ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Why Study the Russian Revolution?

ரஷ்ய புரட்சியை ஏன் கற்க வேண்டும்?

By David North
11 March 2017

1917 ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு நினைவாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் வழங்கப்படும் ஐந்து உரைகளில் இது முதலாவதாகும். இந்த உரையின் தலைப்பு “ரஷ்ய புரட்சியை ஏன் கற்க வேண்டும்?” என்பதாகும். இந்த கேள்விக்கான பதிலை முடிவுவரை காக்க வைக்காமல் இந்த உரையின் ஆரம்பத்திலேயே நான் கூறி விட இருக்கிறேன்.

ரஷ்ய புரட்சியை ஏன் கற்க வேண்டும் என்பதற்கான பத்து காரணங்கள்

முதலாவது காரணம்: ரஷ்ய புரட்சியானது இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான, விளைவுகரமான மற்றும் முற்போக்கான அரசியல் நிகழ்வாகும். சோவியத் ஒன்றியம் இறுதியில் துன்பியலான தலையெழுத்தை கொண்டிருந்த போதிலும் —ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புகள் மற்றும் குற்றங்களால் அது அழிக்கப்பட்டது— கடந்த நூறாண்டின் வேறெந்வொரு நிகழ்வும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்த நூறு மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் இத்தகையதொரு தொலைகால பாதிப்பைக் கொண்டிருந்ததாய் இல்லை.

இரண்டாவது காரணம்: 1917 அக்டோபரில் போல்ஷிவிக் கட்சியால் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படுவதில் உச்சமடைந்ததான ரஷ்ய புரட்சியானது உலக வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தை குறித்ததாக இருந்தது. முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் தூக்கிவீசப்பட்டமையானது, முதலாளித்துவத்திற்கான மாற்று என்பது ஒரு கற்பனாவாத கனவு அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் நனவான அரசியல் போராட்டத்தினால் சாதிக்கத்தக்க ஒரு உண்மையான சாத்தியமாகும் என்பதை நிரூபணம் செய்தது.

மூன்றாவது காரணம்: அக்டோபர் புரட்சியானது, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சும் ஏங்கெல்சும் வகுத்தளித்திருந்த வரலாற்றின் சடவாதக் கருத்தாக்கத்தை, நடைமுறையில் ஊர்ஜிதப்படுத்தியது. போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் கீழ் சோவியத் அதிகாரம் ஸ்தாபிக்கப்பட்டமையானது, “வர்க்கப் போராட்டமானது அத்தியாவசியமாய் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது...”[1] என்ற மார்க்சின் வரலாற்றுத் தத்துவத்தில் இருந்த ஒரு அத்தியாவசியமான கூற்றினை நிரூபணம் செய்தது.

நான்காவது காரணம்: ரஷ்ய புரட்சியின் புறநிலை அபிவிருத்தியானது லியோன் ட்ரொட்ஸ்கியால் முதன்முதலில் 1906 மற்றும் 1907 இல் முன்வைக்கப்பட்ட, நிரந்தர புரட்சி என அறியப்பட்ட, மூலோபாய முன்னோக்கினை ஊர்ஜிதப்படுத்தியது. ரஷ்யாவில் ஜாரிச எதேச்சாதிகாரத்தை தூக்கி வீசுவது, அரை-பிரபுத்துவ பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளின் அத்தனை சுவடுகளையும் அழிப்பது, தேசிய ஒடுக்குமுறையை ஒழிப்பது ஆகியவை கொண்ட ஜனநாயகப் புரட்சியானது, அரசு அதிகாரம் தொழிலாள வர்க்கத்தால் வெற்றிகாணப்படுவதன் மூலம் மட்டுமே சாதிக்கப்பட முடியும் என்பதை ட்ரொட்ஸ்கி முன்கணித்தார். முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் முன்னணிப் பாத்திரத்தை வகிப்பதாக அமைகின்ற ஜனநாயகப் புரட்சியானது துரிதமாக ஒரு சோசலிசப் புரட்சியாக அபிவிருத்தியடையும் என்றார்.

