ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Indian general strike and the global fight against communalism and war

இந்திய பொது வேலைநிறுத்தமும், வகுப்புவாதம் மற்றும் போருக்கு எதிரான உலகளாவிய போராட்டமும்

Keith Jones
11 January 2020

புதன்கிழமை இந்தியா தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தில் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களும் பங்கு பற்றினர். நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) மீதும், அதன் முதலீட்டாளர்-சார்பு, சந்தை-சார்பு கொள்கைகளான சிக்கன நடவடிக்கைகள், தனியார்மயமாக்கல், “தேவைக்கேற்ப நியமிக்கும்" தற்காலிக வேலைகளை ஊக்குவித்தல், மற்றும் பாரியளவில் பெருநிறுவன வரி வெட்டுக்கள் மீதும், மற்றும் இந்து வகுப்புவாத பிற்போக்குவாதத்தை அது இடைவிடாது ஊக்குவிப்பதன் மீதும் தங்களின் கோபம் மற்றும் எதிர்ப்பை காட்டுவதற்காக அவர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்­.

தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் அந்த வேலைநிறுத்தத்தில் இணைந்தன. உலகளவில் ஒன்டொடொன்று இணைந்த இந்தியாவின் வாகனத் தொழில்துறை தொழிலாளர்கள், சுரங்கத்துறை தொழிலாளர்கள், பருத்தி தோட்ட தொழிலாளர்கள், பேருந்து, டிரக் மற்றும் ரிக்சா ஓட்டுனர்கள்; வங்கி மற்றும் மின்துறை தொழிலாளர்கள், மற்றும் மிகவும் வறிய சம்பளம் பெறும் பெரும்பாலான தொழிலாளர்கள், அதிலும் பெருமளவு அரசு-நிதி பெறும் கிராமப்புற குழந்தை பராமரிப்பு மையங்களின் (Angwadi - அங்கன்வாடி சேவைகள்) பெண் தொழிலாளர் பிரிவினர் அதில் உள்ளடங்கி இருந்தனர்.


புதன்கிழமை, ஜனவரி 8, 2020 இந்தியாவின் அஹமதாபாத்தில் பொது வேலைநிறுத்தத்தின் போது தொழிலாளர்கள் கோஷங்களை முழங்குகின்றனர் [படம்: அசோசியேடெட் பிரஸ்/ அஜித் சோலன்கி]

1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் எதிர்பார்க்கக் கூடியவாறே, இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டவர்களின் தொகை மாநிலங்களுக்கு மாநிலம் மற்றும் பொருதாளார துறைகளுக்கு இடையே வேறுபட்டிருந்தது. ஆனால் அதன் ஒட்டுமொத்த தாக்கம் பாரியளவில் இருந்ததுடன், அது ஆரம்ப வடிவில் மட்டுமே இருந்தாலும், தொழிலாள வர்க்கத்தின் அளப்பரிய சமூக சக்தியை எடுத்துக்காட்டியது.

மோடி அரசாங்கமும் அவரின் இந்து மேலாதிக்கவாத கூட்டாளிகளும் ஒன்று மாற்றி ஒன்றாக வகுப்புவாத ஆத்திரமூட்டல்களைத் தொடுத்து வருகின்ற நிலைமைகளின் கீழ், பாகிஸ்தானுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்களைக் கொண்டு போர்நாடும் தேசியவாதத்தை முடுக்கி விடுவதுடன், பிற்போக்குத்தனத்தின் எல்லா வடிவங்களையும் தூண்டிவிட்டு வருகின்ற நிலைமைகளின் கீழ், இந்த வேலைநிறுத்தம் கண்கூடாகவே எல்லா விதமான வகுப்புவாதம், ஜாதி மற்றும் இன-மொழி பிளவுகளைக் கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தியது.

