ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

 

 

 

6

1968 பிரான்சின் பொது வேலைநிறுத்தமும் மாணவர் எழுச்சியும்

 

சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் (OCI) மத்தியவாத போக்கு (2)

மத்திய வேலைநிறுத்தக் குழுவிற்கானமுழக்கம்

1935 இல், லியோன் ட்ரொட்ஸ்கி அவரது பிரெஞ்சு ஆதரவாளர்களுக்கு "நடவடிக்கை குழுக்களின்" (Comités d'action) முழக்கத்தை பரிந்துரைந்தார். அந்த நேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு துரிதமான தீவிரமயமாக்கல் அபிவிருத்தி அடைந்து கொண்டிருந்தது, ஆனால் அது பெரிதும் ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் முதலாளித்துவ தீவிரப் போக்கினரின் எதிர்-புரட்சிகர கூட்டணியான, மக்கள் முன்னணியின் செல்வாக்கின் கீழ் இருந்தது. அத்தகைய சூழல்களின் கீழ், ட்ரொட்ஸ்கி, பெருந்திரளான மக்கள் மீது செல்வாக்கு கொண்டிருந்த மக்கள் முன்னணியை பலவீனப்படுத்துவதற்கு நடவடிக்கை குழுக்களை ஒரு வழிவகையாக கருதியதுடன், அவற்றின் சுயாதீனமான முன்னெடுப்புக்களையும் ஊக்குவித்தார்.

“மக்கள் முன்னணியின் தலைமையானது, போராடிக் கொண்டிருக்கும் பாரிய மக்களின் விருப்பத்தை நேரடியாகவும் உடனடியாகவும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். எவ்வாறு? மிக எளிமையாக கூறுவதானால்: தேர்தல்கள் மூலமாக,” என்றவர் எழுதினார். “மக்கள் முன்னணிக்கு ஆதரவாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட நகரம், மாவட்டம், தொழிற்சாலை, படைவீரர் குடியிருப்பு மனை அல்லது கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு இருநூறு, ஐந்நூறு அல்லது ஆயிரம் குடியானவர்களும், போராட்ட நடவடிக்கைகளின் போது, உள்ளூர் நடவடிக்கை குழுவிற்கு அவர்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பார்கள். போராட்டத்தில் பங்கெடுப்பவர்கள் அனைவரும் அதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருப்பார்கள்,” என்றவர் எழுதினார். [14]

1968 இல் OCI இனது தலையீட்டின் மையத்தில் இருந்த "மத்திய வேலைநிறுத்த குழுவிற்கான" (Comité central de grève) முழக்கம், ட்ரொட்ஸ்கியின் முன்மொழிவுகளில் இருந்து பெறப்பட்டது. OCI இன் அறிக்கைகள், ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களிலிருந்து ஏறத்தாழ வார்த்தை மாறாமல் எடுக்கப்பட்ட பல சூத்திரமாக்கல்களைக் கொண்டுள்ளது. ஆனால், ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தை பொறுத்த வரையில், OCI அம்முழக்கத்தின் எந்தவொரு புரட்சிகர உள்ளடக்கமும் இல்லாமல் அதனை சூறையாடியிருந்தது.

அதன் பல அறிக்கைகள், தேசிய வேலைநிறுத்தக் குழு எந்த மாதிரியான அதிகார படிநிலைகளின் மீது தங்கியிருக்க வேண்டுமென, அதிகாரத்துவரீதியில் வெவ்வேறு மட்டங்களைக் குறித்து துல்லியமாக கணக்கெடுப்பதில் மட்டுப்பட்டிருந்தன. இதற்கு ஒரு பொருத்தமான சான்று, “ஆம், தொழிலாளர்களால் வெல்ல முடியும்: மத்திய வேலைநிறுத்த குழு எனும் வெற்றியின் ஆயுதத்தை உருவாக்குவோம்! (THE CENTRAL STRIKE COMMITTEE!)” என்று தலைப்பிட்ட அறிக்கையாகும். மே 23 அன்று பிரசுரிக்கப்பட்ட அது, பொது வேலைநிறுத்தத்தின் இடையே Informations Ouvrières இன் ஒரு சிறப்பு பதிப்பாக பரந்தளவில் வினியோகிக்கப்பட்டது.

அந்த அறிக்கை பின்வரும் பந்தியை கொண்டுள்ளது: “தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது பொது இயக்கத்தை தோற்கடிக்கவியலாத ஒரேயொரு வெற்றிகரமான சக்தியாக எவ்வாறு ஐக்கியப்படுத்துவது? இந்த கேள்விக்கு ஒரேயொரு பதில் மட்டுமே உள்ளது: உள்ளூர் வேலைநிறுத்த குழுக்களின் அமைப்பை வெவ்வேறு-தொழில்துறைசார் வேலைநிறுத்த குழுக்களாக்க வேண்டும்; துறைசார்ந்தளவில், பிரதிநிதிகள், துறைரீதியிலான மற்றும் பிராந்திய ரீதியிலான வெவ்வேறு-தொழில்துறைசார் வேலைநிறுத்த குழுக்களை உருவாக்க வேண்டும். வேலைநிறுத்த குழுக்களின் கூட்டமைப்பும் மற்றும் தொழிலாளர்களது அமைப்புகளும், தேசியளவில் ஒரு மத்திய வேலைநிறுத்த குழுவை உருவாக்க வேண்டும்.