ஐந்தாவது காரணம்: 1917 அக்டோபரில் போல்ஷிவிக் கட்சியால் அதிகாரம் கைப்பற்றப்பட்டமையும் முதலாவது தொழிலாளர் அரசு ஸ்தாபிக்கப்பட்டமையும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட பரந்த மக்களின் வர்க்க நனவிலும் அரசியல் விழிப்பிலும் ஒரு தீவிரமான வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஏகாதிபத்தியத்தால் ஸ்தாபிக்கப்பட்டிருந்த பழைய காலனித்துவ ஆட்சி முறை முடிவுக்கு வரத் தொடங்குவதை ரஷ்ய புரட்சி குறித்து நின்றது. அது சர்வதேச தொழிலாள வர்க்கத்தை தீவிரப்படுத்தியதோடு ஒடுக்கப்பட்ட பரந்தமக்களின் ஒரு உலகளாவிய புரட்சிகர இயக்கத்தை இயங்குநிலையில் வைத்திருந்தது. 1930களில் அமெரிக்காவில் தொழிற்சாலை தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டமை, இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனி தோற்கடிக்கப்பட்டமை, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் சமூக நல உதவிக் கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டமை மற்றும் காலனித்துவத்தில் இருந்து விடுபடும் நிகழ்முறை ஆகியவை உள்ளிட சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் வெற்றிகாணப்பட்ட பிரதான சமூக தேட்டங்கள் ரஷ்ய புரட்சியின் உப-விளைபொருட்களாய் இருந்தன.

ஆறாவது  காரணம்: புரட்சிகர மூலோபாயத்திற்கும் அதிகாரத்திற்கான நடைமுறைப் போராட்டத்திற்குமான அடிப்படை அடித்தளமாக சோசலிச சர்வதேசியவாதம் இருந்தது என்பதை, போல்ஷிவிக் கட்சியானது, ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான அதன் போராட்டத்தில், தத்துவரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் நிரூபணம் செய்தது. முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய முரண்பாடுகளில் இருந்து தோற்றம் கண்டதாய் இருந்த ரஷ்ய புரட்சியானது உலக சோசலிசப் புரட்சியின் வளர்ச்சியை சார்ந்ததாய் இருந்தது. ட்ரொட்ஸ்கி விளக்கியவாறாக:

சோசலிசப் புரட்சியை தேசிய எல்லைகளுக்குள்ளாக பூர்த்தி செய்வதென்பது கற்பனை செய்து பார்க்கவும் முடியாததாகும். முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகள் தேசிய அரசின் கட்டமைப்புக்குள்ளாக இனியும் இணங்கி நடக்கத்தக்கதாக இல்லை என்ற உண்மை முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடிக்கான அடிப்படை காரணங்களில் ஒன்றாய் இருக்கிறது. இதிலிருந்து தான், ஒருபக்கத்தில், ஏகாதிபத்திய போர்களும், இன்னொரு பக்கத்தில் முதலாளித்துவ ஐரோப்பிய ஐக்கிய அரசுகள் என்னும் கற்பனாவாதமும் பிறக்கின்றன. சோசலிசப் புரட்சியானது தேசிய அரங்கில் தொடங்குகிறது, சர்வதேச அரங்கில் கட்டவிழ்கிறது, உலக அரங்கில் பூர்த்தியடைகிறது. இவ்வாறாக, சோசலிச புரட்சியானது நிரந்தரப் புரட்சியாக -அந்த வார்த்தையின் ஒரு புதிய மற்றும் இன்னும் பரந்தவொரு அர்த்தத்தில்- ஆகிறது: நமது ஒட்டுமொத்த கோளத்திலும் புதிய சமூகம் இறுதிவெற்றி காண்பதில்தான் அது பூர்த்தியடைகிறது. [2]

இந்த வார்த்தைகள் 88 ஆண்டுகளுக்கு முன்பாய் எழுதப்பட்டவை என்பதை நம்புவது கடினமாய் இருக்கிறது. சர்வதேச புவியரசியல் பதட்டங்கள் பெருகியிருப்பதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தை குழப்பங்கள் சூழ்ந்திருப்பதற்கும் மத்தியில், “ஏகாதிபத்திய போர்கள்” மற்றும் “ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் குறித்த கற்பனாவாதம்” ஆகியவை குறித்த ட்ரொட்ஸ்கியின் குறிப்புகள் லு மொண்ட் அல்லது ஃபைனான்சியல் டைம்ஸின் இன்றைய பதிப்பில் இணையத்தில் பதிவிடப்பட்டதாகவே யாரும் நம்பக்கூடும். ட்ரொட்ஸ்கியின் அவதானிப்பின் பொருத்தமும் பசுமையும் தாக்குப்பிடித்து நிற்கிறது என்பது இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களில் அவர் கையாண்ட வரலாற்றுப் பிரச்சினைகள் இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களிலும் தீர்க்கப்படாமலேயே தான் தொடர்கிறது என்ற உண்மைக்கு சாட்சியமளிக்கிறது.

