ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Telangana Road Transport workers face harassment, contract-rollbacks after union surrender

தொழிற்சங்க சரணடைவிற்குப் பின்னர், தெலுங்கானா சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் துன்புறுத்தலையும், ஒப்பந்த-பின்னடைவுகளையும் எதிர்கொள்கின்றனர்

By Kranti Kumara
27 December 2019

தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழக (Telangana State Road Transport Corporation - TSRTC) தொழிலாளர்கள், அரசுக்கு சொந்தமான TSRTC இன் தனியார்மயமாக்கத்தையும், மற்றும் கடுமையான வேலை நிலைமைகளையும் எதிர்த்து போராடிய 52 நாட்கள் நீடித்த ஒரு கசப்பான வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் நவம்பர் 29 அன்று வேலைக்குத் திரும்பினர். அவர்கள் தற்போது நிர்வாக துன்புறுத்தலையும், மேலும் அவர்களது வேலை விதிமுறைகளில் பழமையான பிற்போக்குத்தனமான மாற்றங்களையும் எதிர்கொள்கின்றனர். இது, எந்தவொரு சுயாதீன தொழிலாளர் அமைப்பிலும் பங்கேற்பதை கைவிடுமாறு கிட்டத்தட்ட 50,000 தொழிலாளர்களை கட்டாயப்படுத்தும் பிரச்சாரத்தையும், மேலும் அதற்கு மாறாக போலியான, அரசு அனுமதி பெற்ற “தொழிலாளர் நல குழுக்கள்” மூலம் நிர்வாகத்துடன் அவர்களை “கூட்டாளி” ஆக்குவதையும் உள்ளடக்கியது.

இந்த விவகாரத்தில், TSRTC நிர்வாகம், ஒட்டுமொத்த கசப்பான மோதலை எதிர்கொள்கின்ற நிலையில், அது தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவிற்கும் (பொதுவாக KCR என்றறியப்படுபவர்) மற்றும் தெலுங்கானா இராஷ்டிர சமிதி (Telangana Rashtra Samithi - TRS) மாநில அரசாங்கத்திற்கும் கட்டுப்பட்டே செயல்படுகிறது. அனைத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்திற்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் அத்தியாவசியமான போக்குவரத்து சாதனமாக இருக்கும் இந்த பேருந்து நிறுவனத்தை தனியார்மயமாக்க KCR உறுதிபூண்டுள்ளார்.

நிர்வாகம் தான் தயாரித்த ஒரு மனுவில் TSRTC தொழிலாளர்களை கையெழுத்திடும் படி அழுத்தம் கொடுக்கின்றது, ஆனால் அது சாமான்ய தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை போல உருவாக்கப்பட்டுள்ளது. TSRTC தொழிலாளர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் வேறுபட்ட தொழிற்சங்கங்களுக்கு அனுப்பப்பட்ட அந்த மனு இவ்வாறு தெரிவிக்கிறது: 

“நாங்கள் பணிமனையில் வேறுபட்ட பதவிகளில் பணியாற்றுகிறோம் என்பதுடன், இது எங்களது பிரச்சினைகளை விரைவாக தீர்ப்பதற்கு தொழிலாளர்கள் நலக் குழு ஒன்றை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் தெரிவிப்பதற்காகத் தான். இது எங்களுக்காக வேலை செய்யும் என்று நாங்கள் நம்புகின்றோம், எனவே தயவுசெய்து குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு தொழிற்சங்கத் தேர்தல்களை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறான வளர்ச்சி, தீவிரமிக்க தனியார்மயமாக்கல் எதிர்ப்பு போராட்டம் பற்றிய TSRTC தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (Joint Action Committee-JAC) இழிவான காட்டிக் கொடுப்பைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. தொழிலாளர்களின் குறைகள் எதுவும் நிவர்த்தி செய்யப்படவில்லை என்றாலும், நவம்பர் 25 அன்று, மறுநாள் முதல் அவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டுமென JAC தலைவர்கள் உத்தரவிட்டனர்.

