ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The murder of Qassem Soleimani and assassination as state policy

குவாசெம் சுலைமானியின் கொலையும், படுகொலை செய்வது அரசு கொள்கையாவதும்

Bill Van Auken
4 January 2020

வெள்ளியன்று அதிகாலை பாக்தாத் சர்வதேச விமான நிலையைத்தில் ஈரானிய தளபதி குவாசெம் சுலைமானி மற்றும் ஏனைய ஏழு பேரை அதன் டிரோன் ஏவுகணை தாக்குதலில் கொன்றதன் மூலம், ட்ரம்ப் நிர்வாகம் உலகையே ஸ்தம்பிக்க செய்துள்ள ஒரு குற்றகரமான அரசு பயங்கரவாத நடவடிக்கையை நடத்தி உள்ளது.

ஈரானிய இராணுவத்தின் ஒரு தளபதியும் தெஹ்ரானில் இரண்டாவது மிகவும் சக்தி வாய்ந்த பிரமுகருமான ஒருவரை வாஷிங்டன் இரத்தம்தோய்ந்த முறையில் படுகொலை செய்தமை, கேள்விக்கிடமின்றி ஓர் போர் குற்றமும் மற்றும் ஈரானுக்கு எதிரான ஒரு நேரடியான போர் நடவடிக்கை ஆகும்.


ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புளோரிடாவின் பால்ம் கடற்கரையில் ஜனவரி 3, 2020 வெள்ளியன்று, அவரின் மார்-அ-லாகோ இடத்திலிருந்து, ஈரான் குறித்து கருத்துரை தெரிவிக்கிறார் (புகைப்படம்: அசோசியேடெட் பிரஸ்/ இவான் வுக்கி)

 

அந்த படுகொலைக்கு ஈரான் விடையிறுப்பதற்குச் சிலகாலம் ஆகலாம். உண்மையில் குறிப்பாக வெகுஜனங்களின் ஆதரவு பெற்ற ஒரு பிரமுகரின் படுகொலை மீது பொதுமக்கள் மத்தியில் நிலவும் சீற்றத்தின் காரணமாக  தெஹ்ரான் விடையிறுக்கும் என்பதில் எந்த கேள்வியும் இல்லை.

ஆனால் வாஷிங்டன் அதன் குற்றகரமான நடவடிக்கைக்குக் கொடுத்த கவனத்தை விட மிகவும் அதிகமாகவே ஈரான் அதன் விடையிறுப்பு தொடர்பாக கவனத்தை செலுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெள்ளியன்று ஒன்றுகூடியது, ஈரானிய அதிகாரிகள் சுலைமானி படுகொலை குறித்து மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் உடன் விவாதிப்பதற்கு எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளதுடன், ஐரோப்பாவுடன் விவாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. அமெரிக்க அதிகாரிகளும் பெருநிறுவன ஊடகங்களும் ஏறத்தாழ அவர்களின் சொந்த நோக்கத்திற்காக உடனடியான பதிலடியை விரும்புவதாக தோன்றுகின்றது. ஆனால் ஈரானியர்களுக்கு அதிக தேர்வுகள் உள்ளன.

சுலைமானியைக் கொன்றதன் மூலம், ஈராக்கை விட அளவில் நான்கு மடங்கு பெரியதும் இரண்டு மடங்குக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டதுமான ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடைமுறையளவில் ஒரு போரைத் தொடங்கி உள்ளது என்பது ஓர் அரசியல் உண்மையாகும். இதுபோன்றவொரு போர் அப்பிராந்தியம் எங்கிலும், சொல்லப் போனால் ஒட்டுமொத்த உலகம் முழுவதும், கணக்கிடவியலாத விளைவுகளுடன் ஆயுதமேந்திய மோதலாக பரவ அச்சுறுத்தும்.

மத்திய கிழக்கில் அதன் அந்தஸ்து மீது அதிகரித்து வரும் அமெரிக்காவின் விரக்தி மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்திற்குள் அதிகரித்து வரும் உள்நாட்டு நெருக்கடி ஆகியவற்றால் உந்தப்பட்டுள்ள இந்த குற்றம், அதன் அடாவடித்தனம் மற்றும் சட்டமீறலின் அளவில் அதிர்ச்சியூட்டுகிறது. அமெரிக்கா இதுபோன்றவொரு மிகவும் வெறுக்கத்தக்க நடவடிக்கையை நாடியமை, 1991 மற்றும் 2003 ஈராக் படையெடுப்புக்கு இட்டுச் சென்ற மூலோபாய நோக்கங்களில் எதையும் அது எட்ட தவறியுள்ளது என்ற உண்மைக்கே சான்று பகிர்கிறது.