ஏழாவது காரணம்: விஞ்ஞானபூர்வ சமூக சிந்தனையின் வளர்ச்சியில் ஒரு இன்றியமையாத அத்தியாயமாக ரஷ்ய புரட்சி ஒரு கவனமான ஆய்வைக் கோருகிறது. 1917 இல் போல்ஷிவிக்குகளின் வரலாற்று சாதனையானது விஞ்ஞானபூர்வ சடவாத மெய்யியலுக்கும் புரட்சிகர நடைமுறைக்கும் இடையிலான அத்தியாவசியமான உறவை எடுத்துக்காட்டியிருந்தது, நடைமுறைப்படுத்திக் காட்டியிருந்தது.

"புரட்சிகர தத்துவம் இல்லாமல் புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது” என்றஎன்ன செய்ய வேண்டும்?” என்ற நூலில் லெனின் கூறியிருந்த வசனத்தை போல்ஷிவிக் கட்சியின் பரிணாமவளர்ச்சி நிரூபணம் செய்தது. லெனின் தொடர்ச்சியாக வலியுறுத்தியதைப் போல, செவ்வியல் ஜேர்மன் கருத்துவாதத்தின், பிரதானமாக ஹேகலின் கருத்துவாதத்தின் (அதாவது இயங்கியல் தர்க்கம் மற்றும் புறநிலை யதார்த்தத்தின் அறிகையில் வரலாற்றுரீதியாக பரிணமிக்கும் சமூக நடைமுறை வகிக்கின்ற செயலூக்கமான பாத்திரத்தின் அங்கீகரிப்பு) உண்மையான சாதனைகளை உள்வாங்கிக் கொண்டு அதில் விமர்சனரீதியான மறுவேலைகளை செய்திருந்த மெய்யியல் சடவாத்தின் மிக உயர்ந்த வளர்ச்சி பெற்ற வடிவமே மார்க்சிசமாகும்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் (1895 இல் இருந்து 1922 வரை) நீண்ட ஒரு காலகட்டத்தில் வெளியான படைப்புகளில் பதிவு செய்யப்பட்டவாறாக, மெய்யியல் சடவாதம் மற்றும் வரலாற்றின் சடவாதக் கருத்தாக்கம் ஆகியவற்றை லெனின் தளர்ச்சியற்று பாதுகாத்தமையானது, “பொருளாதாரப் பரிணமிப்பின் (சமூக வாழ்வின் பரிணாம வளர்ச்சி) இந்த புறநிலை தர்க்கத்தை, அதன் பொதுவான மற்றும் அடிப்படையான அம்சங்களுடன், புரிந்து கொள்வது மனிதகுலத்தின் மிக உயர்ந்த பணியாக இருக்கிறது; அப்போதுதான் அதற்குத் தக்கபடி ஒருவரது சமூக நனவையும் மற்றும் அத்தனை முதலாளித்துவ நாடுகளது முன்னேறிய வர்க்கங்களது நனவையும் முடிந்த அளவு திட்டவட்டமான, தெளிவான மற்றும் விமர்சனபூர்வமான ஒரு வகையில் தகவமைத்துக் கொள்ள முடியும்” [4] என்ற அவரது ஆழ்ந்த புத்திஜீவித்தன உறுதியை வெளிப்படுத்தியது. 1917 அக்டோபரில் தொழிலாள வர்க்கத்தினால் அதிகாரம் கைப்பற்றப்பட்டமையானது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கையில் வெளிப்பட்டவாறாக, “பொருளாதாரப் பரிணாம வளர்ச்சியின் புறநிலை தர்க்கத்திற்கு” தக்கபடி மனிதகுலம் தன் நனவை தகவமைத்துக் கொண்டிருந்த வரலாற்றின் மிக உச்சப்புள்ளியாக -இது இன்னும் கூட விஞ்சப்பட்டிருக்கவில்லை- இருந்தது.

