ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

 

 

 

8

1968 பிரான்சின் பொது வேலைநிறுத்தமும் மாணவர் எழுச்சியும்

 

சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் (OCI) மத்தியவாத போக்கு (4)

பியர் லம்பேர் இன் அரசியல் பின்புலம்

பிரான்சின் 1968 மே/ஜூன் சம்பவங்களைக் குறித்த தொடர்ச்சியான கட்டுரைகளில் இது எட்டாவதும் இறுதிப் பாகமும் ஆகும்

சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பின் (OCI) அரசியல் சீரழிவை பிரிட்டனின் சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) ஆராயத் தவறியதன் விளைவாக, அதன் வரலாறு பல ஆண்டுகளாக அறியப்படாமல் இருந்தது. OCI இன் அரசியல் அபிவிருத்தியைக் குறித்தும், அதன் உள்கட்சி விவாதங்கள் மற்றும் அதன் தலைவர்களின் பின்புலம் குறித்தும் மிகக் குறைவாகவே அறியப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்தில் பிரான்சில், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான தனிநபர் நினைவுகூரல்களும், பல்வேறு தரத்திலான வரலாற்று படைப்புகளும் மற்றும் கல்வித்துறைசார்ந்த தீவிர ஆய்வுகளும் வெளிவந்துள்ளன. அதிகரித்துவரும் ஆர்வத்திற்கான ஒரு பிரதான காரணம், முன்னாள் OCI உறுப்பினரான லியோனல் ஜோஸ்பன் 1997 இல் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டமையும், மற்றும் தங்களைத்தாங்களே ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று அறிவித்துக்கொண்ட ஆர்லெட் லாகியே (Arlette Laguiller) மற்றும் ஒலிவியே பெசன்ஸநோ (Olivier Besancenot) போன்றவர்களின் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றிகளும் ஆகும்.

செப்டம்பர் 2006 இல், நவீன பிரெஞ்சு தொழிலாளர் இயக்கங்களின் வரலாற்றாளரும் மற்றும் Histoire de la CGT என்ற நூலின் ஆசிரியருமான மிஷேல் ட்ரேஃப்யூஸ் (Michel Dreyfus) இன் வழிகாட்டுதலின் கீழ் ஜோன் என்ஜேன் (Jean Hentzgen) பாரீஸ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஆசிரியரிடம் அவரது முதுநிலை ஆய்வறிக்கையை சமர்பித்தார், அது OCI இன் ஆரம்பகால வரலாறை விரிவாக கையாண்டிருந்தது. [36]

பரந்தளவிலான ஆவணங்கள், சமகாலத்திய ஆதாரநபர்களுடனான நேர்காணல்கள் மற்றும் ஏற்கனவே இருந்த படைப்புகளை ஆதாரமாக கொண்டு, அதன் ஆசிரியர், 1952 இல் இருந்து 1955 வரையில் [OCI இன் முன்னோடி அமைப்பான] PCI பெரும்பான்மையின் வரலாறை கணக்கில் கொண்டு வந்திருந்தார். 1952 இல் மிஷேல் பப்லோ, பிரெஞ்சு பிரிவின் பெரும்பான்மையான PCI ஐ நான்காம் அகிலத்திலிருந்து வெளியேற்றினார். ஏனெனில் அவரது "ஒரு சிறப்புவகை நுழைவுவாத" கொள்கையை அது எதிர்த்தது. அதாவது அக்கொள்கை PCI ஐ ஒரு சுயாதீன அமைப்பாக இருப்பதை கலைப்பதன் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நுழைவதாக இருந்தது. 1953 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஸ்தாபக அமைப்புகளில் ஒன்றாக PCI பெரும்பான்மை இருந்தது. 1965 இல் இருந்து, அது அதனை OCI என்று அழைத்துக்கொண்டது.

ஆரம்பத்திலிருந்தே PCI பெரும்பான்மைக்குள் இரண்டு வேறுபட்ட சிந்தனைஓட்டங்கள் இருந்தன என்பதை என்ஜேன் இன் படைப்பு தெளிவுபடுத்துகிறது. ஒன்று, பியர் லம்பேர் தலைமையிலானது, அது ஒரு தொழிற்சங்கவாத கண்ணோட்ட குணாம்சத்தில் இருந்தது. அது அதன் வேலைகளை, தொழிற்சங்கங்கள் மீது ஒருங்குவித்திருந்ததுடன், பின்னர் அது சமூக ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களின் மீது ஒருங்குவிந்தது. மார்செல் பிலைப்துறு (Marcel Bleibtreu) தலைமையிலான இரண்டாவது, கம்யூனிஸ்ட் கட்சியுடனான மோதல்களுக்கு கூடிய கவனம் செலுத்தியது.

