ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

 

 

 

2

1968 பிரான்சின் பொது வேலைநிறுத்தமும் மாணவர் எழுச்சியும்

 

PCF மற்றும் CGT இன் காட்டிக்கொடுப்பு

முதல் பகுதி மாணவர்களின் எழுச்சியின் பரிணாமத்திற்கும் மே மாத இறுதியில் உச்சம்பெற்றிருந்த அவர்களின் பொது வேலைநிறுத்தத்திற்கும் அர்ப்பணித்திருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியும் CGT யும் நிலைமையைக் கட்டுப்படுத்த டு கோலுக்கு எப்படி உதவியது என்பதை இரண்டாம் பகுதி ஆராய்கிறது.

மே 20, 1968 இல் இருந்து பிரான்ஸ் ஸ்தம்பித்திருக்கிறது. ஊதியம் பெறுவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பொது வேலைநிறுத்தத்தில் பங்குபற்றி இருக்கின்றனர்; மாணவர்கள் பல்கலைக்கழகங்களை ஆக்கிரமித்திருக்கின்றனர். இந்நிலைமையில் டு கோல் மற்றும் அவரது அரசாங்கத்தின் விதி, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (Parti communiste français—PCF) மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இருந்த தொழிற்சங்கமான தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் (Confederation Generale du Travail—CGT) கரங்களில் இருக்கிறது. அவர்கள், ஜனாதிபதி சார்லஸ் டு கோல் அரசியல்ரீதியாக உயிர் பிழைத்திருப்பதற்கும் மற்றும் ஐந்தாம் குடியரசினை காப்பாற்றுவதற்கும் பொறுப்புறுதி ஏற்றிருந்தனர். 1968 இல், அப்போதும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி சுமார் 350,000 அங்கத்தவர்களுடன் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக இருந்தது. அது 1967 இல் 22.5 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. 1948 இல் 4 மில்லியனாக இருந்த CGT அங்கத்தவர்களின் எண்ணிக்கை 2.3 மில்லியனுக்கு குறைந்துவிட்ட போதினும், அது பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் மேலாளுமை கொண்ட தொழிற்சங்கமாக இருந்தது. அதன் பொது செயலாளர் ஜோர்ஜ் செகி (Georges Séguy) பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அரசியல் குழுவில் [பொலிட்பீரோவில்] இடம் பெற்றிருந்தார்.

நாம் ஏற்கனவே பார்த்ததைப் போல, மாணவர் போராட்டங்களை நோக்கி PCF உம் CGT உம் வெளிப்படையான வெறுப்புடன் தமது பிரதிபலிப்பை காட்டின. மாணவர்களை தொல்லை கொடுப்பவர்களாகவும் மற்றும் கோலிச முகவர்களாகவும் பரிகாசம் செய்த ஜோர்ஜ் மார்ஷே (Georges Marchais) இன் இழிவார்ந்த மே 3 ஆம் தேதி கட்டுரை ஒரு விதிவிலக்காக இருக்கவில்லை, மாறாக அதுவே நடைமுறை விதியாக மாறியிருந்தது. PCF இன் நாளிதழ் l’Humanité, “இடது தீவிர போக்கினருக்கு" (gauchistes - கோசிஸ்ட்ஸ்) எதிரான வசைப்பேச்சுக்களில் சோர்வுறவில்லை, அதில் PCF இன் வலதுசாரி போக்கை எதிர்க்கின்ற ஒவ்வொருவரையும் உள்ளடக்குகிறது. தொழிலாளர்களும் மாணவர்களும் இணைந்த ஆர்ப்பாட்டங்களை CGT தொழிற்சங்கம் நிராகரிக்கிறது, தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த முயன்ற மாணவர்களை தொழிற்சாலைகளை நெருங்கவிடாது இருக்குமாறு அதன் அங்கத்தவர்களுக்கு அறிவுறுத்துகிறது.

தொழிற்சாலை ஆக்கிரமிப்புகளும் பொது வேலைநிறுத்தமும் CGT தொழிற்சங்கத்தின் விருப்பத்திற்கு எதிராகவும் மற்றும் அதன் கட்டுப்பாட்டிற்கு வெளியிலும் அபிவிருத்தி அடைந்திருந்தன. ஏனைய எல்லா ஆக்கிரமிப்புகளுக்கும் ஒரு முன்மாதிரியாக மாறிய Sud aviation ஆக்கிரமிப்பு, Force Ouvrière (FO) தொழிற்சங்கத்தின் முயற்சியால் எழுகிறது. அத்தொழிற்சங்கம், நான்ந்த் நகரத்தில் மிகக் குறைந்த ஊதியம் பெறுவோரின் குழுக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்ததுடன், ஒரு ட்ரொட்ஸ்கிசவாதியான OCI அங்கத்தவர், ஈவ் றொக்ரோன் (Yves Rocton) இன் வழிகாட்டுதலில் இருந்தது. ஆக்கிரமிப்புகளை CGT தடுக்கவில்லை என்றபோதினும், அது அவற்றை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவும், தொழில்துறை கோரிக்கைகளுடன் மட்டும் அவற்றை மட்டுப்படுத்தி வைக்கவும் முயல்கிறது. மத்திய வேலைநிறுத்த குழு ஒன்றை ஸ்தாபிப்பதை அது எதிர்ப்பதுடன், தொழிற்சாலைகளுக்கு வெளியிலிருந்த சக்திகளுடனான எந்த கூட்டுறவையும் அது நிராகரிக்கிறது. முன்னணி நிர்வாக அதிகாரிகளை தடுப்புக்காவலில் வைப்பதற்கு அனுமதிக்கவும் அது மறுக்கிறது.