“ஒரு வேலைநிறுத்தக் குழுவில் பங்கெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையாளரும், ஒரு மறியல் போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு தொழிலாளியும் அதேபோன்ற பாணியில் அந்நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். வர்க்க இயக்கத்தின் பரந்த பெருந்திரளான மக்களின் தலைமையும் மற்றும் முடிவுகளும், தொழிற்சாலை வேலைநிறுத்த குழுக்களில் இருந்து உருவாகும் வெவ்வேறு-தொழில்துறைசார் வேலைநிறுத்த குழுக்களுக்குள் ஒன்றிணைந்திருக்க வேண்டும். நிறுவனங்களுக்குள் வேலைநிறுத்தக்காரர்களின் கூட்டங்களும், எல்லா நிறுவனங்களைச் சேர்ந்த எல்லா வேலைநிறுத்தக்காரர்களின் கூட்டங்களும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒருங்கிணைந்து முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.”

வெறும் வார்த்தையளவில் மட்டுமல்ல, மாறாக இந்த அறிக்கையின் உள்ளடக்கமே கூட ஒரு புரட்சிகர தொழிலாளியின் போராடும் உத்வேகத்தைக் காட்டிலும், ஒரு கணக்காளரின் அதிகாரத்துவ மனோபாவத்துடன் மிகப் பொதுவாக பொருந்தியுள்ளது. அதன் குறிக்கோள், கழுத்தை நெரிக்கும் அனைத்து அதிகாரத்துவ அமைப்புகளின் பிடியிலிருந்தும் தொழிலாளர்களை சுயாதீனப்படுத்துவதாக இருக்கவில்லை, மாறாக ஒன்றுக்கொன்று விரோதமாக இருந்த அதிகாரத்துவ அமைப்புகளுக்கு இடையிலான பிளவுகளை தீர்ப்பதற்காக இருந்தது. நடவடிக்கை குழு "மட்டுமே கட்சியின் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் எதிர்-புரட்சிகர எதிர்ப்பை உடைப்பதற்கான ஒரே வழிவகை" என்று ட்ரொட்ஸ்கி எழுதியிருந்த நிலையில், OCI ஐ பொறுத்த வரையில், மத்திய வேலைநிறுத்த குழுவே "தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களது கட்சிகளின் ஐக்கிய முன்னணியின் உயர்ந்தபட்ச வெளிப்பாடாக" இருந்தது.

ட்ரொட்ஸ்கி நடவடிக்கை குழுக்களை, விவாதத்தின் மற்றும் அரசியல் போராட்டத்தின் அரங்கங்களாக கருதினார்: “கட்சிகளுடன் ஒப்பிடுகையில், நடவடிக்கை குழுக்களை புரட்சிகர நாடாளுமன்றம் என்று அழைக்கலாம்: இதற்காக கட்சிகளை தவிர்த்துவிடுவது என்பதல்ல, மாறாக, அதற்கு முரண்பட்ட வகையில், அவை முன்தேவையாக இருக்கின்றன; அதேநேரத்தில் அவை நடவடிக்கையினூடாக பரிசோதிக்கப்படுகின்றன என்பதுடன் பெருந்திரளான மக்கள் சீரழிந்த கட்சிகளின் செல்வாக்கிலிருந்து தங்களைத்தாங்களே விடுவித்துக் கொள்ள பயில்கின்றனர்.”

OCIஐ பொறுத்த வரையில், மத்திய வேலைநிறுத்த குழு என்பது சீரழிந்த தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகளுடன் தொழிலாளர்களின் "ஐக்கியத்தை" ஸ்தாபிக்க சேவை செய்வதாக இருந்தது.

வேலைநிறுத்த குழுக்களின் முழக்கத்தை, இடைமருவுக் கோரிக்கைகளின் ஒரு வேலைத்திட்டத்துடன் இணைப்பதைக் கூட OCI தவிர்த்துக் கொண்டது. டு மாஸ்ஸோ இன் நூலின் பின்வரும் பந்தி தெளிவுபடுத்துவதைப் போல, OCI ஐ பொறுத்த வரையில், அந்த வேலைநிறுத்த குழுவே வேலைத்திட்டமாக இருந்தது: “ஒருவர் பார்ப்பதைப் போல, மத்திய வேலைநிறுத்த குழு குறித்த பிரச்சினையுடன் பொது வேலைநிறுத்தத்தின் தலைவிதியும் தொடர்புபட்டுள்ளது. இந்த குறிக்கோள், பொது வேலைநிறுத்தத்தின் அடிப்படை நோக்கங்களையும் மற்றும் அதன் அரசியல் விளைவுகளையும் குறித்த வரையறைகளின் விடயங்களையும், வேலைநிறுத்தத்தை ஐக்கியப்படுத்தும் அம்சங்களையும், ஐக்கியப்பட்ட தொழிலாளர்களது முன்னணியை கைவரப்பெறுவதற்கான விடயங்களையும்... என, மிக உயர்ந்த அரசியல் மட்டத்தில், அமைப்புரீதியில், இயக்கத்தின் தேவைகளை வெளிப்படுத்தும் ஓர் அமைப்பின் எல்லா அம்சங்களையும் ஒன்றிணைக்கிறது,” என்று எழுதுகிறார். [15]