தொழிலாளர்கள் போராட்டத்தில் நுழைகையில், முதலாளித்துவ வர்க்கமும் செல்வச் செழிப்பான உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் ஏனைய தனிச்சலுகை கொண்ட அடுக்குகளும் ஊக்குவிக்கும் இனம், வம்சம், பாலினம் மற்றும் பாலியல் "அடையாளங்களை" கடந்து, ஒரு வர்க்கமாக போராட்டத்தில் நுழைகிறது என்பதை இந்த வேலைநிறுத்தம் எடுத்துக்காட்டியது.

வேலைநிறுத்தக்காரர்கள் குறிப்பாக பிஜேபி இன் முஸ்லீம்-விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் (CAA) திரும்ப பெற கோரியதுடன், வெளிப்படையாக இந்தியாவின் முஸ்லீம் சிறுபான்மையினரை மிரட்டுவதையும் தொல்லைக்குட்படுத்துவதையும் நோக்கமாக கொண்ட, இந்தியாவின் எல்லா பிரஜைகளும் அவர்களின் குடியுரிமையை "நிரூபிக்க" நிர்பந்திக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை இரத்து செய்யவும் கோரினர்.

கடந்த மாதம் நாடாளுமன்றம் மூலமாக வேக வேகமாக திணிக்கப்பட்ட CAA க்கு எதிரான பாரிய வெகுஜன போராட்டங்கள் இந்தியாவை அதிர வைத்தன. மோடி ஆட்சியை அசைக்கமுடியாது என பெருநிறுவன ஊடகங்கள் விதைத்திருந்த கட்டுக்கதை தகர்ந்து போய், அது நெருக்கடிக்குள்ளாகிய நிலையில், மோடி ஆட்சி பயங்கர வன்முறையைக் கொண்டு CAA எதிர்ப்பு கிளர்ச்சிக்கு விடையிறுத்தது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், நான்கு நபர்களுக்கு அதிகமானவர்கள் பொதுவிடங்களில் ஒன்று கூடுவதற்கான மூடிமறைப்பற்ற தடைகளைத் திணித்துள்ள அது, மீண்டும் மீண்டும் இணையச் சேவைகளையும் இடைநிறுத்தி உள்ளது.

கடந்த ஞாயிறன்று, தெளிவாக பிஜேபி மற்றும் அதன் RSS கூட்டாளிகளால் முடுக்கிவிடப்பட்ட ஒரு நடவடிக்கையில், பொலிஸ் நின்றிருந்த போதே முகமூடி அணிந்த அடியாட்கள் டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களை மூர்க்கமாக தாக்கினர்.

பிஜேபி அரசாங்கத்திற்கு எதிரான பாரிய எதிர்ப்பின் வெடிப்பானது சிக்கன நடவடிக்கைகள், கட்டுக்கடங்கா சமூக சமத்துவமின்மை, ஜனநாயக உரிமைகளை ஒடுக்குதல், மீள்ஆயுதமயப்படுத்தல் மற்றும் போர் ஆகியவற்றுக்கு எதிராக —அதாவது, உலகெங்கிலும் பல்வேறு தேசியவாத அடிப்படையிலான முதலாளித்துவ உயரடுக்குகள் மற்றும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகள், அவர்கள் எக்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவை பின்பற்றி வருகின்ற கொள்கைகளுக்கு எதிராக— உலகளாவிய தொழிலாள வர்க்க எழுச்சியின் பாகமாகும்.

கடந்தாண்டு, சிலி, ஈக்வடோர், ஹைட்டி, அமெரிக்கா, மெக்சிகோ, பிரிட்டன் மற்றும் பிரான்சில் இருந்து, அல்ஜீரியா, சூடான், ஈரான், லெபனான், ஹாங்காங் மற்றும் இலங்கை வரையில் உலகெங்கிலும் பிரதான மற்றும் நீடித்த வேலைநிறுத்தங்களையும், சில இடங்களில் கிளர்ச்சிகரமான போராட்ட இயக்கங்களையும் கண்டுள்ளது.

கடந்த வாரத்தின் போது மில்லியன் கணக்கானவர்கள் ஈரானிய புரட்சிப் படையின் தளபதி காசிம் சுலைமானியை வாஷிங்டன் படுகொலை செய்ததையும் மற்றும் ஈரான் மீதும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மக்கள் மீதும் முற்றுமுதலான போர் தொடுப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டங்களையும் எதிர்ப்பதற்காக வீதிகளில் இறங்கினர்.

