ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Paris transport workers vote to end unlimited strike against Macron

பாரீஸ் போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் மக்ரோனுக்கு எதிரான  காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முடித்துக் கொள்ள வாக்களிக்கின்றனர்

By Alex Lantier
20 January 2020

இவ்வாரயிறுதியில் பாரீஸ் வெகுஜன போக்குவரத்து தொழிலாளர்கள், பாரீஸ் சுயாட்சி போக்குவரத்து ஆணைய வலையமைப்பின் (RATP) பெரும்பாலானவற்றில் டிசம்பர் 5 இல் தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முடித்துக் கொள்ள வாக்களித்தனர்.

வழித்தடங்கள் 5, 13 மற்றும் B மட்டுமே இன்னமும் வேலைநிறுத்தத்தில் உள்ளன. பிரெஞ்சு தேசிய இரயில்வே (SNCF) வேலைநிறுத்தத்தில் பங்கெடுப்பும் குறைந்து வருகிறது, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான ஒரு போராடத்தைத் தொடர தொழிலாளர்கள் தீர்மானமாக உள்ளார்கள் என்றாலும், மே 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் பிரான்சின் மிக நீண்ட இந்த வேலைநிறுத்தம் ஒரு முடிவுக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது.

வேலைக்குத் திரும்புவதற்கான இந்த தீர்மானத்தை இரண்டு பிரதான காரணிகள் தீர்மானித்ததாக RATP தொழிலாளர்கள் WSWS க்கு தெரிவித்தனர். முதலாவது, ஏனைய தொழில்துறைகளின் (துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் வாகனத்துறையின்) தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்த நடவடிக்கையை நடத்த மறுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், அங்கே போராட்டத்திற்கான ஒரு தெளிவான முன்னோக்கு இல்லை. அனைத்திற்கும் மேலாக, ஆறு வாரகால வேலைநிறுத்த நடவடிக்கைக்குப் பின்னர், மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்கள் மீது மக்ரோனுடன் தொழிற்சங்கங்கள் நான்கு மாதகால கூடுதல் பேரம்பேசல்களைத் தொடங்க உள்ள நிலையில், தொழிற்சங்கங்களால் வழங்கப்பட்ட பரிதாபகரமான குறைந்த அளவிலான வேலைநிறுத்த சம்பளத்தின் காரணமாக வேலைநிறுத்தக்காரர்கள் ஆழ்ந்த நிதி அழுத்தத்தில் இருந்தனர்.

போராட்டங்களும் ஒரு-நாள் வேலைநிறுத்த நடவடிக்கைகளும் தொடரப்பட உள்ளன என்றாலும், இது இந்த ஆரம்ப போராட்டத்திலிருந்து முன்கூட்டிய அரசியல் படிப்பினைகளை வரைவதற்குரிய நேரமாகும். பொதுமக்களின் கருத்து பெருவாரியாக அவருக்கு எதிராக இருக்கையிலும், அனைத்திற்கும் மேலாக, வேலைநிறுத்தங்களும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டங்களும் சர்வதேச அளவில் பரவி வருகின்ற நிலையிலும், மக்ரோனால் எவ்வாறு எதிர்க்க முடிந்தது? கடந்த மாதங்களில் பிரான்சில் நடந்த இரயில்வே வேலைநிறுத்தங்களானது, பத்து மில்லியன் கணக்கான இந்திய தொழிலாளர்களின் வேலைநிறுத்த நடவடிக்கை, அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் தாமிரச் சுரங்க தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், மற்றும் அல்ஜீரியா, லெபனான், ஈராக் மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் நடந்த வெகுஜன போராட்டங்களை ஒட்டி அபிவிருத்தி அடைந்தது.

ஆனால் மக்ரோனால் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நெருக்கமான ஒத்துழைப்பின் மீது சார்ந்திருக்க முடிந்தது, அவை அவருடன் ஓய்வூதிய வெட்டுக்கள் மீது பேரம்பேசின. தேசிய அரங்கில் மட்டுப்படுத்தப்பட்டதும், தொழிலாள வர்க்கம் எதன் எதிர்ப்பை நசுக்க முயன்று வந்ததோ அதே தொழிற்சங்கங்களால் கட்டுப்படுத்தப்பட்டதுமான ஒரு போராட்டத்தில் — தொழிற்சங்கங்களின் தடையைக் கடந்து வருவதற்கான தொழிலாள வர்க்கத்தின் முதல் முயற்சி, அவர்கள் முகங்கொடுத்த அனைத்து அரசியல் தடைகளையும் கடந்து வருவதற்கு போதுமானதாக இருக்கவில்லை.

