ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

 

 

 

5

1968 பிரான்சின் பொது வேலைநிறுத்தமும் மாணவர் எழுச்சியும்

 

சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் (OCI) மத்தியவாத போக்கு (1)

சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI) உத்தியோகபூர்வமாக 1971 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து (ICFI) உடைத்துக் கொண்டது. ஆனால் 1968 இல் அது பின்பற்றிய அரசியல் போக்கானது, ஏற்கனவே 1950களின் தொடக்கத்தில் ஏனைய ICFI இன் பிரிவுகளுடன் சேர்ந்து பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக அது பாதுகாத்து வந்த புரட்சிகர முன்னோக்கிலிருந்து வெகுதூரத்திற்கு விலகிப்போயிருந்தது.

1968 இல் OCI ஆல் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம், நான்காம் அகிலத்தின் புரட்சிகர வேலைத்திட்டத்தின் மரபுகளை விட பெரிதும் மத்தியவாத மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கவாதத்தின் மரபுகளை ஒத்திருந்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் தொழிலாளர் பொது கூட்டமைப்பின் (CGT) ஸ்ராலினிச தலைமை மே மாத பொது வேலைநிறுத்தத்தை நசுக்கி, கோலிச ஆட்சியைப் பாதுகாக்க முடிந்தது என்ற உண்மையில், பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் பிரெஞ்சு ஆதரவாளர்களுடனும், அலன் கிறிவின் தலைமையிலான புரட்சிகர இளைஞர் கம்யூனிஸ்ட் (Jeunesse Communiste Révolutionnaire — JCR) மற்றும் பியர் பிராங் தலைமையிலான சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி (Parti Communiste Internationaliste — PCI) ஆகியவற்றுடனும் சேர்ந்து, OCI உம் பெரியளவில் பொறுப்பை கொண்டுள்ளது.

ஒரு மத்திய வேலைநிறுத்த குழுவிற்கு அழைப்புவிடுவதே (comité central de grève), OCI இன் அரசியல் போக்கின் பிரதான அச்சாக இருந்தது. இது "ஐக்கியத்திற்கான", அல்லது OCI ஆல் விரும்பப்பட்ட சூத்திரத்தின்படி, “தொழிலாளர்கள் மற்றும் அதன் அமைப்புகளின் ஐக்கிய வர்க்க முன்னணிக்கான" (unité de front de classe ouvrière et de ses organisations) அழைப்புடன் மூழ்கி இணைந்திருந்தது. 1968 இன் மிகமுக்கிய மாதங்களில், இவைதான் OCI மற்றும் அதனுடன் இணைந்திருந்த அமைப்புகளது அனைத்து அறிக்கைகளிலும் மற்றும் அரசியல் கோரிக்கைகளிலும் காணக்கூடிய பிரதான முழக்கங்களாக இருந்தன.

அந்த பொது வேலைநிறுத்தத்திற்கு ஓராண்டுக்குப் பின்னர் பிரசுரித்த அதன் 300 பக்க நூலில் OCI அந்நேரத்திய அதன் பொதுவான நோக்குநிலையை தொகுத்தளித்திருந்தது. அதில் OCI முடிவாக அறிவித்தது: “அதிகாரத்திற்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்கள் … தொழிலாளர்களின் மற்றும் அவர்களது அமைப்புகளின் ஒருங்கிணைந்த வர்க்க முன்னணிக்கான போராட்டத்தில் உள்ளடங்கி இருந்தது. அந்த போராட்டம் 1968 மே இல் ஒரு தேசிய பொது வேலைநிறுத்த குழுவிற்கான சுலோகத்தில் பிரத்தியேக வடிவத்தை எடுத்தது.”

OCI இன் பத்திரிகையான Information Ouvrières இல் ஒரு சிறப்பு பதிப்பாக அந்நூல் பிரசுரிக்கப்பட்டது, அதன் ஆசிரியர் பிரான்சுவா டு மாஸ்ஸோ (François de Massot), 1950 இல் இருந்து அவ்வமைப்பின் ஒரு முக்கிய அங்கத்தவர் ஆவார். டு மாஸ்ஸோ அன்றாட அபிவிருத்திகளைக் குறித்து ஒரு விரிவான விவரிப்பை அந்நூலில் வழங்குவதுடன், OCI இன் தலையீடு குறித்த விரிவான ஆவணங்களையும் அது வழங்குகிறது. அதில் அரசியல் கோரிக்கைகள் மற்றும் துண்டுப்பிரசுரங்களின் மறுபிரசுரமும் உள்ளடங்கும். OCI இன் அரசியல் போக்கை துல்லியமாக வரைவதை அந்நூல் சாத்தியமாக்குகிறது. [1]

ஐக்கிய வர்க்க முன்னணி"

மத்தியவாதத்திற்கு எதிரான ஒரு நீண்ட அரசியல் போராட்டத்தில் நான்காம் அகிலத்தை ஸ்தாபித்திருந்த லியோன் ட்ரொட்ஸ்கி, ஐக்கிய முன்னணி கோரிக்கைக்கு பின்வரும் வார்த்தைகளோடு அவரது அணுகுமுறையை தொகுத்தளித்திருந்தார்: “ஐக்கிய முன்னணி கொள்கையை சூளுரைக்கும் அந்த மத்தியவாதி, அதை புரட்சிகர உள்ளடக்கமின்றி வெறுமைப்படுத்தி, அதையொரு தந்திரோபாய அணுகுமுறை என்பதிலிருந்து ஓர் உயர்ந்த கோட்பாடு என்பதாக உருமாற்றுகிறார்.” 1932 இல், மத்தியவாத ஜேர்மன் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (Sozialistischen Arbeiter Partei – SAP) குறித்து அவர் எழுதினார்: “எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஐக்கிய முன்னணியின் கொள்கை ஒரு புரட்சிகர கட்சியின் ஒரு வேலைத்திட்டமாக சேவை செய்ய முடியாது. இடைப்பட்ட காலத்தில், சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் ஒட்டுமொத்த நடவடிக்கையும் இப்போது அதன் மீது தான் கட்டமைக்கப்பட்டு வருகிறது,” என்றார். [2]

இந்த கண்டனம் 1968 இல் OCI இன் நடவடிக்கைக்கும் அதேயளவிற்கு பொருந்துகிறது. அது, ஐக்கிய முன்னணி கொள்கையை, ஒரு தந்திரோபாய அணுகுமுறை என்பதிலிருந்து அதன் பிரதான வேலைத்திட்ட கோட்பாடாக மாற்றியிருந்தது. ஐக்கிய முன்னணி என்ற பெயரிலிருந்து, அனைத்து தொழிற்சங்கங்களின் ஐக்கியம் என்பதாக அது புரிந்து கொண்ட நிலையில், நிஜமான புரட்சிகர நடவடிக்கையின் எந்தவொரு வடிவத்தையும் அது தவிர்த்தது.