பிரான்சில் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் எல்லா துறைகளிலும் ஓய்வூதியங்கள் மற்றும் ஏனைய சமூக உரிமைகள் மீது நடத்தி வரும் தாக்குதலை எதிர்க்க, மாதக் கணக்கில் நீண்டுள்ள போக்குவரத்துத்துறை வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில், வியாழக்கிழமை, அங்கே மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்கியதுடன் பாரிய போராட்டங்களில் அணிவகுத்தனர்.

இந்த உலகளாவிய தொழிலாள வர்க்க எதிர்தாக்குதல் தான், மோடி அரசாங்கத்திற்கும், இந்திய முதலாளித்துவத்திற்கும், சிக்கன நடவடிக்கைகள், பிற்போக்குத்தனம் மற்றும் உலகெங்கிலுமான போருக்கு எதிரான போராட்டத்திற்குப் புறநிலை அடித்தளத்தைக் கொடுக்கின்றது.

புதிதாக உருவாகிய 100 க்கும் அதிகமான பில்லியனர்களின் குழாம் தலைமை கொடுக்கும் இந்திய பெருவணிகம் 2014 இல் மோடியை அதிகாரத்திற்குக் கொண்டு வந்ததுடன், கடந்த மே மாதம் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட பாரியளவில் நிதியுதவிகளை வழங்கியது. இந்து மேலாதிக்க பிஜேபி தான் சமூகரீதியில் நாசகரமான முதலீட்டாளர்-சார்பு சீர்திருத்தங்களை முன்நகர்த்துவதற்கும் மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் வல்லரசு அபிலாஷைகளை ஆக்ரோஷமாக வலியுறுத்தவும் அவசியமான "பலமான" அரசாங்கத்தை வழங்கும் என்று கணக்கிடப்பட்ட சூதாட்டத்தின் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு செய்தனர்.

வேகமாக சீரழிந்து வரும் பொருளாதார நிலைமையின் முன்னால், பிஜேபி அதிவேகமாக தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளதுடன், அதன் இரண்டாவது பதவி காலத்தின் முதல் ஏழு மாதங்களிலேயே இந்தியாவை ஓர் இந்து ராஷ்டிரமாக, அல்லது அரசாக மாற்றுவதற்கான அதன் நகர்வையும் துரிதமாக தீவிரப்படுத்தி உள்ளது.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், பிஜேபி அரசாங்கம் இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை அரசான ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அரைவாசி-தன்னாட்சி அந்தஸ்தைச் சட்டவிரோதமாக பறித்தது. பின்னர் அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி, அவ்விதத்தில் அப்பிரதேசத்தையே நிரந்தரமாக மத்திய அரசு ஆட்சியின் கீழ் நிறுத்தியது. அப்போதிருந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு நடைமுறையளவில் ஒரு முற்றுகையிடப்பட்ட நிலைமையின் கீழ் உள்ளது.

திட்டமிட்டு வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டு வருவதற்கான மோடியின் நோக்கம், அதிகரித்து வரும் சமூக எதிர்ப்புக்கு எதிரான அதிரடி துருப்புகளாக இந்து வலதுசாரிகளை அணித்திரட்டுவதும், பிற்போக்குத்தனம் மற்றும் இராணுவவாதத்திற்கு பின்னால் சமூக பதட்டங்களைத் திசைத்திருப்புவதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவமே ஆகும்.

ஆனால் பிஜேபி மற்றும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதிர்ச்சியாக மற்றும் பீதியூட்டும் விதத்தில், அரசாங்கத்தின் எதேச்சதிகார மற்றும் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புடன் ஒன்றுசேர்ந்துள்ள சிக்கன நடவடிக்கைகள் மீதான மற்றும் பாரிய வேலைவாய்ப்பின்மை மீதான தொழிலாள வர்க்கத்தின் கோபத்துடன் சேர்ந்து, இப்போது அது பாரிய வெகுஜன எதிர்ப்பைச் சந்திக்கிறது.

