ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Massive all-India general strike protests Modi’s pro-investor, communalist policies

இந்திய-அளவிலான பாரிய பொது வேலைநிறுத்தம் மோடியின் முதலீட்டாளர் சார்பு, வகுப்புவாத கொள்கைகளை எதிர்க்கிறது

By Deepal Jayasekera and Keith Jones
9 January 2020

பாரதீய ஜனதா கட்சி (BJP) அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்பு மற்றும் வகுப்புவாத கொள்கைகளை எதிர்த்து நேற்று நடந்த ஒருநாள் தேசியளவிலான பொது வேலைநிறுத்தத்தில் பல இலட்சக்கணக்கில் இந்திய தொழிலாளர்களும், இளைஞர்களும் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களும் கலந்துக் கொண்டனர்.

பெருமளவிலான பெருவணிக மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் ஆதரவுடன் சென்ற மே மாதம் மறுதேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோடியின் பிஜேபி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தனது தாக்குதலை பாரியளவில் அதிகரித்துள்ளது. இது, நாட்டின் தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம், ஸ்திரமற்ற ஒப்பந்த தொழிலாளர் வேலைகளின் பெருக்கத்தை ஊக்குவித்து வருவதுடன், வேலைநிறுத்தம் செய்வது மற்றும் ஒழுங்கமைப்பது குறித்த தொழிலாளர்களின் உரிமையையும் கட்டுப்படுத்துகிறது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயமாக்கலையும் இது அதிரடியாக துரிதப்படுத்தியுள்ளது, அந்த வகையில் இந்தியாவின் இரயில்வே துறையை விற்பதற்கான, நிலக்கரித் தொழிலை தனியார் முதலீட்டாளர்களுக்கு திறைந்து வைப்பதற்கான, ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கான திட்டங்களுடன் அது முன்சென்று கொண்டிருக்கிறது. அத்துடன், பெருவணிக வரி விகிதத்தை 8 சதவிகித புள்ளிகள் அளவிற்கு அல்லது கால் பங்கிற்கு அதிகமாக குறைப்பதன் மூலம் பெருவணிகங்களுக்கு மற்றொரு வகையிலான செல்வ பொழிவை இது வழங்கியுள்ளது.    


2020 ஜனவரி 8 புதன்கிழமை, இந்தியாவின் அகமதாபாத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்திருந்த பொது வேலைநிறுத்தத்தின் போது ஒரு தலைவர் பேசுவதை பல்வேறு தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கேட்கிறார்கள். (AP Photo/Ajit Solanki)

அதே நேரத்தில், பெருகிவரும் சமூக எதிர்ப்பிற்கு எதிரான ஒரு பெரும் பதிலடியாக, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மற்றும் தனது இந்து மேலாதிக்க அடித்தளத்தை அணிதிரட்டவும் நோக்கம் கொண்டு, மோடி அரசாங்கம், நாட்டின் முஸ்லீம் சிறுபான்மையினரை குறிவைக்கும் ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. இதில், இதுவரை இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமாக உள்ள ஜம்மு காஷ்மீரின் சிறப்பு மற்றும் பகுதியளவிலான தன்னாட்சி அந்தஸ்து சட்டவிரோதமாக பறிக்கப்பட்டதும், மேலும் கடந்த மாதம், பாரபட்சமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை (Citizenship Amendment Act-CAA) தீவிரமாக செயல்படுத்த முனைந்ததும் அடங்கும்.

நேற்றைய வேலைநிறுத்தத்திற்கு 10 மத்திய தொழிற்சங்க கூட்டமைப்புக்களால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது என்பதுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகிய ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளின் வெளிப்படையான ஆதரவும், மேலும் ஸ்ராலினிசக் கட்சிகளின் நெருங்கிய கூட்டணி கட்சியான பெருவணிக காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவும் அதற்கிருந்தது.

