமைப்பதே முன்னோக்கிய பாதையாகும்.

பிரான்சில் அதிகரித்து வரும் வேலைநிறுத்த இயக்கமானது, புரட்சிகர தாக்கங்களுடன் ஒவ்வொரு கண்டத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கும் வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச மேலெழுச்சியின் பாகமாகும். கடந்தாண்டு அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாரிய வேலைநிறுத்தங்களுக்குப் பின்னர், பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட இட்டுச் சென்ற ஈராக்கில் வெகுஜன போராட்டங்களுக்குப் பின்னர், மற்றும் ஜனவரி 3 இல் ஈரானிய தளபதி காசிம் சுலைமானியைக் கொன்ற ஓர் அமெரிக்க டிரோன் தாக்குதலுக்குப் பின்னர், இந்தியாவில் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். போர் அபாயத்திற்கு எதிராகவும் மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவது மிக முக்கியமானதாகும்.


“ஒவ்வொன்றும் சாத்தியமே [1936 பொது வேலைநிறுத்த கோஷம்] அரசே கொள்ளைக்கூட்டமாக உள்ளது"

தொழிற்சங்கங்கள் வழங்கிய புள்ளிவிபரங்களின்படி, நேற்று, பாரீஸ் எங்கிலுமான நகரங்களில் 1.3 மில்லியன் தொழிலாளர்களும் இளைஞர்களும் அணிவகுத்தனர். 100,000 க்கும் அதிகமானவர்கள் அணிவகுத்த பாரீசில், பொலிஸ் தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் மீது வழக்கு தொடுத்து வருகிறது, 18 பேரைக் கைது செய்துள்ளது மற்றும் கிட்டத்தட்ட நேருக்கு நேராக ஒருவரைத் தாக்கியது உள்ளடங்கலாக போராட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியாக இரப்பர் தோட்டாக்களைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. மார்சைய், லியோன், போர்தோ மற்றும் துலூஸ் உட்பட ஏனைய பிரதான நகரங்களிலும் பத்தாயிரக் கணக்கானவர்கள் அணிவகுத்தனர்.

அடையாள தேசிய போராட்டங்களை நடத்தியவாறு அதே நேரத்தில் மக்ரோனுடன் சிக்கன நடவடிக்கைகளைப் பேரம்பேசும் தொழிற்சங்கங்களினது இந்த முட்டுச்சந்தை, ஒரு புதிய மூலோபாயம் மற்றும் புரட்சிகர முன்னோக்கைக் கொண்டு முறிக்க வேண்டும் என்ற உணர்வு, WSWS உடன் உரையாற்றிய வேலைநிறுத்தக்காரர்களிடையே அதிகரித்து வருகிறது.


கியோம்

தனிநபராக இந்த போராட்டங்களில் இணைய வேலைநிறுத்த நடவடிக்கையில் இணைந்த தனியார் துறையின் தகவல்தொழில்நுட்ப தொழிலாளர் கியோம் கூறுகையில், மக்ரோன் தொழிலாளர்களுக்குச் சாதகமான ஓர் ஓய்வூதிய உடன்படிக்கைக்கு ஒருபோதும் எவ்விதத்திலும் உடன்பட மாட்டார் என்றார்: “முரண்பட்ட வகையில், அது அவர் நலனுக்கானது இல்லை. அவர் தொழிலாளர்களின் நலன்களை அல்ல, பணக்காரர்களின் நலன்களைப் பாதுகாக்கிறார். அவரிடம் எதையும் கோருவது முற்றிலும் கற்பனைக்குரியது என்று நினைக்கிறேன்,” என்றார்.

சுலைமானியை அமெரிக்கா படுகொலை செய்த பின்னர் அதிகரித்து வரும் போர் அபாயம் குறித்தும் கியோம் அவரின் கவலையை வெளிப்படுத்தினார்: “அமெரிக்கர்களால், அல்லது ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் கீழ் பிரான்சினாலும் கூட, சிரியா, மாலி அல்லது ஈராக்கில் அப்பாவி மக்களை அல்லது கட்சியைச் சார்ந்தவர்களையும் படுகொலை செய்வதற்கு எந்த சட்டபூர்வ அடித்தளமும் இல்லை. ஜனநாயக உரிமைகளின் நிலைப்பாட்டிலிருந்து அதை சகித்துக் கொள்ளவே முடியாது.” ஈரானுக்கு எதிராக அமெரிக்க குண்டுவீச்சுக்கள் மற்றும் ஐரோப்பிய அச்சுறுத்தல்களுடன், இந்த அரசியல் அமைப்புமுறை "ஒரு தற்கொலை சுழலில் சிக்கி" உள்ளது என்றவர் எச்சரித்தார்.


முரியேல்

ஒரு மருத்துவமனை தொழிலாளியான முரியேல் கூறுகையில் தொழிற்சங்கங்களுக்கும் மக்ரோனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இருந்து ஏதாவது கிடைக்குமென அவர் எதிர்பார்க்கவில்லை என்றார்: “இது மிகவும் எதேச்சதிகார அரசாங்கமாக உள்ளது, ஆகவே நம் அனைவரின் ஒரு பொதுவான போராட்டம் மட்டுமே மக்ரோனை உண்மையில் பதவியிலிருந்து கீழிறக்குமென நினைக்கிறேன். அவர், அரசு அதிகாரத்தைக் கொண்டு விளையாட முயன்று வருகிறார், அவர் நம்மை அச்சுறுத்த முயன்று வருகிறார். ஆனால் நாம் அனைவரும் ஒருங்கிணைந்தால், நம்மால் ஜெயிக்க முடியும் என்ற உண்மையில் நாம் நனவுபூர்வமாக இருக்க வேண்டும்.”