இந்த "அமைப்புரீதியில்—மிக உயர்ந்த அரசியல் மட்டத்தில்" என்பது தெளிவாக OCI இன் மத்தியவாத கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது. மார்க்சிஸ்டுகளை பொறுத்த வரையில், உச்சகட்ட அரசியல் பிரச்சினைகள் என்பது முன்னோக்கு குறித்த பிரச்சினையாகும். மத்தியவாதிகளைப் பொறுத்த வரையில், அவை அமைப்புரீதியிலான பிரச்சினைகளாக உள்ளன. ஆனால் 1968 பொது வேலைநிறுத்தமும் மற்றும் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் ஏனைய எண்ணிறந்த அனுபவங்களும் எடுத்துக்காட்டியுள்ளதைப் போல, அமைப்புரீதியிலான ஐக்கியத்திற்கு விடுப்பதன் மூலம், சமூகத்தின் சோசலிச மாற்றத்துடன் பிணைந்துள்ள சிக்கலான பிரச்சினைகளுக்கு பதிலளிக்க முடியாது. அதற்கு ஓர் அரசியல் முன்னோக்கு அவசியப்படுவதுடன், அது முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்தும் மற்றும் அதன் சீர்திருத்தவாத, மத்தியவாத அமைப்புகளிடமிருந்து தெளிவாக விலகி இருக்குமாறும் கோருகிறது.

நடவடிக்கை குழுக்கள் பற்றிய அவரது கட்டுரையில், ட்ரொட்ஸ்கி பகிரங்கமாக தாக்கிய ஒரு இழிவார்ந்த மத்தியவாதியான மார்சோ பிவேர் இன் கருத்துக்களை, OCI இன் கருத்துக்கள், பலமாக நினைவுக்குக் கொண்டு வருகின்றன. “மத்தியவாதிகள் எந்தளவிற்கு 'வெகுஜனங்கள்' குறித்து பிதற்றுகிறார்கள் என்பது விடயமே அல்ல,” என்று எழுதிய ட்ரொட்ஸ்கி, “அவர்கள் எப்போதும் தங்களைத்தாங்களே சீர்திருத்தவாத எந்திரத்தின் மீது தமது நிலைநோக்கை கொண்டிருப்பர். மார்சோ பிவேர், இந்த அல்லது அந்த புரட்சிகர முழக்கத்தைத் திரும்ப திரும்ப கூறிக்கொண்டே, அதை வார்த்தையளவில் "அமைப்புரீதியிலான ஐக்கிய" கோட்பாட்டிற்கு அடிபணிய செய்கிறார். இந்த "அமைப்புரீதியிலான ஐக்கியம்" நடைமுறையில் புரட்சியாளர்களுக்கு எதிராக தேசப்பற்றாளர்களுடன் ஐக்கியப்படுவதற்கு திரும்புகிறது. ஒருங்கிணைந்த சமூக-தேசப்பற்று எந்திரங்களின் எதிர்ப்பை நிர்மூலமாக்குவதில் பெருந்திரளான மக்களின் வாழ்வா சாவா பிரச்சினை என்று வரும் நேரத்தில், இடது மத்தியவாதிகள் இத்தகைய எந்திரங்களின் 'ஐக்கியத்தை', புரட்சிகர போராட்ட நலன்களுக்கு மேலாக நிற்கும் ஒரு பரிபூரண 'நன்மையாக' கருதுகின்றனர்.”

ட்ரொட்ஸ்கி நடவடிக்கை குழு குறித்த அவரது கருத்துக்களை மீண்டுமொருமுறை தெளிவுபடுத்தி அவரது பகுப்பாய்வை முடித்தார்: “சமூக-தேசபற்றாளர்களின் துரோகத்தனமான தலைமையிலிருந்து பெருந்திரளான மக்களை விடுவிப்பதின் அவசியத்தை, இறுதி வரையில், புரிந்து வைத்துள்ளவர்களால் மட்டுமே நடவடிக்கை குழுக்கள் கட்டமைக்கப்படும். பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கான நிலைமை, தற்போதைய தலைமையை ஒழித்துக்கட்டுவதாகும். இத்தகைய நிலைமைகளின் கீழ் 'ஐக்கியம்' என்ற முழக்கம் முட்டாள்தனமானது மட்டுமல்ல, ஒரு குற்றமும் ஆகும். பிரெஞ்சு ஏகாதிபத்திய மற்றும் சர்வதேச சங்க (League of Nations) முகவர்களுடன் ஐக்கியம் வேண்டாம். புரட்சிகர நடவடிக்கை குழுக்களை, அவர்களின் நயவஞ்சக தலைமைக்கு எதிர்நிலையில் நிறுத்துவது அவசியமாகும். மார்சோ பிவேர் ஐ தலைமையில் கொண்டிருக்கும் 'புரட்சிகர இடது' என்றழைக்கப்படுவதன் எதிர்புரட்சிகர கொள்கைகளை இரக்கமின்றி அம்பலப்படுத்துவதன் மூலமாக மட்டுமே இத்தகைய குழுக்களைக் கட்டியெழுப்புவது சாத்தியமாகும்.” [மூலத்தில் அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது]

பொது வேலைநிறுத்தத்தின் போது OCI

1968 இல் OCI இன் சக்திகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தபோதினும், அவர்கள் பப்லோவாதிகளை விட அப்போது மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர். OCI, Fédération des etudiants révolutionnaires (FER) எனும் அதன் சொந்த மாணவர் அமைப்பை கொண்டிருந்ததுடன், பப்லோவாதிகளைப் போலில்லாமல், பல தொழிற்சாலைகளிலும் ஆதரவாளர்களைக் கொண்டிருந்தது.

