ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Hundreds of thousands protest pension cuts in France

பிரான்சில் நூறாயிரக் கணக்கானவர்கள் ஓய்வூதிய வெட்டுக்களை எதிர்க்கின்றனர்

By Alex Lantier
17 January 2020


பாரீஸ் போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர்

வியாழக்கிழமை, அரை மில்லியனுக்கும் அதிகமான பிரெஞ்சு வேலைநிறுத்தக்காரர்களும் இளைஞர்களும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக 43 ஆம் நாளாக வேலைநிறுத்தங்களில் அணிவகுத்தனர். சட்டமசோதாவின் வரிகளில் இருந்து ஓய்வு பெறும் வயதின் திட்டமிடப்பட்ட இரண்டாண்டு அதிகரிப்பு "தற்காலிகமாக" திரும்பப் பெறப்படும் என்ற பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப்பின் இவ்வாரயிறுதியில் அறிவித்திருந்தாலும், அதை மறுதிருத்தம் செய்யவும் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நான்கு மாதகால பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அந்த சட்டமசோதாவைத் திரும்ப கொண்டு வரவும் அவர் உத்தேசிக்கின்ற நிலையில், வேலைநிறுத்தக்காரர்கள் அதை நிராகரித்தனர்.

தொழிற்சங்கங்களின் தகவல்படி, பாரீசில் 150,000 பேர், மார்சைய், துலூஸ், போர்த்தோ மற்றும் நான்ந் உள்ளடங்கிய நகரங்களில் பத்தாயிரக் கணக்கானோர் உட்பட பிரான்ஸ் எங்கிலும் 550,000 பேர் அணிவகுத்தனர். துலூஸில், ஆர்ப்பாட்டக்காரர்கள் "இமானுவல் முடாங், பணக்காரர்களின் மேயர்" என்று குறிப்பிடும் பதாகை ஏந்தியும், “மஞ்சள் சீருடை" பாடல்கள் பாடியும் வலதுசாரி நகரசபை தலைவர் ஜோன்-லூக் முடாங் (Jean-Luc Moudenc) நடத்திய ஒரு நிகழ்வில் இடையூறு செய்தனர்.


பாரீசில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு பகுதியினர்

தொழிலாளர்கள் மத்தியில், அங்கே மக்ரோனுக்கு எதிர்ப்பும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவும் அதிகரித்து வருகிறது. இரயில்வே மற்றும் பொது போக்குவரத்து வேலைநிறுத்தங்கள் நீண்டு கொண்டே செல்கின்ற நிலையில், மக்கள்தொகையில் 57 சதவீதத்தினர் வேலைநிறுத்தத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் என்றாலும் கூட, 66 சதவீதத்தினர் இன்னமும் வேலைநிறுத்தத்தை "நியாயமானதாக" கருதுகிறார்கள் என்று பிரான்ஸ்-இன்போ மற்றும் வலதுசாரி நாளிதழ் Le Figaro க்கான Odoxa கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. அனைத்திற்கும் மேலாக, பிலிப்பின் இவ்வாரயிறுதி அறிவிப்பு "மிகவும் தாமதமாக வந்துள்ள அரைகுறை நடவடிக்கை" என்பதில் உடன்படுவதாக 67 சதவீதத்தினர் Odoxa க்குத் தெரிவித்தனர்.

சாத்தியமான செலவின வெட்டுக்களைக் கண்டறிவதற்காக தொழிற்சங்கங்களுடனான பிலிப்பின் முன்மொழியப்பட்ட பேச்சுவார்த்தைகள் போன்றவை தொழிலாளர்களுக்கு ஒரு முட்டுச்சந்து என்பதை மட்டுமே அடிக்கோடிடுகின்றன. மக்ரோனுடன் பேரம்பேசுவதற்கு அங்கே ஒன்றும் இல்லை. மக்ரோனைப் பதவியிலிருந்து கீழிறக்கும் போராட்டத்தில் தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளை நடவடிக்கை குழுக்களில் அணித்திரட்டி, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைப்பதே முன்னே உள்ள வழியாக உள்ளது.