எட்டாவது காரணம்: ஒரு அரசியல் போக்காக போல்ஷிவிசம் அபிவிருத்தி செய்யப்பட்டமையும் 1917 இன் கொந்தளிப்பான நிகழ்வுகளில் அது வகித்த அசாதாரணமான பாத்திரமும், சந்தர்ப்பவாதம் மற்றும் அதன் அரசியல் உறவான மத்தியவாதத்திற்கு எதிராய் மார்க்சிஸ்டுகள் நடத்திய போராட்டத்தின் அத்தியாவசியமான முக்கியத்துவத்தை நிரூபணம் செய்தது. ரஷ்யாவில் மென்ஷிவிசத்தின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக லெனின் நடத்திய போராட்டமும், 1914 இல் ஏகாதிபத்தியப் போரின் வெடிப்பைத் தொடர்ந்து சோசலிச சர்வதேசிய வாதத்தை இரண்டாம் அகிலம் காட்டிக் கொடுத்ததற்கு எதிரான அவரது போராட்டமும், 1917 இல் அதிகாரத்திற்கான போராட்டத்திற்குத் தலைமை கொடுத்த கட்சியின் அரசியல் அடையாளத்திற்கு உருக்கொடுத்தது.

வரலாற்றின் சடவாத கருத்தாக்கத்தை செயலுறுத்தி, அரசியல் போக்குகளின் மோதலில் வெளிப்பாட்டைக் கண்ட சமூக மற்றும் பொருளாதார நலன்களை வெளிக்கொண்டுவருவதற்கு லெனின் முனைந்தார். இந்த அடிப்படையில், லெனின், சந்தர்ப்பவாதம் என்பது -குறிப்பாக இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதம்- தொழிலாள வர்க்கத்தின் ஒரு சலுகையுடைய அடுக்கு மற்றும் ஏகாதிபத்தியத்துடன் இணைந்துநிற்கும் நடுத்தர வர்க்கப் பிரிவுகளது சடவாத நலன்களின் வெளிப்பாடாக இருப்பதை அடையாளம் கண்டார்.

ஒன்பதாவது காரணம்: ஒரு உண்மையான புரட்சிகரக் கட்சி என்பது எவ்வாறிருக்கும், சோசலிசப் புரட்சியின் வெற்றியை ஈட்டுவதில் அத்தகையதொரு கட்சியின் பிரதியிட முடியாத பாத்திரம் என்ன என்பதற்கான ஒரு உதாரணத்தை போல்ஷிவிக்குகள் தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கியிருந்தனர். 1917 இன் புரட்சிகர நிகழ்வுப்போக்கை கவனமாக ஆய்வு செய்தால், லெனினையும் ட்ரொட்ஸ்கியையும் தலைமையில் கொண்டிருந்த போல்ஷ்விக் கட்சியின் பிரசன்னமானது, சோசலிசப் புரட்சியின் வெற்றியை ஈட்டுவதில் தீர்மானகரமானதாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் இயக்கமானது, விவசாயிகளின் ஒரு புரட்சிகர எழுச்சியால் ஆதரவளிக்கப்பட்டு, 1917 இல் பிரம்மாண்டமான பரிமாணங்களைப் பெற்றது. ஆயினும் போல்ஷிவிக் கட்சியால் வழங்கப்பட்ட தலைமை இன்றி தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வந்திருக்க முடியும் என்ற ஒரு முடிவுக்கு அந்த ஆண்டின் நிகழ்வுகள் குறித்த எந்த யதார்த்தமான வாசிப்பும் அனுமதிப்பதில்லை. இந்த அனுபவத்தின் அடிப்படையான பாடத்தை வகுத்த ட்ரொட்ஸ்கி பின்னர் வலியுறுத்தினார்: “ஒரு புரட்சிகர சகாப்தத்தில் [தொழிலாள வர்க்க] தலைமையின் பாத்திரமும் பொறுப்பும் வானளாவியதாகும்”.[5] இந்த முடிவானது 1917 இல் போலவே நடப்பு வரலாற்று நிலைமைக்கும் மிகவும் பொருத்தமானதாகவே உள்ளது.

பத்தாவது காரணம்: 1917 ஆம் ஆண்டின் பிப்ரவரி/மார்ச்சுக்கும் அக்டோபர்/நவம்பருக்கும் இடையிலான நிகழ்வுகளின் பாதை வெறுமனே வரலாற்று ஆர்வத்திற்கு மட்டுமே உரியவை அன்று. அந்த முக்கிய மாதங்களின் அனுபவமானது ஒரு புதிய மற்றும் தவிர்க்கவியலாத புரட்சிகர போராட்டத்தின் எழுச்சியின்போது தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளக் கூடிய மூலோபாய மற்றும் தந்திரோபாய பிரச்சினைகளின் ஒரு மதிப்புமிக்க மற்றும் நின்றுநிலைக்கும் உட்பார்வையை வழங்குகிறது. ட்ரொட்ஸ்கி 1924 இல் எழுதியதைப் போல, “பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான நியதிகள் மற்றும் வழிமுறைகளை பொறுத்தவரை, இன்று வரையிலும், அக்டோபர் அனுபவத்தைக் காட்டிலும் முக்கியமான மற்றும் ஆழமான ஆதாரவளம் ஏதுமில்லை.” [6]

