ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ජනාධිපතිට පාර්ලිමේන්තුවේ තුනෙන් දෙකක බලයක් ලබාදීමට මෛත්‍රීපාල සිරිසේන කැපවෙයි

இலங்கை பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்க மைத்ரிபால சிறிசேன அர்ப்பணிக்கின்றார்

By W.A. Sunil
16 December 2019

டிசம்பர் 11 அன்று நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) கட்சி அமைப்பாளர்கள் கூட்டத்தில், கட்சியின் தலைவரும் முன்நாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன, வரவிருக்கும் பொதுத் தேர்தலில் புதிய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற கட்சி கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவித்தார். நாட்டை "அபிவிருத்தி" செய்வதற்கும் "வளமான" நாட்டை உருவாக்குவதற்கும் "ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க" ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவுக்கு மூன்றில் இரண்டு பங்கு ஆணை கிடைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிசேனவின் இந்த அழைப்பு, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கான ஜனாதிபதி இராஜபக்ஷவின் அழைப்புக்கு முன்னால் பாய்ந்து சென்று ஒத்துழைப்பதாகும். தனது இந்திய பயணத்தின் போது இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இராஜபக்ஷ இவ்வாறு கூறினார்: “19 வது அரசியலமைப்பு திருத்தம் தோல்வி கண்டுள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால், அதை அரசியலமைப்பிலிருந்து நீக்க்குவோம். வெற்றிகரமாக ஆட்சி செய்ய ஸ்திரநிலைமை அவசியம். சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் இது நடக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து ஒருவருக்கொருவர்  மோதிக் கொண்டிருந்தார்கள், எந்த அபிவிருத்தியும் நடக்கவில்லை. ஸ்திரத்தன்மை இல்லாத சூழலில் முதலீட்டாளர்கள் வரப் போவதில்லை.”

கடந்த அரசாங்கத்தின் 19 வது திருத்தம் ஜனாதிபதியின் சில எதேச்சதிகார அதிகாரங்களை மட்டுப்படுத்தியது. ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரண்டு  முறைக்கு கட்டுப்படுத்துதல்; அமைச்சுப் பொறுப்புக்களை கொண்டிருப்பதை நீக்குதல்; பிரதமரின் ஆலோசனையின் பேரில் அமைச்சர்களின் நியமனங்களை மேற்கொள்ள வைத்துள்ளமை; உயர்மட்ட நீதித்துறை மற்றும் உயர் அரச அதிகாரிகளை நியமிப்பதை அரசியலமைப்புச் சபைக்கு மாற்றுவதன் ஊடாக, அந்தச் சபையால் நிறுவப்படும் சுயாதீன ஆணைக்குழுக்களால் அவர்களை நியமிக்கச் செய்வதும் இந்தத் திருத்தத்தில் அடங்கும். இந்த அரசியலமைப்பு திருத்தம் என்பது, பகிரங்கமாக வெறுக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அகற்றுவதாக கொடுத்த வாக்குறுதியை குப்பையில் எறிந்துவிட்டு, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதற்கு எடுக்கப்பட்ட நவடிக்கையாகும்.

இராஜபக்ஷவின் கோரிக்கை மிகவும் தெளிவானது. அவர் விரும்புவது இந்த கட்டுப்பாடுகளை நீக்கி, ஒரு "ஸ்திரமான" ஆட்சியை நிறுவி, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அவசியமான நிலைமைகளை உருவாக்குவதாகும். அவரது ஏனைய கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டால், இது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் எதேச்சதிகாரத்தை நிறுவும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

கடந்த சில ஆண்டுகளாக எதேச்சதிகாரத்திற்கு மாற முயன்ற சிறிசேன, அரசியல் ரீதியாக அபகீர்த்திக்கு உள்ளாகியுள்ள நிலையில், இராஜபக்ஷவின் வேலைத் திட்டத்துடன் இணைகின்றார். ஜனாதிபதித் தேர்தலில், இராஜபக்ஷவை ஆதரிக்கும் ஸ்ரீ.ல.சு.க.வின் பிரச்சாரத்திற்கும் தலைமை தாங்கினார்.