சுலைமானியின் படுகொலை அமெரிக்க வெளியுறவு கொள்கையினது குற்றகரத்தன்மையின் ஒரு நீடித்த நிகழ்முறையின் உச்சக்கட்டமாகும். “உலக ஏகாதிபத்திய அரசியலின் பேரகராதியில் இஸ்ரேலினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை "இலக்கு வைத்து கொல்லுதல்" என்பதை அண்மித்து இரண்டு தசாப்தங்களின் போக்கில் தெற்காசியாவில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா வரையில் நீண்ட நாடுகளில் பயங்கரவாதிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தியம் பயன்படுத்தி உள்ளது. ஆனால் சட்டரீதியாகவும் பகிரங்கமாகவும் மூன்றாவது ஒரு நாட்டிற்கு விஜயம் செய்திருந்த ஒரு மூத்த அரசு அதிகாரியைப் படுகொலை செய்வதற்கு உத்தரவிட்டதையும், அதற்கான பொறுப்பைப் பகிரங்கமாக அமெரிக்க ஜனாதிபதி ஏற்றுக்கொள்வது என்பதும் இதுவரையில் முன்நிகழ்ந்திராத நிகழ்வாகும்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் கூத்ஸ் படைப்பிரிவின் தலைவர் சுலைமானி, ஒசாமா பின் லேடனோ அல்லது அபு பக்ர் அல்-பாக்தாதியோ கிடையாது. அதற்கு மாறுபட்ட விதத்தில், அமெரிக்க சிறப்பு நடவடிக்கை மரணப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட அவ்விரு நபர்களும் வழிநடத்திய அல் கொய்தா மற்றும் ISIS [ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசு] படைகளைத் தோற்கடிப்பதில் சுலைமானி ஒரு முக்கிய பாத்திரம் வகித்தவராவார்.

ஈரானிய தேசியவாதத்தின் ஓர் அடையாளமாக பார்க்கப்பட்டவரும் மற்றும் தசாப்த காலமாக அந்நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களை எதிர்த்தவருமான சுலைமானைப் படுகொலை செய்ததை எதிர்த்தும் மற்றும் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் வெள்ளிக்கிழமை நூறாயிரக் கணக்கான மக்கள் தெஹ்ரான் மற்றும் ஈரான் எங்கிலுமான நகரங்களின் வீதிகளில் நிரம்பினர்.

ஈராக்கில், அமெரிக்க டிரோன் தாக்குதல் முற்றிலுமாக அந்நாட்டின் இறையாண்மை மற்றும் சர்வதேச விதிமீறலாக கண்டிக்கப்பட்டுள்ளது. அதில் இறந்தவர்கள் சுலைமானி மட்டுமல்ல, மாறாக அந்நாட்டின் ஆயுத படைகளின் பாகமாக கருதப்படும் 100,000 ஷியா போராளிகளின் பலமான கூட்டணியான ஈராக்கின் மக்கள் அணிதிரள்வு படையின் (PMF) இரண்டாம் நிலை தளபதியான அபு மஹ்தி அல்-முஹன்திஸூம் அதில் உள்ளடங்குவார்.

இந்த விடையிறுப்பு ட்ரம்ப் மற்றும் அவர் ஆலோசகர்களின் அர்த்தமற்ற அடாவடித்தனமான அறிக்கைகளை அவமதித்தக்கதாக ஆக்குகிறது. புளோரிடாவின் மர்-அ-லாகோவில் அவரின் விடுமுறை கால விடுதியிலிருந்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி, “உலகில் எந்தவொரு இடத்திலும் இல்லாத தலையாய பயங்கரவாதியை கொன்றுவிட்டதாக" பெருமைபீற்றினார். “சுலைமானி அமெரிக்க இராஜாங்க அதிகாரிகள் மீது வரவிருக்கும் நாட்களில் வஞ்சகமான தாக்குதல்களை நடத்த திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார், ஆனால் அந்நடவடிக்கையில் அவரை நாங்கள் பிடித்து அழித்துவிட்டோம்,” என்று கூறுமளவுக்குச் சென்றார்.