12 புள்ளி சாசனத்தில் வடிவமைக்கப்பட்ட முக்கிய தொழிற்சங்க கோரிக்கைகள் என்பவை, தற்போதைய மதிப்பீட்டின் படி, 73 மில்லியன் பேர் அல்லது தொழிலாளர் சக்தியில் அநேகமாக 8 சதவிகிதம் பேர் என்றளவில் வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது; அனைத்து தொழிலாளர்களுக்கும் அடிப்படை சமூக பாதுகாப்புக்களை வழங்குவது; மேலும் ஓய்வூதியங்களையும், மோசமான குறைந்தபட்ச ஊதியத்தையும் அதிகரிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் இந்த வேலைநிறுத்தம், CAA, மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினரை அச்சுறுத்துவதையும் துன்புறுத்துவதையும் வெளிப்படையாக நோக்கம் கொண்டுள்ள ஒரு திட்டமான, நாட்டின் ஒட்டுமொத்த 1.3 பில்லியன் (130 கோடி)  குடியிருப்பாளர்களும் தங்களது இந்திய குடியுரிமைக்கான உரிமையை நிரூபிக்க கட்டாயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தையும் இரத்து செய்யக் கோருகிறது.

பெருநிறுவன ஊடகங்கள், பெருவணிகங்கள் மற்றும் மோடி அரசாங்கம் என அனைத்தும் நேற்றைய எதிர்ப்பு வேலைநிறுத்தத்தின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சிக்கின்றன.

என்றாலும், வேலைநிறுத்தத்தின் அளவும் நோக்கமும் மாநிலங்கள் மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கு ஏற்ப வேறுபட்டிருந்தாலும், ஒட்டுமொத்த அளவில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை, அத்துடன் நேற்றைய நடவடிக்கை வளர்ந்து வரும் போர்க்குணம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தி இரண்டிற்கும் சான்றாக அமைந்தது.

ஸ்ராலினிச தலைமையிலான இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் (Centre of Indian Trade Unions-CITU) கருத்துப் படி, 35 மில்லியன் பஸ், டிரக் மற்றும் ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். கிழக்கு இந்திய மாநிலங்களான மேற்கு வங்கம், ஒடிசா, மற்றும் பீஹார், மற்றும் தென்மேற்கில் கேரளா ஆகிய மாநிலங்கள் உட்பட, பல நகர மையங்களில், மிகுந்தளவில் அல்லது பெருமளவில் பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பல அரசுக்கு சொந்தமான வங்கிகளை ஒன்றிணைப்பதற்கான மற்றும் தனியார்மயமாக்குவதற்கான பிஜேபி அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்க்க பெருமளவிலான வங்கி ஊழியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் இணைந்து கொண்டனர், அந்த வங்கிகளும் ஒட்டுமொத்த இந்தியாவின் நிதியமைப்பை போன்று பிரமாண்டமான பெருநிறுவன கடன் சுமைகளினால் அழுத்தப்பட்டுள்ளது.

பிஜேபி தலைமையிலான மத்திய அரசாங்கமும் மற்றும் பல்வேறு மாநில அரசாங்கங்களும் விடுத்த பழிவாங்கும் அச்சுறுத்தல்களை மீறி, பல அரசாங்க ஊழியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இது குறித்து, “ஊதிய குறைப்பு” மற்றும் “தக்க ஒழுங்கு நடவடிக்கைகள்” உள்ளிட்ட “விளைவுகளை,” வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசாங்க உத்தரவு தெரிவித்தது.

இந்தியாவின் பூகோள அளவில் இணைக்கப்பட்ட வாகனத் துறை உட்பட, தொழில்துறை தொழிலாளர்கள் முழு தீவிரத்துடன் வெளிநடப்பு செய்தனர் என்று செய்தி அறிக்கைகள் சுட்டிக்காட்டின. மேலும், Outlook India பத்திரிகை, இந்தியாவின் தலைநகரமான தில்லியின் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள, மானேசர்-குர்கான் தொழில்துறை எல்லைக்குள் இயங்கி வரும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டருக்கான மானேசர், ஹரியானா ஆலைகளிலும் மற்றும் ஏராளமான வாகன உதிரிப்பாக ஆலைகளிலும் தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்ததாகத் தெரிவித்தது. இந்த வேலைநிறுத்தம், மஹாராஷ்டிராவின் சக்கானாவில் உள்ள பஜாஜ் வாகன உற்பத்தி ஆலையிலும், வோல்வோ பஸ் மற்றும் டிரக் ஆலைகளிலும், டொயோட்டா கார், மற்றும் போஷ் வாகன உதிரிபாக உற்பத்தி ஆலைகளிலும், மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள விக்ராந்த் டயர் உற்பத்தி ஆலைகளிலும் உற்பத்தியை முடக்கியது. ஜார்கண்ட் மற்றும் இந்தியா முழுவதிலுமுள்ள இலட்சக்கணக்கான இந்திய நிலக்கரித் தொழிலாளர்களும் மற்றும் மேற்கு வங்கத்தில் சணல் தோட்டத் தொழிலாளர்களும் கூட இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