மருத்துவமனைகளில், “வேலையிட நிலைமைகள் நாசகரமாக உள்ளன, நாங்கள் வறுமை கூலிகளில் வாழ்கிறோம் என்பதுடன், வேலையில் நாங்கள் அனைவரும் பாதிகப்பட்டுள்ளோம். இப்போது இந்த ஓய்வூதிய வெட்டுக்கள் மூலமாக இது மற்றொரு தாக்குதலாக உள்ளது, ஏனென்றால் நாங்கள் இன்னும் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும், இன்னும் குறைந்த ஓய்வூதியங்களைப் பெற வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஏற்கனவே, இன்று கூட, ஓய்வு பெற்ற மருத்துவத்துறை பணியாளர்களின் ஓய்வூதியங்கள் மிகவும் குறைந்து விட்டதால் அவர்களின் இன்றியமையா தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கூடுதல் வேலையாக அவர்கள் திரும்ப மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள்,” என்றவர் தெரிவித்தார்.

பிரான்சிலும் சர்வதேச அளவிலும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் பில்லியனர்களின் சொத்துக்கள் அதிகரிப்பு மீது முரியேல் கூறினார்: “நிறைய பணம் இருக்கிறது, அது எங்கே இருக்கிறதோ அங்கிருந்து அதை நாம் எடுக்க வேண்டியுள்ளது. மக்ரோனின் புத்தாண்டு வாழ்த்துக்களில் அவர் கூறுகையில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க நாங்கள்தான் எல்லா தியாகங்களும் செய்ய வேண்டுமென தெரிவித்தார். ஆனால் பிரான்சின் மிகப்பெரிய 40 நிறுவனங்களின் இலாப அறிக்கைகளை நீங்கள் பார்த்தால், அவை மிகப் பெரும் இலாபங்களை ஈட்டி வருகின்றன. நாங்கள் இப்போது போதுமானளவுக்கு எங்களை நாங்களே வேலைகளில் கொன்று கொண்டிருக்கிறோம்.”


ஜோன்-பிலிப்

உயர்நிலை பள்ளியில் இருந்த போதே 1968 பொது வேலைநிறுத்தத்தில் இணைந்திருந்த ஓய்வு பெற்ற ஜோன்-பிலிப் கூறினார்: “இப்போது, மீண்டும், தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவத் தொடங்கி இருப்பதாக நினைக்கிறேன், அரசாங்கம்-சார்ந்த தொழிற்சங்கங்களில் இருந்து மட்டுமல்ல மாறாக [1968 வேலைநிறுத்தத்தை விற்றுத் தள்ளிய ஸ்ராலினிச சங்கமான] தொழிலாளர்களின் பொது கூட்டமைப்பில் இருந்தே கூட.” “உண்மையில் தொழிற்சங்கங்கள் ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக நினைக்கிறேன். … வெளிப்படையாக கூறுவதானால், நான் ஒருபோதும் தொழிற்சங்கங்களில் இணைந்திருக்கவில்லை, ஏனென்றால் அவர்களிடம் இருந்து நீங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது என்பது எனக்கு தெரியும். அவை அரசியல்வாதிகளைப் போலவே முற்றிலும் ஊழல்பீடித்தவை,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

“மக்ரோன் வங்கிகளினது உத்தரவை மட்டுந்தான் பிரதிநிதித்துவம் செய்கிறார், உண்மையில் நாம் பெருநிறுவன கட்டுப்பாட்டிலான அரசியல் ஸ்திரமற்ற குடியரசில் (banana republic) உள்ளோம் இதில் ஊழல் மட்டம் நம்ப முடியாதளவில் உள்ளது. … அவரினது ஒட்டுமொத்த அரசாங்கமும் பொலிஸ் வன்முறை என்ற ஒரு நூலிழையில் தொங்கி கொண்டிருக்கிறது. அதிகாரத்தில் தங்கியிருப்பதற்கு எந்த வழியும் இல்லையென அவர்கள் காண்கிறார்கள்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் பெருவாரியான மக்கள் எதிர்ப்புக்கு முன்னால் மக்ரோன் அந்த வெட்டுக்களைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால், அதன் விளைவு ஒரு சமூக வெடிப்பாக இருக்கும் என்றவர் கருதுவதாக ஜோன்-பிலிப் சேர்த்துக் கொண்டார். “அது நிறைவேறாது என்றே நான் நம்புகிறேன்,” என்றார். “இப்போதைக்குப் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கவில்லை, ஆனால் பொலிஸ் தொடர்ந்து இதே போன்று நடந்து கொண்டால், விடயங்கள் மோசமாக போய் முடியும். நாங்கள் போராடுவதற்குப் போகும் ஒவ்வொரு முறையும், ஒன்றுக்கும் உபயோகமற்ற இவர்களால் தாக்கப்படுகிறோம். நான் 1968 ஐ கண்டவன் என்பதால் நான் ஒருபோதும் அமைதிவாதத்தை நம்புவதில்லை,” என்றார்.