மே 16 அன்று, அதன் போட்டி தொழிற்சங்கமான தொழிலாளர்களின் பிரெஞ்சு ஜனநாயக கூட்டமைப்பின் தலைமை (Confédération Française Démocratique du Travail – CFDT) ஓர் அறிக்கை வெளியிடுகிறது. அதன்மூலம் அது ஆக்கிரமிப்புகள் அலையின் மீது அதன் மேலாளுமையை பெற முயல்கிறது. CGTக்கு முரண்பட்ட வகையில், அது மாணவர் எழுச்சிகளை நோக்கி சாதகமான அணுகுமுறையை கொண்டிருந்தது. அவ்வெழுச்சிகளைக் குறித்து அது குறிப்பிடுகையில், "தங்களின் பொறுப்புணர்வுகளைச் செயல்படுத்த முடியாமலிருக்கும் ஒரு சமூகத்தின் நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட வர்க்க கட்டமைப்புகளுக்கு எதிராக" அவ்வெழுச்சிகள் திரும்பி இருப்பதாக குறிப்பிடுகிறது. தொழிற்சாலைகளின் "சுய-நிர்வாகம்:” (autogestion) அதாவது “தொழிலக மற்றும் நிர்வாக எதேச்சதிகாரத்தை, சுய-நிர்வாக அடிப்படையிலான நிர்வாக கட்டமைப்புகளைக் கொண்டு பிரதியீடு செய்ய வேண்டுமென்ற" முழக்கங்களை CFDT முன்னெடுக்கிறது.

CGT தலைவர் ஜோர்ஜ் செகி நிதானமிழந்த ஆத்திரத்துடன் பிரதிபலிப்பை காட்டினார். அவர் CFDTஐ பகிரங்கமாக தாக்குகிறார். வளர்ந்துவரும் அந்த இயக்கத்திற்கு எவ்வித பொதுவான நோக்குநிலை வழங்கும் எந்தவொரு முயற்சியையும், அம்முயற்சி எந்தளவிற்கு மட்டுப்பட்டதாக இருந்தாலும் கூட, அதை அவர் நிராகரிக்கிறார். மிஷேல் றொக்காவின் (Michel Rocard) இடது-சீர்திருத்தவாத ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் (Parti Socialiste Unifié — PSU) செல்வாக்கின் கீழ் இருந்த CFDT இன் கோரிக்கையும், ஒரு முட்டுச்சந்திற்கு இட்டு செல்வதாக இருக்கிறது. அது முதலாளித்துவ ஆட்சியையும் சரி, முதலாளித்துவ சந்தையின் மேலாதிக்கத்தையும் சரி கேள்விக்குட்படுத்தவில்லை.

இறுதியாக மே 25 அன்று, சுற்றி வளைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு நேரடியாக உதவ CGT அவசரம் காட்டுகிறது. மாலை 3 மணிக்கு, தொழிற்சங்கங்களின், முதலாளிகள் அமைப்புகளின் மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் Rue de Grenelle (கிறெனெல் வீதி) இல் உள்ள தொழிற்துறை அமைச்சகத்தில் ஒன்றுகூடுகின்றனர். எந்தளவிற்கு சாத்தியமோ அந்தளவிற்கு துரிதமாக தொழிற்சாலைகளில் ஒழுங்கைக் கொண்டு வருவதே அவர்களது நோக்கமாக இருக்கிறது. அதில் எல்லா தொழிற்சங்கங்களும் பிரதிநிதித்துவம் செய்திருக்கின்ற போதினும், பேச்சுவார்த்தைகள் ஏறக்குறைய பிரத்தியேகமாக இரண்டு நபர்களால், பிரதம மந்திரி ஜோர்ஜ் பொம்பிடு (Georges Pompidou) மற்றும் CGT தலைவர் ஜோர்ஜ் செகி இனால் நடத்தப்பட்டன.

பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் கோரியவாறு வெவ்வேறு ஊதிய தரம்பிரித்தலுக்கு இடையிலிருந்த இடைவெளியைக் குறைக்காமல், செகி ஒரு சீரான ஊதிய உயர்வை விரும்புகிறார். அதனுடன் சேர்ந்து, தொழிற்சங்கங்களின் அந்தஸ்து பலப்படுத்தப்பட வேண்டுமென்கிறார். இந்த பிரச்சினையில் முதலாளிமார்களின் அமைப்புகளுக்கு எதிராக பொம்பிடு இன் ஆதரவு அவருக்கு இருக்கிறது. “போதிய பயிற்சியும், உரிய செல்வாக்கும் உள்ள தொழிற்சங்கங்களின் மூலமாக தொழிலாள வர்க்கத்தை ஒருங்கிணைக்க அரசாங்கம் உடன்படுகிறது, இது தொழிற்சாலையை சுமூகமாக நடத்த உதவும்,” என்பது தான் கூட்டத்தின் முடிவில் சூத்திரப்படுத்தப்பட்ட குறிப்புகளாக இருக்கின்றன.

