ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

 

 

 

7

1968 பிரான்சின் பொது வேலைநிறுத்தமும் மாணவர் எழுச்சியும்

 

சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் (OCI) மத்தியவாத போக்கு (3)

OCI இன் வலதைநோக்கிய பரிணாமம்

1968 சம்பவங்கள் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் (OCI) வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் வேரூன்றியிருந்த OCI, பொது வேலைநிறுத்த வேளையில் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட மத்தியவாத திசையில் பரிணமித்திருந்ததுடன், அதன் கொள்கைகள் அதிகரித்தளவில் ஸ்ராலினிச மற்றும் சீர்திருத்தவாத அதிகாரத்துவங்களை நோக்கி சாய்ந்திருந்தது. மூன்றாண்டுகளுக்கு பின்னர், அது சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடன் உடைத்துக் கொண்டதுடன் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஒரு முக்கிய முண்டுகோலாக, அவ்விதத்தில், பிரெஞ்சு முதலாளித்துவ அரசின் ஒரு முக்கிய முண்டுகோலாக மாறியிருந்தது.

மாணவர் இயக்கமும் மற்றும் பொது வேலைநிறுத்தமும், OCI க்கு பல ஆயிரக்கணக்கான புதிய அங்கத்தவர்களையும் மற்றும் தொடர்புகளையும் கொண்டு வந்திருந்தது. அவர்கள் வெளிப்பார்வைக்கு ஒரு ட்ரொட்ஸ்கிச  இயக்கத்துடன் இணைந்திருந்தனர். ஆனால் OCI இன் மத்தியவாத போக்கு, அவர்களை அதிகாரத்துவ அமைப்பு எந்திரங்களை நோக்கி நோக்குநிலை கொள்ள செய்திருந்தது. அவர்கள் மார்க்சிஸ்டுகளாக பயிற்றுவிக்கப்படவில்லை, மாறாக சந்தர்ப்பவாதிகளாக கல்வியூட்டப்பட்டார்கள்.

படிப்படியாக பழைய காரியாளர்களின் இடத்தைப் பிடித்த இத்தகைய இளைஞர்கள், OCI இன் வலதுநோக்கிய அபிவிருத்தியில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தனர். அவர்களில் பலர் பின்னர் சோசலிஸ்ட் கட்சிக்கு மாறியதுடன், அதனுடன் சேர்ந்து ஓர் தொழில்முறை அரசியல் வாழ்வை மேற்கொள்ள தொடங்கினர். அது அவர்களை உயர்ந்த அரசு பதவிகளுக்குக் கொண்டு சென்றது.

OCI இன் வலதுநோக்கிய பரிணாமம், "தொழிலாள வர்க்கத்தின் அமைப்புரீதியிலான காரியாளர்கள்" (“organisational cadres of the working class”) என்று குறிப்பிட்டு, அது 1968 இல் சிறப்பு கவனம் செலுத்தி வந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கீழ்மட்ட பதவிகளில் இருந்தவர்களை அது "தொழிலாள வர்க்கத்தின் அமைப்புரீதியிலான காரியாளர்கள்" என்று குறிப்பிட்டமை, ஒரு சமூக அடுக்கின் எழுச்சியோடு நெருக்கமாக பிணைந்திருந்தது.

நாம் பார்த்துள்ளதைப்போல, கூர்மையடையும் அரசியல் நெருக்கடி இத்தகைய "காரியாளர்களை" “கட்சி எந்திரத்துடன்" மோதலுக்குக் கொண்டு வந்து, அவர்களை இடதிற்கு திரும்ப நிர்பந்திக்குமென OCI நம்பியது. இந்த நம்பிக்கை தொழிற்சங்கங்களின் தன்மை பற்றிய ஒரு தவறான புரிதலின் அடித்தளத்தில் மட்டும் இருக்கவில்லை, கோலிச ஆட்சியைக் குறித்த ஒரு பிழையான மதிப்பீட்டின் மீதும் தங்கியிருந்தது. அந்த ஆட்சியை OCI பாரியளவில் மிகைமதிப்பீடு செய்தது.

1958 இல் இருந்து, அல்ஜீரிய நெருக்கடியின் உச்சத்தில் ஜெனரால் டு கோல் ஆட்சிக்கு திரும்பிய போதும் மற்றும் அவரது தனிப்பட்ட தேவைகளுக்கு பொருந்தியிருக்ககூடிய ஓர் அரசியலமைப்பை கொண்டுவந்த போதும், OCI அவரது ஆட்சியை போனபார்ட்டிசம் என்று குணாம்சப்படுத்தி இருந்தது. “பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் ஏனைய அரசியல் பிரமுகர்கள் மத்தியில் வெறுமனே டு கோல் ஒரு கூறு மட்டுமல்ல,” மாறாக டு கோல் அவரது வர்க்கத்தினால் நிர்ப்பந்திக்கப்பட்டு, மேலும் அவர் அதனால் ஆதரிக்கப்பட்டார். ஏனெனில் "எல்லா சமூக அடுக்குகளையும் அடிபணிய செய்கின்ற, பொருளாதாரத்தின் அனைத்து ஆதாரவளங்களையும் ஒன்றுதிரட்டுகின்ற மற்றும் முழுமையாக பெரும் மூலதனத்திற்கு ஆதரவாக சமூகத்தின் எல்லா பகுதிகளையும் ஒன்றுதிரட்டுகின்ற ஒரு பலமான அரசு ஆதரவு கொடுத்தால் மட்டுமே பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராகவும் மற்றும் அதன் சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராகவும் அதனால் அதன் போராட்டத்தை நடத்த முடியும்,” என்று OCI, “கோலிச போனபார்ட்டிசமும் முன்னணிப்-படையின் பணிகளும்" என்ற தலைப்பின் கீழ் 1968 இன் தொடக்கத்தில் ஒரு வேலைத்திட்ட கட்டுரையை எழுதி la vérité இல் பிரசுரித்தது. [25]

OCI, டு கோல் ஐ ஏறத்தாழ மனிதசக்திக்கு அப்பாற்பட்ட மனிதராக காட்டியது. “அவரால் நிறுவப்பட்ட அரசு ஓர் இரும்புப்பிடியாகும், அது ஒரு தளர்ந்த மற்றும் பலவீனமான முதலாளித்துவ வர்க்கம் அதன் காலில் உறுதியாக நிற்க உதவுகிறது,” என்று அந்த கட்டுரை வாதிட்டது. “பாராளுமன்றம் ஒரு போலிமூடுதிரையாக இருந்ததுடன், தொழிலாளர்களின் தலைவர்கள் பெருந்திரளான மக்களிடையே தேர்தல் பிரமைகளைக் காப்பாற்றி வைக்க" உதவியது.