அந்த ஈரானிய தளபதி “கடந்த 20 ஆண்டுகளாக மத்திய கிழக்கை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்தி உள்ளார்" என்று ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். “அமெரிக்கா நேற்று என்ன செய்ததோ அதை அது நீண்ட காலத்திற்கு முன்னரே செய்திருக்க வேண்டும். நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்,” என்றவர் அறிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி அவரின் மாஃபியா வாய்சவுடால் கொண்டு யாரை முட்டாளாக்க நினைக்கிறார்? மத்திய கிழக்கு தொடர்ச்சியான அமெரிக்க ஏகாதிபத்திய தலையீடுகளால் சீரழிந்ததைத் தான் கடந்த 20 ஆண்டுகள் கண்டுள்ளன. “பேரழிவுகரமான ஆயுதங்கள்" என்ற பொய்களின் அடிப்படையில் அமெரிக்காவின் சட்டவிரோத 2003 ஈராக் படையெடுப்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள், அதேவேளையில் அரபு உலகில் மிகவும் முன்னேறிய சமூகங்களில் ஒன்றாக இருந்த ஒன்று சிதைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் வாஷிங்டனின் பதினெட்டு ஆண்டுகால போர் மற்றும் லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போர்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு பிராந்தியம் தழுவிய நெருக்கடியைக் கட்டவிழ்த்து விட்டதுடன் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றது மற்றும் பத்து மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் வீடுகளை விட்டு தப்பியோட நிர்பந்தித்தது.

“அவரின் நோய்பீடித்த பேரார்வத்தால் -இது அவருக்குத் தான் பொருந்தும்- அப்பாவி மக்கள் உயிரிழக்க செய்துள்ளார்" என்று ட்ரம்பால் குற்றஞ்சாட்டப்படும் சுலைமானி, சுமார் ஒரு மில்லியன் கணக்கான ஈரானியர்களின் உயிரைப் பறித்த எட்டாண்டு கால ஈரான்-ஈராக் போரின் போது ஈரானிய இராணுவத் தலைமைக்கு உயர்ந்தார்.

ஆப்கானிஸ்தான் மீதான வாஷிங்டனின் படையெடுப்புக்கு உதவ அதற்கு தெஹ்ரான் உளவுத்தகவல்கள் வழங்கிய போது, 2001 இல், அவர் அமெரிக்க இராணுவ, உளவுத்துறை மற்றும் இராஜாங்க அமைப்புகளுக்கு நன்கறியப்பட்டவராக ஆனார். ஈராக்கில் அமெரிக்க போரின் போக்கில், அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பதில் ஷியா போராளிகள் குழுக்களுக்கு சுலைமானியின் கூத்ஸ் படை உதவி வழங்கிய போதும் கூட, அமெரிக்க அதிகாரிகள் பின்புலத்தில் அவருடன் பேரம்பேசல்களை நடத்தினர். அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் நிறுவப்பட்ட ஆட்சிகளுக்குத் தலைமை வழங்க ஈராக்கிய ஷியா அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுப்பதில் அவர் ஒரு மத்திய பாத்திரம் வகித்தார்.

சிரியாவில் சிஐஏ முடுக்கிவிட்ட ஆட்சி மாற்றத்திற்கான போரில் பஷர் அல்-அசாத் அரசாங்கத்திற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட அல் கொய்தா தொடர்புபட்ட போராளிகள் குழுக்களுக்குத் தோல்வியை ஏற்படுத்துவதிலும், மற்றும் அதை தொடர்ந்து அமெரிக்க பயிற்சி பெற்ற பாதுகாப்பு படைகளைத் தோற்கடித்து ஈராக்கில் சுமார் மூன்றில் ஒரு பங்கைக் கைப்பற்றி இருந்த ISIS, அல் கொய்தாவின் இந்த துணை அமைப்பை, தோற்கடிக்க ஷியா போராளிகள் குழுவை அணிதிரட்டுவதிலும் சுலைமானி ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார்.