இந்த இரண்டு சிந்தனைபோக்குகளுக்கு இடையிலான கருத்துவேறுபாடு ஆழமாக மற்றும் கசப்புடன் வளர்ந்தது. மார்ச் 1953 இல், லம்பேர் PCI இன் தலைவராக பிலைப்துறு ஐ பிரதியீடு செய்தார். அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பிலைப்துறு உம் மற்றும் அவருக்கு நெருக்கமான தோழர்களும் அனைத்துலகக் குழுவின் எதிர்ப்பிற்கு இடையிலும் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இரண்டு கன்னைகளுமே கணிசமானளவிற்கு அரசியல் பலவீனத்துடன் இருந்தன. மேலும் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்துடன் தொடர்புபட்ட பல சிக்கலான கேள்விகள் ஒருபோதும் அந்த பிரெஞ்சு பிரிவில் உண்மையாக தெளிவுபடுத்தப்படவே இல்லை.

நவம்பர் 1950 இல் நான்காம் அகிலத்தின் சர்வதேச நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் பப்லோவின் திருத்தல்வாத ஆய்வறிக்கையை எதிர்த்த முதல் நபர் Favre என்ற கட்சி புனைபெயரைக்கொண்ட மார்செல் பிலைப்துறு (Marcel Bleibtreu) ஆவார். “பப்லோ எங்கே செல்கிறார்?” என்ற தலைப்பின் கீழ், அவர் ஆழ்ந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த விமர்சனத்தை அவர்களிடம் சமர்ப்பித்தார். [37]

இந்த ஆவணம் ஜூன் 1951 இல் பிரசுரிக்கப்பட்டதுடன், பிரெஞ்சு பெரும்பான்மையினது அரசியல் நோக்குநிலைக்கு ஒரு பிரதான வழியில் பங்களித்தது. அப்போக்கின் மிக முக்கிய தலைவராக விளங்கிய 1918 இல் பிறந்த பிலைப்துறு, 1934 இல் சமூக ஜனநாயக SFIO க்குள் இயங்கிவந்த பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுகளுடன் இணைந்திருந்தார். போருக்குப் பின்னர், அவர் அக்கட்சியின் பத்திரிகையான La vérité இன் பதிப்பாசிரியராக இருந்ததுடன், PCI இன் அரசியல் செயலாளரானார். தொழில்ரீதியில் ஒரு மருத்துவரான அவர், 2001 இல் மரணமடைந்தார்.

பியர் லம்பேர் (1920-2008), 1937 இல் றேமோன்ட் மொலினியே மற்றும் பியர் பிராங் இன் குழுவில் இணைந்தார். அது, அதன் சந்தர்ப்பவாத போக்கின் காரணமாக, அந்நேரத்தில் ட்ரொட்ஸ்கி மற்றும் உத்தியோகபூர்வ பிரெஞ்சு பிரிவிலிருந்து கூர்மையாக விலகியிருந்தது. போரின் காரணமாக, லம்பேர் சட்டவிரோதமாக்கப்பட்ட தொழிற்சங்கங்களில் செயல்பட்டு வந்தார், 1944 இல் பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் மறுஐக்கியத்திற்குப் பின்னர் அவர் அவர்களது தொழிற்சங்க வேலைகளுக்கு தலைமை ஏற்றார். அவர் சிறிது ஆரம்ப தயக்கங்களுக்கு பின்னர் பப்லோவாத-எதிர்ப்பு பெரும்பான்மையை ஆதரித்தார். “ஒரு சிறப்புவகையான நுழைவுவாத" கொள்கை PCI இன் தொழிற்சங்க வேலைகளை அழிக்க அச்சுறுத்தியது என்பதே அவர் பப்லோவாத-எதிர்ப்பு பெரும்பான்மையை இறுதியாக ஆதரித்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிகிறது. இந்த வேலையின் உள்ளடக்கத்திற்குள், தொழிற்சாலைகளில் இருந்த பல இளம் தோழர்கள் மிக தைரியத்துடன் ஸ்ராலினிஸ்டுகளை எதிர்த்தனர்.