1.5 மில்லியன் பொறியாளர்களும் மற்றும் பிற மின்சார ஊழியர்களும் வெளிநடப்பு செய்த நிலையில், மின்சாரத் துறையும் பெரியளவில் பாதிக்கப்பட்டது, மின் உற்பத்தி 5 சதவிகிதம் குறைந்தது.

மிக மோசமான ஊதியம் பெறும், அரசு நிதியுதவி பெறும் அங்கன்வாடி அல்லது கிராமப்புற குழந்தை பராமரிப்பு தொழிலாளர்களின் பெரும் ஆதரவும் இந்த வேலைநிறுத்தத்திற்கு இருந்தது, அவர்களில் பெரும்பாலானோர் பெண்களாவர்.

சில மாநிலங்களில், வேலைநிறுத்தக்காரர்களும் மற்றும் வேலைநிறுத்த ஆதரவாளர்களும் பெருமளவில் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில், பிஜேபி இன் கூட்டணிக் கட்சியான அஇஅதிமுக இன் மாநில அரசாங்கம், தலைநகரம் சென்னையிலும், மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜவுளி உற்பத்தி மையமான கோயம்புத்தூரிலும் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய உத்தரவிட்டிருந்தது.

மேற்கு வங்கத்தில், பிஜேபி இன் வலதுசாரி பிராந்திய போட்டியாளரான, திரிணாமூல் காங்கிரஸ் (TMC) தலைமையில், பாதுகாப்பு படையினருக்கும், TMC அடியாட்களுக்கும் மற்றும் வேலைநிறுத்த ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. வேலைநிறுத்த ஆதரவாளர்கள் இரயில்களை மறித்ததற்கு பின்னர், சிபிஎம் உம், மற்றும் அதன் இடது முன்னணி கூட்டணி கட்சிகளும் “பந்துகளுக்கு [வேலைநிறுத்தங்களுக்கு] அழைப்புவிடுப்பதன் மூலமும், பேருந்துகளில் குண்டுகளை வீசுவதன் மூலமும், இழிவான விளம்பரத்தை” தேடுகின்றன என்று கூறி, அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவிக்க முனைந்தார்.

Newsclick வலைத் தள செய்தியின் படி, இந்தியாவின் 732 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 480 இல் பேரணிகள், சாலை மறியல்கள் மற்றும் பிற ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகளும் மற்றும் வேளாண் தொழிலாளர்களும் இணைந்து கொண்டனர் என்பதுடன், 60 பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்தனர்.

பாரபட்சமான CAA இன் ஷரத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக எழுந்த தேசியளவிலான பெரும் ஆர்ப்பாட்ட அலைகளுக்கு மத்தியில் நேற்றைய வேலைநிறுத்தமும் நடந்து முடிந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்கள், முஸ்லீம் இளைஞர்களால் வழிநடத்தப்பட்டாலும், உழைக்கும் மக்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்துக் கொள்ளும் வகையில் ஆளும் உயரடுக்கு நீண்டகாலமாக விதைத்து வந்துள்ள வகுப்புவாத, சாதிய மற்றும் இன ரீதியிலான பிளவுகளை தகர்த்து எறிந்துள்ளன.

திடீரென தோன்றி அதிரவைத்தது, என்றாலும் உண்மையில் ஆழ்ந்த வேரூன்றிய வெகுஜன எதிர்ப்பு எழுச்சியினால், பிஜேபி அரசாங்கம் - பெரும் அரசு அடக்குமுறை கொண்டு பதிலடி கொடுத்தது – அதில் கொல்லும் தீவிரமிக்க பொலிஸ் வன்முறை, ஆர்ப்பாட்டங்களுக்கு முழு அளவில் தடைகள் விதிப்பது மற்றும் இணையத் தள தொடர்புகளை இடைநிறுத்தம் செய்வதும் அடங்கும் – மேலும் இந்து வகுப்புவாதத்தை ஊக்குவித்தது.

