ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Oppose Trump’s criminal war against Iran!

ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் போர் குற்றத்தை எதிர்ப்போம்!

The International Editorial Board of the World Socialist Web Site
6 January 2020

உலக சோசலிச வலைத் தளம், ஜனவரி 3 அன்று பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டதைத் திட்டவட்டமாக எதிர்க்கிறது.

சுலைமானி மற்றும் ஏனைய ஒன்பது நபர்கள் கொல்லப்பட்ட அந்த டிரோன் ஏவுகணை தாக்குதல், சர்வதேச சட்டம் மற்றும் அமெரிக்க சட்டம் இரண்டினது கீழும் —குற்றவியல் சட்ட சாசனம் அமல்படுத்தப்பட்டால்— தண்டிக்கத்தக்க ஓர் அப்பட்டமான படுகொலை நடவடிக்கையாகும்.

ஈரானின் இஸ்லாமிய புரட்கர பாதுகாப்பு படைகளின் கூத்ஸ் படைப்பிரிவின் தலைவரும், ஈரானிய அரசாங்கத்தில் இரண்டாவது மிக முக்கிய பிரமுகராக பரவலாக கருத்தப்பட்டவருமான சுலைமானியின் படுகொலை, ஈராக் மற்றும் ஈரான் இரண்டிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களைச் சந்தித்துள்ளதுடன், மத்திய கிழக்கில் அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் எதிராக ஓர் அமெரிக்க போர் பிரகடனமாக பரவலாக பார்க்கப்படுகிறது.

ஈரானிய அரசாங்கம் பழிவாங்க சூளுரைத்துள்ளது. ஈரானிய அதியுயர் தலைவர் அயெத்துல்லா அலி காமெனி கூறுகையில், நாடு "பலமாக பழிவாங்கும்" என்றார். மக்கள் கோபத்தின் அளவைக் கொண்டு பார்க்கையில், குறைவாக செயல்படுவது ஈரானுக்கு உள்ளேயே கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் அபாயத்தை ஏற்படுத்தலாம்.

சுலைமானி மற்றும் அத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஏனையவர்களுக்கும் —மொத்தத்தில், அந்த டிரோன் ஏவுகணை தாக்குதலில் ஐந்து ஈரானியர்கள் மற்றும் ஐந்து ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர்— ஈரானில் மரியாதை செலுத்த மில்லியன் கணக்கானவர்கள் ஒன்று கூடியதாக மதிப்பிடப்படுகிறது, அதேவேளையில் இறுதி ஊர்வலம் அஹ்வாசில் இருந்து மஸ்ஹாத் மற்றும் இறுதியில் தெஹ்ரான் வரையில் நீண்டிருந்தது.

பாக்தாத்தில், 100,000 க்கும் அதிகமானவர்கள் “அமெரிக்கா மரணிக்கட்டும்!” என்று கோஷமிட்டவாறு அந்த படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் அணிவகுத்தனர், அது 1958 இல் முடியாட்சி தூக்கியெறியப்பட்டதற்குப் பின்னர் ஈராக்கின் மிகப் பெரிய பொது ஆர்ப்பாட்டமாக வர்ணிக்கப்படுகிறது.

பொங்கி வழியும் இந்த அளப்பரிய மக்கள் எதிர்ப்பின் பலத்தின் கீழ், ஈராக்கிய நாடாளுமன்றம் ஞாயிறன்று ஈராக்கில் இருந்து அமெரிக்க இராணுவ படைகளை வெளியேறக் கோரிய ஒரு தீர்மானத்திற்குப் பெருவாரியாக வாக்களித்தது. வெளியேறுவதற்கான எந்தவொரு ஈராக்கிய உத்தரவையும் வாஷிங்டன் நிராகரிக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ சுட்டிக்காட்டிய அதேவேளையில், ஈராக்கிய சிப்பாய்கள் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பவர்களுக்கு எதிராகவே தங்களின் துப்பாக்கிகளைத் திருப்பிவிடுவார்கள் என்று அஞ்சி, தற்போது அங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ள 5,000 அமெரிக்க துருப்புகள் ஈராக்கிய பாதுகாப்பு படைகளுக்குப் பயிற்சியளிப்பதற்காக என்ற அவற்றின் பாசாங்குத்தனமான திட்டத்தை கைவிட்டுள்ளதுடன், தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்து வருகின்றன.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்வீட் மூலமாக அதிகரித்தளவில் தொடர்ச்சியாக வெறித்தனமான அச்சுறுத்தல்களை வெளியிட்டு காமெனியின் அறிக்கைகளுக்கு விடையிறுத்துள்ளார். முதலில் அவர், “பல ஆண்டுகளுக்கு முன்னர் ஈரானால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 52 அமெரிக்க பிணைக்கைதிகளைப் பிரதிநிதித்துவம்" செய்யும் வகையில், ஈரானில் 52 இலக்குகளைத் தேர்ந்தெடுத்திருந்ததாக தெரிவித்தார். “ஈரானிய கலாச்சாரத்திற்கு" முக்கியமான இடங்களும் அதில் உள்ளடங்கி இருந்ததாக அவர் தெரிவித்தார். அதுபோன்றவொரு தாக்குதலையும் அமெரிக்க அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளின் பட்டியலுடன் சேர்த்து விடலாம்.