புதிய இடது மற்றும் பப்லோவாதிகளின் கருத்துக்களை FER நிராகரித்தது. புதிய இடது, மாணவர்களுக்கு "புரட்சிகர முன்னணிப்-படையின்" பாத்திரத்தை வழங்கி, விமர்சனமின்றி மாணவர்களது சாகச நடவடிக்கைகளை ஆதரித்தது. தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு நோக்குநிலை வழங்க FER போராடியதுடன், அந்த அடித்தளத்தில் எண்ணிறந்த புதிய அங்கத்தவர்களை வென்றெடுத்தது.

ஆனால் இந்த நோக்குநிலை, மத்தியவாத அடித்தளத்தில் அமைந்திருந்ததுடன், எஞ்சியவை அமைப்புரீதியிலான நடவடிக்கைகளுடன் மட்டுப்பட்டு இருந்தன. அது OCI இன் "ஐக்கிய முன்னணி" கொள்கைகளின் கட்டமைப்பிற்குள் செயல்பட்டது, அதாவது பிரதானமாக அது ஒரு மத்திய வேலைநிறுத்த குழுவிற்கான அழைப்புடன் பிணைந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பெரியளவிலான கூட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்புவிடுக்குமாறு தொழிற்சங்கங்களுக்கு முறையீடுகளை வைத்திருந்தது. ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கைகளுக்கு எதிராகவோ அல்லது முதலாளித்துவ சித்தாந்தத்தின் இனப்பெருக்க களமாக இருந்த பல்கலைக்கழகங்களில் தீர்க்கமாக இருந்துவந்த புதிய இடதின் தத்துவங்களுக்கு எதிராகவோ FER ஒரு திட்டமிட்ட தாக்குதலை முன்னெடுக்கவில்லை.

இலத்தீன் வட்டார பகுதியில் நடந்த வீதி சண்டைகளின் போது, பப்லோவாத Jeunesse communiste révolutionnaire (JCR) ஆல் மே 8 அன்று பாரீஸின் முச்சுவாலிற்ரே மண்டபத்தில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் FER இன் தலையீடு குறித்து டு மாஸ்ஸோ அவரது நூலில் வர்ணிக்கிறார். JCR இன் பேச்சாளர் ஒருவர், அராஜகவாத டானியல் கோன்-பென்டிற்றால் கைதட்டி பாரட்டப்பட்டதுடன், அவர் அரசியல் போக்கைத் தெளிவுபடுத்துவது, இந்த இயக்கத்தையே உடைக்குமென கூறி, அவ்வாறு செய்வதை எதிர்த்து பேசுமளவிற்குச் சென்றார். அதற்கு பதிலாக அவர் வலியுறுத்துகையில், இது அனைவரும் உடன்படக்கூடிய கருத்துக்களைக் கண்டுபிடிக்கும் ஒரு விடயமென்றார். “ஒரு புரட்சிகரக் கட்சி இல்லாதபோது, பொலிஸிற்கு எதிராக போராடுபவர்களே நிஜமான புரட்சியாளர்கள்,” என்று JCR இன் பேச்சாளர் அறிவித்தார்.

இந்த நிலைப்பாட்டை FER இன் பிரதிநிதிகள் எதிர்த்தனர், அவர்கள் எல்லா மாணவர்களது முயற்சிகளையும் "தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது ஒரு மத்திய ஆர்ப்பாட்ட" முழக்கத்தில் கொண்டு வந்து ஒருங்குவிக்குமாறு பரிந்துரைத்தனர். அந்த போராட்டம் "[மத்திய மாணவர் அமைப்பான] UNEF இன் ஆதரவுடன் ஒரு தேசிய வேலைநிறுத்த குழுவை மற்றும் வேலை நிறுத்த குழுக்களை கட்டியெழுப்புவதன் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, மேற்கொண்டும் விரிவாக்கப்பட வேண்டும்,” என்று FER வாதிட்டது. இரண்டு நாட்களுக்குப் பின்னர், “இலத்தீன் வட்டாரப் பகுதியில் 500,000 தொழிலாளர்கள்" என்ற முழக்கத்தின் கீழ் FER அதன் சொந்த கூட்டத்தை நடத்தியது. இந்த முழக்கத்தைக் கொண்ட பத்தாயிரக் கணக்கான துண்டு பிரசுரங்கள் தொழிற்சாலைகளில் வினியோகிக்கப்பட்டன. [16]

சில நாட்கள் கழித்து தொழிற்சங்கங்கள், மே 13 இல், ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கும், மில்லியன் கணக்கானவர்கள் பங்கெடுத்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் கூட்டு ஆர்ப்பாட்டங்களுக்கும் அழைப்புவிடுக்க நிர்பந்திக்கப்பட்டன. அந்த இயக்கம் அவர்களின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று கொண்டிருந்தது. அதற்கடுத்து வந்த நாட்களில், அந்த வேலைநிறுத்தம் பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் பங்கெடுத்த தொழிற்சாலை ஆக்கிரமிப்பு அலைகளுடன் சேர்ந்து, ஒட்டுமொத்த நாடு முழுவதும் பரவி, முற்றிலுமாக பிரான்சையே முடக்கியது.