போல்ஷிவிசத்தின் வேலைத்திட்டத்திற்கும் கோட்பாடுகளுக்கும் எதிரான ஒரு பிற்போக்குத்தனமான மற்றும் மார்க்சிச-விரோத தேசியவாத அதிகாரத்துவ எதிர்வினையான ஸ்ராலினிசத்தின் குற்றங்களானவை, அக்டோபர் புரட்சியையும் மற்றும் சோவியத் அரசால் அதன் 74 ஆண்டு கால இருப்பின் சமயத்தில் சாதிக்கப்பட்ட சாதனைகளையும் செல்தகைமை இழக்கச் செய்துவிடவில்லை. முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய நெருக்கடியின் இந்த புதிய காலகட்டத்தில், ரஷ்ய புரட்சி குறித்த ஒரு புதுப்பிக்கப்பட்ட ஆய்வும் அதன் படிப்பினைகளை உள்வாங்குதலும் நடப்பு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முட்டுச்சந்தில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு வழிகாணுவதற்குரிய தப்பிக்கவியலாத முன்நிபந்தனையாகும்.

முதலாம் உலகப் போரின் பேரழிவு:

இது ஐந்து உரைகளில் முதலாவது. அடுத்த இரண்டு மாத காலத்தில், இந்த உரைகள் விரிந்து, ரஷ்ய புரட்சி குறித்த ஒரு கவனமான ஆய்வுக்காய் நான் கொடுத்திருக்கக் கூடிய காரணங்களின் செல்தகைமையை நிரூபணம் செய்யும் என நான் நம்புகிறேன்.

நூறாண்டுகளுக்கு முன்பு சரியாக இதே வாரத்தில், 1917 மார்ச் 8 அன்று, ரஷ்ய பேரரரசின் தலைநகரான பெட்ரோகிராடில், சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமான கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. அந்த சமயத்தில், கிட்டத்தட்ட மற்ற எல்லா இடங்களிலுமே கிரிகோரியன் நாள்காட்டி பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதற்கு 13 நாட்கள் பின்தங்குவதாய் இருந்த ஜூலியன் நாள்காட்டிமுறையையே ரஷ்யா இன்னும் பின்பற்றி வந்ததால், அதன்படி பெட்ரோகிராடில் இந்த நிகழ்வு நடந்த நாள் 1917 பிப்ரவரி 23. (இந்த உரை முழுவதிலுமே, ரஷ்யாவிற்குள் நிகழ்ந்தேறிய நிகழ்வுகளைக் குறிப்பிடும்போது, அங்கு அப்போதிருந்த நாள்காட்டிமுறையின் படியான தேதியையே குறிப்பிடவிருக்கிறேன்.)

இந்த போராட்டங்கள் தொடங்கிய சமயத்திற்குள்ளாக, ஐரோப்பாவின் பெரும் சக்திகள் -ஜேர்மனியும் ஆஸ்திரிய-ஹங்கேரியும் ஒரு புறமும் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ரஷ்யா மறுபுறமும்- இரண்டு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்களாய் போரில் ஈடுபட்டு வந்திருந்தன.

1914 ஆகஸ்டுக்கும் 1917 மார்ச் தொடக்கத்திற்கும் இடையில், போரில் ஈடுபட்டிருந்த அத்தனை நாட்டு அரசாங்கங்களுமே —அவை நாடாளுமன்றங்களால் ஆளப்பட்டிருந்தாலும் அல்லது முடியாட்சிகளால் ஆளப்பட்டிருந்தாலும்— மனித வாழ்வை குற்றவியல்தனமான அலட்சியத்துடன் செலவிட்டிருந்தன. 1916 ஆம் ஆண்டின் போது, ஐரோப்பாவின் யுத்தக்களங்கள் இரத்த ஆற்றில் மூழ்கியிருந்தன. 1916 பிப்ரவரி 21 முதல் டிசம்பர் 18 வரை 301 நாட்கள் நடந்த வேர்டன் யுத்தம் கிட்டத்தட்ட 715,000 பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் உயிச்சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இது கிட்டத்தட்ட மாதத்திற்கு 70,000 உயிர்ச்சேதங்களாகும். வேர்டனில் கொல்லப்பட்ட மொத்த படைவீரர் எண்ணிக்கை 300,000 ஆக இருந்தது.