RATP பணியாளரான சில்வி கூறினார்: “நாம் விருப்பத்துடன் வேலைக்குத் திரும்பவில்லை. அரசு பள்ளி ஆசிரியர்களும், எண்ணெய் சுத்திகரிப்புத்துறை, பிரதான பெருநிறுவனங்களின் தொழிலாளர்களும் எங்களுடன் இணைவார்கள் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் இறுதியில் நாங்கள் மட்டுமே தனியாக நின்றதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டது.” அவர் தொடர்ந்து கூறினார், “முடிந்தால், நாங்கள் ஆறு மாதங்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய விரும்பினோம். ஆனால் பொருளாதாரரீதியில் எங்களால் முடியவில்லை, இல்லையென்றால் நாங்கள் நடத்தி இருப்போம்,” என்றார்.

ஸ்ராலினிச சங்கமான CGT, RATP வேலைநிறுத்தக்காரர்களுக்கு மொத்தம் 250,000 யூரோ வழங்கியது என தெரிவித்த சில்வி, இது “அபத்தமானது” அதாவது, ஆறு வாரகால வேலைநிறுத்தத்தில் ஒரு வேலைநிறுத்தக்காரருக்கு 20 யூரோ ஆகும் என்றார். மறுபுறம், முதலாளிமார்களின் கூட்டமைப்புகள் மற்றும் அரசுடன் அவை சிக்கன நடவடிக்கைகளைப் பேரம்பேசியவாறு அவற்றிடம் இருந்து பெருவாரியாக நிதியுதவி பெறும் பிரெஞ்சு தொழிற்சங்க கூட்டமைப்புகளின் மொத்த வரவு-செலவு திட்டக்கணக்கு, சுமார் 4 பில்லியன் யூரோவாகும். எவ்வாறிருப்பினும் இந்த வரவு-செலவு திட்டக் கணக்குகள் வர்க்க போராட்டத்தைத் தொடுப்பதற்கு அல்ல, அதன் குரல்வளையை நெரிப்பதற்கே சேவையாற்றுகின்றன.

மற்றொரு RATP ஓட்டுனர் தியேரி கூறினார்: “தொழிற்சங்கங்கள் தொனியை அமைக்க விரும்பின, ஆனால் தொழிலாளர்கள் வேறு விடயங்களை விரும்பினர்.” தொழிற்சங்கங்களின் பாத்திரம் குறித்து வினவிய போது, அவர் CGT மற்றும் அதன் தலைவர் பிலிப் மார்ட்டினேஸை விமர்சித்தார்: “நாங்கள் மார்ட்டினேஸைப் பின்தொடர விரும்பவில்லை. அவர் அடுத்த பெப்ரவரியில் சந்திப்பதாக மட்டுமே கூறுகிறார். ஒரு தொழிற்சங்கமானது தொழிலாளர்கள் சம்பந்தமாக அதன் "நோக்கம் … உரிமைகள் மீதான வரையறை, அத்துடன் சடரீதியான தார்மீக நலன்களை" கொண்டிருக்க வேண்டுமென ஒரு தொழிற்சங்கம் குறித்த சட்டபூர்வ வரையறை குறிப்பிடுகிறது, பிரெஞ்சு "தொழிற்சங்கங்களோ" உண்மையில் பல ஆண்டுகளாக தொழிற்சங்கங்களாகவே இருக்கவில்லை என்பதையும் தியேரி சேர்த்துக் கொண்டார்.

RATP மெட்ரோ ஒட்டுனரான பிராங் தொழிற்சங்கங்கள் குறித்து பின்வருமாறு கூறினார்: “அவை என்ன செய்யக் கூடாதென நாங்கள் நினைத்தோமோ இறுதியில் அவை அதையே செய்தன. சான்றாக, இரண்டு வாரகால கிறிஸ்துமஸ் விடுமுறைகளின் போது, இந்த போராட்டத்தில் எந்த உடன்பாட்டையும் நாங்கள் விரும்பவில்லை என்பதை அவற்றுக்கு எடுத்துரைத்தோம். ஆனால் கிறிஸ்துமஸிற்கு முன்னரே அவை அடுத்த தேசிய போராட்டம் ஜனவரி 9 இல் இருக்குமென அறிவித்தன. பின்னர் அவை ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும், அது தனியார் துறையில் அவ்வளவு எளிதல்ல என்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், அதை நாங்கள் விரும்பினோம். அங்கே வேலைநிறுத்தம் செய்தால், உங்களை இடம் மாற்றிவிடுவார்கள் என்பது எனக்கு தெரிந்தும், நானே அங்கே உத்வேகத்துடன் பணியாற்றினேன். ஆனால் ஏனைய தொழில்துறைகளில் இருந்து எங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை,” என்றார்.