நீண்டகாலமாக, OCI ஒருவகை தலைமறைவான முறையில் இயங்கிவந்தது. ஏனெனில் டு கோல் பகிரங்கமாக சர்வாதிகார ஆட்சி வடிவத்தை எடுப்பார் என்று அது எதிர்பார்த்தது. ஒரு கடுமையான நெருக்கடி ஏற்படும் வேளையில், அவர் அரசுக்குள் ஒருங்கிணைந்துள்ள தொழிற்சங்க தலைவர்களின் ஆதரவுடன் தொழிலாளர் இயக்கத்தை நசுக்குவார் என்று அது நம்பியிருந்தது.

OCI எழுதியது: “தொழிலாளர்களின் இயக்கத்தை அரசியல்ரீதியில் நசுக்க, அந்த வர்க்கத்தின் அமைப்புரீதியிலான காரியாளர்களை அழிப்பதும் மற்றும் கலைப்பதுமே, டு கோல் மற்றும் அந்த கட்சி எந்திரங்களின் பொதுவான நோக்கமாகும். “போனபார்ட்டிசத்தினது கொலைவெறி திட்டங்களின் நேரடி முகவர்களாக மாறி, அரசுக்குள் தங்களைத்தாங்களே ஒருங்கிணைத்துக் கொண்டோ அல்லது அதன் கீழ் செல்லும் விதத்திலோ" அந்த "கட்சி எந்திரங்கள்" மாற்றீட்டை முகங்கொடுத்தன, அதேவேளையில் "வர்க்கப் போராட்ட களத்தில் இருந்த அமைப்புரீதியிலான காரியாளர்கள், கட்சி எந்திரங்களின் அரசியலில் இருந்து தங்களைத்தாங்களே விலக்கிக் கொள்ள நகர்வார்கள்.”

ஆனால் 1968 இல், யதார்த்தமானது OCI என்ன கருதியதோ அதிலிருந்து மிகவும் வேறுபட்டு இருந்தது. அது எதிர்பார்த்ததையும் விட கோலிச ஆட்சி மிகவும் பலவீனமாக இருந்தது. அது 10 மில்லியன் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தத்தை பலவந்தமாக ஒடுக்க துணியவில்லை. அதை அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக, அது "கட்சி எந்திரங்களின்" சேவையை மட்டும் பயன்படுத்தவில்லை, மாறாக, அனைத்திற்கும் மேலாக, OCI யார் மீது நம்பிக்கை வைத்திருந்ததோ அந்த "காரியாளர்களின்" சேவைகளையும் பயன்படுத்தியது. அது ஒப்பீட்டளவில் மிக சிறியளவில் தொழிலாளர்களுக்கு சடரீதியிலான சலுகைகளை வழங்கிய போதினும், பொது வேலைநிறுத்தத்திலிருந்து நிஜமாக ஆதாயமடைந்தவர்கள் அத்தகைய "காரியாளர்களாகத்" தான் இருந்தார்கள்.

தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளின் ஒரு பரந்த அடுக்கை பொறுத்த வரையில், 1968 ஆம் ஆண்டு, அதற்கு பணம்-கொழிக்கும் பதவிகளையும் அத்துடன் அவர்களுக்கு அரசியல் செல்வாக்கையும் வழங்கிய ஒரு சமூக முன்னேற்றத்தின் தொடக்கத்தை குறிப்பதாக இருந்தது. தொழில்துறைக்குள் தொழிற்சங்கங்களை சட்டபூர்வமாக நங்கூரமிடுவதும் மற்றும் ஸ்திரப்படுத்துவதும், கிறெனெல் உடன்படிக்கையின் பாகமாக இருந்தன. இதை அரசாங்கம், முதலாளிமார்களது அமைப்புகளின் ஆரம்ப எதிர்ப்புகளுக்கு எதிராக வலியுறுத்தி இருந்தது.

அது தொழிற்சங்கங்களால் மற்றும் தொழில் வழங்குனர்களால் சமூகநல காப்புறுதி முறையின் கூட்டு நிர்வாகத்தைத் தொடர்வதற்கும் உத்தரவாதம் அளித்தது. அரசு-மானிய வரவு-செலவு திட்டத்தில் பில்லியன் கணக்கில் மதிப்புடைய பல்வேறு சமூகநல காப்புறுதி திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தொழிற்சங்க அங்கத்தவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்த போதினும் கூட, (பல முக்கிய OCI அங்கத்தவர்கள் உட்பட) எண்ணிறைந்த தொழிற்சங்க அதிகாரிகளுக்கு, தொடர்ந்து பெரும் தொகைகள் கிடைத்தன.