அதேசமயத்தில், இன்னுமொரு படுபயங்கர யுத்தம் பிரான்சில் சோம் நதியின் அருகாமையில் போரிடப்பட்டுக் கொண்டிருந்தது. யுத்தத்தின் முதலாம் நாளான 1916 ஜூலை 1 அன்று, பிரிட்டிஷ் இராணுவம் 57,000க்கும் அதிகமான உயிரிழப்புகளை சந்தித்திருந்தது. 1916 நவம்பர் 18 அன்று இந்த படுகொலை முடிவடைந்த சமயத்தில், கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் படைவீரர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியது.

கிழக்கு முனையில், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரிய-ஹங்கேரிக்கு எதிராக ரஷ்ய படைகள் அணிநிறுத்தப்பட்டன. 1916 ஜூனில், ஜாரிச ஆட்சி தளபதி புரூசிலோவ் தலைமையில் ஒரு தாக்குதலை தொடக்கியது. இந்தத் தாக்குதல் செப்டம்பரில் முடிவடைவதற்கு முன், ரஷ்ய இராணுவம் 500,000 முதல் 1 மில்லியன் வரையான உயிரிழப்புகளை சந்தித்திருந்தது. கடந்த நூற்றாண்டில், ஏராளமான வரலாற்றாசிரியர்கள் ரஷ்ய புரட்சியின் வன்முறையையும் போல்ஷிவிக்குகளின் மனிதாபிமானமின்மையாக சொல்லப்படுவதையும் குறித்து கண்டனம் செய்து வந்திருக்கின்றனர். ஆனால் புரட்சியானது ஒரேயொரு உயிரையும் காவு வாங்குவதற்கு முன்பாக, 1914 இல் ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் உற்சாகமான ஆதரவுடன் ஜாரிச எதேச்சாதிகாரத்தால் தொடங்கப்பட்ட போரில் ஒன்றே முக்கால் மில்லியனுக்கும் அதிகமான ரஷ்ய படைவீரர்கள் இறந்திருந்தார்கள் என்ற உண்மையை கல்விச்சாலைகளது அறநெறியாளர்கள் துரிதமாய் கடந்து செல்கிறார்கள், மொத்தத்தில் கவனித்தார்களா என்பதும் கூட தெரியவில்லை.

பிப்ரவரி 23க்காக திட்டமிடப்பட்ட குறிப்பான ஆர்ப்பாட்டங்கள் புரட்சியின் தொடக்கத்தைக் குறிப்பதாக அமையும் என்று யாரொருவரும் கணித்திருக்க முடியாது. ஆனால் போர் புரட்சிக்கு வழிவகுக்கும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதாகவே இருந்தது. 1915 வாக்கிலேயே ட்ரொட்ஸ்கி எழுதியிருந்தார்: “போர்ப் பள்ளி வழியே பயணப்பட்டு வந்திருக்கும் ஒரு தொழிலாள வர்க்கமானது அதன் சொந்த நாட்டிற்குள்ளான முதல் முக்கிய முட்டுக்கட்டைக்கு அது முகம்கொடுத்த உடனேயே படைவலிமையின் மொழியை பயன்படுத்தும் அவசியத்தை உணரும்.” லெனின், போருக்கு இட்டுச் சென்றிருக்கும், ஒரு உலக அமைப்புமுறையாக ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள், சோசலிசப் புரட்சிக்கும் இட்டுச் செல்லும் என்ற உறுதியின் மீது போல்ஷிவிக்குகளின் போர்-எதிர்ப்புக் கொள்கைக்கு அடித்தளம் அமைத்திருந்தார்.

லெனின், 1905 புரட்சியை பற்றவைத்த பொறியை வழங்கிய செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் இரத்த ஞாயிறு படுகொலையின் பன்னிரண்டாவது நினைவுதினத்தை ஒட்டி, 1917 ஜனவரி 22 அன்று, சூரிச்சில் வழங்கிய ஒரு உரையில், கூடியிருந்த சிறு பார்வையாளர் கூட்டத்திற்கு பின்வருமாறு அறிவுறுத்தினார்: “ஐரோப்பாவில் இப்போது நிலவும் மயான அமைதியைக் கண்டு நாம் ஏமாந்து விடக் கூடாது. ஐரோப்பா புரட்சிக்கு கர்ப்பம் தரித்துள்ளது. ஏகாதிபத்தியத்தின் பாரிய படுபயங்கரங்களும், எங்கெங்கிலும் மிகப்பெரும் வாழ்க்கைச் செலவுகளால் ஏற்பட்டிருக்கக் கூடிய துயரங்களும் ஒரு புரட்சிகர மனோநிலை சூழப் பெற்றுள்ளன; ஆளும் வர்க்கங்களும், முதலாளித்துவ வர்க்கமும், மற்றும் அதன் சேவகர்களான அரசாங்கங்களும், மிகப்பெரும் எழுச்சிகள் இன்றி தங்களை இனி இதிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாது என்று சொல்லத்தக்க ஒரு முட்டுச்சந்திற்குள்ளாக மேலும் மேலும் உள்ளே சென்று கொண்டிருக்கின்றன.” [7]