லம்பேரின் பிந்தைய கொள்கைகளின் பல குணாம்சங்கள், பப்லோவாதிகளுடன் பிளவுறுவதற்கு முன்னரே வெளிப்படத் தொடங்கி இருந்தது. 1947 இல் அவர், அரசியல் கட்சிகளிடமிருந்து தொழிற்சங்கங்களின் முழு சுதந்திரத்தை வலியுறுத்திய ஒரு தீர்மானத்தை PCIக்குள் திணித்தார் என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். 1950இல் இருந்து 1952 வரையில், லம்பேர் L’Unité (ஐக்கியம்) என்று தலைப்பிட்ட ஒரு தொழிற்சங்க பத்திரிகையின் பிரசுரத்தில் பங்கெடுத்தார், அதன் ஆசிரியர் குழு பல்வேறு அரசியல் நோக்குநிலைகள் கொண்ட தொழிற்சங்கவாதிகளை உள்ளடக்கி இருந்தது. PCI இல் இருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மட்டுமல்லாது, அதில் பகிரங்கமான கம்யூனிச-எதிர்ப்பாளர்கள் உட்பட அராஜகவாதிகளும் சீர்திருத்தவாதிகளும் இருந்தனர். 1947 இல் இருந்து 1992 வரையில் லுவார் அட்லாடண்டிக் (Loire Atlantique) பிராந்தியத்தில் Force Ouvrière தொழிற்சங்கத்தின் செயலாளராக இருந்த அராஜகவாத அலெக்ஸாண்ட்ர் எபேர் (Alexandre Hébert) போன்ற அவர்களில் சிலர் லம்பேருக்கு வாழ்நாள் முழுவதும் விசுவாசமாக இருந்தனர்.

ஜூலை 1952 இல், PCI அதன் எட்டாவது மாநாட்டை நடத்தியது, அதிலே முதல்முறையாக பெரும்பான்மையும் மற்றும் பப்லோவாத சிறுபான்மையும் தனித்தனியாக சந்தித்தன. பெரும்பான்மையினரின் மாநாட்டில் பப்லோவாதிகளுக்கு எதிரான போராட்டமே மையத்தில் இருந்தது, அதற்கு பிலைப்துறுவும் லம்பேரும் உடன்பட்டிருந்தனர். PCI தன்னைத்தானே நான்காம் அகிலத்திலிருந்து வெளியேற்றி கொள்ள கூடாது என்பதிலும், அதற்கு மாறாக உள்ளிருந்தே போக்கை மாற்றுவதற்கும் மற்றும் அதன் மறு-சேர்க்கைக்கும் போராட வேண்டுமென்பதிலும் அவர்கள் உடன்பட்டிருந்தனர்.

ஆனால் அரசியல் வேலைகளின் திசை குறித்து பதட்டங்கள் அபிவிருத்தி அடைந்தன. ஒட்டுமொத்த பிரிவையும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கலைப்பது பற்றிய பப்லோவின் கொள்கையை பிலைப்துறு நிராகரித்த போதினும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட காரியாளர்களின் ஒரு இரகசியக் கன்னையை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அபிவிருத்தி செய்ய வேண்டியது அவசியமென கருதினார். லம்பேர், அதுபோன்ற வேலைக்கு அமைப்பு பலவீனமாக இருந்ததாக கருதியதுடன், கட்சியின் அனைத்து சக்திகளையும் தொழிற்சங்க வேலையில் ஒன்றுதிரட்ட முனைந்தார்.

இத்தகைய பதட்டங்கள் அதற்கடுத்து வரவிருந்த மாதங்களில் தீவிரமடைந்தன. டிசம்பர் இறுதியில் நடந்த ஒரு மத்திய குழு கூட்டத்தில், பிலைப்துறு அரசியல் அறிக்கை சமர்பித்தார்; தொழிற்சங்க வேலை குறித்து லம்பேர் அறிக்கை அளித்தார். என்ஜேன் இந்த எதிரெதிர் கண்ணோட்டங்களை பின்வருமாறு தொகுத்தளிக்கிறார்:

“சுயாதீனமான கட்சியின் தலையீட்டை இரகசிய கன்னையின் வேலையுடன் இணைத்து, [கம்யூனிஸ்ட் கட்சிக்குள்] இடது எதிர்ப்பாளர்களை உருவாக்குவதற்கு PCI உதவ வேண்டும் என்பதும், இந்த இடது எதிர்ப்பின் அடித்தளத்தில் புரட்சிகரக் கட்சி அபிவிருத்தி செய்யப்படும்,” என்பதும் பிலைப்துறுவின் கருத்தாக இருந்தது.