அதற்கும் கூடுதலாக, உடைந்து பிரிந்திருந்த சமூக ஜனநாயகக் குழுக்கள் 1969 இல் சோசலிஸ்ட் கட்சிக்குள் ஒருங்கிணைந்ததுடன், அக்கட்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் கூட்டணியானது, பல செயல்பாட்டாளர்களுக்கு அரசியல் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வழங்கியது. அல்ஜீரிய போர் மற்றும் நான்காம் குடியரசில் அது வகித்த இழிவார்ந்த பாத்திரத்தால் மதிப்பிழந்திருந்த "இடது", மீண்டுமொருமுறை ஓர் அரசியல் சக்தியாக ஆனது. அது உள்ளாட்சி அளவிலும், பிராந்தியளவிலும் மற்றும் (பிரான்சுவா மித்திரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்) தேசியளவிலும் பல்வேறு மிகவும் மதிப்புடைய பதவிகளை ஏற்றிருந்தது.

1968க்குப் பின்னர், OCI அதன் நோக்குநிலையை அதிகாரத்துவத்தை நோக்கி பேணி வந்ததுடன், அதன் சமூக உயர்வுக்கேற்ற அரசியல் வேலைத்திட்டத்தையும் ஏற்றிருந்தது. 1971 வாக்கில், அது "காரியாளர்களுக்கும்" (cadres) மற்றும் "கட்சி எந்திரத்திற்கும்" (apparatuses) இடையே ஒரு வேறுபாட்டை வரைந்திருக்கவில்லை என்பதுடன், அது "கட்சி எந்திரத்திடம்" நன்மதிப்பைப் பெற முயன்றது. 1968 இல் OCI இன் மூர்க்கமான தாக்குதலுக்கு உள்ளான மித்திரோன், இப்போது பாரீஸ் கம்யூனின் நூறாவது நினைவாண்டு விழாவில் மிகப்பெரிய OCI பேரணியில் ஒரு பேச்சாளராக ஆகியிருந்தார். “ஒருங்கிணைந்த வர்க்க முன்னணி" (Front unique de classe) என்பது இப்போது, "மத்திய வேலைநிறுத்த குழுவுடன்" (Comité central de grève) அல்லாது, மாறாக சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் கூட்டணியுடன் அடையாளம் காணப்பட்டது.

சில தீவிர போக்கு குழுக்கள் அவற்றின் சொந்த தேர்தல் வேட்பாளர்களை முன்னிறுத்தின என்பதற்காக OCI அவற்றையும் கண்டித்தது. பப்லோவாத சர்வதேச கம்யூனிஸ்ட் கழகம் (Ligue Communiste Internationaliste – பிற்கால LCR) அதன் சொந்த ஜனாதிபதி வேட்பாளராக அலன் கிறிவினை நிறுத்தியது என்பதற்காக, 1969 இல், OCI அதையும் ஆக்ரோஷமாக தாக்கியது. OCI அதன் இளைஞர் பத்திரிகை Jeunesse révolutionnaire இல் குறிப்பிடுகையில், "தங்களின் அமைப்புகள் மற்றும் கட்சிகளுக்கு விசுவாசமாக இருக்கும் தொழிலாளர்களிடம் இருந்து, 'முன்னேறிய' தொழிலாளர்களை" இது பிளவுபடுத்துவதுடன், "முதலாளித்துவ வர்க்கம் மற்றும் ஸ்ராலினிச எந்திரத்திற்கு தளவாடங்களை" வழங்குவதாக குறிப்பிட்டது. 1974 இல், Lutte Ouvrière (தொழிலாளர் போராட்டம்) இன் ஆர்லெட் லாகியே (Arlette Laguiller) மற்றும் கிறிவின் தேர்தலில் பங்கெடுத்ததற்காக அவர்களை "ஐக்கிய தொழிலாளர் முன்னணிக்கு எதிரான கோட்பாடற்ற வேட்பாளர்கள்" என்று கண்டித்தது. [26]

1971 இல், OCI அதன் பல அங்கத்தவர்களை சோசலிஸ்ட் கட்சிக்குள் அனுப்பியது. அவர்களது பணி ஒரு கன்னையை அபிவிருத்தி செய்வதாக இருக்கவில்லை, மாறாக மித்திரோனை ஆதரிப்பதாக இருந்தது. இத்தகைய OCI அங்கத்தவர்களில் மிகவும் வெற்றிகரமாக இருந்தவர், லியோனெல் ஜோஸ்பன். இவர் எதிர்கால ஜனாதிபதியின் ஆலோசகர்கள் வட்டத்திற்குள் வேகமாக இணைந்துகொண்டதுடன், இறுதியாக 1981 இல் அவரே சோசலிஸ்ட் கட்சியின் தலைவராகவும் ஆனார். அந்நேரத்தில் ஜோஸ்பன் அப்போதும் OCI இன் ஓர் அங்கத்தவராக இருந்ததுடன், ஆலோசனைகளுக்காக பியர் லம்பேர் ஐ வழமையாக சந்தித்தார். அவரது விருப்பத்திற்குரியவரின் (ஜோஸ்பனின்) நிஜமான அரசியல் அடையாளம் குறித்து மித்திரோன் நன்கறிந்திருந்தார் என்பதை நேரில் பார்த்தவர்கள் அதற்குப் பின்னர் உறுதிப்படுத்தி உள்ளனர். 1997 இல் இருந்து 2002 வரையில், ஜோஸ்பன் பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரியாக இருந்தார்.

மூன்றாவது மிகப்பெரிய பிரெஞ்சு தொழிற்சங்க கூட்டமைப்பான Force Ouvrière (தொழிலாளர் சக்தி - FO) மற்றும் மாணவர் கூட்டமைப்பு UNEF இன் "அமைப்பு எந்திரத்தையும்" OCI கைப்பற்றி இருந்தது. பல ஆண்டுகளாக, கட்சி அங்கத்தவர்களோ அல்லது நெருக்கமான ஆதரவாளர்களோ அவ்விரு அமைப்புகளின் தலைமையில் இருந்தனர். OCI இன் மாணவர் பிரிவு வேலைகளுக்கு பல ஆண்டுகள் பொறுப்பாக இருந்த ஜோன்-கிறிஸ்தோப் கம்படெலிஸ் (Jean-Christophe Cambadélis, இவர் 2014 ஏப்பிரலில் இருந்து பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் முதல் செயலாளராவர்), 1986 இல், அவர் 450 OCI அங்கத்தவர்களுடன், OCI இன் மத்திய குழுவிலிருந்து நேரடியாக சோசலிஸ்ட் கட்சியின் தலைமைக்குள் நகர்ந்தார்.