பேச்சுவார்த்தை மேடையில் அரசாங்கத்தின் தரப்பில் ஜோர்ஜ் பொம்பிடு உடன் அமர்ந்திருந்த மற்றவர்கள், எதிர்கால ஜனாதிபதியாக ஆகவிருந்த ஜாக் சிராக் மற்றும் எதிர்கால பிரதம மந்திரியாக ஆகவிருந்த எடுவார்ட் பலடூர் (Edouard Balladur) ஆகியோர் ஆவர். தற்போது பதவியிலிருக்கும் நிக்கோலா சார்க்கோசி போலவே, அவர்கள் அனைவருமே அந்நேரத்தில் அந்த உடன்படிக்கையுடனும், தொழிலாள வர்க்கத்தை "ஒருங்கிணைக்க" தொழிற்சங்கங்களை உபயோகிப்பது என்பதிலும் இணங்கி இருந்தார்கள். அப்போதிருந்து “கிறெனெல்” (Grenelle) என்ற சொற்பிரயோகமே, அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையிலான அதுபோன்ற உயர்மட்ட மாநாடுகளுக்கான ஒரு இணைச்சொல்லாக மாறியுள்ளது.

அப்பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தவர்கள் வெறும் இரண்டே நாட்களில் உடன்பாட்டிற்கு வருகின்றனர். மே 27, திங்களன்று அதிகாலை, அவர்கள் கிறெனெல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். அது ஏழு சதவீத ஊதிய உயர்வும், மணிக்கு 2.22 பிராங்கில் இருந்து 3 பிராங்காக குறைந்தபட்ச கூலி உயர்வும், தொழிற்சாலைகளில் சட்டபூர்வமாக தொழிற்சங்கங்களை அமைப்பதும் அதில் உள்ளடங்கி இருந்தது. படிப்படியாக ஊதியங்களை உயர்த்துவது, வேலைநிறுத்த நாட்களுக்கும் முழு ஊதியம், சமூக பாதுகாப்புக்கு கவலையளிக்கும் அரசாங்க நெறிமுறைகளை திரும்ப பெறுவது ஆகிய அதன் பிரதான கோரிக்கைகளை CGT கைவிடுகிறது. PCF மற்றும் CGT உடன் எவ்விதமான முன் உடன்பாடும் இல்லாமல், றொக்காவின் PSU, CFDT மற்றும் UNEF (பிரான்ஸ் தேசிய மாணவர் சங்கம்—Union Nationale des Étudiants de France) ஆகியவை ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிடுகின்றன என்பதை அறிந்ததும், செகி உடனடியாக ஓர் உடன்படிக்கைக்கு அழுத்தமளித்து, அவர் ஜாக் சிராக் உடன் நேருக்கு-நேரான ஒரு கலந்துரையாடலில் அதனை அதிகாலையில் உத்தரவாதம் செய்கின்றார்.

காலை 7:30 மணிக்கு, செகி உம் மற்றும் பொம்பிடு உம் பத்திரிகையாளர் கூட்டத்தின் முன்தோன்றி, கிறெனெல் உடன்படிக்கையை அறிவிக்கின்றனர். செகி விவரித்தார்: “தாமதமின்றி வேலையைத் தொடங்கலாம்". ரினோல்ட் ஆலை தொழிலாளர்களிடையே அந்த உடன்படிக்கைக்கு சம்மதம் பெற, அவர் தனிப்பட்டரீதியில் பியான்கூர் செல்கிறார். ஆனால் அந்த உடன்படிக்கையை ஓர் ஆத்திரமூட்டலாக கருதிய அவர்கள், ஒருசில பிராங்குகளுக்காக விட்டுகொடுக்க தயாராக இல்லை. செகி உடன் சர்ச்சை ஏற்படுகிறது, கூட்டான கூச்சல்களை அவர் முகங்கொடுக்கிறார். அச்செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவுகிறது, யாருமே போராட்டத்தை நிறுத்துவதற்கு நாட்டம் கொள்ளவில்லை. அதற்கடுத்த நாள் Le Monde இன் தலைப்பு செய்தி பின்வருமாறு வெளியாகிறது: “வேலைநிறுத்தகாரர்களை மீண்டும் வேலையைத் தொடருமாறு செய்ய CGT ஆல் முடியவில்லை" (La CGT n’a pu convaincre les grévistes de reprendre le travail).

அதிகாரம் பற்றிய பிரச்சினை முன்வைக்கப்படுகிறது

அரசியல் நெருக்கடி இப்போது அதன் உச்சநிலையை எட்டுகிறது. ஒட்டுமொத்த நாடே பெரும் குழப்பத்தில் இருக்கிறது. அரசாங்கம் அதன் அதிகாரத்தை இழந்துவிட்டிருப்பதுடன், தொழிலாளர்கள் மீதான அதன் கட்டுப்பாட்டை CGT இழந்திருந்தது. நாட்டின் மீது யார் அதிகாரம் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி இப்போது பகிரங்கமாக முன் வந்திருக்கிறது என்பதில் அங்கே யாருக்கும் சந்தேகமிருக்கவில்லை.

அதுவரையில் மிகுந்த எச்சரிக்கையோடு பின்புலத்தில் இருந்துவந்த சமூக ஜனநாயகவாதிகள், இப்போது அவர்களது குரலை உயர்த்துகின்றனர். டு கோல் அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்க முடியுமா என்பது கேள்விக்குறியானதால், ஒரு மாற்று முதலாளித்துவ அரசாங்கத்திற்கான தயாரிப்புகள் செய்யப்படுகின்றன. பிரான்சுவா மித்திரோன் மே 28 அன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டுகிறார், அது தொலைக்காட்சியில் விரிவாக ஒளிபரப்பப்படுகிறது. அவர் ஓர் இடைக்கால அரசாங்கத்திற்கும், அத்துடன் புதிய ஜனாதிபதி தேர்தல்களுக்கும் அவரது ஆதரவை அறிவிக்கிறார். அதில் அவரேயொரு வேட்பாளராக நிற்க விரும்புவதாகவும் அறிவிக்கிறார்.

