ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

CEYLON AND THE FRUITS OF REUNIFICATION

இலங்கையும் “மறுஐக்கியத்தின்” பலாபலன்களும்

Statement  by  the  International  committee  of  the Fourth  International,
July 5,  1964
 

ஏனைய காலனித்துவ மற்றும் அரைக்காலனித்துவ நாடுகளில் இருப்பதை போலவே உள்நாட்டு "தேசிய" தலைவர்களின் மூலம்தான் ஏகாதிபத்தியம் தன்னுடைய பிடியை இலங்கையில் தக்கவைத்துக் கொள்ள முடியும். இலங்கையில் உள்நாட்டு முதலாளித்துவக் கட்சிகள் தனித்து ஆள முடியவில்லை; பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் விசாயிகளுடனான கூட்டில் தொழிலாள வர்க்கத்தின் அதிகாரம் பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளது; ஏனெனில் இப்போது வரைக்கும் நான்காம் அகிலத்தில் அங்கத்துவம் வகிப்பதாக கூறிவந்த ஒரு தொழிலாளர் கட்சியான லங்கா சம சமாஜக் கட்சி (LSSP), தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், முதலாளித்துவ பண்டாரநாயக்க அரசாங்கத்தின் கூட்டணியில் நுழைந்துள்ளமையினாலேயே முதலாளித்துவ ஆட்சி இன்னும் நிலைத்திருக்ககூடியதாக உள்ளது.

நான்காம் அகிலத்தினதும் ட்ரொட்ஸ்கிசத்தினதும் வேலைத்திட்டம் LSSP இன் பெரும்பான்மையினரால் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது. இதன் தலைவர்கள் ஏகாதிபத்தியத்தின் பக்கத்திற்கு ஓடிவிட்டனர். அனைத்துலகக் குழு அவர்களை துரோகிகள் என்றும் தொழிலாள வர்க்கத்தின் எதிரிகள் என்றும் கண்டிக்கிறது. புதிய, லங்கா சம சமாஜக் கட்சி புரட்சிகர பிரிவை (LSSP-R) அமைக்கும் சிறுபான்மையினரின் முடிவை அனைத்துலகக் குழு வரவேற்கிறது.

நான்காம் அகிலத்தில் பிளவு ஏற்பட்டதில் இருந்து —அதற்கு பின்னர்தான் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது— சமீப காலம் வரை LSSP பப்லோவின் தலைமையிலான சர்வதேச செயலகத்துடன்தான் இணைந்திருந்தது. சர்வதேச செயலகம், LSSP ஐ "உலகின் ஒரே உண்மையான வெகுஜன ட்ரொட்ஸ்கிச கட்சி என்றெல்லாம்" புகழ்ந்திருந்தும், LSSP யின் சந்தர்ப்பவாத பாராளுமன்ற சீரழிவு, நான்காம் அகிலத்துடன் அகிலத்தைப் பகிரங்கமாக பின்பற்றிக் கொண்டிருந்ததன் பின்னணியில்தான் நிகழ்ந்தது.

சுயாதீனமான மார்க்சிச கட்சிகள் கட்டியமைக்கப்பட வேண்டும் என்ற முன்னோக்கை கைவிடலைத்தான் பப்லோவாதம் அடிப்படையாய் கொண்டுள்ளது; அதற்கு பதிலாக, இது குட்டி முதலாளித்துவ திருத்தல்வாதிகளின் தவிர்க்கமுடியாத "இடது" நோக்கிய போக்கிலும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலும் தங்கியுள்ளது. இதுதான் என்.எம். பெரேரா மற்றும் LSSP தலைவர்களின் அடிபணிவிற்கு 'தத்துவார்த்த', அரசியல் மூடுதிரையாக அமைகின்றது.

LSSP கூட்டணியில் நுழைந்த பின்னர், பப்லோவாத திருத்தல்வாதிகளின் ஐக்கிய செயலகம், மூன்று மந்திரிகளான பெரேரா, அனில் முனசிங்க, சோல்மொன்டெலி குணவர்த்தனவை வெளியேற்றியதோடு கூட்டணிக்கு வாக்களித்ததற்காக 504 பேராளர்களையும் இடைநீக்கம் செய்தது. இது சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் பப்பலோவாதிகளதும் மற்றவர்களினதும் மறு ஐக்கியத்தினால் இலங்கையில் உருவாகிய பலாபலனாகும். பப்லோவும் நிறைவேற்று குழுவிலுள்ள அவரது ஆதரவாளர்களும் ஐக்கிய செயலகத்திலிருந்து ஒரு சில வாரங்களுக்கு முன்னர்தான் இடைநிறுத்தம் செய்யப்பட்டனர். நான்காம் அகிலத்தின் பப்லோவாத பிரிவின் ஐரோப்பிய கிளைகளுள், புதிய பிளவு அங்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. பப்லோவை இடைநீக்கம் செய்த பிராங்கும் ஜேர்மைனும் 'இடது' சமூக ஜனநாயகக் கட்சியினுள்ளும் திருத்தல்வாத இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியினுள்ளும் அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த ஒரு கட்டமைப்பு சீர்திருத்தவாத வேலைத்திட்டத்தை நோக்கி பகிரங்கமாக சென்றுகொண்டிருந்தனர்.