பாரீசில் போராடி வரும் ஒரு பள்ளி ஆசிரியை மா WSWS க்கு தெரிவித்தார்: “ஓய்வூதிய வெட்டுக்கள் நடைமுறைப்படுத்தக் கூடாதென நாங்கள் கோருகிறோம். ஓய்வூதிய வயது சம்பந்தமான அவரின் அறிவிப்பு குறித்து பிலிப் யாருக்கு வேண்டுமானாலும் அவர் விரும்புவது என்ன வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும், எங்களுக்கு சுத்தமாக கவலையில்லை.” “முன்நிகழ்ந்திராதது என்னவென்றால், இந்த வேலைநிறுத்தம் வேலைநிறுத்தக்காரர்களுக்கு சொந்தமானது. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி உள்ளனர். ஆகவே தொழிற்சங்க தலைமைகள் அவர்கள் விரும்பியவாறு என்ன வேண்டுமானாலும் பேரம்பேசிக் கொள்ளட்டும். நாங்கள் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.


இது ஓய்வூதிய சீர்திருத்தம் அல்ல... இது ஆயுதமுனையிலான கொள்ளை

மக்ரோனின் வெட்டுக்களால் அவரின் ஓய்வூதியம் மாதத்திற்கு 1,036 யூரோ அளவுக்குக் குறையும் என்பதையும் எமா சேர்த்துக் கொண்டார்: அவர் மூன்று குழந்தைகளைக் கொண்ட ஓர் ஆசிரியை ஆவார், குறிப்பாக ஆசிரியர்களின் ஓய்வூதியத் திட்டங்கள் மீதான தாக்குதல்களைத் தவிர, மக்ரோனின் சீர்திருத்தம் மகப்பேறுடன் இணைக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளையும் குறைக்கிறது. அவர் கூறினார்: "ஊடகங்கள் இந்த சீர்திருத்தத்தைப் பெண்களுக்கு சார்பான சீர்திருத்தம் என்ற நிலைப்பாட்டை பரப்புகின்றன என்றாலும், இதில் பெண்கள் அநீதியாக தாக்கப்படுகிறார்கள், குழந்தை பிறப்பால் அவர்களின் தொழில்வாழ்வு தடுக்கப்படுகின்றன என்றாலும் கூட ஊடகங்களைப் பொறுத்த வரையில் விடயங்கள் அவர்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்,” என்றார்.

பாரீசின் பொதுப் போக்குவரத்தில் பணியாற்றும் சில்வி கூறுகையில், மக்ரோனின் ஓய்வூதிய வெட்டு "ஒவ்வொருவருக்கும் மோசமானது. அதுவொரு சூழ்ச்சி. பிரெஞ்சு மக்களிடம் இருந்து அவர்கள் எவ்வளவு எடுப்பார்கள் என்பதை அவர்களால் கூற முடியாது... ஆனால் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற வெட்டுக்களை நாம் பார்க்கிறோம். எங்கள் ஓய்வூதியங்களில் இருபதில் இருந்து முப்பது சதவீதம் அல்லது அதற்கு கூடுதலாகவும் வெட்டுவது, நல்லதா? யார் குறைவாக —வெகு, வெகு குறைவாக— சம்பாதிக்க விரும்புவார்கள்? அவர்கள் மக்களை வறுமைப்படுத்த நோக்கம் கொண்டுள்ளனர்,” என்றார்.