அதன் கோரிக்கைகள் மற்றும் அறிக்கைகள் அனைத்திலும் வழமையாக காணப்பட்ட, "தொழிலாளர்கள் மற்றும் அவர்களது அமைப்புகளின் ஐக்கிய வர்க்க முன்னணிக்கான" புதிய சூத்திரத்தின் முக்கியத்துவமாகும். அப்போதிருக்கும் பாரிய அமைப்புகளின் இருப்பை நிராகரிப்பதற்காக, பப்லோவாதிகள் மற்றும் குட்டி-முதலாளித்துவ மாணவர் தலைவர்களை OCI மிகச் சரியாக குற்றஞ்சாட்டிய போதினும், அது அதே அமைப்புகளை நோக்கி ஒரு அடிபணிந்த அணுகுமுறையை ஏற்று, தொழிலாளர்களால் எடுக்கப்படும் எந்தவொரு போராட்டமும் அதன் கட்டமைப்பிற்குள்ளேயே இருக்கவேண்டும் என அது வலியுறுத்தியது.

ஏற்கனவே 1967 இன் கோடையில், OCI ஏற்பாடு செய்த ஒரு மிகப்பெரிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், “தொழிற்சங்கங்கங்களுக்கே இயல்பாக உரித்தான ஒரு கடமையான,  அதன் பதவிகளில் இருப்பவர்களின் ஒரு கடமையான ஐக்கியத்திற்கான நடவடிக்கையை எடுக்கும் தொழிலாளர் அமைப்புகளினதும் தொழிற்சங்க தலைமையகத்தின் இடத்தினை எடுப்பது எமது நோக்கமல்ல என்று நாம் முழுமனதுடன் அறிவிக்கிறோம்,” என்று குறிப்பிட்டது.

டு மாஸ்ஸோ அவரது நூலில் இந்த தீர்மானத்தை மேற்கோளிடுவதுடன், தொழிற்சங்கங்கள் அவற்றினது தலைமையின் கொள்கைகள் எவ்வாறிருப்பினும், அவை தொழிலாள வர்க்க நலன்களை உள்ளடக்கி உள்ளன என்ற வாதத்துடன் அதை நியாயப்படுத்த செல்கிறார். அவர் எழுதுகிறார்: “சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில், தொழிலாளர்களே அபிவிருத்தி செய்துள்ள அமைப்புகளைக் கொண்டும் மற்றும் அவர்களது வர்க்க எதிரிக்கு எதிராக அவர்களை ஐக்கியப்படுத்துவதற்கு ஒரு வழிவகையாக சேவை செய்கின்ற அந்த அமைப்புகளூடாகவே அவர்கள் ஒரு வர்க்கமாகின்றனர். போராட்டத்தில் அவை கொண்டுள்ள புறநிலை நிலைமையின் காரணமாக —அதாவது குறிப்பிட்ட காலகட்டத்தில் தொழிற்சங்கங்கள் அவற்றின் தலைமையினது கொள்கையிலிருந்து சுயாதீனமாக இருப்பதால்— அத்தகைய அமைப்புகள் சுரண்டலுக்கு எதிரான அவற்றின் தொடர்ச்சியான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாடுகளையே உள்ளடக்கி உள்ளன. ஐக்கியப்பட்ட தொழிலாளர் முன்னணியை, பாட்டாளி வர்க்கத்தினது வர்க்க அமைப்புகளின் வழிமுறையாக மட்டும்தான் யதார்த்தமாக்கப்பட முடியும்,” என்கிறார். (அழுத்தம் சேர்க்கப்பட்டது).

இந்த மதிப்பீட்டிலிருந்து செயல்பட்ட OCI, 1968 இல், தொழிற்சங்கங்களின் முதலாளித்துவ-சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தை விமர்சிப்பதை தவிர்த்தது. தொழிற்சங்க தலைமைகள் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தார்கள் என்ற கண்டனத்தை மட்டுமே அவர்கள் தொழிற்சங்க தலைமைகளுக்கு எதிராக எழுப்பினார்கள். வெவ்வேறு தொழிற்சங்கங்களுக்கு இடையே எல்லா மட்டங்களிலும் கூட்டு-ஒத்துழைப்புக்கு அழைப்புவிடுவதுடன், OCI இன் சொந்த அரசியல் முன்னெடுப்புக்களும் கூட மட்டுப்பட்டு இருந்தன. இதுதான், நாம் பின்னர் பார்க்கவிருப்பதைப் போல, அவர்கள் அழைப்பு விடுத்த ஒரு மத்திய வேலைநிறுத்த குழுவிற்கான கோரிக்கைக்கு அடிப்படை சாரமாக இருந்தது.

பரந்தளவில் வினியோகிக்கப்பட்ட அதன் துண்டறிக்கைகள் மற்றும் கோரிக்கைகளில், OCI, ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள் மீது எந்தவொரு பகிரங்கமான விமர்சனம் வைப்பதையும் கூட தவிர்த்துக் கொண்டது. ஒரு சிறிய வாசகர் வட்டத்திற்கான தத்துவார்த்த கட்டுரைகளிலும் மற்றும் பகுப்பாய்வுகளிலும் ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரம் குறித்து கையாளப்பட்ட போதினும், பெருந்திரளான மக்களை நோக்கிய அதன் துண்டுப்பிரசுரங்களில் OCI சர்வசாதாரணமாக, சீர்திருத்தவாத மற்றும் ஸ்ராலினிச தொழிற்சங்க தலைவர்களுடன் ஒன்றுபடுமாறு அழைப்புவிட்டது.