நான்காம் குடியரசில் தங்களைத்தாங்களே மதிப்பிழக்குமாறு செய்து கொண்டதும், எவ்வித பாரிய அடித்தளமும் இல்லாததுமாக இருந்த தாராளவாத மற்றும் சமூக-ஜனநாயகக் கட்சிகளின் ஒரு கூட்டணியான ஜனநாயக மற்றும் சோசலிச இடதின் கூட்டமைப்பிற்கு (Fédération de la Gauche démocrate et socialiste - FGDS) மித்திரோன் தலைமை வகித்து வந்தார். 1965 இல், ஜனாதிபதி தேர்தல்களில் அவர் டு கோல் ஐ எதிர்த்து நின்றதுடன், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியாலும் ஆதரிக்கப்பட்டார்.

PSU, CFDT மற்றும் UNEF மாணவர் கூட்டமைப்பு ஆகியவை பியர் மொன்டெஸ்-பிரான்ஸின் (Pierre Mendès-France) மீது நம்பிக்கை வைத்திருந்தன. முற்றிலும் ஒரு முதலாளித்துவ வர்க்க கட்சியான தீவிரவாதப்போக்கு சோசலிஸ்டுகளின் (Radical Socialists) ஓர் அங்கத்தவரான மொன்டெஸ்-பிரான்ஸ், 1936 இல், லெயோன் புளூம் (Léon Blum) இன் மக்கள் முன்னணி அரசாங்கத்தில் இணைந்திருந்தவராவார். போரின் போது, அவர் ஜெனரால் டு கோல் ஐ ஆதரித்தார். நான்காம் குடியரசில், 1954 இல் அரசு தலைவராக இருந்து வியட்நாமிலிருந்து பிரெஞ்சு துருப்புகளைத் திரும்ப பெறுவதை அவர் ஒழுங்கமைத்ததற்காக, வலதுசாரிகளின் வெறுப்பை சம்பாதித்திருந்தார். 1968 இல் அவர் PSUக்கு நெருக்கமாக இருந்தார்.

மொன்டெஸ்-பிரான்ஸ் இன் முறைப்படி அறிவிக்கப்பட்ட மேற்கை நோக்கிய நிலைநோக்கு என்பது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அவரை ஒரு பரம-எதிரியாக கருதுகிறது என்பதை அர்த்தப்படுத்தியது. அவர், பாரீஸின் சார்லெட்டி மைதானத்தில் PSU, CFDT மற்றும் UNEF இன் ஒரு பெரிய கூட்டத்தில் தோன்றிய போது, மே 27 இல் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகங்களில் எச்சரிக்கை மணி பலமாக ஒலிக்கிறது. மித்திரோனும் மொன்டெஸ்-பிரான்ஸ் உம் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் எவ்வித செல்வாக்கும் இல்லாத ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கிவிடுவார்களோ என்று அது அஞ்சுகிறது.

மே 29 இல், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் CGT உம் அவற்றின் சொந்த ஆர்ப்பாட்டங்களைப் பாரீஸில் ஒழுங்கமைக்கின்றன; பல நூறு ஆயிரக் கணக்கானவர்கள் "ஒரு மக்கள் அரசாங்கத்திற்காக" என்ற முழக்கத்தின் கீழ் தலைநகரில் அணிவகுக்கின்றனர். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகரமான ரீதியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கனவிலும் நினைக்கவில்லை. ஒரு "மக்கள் அரசாங்கத்திற்கான" அதன் கோரிக்கையானது, ஐந்தாம் குடியரசு அமைப்புகளுக்கு சவால்விடுக்காமல், தொழிற்சாலைகளில் இருந்த புரட்சிகர உணர்வுகளைச் சாந்தப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இருந்தது. “ஜனநாயக மாற்றமே” அவசியமென வலியுறுத்தியதன் மூலமாக, புரட்சிகர நடவடிக்கையை நிராகரிப்பதை CGT தெளிவுபடுத்தியது.

பாரீஸின் தலைமை பொலிஸ் அதிகாரி பின்னர் அறிவிக்கையில், CGT-PCF ஆர்ப்பாட்டம் குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லையென்றும், ஒரு பாரம்பரிய, கட்டுப்பாட்டிற்குட்பட்ட தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தையே அவர் எதிர்பார்ப்பதாகவும், அது தான் நடக்கிறது என்றும் அவர் அறிவித்தார். ஆனால் நிலைமை, ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்தவர்களின் கீழ் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இராணுவ துணைப்படை துருப்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், பாரீஸ் புறநகர் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக டாங்கிகளும் நிறுத்தப்பட்டிருந்தன.