2015 ஏப்பிரலில் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட தினத்திலிருந்து, சிறிசேன தனது அதிகாரத்தை குறைத்துக்கொண்ட உலகின் ஒரே ஓரு தலைவன் தானே என்று பெருமிதம் கொண்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையிலும் அவர் இந்த கருத்தை வெளியிட்டார். இப்போது அவர் வெட்கமின்றி, தயக்கமின்றி 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதற்காக இராஜபக்ஷவின் கரங்களை வலுப்படுத்த முன்வந்துள்ளார்.

இராஜபக்ஷவைப் போலவே, சிறிசேனவும் இலங்கை முதலாளித்துவம் எதிர்கொள்ளும் பாரிய அரசியல் நெருக்கடியை பற்றி அறிந்தவர். குறிப்பாக சர்வதேச வர்க்கப் போராட்டங்களின் ஒரு பகுதியாக, இலங்கையில்  வளர்ச்சியடையும்  தொழிலாள வர்கத்தின் போர்க் குணாம்சமானது ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் பீதிக்குள்ளாகியுள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளதன் காரணமாக, 2018 பெப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐ.தே.க. தோல்வியடைந்ததை அடுத்து, சிறிசேன தனது கட்சியை “தேசிய ஐக்கிய அரசாங்கத்திலிருந்து” விலக்கிக்கொண்டார். அந்த ஆண்டு அக்டோபரில் ஒரு அரசியல் சூழ்ச்சியை மேற்கொண்டு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, அவ்விடத்திற்கு "வலுவான அரசாங்கத்தை" உருவாக்குவதற்காக மஹிந்த இராஜபக்ஷவை நியமித்தார். தொழிலாள வர்க்கத்தை அடக்கக்கூடிய ஒரு அரசாங்கத்தை நிறுவுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ சீன சார்புடையவராக கருதிய வாஷிங்டன், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், சிறிசேனவின் நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம், இந்த சதித்திட்டம் சீர்குலைந்தது.

பின்னர், முன்கூட்டியே எச்சரிக்கைகள் கிடைத்து இருந்த போதிலும், புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் சிறிசேன உட்பட அரசியல் தலைவர்கள், ஏப்ரல் 21 ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை நடத்த அனுமதித்தனர். சிறிசேன, ஏனைய அனைத்து கட்சிகளினதும் ஆதரவோடு, அவசரகால விதிமுறைகளை பிரகடனப்படுத்தவும், ஆயுதப்படைகளைப் பயன்படுத்தி நாடு முழுவதும் பெரியளவில் முஸ்லிம்-விரோத உணர்வைத் தூண்டவும், இந்த கொடூரமான தாக்குதல்களை பயன்படுத்திக்கொண்டார். இந்த நடவடிக்கைகள் தொழிலாள வர்க்க போராட்டங்களை அடக்குவதை இலக்காகக் கொண்டிருந்தன.

சிறிசேன இப்போது மற்றொரு படி முன்சென்று இராஜபக்ஷவுக்கு சர்வாதிகார அரசாங்கத்தை ஸ்தாபிக்க தனது பங்களிப்பு செய்கிறார்.

டிசம்பர் 12, சிறிசேன வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஸ்ரீ.ல.சு.க. அமைப்பாளர்களை வரவழைத்து, இராஜபக்ஷவுக்கு வாக்குகளை பெற்றுக்கொடுக்குமாறு கோரினார். சிறிசேன, புதிய அரசாங்கத்திற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதே ஸ்ரீ.ல.சு.க. அமைப்பாளர்களின் பொறுப்பு என்று கூறியுள்ளார். அவர் எதை பிதற்றினாலும் சிறிசேன 2015 இல் அளித்த வாக்குறுதிகளை மீறியதற்காக தமிழ மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளார்.