RATP தொழிலாளர்கள் பின்னர் போராட்டத்திற்குத் திரும்ப அவர்கள் தீர்மானமாக இருப்பதையும், பொதுமக்களின் கருத்து பெருவாரியாக அவர்களுக்கு ஆதரவாக இருப்பது தெரியும் என்றும் வலியுறுத்தினர். ஆறு வாரகால வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், மக்கள்தொகையில் மூன்று இரண்டு பங்கினர் இன்னமும் போக்குவரத்துத்துறை வேலைநிறுத்தத்தை ஆதரிக்கின்றனர், ஜனவரி 24 இல் ஒரு புதிய தேசிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதான தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தங்கள் ஏற்படுவதை நிறுத்தவும் மற்றும் அவற்றுக்கு அதிகளவில் நேரடியாக கீழ்படிந்திருக்கும் ஒரு நாள் நடவடிக்கைகளுக்கு திரும்பவுமே முயன்று வருகின்றன என்பதும் அவற்றின் அறிக்கைகளில் மிகத் தெளிவாக உள்ளது.

சுதந்திர சங்கங்களின் தேசிய கூட்டமைப்பின் (UNSA) RATP கிளையின் தகவல்படி, “45 நாட்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்குப் பின்னர், இரயில் வலையமைப்பு சம்பந்தமான வேலைநிறுத்த கூட்டங்களில் பெரும்பாலானவை திங்களன்று காலவரையற்ற இயக்கத்தின் நிலைநோக்கை மாற்றவும் மற்றும் வேறு நடவடிக்கை வடிவங்களில் ஈடுபடவும் முடிவெடுத்தன. இது இறுதியில், பிரெஞ்சு பெண்கள் மற்றும் ஆண்கள் என, இந்த போராட்டத்தைத் தொடுக்க எங்களை அனுமதிக்கும்.” “இரயில் வலையமைப்பு சம்பந்தமான வேலைநிறுத்த கூட்டங்களின் விருப்பத்திற்கு ஒத்த விதத்தில், பெண்கள் மற்றும் ஆண்கள் ஒருமித்து வெவ்வேறு துறை அணித்திரள்வுகளில் தொடர்ந்து ஈடுபடுமாறு" UNSA அழைப்பு விடுத்தது.

மக்ரோனுக்கு எதிரான தொழிலாள வர்க்க தாக்குதலால் உலுக்கப்பட்ட தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் வேலைநிறுத்தக்காரர்களைத் திரும்ப வேலைக்கு அனுப்ப எந்தவொரு சாக்குபோக்கையும் பற்றிக்கொள்கின்றனர். RATP தொழிலாளர்களின் தகவல்படி, வேலைநிறுத்த கூட்டங்களில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் "வன்முறையை" விமர்சிக்க, ஜனவரி 17 இல் மக்ரோனுக்கு ஆதரவான பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பின் (CFDT) தலைமையகத்திற்குள் நுழைந்த வேலைநிறுத்தக்காரர்களை தாக்கினர் மற்றும் நிதானத்துடன் இருக்க அழைப்பு விடுத்தனர்.

மார்ட்டினேஸ், Le Parisien பேட்டி ஒன்றில், வெட்டுக்களை ஆதரித்த CFDT ஐ எதிர்த்து போராடிய அந்த வேலைநிறுத்தக்காரர்களைக் கண்டித்தார். “இதுபோன்ற மட்டுமீறிய தன்மை, ஒரு ஜனநாயகத்தில் ஒருபோதும் ஒரு சட்டபூர்வ வெளிப்பாட்டு முறையாக இருக்காது. கருத்து பரிவர்த்தனைகள் விவாதங்களை முன்னுக்குக் கொண்டு வரும், ஆனால் வன்முறை அதை தரங்குறைத்து விடும்,” என்றார்.