மே 30 அன்று, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு நிலைமையை விவாதிக்க ஒன்று கூடியது. அதிகாரத்தை ஏற்க அக்கட்சிக்கு எவ்வித விருப்பமும் இல்லை என்பதையும், நிலவும் ஒழுங்கமைப்பைப் பேணுவதில் தான் அது முழுமையாக அக்கறை கொண்டிருக்கிறது என்பதையும் அக்கூட்டத்தின் பதிவு செய்யப்பட்ட ஒலிநாடா உறுதி செய்கிறது. ஆறு மாதங்களுக்குப் பின்னர், மத்திய குழுவின் அறிக்கை ஒன்று, இதே மனோபாவத்தை அதன் வார்த்தைகளிலேயே நியாயப்படுத்துகிறது: “சக்திகளின் சமநிலை, தொழிலாள வர்க்கமும் அதன் கூட்டாளிகளும் கடந்த மே மாதம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை அனுமதிக்கவில்லை" என அது அறிவித்தது.

மே 30 ஆம் தேதி கூட்டத்தில், பொது செயலாளர் எமில் வால்டெக்-றொஷே (Émile Waldeck-Rochet) அறிவிக்கையில், பிரான்சுவா மித்திரோன் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கு போதிய செல்வாக்கை வழங்கினால், அவரின் கீழ் ஓர் இடைக்கால அரசாங்கத்தில் பங்கெடுப்பதற்கு தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். அதுபோன்றவொரு அரசாங்கம் மூன்று பணிகளை நிறைவேற்ற வேண்டுமென அவர் கூறுகிறார்: அரசு மீண்டும் செயல்படுமாறு செய்ய வேண்டும், வேலைநிறுத்தக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விடையிறுக்க வேண்டும், மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை நடத்த வேண்டும் என்பனவாகும்.

எவ்வாறிருந்தபோதினும் உடனடியாக நாடாளுமன்ற தேர்தல்களை நடத்துவது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கு விருப்பமான தேர்வாக உள்ளது. கட்சி செய்தி தொடர்பாளர் பொதுவான மனோபாவத்தை தொகுத்தளித்தார்: “ஒரு பொது தேர்தலில் இருந்து மட்டுந்தான் நம்மால் இலாபமடைய முடியும்,” என்றார்.

அந்நாளின் நிலைமை கத்தி முனையில் நிற்பதாக உள்ளது. ஜெனரால் டு கோல் அதற்கு முந்தைய மாலை சுவடு தெரியாமல் தலைமறைவாகி இருந்தார். பாடன்-பாடனுக்கு சென்ற அவர், அங்கே ஜேர்மனியில் இருந்த பிரெஞ்சு துருப்புகளின் தளபதி ஜெனரால் மஸ்சு (General Massu) உடன் பேச்சுவார்த்தைகள் நடத்துகிறார். மஸ்சு அல்ஜீரிய போரில் அவர் வகித்த பாத்திரத்திற்காக இழிபெயரெடுத்தவர். டு கோல் தப்பிப்பதற்கு திட்டமிட்டாரா அல்லது வெறுமனே அவரிடம் ஆதரவு கோரினாரா என்பது இன்று வரையில் சர்ச்சைக்குரியதாக உள்ளது. பின்னர் அவரது நினைவுக்குறிப்புகளில் மஸ்சு குறிப்பிடுகையில், அவர் டு கோலை பாரீஸிற்கு திரும்பி சென்று, பிரெஞ்சு மக்களுக்கு பகிரங்கமாக எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொண்டதாக குறிப்பிடுகிறார்.

பின்னர் மே 30 அன்று மதியம், டு கோல் வானொலியில் ஓர் உரை நிகழ்த்துகிறார். குடியரசு ஆபத்தில் இருப்பதாகவும், அது பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறுகிறார். அவர் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்து, ஜூன் 23 மற்றும் 30 ஆம் தேதிகளில் புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுத்தார். அதே நேரத்தில், அந்த ஜெனராலின் பல நூறு ஆயிரக் கணக்கான ஆதரவாளர்கள், பிரெஞ்சு தேசிய நிறத்தின் கீழ் சாம்ப்ஸ் எலிசே இல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அதே நாள் மாலை, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி டு கோல் இன் முடிவை ஆதரித்து, அதன் சொந்த கொள்கையின் விளைவாக கிடைத்த வெற்றியாக, அதை முன்வைக்கிறது. அது ஐந்தாம் குடியரசின் சட்டபூர்வ கட்டமைப்பிற்கு அதன் ஆதரவை வழங்கியதோடு, “செங்கொடியினதும் அந்நாட்டின் மூவண்ண கொடியினதும்" ஐக்கியத்தை பிரகடனம் செய்து, அது தன்னைத்தானே கோலிஸ்ட்டுகளுக்கு உகந்த கட்சியாக காட்டிக்கொள்ள முனைகிறது. மே 31 அன்று, CGT தலைவர் ஜோர்ஜ் செகி தேர்தல்களுக்கு அவரது உடன்பாட்டை அறிவிக்கிறார். அவர், “தேர்தல்கள் நடத்துவதை CGT தடுக்காது,” என்று கூறுகிறார், அது நாட்டை பீடித்துள்ள இயக்கமற்றநிலை, பொது வேலைநிறுத்தத்தை கைவிடும் அளவிற்குசெல்லும் என்ற கண்ணோட்டத்தில் இருக்கிறது. “தொழிலாளர்களின் நலனுக்காகவே, அவர்களது மாற்றத்திற்கான விருப்பத்தை அது வெளிப்படுத்துவதாக,” அவர் தெரிவிக்கிறார்.