ஆனால் OCI மற்றும் FER அவற்றின் தொழிற்சங்கவாத போக்கை பேணி வந்தன. இப்போது அவை முற்றிலுமாக ஒரு தேசிய வேலைநிறுத்த குழுவிற்கான கோரிக்கை மீது ஒருங்குவிந்திருந்தன. மே 13 அன்று, OCI வழமைக்குமாறான விதத்தில் அதன் சொந்த பெயரில் ஒரு துண்டு பிரசுரம் வெளியிட்டது, அது அதற்கடுத்து வந்த நாட்களில் தொழிற்சாலைகளில் ஆயிரக் கணக்கில் வினியோகிக்கப்பட்டன.

வெறும் இருபது வரிகள் கொண்டிருந்த அந்த துண்டறிக்கை, ஒரேயொரு அரசியல் அறிவிப்பைக் கூட வழங்கவில்லை. அது (“போராட்டம் தொடங்கி உள்ளது,” “ஐக்கியம் வாழ்க,” “வெற்றி,” “முன்னோக்கி செல்வோம்,” “தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஐக்கியப்பட்டால், நாமே வெல்வோம்" என்ற) ஓய்ந்துபோன வெற்று வார்த்தைகளின் ஒரு தொகுப்பையும் மற்றும் (“டு கோல் ஒழிக,” “இந்த பொலிஸ் அரசு ஒழிக" என்ற) பொதுவான முழக்கங்களையும் கொண்டிருந்தது.

இந்த தொனி ஏதோ போதுமானளவிற்கு கடுமையாக இல்லை என்பதைப் போல, அந்த வார்த்தைகள் பெரிய மற்றும் கொட்டை எழுத்துக்களில் வைக்கப்பட்டன. அந்த துண்டறிக்கை பின்வரும் வார்த்தைகளுடன் அதன் உச்சதொனிக்குச் சென்றது: “Renault, Panhard, S.N.E.C.M.A இல் உள்ள தொழிலாளர்களே, எல்லா தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பட்டறைகளில் உள்ள தொழிலாளர்களே — வெற்றி நம்மைச் சார்ந்துள்ளது. நாம் வேலை செய்வதை நிறுத்த வேண்டும், ஆர்ப்பாட்டத்தில் இறங்க வேண்டும், நமது வேலைநிறுத்த குழுக்களை தேர்ந்தெடுக்க வேண்டும்,” என்றது.

அரசியல் பணிகளை நெறிப்படுத்துவதற்காகவோ அல்லது தொழிலாளர்களுக்கு அவற்றை விளங்கப்படுத்துவதற்காகவோ புதிய நிலைமைகளை ஆராயும் முயற்சி அங்கே அறவே இருக்கவில்லை. வேகமாக அபிவிருத்தி அடைந்துவந்த புரட்சிகர நிலைமையை முகங்கொடுத்த நிலையில், OCI இல் இருந்த அனைவரும் கூட்டு நடவடிக்கைக்கு பொதுவான அழைப்பு விடுக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மித்திரோனின் FGDS இன் பாத்திரம் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை; தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோக பாத்திரம் குறித்தும் எச்சரிக்கைகள் இல்லை; தொழிலாளர் அரசாங்கம் குறித்த பிரச்சினை மீது எதுவொன்றும் உச்சரிக்கப்படவே இல்லை.

இரண்டு வாரங்கள் கழித்து, மே 27 இல், அரசாங்கம், முதலாளிமார்களின் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களால் பேரம்பேசப்பட்ட கிறெனெல் உடன்படிக்கையை வேலைநிறுத்த தொழிலாளர்கள் நிராகரித்தனர். அதிகாரம் பற்றிய பிரச்சினை பகிரங்கமாக முன்னுக்கு வந்தது.

இது குறித்து டு மாஸ்ஸோ தெளிவாக இருந்தார். அவர் எழுதுகிறார், “ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக மில்லியன் கணக்கான வேலைநிறுத்தக்காரர்கள் அரசு எந்திரத்தை அதிரச் செய்துள்ளனர். அரசாங்க, வணிக மற்றும் தொழிலாளர் இயக்க தலைவர்களுக்கு இடையே எட்டப்பட்ட, மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் ஒதுக்கித்தள்ளப்பட்டுள்ளன… இப்போது, நேரடியாக அதிகார பிரச்சினை எழுகிறது… பொது வேலைநிறுத்தத்தின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய, அரசாங்கம் துடைத்தெறியப்பட்டாக வேண்டும்.” [17]

இதற்கிடையே OCI, சம்பவங்களின் வாலைப்பிடித்து தொங்கிக் கொண்டிருந்தது. தொழிலாளர் கூட்டணி குழுக்களது (Comités d’alliance ouvrière) ஆதரவின் கீழ் அது பிரசுரித்த, பெரும் எண்ணிக்கையில் வினியோகிக்கப்பட்ட ஒரு துண்டறிக்கையில், அரசாங்க பிரச்சினை குறித்து ஒன்றுமே கூறப்படவில்லை.