அடுத்தடுத்த ட்வீட் செய்திகளில், அமெரிக்க ஜனாதிபதி "அவர்கள் முன்னெப்போதும் தாக்கியதை விட கடுமையாக" ஈரானைத் தாக்க சூளுரைத்ததுடன், “ஈரான் ஏதேனும் அமெரிக்க இலக்கையோ அல்லது அமெரிக்க நபரையோ தாக்கினால், அமெரிக்கா விரைவில் முழு அளவில் பதில் தாக்குதல் நடத்தும், & ஒருவேளை பொருத்தமற்ற விகிதத்தில் கூட நடத்தும் என்பதற்கு அமெரிக்க காங்கிரஸிற்கான அறிவிப்பாக" அவர் ட்வீட்டர் அறிவிப்புகள் சேவையாற்றுவதாகவும், “அதுபோன்ற சட்டபூர்வ அறிவிப்பு அவசியமில்லை என்றாலும், இருப்பினும் வழங்கப்படுகிறது!” என்றும் அறிவித்தார்.

ட்ரம்பின் முரட்டுத்தனமான அச்சுறுத்தல்கள், நிலைமையைக் கொளுந்து விட்டெரிய செய்யவும், அளப்பரிய மக்கள் அழுத்தத்தின் கீழ் இருக்கும் ஈரானிய அரசாங்கம் வன்முறையான பதிலடி நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர அதை வேறு வழியில்லாதவாறு செய்வதற்கும் கணக்கிடுகின்றன. ஈரானுடனான ஒரு போரின் விளைவுகளைப் பார்க்கையில், இது அர்த்தமற்ற முட்டாள்தனமாக தோன்றலாம். ஆனால் சுலைமானி மீதான தாக்குதல், ட்ரம்பின் தனிப்பட்ட கோபத்தால் உத்தரவிடப்பட்டது என்று நம்புவது அரசியல் முதிர்ச்சியின்மையின் உச்சக்கட்டமாகவே இருக்கும்.

வேண்டுமென்றே போரைத் தூண்டுவதற்கான உத்தேசத்துடனே அந்த உத்தரவு ட்ரம்பால் வழங்கப்பட்டது. இந்த முட்டாள்தனம் ஓர் அணுகுமுறையாகும். அது, மிதமிஞ்சிய வன்முறை நடவடிக்கைகள் மூலமாக —சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும்— அமெரிக்க முதலாளித்துவத்திற்கு அதிகரித்து வரும் பெரும் நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கு வழி காணும் ஒரு முயற்சியாகும்.

சுலைமானி படுகொலை ஒரு தனித்த சம்பவம் அல்ல, மாறாக அது ஒரு புதிய போரின் தொடக்கமாகும். இது, மத்திய கிழக்கில் மட்டுமல்ல, மாறாக சர்வதேச அளவில் இதற்கு "முன்னரும்" மற்றும் இதற்கு "பின்னரும்" என்று ஒரு பிரிக்கும் கோட்டைக் குறிக்கிறது. எதிர்கால வரலாற்றாளர்கள், 1914 இல் சாரயேவோவில் ஆர்ச்ட்யூக் பிராங்க் பெர்டினான்ட் படுகொலையைப் போலவே அதே முக்கியத்துவத்துடன் இந்த அரசு குற்றத்தையும் கையாள்வார்கள்.