சில்வி

பிலிப்பின் நான்கு மாதகால கலந்துரையாடலில் மக்ரோனுடன் பேரம்பேசும் தொழிற்சங்கங்களை அவர் நம்பவில்லை என்பதை சில்வி வலியுறுத்தினார்: “அவர்கள் மக்களுக்காக இல்லை, அவர்களுக்காகவே பேரம்பேசி வருகிறார்கள். இதைத்தான் என்னால் கூற முடியும். அவர்கள் பாரீசின் பொது போக்குவரத்து (RATP) தொழிலாளர்களுக்காக அல்ல, அவர்களுக்காகவே பேரம்பேசி வருகிறார்கள்... ஊடகங்கள் எங்களைக் கண்டிக்கின்றன, ஆனால் மக்களை வறுமைப்படுத்தும் மற்றும் ஒவ்வொருவரையும் பாதிக்கும் ஓர் ஓய்வூதிய சீர்திருத்தத்தைத் திணிப்பதற்காகவே அவை செய்கின்றன,” என்றார்.

பிரெஞ்சு தொழிற்சங்க அதிகாரத்துவத்தை அவமதித்து தொழிலாள வர்க்கத்தினது போர்குணமிக்க இயக்கத்தின் எழுச்சியானது, உலகெங்கிலும் வர்க்க உறவுகளை நிலைமாற்றி வெடிப்பார்ந்த சர்வதேச வர்க்க போராட்ட மீளெழுச்சியைப் பிரதிபலிக்கிறது. சமீபத்திய மாதங்கள் பத்து மில்லியன் கணக்கான இந்திய தொழிலாளர்களின், அமெரிக்க வாகனத் தொழில்துறை மற்றும் ஆசிரியர்களின், போலாந்து ஆசிரியர்களின் பாரிய வேலைநிறுத்தங்களையும், மற்றும் ஐரோப்பாவில் செக் குடியரசில் இருந்து மத்திய கிழக்கில் ஈராக், லெபனான் மற்றும் அல்ஜீரியா வரையில், இலத்தீர் அமெரிக்காவில் பொலிவியா, சிலி மற்றும் ஈக்வடோர் வரையில் டஜன் கணக்கான நாடுகளில் வெகுஜன போராட்டங்களையும் கண்டுள்ளன.

ஜனவரி 3 இல் பாக்தாத்தில் ஈரானிய தளபதி காசிம் சுலைமானி மீதான வாஷிங்டனின் டிரோன் படுகொலையில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, முதலாளித்துவ வர்க்கம், குற்றத்திற்குள்ளும் இராணுவவாதத்திற்குள்ளும் சரிகின்ற நிலையில், சர்வதேச வர்க்க போராட்டத்தின் இந்த மேலெழுச்சி கட்டவிழ்கிறது. சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக அவமதித்து நடத்தப்பட்ட இந்த படுகொலை மத்திய கிழக்கில் பிரதான சக்திகளுக்கு இடையே முற்றுமுழுதான போர் அபாயத்தை அம்பலப்படுத்தியது.

பிரான்சின் "பணக்காரர்களின் ஜனாதிபதிக்கு" எதிரான வேலைநிறுத்தம் தொடர்கின்ற நிலையில், இந்த போராட்டமானது இறுதியில் நிதியியல் பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான சர்வதேச, புரட்சிகர நடவடிக்கை மூலமாக மட்டுமே தீர்க்கக்கூடிய இன்னும் பரந்த பிரச்சினைகளை உயர்த்துகிறது.


ஜூல்

பாரீசின் உயர்நிலைப்பள்ளி மாணவன் ஜூல் WSWS க்குக் கூறுகையில், “வரவிருக்கும் ஆண்டுகளில் போர் அபாயம் குறித்து உயர்நிலை பள்ளி மாணவர்களிடையே பெரும் கவலை நிலவுகிறது. சில குறிப்பிட்ட நபர்கள் ஈரானிய இராணுவம் மீது குண்டுவீச தொடங்கும் போது … பின்னர் அது அதற்குமேல் ஒரு பினாமி போராக கூட இருக்காது, அமெரிக்காவும் ஈரானும் போருக்கு அருகில் உள்ளன, அல்லது குறைந்தபட்சம் வன்முறையான ஆயுத மோதலில் உள்ளன. கடந்த சில தசாப்தங்களில் ஐரோப்பாவில் நமக்கு இருந்த அமைதி எதிர்காலத்தில் இருக்குமா என்பது பெரும் கவலையாக உள்ளது,” என்றார்.