“கையெழுத்திடாதீர்கள்!” இது தான் பெரிய பெரிய தடித்த எழுத்துக்களில் அரை பக்கத்திற்கு ஐந்து முறை திரும்ப திரும்ப எழுதப்பட்டிருந்தது. அந்நேரத்தில் கிறெனெல் உடன்படிக்கையில் கையெழுத்திடுவது குறித்த எந்தவொரு பேச்சும், எந்த அம்சத்திலும், பயனற்றதாக இருந்தது. CGT தலைவர் ஜோர்ஜ் செகி (Georges Séguy) ஐ வரவேற்பதில் ரினோல்ட் தொழிலாளர்கள் விரோதம் காட்டியதற்குப் பின்னர், அந்த தொழிற்சங்கம் பயந்து, தற்காலிகமாக பின்வாங்கியது.

OCI இன் அந்த துண்டு பிரசுரம், “[பிரதான தொழிற்சங்க கூட்டமைப்புகளான] CGT, CGT-FO, FEN இன் தலைவர்களே: அரசாங்கம் மற்றும் அரசுக்கு எதிராக நீங்கள் UNEF உடன் ஓர் ஒருங்கிணைந்த வர்க்க முன்னணியை ஸ்தாபிக்க வேண்டும்,” என்ற கோரிக்கையைக் கொண்டிருந்தது.

அதே நாளில், சீர்திருத்தவாத PSU (ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி), UNEF மற்றும் CFDT தொழிற்சங்கத்தின் ஒரு பாரிய கூட்டம், பாரீஸின் சார்லெட்டி மைதானத்தில் நடந்தது, அது பியர் மொன்டெஸ்-பிரான்ஸ் (Pierre Mendès-France) இன் கீழ் ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்திற்கு சுமூகமான பாதை அமைத்துக் கொடுப்பதற்காக நடத்தப்பட்டது. "ஒரு இருமுனை அரசியல் நடவடிக்கைக்குத்" தயாரிப்பு செய்த அந்த கூட்டத்தை, டு மாஸ்ஸோ குதர்க்க புத்தியோடு, "குழப்பங்களின் ஒன்றுகூடலாக" வர்ணிக்கிறார்.

“முதலாவதாக,” அவர் தொடர்கிறார், “பொது வேலைநிறுத்தத்தின் போர்க் குணமிக்க பாகத்தின் மீது, குறிப்பாக இளைஞர்கள் மீது, ஸ்ராலினிசம் கட்டுப்பாட்டை இழந்துள்ள நிலையில், கட்டுப்பாட்டை 'மீண்டும் பெறுவதே' நோக்கமாகும்… அனைத்திற்கும் மேலாக, முதல் குறிக்கோளுடன் நேரடியாக இணைப்பு கொண்டரீதியில், மந்திரிசபை நெருக்கடிக்கு ஒரு முதலாளித்துவ தீர்வைக் காண அடித்தளம் தயார் செய்யப்பட வேண்டும். மொன்டெஸ்-பிரான்ஸ்… இந்த மணிப்பொழுதின் மனிதராக முன்நிற்கிறார்… " [18]

ஆனால் இங்கே OCI உம் அதற்கு இணங்கியது, ஆனால் அதன் கண்ணோட்டத்தைத் தெளிவாக எடுத்துக்காட்ட அங்கே அதற்கு அருமையான வாய்ப்பு இருந்தது. பியர் லம்பேர் சார்லெட்டி மைதானத்தில் ஒரு பேச்சாளராக இருந்தார். அங்கே கூடியிருந்த 50,000 மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே அவர் பேசினார்—OCI இன் தலைவராக அவரது தகைமையில் பேசவில்லை, மாறாக அவர் எதற்காக வேலை செய்து வந்தாரோ "அந்த Force Ouvrière social insurance இன் காரியாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாக குழு பணியாளர்களின்" பெயரில், ஒரு தொழிற்சங்கவாதியாகப் பேசினார்.

அவர் அறிவிக்கையில், "முக்கியமான போராட்டம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது; பொது வேலைநிறுத்தம் அரசாங்கம் குறித்த பிரச்சினையை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது; டு கோல் மற்றும் பொம்பிடு இன் அரசாங்கத்தால் வேலைநிறுத்தக்காரர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முடியாது,” என்று அவர் அறிவிக்கிறார். டு மாஸ்ஸோ அறிக்கையிலிருந்து என்ன தெரிய வருகிறதென்றால், அவர் ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தின் அபாயங்களைக் குறித்து எச்சரிக்கவும் இல்லை, அல்லது தொழிலாளர் அரசாங்கம் மீதான பிரச்சினையைக் குறிப்பிடவும் இல்லை. அதற்கு மாறாக லம்பேர், உள்ளூர் வேலைநிறுத்த குழுக்கள் மற்றும் ஒரு மத்திய வேலைநிறுத்த குழுவை அமைப்பதற்கு அழைப்புவிடுத்தும், அதை அவர் வெற்றிக்கான பாதையாக சித்தரித்துக் காட்டியும் தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொண்டார். [19]

இதற்கிடையே, வீதிகளில், அந்த அழைப்பு "மக்களின் அரசாங்கம்" (Gouvernement populaire) என்பதாக எதிரொலித்தது. தொழிலாளர்களது கோரிக்கைகள் லம்பேர் இன் கோரிக்கைகளை விட தெளிவாக மிகவும் முன்னேறியவையாக இருந்தன.