மோடி, ஓர் உலகளாவிய நிகழ்வுபோக்கின் இந்திய வெளிப்பாடு ஆவார். அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும் மற்றும் வல்லரசு மற்றும் பிராந்திய மேலாதிக்கம் விரும்பும் அரசுகளிலும், முதலாளித்துவ அரசாங்கங்கள் வெறித்தனமாக மீள்ஆயுதமயமாகி வருவதுடன், பிற்போக்குத்தனத்தை விதைத்து, எதேச்சதிகார ஆட்சி முறைகளுக்குத் திரும்பி வருகின்றன.

இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரேசிலின் ஜயர் போல்சொனாரோ, இஸ்ரேலி பிரதம மந்திரி நெத்தன்யாஹூ, பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் போன்றவர்கள் விடயத்தில் மட்டுமே உண்மை என்பதல்ல, மாறாக பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனுக்கும் இது பொருந்தும். அந்த முன்னாள் சோசலிஸ்ட் கட்சி அமைச்சர், நாஜி ஒத்துழைப்பாளரும் முன்னாள் விச்சி ஜனாதிபதியுமான மார்ஷல் பெத்தானுக்கு புத்துயிரூட்ட நகர்ந்துள்ளதுடன், “அவசரகாலநிலை அதிகாரங்களை" வழமையாக்கி உள்ளார் மற்றும் மஞ்சள் சீருடை போராட்டங்களுக்கு எதிராக அரசு வன்முறைக்கு அதிகாரமளித்துள்ளார்.

நாட்டு எல்லைகள் மற்றும் கண்டங்களைக் கடந்து தொழிலாள வர்க்க போராட்டங்களை திட்டமிட்டு ஐக்கியப்படுத்துவதும் மற்றும் தொழிலாளர்களினது அதிகாரத்திற்கான மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அதை அணித்திரட்டுவதும் மட்டுமே சிக்கன நடவடிக்கைகள், ஏகாதிபத்திய போர் மற்றும் பிற்போக்குத்தனத்தை எதிர்ப்பதற்கான ஒரே சாத்தியமான மூலோபாயமாகும்.

இதற்கு, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசியலின் பிற்போக்குத்தனமான கட்டமைப்புக்குள் சிக்க வைத்திருக்கவும் மற்றும் அதை தேசிய, இன, பாலின மற்றும் ஏனைய அடையாள அரசியல் நிலைப்பாடுகளில் பிளவுபடுத்தவும் முனையும் முதலாளித்துவ-ஆதரவு தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்தாபக “இடது” கட்சிகள் மற்றும் போலி இடது அமைப்புகளுக்கு எதிரான ஒரு கடுமையான போராட்டம் அவசியப்படுகிறது.

இந்தியாவில் இதன் அர்த்தம், பல தசாப்தங்களாக முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் ஓர் உள்ளார்ந்த பாகமாக செயல்பட்டு வந்துள்ள மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் அவற்றின் இடது முன்னணி ஆகிய ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளுக்கு எதிராக போராடுவது என்பதாகும்.

இக்கட்சிகளுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் (சிஐடியு மற்றும் ஏஐடியுசி) மற்றும் 2014 இல் மோடி ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் வரையில் நவ-தாராளவாத சீர்திருத்தம் மற்றும் இந்தியாவை வாஷிங்டனுடன் மூலோபாயரீதியில் அணி சேர்த்துக் கொள்வதை முன்னெடுத்த இந்திய முதலாளித்துவத்தின் வரலாற்று கட்சியான காங்கிரஸ் கட்சியின் சங்கம் உள்ளடங்கலாக ஏனைய எட்டு வெளிப்படையான முதலாளித்துவ-சார்பு மத்திய தொழிற்சங்கங்களால் அழைப்புவிடுக்கப்பட்ட புதன்கிழமை வேலைநிறுத்தத்திற்கு அரசியல்ரீதியில் ஸ்ராலினிசவாதிகள் தலைமை கொடுத்தனர்.