இருப்பினும், TSRTC பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், இயந்திர வல்லுநர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் நவம்பர் 26 அன்று தங்களது வேலைகளுக்குத் திரும்ப முயற்சித்த போது, அவர்கள் பணிக்குத் திரும்புவதைத் தடுக்க KCR தலைமையிலான மாநில அரசாங்கத்தால் வெளிப்படையாக நிலைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் படைப் பிரிவினரை அவர்கள் எதிர்கொண்டனர். அப்போது, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலைகளுக்குத் திரும்ப முயற்சித்த காரணத்திற்காக மட்டுமே கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கை, தொழிலாளர்களை அவர்களது வேலை பற்றிய பயத்துடன் தொடர்ந்து இருக்கச் செய்யவும், மேலும் அவர்களுடைய வாழ்க்கை மீதான TRS அரசாங்கத்தின் ஆதிக்கத்தை நிரூபிக்கவும் திட்டமிட்டே எடுக்கப்பட்டது.

தனது எதேச்சதிகார கட்டளைகளை மீறியதற்காக, TSRTC தொழிலாளர்கள் தாமே “சுயமாக விலகிக் கொண்டனர்” என்று மீண்டும் மீண்டும் தெலுங்கானா முதலமைச்சர் அறிவித்தார். ஏனென்றால், முதலாவதாக அக்டோபர் 5 அன்று வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டு ஒருசில மணி நேரங்களுக்குள் அவர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்ற அவரது உத்தரவை அவர்கள் மீறியதும், பின்னர் தொடர்ந்து நவம்பர் 5 அன்று அவர்கள் வேலைக்கு திரும்புவது குறித்து இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அவர்கள் புறக்கணித்ததும் தான் அதற்கான காரணமாகும்.

தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவதை இரண்டு நாட்கள் தடுத்த பின்னர், தெலுங்கானா முதலமைச்சர் தன்னை தயாள குணம் மிக்க அவர்களது உபகாரியாக காட்டிக் கொண்டார். நவம்பர் 29 அன்று, அனைத்து தொழிலாளர்களும் “நாளை மகிழ்ச்சியுடன் வேலைக்குத் திரும்பலாம்,” என்று அவர் அறிவித்ததுடன், டிசம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை அன்று ஐந்து தொழிலாளர்கள் கொண்ட ஒரு பிரதிநிதித்துவக் குழுவை தனது இல்லத்தில் சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

TSRTC வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்களை “தவறாக வழிநடத்துவதாக” தொழிற்சங்க தலைவர்களை குற்றம்சாட்டி, “ஊழியர்களை நாங்கள் கவனித்துக் கொள்வோம், ஆனால் தொழிற்சங்க தலைவர்களை அல்ல” என்று கூறினார். உண்மையில், KCR மற்றும் அவரது TRS உடன் நெருங்கிய உறவுகளை பேணி வந்த தொழிற்சங்கங்களை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்குமாறு TSRTC தொழிலாளர்கள் நிர்ப்பந்தித்தது குறித்த கடுமையான கோபமாகவே அது இருந்தது.

தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் பங்கேற்பதை கைவிட்டு, அதற்கு மாறாக அரசு அனுமதி பெற்ற “தொழிலாளர் குழுவில்” சேரும் படி KCR பின்னர் அழைப்பு விடுத்தார். “ஒரு மூத்த அமைச்சரின் பொறுப்பில் ‘தொழிலாளர்கள் நல குழு’ ஒன்றை நாங்கள் அமைப்போம்,” என்று தெலுங்கானாவின் எதேச்சதிகார முதலமைச்சர் அறிவித்தார். மேலும், “நாங்கள் ஒரு குறிப்பிட்ட தேதியை நிர்ணயித்து மாதத்திற்கு ஒரு முறை கூட்டத்திற்கு அழைப்போம்” என்றும் கூறினார்.