லம்பேர் இன் கருத்தின்படி, “மிகவும் பலவீனமாக இருந்த தொழிற்சங்க அமைப்புகளை, முதலாவதாக CGT யையும் அதேபோல் FO இனையும் மறுகட்டமைப்பதே புரட்சியாளர்களின் முதல் பணியாகும். செயலூக்கத்துடனான தொழிற்சங்க வேலையானது ட்ரொட்ஸ்கிஸ்டுகளை மக்களுள் ஊடுருவவும் அங்கே நிலைநிறுத்திக்கொள்ளவும் அனுமதிக்கும். அவர்களது வெற்றிகரமான முழக்கங்களின் மூலமாகவும் மற்றும் அவர்கள் முன்மொழியும் நடவடிக்கைகளை கொண்டும், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தொழிலாளர்களை நடவடிக்கைக்குள் ஒன்றுதிரட்டுவதில் வெற்றி பெற்று, படிப்படியாக தலைமை பாத்திரம் எடுப்பார்கள்,” என்றிருந்தது. [38]

இவ்விரு கண்ணோட்டங்களுமே கேடுவிளைவிக்கும் வகையில் பப்லோவாதிகளின் கண்ணோட்டங்களுக்கு நெருக்கமாக இருந்தன. அவர்கள் [பப்லோவாதிகள்], புரட்சிகரக் கட்சியானது நான்காம் அகிலத்தின் தற்போதைய காரியாளர்களில் இருந்து எழப்போவதில்லை, அதற்கு மாறாக ஸ்ராலினிச அல்லது சீர்திருத்தவாத அமைப்புகளுக்குள் உள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் தாக்கம்செலுத்தப்படும் ஒரு இடது கன்னையிலிருந்தே எழும் என்று தெரிவித்து வந்தார்கள்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்குள் (PCF) ஓர் இடது எதிர்ப்பை அபிவிருத்தி செய்வதற்கான பிலைப்துறு இன் நம்பிக்கைகள், ஆன்ந்ரே மார்ட்டி (André Marty) உடன் ஓர் கூட்டணியில் அவற்றின் தெளிவான வெளிப்பாட்டைக் கண்டது. 1919 இல் ஒடெஸ்ஸாவிற்கு அருகே ஒரு பிரெஞ்சு போர்கப்பல் விவகாரத்தில் அதிகாரிகளுக்கு கீழ்படிய மறுத்ததற்காக புகழ்பெற்றிருந்த இந்த ஸ்ராலினிச மூத்த தலைவர் [ஆன்ந்ரே மார்ட்டி], 1935 இல் இருந்து 1943 வரையில் கம்யூனிச அகிலத்தின் செயலாளராக இருந்தார் என்பதுடன், ஸ்பானிய உள்நாட்டு போரில் சர்வதேச படைப்பிரிவுகளை ஒழுங்கமைத்தவராவார். அவர் 1952 இல் அவமதிக்கப்பட்டு, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஸ்பெயினில் இடது எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மார்ட்டியின் மூர்க்கமான நடவடிக்கைகள் அவருக்கு "ஆல்பஸெட்டே இன் கொலைகாரர்" (“butcher of Albacete”) என்ற பெயரை ஈட்டியிருந்த போதினும், அவரது ஸ்ராலினிச கடந்தகாலத்தை குறித்து அவர் ஒரு உள்ளார்ந்த கணக்கைதீர்த்துக்கொண்டதற்கு அங்கே மிகச்சிறியளவே அறிகுறிகள் இருந்த நிலையிலும், பிலைப்துறு அவரை இடது எதிர்ப்பின் தலைவராக மதித்தார்.

கூடி இயங்குவதற்கு ஆர்வங்காட்டிய, ஆனால் பப்லோவாதிகளுடனும் தொடர்பில் இருந்த மார்ட்டி ஐ பிலைப்துறு தனிப்பட்டரீதியில் சந்தித்தார். PCI பெரும்பான்மை, மார்ட்டி ஐ பாதுகாக்க ஒரு பிரச்சாரம் மேற்கொண்டதுடன், அந்நோக்கத்திற்காக கம்யூனிச மறுசீரமைப்பு குழுவை (Comités de redressement communiste) உருவாக்கியது, அக்குழு ஸ்ராலினிச தலைமைக்கு எதிராக ஓர் இடது எதிர்ப்பை உருவாக்க இருந்தது. ஜனவரி 1953 இல், La Vérité மார்ட்டிக்கு பின்வருமாறு அழைப்புவிட்டது: “முன்னோக்கி செல்லுங்கள், நீங்கள் முன்னணித் தலைவராவதுடன், பின்னர் இந்நாட்டின் புரட்சிகர பாட்டாளிகளை ஒழுங்கமைப்பவர்களாகவும் ஆவீர்கள்!” [39]

சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மார்ட்டி உடன் கூட்டாக இருந்து வந்த பிலைப்துறு, அக்காலக்கட்டத்தில் PCIக்குள் கணிசமான எதிர்ப்பை எதிர்கொண்டார். “பப்லோ இல்லாத பப்லோயிசத்தை" அறிவுறுத்தியதற்காக பிலைப்துறு குற்றம்சாட்டப்பட்டதுடன், அது கணிசமான அளவிற்கு அவரது அதிகாரத்திற்கு குழிபறித்தது. மார்ச் 1953 வாக்கில், அவர் மத்திய குழுவின் சிறுபான்மையினரில் இடம்பெற்றிருந்த நிலையில், லம்பேர் PCI இன் தலைமையை ஏற்றார்.