டிசம்பர் கடைசியில், இந்திய இராணுவத் தலைவர் பிபின் ராவத், அடிப்படை ஜனநாயக அரசியலமைப்பு கொள்கைகளை மீறி, அரசாங்கத்திற்கு  ஆதரவாக அணிதிரண்டு, CAA எதிர்ப்பு கிளர்ச்சியை “வன்முறை” என்று முத்திரை குத்தியதோடு, நாட்டை “தவறாக வழிநடத்துவதாக” மாணவர்களை கடுமையாக கண்டித்தார். அதன் பின்னர், மோடி, இந்தியாவின் முதல் தலைமை பாதுகாப்பு படைத் தலைவராக (Chief of Defence Staff-CDS) அவரை பதவி உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை மாலை, பிஜேபி மற்றும் அதன் பாசிச கருத்தியல் வழிகாட்டி அமைப்பான RSS உடன் இணைந்த மாணவர் குழுவான ABVP இன் உறுப்பினர்களால் தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதற்கு பிஜேபி அரசாங்கத்தை Hindu பத்திரிக்கை பொறுப்பாளியாக்கியது. இத் தாக்குதலில் இரும்புத் தடிகள், ஹாக்கி மட்டைகள் மற்றும் கற்களைக் கொண்டு மாணவர்கள் தாக்கப்பட்டதால் பலரும் பலத்த காயமடைந்த நிலையில், 40 க்கும் அதிகமானோரை மருத்துவமனையில் சேர்க்க நேரிட்டது.     

குறைந்தபட்சம் 2016 க்கு பின்னர் பிஜேபி அரசாங்கம் மற்றும் இந்து வலதின் தனிப்பட்ட இலக்காக JNU இருந்து வருகிறது, அதற்கு, இடதுசாரி செயல்பாடு மற்றும் சோசலிச அரசியலுடன் அது கொண்டுள்ள நீண்டகால தொடர்பு தான் காரணமாகும்.

இதற்கிடையில், இந்திய பொருளாதாரத்தை விரைவான மந்தநிலையிலிருந்து மீட்டெடுக்க தேவையான மூலதனத்தை ஈர்க்கும் வகையில், “பெரும் தீவிரமிக்க” நவ தாராளவாத சீர்திருத்தத்தின் ஒரு புதிய அலையை பிஜேபி அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என பூகோள மற்றும் உள்நாட்டு முதலீடுகள் கோருகின்றன.

இந்த கோரிக்கைகளுக்கு இணங்க, பிஜேபி அரசாங்கம், 2019-2020 நிதியாண்டின் மீதமுள்ள மூன்று மாதங்களில் 2 டிரில்லியன் ரூபாயை (27.87 பில்லியன் அமெரிக்க டாலர்) அல்லது வருடாந்திர சமபங்கின் 7 சதவிகிதத்தை அதன் வருடாந்திர செலவில் குறைக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படியிருந்தும், பெரும் வருவாய் பற்றாக்குறை காரணமாக, வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) திட்டமிடப்பட்ட 3.3 சதவிகிதத்திலிருந்து 3.8 சதவிகிதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெருகிவரும் பொருளாதார கொந்தளிப்பு மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை எதிர்த்துப் போராடுவதற்கு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, வாஷிங்டன் உடனான இந்திய முதாலாளித்துவத்தின் பொறுப்பற்ற மற்றும் சட்டத்திற்கு புறம்பான சீன எதிர்ப்பு கூட்டணியை மேலும் வலுப்படுத்த மோடி அரசாங்கம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. செவ்வாயன்று, ஈரானிய புரட்சிகர காவல்படை ஜெனரல் காசிம் சுலைமானியை அவர் குற்றவியல் படுகொலை செய்ததையடுத்து, ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ட்ரம்ப் விவாதித்துக் கொண்டிருந்த போது, அவரை மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வெள்ளை மாளிகை அறிக்கையின் படி, மோடியும் ட்ரம்பும், “2020 ஆம் ஆண்டில் அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள்” பற்றி விவாதித்தனர்.

