ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan police arrest two former government ministers

இரண்டு முன்னாள் அரசாங்க அமைச்சர்களை இலங்கை பொலிஸ் கைது செய்தது

By Pradeep Ramanayake
4 January 2020

கடந்த மாதம், இலங்கை பொலிஸ் பாடலி சம்பிக ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகிய இருவரையும் கைது செய்தது. அவர்கள் இருவரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் முந்தைய அரசாங்கத்தின் பிரதான அமைச்சர்களுமாவர்.

மெகாபொலிஸ் (நகர அபிவிருத்தி), மேல் மாகாண அபிவிருத்தி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரான ரணவக்க, 2016 ஆம் ஆண்டு வீதி விபத்து தொடர்பான குற்றச்சாட்டில் டிசம்பர் 18 அன்று கைது செய்யப்பட்டு, கொழும்பு தலைமை நீதவானால் விளக்க மறியலில் வைக்கப்பட்டார். ஆள் பிணை மற்றும் ரொக்க பிணை விதித்து டிசம்பர் 24 அன்று அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், வழக்கு முடியும் வரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அவர் பொலிசில் நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்ன, கொழும்பில் உள்ள மற்றொரு நீதவானின் உத்தரவின் பேரில் பொலிசாரால் டிசம்பர் 27 கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டார். உடல்நிலை சரியில்லாததால் அவர் சிறைக்கு அனுப்பப்படவில்லை. நவம்பர் மாதம் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முந்தைய ஆட்சியின் கீழ், "வெள்ளை வேன் கடத்தல்கள்" குறித்து "தவறான குற்றச்சாட்டுகள்" முன்வைத்ததாக சேனாரத்ன மீது குற்றம் சாட்டப்பட்டது. பிணை செலுத்திய பின்னர் அவருக்கு டிசம்பர் 30 அன்று பிணை வழங்கப்பட்டதுடன், அவரது கடவுச் சீட்டை ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

இந்த இரண்டு முன்னாள் நண்பர்களின் கைது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவின் அரசாங்கம், இலங்கை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக உரிமைகள் மீதான ஆழமான தாக்குதல்களுக்கு தயாராவதன் பேரில், அதனது அரசியல் எதிரிகளை மௌனமாக்க முயற்சிக்கிறது என்பதைக் குறிக்கிறது.

ரணவக மீதான குற்றச்சாட்டுகளின்படி, அமைச்சர் 2016 பெப்ரவரியில் அவர் பயணித்த வாகனம் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், மோட்டார் சைக்களில் சென்ற இளைஞர் சந்தீப சம்பத் என்பவருக்கு உயிராபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரணவக வாகனத்தை ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட போதிலும், குற்றச்சாட்டில் இருந்து தப்புவதற்கு தனது அமைச்சர் அதிகாரங்களை பயன்படுத்திக்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, திடீரென இலங்கை பொலிசின் கொழும்பு குற்றப்பிரிவு, ரணவக கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாகவும், மோட்டார் விபத்து ஏற்பட்ட பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், நீதிமன்றங்களை தவறாக வழிநடத்த சாரதியை மாற்றியதாகவும் குற்றம் சாட்டியது. பல ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காமை, விபத்துக்குள்ளானவருக்கு நீதி கோருவதில் அவர்களுக்கு அதிக அக்கறையும் இல்லை என்பதைக் காட்டுகிறது.

நவம்பர் 16 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் அடிப்படையிலேயே சேனாரத்ன மீதான குற்றச்சாட்டுகள் அமைந்துள்ளன. இந்த மாநாட்டில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, கடத்தல்களில் ஈடுபட்ட ஒரு வெள்ளை வேனின் சாரதிகள் எனக் கூறும் இரண்டு நபர்கள் இடம்பெற்றிருந்தனர்.

எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோட்டபய ராஜபக்சேவை அரசியல் ரீதியாக கீழறுப்பதற்கு சேனாரத்ன செய்தியாளர் சந்திப்பைப் பயன்படுத்திக்கொண்டார். இராணுவ புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட துணை ராணுவ குழுக்கள், வெள்ளை வேன் கடத்தல்களை மேற்கொண்டதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

சேனாரத்னவின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை பொலிஸ் கைது செய்து மற்றொரு ஊடக மாநாட்டை நடத்தியது, அதில் அவர்கள் இருவரும், சேனாரத்னவின் செயலாளர் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதற்காக மில்லியன் கணக்கான ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக கூறினர்.

இந்த கூற்றுக்கள் மற்றும் எதிர் கருத்துக்களின் உண்மை என்னவாக இருந்தாலும், வெள்ளை வேன் கடத்தல்கள் பற்றிய விடயம், அப்போதைய எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) கோபத்தை தூண்டியது. அது அதன் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒரு "சேரடிப்பு" என்று கண்டனம் செய்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போதும் அதற்குப் பின்னரும் அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்களை வெள்ளை வேன்களில் கடத்தப்பட்டது பொதுவில் எல்லோரும் அறிந்த விடயமாகும். கடத்தப்பட்ட சிலர் காணாமல் போய்விட்டனர். மற்றவர்கள் அச்சுறுத்தப்பட்டு அல்லது உடல் ரீதியாக தாக்கப்பட்ட பின்னர் வீதியோரத்தில் தள்ளிவிடப்பட்டனர்.