ஐக்கிய முன்னணி குறித்த OCI இன் பொருள்விளக்கம், மார்க்சிச இயக்கத்தால் அபிவிருத்தி செய்யப்பட்ட தந்திரோபாயத்துடன் பொதுவான எதையும் கொண்டிருக்கவில்லை. 1922 இல் லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகையில், “ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், தொழிலாள வர்க்கத்தை சார்ந்திருக்கும் அரசியல் அமைப்புகளுக்கு இடையே, தவிர்க்கவியலாத கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் கூட, முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் ஓர் ஐக்கிய முன்னணியின் சாத்தியக்கூறை அதற்கு உத்தரவாதப்படுத்த வேண்டியது ஓர் அவசர அவசியமாகும்,” என்று கூறி ஐக்கிய முன்னணியின் அவசியத்தை விவரித்திருந்தார். [3]

அதற்கு ஓராண்டுக்கு முன்னதாக, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (Kommunistische Partei Deutschlands - KPD) ஐக்கிய முன்னணி கொள்கையை முன்னெடுக்க வேண்டுமென கம்யூனிச அகிலத்தின் (Comintern) மூன்றாம் காங்கிரஸ் வலியுறுத்தி இருந்தது. தனிமைப்படுத்தப்பட்டு தோல்வியடைந்திருந்த KPD இன் ஒரு மேலெழுச்சியான "மார்ச் இயக்கம்" என்றழைக்கப்பட்டதிலிருந்து கம்யூனிச அகிலம் படிப்பினைகளை எடுத்தது. KPD அதிகாரத்தைப் பிடிப்பதற்கு முன்னதாக முதலில் பெருந்திரளான மக்களின் ஆதரவை "வென்றெடுக்க" வேண்டுமென, அந்த தோல்வியிலிருந்து அது முடிவுக்கு வந்தது. அது ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்திற்கான கோரிக்கை, சீர்திருத்தவாத தொழிற்சங்கங்களின் தலையீடு மற்றும் பல இடைமருவு கோரிக்கை ஆகியவற்றுடன் ஐக்கிய முன்னணி கொள்கையை நேரடியாக பிணைத்தது, ஏனெனில், ட்ரொட்ஸ்கி எடுத்துரைத்ததைப் போல, “ஒரு புரட்சிகர சகாப்தத்தில், அது ஏதோ வித்தியாசமான விதத்தில் இருந்தாலும் கூட, பெருந்திரளான மக்கள் அவர்களது அன்றாட வாழ்வை தொடர்ந்து நடத்துகின்றனர்” [4]

பத்தாண்டுகளுக்கு பின்னர், ட்ரொட்ஸ்கி மீண்டுமொருமுறை ஜேர்மனியில் ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தை ஏற்குமாறு அழைப்புவிடுத்தார். இப்போதோ அது ஹிட்லர் அதிகாரத்தை ஏற்பதிலிருந்து தடுப்பதற்கான பிரச்சினையாக இருந்தது. ட்ரொட்ஸ்கி வாதிடுகையில், தேசிய சோசலிசத்தின் (நாஜிசம்) அதிகரித்து வந்த அச்சுறுத்தலுக்கு எதிராக ஓர் ஐக்கிய முன்னணியை அமைக்குமாறு கம்யூனிஸ்ட்டுக்கள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளிடம் வலியுறுத்தினார். அவ்விரு கட்சிகளின் தலைவர்களும் அதுபோன்றவொரு போக்கை பிடிவாதமாக மறுத்தனர். ஸ்ராலினிச KPD தலைவர்கள் சமூக ஜனநாயகக் கட்சியை (SPD) "சமூக பாசிசவாதிகள்" என்று வரைவிலக்கணமிட்டு, அதனுடன் ஒத்துழைக்க மறுத்தமை, தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி முடமாக்கி ஹிட்லரின் வெற்றியை சாத்தியமாக்கியது.

1920களின் ஆரம்ப மற்றும் 1930களின் ஆரம்ப சந்தர்ப்பங்களிலுமே ஐக்கிய முன்னணி என்பது புரட்சிகர மூலோபாயத்திற்கு ஒரு பதிலீடாக அல்ல, ஒரு தந்திரோபாயமாக முன்னெடுக்கப்பட்டது. அது நடைமுறை பிரச்சினைகள் மீதான கூட்டு-ஒத்துழைப்பில் மட்டுப்பட்டு இருந்ததுடன், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி அதன் சொந்த வேலைத்திட்டத்தை கைவிட வேண்டுமென்றோ அல்லது சமூக ஜனநாயகக் கட்சி மீதான விமர்சனத்தை கைவிட வேண்டுமென்பதையோ அர்த்தப்படுத்தவில்லை.

ஒரு ஐக்கிய முன்னணியின் அடிப்படையில் சமூக ஜனநாயக தலைவர்களை புரட்சியாளர்களாக மாற்றிவிட முடியுமென ஒருபோதும் ட்ரொட்ஸ்கி பிரமைகளை வழங்கியதில்லை. அதற்கு மாறாக, சமூக ஜனநாயக தலைவர்களின் செல்வாக்கிலிருந்து பெருந்திரளான மக்களை முறித்துக் கொள்ள செய்வதே ஐக்கிய முன்னணியின் நோக்கமாக இருந்தது.

கம்யூனிஸ்டுகள், எவ்வித முன்நிபந்தனைகளையும் வைக்காமல், அவர்களது அன்றாட நலன்களைப் பாதுகாக்க மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியுடன் பாசிஸ்டுகளுக்கு எதிராக ஒரு அணியை உருவாக்க விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் சமூக ஜனநாயக தொழிலாளர்களுக்கு எடுத்துக்காட்டி இருந்தால், அது முதலாளித்துவ அரசுடன் ஒத்துழைக்க விரும்பிய SPD இன் தலைமையை பலவீனப்படுத்த மட்டுமே சேவை செய்திருக்கும். பின்னர் SPD இன் அங்கத்தவர்கள், அவர்களது சொந்த அனுபவத்தின் அடிப்படையில், அவர்களே அவர்களது அமைப்பு மற்றும் அவர்களது தலைமையின் மதிப்பை தீர்மானித்திருப்பார்கள்.

எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய முன்னணி என்பது, ஒரு சுயாதீனமான புரட்சிகர கொள்கையை கைவிடுதலை அர்த்தப்படுத்தவில்லை. ட்ரொட்ஸ்கி 1932 இல், “போராட்டத்திற்கு சீர்திருத்தவாதிகள் தடை போட ஆரம்பிக்கும் சமயத்தில், இயக்கத்திற்கு வெளிப்படையாக சேதம் ஏற்படவிருக்கின்றபோது, நிலைமைக்கு எதிர்-நிலைப்பாடு எடுப்பதற்காக மற்றும் பெருந்திரளான மக்களின் சிந்தனைக்கு ஏற்ப, நாம் ஒரு சுயாதீனமான அமைப்பாக, நமது தற்காலிக அரைகுறை-கூட்டாளிகள் இல்லாமலேயே, அப்போராட்டத்தை அதன் முடிவு வரையில் இட்டுச்செல்ல எப்போதும் நாம் உரிமை கொண்டிருக்கிறோம்,” என்று வலியுறுத்தினார். [5]

மார்க்சிசத்திற்கு பதிலாக தொழிற்சங்கவாதம்

OCI ஐக்கிய முன்னணியை, ஒரு புரட்சிகர தந்திரோபாயம் என்பதிலிருந்து தொழிற்சங்கங்களிடம் அதன் சொந்த அடிபணிவுக்கு ஒரு சந்தர்ப்பவாத நியாயப்பாடாக மாற்றியது. OCI வலியுறுத்துகையில், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டம் இத்தகைய அமைப்புகளின் வடிவங்களுக்குள் மட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்க எந்திரத்திற்கும் இடையே மோதலைத் தீவிரப்படுத்தக்கூடிய எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறியது.  

உண்மையில், ஒரு சிறுபான்மை தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்கங்களில் ஒழுங்கமைந்திருந்தனர். அதே நேரத்தில், தொழிலாளர் சக்தியில் வெறும் 30 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தொழிற்சங்க மயப்படுத்தப்பட்டிருந்தனர். (இன்றோ இந்த எண்ணிக்கை 7 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.) மொத்த தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினரும் மற்றும் இளைஞர்களில் பெரும் பெரும்பான்மையினரும் தொழிற்சங்கங்களுடன் ஒழுங்கமையவில்லை என்பதோடு, அவர்கள் முற்றிலும் சரியாகவே அவற்றின் மீது அவநம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களை தொழிற்சங்கங்கள நோக்கி திருப்பிவிடுவதற்கு அப்பாற்பட்டு, OCI ஆல் அத்தகைய அடுக்குகளுக்கு ஒரு முன்னோக்கை வழங்க முடியவில்லை.

மாணவர் அமைப்பு UNEF ஐ நோக்கி மாணவர்கள் திரும்பியிருந்தனர், அதுவோ அந்நேரத்தில் மிஷேல் றொக்கா தலைமையிலான சமூக ஜனநாயக, ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் (Parti socialiste unifié—PSU) மேலாளுமையில் இருந்தது. டு மாஸ்ஸோ எழுதுகிறார்: “எதிர்ப்பை ஒழுங்கமைப்பதற்கு மாணவர்களுக்கு ஒரு தொழிற்சங்கம், அதாவது Union National des Étudiants de France, வேண்டும்… நிஜமான போராட்டம் தொடங்குகையில், UNEF அதன் தலைமையின் தயக்கம் மற்றும் பலவீனங்களுக்கு இடையிலும் அதன் முழு முக்கியத்துவத்தை மீளப்பெற்றுக்கொண்டது. ஒரு மாணவர் தொழிற்சங்க அமைப்பாக பாத்திரம் வகிப்பதனால் அதன் பொறுப்பான தலையீடு ஊடாக, அது ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை பெருந்திரளான மாணவர்களின் விடயமாக்கியதுடன், தொழிலாளர் அமைப்புகளை அவற்றின் சொந்த கடமைப்பாடுகளை எதிர்கொள்ளவும் செய்தது. அதுவே மாணவர்களை ஒன்றுதிரட்டுவதற்கான வழிவகை என்பதோடு, அதேநேரத்தில் அது ஐக்கிய முன்னணிக்கான ஒரு நிஜமான போராட்டத்தையும் சாத்தியமாக்குகிறது" (மூலத்தில் அழுத்தம் சேர்க்கப்பட்டது).   

பப்லோவாதிகளுக்கு எதிரான ஒரு தாக்குதலில் டு மாஸ்ஸோ எழுதுகிறார்: “தொழிலாளர்களின் மற்றும் அடிமட்டத்திலிருந்து ஐக்கிய முன்னணி என்றழைக்கப்படுவதற்கு ஆதரவாக உள்ள அவர்களது அமைப்புகளின் ஐக்கிய முன்னணிக்கான போராட்டத்தை யாரெல்லாம் நிராகரிக்கிறார்களோ, அவர்கள் ஒன்றரை நூற்றாண்டு கால போராட்டம் மற்றும் தியாகங்களிலிருந்து தொழிலாள வர்க்கத்தால் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்புகளையே நிராகரிக்கின்றனர். அந்த அமைப்புகளே தம்மை ஒரு வர்க்கமாக உருவமைத்துக்கொண்டதும், தன்னைப்பற்றியும் மற்றும் மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தில் நனவுபூர்வமாகவும் இருந்தன. அவற்றில் இருப்பவர்களே இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்காக தவிர்க்கவியலாமல் ஒன்றிணைந்து வருகின்றனர். யாரெல்லாம் அவர்களது அதிகாரத்துவ தலைமையைக் காட்டி, பாரிய அமைப்புகளை குழப்புகிறார்களோ, யாரெல்லாம் 'CGT காட்டிக்கொடுப்பு' என்று அலறுகிறார்களோ, அவர்களது கரங்களில் துடைத்தழிக்கும் அழிப்பானை வைத்துக் கொண்டு தொழிற்சங்கங்களையும் அரசியல் கட்சிகளையும் வர்க்க போராட்டத்தின் வரைபடத்திலிருந்து வெறுமனே அழிக்க பாய்கிறார்களோ, அவர்கள் அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவ அரசுக்கு எதிரான போராட்டத்திலிருந்து பின்வாங்குகிறார்கள்,” என்கிறார்.