“நாங்கள் பெரும்பாலும் அவருடன் உடன்படவில்லை,” என்று RATP தொழிலாளி ஒருவர் தெரிவித்தார். இப்போதைக்கு, CFDT அலுவலகங்களுக்குள் நுழைந்த வேலைநிறுத்தக்காரர்கள் தான் வன்முறையாக நடந்து கொண்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அவர்களில் ஒருவரான அனஸ் காசிப் (Anasse Kazib), அவர்கள் "வன்முறையைப் பிரயோகித்து நுழைந்தார்கள்" என்ற CFDT செயலாளர் லோரோன் பேர்ஜே இன் குற்றச்சாட்டுக்களை உறுதியாக மறுத்தார். "பொய்களின் மன்னரான, உங்களிடம் இருந்து வரும்" இந்த குற்றச்சாட்டு "என்னை ஆச்சரியப்படுத்தவில்லை, ஆனால் அதிருஷ்டமில்லை: நாங்கள் ஒவ்வொன்றையும் படம் எடுத்துள்ளோம், அங்கே வாய் வார்த்தையாகவோ அல்லது உடல்ரீதியிலோ எவ்விதத்திலும் வன்முறை இருக்கவில்லை, இருப்பினும் உங்கள் நிர்வாகிகளில் ஒருவர் வேலைநிறுத்தக்காரரின் மேல் சட்டையைக் கிழித்தார், மற்றொருவர் ஒரு பெண் வேலைநிறுத்தக்காரரை தள்ளி விட்டார்,” என்று காசிப், பேர்ஜேக்கு தெரிவிப்பதாக கூறினார்.

இந்த காலவரையற்ற வேலைநிறுத்த நடவடிக்கையின் முடிவு ஒரு போராட்டத்தின் முடிவைக் குறிக்கவில்லை. “மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்கள் மற்றும் வேலைநிறுத்தக்காரர்களின் பல குழுக்களும் தொடர்ந்து போராட தீர்மானமாக உள்ளதுடன், பிரான்சில் மக்ரோனுக்கு எதிராகவும், சர்வதேச அளவில் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும், தொழிலாள வர்க்கத்தின் கோபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆனால் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து ஒரு போராட்டத்தை தொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் வேலைநிறுத்தக்காரர்கள் வேலைக்குத் திரும்பலாம் என்று அவர்களுக்கு தொழிற்சங்கங்கள் கூறும் உத்தரவாதங்கள் மீது அவர்கள் எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது. டிசம்பர் 5 காலவரையற்ற வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்கள் மீது சாமானிய தொழிலாளர்களால் திணிக்கப்பட்டது, தொழிற்சங்கங்கள் இலையுதிர் காலத்தில் SNCF இன் பல தன்னிச்சையான நடவடிக்கைகளுக்குப் பின்னர் மொத்தத்தில் கட்டுப்பாட்டை இழந்து விடுவோமோ என்று அஞ்சின. மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக போர்குணமிக்க நடவடிக்கைக்குத் திரும்புவதும், மற்றும் போராட்டத்தினுள் தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளை உள்ளீர்ப்பதும், தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக நடவடிக்கை எடுப்பதைச் சார்ந்திருக்கும்.

இந்த போராட்டம், தொழிற்சங்கங்களுடனான தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில் பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste – PES) வழங்கிய எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகின்றன. மக்ரோனுடன் பேரம்பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்ற போதும், வெட்டுக்கள் மீது அவருடன் பேரம்பேசுவதற்குத் திட்டமிட்டு வரும் மற்றும் அரசாங்கத்துடன் பிணைந்துள்ள அவை அந்த போராட்டத்தின் குரல் வளையை நெரித்தன. மக்ரோனைக் கீழிறக்குவதற்கான ஓர் அரசியல் போராட்டத்திற்கு, பிரான்சிலும் மற்றும் சர்வதேச அளவிலும், தொழிலாள வர்க்கத்தின் பரந்த அடுக்குகளிடம் இருந்து ஆதரவைப் பெறுவதற்காக, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான, நடவடிக்கை குழுக்களை தங்களின் வேலைநிறுத்த கூட்டங்களாக கட்டமைப்பதே தொழிலாளர்களுக்கு முன்னோக்கி செல்லும் பாதையாகும்.