தேர்தல் தேதிக்கு முன்னதாக வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை முடிவுக்குக் கொண்டு வர, இப்போது CGT அதன் மொத்த சக்தியையும் பிரயோகிக்கிறது, இது ஏதோவிதத்தில் அதற்கு மிகவும் சிரமத்துடன் மட்டுமே செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஆனால் படிப்படியாக வேலைநிறுத்த முனை சிதைக்கப்படுகிறது. தொழிற்சாலை உடன்படிக்கைகள் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புகின்றனர், ஆனால் மிகவும் போர்குணமிக்க பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுகின்றன, பொலிஸ் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேற தொடங்குகின்றன. ஜூன் 16 அன்று, தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ரினோல்ட்-பியான்கூர் தொழிலாளர்கள் வேலையை தொடங்குகிறார்கள்; அதே நாளில்தான் சோர்போன் பல்கலைக்கழகத்திலிருந்தும் பின்வாங்கப்படுகின்றது.

எவ்வாறிருந்த போதினும், இறுதி வேலைநிறுத்தங்களும் மற்றும் ஆக்கிரமிப்புகளும் முடிவுக்கு வருவதற்கு அப்போதும் வாரக்கணக்காகிறது. பல மாதங்களுக்கு ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட உண்மையில் நாடு அமைதி நிலைமைக்குத் திரும்பி இருக்கவில்லை. ஆனால் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டிருந்தது. CGT இன் வரலாற்றை எழுதிய ஓர் ஆசிரியர் மிஷேல் ட்ரேஃப்யூஸ் (Michel Dreyfus), பொது வேலைநிறுத்தத்தின் உச்சக்கட்டத்தில் மிகவும் செல்வாக்குமிகுந்த தொழிற்சங்கங்களின் மனோபாவம் குறித்து பின்வருமாறு எழுதுகிறார்: “மே 1968 இல், சக்திகளின் சமநிலை அதற்கு சாதகமாக தென்பட்டபோதும், CGT வேண்டுமென்றே அரசுடன் மோதலுக்கு வருவதை தவிர்த்துக் கொண்டது.”

வலதுசாரி எதிர்தாக்குதல்

மே முதல் வாரங்களில், வலதுசாரி அரசியல் முற்றுமுழுதாக முடமாகி இருந்ததுடன், தனிமைப்படுத்தப்பட்டும் இருந்தன. இப்போது அவை படிப்படையாக அதன் செயல்பாடுகளை மற்றும் அதன் தன்னம்பிக்கையை மீட்டுக் கொண்டு வருகின்றன, இதற்கு PCF மற்றும் CGTக்கு தான் நன்றி கூற வேண்டும். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியபோது, வீதிகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து போராட்டங்கள் வாக்குப் பெட்டிகளை நோக்கி மாறுகின்றன, இது டு கோல் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு ஆதாயமளிக்கிறது. இப்போது அவர்கள், “மௌனமான பெரும்பான்மையினரின்" அச்சங்களுக்கு முறையிட்டு, சமூகத்தின் மிகவும் முனைப்பற்ற மற்றும் பின்தங்கிய பிரிவுகளை அரங்கத்திற்குள் கொண்டு வரக்கூடிய நிலைமையில் இருக்கிறார்கள்.

இந்த திசையில் முதல்முயற்சிகளை ஏற்கனவே மே மாதத்தில் பார்க்க முடிந்தது. அரசாங்கம் அரசு-கட்டுப்பாட்டிலான ஊடகங்கள் மீது (இந்த சமயத்தில் அங்கே தனியார் ஒளிபரப்பாளர்கள் இருக்கவில்லை) கடுமையான தணிக்கை நடவடிக்கைகளை அமுலாக்குகிறது. மே 19 இல், அது எதிர்கட்சிகளுக்கு பயன்படக்கூடிய தகவல்களை ஒளிபரப்புவதற்கு தொலைக்காட்சிக்கு தடைவிதிக்கிறது. பிரான்சிஸிற்குள் ஒளிபரப்பைப் பெறக்கூடியதாக இருந்த, வெளிநாட்டு ஒளிபரப்பு அமைப்புகளின் இதழாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து நேரடியான செய்திகளை அறிவித்து வந்த நிலையில், மே 23 இல், அது அவர்களால் பயன்படுத்தப்பட்ட அலைவரிசைகளை நிறுத்துகிறது.

மே 22 இல், அரசாங்கம் டானியல் கோன்-பென்டிற் (Daniel Cohn-Bendit) இன் குடியிருப்பு அனுமதியைத் திரும்ப பெறுகிறது. ஜேர்மன் கடவுச்சீட்டைக் கொண்டிருந்த இந்த மாணவர் தலைவர், நாஜிக்களிடமிருந்து தப்பிக்க பிரான்சிற்கு தப்பியோடி வந்த ஒரு யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். நாஜி ஆட்சி வெறும் 23 ஆண்டுகளுக்கு முன்னர்தான் முடிவுக்கு வந்திருந்தது, இந்நடவடிக்கையின் அடையாளமயப்படுத்தல்கள் எதிலும் காணக்கூடியதாக இருந்தது. அங்கே பாரிய கோபம் நிலவியது, மாணவர் போராட்டங்கள் மிகவும் தீவிரமாக மாறியிருக்கின்றன. மீண்டும் அங்கே வன்முறையான வீதி போராட்டங்கள் நிகழ்கின்றன. மாணவர்களை CGT தொடர்ந்து தனிமைப்படுத்தி, அவர்களுடன் எந்தவித கூட்டு நடவடிக்கையையும் நிராகரிக்கின்ற போதினும், மாணவர்கள் பல சமயங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பில்லாமலேயே நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்—அது நிலைமையைத் தீவிரப்படுத்த மட்டுமே சேவை செய்கிறது.