1985 இல் இருந்து, OCI எச்சரிக்கையுடன் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து தன்னைத்தானே விலக்கிக்கொள்ளத் தொடங்கியது. சோசலிஸ்ட் கட்சி 1981 இல் இருந்து முதலாளித்துவ குடியரசிற்கு அதன் ஜனாதிபதியை வழங்கி இருந்ததுடன், பெரு வணிக நலன்களுக்கு ஆதரவான கொள்கைகளை பின்பற்றும் அதன் அரசாங்கத்தை நிறுவி இருந்தது. OCI, தொழிலாளர் கட்சிக்கான ஒரு இயக்கத்தை (Mouvement pour un Parti des travailleurs MPPT) உருவாக்கியது. இது முற்றிலும் OCI இன் ஒரு உருவாக்கம் தான் என்றாலும், அந்த அமைப்பிற்குள் "ட்ரொட்ஸ்கிஸ்டுகள்" ஒரு சிறுபான்மையினராக மட்டுமே இருந்ததாகவும், அது சமூக ஜனநாயக, கம்யூனிஸ்ட் மற்றும் அராஜகவாத-தொழிற்சங்கவாத போக்குகளுக்கு திறந்திருப்பதாகவும் எப்போதும் OCI வலியுறுத்தியது. தங்களின் சொந்த அமைப்புகளது தலைமையுடன் மோதலுக்கு வந்த அல்லது அவர்களது வாழ்க்கை முன்னேற்றங்கள் கவனிக்கப்படாமல் விடப்பட்டதற்காக மோதலுக்குள் வந்த, அதிருப்தி கொண்ட தொழிற்சங்கத்தின் மற்றும் கட்சியின் அதிகாரத்துவவாதிகளின் ஒரு திரட்சியாக MPPT இருந்தது.

1985 இல் MPPT, தொழிலாளர் கட்சி (Parti des travailleurs PT) என பெயர் மாற்றம் செய்துகொண்டது. ஜூன் 2008 இல் அது, சுதந்திர தொழிலாளர் கட்சிக்குள் (Parti ouvrier independent — POI) தன்னை கலைத்துக்கொண்டது. “சோசலிசம், குடியரசு மற்றும் ஜனநாயகத்திற்காக" என்ற இந்த புதிய கட்சியின் முழக்கம் ஐயத்திற்கிடமின்றி வலதுசாரி சமூக ஜனநாயகத்தின் மரபியமாகும். அது பூகோளமயமாக்கலின் விளைவுகளுக்கு தேசிய அரசை ஊக்குவிப்பதன் மூலமாக விடையிறுப்பு காட்டிய, குட்டி முதலாளித்துவ மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அடுக்குகளுக்காக பேசுகிறது. அதன் அரசியல் வேலை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கிளர்ச்சியின் மீது மையங்கொண்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக அது ஒரு சோசலிச ஐரோப்பாவை முன்னிறுத்தவில்லை, மாறாக "ஐரோப்பாவின் அனைத்து மக்களுக்கான ஒரு சுதந்திர மற்றும் சகோதரத்துவ ஒன்றியத்தை" முன்னிறுத்துகிறது. POI இன் இன்னொரு சுலோகம், “ஆம், ஐரோப்பிய மக்களின் இறையாண்மைக்காக" என்று கூறுகிறது. இத்தகைய சுலோகங்களுக்கு அடியிலிருந்த தேசியவாத உள்தொனி தவிர்க்கமுடியாததாக இருந்தது. தட்டிக்கழிக்கவியலாத அளவிற்கு தேசியவாத தொனிகள் அமைந்துள்ளன.

OCI இன் மத்தியவாத வேர்கள்

OCI இன் மத்தியவாத பிறழ்வு 1968க்கு நீண்டகாலத்திற்கு முன்னரே ஆரம்பித்திருந்தது. 1968 இல் OCI இன் தலையீட்டை தீர்மானிக்கவிருந்த கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) ஜூன் 1967 இல், OCI க்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியது. குறிப்பாக, அக்கடிதம் அனைத்துலகக் குழுவின் நம்பகத்தன்மை மற்றும் பப்லோவாதத்திற்கு எதிரான அதன் போராட்டத்தின் முக்கியத்துவத்தை நோக்கி OCI இன் அதிகரித்துவந்த ஐயுறவை குறிப்பிட்டுக் காட்டியது. [27]

அதற்கு ஓராண்டுக்கு முன்னதாக, ICFI இன் மூன்றாம் உலக மாநாட்டில், SLL ஆல் சமர்பிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை OCI ஆதரித்திருந்தது. நான்காம் அகிலத்தை அழிப்பதற்கான திருத்தல்வாத முயற்சிகள் வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அத்தீர்மானம் வலியுறுத்தியது. திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது கட்சி கட்டும் மிக முக்கிய பணிகளிலிருந்து ஒரு திசைதிருப்பம் அல்ல. அதற்கு மாறாக, ட்ரொட்ஸ்கிச இயக்கம் பப்லோவாதத்திற்கு எதிராக மார்க்சிசத்தை உறுதியாக பாதுகாப்பதில், முதலாளித்துவ வர்க்கத்தின் சித்தாந்த அழுத்தத்திற்கு எதிராக போராடி, அதன் புரட்சிகர முன்னோக்கை அபிவிருத்தி செய்வது என்று அம்மாநாடு வலியுறுத்தியது. பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது, நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியை உள்ளடக்கி இருப்பதாகவும், அது, ஒரு புதிய பாட்டாளி வர்க்க தலைமையைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான முன்நிபந்தனை என்றும் அம்மாநாடு வலியுறுத்தியது.