பப்லோவும் அவருடைய நெருங்கிய சிறு குழுவினரும் வெளிப்படையாக குருஷ்சேவிற்கு நிபந்தனையற்று அடிபணிந்திருக்கையில் பிராங்கும் ஜேர்மைனும் மேற்கு ஐரோப்பிய சமூக ஜனநாயகத்தின் மத்தியவாதப் போக்குகள் மற்றும் ஸ்ராலினிச கட்சிகளுடன் அழைக்கப்படாமலேயே பின்தொடர்கின்றனர். இரண்டு குழுக்களுக்கும் இடையில் திருத்தல்வாத வழிமுறையில் அடிப்படை வேறுபாடு எதுவும் இல்லை. அவர்கள் இருவரும் ஸ்ராலினிசத்தினதும் சமூக ஜனநாயகத்தினதும் ஊழல்மிக்க அதிகாரத்துவத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு சேவை செய்கின்றனர்.

பப்லோவாத சர்வதேச செயலகத்தையும் (International Secretariat) அனைத்துலகக் குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரையும் கொண்டு, ஜூலை 1963 இல் அமெரிக்காவின் சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) ஆதரவுடன் ஐக்கிய செயலகத்தை (Unified Secretariat) அமைத்தபோது, இந்த ஒருங்கிணைப்பை அனைத்துலகக் குழு எதிர்த்தது. இது அரசியல் கலந்துரையாடல் இல்லாத ஒருங்கிணைப்பு, இங்கே உடன்பாடு என்பது கொள்கையற்ற தன்மை என்று நாங்கள் வலியுறுத்தினோம்; உண்மையில் அத்தகைய கொள்கையற்ற தன்மை வருங்காலத்தில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தி வலுவிழக்கச் செய்யுமேயன்றி ட்ரொட்கிச இயக்கத்தை பலப்படுத்தாது என்றும் கூறினோம்.

கலந்துரையாடல் இல்லாத ஒருங்கிணைப்பு செயல்முறை என்ற வழிவகை மார்க்சிசத்தின் பப்லோவாத திருத்தல்வாதத்தில் இருந்தும் மற்றும் புரட்சிகரக் கட்சிகளை கட்டியமைப்பதை கைவிட்டதில் இருந்தும் இயல்பாக வந்த நிகழ்வாகும். பப்லோ இடைநிறுத்தம் செய்யப்பட்டதுடன் சேர்ந்து, இந்த ஒருங்கிணைப்பு நிகழ்ந்து ஓராண்டிற்குள் இலங்கையில் நடந்த காட்டிக்கொடுப்பு, எமது நிலைப்பாட்டை முற்றுமுழுதாக உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் அனுமதிக்கப்படவில்லை. LSSP அல்லது வேறு எந்த பிரிவைப் பற்றிய விமர்சனமும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஐக்கியத்திற்கு தடையாக இருக்கும் என காரணம் கூறப்பட்டு தடுக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு பப்லோவாதமானது நனவுபூர்வமாகவும் நேரடியாகவும் பெரேரா மற்றும் LSSP பெரும்பான்மையின் காட்டிக்கொடுப்புக்களுக்கு தயார் செய்தது. ட்ரொட்ஸ்கிசத்தின் பெயரால் தொழிலாள வர்க்கத்தின் தோல்வி ஒழுங்கமைக்கப்பட்டது.

ஐக்கிய இடது முன்னணியில் (United Left Front) உள்ள கம்யூனிஸ்ட் கட்சி (CP) மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) இன் வர்க்கக் கூட்டுழைப்பு பாத்திரத்தின் அடிப்படையில் LSSP மாநாட்டில் ‘நடுநிலை’ குழு தீர்மானத்தை முன்மொழிகையில், ஐக்கிய செயலகம் உண்மையில் தோல்விக்குத்தான் தயார் செய்துகொண்டிருந்தது. துரோகி பெரேராவைப் போலவே அதே கட்சியில் தொடர்ந்து இருந்தாலும் டி சில்வா மற்றும் லெஸ்லி குணவர்த்தனவின் நடுநிலைக் குழுவை (centre group) அவர்கள் இப்பொழுதும்கூட வெளியேற்றவில்லை.

LSSP புரட்சிகரப் பிரிவு, அவசியமான முதல் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது  சந்தர்ப்பவாதிகளுடன் முழுமையாக முறித்துக் கொண்டுள்ளது. நகர்ப்புற மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களில் வேர்களைக் கொண்டு, ஒரு புரட்சிகர கட்சியை கட்டியமைப்பதற்கு ஒரு பாதையை கட்டாயம் கண்டுகொள்ளவேண்டும். அது பாராளுமன்ற கௌரவங்களுக்காக என்றில்லாமல், புரட்சிகரமான வகையில் முதலாளித்துவ அரசாங்கத்தைத் தூக்கிவீசுவதற்காக என்றிருக்க வேண்டும்.

லங்கா சம சமாஜக் கட்சி உறுப்பினர்கள் பண்டாரநாயக்காவின் கூட்டணிக்குள் நுழைந்துகொண்டதானது நான்காம் அகிலத்தின் பரிமாணத்தின் ஒரு முழு சகாப்தம் முடிவுக்கு வந்ததைக் குறிக்கின்றது. தொழிலாள வர்க்கத்தை தோல்வியடையச் செய்வதற்கு தயாரிப்பு செய்ததில் அது நேரடியாக ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்ததன் மூலம், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் திருத்தல்வாதம் அதன் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. நான்காம் அகிலத்தை மறுகட்டமைக்கும் பணி, ஒவ்வொரு நாட்டிலும் ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்துவ, சந்தரப்பவாத சேவகர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு வழங்கி,  ட்ரொட்ஸ்கிசத்தினதும் நான்காம் அகிலத்தினதும் பெயரை அபகரிக்க முற்பட்டுள்ள திருத்தல்வாதிகளுக்கும் எதிரான போராட்டத்தில், புரட்சிகரப் பாட்டாளி வர்க்க கட்சிகளை உருவாக்கவேண்டும் என்ற உறுதியான அடித்தளத்தில் இருக்க வேண்டும்.