பிலைப்துறு, ஆன்ட்ரே மார்ட்டி உடன் தொடர்பை பேணி வந்த அதேவேளையில், லம்பேர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு முன்னணி அங்கத்தவரான, தொழிற்சங்க கூட்டமைப்பு CGT இன் தலைவர் பெனுவா ஃபிரஷோன் (Benoît Frachon) மீது பெரும் எதிர்ப்பார்ப்புகளை வைத்திருந்தார்.

1951 இல் மற்றும் மீண்டும் 1953 இல், ஃபிரஷோன் அனைத்து தொழிற்சங்கங்களின் ஐக்கிய நடவடிக்கைக்கு அழைப்புவிடுத்ததுடன், அவ்விதத்தில் லம்பேர் இன் முழு ஆதரவைப் பெற்றார். ஃபிரஷோன் மற்றும் ஏனைய PCF தலைவர்களுக்கு இடையே அங்கே பதட்டங்கள் நிலவிய போதினும், அவை ஒருபோதும் ஓர் அடிப்படை குணாம்சத்தைப் பெறவில்லை. அதற்கு மாறாக, “ஐக்கிய நடவடிக்கைக்காக" CGT தரப்பினை நோக்கி திரும்பியமை, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கத்தில் இணைவதற்குரிய சாத்தியக்கூறுகளை கருத்தில்கொண்டு, அவ்விதத்தில் சீர்திருத்தவாத கட்சிகளுடன் நெருங்கிசெல்ல முனைந்து வருகிறது என்ற உண்மையுடன் பிணைந்திருந்தது.

1954 இல் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிஸ்டுகள் மற்றும் தீவிரப்போக்கு சோசலிஸ்டுகள் மற்றும் பியர் மொன்டெஸ்-பிரான்ஸ் இன் கீழ் இடது கோலிசவாதிகளின் ஒரு கூட்டரசாங்கத்திற்கு ஆதரவளித்தது. இருந்தபோதினும் PCFக்கு முரண்பட்ட விதத்தில், CGT அமைப்பு எந்திரம் பெருந்திரளான மக்களுடன் இணைந்திருந்ததாக லம்பேர் வாதிட்டார்.

ஐக்கியத்திற்கான கோரிக்கையே, PCI இன் தொழிற்சங்க வேலையின் மையத்தில் இருந்தது. 1953 இல் இருந்து, அது உள்ளூர் மட்டத்திலும் மற்றும் தேசிய மட்டத்திலும் இருந்த வெவ்வேறு தொழிற்சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்க "தொழிற்சங்கங்களின் ஐக்கிய நடவடிக்கைக்கான தேசிய மன்றம்" (“Assises nationales pour l'unité d'action syndicale.”) என்பதற்கு அழைப்புவிடுத்திருந்தது. தொழிற்சங்க வாழ்வின் அனைத்து பிரச்சினைகளையும், "தொழிற்சங்கங்களின் ஐக்கிய நடவடிக்கைக்கான தேசிய மன்றம்" என்ற முழக்கத்துடன் இணைக்குமாறு, தொழிற்சங்கங்களில் இருந்த PCI அங்கத்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொழிற்சங்க தலைவர்களை பொறுத்த வரையில், பெரிதும் விமர்சனமற்ற நிலைப்பாட்டையே PCI பேணிவந்தது. மார்ச் 1954 இல், அது ஏற்பாடு செய்த ஒரு தேசிய மாநாடு, மிக வெளிப்படையாக "ஜனநாயக ஐக்கியத்தின்" (unité dans la démocratie) மீது மையமிட்டிருந்ததே அன்றி, கட்சி வேலைத்திட்டத்தின் மீது அல்ல. இம்மாநாட்டில், தபால்துறை தொழிற்சங்கத்தின் பொது செயலரும் மற்றும் உயர்மட்ட CGT அதிகாரியுமான ஜோர்ஜ் ஃபிரிஷ்மான் கலந்து கொண்டமை ஒரு பெரும் வெற்றியாக கொண்டாடப்பட்டது. அதன்பின்னர் "மன்றத்துக்கான நிரந்தரக் குழுவிற்கு", (Comité permanent des Assises) மூன்று ட்ரொட்ஸ்கிஸ்டுகள் உள்ளடங்கிய ஒரு பிரதிநிதிகள் குழுவை CGT உட்பட பல்வேறு தொழிற்சங்க தலைமையகங்களுக்கு அனுப்பியது.