SLL இன் அந்த தீர்மானம், ஸ்பாட்டசிஸ்ட் போக்கு மற்றும் Voix Ouvrière குழுவிற்கு (இன்றைய Lutte Ouvrière) எதிராக திரும்பி இருந்தது. அவையும் அம்மாநாட்டில் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருந்தன. “நான்காம் அகிலத்தின் மறுகட்டமைப்பு" என்ற அந்த பிரதான தீர்மானத்தின் தலைப்பானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அழிக்கப்பட்டிருப்பதை போலவும் மற்றும் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக 1953 இல் இருந்து நடத்தப்பட்ட அனைத்துலகக் குழுவின் போராட்டம் எந்தவித தத்துவார்த்த மற்றும் அரசியல் முக்கியத்துவமும் கொண்டிருக்காததாகவும், ஆகவே ஏதோவிதத்தில் அது இரட்டை அர்த்தம் கொண்டிருந்ததாக அவை பொருள்விளக்கம் அளித்தன. பரந்தரீதியில் அரசியல் பொதுமன்னிப்பின் அடித்தளத்தில் நான்காம் அகிலத்தை "மறுகட்டுமானம்" செய்ய அவர்கள் போராடி வந்தனர், அவ்விதத்தில் 1953 இன் உடைவுக்கு இட்டுச் சென்ற முக்கிய வேலைதிட்ட பிரச்சினைகள் ஓரங்கட்டப்பட்டு விட்டன. அதுபோன்றவொரு ஒழித்துக்கட்டும் போக்கை அனைத்துலகக் குழு எதிர்ப்பதைக் கண்டதும், இந்த இரண்டு அமைப்புகளும் அம்மாநாட்டிலிருந்து வெளியேறின.

பப்லோவாதிகளுக்கு எதிரான ICFI இன் வரலாற்று ரீதியிலான போராட்டத்திற்கு எதிராக, ஸ்பாட்டசிஸ்ட் போக்கு மற்றும் Voix Ouvrière ஆல் காட்டப்பட்ட வெறித்தனமான விரோதத்தை முகங்கொடுத்த OCI, மூன்றாம் மாநாட்டில் தன்னைத்தானே SLL உடன் அணிசேர்த்துக் கொண்டதுடன், அதன் தீர்மானத்திற்கும் வாக்களித்தது. ஆனால் OCI கணிசமான அளவிற்கு அதன் சொந்த தனிவிருப்புரிமைகளை பேணி வந்தது என்பது விரைவிலேயே தெளிவானது.

மே 1967 இல், அது பிரசுரித்த ஓர் அறிக்கை, மூன்றாம் உலக மாநாட்டின் சாதனைகளை பகிரங்கமாக கேள்விக்குட்படுத்தியது. மூன்றாம் உலக மாநாட்டிற்கு பின்னரில் இருந்து "அனைத்துலகக் குழுவின் நடவடிக்கை குறித்த ஒரு இருப்பு நிலைக்குறிப்பு அறிக்கை" வரைய வேண்டுமென்ற சாக்குபோக்கின் கீழ் மற்றும் "அனைத்துலகக் குழுவின் மூன்றாம் மாநாட்டில் விவாதிக்க முடியாமல் போன பிரச்சினைகளை தீர்க்க, அவசியமான பகிரங்க விவாதங்களுக்கு திறந்துவிட" கோரி, OCI நான்காம் அகிலத்தின் தடையற்ற தொடர்ச்சியை மறுத்தது. [28]

“பப்லோவாத தலைமையின் திவால்நிலைமையை அறிவித்துள்ள நாம், வெறுமனே பப்லோவாத சர்வதேச செயலகத்தின் [International Secretariat] இடத்தை அனைத்துலகக் குழு எடுத்து கொண்டதுடன், நான்காம் அகிலம் சாதாரணமாகவும் எளிமையாகவும் தொடர்ச்சியாக இருக்கின்றது என்று கூறிவிட முடியாது" என்று OCI இன் அந்த ஆவணம் குறிப்பிட்டது. “நான்காம் அகிலத்தின் பழைய தலைமை அனைத்தும் ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசத்தின் அழுத்தத்தின் கீழ் அடிபணிந்தன,” என்று அறிவிக்குமளவிற்கு அது சென்றது.

“பப்லோவாத நெருக்கடி நான்காம் அகிலத்தை அமைப்புரீதியில் உருக்குலைத்துவிட்டது,” என்று குறிப்பிட்ட OCI இன் அந்த ஆவணம் தொடர்ந்து, “ஒன்றுதிரண்டிருக்கும் தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்… 'பழைய மன்னர் இறந்துவிட்டார், புதிய மன்னர் வாழ்க' என்று நாம் கத்திக் கொண்டிருக்க முடியாது. நாம் இத்தகைய பிரச்சினைகள் மீது ஒரு விவாதத்தைத் தொடங்க வேண்டும், அதுபோன்றவொரு விவாதம் அனைத்துலகக் குழுவிற்குள் முற்றிலுமாக இதுவரையில் எடுக்கப்படவில்லை,” என்று குறிப்பிட்டது.