போரின் கொடூரத்திற்காக தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளால் வெறுக்கப்பட்ட இராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கில் மோசமாக நிராகரிக்கப்பட்டார். 30 ஆண்டுகால கொடூரமான யுத்தத்தை நடத்தியதால் ஐ.தே.க. போலவே ஸ்ரீ.ல.சு.க.வும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களால் வெறுக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில், தமிழர்கள் இராஜபக்ஷவை எதிர்த்து வாக்களித்தமையாலேயே சஜித் பிரேமதாச இந்த மாகாணங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார். அமெரிக்க சார்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர்களை ஐ.தே.க. மற்றும் பிரேமதாசவின் வலையில் சிக்க வைக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

சிறிசேன தலைமையிலான ஸ்ரீ.ல.சு.க. சீர்குலைந்து போயிருப்பது இராஜபக்ஷவின் கையை வலுப்படுத்த சிறிசேன வெளிப்படையாக முன்வந்திருப்பதத்திற்கு மற்றுமொரு காரணமாகும்.

1951 இல் நிறுவப்பட்ட ஸ்ரீ.ல.சு.க., இலங்கையில் முதலாளித்துவ வர்க்க ஆட்சியைப் பாதுகாப்பதில் தீர்க்கமான பங்களிப்பை செய்துள்ளது. S.W.R.D. பண்டாரநாயக்க உட்பட ஒரு குழு, அப்போதைய ஆளும் ஐ.தே.க.விலிருந்து பிரிந்து இந்த கட்சியை உருவாக்கி, ஐ.தே.க.வின் ஏகாதிபத்திய சார்பு வலதுசாரி திட்டத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் கடுமையான எதிர்ப்பு அபிவிருத்தியடைந்த சூழ்நிலையில், தம்மை ஒரு மாற்றீடாக காட்டிக்கொண்டது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க.) பக்கம் தொழிலாள வர்க்கம் ஈர்க்கப்படுவதையிட்டு ஆளும் வர்க்கம் அச்சம் கொண்டிருந்தது.

ஏழைகளதும் ஆதரவைப் பெற்றிருந்த தொழிலாளர்களின் ஹர்த்தாலினால் 1953 இல் ஐ.தே.க. ஆட்சி நெருக்கடிக்கு உள்ளானதை அடுத்து, ஸ்ரீ.ல.சு.க. கனிசமானளவு முதலாளித்துவ ஆதரவைப் பெற்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்சவடாலுடன் சிங்கள ஜனரஞ்சகவாதத்தை பிணைத்து, பண்டாரநாயக்க 1956 இல் சிங்களத்தை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக ஆக்கும் பெயரில் குட்டி முதலாளித்துவ கூறுகளின் இயக்கத்தை கட்டவிழ்த்துவிட்டே ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபித்தார். அவரது பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிரித்து, முதலாளித்துவ வர்க்கப் பலத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இது, முதலாளித்துவ நெருக்கடியின் மத்தியில், தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை ஒழிப்பதற்காக 1948 இல் ஐ.தே.க. அரசு மேற்றக்கொண்ட நவடிக்கையை மேலும் மேலும் விரிவாக்குவதாக அமைந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சுதந்திரம் பெற்ற பெரும்பாலான நாடுகளில் ஆட்சிக்கு வந்த இந்த கட்சிகளைப் போலவே, அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான மோதலில் சிக்கிய ஸ்ரீ.ல.சு.க., ஒரு தேசியவாத வேலைத்திட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து தடம்புரண்டுக்கொண்டிருந்த ல.ச.ச.க. அதற்கு அடிபணிந்ததோடு, 1964இல் அது செய்த பாரிய காட்டிக்கொடுப்பு, ஸ்ரீ.ல.சு.க. மட்டுமன்றி, முதலாளித்துவத்தின் இருப்பையே நீட்டிக்க உதவியது. ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பம் முதலே செய்து வந்த துரோகங்களும் அதனுடன் சேர்ந்திருந்தன.