மே 24 அன்று, வன்முறை போராட்டங்கள் இருவரை பலி வாங்குகிறது. லியோனில், ஒரு பொலிஸ்காரர் உயிரிழக்கிறார், பாரீஸில் ஓர் இளம் ஆர்ப்பாட்டக்காரர் கொல்லப்படுகிறார். அந்த அதிர்ச்சி பிரமாண்டமாக உள்ளது, ஊடகங்களோ "மாணவர் வன்முறை குற்றவாளிகளுக்கு" எதிராக காதைப் பிளக்கும் அளவிற்கு பிரச்சாரமிடத் தொடங்குகின்றன.

சில கோலிஸ்ட்டுகள், குடியரசின் பாதுகாப்பிற்காக குழு (CDR) ஒன்றை உருவாக்குகின்றனர், அது அல்ஜீரிய பிரெஞ்சு பின்னணிகளில் இருக்கும் அதிவலது உட்கூறுகளுடன் ஒத்துழைக்கிறது. அல்ஜீரியாவிற்கு கோல் சுதந்திரம் வழங்கியதால், அல்ஜீரிய பிரெஞ்சு பின்னணியில் உள்ளவர்கள் கோல் ஐ ஒரு துரோகியாகவே கருதுகின்றனர், ஆனால் புரட்சியின் ஆபத்து வெவ்வேறு வலதுசாரி கன்னைகளை ஐக்கியப்படுத்த சேவை செய்கிறது. மே 30 இல், "அல்ஜீரியா பிரெஞ்சினுடையது" (Algérie française) என்ற கூச்சல்கள் சாம்ப்ஸ் எலிசே இன் கோலிச அடையாளங்களுடன் இணைகின்றன. டு கோலுக்கு ஆதரவான முதல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் கூட்டாக தயாரிக்கப்படுகிறது. 1961 இல் அவருக்கு எதிராக அல்ஜீரியாவில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஒழுங்கமைத்த ஜெனரல் ராவுல் சலோன் (Raoul Salan) மற்றும் அவருடன் OAS பயங்கரவாத அமைப்பின் ஏனைய 10 அங்கத்தவர்களையும், ஜூன் 17 இல், டு கோல் மன்னிப்பளித்ததன் மூலம் தனது நன்றிக்கடனை தீர்த்துக்கொள்கிறார்.

தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதும், அரசு ஒடுக்குமுறை அங்கங்கள் மிகவும் சுய-நம்பிக்கையோடு செயல்படத் தொடங்குகின்றன. மே 31 இல், உள்துறை மந்திரி கிறிஸ்தியான் ஃபுஷே (Christian Fouchet) மாற்றப்பட்டு, றேமொன் மார்செலான் (Raymond Marcellin) நியமிக்கப்படுகிறார். "இறுதியில், ஒரு உண்மையான ஃபுஷே” வந்துள்ளார் என்ற வார்த்தைகளோடு டு கோல் அவரை வரவேற்றார் —அது ஜோசப் ஃபுஷே (Joseph Fouché) ஐ குறித்த ஒரு குறிப்பாகும், அவர் 1789 பிரெஞ்சு புரட்சியின் தோல்விக்குப் பின்னர், பரவலாக பீதியூட்டிய ஒடுக்குமுறை எந்திரம் ஒன்றை உருவாக்கி, நெப்போலிய இயக்குனரகத்தின் கீழ் பொலிஸ்துறை மந்திரியாக இருந்தவராவார்.

மார்செலான் மிக மிக கடுமையாக செயல்படுகிறார். அவர் நியமிக்கப்பட்ட அன்றைய நாளிலேயே, எரிபொருள் வினியோகங்கள் நடப்பதற்கும், போக்குவரத்து மீண்டும் செயல்படுவதற்குமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வெளியே வீதிகளிலிருந்து மறியல் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். ஜூன் 12 அன்று, தேர்தல் பிரச்சாரத்தின் போது அனைத்து வீதி ஆர்ப்பாட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. அதே நாளில், அவர் எல்லா புரட்சிகர அமைப்புகளையும் கலைக்க உத்தரவிடுகிறார், அத்துடன் இருநூறு "சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்கள்" நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அந்த தடை, ட்ரொட்ஸ்கிச OCI, அதன் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள், அலென் கிறிவின் (Alain Krivine) இன் JCR (புரட்சிகர இளைஞர் கம்யூனிஸ்ட் — Jeunesses communistes révolutionnaires), டானியல் கோன்-பென்டிற் இன் அராஜகவாத "மார்ச் 22 இயக்கம்", அத்துடன் மாவோயிச அமைப்புகளையும் பாதிக்கிறது. ஒவ்வொரு அங்கத்தவரையும் கண்காணித்து அவர்களை குறித்து தகவல் சேகரிக்குமாறு உள்நாட்டு இரகசிய சேவைக்கு (Renseignements généraux) உத்தரவிடப்படுகிறது.

மார்செலான் ஆறு ஆண்டுகள் பதவியில் இருக்கிறார், இந்த காலகட்டத்தில் அவரால் பொலிஸ், இரகசிய சேவை மற்றும் சிறப்பு கலக ஒடுப்பு பொலிஸ் (CSR) ஆகியவற்றை உயர்ந்தளவில் தயார் செய்யப்பட்ட உள்நாட்டு போர் எந்திரங்களாக அபிவிருத்தி செய்ய முடிகிறது. அவர் பொலிஸ் படைகளுக்கான செலவுகளை இரட்டிப்பாக்குவதுடன், அதை நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களுடன் ஆயுதமேந்தச் செய்து, 20,000 புதிய பொலிஸ் அதிகாரிகளையும் நியமிக்கிறார்.