அந்த ஆவணம் பின்வரும் அறிவிப்பில் அதன் உச்சத்தை அடைந்தது: “அடிப்படையில், எதிர் வர்க்க சக்திகளின் அழுத்தங்களின் கீழ் நான்காம் அகிலம் அழிந்துவிட்டது… அனைத்துலகக் குழு நான்காம் அகிலத்தின் தலைமையே அல்ல… நான்காம் அகிலத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு அனைத்துலகக் குழு உந்து சக்தியாக இருக்கிறது” என்றது. [29]

பின்னர் அந்த ஆவணம், பப்லோவாதத்தைக் குறித்த அனைத்துலகக் குழுவின் முந்தைய பகுப்பாய்விலிருந்து முற்றிலும் வேறுபட்டவிதத்தில், அதை எடுத்துக்காட்டியது. மார்க்சிச வேலைதிட்டத்தை திருத்தியமைத்ததற்காகவும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தையும் கைவிட்டதற்கும், நான்காம் அகிலத்தை கலைக்க கோரியதற்கும் பப்லோவாதிகளை OCI குற்றம்சாட்டாது, அதற்கு மாறாக, "ஒரு பூர்த்திசெய்யப்பட்ட நான்காம் அகிலத்திற்கான கருத்துக்களையும், அதீத-மத்தியமயப்பட்ட கட்டமைப்பு மற்றும் உலக மாநாடுகளைக் கொண்ட ஒரு கூர்கோபுர பாணியிலான அமைப்பு படிநிலையை கொண்ட கட்சிக் கருத்தையும்" பப்லோவாதிகள் பேணி வருவதற்காக அவர்களைக் குறைகூறியது. ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை "ஒரு கட்டிமுடிக்கப்பட்ட ஒன்றாகவோ அல்லது ஒரு பூர்த்தியாக்கப்பட்ட கட்டமைப்பை கொண்டிருப்பதாகவோ கருதவில்லை என்று வாதிடுமளவிற்கு அது சென்றது.” [30]

ஸ்பாட்டசிஸ்ட் போக்கு மற்றும் Voix Ouvrière உடனான சர்ச்சைக்குப் பின்னர், பிரிட்டிஷ் SLL வேகமாக இந்த வார்த்தைகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டதுடன், அனைத்துலகக் குழுவின் பாத்திரத்தை குறித்து சவால் விடுக்கும் OCI இன் முயற்சியை முற்றிலுமாக நிராகரித்தது. “மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் போராட்டங்களைக் காட்டிக்கொடுத்த ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சீர்திருத்தவாதிகளுக்கு எதிரான வெறுப்பார்ந்த அனுபவத்தை உள்ளடக்கியிருப்பதை நான்காம் அகிலத்தின் எதிர்காலம் பிரதிநிதித்துவம் செய்கிறது,” என்று அது எழுதியது. “நான்காம் அகிலம் இந்த தேவையை பூர்த்தி செய்ய நனவுபூர்வமாக தலைமைக்காக போராட வேண்டும்… திரித்தல்வாதத்திற்கு எதிரான இந்த போராட்டம் மட்டுமே, முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்திற்குள் இழுக்கப்படும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் தலைமையை எடுத்துக்கொள்வதற்கு காரியாளர்களை தயார் செய்ய முடியும்… பப்லோவாதிகளுக்கு எதிரான இந்த உயிரோட்டமான போராட்டமும், இந்த போராட்டத்தின் அடித்தளத்தில் காரியாளர்கள் மற்றும் கட்சிகளுக்கு பயிற்சியளிப்பதும் 1952 இலிருந்து நான்காம் அகிலத்தின் ஜீவநாடியாக இருந்தது.” [31]

SLL, நான்காம் அகிலத்தின் வரலாற்று தொடர்ச்சியை பாதுகாத்ததோடு தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அது வர்க்க போராட்டத்தின் புறநிலை மாற்றங்களுக்கும் மற்றும் OCI இன் அதிகரித்துவந்த ஐயுறவுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டியது. உலகெங்கிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்துவந்த தீவிரமயப்பாட்டையும் மற்றும் அதன் சொந்த காரியாளர்களின் எண்ணிறந்த பலவீனத்தையும் முகங்கொடுத்த OCI, தொழிலாள வர்க்கத்திற்குள் மார்க்சிச நனவிற்காக ஓர் கடும்பிரயத்தமான போராட்டத்தை நடத்தாமல் அதன் செல்வாக்கை வென்றெடுக்க அனுமதிக்கும் ஒரு சந்தர்ப்பவாத குறுக்குவழியை காண முயன்றது. இதுதான், ஒரு "அதீத-மத்திமயப்பட்ட" அகிலத்தை பப்லோவாதிகள் பரிந்துரைத்து வருகின்றனர் என்ற அதன் குற்றச்சாட்டின், ட்ரொட்ஸ்கி எவ்வித உறுதியான கட்டமைப்பும் இல்லாத ஓர் அகிலத்தை விரும்பினார் என்ற அதன் வாதத்தினதும், மற்றும் மூன்றாம் உலக மாநாட்டிற்குப் பின்னர் அனைத்துலகக் குழுவின் அமைப்புரீதியிலான பலவீனங்கள் மற்றும் தவறுகளின் மீது OCI தங்கியிருந்ததன் அர்த்தமாக இருந்தது.

ஆகவே SLL பின்வருமாறு எச்சரித்தது: “மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில், தொழிலாளர்களின் தீவிரமயப்படுத்தல் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது… அதுபோன்றவொரு அபிவிருத்திக் கட்டத்தில் ஒரு புரட்சிகர கட்சி தொழிலாள வர்க்கத்திற்குள் அந்த நிலைமைக்கு புரட்சிகரமான விதத்தில் அல்லாமல் மாறாக தொழிலாளர்கள் பழைய தலைமையின் கீழான —அதாவது தவிர்க்கவியலாத ஆரம்ப குழப்பத்துடன்— அவர்களின் சொந்த அனுபவங்களுடன் மட்டுப்பட்ட போராட்டத்தின் தரங்களுக்கு அடிபணிந்துபோகும் ஓர் அபாயம் எப்போதுமே அங்கே நிலவுகிறது. சுயாதீனமான கட்சிக்கான மற்றும் இடைமருவு வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில் இவ்வாறான திருத்தங்கள் வழமையாக, தொழிலாள வர்க்கத்திற்கு நெருக்கமாக செல்வதற்காக, போராட்டத்தில் இருப்பவர்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்துவதற்காக, இறுதி எச்சரிக்கைகளை முன்நிறுத்தாமல் இருப்பதற்காக, வறட்டுவாதத்தை தவிர்த்தொதுக்குவதற்காக, இன்ன பிறவற்றிற்காக என்ற போர்வையில் கொண்டு செல்லப்படுகின்றன" (மூலத்தில் அழுத்தம் சேர்க்கப்பட்டது). [32]