தொழிலாள வர்க்கம் இந்த அமைப்புகளில், "ஒரு வர்க்கமாக, தானே நனவுபூர்வமாக, மூலதனத்திற்கு எதிரான அதன் போராட்டத்தில் தன்னைத்தானே உள்ளடக்கி இருந்தது" என்று தொழிற்சங்கங்களை பெருமைப்படுத்தியமை, மார்க்சிச மரபியத்துடன் எதையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அதற்கு மாறாக இது தொழிற்சங்கவாதத்தின் (syndicalism) மரபியத்திலிருந்தே வருகிறது. அத்தகைய தொழிற்சங்கவாதம் பிரான்சில் ஒரு நீண்டகால மற்றும் இழிவார்ந்த வரலாறைக் கொண்டுள்ளது. மார்க்சிச இயக்கம் எப்போதுமே தொழிற்சங்கங்கள் குறித்து ஒரு விமர்சனபூர்வ நிலைப்பாட்டை பேணி வந்துள்ளன. ஏற்கனவே இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், லெனின், தொழிற்சங்க நனவு என்பது முதலாளித்துவ நனவாகும் என்றும், (ஜேர்மனியில் 1914 இல் இருந்து 1918 வரையில் இருந்ததைப் போல) அதிதீவிர சமூக பதட்டமான காலகட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிலாளர்களினது இயக்கத்தின் அதீதவலதுசாரிப்பிரிவாக இருந்தன என்றும் வலியுறுத்தினார். [6]

பிரெஞ்சு தொழிற்சங்கவாதிகள், தொழிற்சங்க வேலையில் அரசியல் கட்சிகளின் தலையீடு-இல்லாத கோட்பாட்டை வலியுறுத்தினர். 1906 இல் CGT அதன் அமியான் (Amiens) சாசனத்தில் அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்தும் தொழிற்சங்கங்கள் முற்றிலும் சுதந்திரமாக இருக்கும் கோட்பாட்டுக்கு உருவடிவம் கொடுத்தது. இந்த சுதந்திரம், அதிகரித்துவரும் பழமைவாதம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் நாடாளுமன்ற அறிவுமந்தத்திற்கு எதிராக திரும்பியிருந்த வரையில், பிரெஞ்சு தொழிற்சங்கவாதம் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு புரட்சிகர தகமையை கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிட்டதைப் போல, அது கட்சியின் பாத்திரத்தை நிராகரித்தபோதும், அது "தொழிலாள வர்க்கத்தின் ஒரு நாடாளுமன்ற-எதிர்ப்பு கட்சி என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.” [7]

எவ்வாறிருந்த போதினும், தொழிற்சங்கங்களின் அரசியல் சுதந்திரம் குறித்த கோட்பாடு, புரட்சிகர கட்சியின் மேலாளுமைக்கு எதிராக திருப்பி விடப்பட்ட போது, அது தொடர்ந்து அவ்விதமாக இருக்கவில்லை. 1921 இல், அப்போது கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு முன்னணி உறுப்பினரான ட்ரொட்ஸ்கி எழுதினார்: “கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே அங்கே ஒரு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற தொழிற் பங்கீடு உள்ளது என்ற தத்துவமும் மற்றும் அவற்றிடையே ஒன்றுக்கொன்று பரஸ்பர தலையீடோ அல்லது நேரடி தலையீடோ செய்யாத நடைமுறை இருக்க வேண்டும் என்ற தத்துவமும், ஐயத்திற்கிடமின்றி பிரெஞ்சு அரசியல் அபிவிருத்தியின் ஒரு விளைபொருளாகும். அது அதன் மிகவும் உச்சக்கட்ட வெளிப்பாடாகும். இந்த தத்துவம் கலப்படமற்ற சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில் அமைகிறது.

“தொழிற்சங்கங்களில் ஒழுங்கமைந்த தொழிலாளர் அதிகாரத்துவம், கூலி உடன்படிக்கைகளை தீர்மானிக்கின்ற வரைக்கும், சோசலிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் சீர்திருத்தங்களை பாதுகாக்கின்ற அதேவேளையில், இந்த தொழிற் பங்கீடு மற்றும் பரஸ்பரம் தலையீடு செய்யக்கூடாது என்பதெல்லாம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சாத்தியமானதாக இருக்கும். ஆனால் நிஜமான பெருந்திரளான பாட்டாளி வர்க்கம் போராட்டத்திற்குள் இழுக்கப்படுகையில், அந்த இயக்கம் ஒரு நிஜமான புரட்சிகர குணாம்சத்தை ஏற்ற உடனேயே, பின்னர் இந்த தலையீடு-செய்யா கோட்பாடு (principle of non-intervention) பிற்போக்குத்தனமான மேதாவித்தனமாக சீரழிகிறது.

“தொழிலாள வர்க்கத்தின் உயிர்வாழும் வரலாற்று அனுபவங்களை பிரதிநிதித்துவப்படுத்தும், மற்றும் ஒட்டுமொத்த போராட்டத்தையும் தத்துவார்த்தரீதியில் பொதுக்கோட்பாடாக்கி, நடைமுறையில் கொண்டு செல்லும் தகைமையை கொண்டிருக்கும் ஓர் அமைப்பு, அதன் தலைமையில் இருந்தால் மட்டுமே தொழிலாள வர்க்கம் வெற்றி பெற முடியும். அதன் வரலாற்று கடமையின் அர்த்தத்தில், அக்கட்சி தொழிலாள வர்க்கத்தின் மிகவும் நனவுபூர்வமான மற்றும் செயலூக்கமான சிறுபான்மையை மட்டுமே உள்ளடக்கி இருக்க முடியும். மறுபுறம், தொழிற்சங்கங்களோ தொழிலாள வர்க்கத்தை ஒட்டுமொத்தமாக அணைத்துக்கொள்ள முனைகின்றன. பாட்டாளி வர்க்கத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியினுள் ஐக்கியப்பட்டுள்ள அதன் முன்னணிப் படையாக, ஒரு சித்தாந்த மற்றும் அரசியல் தலைமை அவசியமாக தேவைப்படுகின்றது என்று உணர்பவர்கள், அக்கட்சி அவ்விதத்தில் தொழிற்சங்கங்களுக்கு உள்ளேயும் அத்துடன் பாரிய தொழிலாள வர்க்க அமைப்புகளுக்கு உள்ளேயும் முன்னணி சக்தியாக மாற வேண்டும் என்பதை உணர்கிறார்கள்.” [8]

இந்த தொழிற்சங்கவாத மரபு, OCI க்குள் நீண்டகாலத்திற்கு கணிசமான செல்வாக்கு கொண்டிருந்தது. ஒருவர் பியர் லம்பேர் ஐ நம்புவாரானால் தொழிற்சங்கங்களுடனான அவரது அமைப்பின் உறவு, ஒரு குறிப்பிடத்தக்க காலத்திற்கு மார்க்சிச கோட்பாடுகளை விட தொழிற்சங்கவாத அடித்தளத்தைக் கொண்டிருந்ததை காணலாம்.