உற்பத்தியின் உலகமயமாக்கல் வளர்ச்சியடைந்த நிலையில், 1977 இல் ஆட்சிக்கு வந்த ஐ.தே.க. அரசங்கம், சர்வதேச நிதி மூலதனத்திற்கு அழைப்பு விடுத்து இலங்கையில் “திறந்த பொருளாதாரக் கொள்கைகளை” அறிமுகப்படுத்தியது. ஸ்ரீ.ல.சு.க., பழைய தேசியவாதக் கொள்கைகள கைவிட்டு திறந்த பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் சமூக உரிமைகளுக்கு எதிரான வர்க்கப் போராட்டங்களை அடக்குவதற்காக, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்த ஐ.தே.க. அரசாங்கம், அடக்குமுறையை முன்னெடுப்பதற்காக தொடர்ச்சியான இனவாத ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டது.

ஸ்ரீ.ல.சு.க. இந்த போரை ஆதரித்ததுடன் ஆட்சிக்கு வந்த பின்னர் சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த இராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அதை கொடூரமாக முன்னெடுத்துச்சென்றது. தமிழ் மக்கள் மீது பெரும் பேரழிவை ஏற்படுத்தி 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தது.

சிறிசேன இதையெல்லாம் முழுமையாக ஆதரித்துவிட்டு, பெய்ஜிங்கிற்கு சார்பானவராக கருதப்பட்ட ஜனாதிபதி மஹிந்தவை வெளியேற்றுவதற்காக புது டெல்லியின் ஆதரவுடன் வாஷிங்டன் திட்டமிட்ட ஆட்சி கவிழ்ப்பு சதியில் "பொது ஜனாதிபதி வேட்பாளராக" போட்டியிடும் பொருட்டு, 2014 கடைப் பகுதியில், குமாரதுங்கவின் உந்துதலில் ஸ்ரீ.ல.சு.க.வில் இருந்து வெளியேறினார். பெய்ஜிங் பக்கம் சாய்ந்திருந்த மஹிந்தவை ஆட்சியில் இருந்து இறக்கி, சீனாவுக்கு எதிரான போருக்கான தனது தயாரிப்புகளில் இலங்கையில் இணைத்துக்கொள்ள அமெரிக்கா முயற்சித்தது. சிறிசேன ஆட்சிக்கு வந்தபின், விக்கிரமசிங்கவுடன் இணைந்து இலங்கையை அமெரிக்க இராணுவ இயந்திரத்துடன் இணைக்க பணியாற்றினார்.

சிறிசேனவின் இந்த பிற்போக்கு மாற்றத்தால், ஸ்ரீ.ல.சு.க. சிதறத் தொடங்கியது. மஹிந்த, கட்சித் தலைமையை தோல்வியிலிருந்து கைப்பற்றிய அதேவேளை, ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களே சிறிசேனவுடன் நின்றனர். விரைவில், இராஜபக்ஷ தலைமையிலான கன்னை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை உருவாக்கி, சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை சுரண்டிக்கொண்டு, சிங்கள பௌத்த இனவாத குழுக்களை இணைத்துக்கொண்டு, இராணுவத்திதிற்கு அழைப்பு விடுத்து, அரசாங்கத்திற்கு சவால் விடுக்க முன்வந்தது. ஸ்ரீ.ல.சு.க. கரைந்து போகத் தொடங்கியதால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உடன் கூட்டில் நுழைந்துகொண்டதுடன், அதன் தலைவர்கள் இராஜபக்ஷ கையில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீ.ல.சு.க, முற்றிலும் அல்லது அற்ப நிலைக்கு கரைந்து போயுள்ளது. இந்தச் சூழலிலேயே, இராஜபக்ஷ, இராணுவம் மற்றும் இனவாதிகளில் தங்கியிருந்து, எதேச்சதிகார ஆட்சியை பலப்படுத்தும் முயற்சியுடன் சிறிசேன இணைந்துகொண்டுள்ளார்.