பிஜேபி இக்கு எதிராக அரும்பி வரும் வெகுஜன எதிர்ப்பை காங்கிரஸ் கட்சிக்குப் பின்னாலும், அத்துடன் வலதுசாரி ஜாதிய மற்றும் பேரினவாத கட்சிகளின் ஒரு தொகுதிக்குப் பின்னாலும் மற்றும் "ஜனநாயக இந்தியாவின்" அழுகிப் போன அமைப்புகளுக்குப் பின்னாலும் கட்டி வைக்கும் நோக்கில் தான், ஸ்ராலினிஸ்டுக்கள் ஜனவரி 8 வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இந்து வலதுசாரிகள் அதிகாரத்திற்கு வருவதைத் தடுப்பதற்காக என்ற பெயரில், கடந்த 30 ஆண்டுகளாக, ஸ்ராலினிசவாதிகள், திட்டமிட்டு வர்க்க போராட்டத்தை ஒடுக்கி வந்துள்ளனர், இது 1989 இல் இருந்து 2008 வரையில் அடுத்தடுத்து வந்த வலதுசாரி அரசாங்கங்களுக்கு அவர்கள் அளித்த ஆதரவிலும் மற்றும் அவர்கள் எதை "முதலீட்டாளர்-சார்பு" கொள்கைகள் என்று அழைத்தார்களோ அவற்றை அவர்கள் அதிகாரத்தில் இருந்த மாநிலங்களில் அவர்களே நடைமுறைப்படுத்தியதிலும் எடுத்துக்காட்டப்பட்டது. இவ்வாறு செய்ததன் மூலமாக, அவர்கள் தொற்றுநோயென பரவிய வறுமை மற்றும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மீதான பாரிய அதிருப்தியையும் விரக்தியையும் எரிச்சலூட்டும் விதத்தில் இந்து மேலாதிக்க வலதுசாரிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு செய்த உதவியின் மூலம், பிஜேபி இன் வளர்ச்சிக்கு வளமான அரசியல் களத்தை அமைத்தளித்தனர்.

உலகெங்கிலும் போலவே இந்தியாவிலும், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டத்தின் கூர்முன்முனை என்பது போருக்கு எதிரான போராட்டமாகும். இதற்கு, தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் மற்றும் தெற்காசியாவின் வகுப்புவாத அடிப்படையில் பிரிக்கப்பட்ட தேசிய-அரசு அமைப்புமுறைக்கு எதிராகவும் மற்றும் அதிலிருந்து எழும் பிற்போக்குத்தனமான இந்தோ-பாகிஸ்தானிய மோதலுக்கு எதிராகவும் உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பது அவசியமாகும்.

அதிகரித்து வரும் உலகளாவிய தொழிலாள வர்க்க எழுச்சியை ஒரு நனவுபூர்வமான சோசலிசத்திற்கான போராட்டமாக மாற்றுவதென்பது அனைத்திற்கும் மேலாக புரட்சிகர வேலைத்திட்டம், முன்னோக்கு மற்றும் தலைமை சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியாகும். அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சியில் உயிரூட்டப்பட்ட உலக சோசலிச புரட்சி வேலைத்திட்டம் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் இறுதியில் முதலாளித்துவமாக மீட்டமைக்கப்பட்ட தொழிலாளர்களின் அதிகாரத்தை அது கைப்பற்றுவற்கு எதிராக லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட போராட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், உலகெங்கிலும் போலவே, இந்தியாவிலும், தொழிலாள வர்க்கத்தின் பாரிய கட்சிகள் கட்டப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கம் தன்னை ஓர் உலக மூலோபாயத்தினை அடித்தளமாக கொண்டு ஒரு சர்வதேச புரட்சிகர சக்தியாக தன்னை வரையறுத்து கொள்வதற்கு தேவையான அந்த போராட்டத்தையும் அதன் படிப்பினைகளையும் இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) தன்னுள் உள்ளடக்கியுள்ளது.