டு மாஸ்ஸோ எழுதுகிறார்: “பிரான்ஸ் எங்கிலும் மே 27 இல் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன, அங்கே 'கையெழுத்திட வேண்டாம்!' என்பதன் உள்நோக்கங்கள், அரசாங்கம் மற்றும் அரசு என்பதாக, அரசியல் வார்த்தைகளுக்குள் மொழிமாறி உள்ளன… 'ஒரு மக்களின் அரசாங்கம்!' என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிடுகின்றனர், அதாவது இது நாங்கள் பொது வேலைநிறுத்தத்தின் நோக்கங்களுக்கு விடையிறுக்கும் ஓர் அரசாங்கத்தை விரும்புகிறோம் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. 'டு கோல் இராஜினாமா செய்தாக வேண்டும்,' 'டு கோல் ஒழிக' என்று பத்தாயிரக் கணக்கான மக்களால் எங்கெங்கிலும் உரக்க ஒலிக்கப்படுகிறது. ஆளும் வர்க்கத்தின் தலைவிதியே பணயத்தில் இருக்கிறது என்பதை அவர்கள் தெளிவாக எடுத்துக்காட்டி வருகின்றனர்.” [20]

ஒரு "மக்களின் அரசாங்கம்" என்ற இந்த அழைப்பை அரசியல் உள்ளடக்கத்தில் கொண்டு வர OCI முயலவில்லை. அனைத்திற்கும் மேலாக, அதுபோன்றவொரு அரசாங்கத்தை யார் உருவாக்க வேண்டும் என்பதையோ அல்லது அதன் அரசியல் வேலைதிட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பதையோ அது விளங்கப்படுத்தவில்லை. இது PCF மற்றும் CGT இன் ஸ்ராலினிஸ்டுகளுக்கு தாமாகவே "மக்களின் அரசாங்கம்" என்ற முழக்கத்தை உயர்த்த உதவியது. ஆனால் அவர்கள் ஒருபோதும் அதிகாரத்தைக் கையிலெடுக்க கருதியதில்லை என்பதுடன், அதற்கு மாறாக அவர்கள் ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தில் பங்கெடுப்பது குறித்து மித்திரோனுடன் திரைக்குப் பின்னால் பேரம்பேசிக் கொண்டிருந்தனர்.

இந்த விரிவுரை தொடரின் நான்காம் பாகத்தில் விவரிக்கப்பட்டதைப் போல, PCF, CGT-இன் அரசாங்கத்திற்காக என கோரிக்கை வைத்திருந்தால் இந்நேரத்தில் அது பிரமாண்டமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தியிருந்திருக்கக்கூடும். அது ஸ்ராலினிச தலைவர்களின் சூழ்ச்சிகளை தகர்த்தெறிந்து, அவர்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான மோதலைத் தீவிரப்படுத்தி இருக்கும்.

ட்ரொட்ஸ்கி "இடைமருவு வேலைத்திட்டத்தில்" அதுபோன்றவொரு தந்திரோபாயத்தை அறிவுறுத்தினார். அவர் ரஷ்ய புரட்சியின் போக்கில் போல்ஷிவிக்களுக்கு கிடைத்த அனுபவங்களின் அடித்தளத்தில் தன்னைத்தானே நிறுத்தி கொண்டு, எழுதினார்: “மென்ஷிவிக்குகள் மற்றும் சமூக புரட்சியாளர்களுக்கு போல்ஷிவிக்குகளின் கோரிக்கை: 'முதலாளித்துவத்தை உடையுங்கள், அதிகாரத்தை உங்கள் கைகளில் எடுங்கள்!' என்பது பெருந்திரளான மக்களிடையே பிரமாண்டமான கல்வியூட்டலின் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. மென்ஷிவிக்குகள் மற்றும் சமூக புரட்சியாளர்கள் அதிகாரத்தைக் கையிலெடுக்க பிடிவாதமாக மறுத்தமை, ஜூலை நாட்களில் வியத்தகு முறையில் அம்பலமாகி, மக்களின் கருத்தோட்டத்தின் முன்னால் முற்றிலுமாக அவர்களின் மதிப்பை கீழிறக்கியதுடன், போல்ஷிவிக்குகளின் வெற்றிக்கு தயாரிப்பு செய்தது.” [21]

ஆனால் OCI ஒருபோதும் அதுபோன்றவொரு கோரிக்கையை எழுப்பவில்லை என்பதுடன், அதற்கு மாறாக ஸ்ராலினிஸ்டுகளின் ஏமாற்றுத்தனத்தை விமர்சிக்காமல், மே 29 இல் "ஒரு மக்களின் அரசாங்கத்திற்காக" என்ற முழக்கத்தின் கீழ் நடந்த CGT இன் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை ஆதரித்தது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் UNEF உம் CFDT உம் பங்கெடுக்கவில்லை என்பதற்காக, OCI அவற்றை தாக்கியது. (பிரான்சிலிருந்து டானியல் கோன்-பென்டிற் வெளியேற்றப்பட்டமைக்கு CGT கண்டனம் தெரிவிக்கவில்லை என்ற அடித்தளத்தில்) அவை பங்கெடுக்கவில்லை. OCI இதற்கு முன்னர் வரையிலும், CGT இன் நோக்கங்களிலிருந்து சுதந்திரமாக, அனைத்து தொழிற்சங்கங்களது ஓர் கூட்டு ஆர்ப்பாட்டம், தானாகவே ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்திற்கு பாதையைத் திறந்துவிடுமென வாதிட்டது. “ஒரேசீராக, அனைத்து தொழிற்சங்க அமைப்புகளாலும் ஏற்பாடு செய்யப்படும் இது, பொது வேலைநிறுத்தத்தின் மீதும், தொழிலாளர்களது அமைப்புகள் மீதும் தங்கியிருக்கும் ஓர் அரசாங்கத்திற்கு பாதையை திறந்துவிடும்,” என்று டு மாஸ்ஸோ எழுதுகிறார். [22]