ஈரானுடனான போர் விளைவுகளைக் குறைத்து மதிப்பிடும் தவறை யாரும் செய்துவிட கூடாது. இந்த மோதலின் அபிவிருத்தி வேகாக உலகளாவிய பரிமாணத்தை எடுக்கும். பரந்த யுரேஷிய பெருநிலத்தின் மீது எண்ணற்ற அரசுகளின் இன்றியமையா நலன்களைப் பாதிக்கக்கூடிய இந்த மோதலின் தர்க்கம், எண்ணற்ற நாடுகள் போர் சுழலுக்குள் இழுக்கப்படுவதென்பது வெறும் நேரம் சார்ந்த ஒரு விடயம் மட்டுமே ஆகும். ஈரான் மீது அமெரிக்க கட்டுப்பாட்டை, ரஷ்ய அரசாங்கமோ அல்லது சீன அரசாங்கமோ ஏற்க போவதில்லை. அமெரிக்க-ஈரானிய மோதலால் பாகிஸ்தான் முற்றிலுமாக ஸ்திரமின்மைக்கு உள்ளாகும்போது இந்திய அரசாங்கத்தால் பக்கவாட்டில் நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அனைத்திற்கும் மேலாக, ஆயுதத் தளவாடங்களுக்காக ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் வாரியிறைக்கப்பட்டுள்ள போதினும், அமெரிக்க இராணுவம் அது எதிர்கொள்ளக்கூடிய பாரிய வெகுஜன எதிர்ப்புக்குத் தயாராக இல்லை. தசாப்த கால போருக்குப் பின்னரும் கூட, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது அதன் விருப்பத்தைத் திணிக்க முடியாத நிலையில், அமெரிக்கா, ஈரான் உடனான போரானது இராணுவ மற்றும் அரசியல் பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதையே காணும்.

பின்னர் ஏன் ட்ரம்ப் நிர்வாகம் இந்த நாசகரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது?

முதலாவதாக, ஈரானுக்கு எதிராக ஒரு போரைத் தொடங்குவதற்கான முடிவானது, "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பதில் இருந்து "வல்லரசு போட்டியில்" இருந்து எழும் போர்களுக்கான தயாரிப்புக்கு மாறியதன் அடிப்படையில் இருந்த ஒரு புதிய 2018 மூலோபாய கோட்பாட்டை வெளியிட்டதுடன் பிணைந்துள்ளது. தெஹ்ரானில் காலனித்துவ-பாணியில் ஒரு கைப்பாவை ஆட்சியைக் கொண்டு வருவதும் மற்றும் பாரசீக வளைகுடாவின் எரிசக்தி வினியோகங்கள் மீது கட்டுப்பாட்டை எடுப்பதும், ரஷ்யா மற்றும் சீனா உடனான போருக்கு ஓர் இன்றியமையா தயாரிப்பாக வாஷிங்டனால் பார்க்கப்படுகின்றன. மிக முக்கியமாக, சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட ட்ரில்லியன் டாலர் இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கில், உலகப் போருக்கான ஒரு வரவு-செலவு திட்டக்கணக்கு, ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஈரான் மீதான ஓர் இராணுவ தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி காங்கிரஸ் சபையின் ஒப்புதல் பெறுவதை அவசியப்படுத்தும் மொழிகளை நீக்கியிருந்தனர்.

இரண்டாவதும், முக்கியத்துவத்தில் குறைவற்றதுமானது, போருக்கான பொறுப்பற்ற முடிவானது அமெரிக்காவுக்கு உள்ளேயே வர்க்க மோதல் அதிகரிப்பின் மீது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் வெறுப்பைப் பிரதிபலிக்கிறது. சமூக கோபம் தீவிரப்படுவதன் மீதும் மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்புணர்வு அதிகரிப்பதன் மீதும் அதன் பயமானது, நிதியியல் சந்தைகளின் ஒரு பொதுவான பொறிவைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட, “பணத்தை அச்சிட்டுப் புழக்கத்தில் விடுதல்" (quantitative easing) என்றறியப்படும், கட்டுப்பாடின்றி பணம் அச்சடிப்பதையே ஒட்டுமொத்த அமெரிக்க பொருளாதாரமும் சார்ந்துள்ளது என்ற உண்மையுடன் கலந்துள்ளது.