ஆயினும், மாபெரும் வரலாற்று நிகழ்வுகளின் தொடக்கத்தில் பொதுவாக இருப்பதைப் போலவே, பிப்ரவரி 23 அன்று கூடிய இந்த பெயர்தெரியாத போராட்டக்காரர்கள் தங்கள் நடவடிக்கைகளின் பின்விளைவுகளை முன்கணித்திருந்தார்களில்லை. வியாழக்கிழமையன்று காலையில், தாங்கள் வரலாற்றின் பாதையையே மாற்றி விடப் போகிறோம் என்பதை அவர்கள் எவ்வாறு கற்பனை செய்து பார்த்திருக்க முடியும்? 

போரின் அந்த கட்டத்திற்குள்ளாக, ரஷ்யாவில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களும் மற்ற போராட்டங்களும் வெகுசாதாரணமானவையாக ஆகும் அளவுக்கு சமூக நெருக்கடி மிகக் கூர்மையடைந்திருந்தது. ஜனவரி 9 அன்று நடந்த ஒரு பாரிய வேலைநிறுத்தத்தில் பெட்ரோகிராட் உலுக்கப்பட்டிருந்தது, இதில் 100க்கும் அதிகமான தொழிற்சாலைகளை சேர்ந்த 140,000 தொழிலாளர்கள் பங்குபற்றினர். 84,000 தொழிலாளர்கள் பங்குபற்றிய இன்னுமொரு பெரிய வேலைநிறுத்தம் பிப்ரவரி 14 அன்று நடைபெற்றது. ஆயினும் அப்போதும் கூட, முழு-வீச்சிலான புரட்சியின் வெடிப்பை நோக்கி பதட்டங்கள் துரிதமாக அபிவிருத்தி கண்டு வந்தன என்பது தெளிவில்லாமலேயே இருந்தது. நிக்கோலோ சுகனோவ் என்ற, 1917 நிகழ்வுகளின் மதிப்புமிக்க நினைவுச்சுவடுகளை எழுதிய இடது மென்ஷிவிக், அமைதியின்மை பெருகிச் செல்வதைக் குறித்து பிப்ரவரி 21 அன்று தனது வேலையிடத்தில் இரண்டு இளம் தட்டச்சு பெண்களுக்கு இடையில் நடந்த உரையாடலை நினைவுகூர்ந்தார். அந்த இளம்பெண்களில் ஒருவர் இன்னொருவரிடம் சொன்னதைக் கேட்டு இவர் திகைத்துப் போய்விட்டார்: “தெரியுமா, என்னைக் கேட்டால், இது புரட்சியின் தொடக்கம் என்றே நான் சொல்லுவேன்.” இந்த சின்னப் பெண்களுக்கு புரட்சியைப் பற்றி என்ன தெரியும் என, சுகனோவ் தனக்குள் நினைத்துக் கொண்டார். “புரட்சி —பெருமளவுக்கு நடவாத ஒன்று! புரட்சி!— எல்லோருக்குமே தெரிந்திருந்தது இது ஒரு கனவு மட்டுமே என்று- பல தலைமுறைகளது நீண்ட நெடிய தசாப்தங்களது ஒரு கனவு என்று. அந்தப் பெண்கள் மீது நம்பிக்கையில்லாமல், நானும் அவற்றை எந்திரம்போல் திருப்பிச் சொன்னேன்: “ஆம், புரட்சியின் தொடக்கம்”.[8]

பிப்ரவரி புரட்சி தொடங்குகிறது

என்ன தெரியவந்ததென்றால், அரசியல் கல்வியற்ற இந்த இளம்பெண்களுக்கு அனுபவம் வாய்ந்த ஆயினும் ஆழமான ஐயுறவுவாதம் கொண்ட மென்ஷிவிக்கை காட்டிலும் யதார்த்தநிலையை மேம்பட்ட விதத்தில் உணரும் திறன் இருந்திருந்தது. பிப்ரவரி 22 அன்று, பாரிய புடிலோவ் தொழிற்சாலையில் இருந்த நிர்வாகம் 30,000 தொழிலாளர்களை வேலைசெய்ய விடாமல் ஆலையை பூட்டியது. அதற்கடுத்த நாள், வர்க்கப் பதட்டங்கள் கொதித்துக் கொண்டிருந்த ஒரு நகரத்தில், ஒரு படுபயங்கரப் போரின் பின்புலத்தில், மகளிர் தின ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின.