OCI இன் சந்தர்ப்பவாத நோக்குநிலை குறிப்பாக "ஐக்கிய முன்னணி" என்ற அதன் பொருள்விளக்கத்தில் மிக தெளிவாக வெளிப்பட்டது. OCI எழுதியது: “பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவிற்கு ஒரு அமைப்பிலிருந்து இன்னொரு அமைப்பிற்கு ஒரு ஐக்கிய முன்னணிக்காக பரிந்துரை கடிதங்கள் அனுப்புவதென்பது, 1944 மற்றும் 1951க்கு இடையே [OCI க்கு முன்னோடி அமைப்பான] PCI இன் மரபாக இருந்தது.” PCI இன் எண்ணிறைந்த பலவீனங்களுக்கு இடையே, அதுபோன்றவொரு கொள்கை யதார்த்தமற்றதாக இருந்தது ஏனென்றால்: “PCI க்கும் மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே ஒரு ஐக்கிய முன்னணிக்கான அடித்தளத்தை வழங்கக்கூடிய எந்த ஒரு பிரிவிற்கு அது தலைமை வகித்தது?”

OCI தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஓர் ஐக்கிய முன்னணி குறித்த நமது கொள்கை இப்போது வேறுவிதமானது. நாம் தொழிலாள வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமைகளுக்கு (SFIO, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்க தலைமைகள்) முன்னேறிய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்துகிறோம்; ஆகவே முதலாளித்துவ வர்க்கத்துடன் உடைத்துக் கொள்ள வேண்டியதும் மற்றும் ஒருங்கிணைந்த வர்க்க முன்னணியை முன்னுக்குக் கொண்டு வர வேண்டியதும் அவசியமாகும்… நாம் ஐக்கிய முன்னணிக்கான போராட்டத்திற்கு இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் போர்குணமிக்கவர்களின் அடுக்குகளை ஒழுங்கமைத்து ஒன்றுதிரட்டுகிறோம். ஐக்கிய முன்னணிக்கான இத்தகைய போராட்டத்தினூடாக நாம் OCI ஐ கட்டியெழுப்பி வருகிறோம்,” என்றது. [33]

சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) “ஐக்கிய முன்னணி" இன் இந்த கருத்துருவை பலமாக எதிர்த்தது. அக்கட்சி "தொழிலாள வர்க்கத்தின் சந்தர்ப்பவாத மற்றும் மத்தியவாத அரசியல் தலைமைகளுக்கு சவால்விடுக்கும் அதன் சொந்த கொள்கைகளைக் கொண்டு பலமாக போராட வேண்டுமென" அது வலியுறுத்தியது. “சுயாதீனமான தலைமைக்கான போராட்டத்திற்கு எதிராக, ஓர் எளிமையான வழியில், ஒரு மாற்றீடாக ஐக்கிய முன்னணி முன்னிறுத்தப்படுகின்ற" போது, அது தொழிலாளர்களை புரட்சிகர தலைமையின் பாதையிலிருந்து திசைதிருப்புகிறது. “உலக நெருக்கடியின் இந்த கட்டத்தில், திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் இந்த கட்டத்தில், போல்ஷிவிக் கட்சியைக் கட்டியெழுப்புவதிலிருந்து அனைத்து வலியுறுத்தல்களையும் தவிர்ப்பது, வர்க்க எதிரியின் முழு அழுத்தத்திற்கு உடனடியாக கதவைத் திறந்துவிடுவதாக இருக்கும். ஒருங்கிணைந்த வர்க்க முன்னணி (Front unique de classe) என்றழைக்கப்படுவது இந்த அபாயகரமான போக்கின், ஒரு பேரழிவுகரமான போக்கின் ஒரு வெளிப்பாடாகும்,” என்று SLL எச்சரித்தது (மூலத்தில் அழுத்தம் சேர்க்கப்பட்டது). [34]

OCI இன் கொள்கை, உள்ளடக்கத்தில் எதனை அர்த்தப்படுத்தியது என்பதைக் குறித்து SLL எழுதியது: “முதலில் ஐக்கிய முன்னணி, இதனூடாக, இரண்டாம் பட்சமாக கட்சி. நாங்கள் இதை நிராகரிக்கிறோம்.” அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “OCI ஆல் முன்மொழியப்பட்ட வடிவம், முற்றிலும் நிச்சயமாக பப்லோவாத 'நுழைவுவாத' தத்துவத்தை போலவே, கலைத்து விடுவதற்குரிய ஒரு தயாரிப்பாக இருக்கிறது… இரண்டு விடயங்களிலும் உள்ள சாரம், புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்புவதன் மத்திய முக்கியத்துவத்தை கைவிடுவதாக உள்ளது" (மூலத்தில் அழுத்தம் சேர்க்கப்பட்டது). [35]

நாம் பார்த்துள்ளதைப் போல, SLL ஆல் முன்வைக்கப்பட்ட விமர்சனத்தை OCI நிராகரித்தது. அதற்கு மாறாக, 1968 இன் புரட்சிகர சம்பவங்களில் OCI இன் தலையீடு SLL ஆல் விமர்சிக்கப்பட்ட அரசியல் போக்கின் அடிப்படையிலேயே இருந்தது, மற்றும், SLL முன்அனுமானித்தவாறே, இந்த நோக்குநிலை தவிர்க்கவியலாதவாறு ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியைக் கலைத்துவிடுவதற்கு இட்டு சென்றது.