இறுதியில் லம்பேர் தனிப்பட்டரீதியில் CGT தலைவர் ஃபிரஷோன் ஐ சந்தித்தார், அத்துடன் அவரின் வலியுறுத்தலின் பேரில், லம்பேர் முன்னர் எதிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தாரோ அதே தொழிற்சங்கத்தின் ஓர் அங்கத்தவராக மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். தொழிற்சங்க ஐக்கியத்திற்கான PCI இன் பிரச்சாரம் அதிகாரத்துவத்திற்கு அச்சுறுத்தலை முன்வைக்கவில்லை என்று ஃபிரஷோன் நம்பினார்.

நவம்பர் 16, 1953 இல், அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) “பகிரங்கக் கடிதம்” ஒன்றை பிரசுரித்தது. அது பப்லோவாதிகளுடன் முறித்துக் கொண்டு அனைத்துலகக் குழுவை ஸ்தாபிப்பதற்கு அழைப்புவிடுத்தது. இது PCI ஆல் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. அவர்களின் சர்வதேச தனிமைப்பாடு இப்போது முடிவுக்கு வந்திருந்தது.

“ட்ரொட்ஸ்கிசம் வெற்றி பெறும், நான்காம் [அகிலத்தின்] கலைப்புவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் ஒரு அழைப்பு" என்ற தலைப்புடன் La Vérité வெளியானது. நவம்பர் 23 அன்று, PCI பாரீஸில் அனைத்துலகக் குழுவின் முதல் கூட்டத்தைக் கூட்டியது. அப்போது பிலைப்துறு கட்சி செயலாளராக இருக்கவில்லை என்பதால் அனைத்துலகக் குழுவில் PCI ஐ அவர் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, அந்த பாத்திரத்தை அதன் செயலாளராக ஜெரார் ப்ளொக் (Gérard Bloch) ஏற்றிருந்தார். இந்த மாற்றத்திற்கு இடையிலும், PCIக்குள் சர்ச்சைகள் குறைவின்றி தொடர்ந்து இருந்து வந்தன.

மேலதிக கருத்துவேறுபாடுகளும் ஏற்கனவே இருந்தவைகளுடன் சேர்ந்து கொண்டன. ஸ்ராலினின் மரணம் மற்றும் கிழக்கு ஜேர்மனியில் ஜூன் 1953 மேலெழுச்சி ஒடுக்கப்பட்டமை ஆகியவற்றிற்குப் பின்னர், ஸ்ராலினிச கட்சிகளை குறித்த வெவ்வேறு மதிப்பீடுகள் அபிவிருத்தி அடைந்தன. அதிகாரத்துவத்திற்குள் வெளிப்பார்வைக்கு இடதுசாரி சிந்தனை ஓட்டங்களாக இருந்தவற்றிற்கு விமர்சனபூர்வ ஆதரவு வழங்க பிலைப்துறு இன் போக்கு வாதிட்டது, அதேவேளையில் லம்பேர் மற்றும் ப்ளொக் ஐ சுற்றியிருந்த கட்சி பெரும்பான்மை இந்த நிலைப்பாட்டை நிராகரித்ததுடன், கிழக்கு பேர்லினில் நடந்ததிருந்ததைப் போன்ற தொழிலாளர்களின் ஒரு கிளர்ச்சிக்கு அழைப்புவிடுத்தது.

தேசிய விடுதலை இயக்கங்கள் குறித்தும் அங்கே கருத்துவேறுபாடுகள் இருந்தன. இதிலும், லம்பேர் பப்லோவாதிகளை போன்ற அதே விதத்தில் எவ்வித விமர்சனமும் இன்றி நிபந்தனையற்ற ஆதரவிற்கு அழைப்புவிடுத்தார், அதேவேளையில் பிலைப்துறு இன் போக்கோ சகோதரத்துவ விமர்சனத்துடன் சேர்ந்த ஆதரவைத் தெரிவித்தது.

மே 1952 இல் இருந்து, PCI அல்ஜீரிய சுதந்திர இயக்கம் MTLD (Mouvement pour le Triomphe des Libertés Démocratiques) மற்றும் MNA (Mouvement national Algérien) இன் தலைவர் மெஸ்சலி ஹாட்ஜ் (Messali Hadj) உடன் நெருக்கமான அரசியல் மற்றும் தனிப்பட்ட உறவுகளைப் பேணியது. அல்ஜீரியாவிலிருந்து ஹாட்ஜ் பொலிஸால் வெளியேற்றப்பட்ட போது, PCI அங்கத்தவர்கள் அவரது குழந்தைகளின் பராமரிப்பை ஏற்றனர். பிரான்சில் இருந்த பல அல்ஜீரிய தொழிலாளர்கள் MTLD ஐ ஆதரித்தனர் என்பதுடன், அவர்களில் சிலர் CGT தொழிற்சங்கத்திற்குள் PCI உடன் நெருக்கமாக வேலை செய்து வந்தனர். ஆனால் ஹாட்ஜ் ஒரு முதலாளித்துவ தேசியவாதியாக இருந்தார் மற்றும் தொடர்ந்தும் அவ்வாறே நீடித்திருந்தார்.