இப்படியான ஒரு நபரை "பயங்கரவாதி" என்று விவரிப்பது, உலகின் எந்தவொரு இடத்திலும் வாஷிங்டன் மற்றும் அமெரிக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் நலன்களுக்குக் குறுக்கே வரும் எந்தவொரு அரசு அதிகாரி அல்லது இராணுவ தளபதியும் இதுபோன்றவொரு இலக்கு வைக்கப்பட்ட படுகொலைக்கு முத்திரைக் குத்தப்படுவார் என்பதை மட்டுமே அர்த்தப்படுத்துகிறது. செயல்பாட்டு விதிமுறைகள் மாறிவிட்டன என்பதே பாக்தாத் விமான நிலைய தாக்குதல் சமிக்ஞை செய்கிறது. அனைத்து "சிவப்பு கோடுகளும்" தாண்டப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், இந்த இலக்கு என்பது ஒரு தளபதியாக இருக்கலாம் அல்லது ரஷ்யா, சீனாவின் ஜனாதிபதியாக கூட இருக்கலாம் அல்லது, ஒருவேளை சமீபம் வரையில் வாஷிங்டனின் கூட்டாளிகளினது எந்தவொரு தலைநகராக கூட இருக்கலாம்.

மறுப்பதற்கான ஒரு பாசாங்குத்தனம் கூட இல்லாமல் அமெரிக்க ஜனாதிபதியால் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் இந்த கொண்டாடப்படும் பகிரங்கமான படுகொலைக்குப் பின்னர், அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கும் உலகின் எந்தவொரு அரசு தலைவரோ அல்லது முக்கிய இராணுவ பிரமுகரோ விடயம் சரியாக செல்லவில்லை என்றால் அவரும் கொல்லப்படலாம் என்று அவர் மூளையில் பின்னால் நினைக்காமல் இருக்க முடியுமா?

ஜேர்மனியின் பத்திரிகைகளில் ஒன்றான Die Zeit, பாக்தாத்தில் தளபதி சுலைமானியின் படுகொலையை ஆஸ்திரியாவின் ஆர்ச்ட்யூக் பிரான்க் பேர்டினான்ட் இன் 1914 படுகொலையுடன் ஒப்பிட்டது. முந்தைய விடயத்தைப் போலவே, “ஒட்டுமொத்த உலகமும் மூச்சைப் பிடித்துக் கொண்டு, அடுத்து என்ன நடக்கும் என்று பதட்டத்துடன் காத்திருக்கிறது,” என்று குறிப்பிட்டது.

இந்த குற்ற நடவடிக்கையானது, அமெரிக்காவின் எல்லைகளுக்குள் சர்வாதிகார ஒடுக்குமுறை மற்றும் உலக போர் இரண்டுக்குமான அச்சுறுத்தலை அதனுடன் தாங்கி நிற்கிறது. படுகொலையை வெளியுறவு கொள்கையின் ஒரு கருவியாக ஏற்றுள்ள ஓர் அரசாங்கம் அதன் உள்நாட்டு எதிரிகளுக்கு எதிராக அதே முறைகளைப் பயன்படுத்தாது என்று நம்புவதற்கு அங்கே எந்த காரணமும் இல்லை.

சுலைமானியின் படுகொலையானது, மனிதகுலத்தையே படுபாதாளத்திற்குத் தள்ள அச்சுறுத்துகின்ற முதலாளித்துவ அமைப்புமுறையின் அதீத நெருக்கடி மற்றும் விரக்தியின் ஒரு வெளிப்பாடாகும்.

இந்த ஆபத்திற்கான பதில் வர்க்க போராட்டத்தின் சர்வதேச வளர்ச்சியில் தங்கியுள்ளது. 21 ஆம் நூற்றாடின் மூன்றாம் தசாப்தத்தின் தொடக்கம், போர் முனைவை மட்டுமல்ல, மாறாக மத்தியக் கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்திலும், அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலிலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களினது மேலெழுச்சியைக் கண்டு வருகிறது.

முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் போர் முனைவுக்கு ஓர் உண்மையான எதிர்ப்பை, இந்த சமூக சக்தி மீது மட்டுமே அமைக்க முடியும். ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதன் மூலமாக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதே ஏகாதிபத்திய போர் அபாயத்திற்கு அவசியமான விடையிறுப்பாகும்.