1947 இல் அமியான் சாசனத்தை அவரது சொந்த அமைப்பில் மீட்டமைத்ததாக லம்பேர் அவரது வாழ்வின் இறுதியில் எழுதிய ஒரு சுயசரித நூலில் பெருமைபட்டுக் கொண்டார். போரின் போது சட்டவிரோத தொழிற்சங்க வேலையிலிருந்தும் மற்றும் ஸ்ராலினிச மேலாளுமை கொண்ட CGT உடனான அவரது அனுபவங்களின் அடிப்படையிலும், அவர் ட்ரொட்ஸ்கிச அமைப்பின் பிரான்ஸ் மாநாட்டின் போது ஒரு திருத்த தீர்மானத்தை முன்மொழிந்தார், “அக்கூட்டம் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பரஸ்பர சுதந்திரத்தை ஏற்றுக்கொண்டு, 21 நிபந்தனைகளில் புள்ளிகள் 9 மற்றும் 10 ஐ பிரதியீடு செய்ய ஒருமனதாக ஏற்றுக் கொண்டது.” [9]

அந்த "21 நிபந்தனைகள்", 1920 இல் சீர்திருத்தவாத மற்றும் மத்தியவாத அமைப்புகளை விலக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கம்யூனிச அகிலத்தின் இரண்டாம் உலக மாநாட்டில் கொண்டு வரப்பட்ட அங்கத்துவத்திற்கான நிபந்தனைகளைக் குறிக்கின்றன. புள்ளி 9, "தொழிற்சங்கங்களுக்குள் முறையாக மற்றும் உறுதியாக கம்யூனிஸ்ட் நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்ய" மற்றும் "சமூக தேசியவாதிகளின் தேசத்துரோகங்களை மற்றும் 'மத்தியவாதிகளின்' தயக்கங்களை எங்கெங்கிலும் அம்பலப்படுத்த" அங்கத்துவ கட்சிகளை கடமைப்பட்டிருக்க செய்கிறது. புள்ளி 10, “மஞ்சள் தொழிற்சங்க அமைப்புகளின் ஆம்ஸ்டர்டாம் 'அகிலத்துடன்'” உடைத்துக்கொள்ளுமாறு மற்றும் கம்யூனிச அகிலத்துடன் இணைந்திருந்த தொழிற்சங்கங்களை ஆதரிக்குமாறு கோருகிறது.

“கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பரஸ்பரம் சுயாதீனமாக இருப்பதற்கு ஒப்புகை" வழங்கும் அந்த இரண்டு புள்ளிகளைப் பிரதியீடு செய்தமை, சீர்திருத்தவாத மற்றும் ஸ்ராலினிச தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தைக் கைவிடுவதைக் குறித்தது.

அரசியல் கண்ணாமூச்சி விளையாட்டு

சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI) விமர்சனபூர்வமற்ற ரீதியில் தொழிற்சங்கங்களை பெருமைப்படுத்திய அதேவேளையில், அது பெரிதும் இரகசியமாக வைத்திருந்த அதன் சொந்த அடையாளம் குறித்து ஓர் அரசியல் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி வந்தது. அது, அரசியல் அடையாளத்தைத் துல்லியமாக இருட்டில் வைத்திருந்த தொழிலாளர் கூட்டணி குழுக்கள் (Comités d’alliance ouvrière) போன்ற முன்னணி அமைப்புகளுக்கு பின்னால் மறைந்திருக்க விரும்பி, அரிதாகவே அதன் சொந்தப் பெயரில் பேசியது. அதன் முன்னணி அமைப்புகளில் ஒன்றாக இருந்த OCI ஐ அவர் குறிப்பிடுகிறாரா, அல்லது செயலூக்கத்துடன் இருந்த தொழிற்சங்கவாதிகளின் ஒரு குழுவைக் குறிப்பிடுகிறாரா என்பதைத் தெளிவுபடுத்தாமல், அவர் வழமையாக "புரட்சிகர முன்னணிப்படை" என்று எழுதுகிறார்.

கோலிச ஆட்சி உடனான மோதல் மே 29 இல் அதன் உச்சக்கட்ட புள்ளியை எட்டிய நிலையில், தொழிற்சங்கங்களின் பிற்போக்குத்தனமான பாத்திரம் பெரிதும் கண்கூடாக மாறியிருந்த நிலையில், தொழிலாளர்கள் கூட்டணி குழுக்களால் (Comités d’alliance ouvrière) வெளியிடப்பட்டு பரந்தளவில் வினியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பையோ அல்லது நான்காம் அகிலத்தையோ கட்டமைப்பதற்கு அழைப்பு விடுக்கவில்லை, அதற்கு மாறாக அது ஒரு போலியான "புரட்சிகர தொழிலாளர் கழகத்தை" (Revolutionary Workers League) உருவாக்க அழைப்பு விடுத்தது.

இந்த "புரட்சிகர தொழிலாளர் கழகம்" ஒரு பகல் கனவாக இருந்தது. அதுகுறித்து யாரும் அதற்கு முன்னர் கேள்விபட்டிருக்கவில்லை. அதில் அங்கத்தவர்களும் இருக்கவில்லை, ஒரு வேலைத்திட்டமும் இல்லை, ஒரு யாப்பும் அதில் இல்லை. அதுவொரு ஸ்தூலமான அமைப்பாக இருக்கவில்லை. டிசம்பர் 1967 இல் OCI ஆல் வரையப்பட்ட 40-பக்க அறிக்கையின் இறுதியில் மட்டுந்தான் இந்த அமைப்பு குறித்து குறிப்பிடப்படுகிறது.