மோடி ஆட்சிக்கு எதிராக பெருகி வரும் தொழிலாள வர்க்க சவால் என்பது, வர்க்கப் போராட்டத்தின் பூகோள அளவிலான எழுச்சியின் ஒரு பகுதியாகும். சிலி, ஈக்வடோர், ஹைட்டி, மெக்சிக்கோ, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், அல்ஜீரியா, சூடான், லெபனான் மற்றும் இலங்கை உட்பட உலகெங்கிலும் பெரும் வேலைநிறுத்தங்களும், மற்றும் நீடித்த மற்றும் சில சந்தர்ப்பங்களில் கிளர்ச்சி போன்ற எதிர்ப்பு இயக்கங்களும் கடந்த ஆண்டில் எழுச்சியுற்றன.

எல்லா இடங்களிலும் இருப்பது போல, வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் எதிர் தாக்குதலை ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும் புரட்சிகர தலைமையுடன் அரசியல் ரீதியாக பலப்படுத்துவதே இந்தியாவிலும் முக்கிய பணியாக உள்ளது.

நேற்றைய வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு முற்றிலும் எதிராக, தொழிற்சங்கங்களும், ஸ்ராலினிசக் கட்சிகளும், பிஜேபி க்கு எதிரான பரந்த எதிர்ப்பு, காங்கிரஸ் கட்சிக்கு பின்னால் மூன்று தசாப்தங்களாக நிகழ்ந்து வரும் இந்தியாவின் முதலாளித்துவ “எழுச்சி” மற்றும் வலதுசாரி இன-பேரினவாத மற்றும் சாதிய கட்சிகளின் அணிவகுப்பு ஆகிய கசப்பான விளைவுகளை திசைதிருப்ப முயல்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை, நேற்றைய வேலைநிறுத்தம் அவர்களது “போர்க்குணமிக்க” நற்சான்றிதழ்களை எரிப்பதையும், மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதையும், தணிப்பதையும் மற்றும் நசுக்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு சூழ்ச்சியாகும்.

உண்மையான வர்க்கப் போராட்டத்திற்கான அவர்களது விரோதப் போக்கு, ஒப்பந்தத் தொழிலாளர் முறை மற்றும் கொடூரமான வேலை ராஜ்யத்தை  அவர்கள் முன்னின்று எதிர்த்த “குற்றத்திற்காக”வும், மேலும் முத்தரப்பு இந்திய தொழிலாளர் மாநாட்டின் வழமையான கூட்டங்களை மீண்டும் தொடங்குமாறு மோடியை அவர்கள் கோரியதற்காகவும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட 13 மாருதி சுசூகி தொழிலாளர்களை இரக்கமற்ற வகையில் கைவிட்டதன் உச்சக் கட்டத்தைக் காட்டுகிறது.

பல தசாப்தங்களாக, இந்து மேலாதிக்க பிஜேபி ஐ எதிர்க்கும் பெயரில், CPM, CPI மற்றும் முறையே அவற்றின் இணைப்பு தொழிற்சங்கங்களான, CITU மற்றும் அகில இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (AITUC) ஆகியவை, பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான வலதுசாரி அரசாங்கங்களை ஆதரித்து வந்துள்ளன, அது சந்தை சார்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது என்பதுடன், வாஷிங்டனுடன் எப்போதும் நெருக்கமான உறவுகளை பேணி வந்துள்ளது.   

நேற்று வேலைநிறுத்தக்காரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஒரு பிரசுரத்தில், “மோடி, முதலாளித்துவ சிக்கனம், மற்றும் வகுப்புவாத பிற்போக்குத்தனம் ஆகியவற்றை எதிர்த்துப் போராட இந்திய தொழிலாளர்களுக்கு ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் தேவை,” என்று உலக சோசலிச வலைத் தளம் விவரிக்கிறது:

“இந்தியாவிலும், மற்றும் உலகெங்கிலுமாக ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான, மற்றும் வகுப்புவாத மற்றும் பாசிச பிற்போக்குத்தனத்தை தோற்கடிப்பதற்கான ஒரே சாத்தியமான மூலோபாயம் என்பது, ஒன்று சர்வதேச வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும், அத்துடன் சுயாதீனமான அரசியல் நடவடிக்கை என்பது, சிதைவுற்ற முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கையாகும்."