ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கை: யாழ்ப்பாணத்தில் முன்னணி தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் அரச புலனாய்வு அதிகாரிகள் என சந்தேகிக்கப்படுபவர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்

By our correspondents
2 January 2020

இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் தேசியவாத தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டாளரும் ஒரு வழக்கறிஞருமான யோதிலிங்கத்தின் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. இது தன்னையும் வடக்கில் உள்ள ஏனைய அரசியல் செயற்பாட்டாளர்களையும் மிரட்டுவதற்காக அரசாங்க புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை என்று யோதிலிங்கம் சந்தேகிக்கிறார்.

புதிய ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் தீவிரமாக்கப்பட்டுள்ள அரசியல் ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குண்டர் தாக்குதல்கள் மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களில் இதுவும் ஒன்றாகும்.

டிசம்பர் 8 அன்று, யோதிலிங்கம் தனது அலுவலகத்திலிருந்து மதிய உணவிற்காக உரும்பிராயில் உள்ள வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவுகள் உடைத்து திறக்கப்பட்டிருந்தன. அலமாரிகள் திறக்கப்பட்டு வீடு அலங்கோலமாக்கப்பட்டு இருந்தது. கொள்ளையடிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத அதே வேளை, அவரது இரண்டு செல்போன்களை காணவில்லை.

"இது பொலிசாரால் திருட்டு என சித்தரிக்கப்பட்ட போதிலும் எனது தொலைபேசிகளை எடுத்துச் சென்றமை எனக்கும் எனது நண்பர்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாகும்" என்று யோதிலிங்கம் கூறினார்.

சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டிற்கு வந்த பொலிசார், அப்பகுதியில் இல்லாத ஒருவரை பற்றி விசாரித்தனர். அதே நாள் இரவு 8 மணி முதல் 10 மணி வரை, யாரோ ஒருவர் அவரது வீட்டின் அழைப்பு மணியை பலமுறை அழுத்திவிட்டு ஒழிந்துகொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விழிப்படைந்த அவர், தன்னுடைய நண்பர்களை வீட்டுக்கு அழைத்து, தன்னுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். 119 பொலிஸ் அவசர எண்ணை அழைத்த போதும் எந்த பிரதிபலிப்பும் இருக்கவில்லை. இந்த சம்பவங்களை தொடர்ந்தே யோதிலிங்கத்தின் வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

யோதிலிங்கம் உடனடியாக தனது வீடு உடைக்கப்பட்டுள்ளது குறித்து பொலிசாருக்கு அறிவித்த போதிலும் அவர்கள் மாலையே அங்கு வந்தார்கள். சிவில் உடையில் வந்த பொலிசார் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு காணாமல் போன பொருட்கள் குறித்து விசாரித்துக்கொண்டு, திருட்டு போனதாகவே புகார் பதிவு செய்தனர். யோதிலிங்கம் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.

அதே வாரத்தில், முன்னாள் அரசியல் கைதி முருகையா கோமஹனை புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரித்ததாக தமிழ்நெட் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் கைதிகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தமை பற்றி அவர்கள் விசாரித்துள்ளனர். ஏனைய அரசியல் கைதிகளை விடுவிக்க பிரச்சாரம் செய்து வருவதால் கோமஹன் குறிவைக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் மாதம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது சட்டத்துறை விரிவுரையாளர்களை நீதிமன்ற வழக்குகளில் முன்நிலையாவதை தடுக்கும் விதிமுறையை வெளியிட்டது. நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகாமல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரனை தடை செய்யுமாறு இராணுவம் கோரியதற்கு பிரதிபலிப்பாகவே ஆணைக்குழு இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை எடுத்தது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாதப் போரின்போது யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள நாவற்குழியில் 20க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போனது தொடர்பான ஆட்கொணர்வு வழக்குகளில் குருபரன் ஆஜரானதைத் தொடர்ந்தே இராணுவம் இந்த கோரிக்கையை விடுத்தது. இந்த சம்பவத்திற்கு சில இராணுவத்தினர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நவம்பர் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) வேட்பாளர் கோடாபய இராஜபக்ஷவை நிராகரித்து ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்தனர். பாதுகாப்பு செயலாளராக இருந்து அவர் இயக்கிய இராணுவத்தினால் இழைக்கப்பட்ட போர் அட்டூழியங்களுக்கு இராஜபக்ஷ தமிழ் மக்களால் பரவலாக வெறுக்கப்படுகிறார்.

எவ்வாறாயினும், பிரேமதாச மற்றும் ஏகாதிபத்திய சார்பு ஐ.தே.க. பற்றி தூக்கிப் பிடித்து தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் அரசியல் பொறிஅமைத்ததில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியமாக பொறுப்பாளியாகும். தமிழ் கூட்டமைப்பானது பிரேமதாச மற்றும் ஐ.தே.க.வை குறைந்த கெடுதி என்றும் அதிக ஜனநாயகமானது என்றும் முன்நிலைப்படுத்தியது.

தேர்தலுக்குப் பின்னர், இராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் தெற்கில் சிங்களம் பேசும் மக்களின் வாக்குகளைப் பெறவும், தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்தவும் தமிழர்-விரோத மற்றும் முஸ்லீம்-விரோத இனவாதத்தைத் தூண்டுகிறார்கள்.

யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும், வடக்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள இராணுவம், வாள்வெட்டு கும்பல்களையும் போதைப்பொருள் கும்பல்களையும் அடக்குவது என்ற சாக்குப் போக்கின் கீழ் மீண்டும் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை உக்கிரமாக்கியுள்ளதோடு நடமாடும் சோதனைச் சாவடிகளையும் கூட பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் "சந்தேக நபர்களை" கைது செய்வதும் தடுத்து வைப்பதும் அதிகரித்து வருகிறது.

டிசம்பர் 13 அன்று, யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது, புதிய பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன கூறியதாவது: “புலிகள் புத்துயிர் பெற முயற்சிக்கும் அதே வேளை, தங்கள் மதத்தை தவறாக புரிந்து கொண்டுள்ள ஒரு தீவிர குழு, நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறது. முஸ்லீம் அதிதீவிரவாத சக்திகள் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தின. அவை நாட்டின் பொருளாதாரத்தை அழித்ததுடன் சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளன.”

"இதுபோன்ற சக்திகளைக் கண்காணித்து நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பது புலனாய்வு அமைப்புகளின் கடமையாகும்" என அவர் மேலும் கூறினார்.

இது, பயங்கரவாதத்தை அடக்குதல் என்ற பெயரில், தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் மீதான பொலிஸ்-இராணுவ அடக்குமுறையை அதிகரிக்கவுள்ளமை பற்றிய எச்சரிக்கை ஆகும்.

இலங்கையில் முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வர்க்கப் போராட்டங்களின் சர்வதேச எழுச்சியின் ஒரு பகுதியாக இலங்கையில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அதிகரித்து வரும் அமைதியின்மை குறித்து பீதியடைந்து உள்ளனர். ஒரு எதேச்சதிகார சிங்கள இனவாதியான இராஜபக்ஷ, ஆட்சிக்கு வருவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டார். இதேபோன்ற வரலாற்றைக் கொண்ட முன்னாள் ஜனாதிபதியின் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., சிங்கள தீவிரவாத குழுக்கள் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளதும் ஆதரவு கோடாபய இராஜபக்ஷவுக்கு கிடைத்துள்ளது.

போராடும் தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்காக ஒரு "வலுவான அரசாங்கத்தை" நிறுவ இராஜபக்ஷ முயல்கிறார்.

போலி இடது குழுக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் கல்விமான்களும் பிரேமதாசாவின் பின்னால் அணிதிரண்டமை, அரசாங்கத்திற்கு எதிரானவராக காட்டிக்கொள்ளும் வாய்ப்பை இராஜபக்ஷவுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

கோட்டாபய இராஜபக்ஷ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு எச்சரித்திருந்த்து: “இராஜபக்ஷவின் தேர்வானது, எதேச்சதிகார ஆட்சி வடிவங்கள் மற்றும் அடிப்படை அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிமுறைகளை மீறுவதை நோக்கிய கூர்மையான மாற்றத்தை குறிக்கிறது. ஜனாதிபதியாக, அவரும் அவரது சகோதரரும், தொழிலாள வர்க்கத்தை கையாள்வதில், தங்கள் அரசியல் எதிரிகளுக்கும் போரின் போது தமிழ் மக்களுக்கும் எதிராகவும் கையாண்டே அதே குற்றவியல் முறைகளுக்கு அவர் தவிர்க்க முடியாமல் திரும்புவார்.” கோடாபய இராஜபக்ஷ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சோ.ச.க.வின் எச்சரிக்கையை நிரூபித்துள்ளன.

வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரேமதாசாவை ஊக்குவித்த அதேவேளை, முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை, வேறு தாளத்தில் ஆடியது. தமிழ் கூட்டமைப்பைப் போலவே தமிழ் பேரவையும் வடக்கிற்கு ஒரு தனி சுயாட்சியை கோருவதுடன் ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் இந்தியாவினதும் ஆதரவிற்கும் அழைப்பு விடுக்கின்றது.

யோதிலிங்கம் மற்றும் குருபரனும் தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கொள்கை வகுப்பாளர்கள் ஆவர். ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ் மக்கள் பேரவையும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து வடக்கிற்கு சுயாட்சி உட்பட 13 கோரிக்கைகளை உருவாக்கி ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்வைத்தன. இதை யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களின் மாணவர் அமைப்புகள் ஏற்பாடு செய்தன.

அவர்களின் தந்திரோபாய வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், கொழும்பில் உள்ள தங்களது சம தரப்பினரைப் போலவே, அவநம்பிக்கையான தமிழ் உயரடுக்கின் ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவையும், இன ரீதியில் ஐக்கியப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம் பற்றியும் அவர்கள் இந்திய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புவதைப் பற்றியும் பீதியடைந்துள்ளன.

தமிழ் குழுக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான இராணுவ மற்றும் அரசு உளவுத்துறையின் அடக்குமுறை நடவடிக்கைகளை சோ.ச.க. எதிர்ப்பதுடன் தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத இனவாதத்தை தூண்டுவதையும் எதிர்க்கிறது. அதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை அல்லது ஏனைய தமிழ் தேசியவாத குழுக்களை நாம் ஆதரிக்கவில்லை.

ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராட தொழிலாள வர்க்கத்தை நனவுபூர்வமாக ஐக்கியப்படுத்தும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்தை சோ.ச.க. மட்டுமே அபிவிருத்தி செய்கின்றது.