அங்கே, “புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்பும் பாதையின் ஒரு கட்டமாக" “புரட்சிகர தொழிலாளர் கழகம்" வர்ணிக்கப்படுகிறது. அந்த அறிக்கையின்படி, OCI இன் வேலைத்திட்டம் மட்டுமே "மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடிக்கு ஒரு பதிலை வழங்க முடியும், ஆனால் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் அமைப்புரீதியிலான காரியாளர்கள் உடனடியாக அதில் சேர தயாராக இல்லை,” என்ற அனுமானத்திலிருந்து “புரட்சிகர தொழிலாளர் கழகத்தின்" முன்னோக்கு எழுகிறது. [10]

இவ்விதமான அரசியல் உருமறைப்பு (political camouflage), OCI மற்றும் அதன் வழிவந்த அமைப்புகளின் ஒட்டுமொத்த வரலாறு எங்கிலும் ஒரே சீராக மீண்டும் மீண்டும் நடந்துள்ளன. அது மத்திரியோஸ்கா (Matryoshka) பொம்மையை நினைவூட்டுகிறது. ஒரு ரஷ்ய பொம்மை அதற்குள் மற்றொன்றை மறைத்து வைத்திருப்பதைப் போல, OCI (சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு) ஒன்றன்பின் ஒன்றாகவரும் ஒரு முன்னணியின் அல்லது அவ்விதமாக உருத்தரித்த அமைப்புகளின் பின்னால் தனது அடையாளத்தை மறைக்க முயல்கிறது. ஒரு அரசியல் அவதானிக்கு, எதனுடன் தான் கையாளுகின்றார் என்பது ஒருபோதும் உண்மையில் தெரிவதில்லை.

இந்த அரசியல் கண்ணாமூச்சி விளையாட்டு ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பவாத வடிவமாகும். "உண்மையைக் கூறுங்கள்!” என்ற அடிப்படை புரட்சிகர கோட்பாட்டிலிருந்து OCI விலகியதுடன், தொழிலாளர்களுக்கு அதன் நிஜமான முகத்தைக் காட்ட மறுத்தது. சிறிய வட்டத்துக்குள் நான்காம் அகிலத்தை தொழுது கொண்ட அதேவேளையில், அது பெருந்திரளான மக்களுக்கு ஒரு நீர்த்துப்போன வேலைத்திட்டத்தை முன்வைத்தது, இதைத்தான் அவர்கள் ஏற்க தயாராக இருந்தார்கள் என்பதைப் போல உணர வைத்தது.

ஒரு புரட்சிகரக் கட்சி அதன் ஒட்டுமொத்த வேலைத்திட்டத்தையும் பகிரங்கமாக முன்வைப்பதை தவிர்க்கும் சந்தர்ப்பங்களும் இருக்கலாம் என்பது உண்மை தான். உதாரணமாக ஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் அல்லது ஒரு பிற்போக்குத்தனமான தொழிற்சங்கத்திற்குள் அவ்வாறு அதை முன்வைக்காமல் இருக்கலாம். ஆனால் OCI ஐ பொறுத்த வரையில், அப்பணி அரசு எந்திரம் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஏமாற்றுவதற்காக இருக்கவில்லை, அவை இரண்டுமே அக்கட்சியின் அடையாளம் குறித்து நன்கறிந்திருந்தன. ஆனால் ஒரு புதிய நோக்குநிலையைக் காண வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் அரசியல் வாழ்விற்குள் நுழைந்திருந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை OCI ஏமாற்றியது.

குறிப்பாக, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கீழ்படிநிலைகளில் இருந்தவர்களுடன் OCI எவ்வித சங்கடத்தையும் தவிர்க்க விரும்பியது, ஏனெனில் அது அவர்களது ஆதரவை விடாப்பிடியாக பெற முயன்றது. அது அதன் சொந்த அடையாளத்தை மறைத்துக் கொண்டதன் மூலமாக, அத்தகைய செயல்பாட்டாளர்கள் (Functionaries) ட்ரொட்ஸ்கிச-விரோத அதிகாரத்துவ மேலடுக்குகளுடன் ஒரு பகிரங்க மோதல் அபாயத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், OCI உடனான உறவுகளுக்குள் நுழையும் வகையிலான நிலைமைகளை உருவாக்கியது.

இத்தகைய கீழ்படிநிலை (lower-rank) தொழிற்சங்க செயல்பாட்டாளர்களை, OCI, "தொழிலாள வர்க்கத்தின் அமைப்புரீதியிலான காரியாளர்களாக" அல்லது "இயல்பிலேயே அந்த வர்க்கத்தின் ஒழுங்கமைப்பாளர்களாக" விவரித்தது. இந்த இரண்டு வசனங்களுமே மீண்டும் மீண்டும் அதன் எழுத்துக்களில் எடுத்துக்காட்டப்படுகிறது. ஒட்டுமொத்த அங்கத்தவர் மீது கட்டுப்பாட்டை பேணுவதற்கு, இந்த அடுக்கு தொழிற்சங்க அதிகாரத்துவ எந்திரத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை OCI தெளிவாக புரிந்து வைத்திருந்தது. எவ்வாறிருந்தபோதினும், அதிகாரத்துவத்தின் உயர்மட்ட மற்றும் கீழ்மட்டங்களுக்கு இடையிலான —அதாவது "அதிகாரத்துவ எந்திரத்திற்கும்" மற்றும் "காரியாளர்களுக்கும்" இடையிலான— பிந்தையவர்களை ஒரு புரட்சிகர திசையில் தள்ளிச்செல்லும் என்று அது வாதிட்டது.

1968 இன் தொடக்கத்தில் la vérité இல் கட்சியால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை குறிப்பிடுகையில், "அந்த வர்க்கத்தின் மீது அதிகாரத்துவ எந்திரம் —அதாவது அனைத்திற்கும் மேலாக ஸ்ராலினிச அதிகாரத்துவ எந்திரம்— அதன் கட்டுப்பாட்டை பெறுவதற்கு கருவியாக இருக்கும் மத்தியஸ்தர்களும், அடுத்ததாக பாட்டாளி வர்க்கத்தை ஒரு வர்க்கமாக அபிவிருத்தி செய்ய மற்றும் ஒழுங்கமைக்க உதவும் போர்குணமிக்க அடுக்கினரும் என இவ்விரு வகையினருமே" “காரியாளர்கள்” ஆவர் என்று விவரிக்கிறது. இத்தகைய "அமைப்புரீதியிலான காரியாளர்களின்" எண்ணிக்கை “10,000 இல் இருந்து 15,000 நடவடிக்கையாளர்களாக" உள்ளது, இவர்கள் "மிகப் பெரியளவில் கம்யூனிஸ்ட் கட்சியால் கட்டுப்படுத்தப்பட்டு, ஒழுங்கமைக்கப்படுகின்றனர்,” என்றும் அதே அறிக்கை குறிப்பிடுகிறது. [11]