1954 இல் அல்ஜீரிய விடுதலை போர் தொடங்கியதும், லம்பேர் ஆல் சிலகாலத்திற்கு ஒரு புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சியாக ஒப்பிட்டுக்காட்டப்பட்டிருந்த MNA க்கான ஆதரவு, இன்னும் கூடுதலாக PCI இன் வேலைகளின் மையத்திற்கு நகர்ந்தது. PCI தளவாட வினியோக பணிகளை ஏற்றதுடன், சட்டவிரோத வேலைகளிலும் பங்கெடுத்தது. பிலைப்துறு போக்கு, இந்த நிலைப்பாட்டை விமர்சித்ததோடு "MTLD மற்றும் அதன் குறைபாடுகளை குறித்து ஓர் இழிவார்ந்த சந்தர்ப்பவாத மனோபாவத்தை" தலைமை எடுத்துக்காட்டுவதாக குற்றஞ்சாட்டியது. [40]

அல்ஜீரியாவில், MTLD இன் ஆயுதமேந்திய தலைமறைவான அமைப்பிற்குள் ஏற்பட்ட உடைவிலிருந்து எழுந்ததும் மற்றும் தொழிலாள வர்க்கத்தில் சில வேர்களைக் கொண்டதுமான தேசிய விடுதலை முன்னணி (Front de libération national - FLN) MNA இன் இடத்தை பிடித்துக்கொண்டது. அதற்கு ஆயுதங்கள் வினியோகித்ததுடன் சேர்ந்து, அதன் அரசியல் எதிராளிகளுக்கு எதிராக அதன் சொந்த இரக்கமற்ற நடவடிக்கைகளையும் நடாத்திய கமால் அப்தெல் நாசரின் கீழ் இருந்த எகிப்திய அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக அது தனது சக்திகளை பயன்படுத்தியது. ஹாட்ஜ் அரசியல்ரீதியில் வலதிற்கு நகர்ந்து, அதிகரித்துவந்த அவரது தனிமைப்பாட்டிற்கு எதிர்வினை காட்டினார். 1958 இன் கோடையில், அவரது ஆதரவாளர்கள் பிரெஞ்சு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதும், PCI அவருடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டது.

PCIக்குள் இருந்த கன்னைவாத பதட்டங்கள் 1954 ஆம் ஆண்டில் அதிகளவில் கசப்பாக மாறின. அனைத்துலகக் குழு, அனைத்திற்கும் மேலாக அதன் பிரிட்டிஷ் பிரிவு, அந்த பதட்டங்களை குறைப்பதற்கும் மற்றும் அவ்விரு பிரிவுகளுக்கும் இடையே சாதகமான கூட்டு-ஒத்துழைப்பிற்காகவும் செலவிட்ட உழைப்பு விரயமானது. இறுதியில் பிலைப்துறு மற்றும் அவரது இரு ஆதரவாளர்களான மிஷேல் லுக்கென் மற்றும் லூசியான் ஃபொன்ரனெல் ஆகியோர் அரசியல் குழுவின் விருப்பங்களுக்கு எதிராக ஒரு பொலிஸ் அழைப்பாணைகளுக்கு பதிலளித்தார்கள் என்ற ஓர் ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் வெளியேற்றப்பட்டார்கள். பொலிஸ் நிலையத்தில் ஒருமுறை, அப்போதைய கட்சிக் கொள்கை கோரியவாறு விளக்கம் கூறுவதற்கு அவர்கள் மறுத்திருந்தனர். ஆனால் அரசியல் பிரிவு அந்த அழைப்பாணைகளை புறக்கணிக்குமாறு கோரியிருந்தது, அந்நடவடிக்கை அவர்கள் கைது செய்யப்பட இட்டுச் சென்றிருக்கும்.

மே 21, 1955 தேதியிட்ட அறிக்கை ஒன்றில், அனைத்துலகக் குழு பிலைப்துறு, லுக்கென் மற்றும் ஃபொன்ரனெல் ஆகியோரை மீண்டும் அங்கத்தவர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அனைத்து முன்னணி கட்சி குழுக்களிலும் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டுமென்றும் கோரி, அவர்களை வெளியேற்றியதற்காக அதன் கோபத்தை வெளிப்படுத்தியது. ஆனால் இது பலனளிக்கவில்லை. PCI மத்திய குழு, அனைத்துலகக் குழுவின் கோரிக்கைகளை நிராகரித்தது.