ஜூல், போர் அபாயத்தை உள்நாட்டில் தொழிலாளர்களுக்கு எதிரான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான உள்நாட்டு ஒடுக்குமுறையுடன் தொடர்புபடுத்தினார். அவர் கூறினார், “ஓய்வூதியங்களைத் தாக்கிய பின்னர், மக்ரோன் பொது மருத்துவக் கவனிப்பு மற்றும் பல்கலைக்கழகங்களைத் தாக்குவார்… அவர் BlackRock இன் தலைவருக்கு மதிப்பார்ந்த கௌரவ விருது வழங்கியுள்ளார் என்பதால், அவர் BlackRock உடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளார்,” என்றார். BlackRock நிறுவனம், 2017 இல் மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் ஓய்வூதிய வெட்டுகள் குறித்து அவருடன் விவாதித்த 6 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான உலகளாவிய சொத்து நிர்வாக நிறுவனமாகும்.


அட்ரியான்

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மூன்று நாட்களாக வேலைநிறுத்தத்தில் உள்ள Grandpuits எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன தொழிலாளி அட்ரியான் (Adrien) ஐயும் நேர்காணல் செய்தது. பிரெஞ்சு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள் சாத்தியமான ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தம் குறித்து விவாதித்து வருகிறார்கள், இது 2010 இல் விரைவிலேயே தேசியளவில் எண்ணெய் பற்றாக்குறைக்கும் அரசுடன் ஒரு நேரடி மோதலுக்கும் இட்டுச் சென்றது. தொழிற்சங்கங்களால் தனிமைப்படுத்தப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்புத்துறை தொழிலாளர்கள் 2010 இல் வேலைக்குத் திரும்ப நிர்பந்திக்கப்பட்டார்கள்.

அட்ரியான் கூறினார், 2010 இல் "நாங்கள் காலை 5 மணி பணிமுறைக்கு வந்த போது, எங்கள் வேலையிடத்தின் முன்னால் 17 ட்ரக்களில் கலகம் ஒடுக்கும் பொலிஸ் இருப்பதைப் பார்த்தோம். நாங்கள் வேலைக்குத் திரும்பவில்லை என்றால் மூன்றாண்டு கால சிறைத்தண்டனை மற்றும் 45,000 யூரோ அபராதத்தைக் கொண்டு அச்சுறுத்தி, எங்கள் ஒவ்வொருவரின் பெயருக்கும் பொலிஸ் உயரதிகாரிகளின் கட்டளைக் கடிதத்துடன் அவர்கள் வந்திருந்தார்கள். ஐ.நா. சர்வதேச தொழிலாளர் அமைப்பு பின்னர் அந்த நிர்வாகத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக, அது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது: இன்றியமையா பொதுச் சேவை வினியோகங்களைத் தவிர ஒரு தனியார் நிறுவனத்திற்காக அவர்கள் கட்டளை கடிதம் அனுப்ப முடியாது … அது முற்றிலும் சட்டவிரோதமானது, அது வேலைநிறுத்தம் மற்றும் ஜனநாயகத்திற்கான எங்களின் அரசியலமைப்பு உரிமையை மீறியது.”

நாடுதழுவிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தத்திற்கு எதிராக மக்ரோன் என்ன செய்யக்கூடும் என்று தொழிலாளர்கள் இன்று விவாதிக்கின்றனர். அட்ரியான் கூறினார், “இந்த அரசாங்கமும் அதற்குப் பின்னால் இருக்கும் முதலாளிமார்களும் ஒரேயொரு விடயத்திற்காக கனவு காண்கிறார்கள்: பிரான்சில் வேலைநிறுத்த உரிமையைச் சட்டவிரோதமாக்குவது. அவர்கள் எங்களுக்கு உத்தரவாணைகளை, சட்டவிரோத உத்தரவாணைகளை கூட, பிறப்பிக்க தயங்க மாட்டார்கள். அவர்கள் எங்களுக்கு கட்டளையிட முயல்வார்கள்; நாங்கள் வேலைநிறுத்தத்திற்கான எங்களின் உரிமைக்காக போராடுவோம்.”


ஏழைகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடும் போது …

வர்க்க மோதலின் இந்த அனுபவம், வேலைநிறுத்தக்காரர்களைப் பாதுகாக்க தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளை அணித்திரட்டுவதற்காக, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான அமைப்புகளாக நடவடிக்கை குழுக்களைக் கட்டமைக்க வேண்டிய அவசியத்தை அடிக்கோடிடுகிறது. இது, வங்கிகள் மற்றும் பொலிஸ்-அரசு எந்திரத்தின் கட்டளைகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தை உள்ளடக்கி உள்ளதுடன், முக்கிய அரசியல் கேள்விகளை —அனைத்திற்கும் மேலாக புரட்சிகர முன்னோக்கு மற்றும் தலைமை சம்பந்தமான கேள்விகளை எழுப்புகிறது.


“ஏவா"

பாரீசில் மக்ரோனுக்கு எதிராகவும் மற்றும் குறைந்த கல்வி உதவித்தொகையின் காரணமாக மாணவர்களின் படுமோசமான வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராகவும் போராடி வரும் ஒரு மாணவி ஏவா கூறுகையில், மக்ரோனைப் பதவியிலிருந்து கீழிறக்குவதை அவர் "திட்டவட்டமாக" ஆதரிப்பதாக தெரிவித்தார்: “நான் ஒருபோதும் மக்ரோனை ஆதரிக்கவில்லை, ஒருபோதும் ஆதரிக்கவும் மாட்டேன்,” என்றார். ஆனால் "அவரது இடத்தை எடுக்க நான் ஆதரிப்பதற்கு யாருமே இல்லை என்பதை பார்க்கிறேன்: கடந்தாண்டுகள் மற்றும் தசாப்தங்களில் எப்போதையும் போலவே, முதலாளித்துவத்திற்குச் சேவையாற்றுவதற்காக அதிகாரத்தை விரும்பும் அரசியல்வாதிகளை மட்டுமே நாம் கொண்டிருக்கிறோம். நாம் நிதித்துறையால் ஆளப்படுகிறோம்,” என்றார்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக தொழிலாளர்களால் நனவுபூர்வமாக முன்னெடுக்கப்படும் ஒரு வேலைநிறுத்தம் எழுவதால் அரசியல் நிலைமை வேகமாக மாறி வருகிறது. இரயில் போக்குவரத்து, பொது போக்குவரத்து மற்றும் கல்வித்துறையில் வேலைநிறுத்த பங்கெடுப்பாளர்கள் விகிதம் குறைந்து வருகிறது என்றாலும் —வாரக் கணக்கிலான வேலைநிறுத்தங்களுக்குப் பின்னர் நிதி தீர்ந்து போனதால், தொழிலாளர்கள் சிறிது பணம் சம்பாதிப்பதற்காக தற்காலிகமாக பகுதி நேர வேலைக்குத் திரும்பி வருகிறார்கள் அல்லது கால இடைவெளியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில்— தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயப்படல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் முகவர்களிடம் இருந்து தொழிலாளர்களைப் பிரிக்கும் வர்க்க இடைவெளி முன்பினும் அதிக வெளிப்படையாக உள்ளது.

இந்த உள்ளடக்கத்தில் தான், பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste), நிதியியல் பிரபுத்துவத்தைப் பறிமுதல் செய்யவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும், மற்றும் திவாலான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு மாற்றீடாக ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டமைக்கவும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச, புரட்சிகர போராட்டத்திற்கான முன்னோக்கை முன்னெடுத்து வருகிறது.