இந்த நெருக்கடியின் புரட்சிகர தாக்கங்கள் குறித்து அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு நன்கு தெரியும், இந்த இறுதி அபாய உணர்வுதான் அதன் பொறுப்பற்ற நடவடிக்கைகளின் அடியிலுள்ளது. எளிதில் கையாள முடியாத ஒன்றொடொன்று தொடர்புபட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகள் ஒன்றுதிரள்வதை முகங்கொடுத்து, ட்ரம்ப் நிர்வாகம் பொதுமக்களைத் திசைதிருப்பவும் கவனத்தைச் சிதறடிப்பதற்கும் மட்டுமல்ல, மாறாக அரசு ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்துவது மற்றும் அதிமுக்கிய ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை சட்டபூர்வமாக்குவதற்கும் போரைக் கொண்டு சூதாட்டம் ஆடுகிறது.

சுலைமானி படுகொலை செய்யப்பட்டு ஒரு சில மணி நேரத்திற்குள், இராணுவமயப்பட்ட பொலிஸின் பலமாக ஆயுதமேந்திய படைப்பிரிவுகள் பிரதான அமெரிக்க நகரங்களின் வீதிகளில் ரோந்தில் ஈடுபட்டிருந்தன என்பது தற்செயலானதல்ல.

அமெரிக்காவில் தற்போது மேலோங்கியுள்ள நிலைமை —அதே போல, மேற்கு ஐரோப்பாவின் அனைத்து பிரதான முதலாளித்துவ நாடுகளிலும்— இரண்டாம் உலக போருக்கு முன்னர் நாஜி ஜேர்மனியில் நிலவிய நிலைமைக்கு ஒத்திருக்கின்றன. 1938 வாக்கில், ஹிட்லரின் ஆட்சி, பொருளாதாரம் மூழ்கிவிடாமல் வைத்திருக்கவும் மற்றும் இராணுவக் கட்டமைப்புக்கு நிதி வழங்கவும், பாரியளவில் தாங்கொணா கடன்களைக் குவித்து வைத்திருந்த நிலையில், அது வரவிருந்த பேரழிவில் இருந்து வெளியே வருவதற்கு போர் ஒன்றையே ஒரே வழியாக கண்டது. ஹிட்லர் எதிர்கொண்டிருந்த நிலைமையை ஒரு வரலாற்றாளர் பின்வருமாறு விவரித்தார்:

சர்வாதிகாரம் மற்றும் மீள்ஆயுதமயமாக்கலால் உண்டான கட்டமைப்புரீதியிலான பதட்டங்கள் மற்றும் நெருக்கடிகளின் அந்த ஆட்சிக்கு திறந்திருந்த ஒரே “தீர்வு”, இன்னும் அதிக சர்வாதிகாரமும் மற்றும் இன்னும் அதிக மீள்ஆயுதமயமாக்கலும், பின்னர் விரிவாக்கமும், பின்னர் போர் மற்றும் பயங்கரங்களும், பின்னர் சூறையாடலும் அடிமைப்படுத்தலும் மட்டுமே ஆகும். உருக்குலைப்பதும் குழப்பங்களுமே முன்னொருபோதும் இல்லாத உறுதியான மாற்றீடாக இருந்தது, ஆகவே அனைத்து தீர்வுகளும் தற்காலிகமாக, அவசரகதியில், உடனடித் தேவைகளை கொண்டு முடிவெடுக்கும் விவகாரங்களாக, ஒரு மூர்க்கமான கருத்துருவைக் கொண்டு அதிகரித்தளவில் காட்டுமிராண்டித்தனமாக முன்னேற்பாடின்றி திடீரென நடவடிக்கையில் இறங்குவதாக இருந்தன. [நாஜிசம், பாசிசம் மற்றும் தொழிலாள வர்க்கம், டிம் மாசன் (கேம்ப்ரிட்ஜ், 1995), பக்கம் 51]