அனைத்துலகக் குழுவின் வேலைகளில் ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே வகித்து வந்த PCI இன் மீது, லம்பேர் இன் போக்கு இப்போது மேலாளுமை கொண்டிருந்தது. 1963 இல், அமெரிக்க SWP பப்லோவாதிகளுடன் ஐக்கிய செயலகத்தில் மறுஐக்கியப்பட்ட போது, பிரெஞ்சு பிரிவு அனைத்துலகக் குழுவுடன் சேர்ந்திருந்தது. ஆனால், மறுஐக்கியத்திற்கு எதிரான அனைத்து முக்கிய ஆவணங்களும் பிரிட்டிஷ் பிரிவால் எழுதப்பட்டன.

பிரான்சில், PCI தன்னைத்தானே தொழிற்சாலைகளுக்குள் வேலை செய்ய அர்பணித்திருந்தது, அங்கே அது பல ஆண்டுகள் சந்தர்ப்பவாத Voix Ouvrière (தொழிலாளர் குரல்) உடன் ஒரு வசதியான தொழிற்பங்கீட்டை பேணி வந்தது. இது, அனைத்துலகக் குழுவின் மூன்றாம் உலக மாநாட்டில் எழுந்த மோதலைத் தொடர்ந்து, 1966 இல் மட்டுமே முடிவுக்கு வந்தது. 1959 இல் இருந்து, அவ்விரு அமைப்புகளும் கூட்டாக துண்டுப்பிரசுரங்களை தயாரித்ததுடன், தொழிற்சாலைகளுக்கு வெளியே அவற்றை கூட்டாக வினியோகித்தன. ஒரு காரை சொந்தமாக வைத்திருந்த ஒரு மருந்து விற்பகரான VO இன் தலைவர் ஹார்டி (Hardy), பெரும்பாலும் லம்பேர் ஐ அவர்களின் கூட்டு பயணத்தின் போது உடனழைத்து சென்றார்.

வெளியேற்றப்பட்டதன் பின்னர், பிலைப்துறுவும் லுக்கென்னும் மேலும் வலதிற்கு நகர்ந்தனர். அவர்கள் புதிய இடதில் (Nouvelle Gauche) இணைந்ததுடன், அங்கே அவர்கள் அவர்களின் சொந்த போக்கை அபிவிருத்தி செய்தனர். ஒரு இடதுசாரி குடை இயக்கமான, பின்னர் பல அரசு தலைவர்களும் மற்றும் மந்திரிகளும் அதில் இணையவிருந்த ஒன்றான Partie socialiste unifié (PSU) ஐ ஸ்தாபிப்பதில் அவர்கள் பங்கெடுத்தனர். 1968 இல், மிஷேல் ரொக்காவின் தலைமையின் கீழ் PSU, UNEF மாணவர் கூட்டமைப்பை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது.

சில காலம் PSU இன் அரசியல் குழு அங்கத்தவராக இருந்த பிலைப்துறு, 1964 இல் அவர் வெளியேறும் வரையில் பொதுச் செயலராகவும் சேவை செய்தார். அதன்பின்னர் அவர், வியட்நாமிற்கு சமாதானம், குழந்தை வறுமைக்கு எதிராக மற்றும் 1990களில், ஈராக் தடையாணைகளுக்கு எதிரான என எண்ணிறைந்த முன்னெடுப்புகளில் ஈடுபட்டார். லுக்கென் தேசியவாத ஆட்சியை ஆதரிக்க 1963 இல் அல்ஜீரியாவிற்கு சென்றார், அங்கே அவர் பப்லோவாதிகளுடன் இணைந்ததுடன், ஐக்கிய செயலகத்தின் ஓர் அங்கத்தவரானார். 1974 இல் இருந்து 1995 வரையில், அவர் Libération நாளிதழில் பணியாற்றினார். லுக்கென் 2006 இல் மரணமடைந்தார்.

1968 இல் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட OCI இன் மத்தியவாதம், ஒரு நீண்ட முன்-வரலாற்றை கொண்டிருந்தது. இறுதி பகுப்பாய்வுகளில், பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தை பிரெஞ்சுப் பிரிவு கைவிட்டதன் விளைபொருளாக அது இருந்தது.

முற்றும்

குறிப்புகள்:

36. Jean Hentzgen, “Agir au sein de la classe. Les trotskystes français majoritaires de 1952 à 1955,” Université de Paris I, Septembre 2006.
37. “‘Where is Pablo Going?’ by Bleibtreu (Favre), June 1951” in Trotskyism versus Revisionism, vol. 1, London, 1974
38. Hentzgen, op.cit., p. 57
39. quoted in ibid. p. 60
40. quoted in ibid. p. 148