மே 29 ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் கூட்டமைப்பு குழு (Comités d’alliance ouvrière) ஆல் பிரசுரிக்கப்பட்ட துண்டு பிரசுரமும், ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்காக OCI ஆல் அழைப்பிடப்பட்ட "மத்திய மற்றும் தேசிய வேலைநிறுத்த குழுவுக்கு" இணையாக இருந்தது: “தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒரு தொழிலாளர் அரசாகங்கமாக அது மட்டுமே இருக்கும்,” என்று அந்த துண்டறிக்கை அறிவித்தது. [23]

இது, தொழிலாளர்களின் அரசாங்கம் சார்ந்திருக்கக்கூடிய தொழிலாளர்களின் சபைகள் அல்லது சோவியத் போன்றதன் ஒரு வகையாக, OCI, வேலைநிறுத்தக் குழுவை கருதியது என்பதை இது அர்த்தப்படுத்தியதா? அந்த துண்டு பிரசுரத்தில் பயன்படுத்தப்பட்ட சூத்திரமயமாக்கல் அதைத்தான் பரிந்துரைக்கிறது. ஆனால் இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட உதாரணமாக நிற்கிறது. OCI இந்த பிரச்சினை மீது வெளிப்படையாக முடிவெடுக்காமல் இருந்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக, வேலைநிறுத்த குழுக்கள் மற்றும் தொழிலாளர் சபைகள் புரட்சிகர தலைமையின் பிரச்சினையை தீர்க்கவில்லை. அவை ஸ்ராலினிசத்திற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டம் நடத்துவதற்குரிய களமாக இருக்கின்றனவே அன்றி, இந்த போராட்டத்திற்கு அவை ஒரு மாற்றீடு கிடையாது. ஆனால் OCI இன் துண்டுப் பிரசுரத்தில், PCF மற்றும் CGT குறித்து எந்தவொரு விமர்சனபூர்வ வார்த்தை கூட இருக்கவில்லை. அவை குறித்து குறிப்பிடப்படவும் கூட இல்லை.

CGT ஆர்ப்பாட்டம் பாரீஸில் மட்டும் அரை மில்லியன் மக்களை வீதிகளில் கண்டது, அதற்கடுத்த நாள், ஜனாதிபதி டு கோல் வானொலியில் தேசத்திற்கு உரையாற்றி, நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். PCF மற்றும் CGT புதிய தேர்தல்களுக்கான அறிவிப்பை வரவேற்றதுடன், அவை ஒழுங்காக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு வாக்குறுதியளித்தன, அது பொது வேலைநிறுத்தத்தை கைவிட அழைப்பு விடுப்பதற்கு ஒப்பானதாக இருந்தது.

வேலைநிறுத்தத்தை தொடர்வதற்கான கோரிக்கையுடனும் தொழிற்சங்கங்களுக்கு முறையீடுகளுடனும் OCI எதிர்வினை காட்டியது: “ஒவ்வொன்றும் நமது உடனடிப் பதிலைச் சார்ந்துள்ளது! ஒவ்வொன்றும் தொழிற்சங்க தலைமையகங்களிலிருந்தும் மற்றும் தொழிலாளர் கட்சிகளிடமிருந்தும் வரும் அழைப்பைச் சார்ந்துள்ளது! பொது வேலைநிறுத்தம் பொலிஸ் அரசை தோற்கடிக்கும்!” என்றது. [24]

இதுதான் அதற்கடுத்துவந்த நாட்களில் OCI இன் அரசியல் போக்காக இருந்தது: அதாவது ஐக்கியத்திற்கு, தொடர்ந்து போராடுவதற்கு மற்றும் பின்வாங்காமல் இருப்பதற்கு என இவற்றிற்கான அழைப்பு, பொது வேலைநிறுத்தத்தை மூச்சடைக்க செய்த அதே தொழிற்சங்கங்களிடம் மற்றும் கட்சிகளிடம் கொண்டு செல்லப்பட்டன.

OCI இன் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் உட்பட ஒரு டஜன் கணக்கான ஏனைய அமைப்புகளோடு சேர்த்து, உள்துறை மந்திரி ஜூன் 12 இல், OCI க்கும் தடைவிதித்தார்.

தொடரும்...

குறிப்புகள்:

14. This and the following quotes from Trotsky, unless otherwise indicated, are taken from: Leon Trotsky, “Committees of Action—Not People’s Front” (November 26, 1935).
15. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 123
16. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 48
17. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 188
18. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 195
19. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, pp. 196-197
20. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 197
21. Leon Trotsky, “The Transitional Programme”.
22. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 203
23. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 304
24. François de Massot, “La grève générale (Mai-Juin 1968)”, p. 248