டிசம்பர் 1 அன்று, அரசாங்கம் அவருக்கு வழங்கியுள்ள அரண்மனை போன்ற அவரது இல்லத்தில் நடந்த கூட்டத்தின் போது, பல்வேறு “சலுகைகளை” வழங்குவதன் மூலம் தொழிலாளர்களை ஏமாற்ற KCR முயன்றார். முன்னர் நிறுத்தி வைக்கும் படி தான் உத்தரவிட்டிருந்த தொழிலாளர்களின் செப்டம்பர் மாத ஊதியத்திற்கான காசோலையை அவர் விடுவித்தார், மேலும் (இந்தியாவில் உள்ள ஒரு பொதுவான நடைமுறையாக) அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த காலத்திற்கும் ஊதியம் வழங்கப்படும் என்றும் கூறினார், மேலும் வேலைநிறுத்தத்தின் போது தங்களது வேலை நிலைமைகள் மற்றும் எதிர்காலம் குறித்த மன உழைச்சல் ஆகியவற்றால் தற்கொலை செய்து கொண்ட அல்லது மாரடைப்பால் காலமான 30 வேலைநிறுத்தக்காரர்களின் குடும்பங்களுக்கு குடும்பத்திற்கு ஒருவர் வீதம் கட்டாயம் வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த “தாராள மனப்பான்மைக்கு” ஈடாக, அவர்களை ஆதரித்து நடத்துவது போன்ற மனநிலையை எடுத்துக்கொண்ட அந்த  எதேச்சதிகாரியான KCR, தொழிலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்: “நான் உங்களிடம் விரும்புவது உங்களது கடின உழைப்பு மட்டும் தான். உங்களது தேவையை என்னிடம் விட்டுவிடுங்கள். உங்களது வேலையை உண்மையாக செய்து TSRTC க்கு மீண்டும் இலாபம் ஈட்டித் தாருங்கள்.”

மேலும், “கவனித்துக் கொள்வதாக” அவர் கூறும் தொழிலாளர்களிடம் கலந்தாலோசிக்காமலேயே, ஓய்வு பெறும் வயது 58 இல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

நிர்வாகத்தின் “தொழிலாளர்கள் நல குழு” தொடர்பான மனுவில் கையெழுத்திட எழுபது சதவிகித தொழிலாளர்கள் முன்வர வில்லை என்று கூறப்படுகிறது. என்றாலும், நிர்வாகம் மற்றும் அரசாங்கத்திலிருந்து சுயமாக செயல்படும்  எந்தவொரு அமைப்பிலும் தொழிலாளர்கள் அங்கம் வகிப்பதை கைவிட வேண்டுமென அவர்களுக்கு TSRTC தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

நிறுவனத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசாங்கம் குறைப்பதற்கான காரணமாகவுள்ள TSRTC இன் நஷ்டங்களை ஒரேயடியான கட்டண அதிகரிப்பினால் மீட்டெடுக்க வேண்டும் என்றும் KCR அறிவித்தார். அது நீண்ட நாட்களாக செயல்படுத்தப்படவில்லை. எனவே, குறுகிய தூர பயணத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் என்பது ரூ.5 (7 அமெரிக்க சென்ட்கள்) இல் இருந்து ரூ.10 ஆக இருமடங்காக்கப்படவுள்ளது. அனைத்து வகை கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என்பதானது, ஏற்கனவே வறிய நிலையிலுள்ள மக்கள் மீது மேலும் கடுமையான சுமையையே ஏற்படுத்துகிறது.

காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசக் கட்சியில் ஒரு சமயம் அரசியல்வாதியாக இருந்த KCR, தற்போதைய நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் தனி தெலுங்கானா மாநிலத்திற்கான திட்டத்தை முன்னெடுத்து அரசியல் முக்கியத்துவம் பெற குறிவைத்தார். ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா பிரித்தெடுக்கப்பட்டு, 2014 இல் அது ஒரு தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது, அது தேர்தல் ஆதாயத்தை வழங்கும் என கருதி, இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அப்போதைய அரசாங்கத்தின் ஆதரவுடன் அது வழங்கப்பட்டது.