அமெரிக்க அடாவடித்தனம் ஐரோப்பாவில் பிளவையும் கலக்கத்தையும் உருவாக்கி உள்ளது. அரசு தலைவர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அனைவரும் "தீவிரப்பாட்டைக் குறைக்க" பேசுகின்றனர், ஆனால் அவர்களின் சொந்த அரசாங்கங்களே கூட மிதமிஞ்சி அவற்றின் ஆயுதப் படைகளைக் கட்டமைத்து வருகின்றன. அடாவடித்தனமான அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ "அவர்கள் நான் விரும்பிய அளவுக்கு உதவியாக" இல்லாததற்காக ஐரோப்பியர்களுக்குக் கண்டனம் தெரிவித்தார். “பிரிட்டிஷ், பிரெஞ்சு, ஜேர்மானியர் அனைவரும், நாங்கள் என்ன செய்தோம் என்பதை, அமெரிக்கர்கள் என்ன செய்தோம் என்பதை, அத்துடன் ஐரோப்பாவில் உயிர்களைக் காப்பாற்றினோம் என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும்,” என்பதைச் சேர்த்துக் கொண்டார். சொல்லப் போனால் இதுவொரு பொய் என்பதும், இத்தாக்குதல் ஒரு புதிய இரத்த ஆறை மட்டுமே உருவாக்கும் என்பதும் ஒவ்வொருவருக்கும் தெரியும். இருப்பினும், அவற்றின் மனக்கசப்புகளுக்கு மத்தியிலும், நெருக்கடியில் சிக்கியுள்ள ஐரோப்பிய அரசாங்கங்கள், ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பின்னால் அணிதிரள்கின்றன.

எப்போதையும் போலவே அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்க மக்களிடையே போர் மனநிலையை உருவாக்க செயல்பட்டு வருகின்றன. ட்ரம்ப் நடவடிக்கையின் உள்நோக்கம் மீது தயக்கங்களை வெளிப்படுத்துபவர்கள் கூட சுலைமானியை "மோசமானவர்" என்றும், நூற்றுக் கணக்கான அமெரிக்க துருப்புகள் கொல்லப்படுவதற்குப் பொறுப்பாக கருதக்கூடிய "பயங்கரவாதி" என்றும் கூட கண்டிப்பதில், அவர்களின் தயக்கமான விமர்சனங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிருதுவாக வைக்கிறார்கள்.

இவை அனைத்துமே பொய்மூட்டையாகும். ஈராக்கில் வாஷிங்டனின் பிரங்கன்ஸ்ரைன் அரக்கன் ISIS உம் மற்றும் சிரியாவில் இருந்த அல் கொய்தாவின் அமெரிக்க பின்புல ஆதரவு பெற்ற அமைப்புகளையும் தோற்கடித்த படைகளை சுலைமானி வழிநடத்தினார். மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, ஃபல்லூஜா மனிதப்படுகொலை மற்றும் அபு கிரைப்பின் சித்திரவதைக் கூடங்களில் நடந்ததைப் போன்ற கொடூரங்களை உருவாக்கிய அமெரிக்காவின் ஈராக்கிய போர் ஆக்கிரமிப்பில் விளைந்த குற்றங்களில் அவர் உடந்தையாய் இருக்கவில்லை. ஈராக்கில் உயிரிழந்த அமெரிக்க சிப்பாய்களைப் பொறுத்த வரையில், அவர்களின் இரத்தம், புஷ் நிர்வாகத்தின் கரங்களிலும் மற்றும் பொய்களின் அடிப்படையில் "போரை ஒரு விருப்பத்தெரிவாக" ஏற்று அவர்களை அனுப்புவதை ஆதரித்த ஜனநாயகக் கட்சியினரினதும் கரங்களில் ஒட்டியுள்ளது.

அதன் புத்தாண்டு அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளம் எழுதியது:

மனிதகுலத்தின் உயிர்பிழப்பையே அச்சுறுத்தக் கூடிய மூன்றாம் உலக போரை நோக்கிய ஒரு நகர்வை, மனிதாபிமான முறையீடுகளைக் கொண்டு நிறுத்த முடியாது. போர் என்பது முதலாளித்துவத்தின் அரஜாகம் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையின் காலாவதி நிலையில் இருந்தே எழுகிறது. ஆகவே அதை சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய போராட்டத்தின் மூலமாக மட்டுமே அது தடுத்து நிறுத்தப்பட முடியும்.

புதிய தசாப்தம் பிறந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை, ஆனால் ஏற்கனவே இந்த எச்சரிக்கையின் சரியான தன்மை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.