“அதிகாரத்துவ எந்திரத்தின் முதலாளித்துவ-ஆதரவு நோக்குநிலையை தங்களின் வர்க்கத்திற்காக போராடவும் மற்றும் எதிர்ப்பை தெரிவிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்ற இந்த நடவடிக்கையாளர்கள் மற்றும் அமைப்புரீதியிலான காரியாளர்களுடன், இவர்கள் தங்களின் வர்க்கத்திற்காக போராட மற்றும் எதிர்ப்பை வழங்க நிர்பந்திக்கப்படுகின்ற நிலையில், மோதலுக்குள் கொண்டு வருகின்ற புறநிலை முரண்பாடுகளை தகர்க்கவும் மற்றும் முதிர்ச்சியடைய செய்வதையுமே" OCI அதன் சொந்தக் கடமையாக கண்டது.

மேற்குறிப்பிடப்பட்ட பந்திகள் பப்லோவாதத்தின் மீதான கடுமையான தாக்குதல்களோடு பிணைந்தவை ஆகும். ஆனால், யதார்த்தத்தில், 1968 இல் தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளை நோக்கி OCI ஆல் ஏற்கப்பட்டிருந்த அணுகுமுறை, சித்தாந்தரீதியில் 1953 இல் பப்லோவாதிகள் ஏற்றிருந்ததற்கு ஒத்திருந்தது.

ஒரு புதிய புரட்சிகர தாக்குதல், நான்காம் அகிலத்தின் பதாகையின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தின் வடிவத்தில் அபிவிருத்தி அடையாது, மாறாக புறநிலை சம்பவங்களின் அழுத்தத்தின் கீழ், ஸ்ராலினிச அதிகாரத்துவ எந்திரத்தின் பிரிவுகள் இடதிற்கு நகரும் வடிவை எடுக்குமென அந்நேரத்தில் பப்லோ தீர்மானித்திருந்தார். அதே பாணியில், OCI "அமைப்புகளின் உள்ளிருக்கும் உள்முரண்பாடுகளில் இருந்தும், அந்த வர்க்கத்தின் அதிகாரத்துவ எந்திரம் மற்றும் அமைப்புரீதியிலான காரியாளர்களுக்கு இடையிலான தற்போதைய முரண்பாடு முதிர்ச்சி அடைவதிலிருந்தும் ஒரு புரட்சிகர அபிவிருத்தி எழுமென எதிர்நோக்கியது.” [12]

1968 இல் தொழிற்சங்கங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஆழமான பிளவுகளும் பதட்டங்களும் நிலவிய நிலையில், ஸ்ராலினிசத்துடன் அரசியல்ரீதியில் முறித்துக்கொண்டு, அதற்கு எதிரான ஒரு பகிரங்க போராட்டத்திலிருந்து மட்டுமே கூட ஒரு புரட்சிகர இயக்கம் அபிவிருத்தி அடைந்திருக்கும். ஆனால் OCI, அதன் சொந்த அடையாளத்தை மறைத்தும், ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தை ஒரு மூலோபாயமாக மேலுயர்த்திபிடித்தும் அந்த பணியை தட்டிக்கழித்தது.

டு மாஸ்ஸோவின் நூலின் பல பந்திகளில் ஸ்ராலினிஸ்டுகளே கூட ஒரு புரட்சிகர திசையில் திரும்புவார்கள் என சுட்டிக்காட்டப்படுகிறது. சான்றாக அந்த எழுத்தாளர், மே 13 அன்று ஸ்ராலினிச இளைஞர் அமைப்பு அறிவித்த ஒரு அழைப்பை, அது "தீவிர இடதை" தாக்கவில்லை; கல்லூரி மாணவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கு அழைப்புவிடுத்தது என்பதுடன்; தொழிலாளர்களது அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியது என்பதற்காக அவர் அதைப் பாராட்டுகிறார். “அந்த அதிகாரத்துவ எந்திரம், அவ்வியக்கத்தை பின்தொடர தான் நிர்பந்திக்கப்பட்டதாக பார்க்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் மீது கட்டுப்பாட்டை பராமரிப்பதற்காகவும் மற்றும் முன்முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்காகவும், அது ஒரு குறிப்பிட்ட வடிவத்திலும், குறிப்பிட்ட வரம்புகளோடும் கூட, முன்னேறிச் செல்கிறது: அதாவது தலைமையை எடுப்பதை நோக்கி செல்கிறது… இவ்விதமாக முன்செல்வதன் மூலமாக, அந்த அதிகாரத்துவ எந்திரம் அதனைச் சுற்றியுள்ள நடவடிக்கையாளர்களை ஒன்றுதிரட்டுவதுடன், பின்னர் அவர்கள் மூலமாக ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தையே தீவிரமயப்படுத்துகிறது” என டு மாஸ்ஸோ குறிப்பிடுகிறார். [13]

Notes:
1. François de Massot, “La grève générale (Mai-Juin 1968),” Supplément au numéro 437 d’ “Informations Ouvrières.” All quotes in the above article, if not indicated otherwise, are from this book.
2. Leon Trotsky, “Two Articles On Centrism” (February/March 1934), Leon Trotsky, “What Next? Vital Questions for the German Proletariat” (January 1932).
3. Leon Trotsky, “What Next? Vital Questions for the German Proletariat” (January 1932).
4. Leon Trotsky, “The Third International After Lenin”.
5. Leon Trotsky, “What Next? Vital Questions for the German Proletariat” (January 1932).
6. On the attitude of the Marxist movement to the trade unions see: David North, “Marxism and the Trade Unions”.
7. Leon Trotsky, “A School of Revolutionary Strategy”.
8. Leon Trotsky, “A School of Revolutionary Strategy”.
9. Daniel Gluckstein, Pierre Lambert, “Itinéraires,” Éditions du Rocher 2002, p. 51
10. La vérité, no. 541, avril-mai 1968
11. “Le bonapartisme gaulliste et les tâches de l’avant-garde,” la vérité No. 540, février-mars 1968, pp. 13-14
12. “Le bonapartisme gaulliste et les tâches de l’avant-garde,” la vérité No. 540, février-mars 1968, p. 15
13. François de Massot, « La grève générale (Mai-Juin 1968),” p. 58