ஜூன் 19, 1967 இன் கடிதம், OCI இன் அரசியல் போக்கு குறித்து பிரிட்டிஷ் பிரிவால் வைக்கப்பட்ட கடைசி விரிவார்ந்த விமர்சனமாக இருந்தது. அதற்கடுத்து வந்த ஆண்டுகளில், OCI இன் போக்கைக் குறித்து SLL எந்தவொரு முழுமையான பகுப்பாய்வையும் முன்னெடுக்கவில்லை. அது, மே-ஜூன் 1968 இன் சம்பவங்கள் குறித்து ரொம் கெம்ப் ஆல் எழுதப்பட்ட மேலோட்டமான கட்டுரை தொடர்களை பிரசுரித்தது, அக்கட்டுரைகளோ OCI வகித்த பாத்திரம் குறித்து பெரிதும் தவிர்த்திருந்தன. 1968 இல் அப்போதும் OCI உத்தியோகபூர்வமாக அனைத்துலகக் குழுவின் ஓர் அங்கமாக இருந்தது என்ற அடித்தளத்தில், பகிரங்கமாக விமர்சிப்பதை தவிர்த்துக் கொண்டதாக நியாயப்படுத்தப்பட்ட போதினும், 1971 இல் ICFI உடன் உடைத்துக் கொண்ட பின்னரும் கூட OCI இன் மத்தியவாத சீரழிவின் வேர்களை SLL ஆராயத் தவறியது.

அதுபோன்றவொரு ஆய்வு அனைத்துலகக் குழுவின் காரியாளர்களை அரசியல்ரீதியில் மற்றும் தத்துவார்த்தரீதியில் ஆயுதபாணியாக்க அத்தியாவசியமாக அவசியமாகும். OCI இன் மத்தியவாத நோக்குநிலை எவ்வாறு அபிவிருத்தி அடைந்தது என்பதை எடுத்துக்காட்ட 1968 சம்பவங்களுக்கும் மற்றும் 1966க்கும் வெகுவாக முன்னால் சென்று பார்ப்பதும் மற்றும் அதுபோன்றவொரு சீரழிவுடன் பிணைந்திருந்த அரசியல் பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதும் அதன் பணியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மெய்யியல்ரீதியிலான கருத்துவேறுபாடுகளின் இரண்டாம்பட்சமான வெளிப்பாடாகவே, இந்த அரசியல் கருத்துவேறுபாடுகளில் உள்ளடங்கி இருந்ததாகவும், மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த ஆழமான விசாரணை அறிவாதார முறையிலான பிரச்சினைகளின் ஒரு கோட்பாட்டளவிலான விவாதத்தால் பிரதியீடு செய்யப்படலாம் என்றும் அறிவித்து, SLL அந்த பணியை தவிர்த்துக் கொண்டது. இயங்கியல் சடவாதத்தை OCI மார்க்சிச தத்துவ அறிவாக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற இந்த ஒரே காரணத்தின் அடித்தளத்தில், OCI உடனான அதன் உடைவை SLL நியாயப்படுத்தியது.

SLL இன் பக்கத்தில் இந்த தட்டிக்கழிப்புக்குப் பின்னால், அதன் சொந்த மட்டங்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் இருந்தன, அதை அக்கட்சியின் தலைமை விவாதிக்க விரும்பவில்லை. OCI உடனான சர்ச்சையால் தூண்டிவிடப்பட்ட ஒரு பகிரங்கமான விவாதமானது, அரசியல் தெளிவாக்கலை விட மிக முக்கியமானதாக அவை கருதிய, தமது நடைமுறைரீதியிலான மற்றும் அமைப்புரீதியிலான வெற்றிகளை அது குழப்பிவிடும் என்று தலைமை மிக முக்கியமாக கருதியது.

இறுதியில், OCI இன் சீரழிவை ஆராய மறுத்தமைக்கு SLL ஒரு பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது. அடிப்படை அரசியல் பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்படாததுடன், அவை SLLக்குள் அவற்றின் பாதையைக் கண்டன. 1974 இல், SLL/WRP இன் (WRP இன் முன்னோடி அமைப்பு SLL) தொழிற்சங்க வேலைகளின் தலைவர் அலன் தொர்னெட் என்பவர் மூலமாக, தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் (WRP) OCI ஆல் கணிசமான பதட்டங்களை தூண்டிவிட முடிந்தது. அதிலிருந்து எழுந்த நெருக்கடியில், WRP தொழிற்சாலைகளுக்குள் இருந்த அதன் அங்கத்துவ எண்ணிக்கையின் பெரும் பாகங்களை இழந்தது. பிரான்சில் OCI ஏற்றதைப் போலவே, 1970களின் இறுதி வாக்கில், பிரிட்டனில் WRP உம் —அனைத்திற்கும் மேலாக தொழிற்சங்கங்கள், தொழிற்கட்சி மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளில் இருந்த தேசியவாத இயக்கங்கள் உடனான அதன் உறவுகளோடு தொடர்புபட்ட விதத்தில்— அதிகரித்தளவில் ஒரு சந்தர்ப்பவாத போக்கை ஏற்றது. இறுதியில், 1985 இல், WRP அதன் உள் முரண்பாடுகளால் பிளவுண்டது.

தொடரும்…..

குறிப்புகள்:


25. “Le bonapartisme gaulliste et les tâches de l’avant-garde,” la vérité No. 540, février-mars 1968
26. Quoted in Jean-Paul Salles, “La ligue communiste révolutionnaire,” Rennes 2005, p. 98
27. “Reply to the OCI by the Central Committee of the SLL, June 19, 1967,” in Trotskyism versus Revisionism, Volume 5, London 1975, pp. 107-132
28. “Statement by the OCI, May 1967” in Trotskyism versus Revisionism, Volume 5, London 1975, p. 84
29. ibid. pp. 91-95
30. ibid. p. 92
31. “Reply to the OCI by the Central Committee of the SLL, June 19, 1967,” ibid. pp. 107-114
32. ibid., pp. 113-114
33. “Statement by the OCI, May 1967,” ibid. p. 95
34. ibid. pp. 123-24
35. ibid. p. 125