கடத்தப்பட்ட சில பிரபலங்களில், நேஷன் பத்திரிகையின் ஆசிரியர் கீத் நொயர், ரிவிர பத்திரிகையின் ஆசிரியர் உபாலி தென்னகோன் மற்றும் பத்திரிகையாளரான போதல ஜெயந்த ஆகியோரும் அடங்குவர். 2009 ஜனவரியில், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, பட்டப் பகலில் மோட்டார் பைக்கில் வந்தவர்களால் அவரது காரைத் தடுத்து நிறுத்தி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு பத்திரிகையாளர் பிரகீத் ஏக்னலிகொட, காணாமல் போய்விட்டார்.

சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் போது, ​​இந்த கடத்தல்கள் தொடர்பாக சில சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை பொலிசார் கைது செய்தனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மூத்த சகோதரரும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவும் இந்த கைதுகளை பகிரங்கமாகக் கண்டித்து, அந்த சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட இராணுவத்தை “போர்வீரர்கள்” என்று பாராட்டி அவர்ளை பாதுகாப்பதாக உறுதியளித்தனர்.

கோடாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ, குறிப்பாக ரணவக மற்றும் சேனாரத்னவுக்கும் விரோதமானவர்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் சிரேஷ்ட அமைச்சரான மைத்ரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கான அரசியல் ஆட்சி மாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அரசாங்கத்தை விட்டு வெளியேறினார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவோடு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உடன் சேர்ந்து அமெரிக்கா இந்த ஆட்சி மாற்ற சதியை திட்டமிட்டது. 2015 தேர்தல் பிரச்சாரத்தில், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் முக்கிய அமைச்சர்களாக இருந்த சேனாரத்னவும் ரணவக்கவும் ராஜினாமா செய்து சிறிசேனாவின் பிரச்சாரத்தில் சேர்ந்தனர்.

பாசிச சிங்கள-பௌத்த ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான ரணவக்கவும் மற்றும் சேனாரத்னவும் 2015 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். மஹிந்த ராஜபக்ஷவினதும் சிறிசேன-விக்ரமசிங்கவினதும் முன்னாள் அரசாங்கங்களில் "ஆமாம் சாமி" போடும் பேர்வழிகளாக இருந்த அவர்கள் இருவரும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரத்தக்களரி யுத்தத்திற்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீதான ஏராளமான ஜனநாயக விரோத தாக்குதல்களுக்கும் பொறுப்பாளிகள் ஆவர்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), ராஜபக்ஷ அரசாங்கத்தின் அரசியல் எதிரிகளுக்கு எந்த அரசியல் ஆதரவையும் கொடுக்காத அதே வேளை, அவர்களுக்கு எதிரான வேட்டையாடலை எதிர்க்கின்றது. இது பொலிஸ்-அரச ஆட்சியை நோக்கிய அரசாங்கத்தின் விரைவான தயாரிப்புகளின் ஒரு பகுதியாகும் என்று சோ.ச.க. எச்சரிக்கிறது.

வர்க்கப் போராட்டத்தின் மீள் எழுச்சி பற்றி ஆளும் வட்டங்களுக்குள் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த பீதியினால் உலகெங்கிலும் "தாராளமய-ஜனநாயக" அரசாங்கங்கள் என அழைக்கப்படுபவை எல்லாம் சர்வாதிகார ஆட்சி முறைகளுக்கு வழிவகுத்து வருகின்ற நிலையில், இலங்கையில் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், ஒரு சர்வதேச செயல்முறையின் வெளிப்பாடு ஆகும்.

புதிய கோடாபய ராஜபக்ஷ ஆட்சி, தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் பதாகையின் கீழ் ஆட்சிக்கு வந்ததுடன் இலங்கையின் வெகுஜனங்களுக்கு எதிராக அதிகரித்த சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் செய்கின்ற வற்புறுத்தலை முன்னெடுக்க உறுதியளித்தது. முதலாளித்துவ ஆட்சியின் உண்மையான எதிரிகளான உழைக்கும் மக்களின் வெகுஜன இயக்கத்தை நசுக்குவதற்கு இலங்கை ஆளும் உயரடுக்கு எந்தளவு ஈவிரக்கமின்றி நகரும் என்பதை இந்த இரண்டு ஆளும் வர்க்க பிரதிநிதிகளான ரணவக மற்றும் சேனாரத்ன கைது செய்யப்பட்டமை வெளிப்படுத்தியுள்ளது.

சர்வாதிகார ஆட்சி முறைகளுக்கான இந்த எதிர் புரட்சிகர தயாரிப்புகளை தோற்கடிக்க தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக தயாராகி அணிதிரள வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் பிரிந்து தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும். இத்தகைய இயக்கம் உலகளாவிய சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து சோசலிசக் கொள்கைகளை அமல்படுத்தும் ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராடுவதற்காக கிராமப்புற ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்ட வேண்டும். இந்த வேலைத் திட்டத்துக்காக சோ.ச.க. மட்டுமே போராடுகிறது.