கோலிஸ்ட்டுகள் அச்சத்தினை அடித்தளமாக்கொண்ட ஒரு தேர்தல் பிரச்சாரத்தை நடத்துகின்றனர். அவர்கள் ஓர் உள்நாட்டு போர் அபாயத்தை உயர்த்திக்காட்டுகின்றனர், ஒரு சர்வாதிபத்தியத்தை குறித்தும், கம்யூனிஸ்ட் அதிகாரத்தை கைப்பற்றுவதைக் குறித்தும் எச்சரிக்கின்றனர், குடியரசு மற்றும் தேசத்தின் ஐக்கியம் குறித்து பாசாங்கு செய்கின்றனர். எதிர்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இந்த கூச்சலில் இணைந்து கொள்கின்றன. “இடது தீவிர போக்கினருக்கு" எதிராக பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான கிளர்ச்சிகள், வலதுசாரிகளின் பிரச்சார ஆலைகளில் அரைத்த அதே மாவை அரைக்கிறது. தேர்தலுக்கு முன்னர் தொலைக்காட்சியில் பிரான்சுவா மித்திரோன் இவ்வாறு எதிர்ப்புரை வழங்குகிறார்: “தாக்குதல்களுக்கு இடையிலும், நாங்கள், முதல் நாளிலிருந்து, தந்தை நாட்டின் ஐக்கியம் மற்றும் சமாதானத்தைப் பேணுவதைக் குறித்து மட்டுமே சிந்தித்து வந்துள்ளோம்,” என்கிறார்.

இந்த தேர்தல் உத்தியோகபூர்வ இடதிற்கு ஒரு பெருந்தோல்வியாக இருக்கிறது. கோலிஸ்ட்டுகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் 46 சதவீத வாக்குகள் பெறுகின்றனர், மிகப் பலமான எதிர்கட்சியான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, அதற்கு ஓராண்டுக்கு முன்னர் பெற்றதை விடவும் மிகவும் குறைவாக, 20 சதவீத வாக்குகள் மட்டுமே பெறுகிறது. இடங்களின் ஒதுக்கீடு என்று வரும்போது முடிவு இன்னும் படுமோசமாக இருக்கும் என்பதை பெரும்பான்மை தேர்தல் உரிமை முறை (first-past-the-post) அர்த்தப்படுத்துகிறது. ஐந்தில் நான்கு பங்கு இடங்கள் வலதுசாரி முதலாளித்துவ வர்க்க கட்சிகளுக்கு செல்கின்றன — 59 சதவீதம் கோலிஸ்ட்டுகளுக்கும், 13 சதவீதம் தாராளவாதிகளுக்கும், 7 சதவீதம் மத்திய கட்சிகளுக்கும் செல்கின்றன. மித்திரோனின் ஜனநாயக மற்றும் சோசலிச இடது கூட்டமைப்பு (Fédération de la gauche démocrate et socialiste – FGDS) 12 சதவீத இடங்களைப் பெறுகிறது, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி 7 சதவீதம் மட்டும் பெறுகிறது. அனைத்திற்கும் மேலாக, பழமைவாத கிராமப்புற பகுதிகளில் ஒரு பாரிய பெரும்பான்மை வலதிற்கு வாக்களிக்கிறது; மிகவும் செயலூக்கத்துடன் இருந்த உட்கூறுகளில் பலருக்கு —அதாவது உயர்நிலை பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளம் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்வோர்களுக்கு— அப்போது வாக்களிக்கும் உரிமை இல்லை. உத்தியோகபூர்வ வாக்களிக்கும் வயது 21 ஆகும், அவசர அவசரமாக அழைப்புவிடுக்கப்பட்ட தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலும் புதுப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

புரட்சிகர நெருக்கடி தொடங்கி இரண்டு மாதங்களுக்குப் பின்னர், முதலாளித்துவ வர்க்கம் மீண்டுமொருமுறை அதிகாரத்தில் அதன் பிடியை மீளமைத்து கொள்கிறது. இப்போது டு கோல் ஐ அமைதியாக பிரதியீடு செய்யவும் மற்றும் அதன் ஆட்சியை பாதுகாக்க கூடிய மற்றும் வரவிருக்கின்ற தசாப்தங்களில் தொழிலாள வர்க்கத்தை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடிய புதிய அரசியல் பொறிமுறையான மித்திரோனின் சோசலிஸ்ட் கட்சியை அபிவிருத்தி செய்யவும் அதற்கு கால அவகாசம் கிடைக்கிறது. இதற்காக அது ஒரு பொருளாதார விலை கொடுக்க வேண்டி உள்ளது. இறுதியாக கிறெனெல் உடன்படிக்கை நடைமுறைக்கு வருகிறது, உழைக்கும் மக்கள் அதையடுத்து வரவிருந்த ஆண்டுகளில் அவர்களது வாழ்க்கைத் தரங்களில் ஒரு தெளிவான மேம்பாட்டைக் காண்கிறார்கள். ஆனால் இந்த முன்னேற்றங்கள் என்றென்றைக்கும் நீடித்திருக்கவில்லை, இப்போது அவை பெரிதும் திரும்ப எடுக்கப்பட்டு வருகின்றன.