தனி தெலுங்கானா மாநிலத்திற்காக பல ஆண்டுகள் நீடித்த போராட்டத்தின் போது, இப்பகுதி ஒரு தனி மாநிலமாக உருவெடுத்தால், தெலுங்கானாவில் நிலவும் பரவலான பொருளாதார பின்னடைவும், பற்றாக்குறையும் சமாளிக்கப்படும் என்று KCR கூறினார். வாய்சவடாலைப் பயன்படுத்தியும், மற்றும் இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CPI), பல உள்ளூர் தொழிற்சங்கங்கள், மற்றும் பிற இடது “சக்திகள்” ஆகியவற்றின் ஆதரவுடனும், பரவலான சமூக பொருளாதார குறைகளை குறித்து பேசி, தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் பரந்த பிரிவுகளின் ஆதரவை KCR ஆல் பெற முடிந்தது.

KCR க்கு ஆதரவளித்த பல தொழிலாளர்கள் கசப்பான கோபத்தை வெளிப்படுத்துவதுடன் காட்டிக் கொடுப்பை உணர்ந்த நிலையில், TSRTC வேலைநிறுத்தக்காரர் ஒருவர், முதலமைச்சரை ஒரு சர்வாதிகாரி என்று கடுமையாக கண்டித்து அவருக்கு அனுப்பிய ஒரு கடிதத்தை வெளியிட்டார். அவரது கடிதம் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“[தனி மாநிலத்திற்கான போராட்ட சமயத்தில்] 1,200 பேர் இறந்தபோது, KCR ஐ ஒரு மீட்பர் என்றும், ஆந்திராவைச் சேர்ந்த தலைவர்கள் தான் எங்களை ஏமாற்றி விட்டனர் என்றும் நான் நினைத்தேன். ஆனால், எங்களது 30 தொழிலாளர்களின் தற்கொலைக்கு நீங்கள் பதிலளிக்கத் தவறியபோது, தெலுங்கானா அடையப்பட்டது எங்களுக்காக அல்ல, மாறாக உங்களைப் போன்ற தலைவர்களின் ஆதாயத்திற்காகத்தான் என்பதை நான் உணர்ந்தேன். என் சகோதரிகள் மிருகத்தனமாக தடியடியால் தாக்கப் படுவார்கள் (பொலிஸ் தடியடி) என்று ஒருபோதும் நான் நினைத்துப் பார்த்ததில்லை, ஆனால் உங்களது பொன்னான தெலுங்கானாவில் அது உண்மையில் நடந்தேறிவிட்டது.” [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது]

TSRTC தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தெலுங்கானாவிலும் மற்றும் இந்தியா எங்கிலுமான தொழிலாளர்களின் மத்தியில் பரவலான அனுதாபமும் ஆதரவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்தம் கடுமையான தோல்வியில் முடிவடைந்தது என்றால், அதற்கு காரணம் JAC, CPI மற்றும் அதன் சகோதரத்துவ ஸ்ராலினிசக் கட்சி, மற்றும் அவர்களது தொழிற்சங்க இணை நிறுவனங்களான AITUC மற்றும் CITU ஆகியவை TSRTC தொழிலாளர்களின் போராட்டத்தை முறையாக தனிமைப்படுத்தியது தான். பொது சேவைகளை நீக்குவது, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, மற்றும் ஒப்பந்த தொழிலாளர் முறையை மேலும் விஸ்தரிப்பது ஆகியவை குறித்த ஆளும் உயரடுக்கின் உந்துதலுக்கு எதிராக, தெலுங்கானா மற்றும் இந்தியா எங்கிலுமுள்ள தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கான ஒரு பரந்த போராட்டத்திற்கான தாக்குமுகப்பாக இந்த வேலைநிறுத்தத்தை உருவாக்குவதற்கு மாறாக, தொழிற்சங்கங்களும், ஸ்ராலினிஸ்டுகளும், தெலுங்கானா உயர் நீதிமன்றங்களிடம், அதிலும் இந்தியாவின் தீவிர வலதுசாரி, பிஜேபி அரசாங்கத்திடம் ஆதரவைக் கோருமாறு தொழிலாளர்களை வலியுறுத்தினர்.

ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:

After union surrenders, Telangana mobilizes police to bar “fired” TSRTC workers’ return
[28 November 2019]

India: The indefinite strike by 48,000 Telangana transport workers at crossroads
[19 November 2019]