இன்றைய வசதியான நடுத்தர வர்க்க போலி-இடதுகள், மாபெரும் சமூக கொதிகலனில், முழு வறுமைப்பட்டவர்களை மில்லியன் கணக்கில் செல்வம் கொண்டவர்களுடன் ஒன்றாக இணைத்து தனது பாகத்தை வரையறை செய்கின்ற விதத்தில், ரஷ்யாவின் “99 சதவீதம்” என்ற பேரில் இந்த ஆர்ப்பாட்டங்கள் அழைக்கப்படவில்லை.

1917 பிப்ரவரியின் பெட்ரோகிராட் ஆர்ப்பாட்டக்காரர்கள், பேரரசின் தலைநகரின் தொழிலாள வர்க்கத்தில் இருந்து வந்திருந்தார்கள், அதன் நலனைப் பிரதிநிதித்துவம் செய்தார்கள். அவர்கள் அரசியல் கவலைகள் தனிமனித வாழ்க்கைப் பாணியின் மீது ஒருமுகப்பட்டதாக இல்லை, மாறாக சமூக வர்க்கத்தின் மீது ஒருமுகப்படுத்தப்பட்டதாய் இருந்தது. “போர் ஒழிக! விலைவாசியேற்றம் ஒழிக! பசி ஒழிக! தொழிலாளர்களுக்கு உணவு வேண்டும்!” என அவர்கள் முழங்கினர். [9] பெண்கள் தொழிற்சாலைகளுக்கு ஊர்வலமாய் சென்று தொழிலாளர்களிடம் ஆதரவு கோரி விண்ணப்பம் செய்தனர். அந்த நாள் முடிவதற்குள்ளாக, 100,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியிருந்தனர்.

அடுத்த பல நாட்களில் ஆர்ப்பாட்டங்களின் வீச்சு அதிகரித்துச் சென்ற நிலையில், ஆட்சியின் தலைவிதி பணயத்தில் இருந்தது என்பது கொஞ்சம்கொஞ்சமாய் தெளிவடைந்து வந்தது. போலிசின் அதிகரித்த வன்முறையின் மூலமாக ஆர்பபட்டங்களை தடுத்து நிறுத்திவிட முடியாதிருந்தது. ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக அழைக்கப்பட்ட படைவீரர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுதாபம் கொண்டவர்களாவதும் அவர்கள் தங்களுக்கு ஏவப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்ற தயங்கியதும் அதிகரித்துச் சென்றதை தொழிலாள வர்க்கம் கவனித்தது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான எந்திரத் துப்பாக்கிகளை பயன்படுத்தி நூற்றுக்கணக்கில் கொன்றுவீழ்த்திய போலிசின் உள்நாட்டு வன்முறையானது, சமரசமற்ற எதிர்ப்பை சந்தித்தது.

போராட்டத்தின் முடிவு இப்போது பெட்ரோகிராடில் நிலைநிறுத்தப்பட்டிருந்த படையணிகளை ஜார்ந்ததாய் ஆகியிருந்தது. தொழிலாளர்களுக்கும் படைவீரர்களுக்கும் இடையில் சகோதரபூர்வ சம்பாஷணை பெருகியது குறித்த ட்ரொட்ஸ்கியின் விவரிப்பை சமகால வரலாற்றாசிரியர்கள் ஊர்ஜிதம் செய்திருக்கின்றனர். பேராசிரியர் ரெக்ஸ் வேய்ட் பிப்ரவரி புரட்சி குறித்த தனது விவரிப்பில் எழுதுகிறார்:

1917 இன் சிப்பாய்கள் 1905 புரட்சியை ஒடுக்கிய அதே மனிதர்களாய் இல்லை. அநேகமானவர்கள் புதிதாய் எடுக்கப்பட்டிருந்தவர்களாய் இருந்தார்கள், இராணுவ ஒழுங்கிற்கு பகுதியாகவே பழக்கப்படுத்தப்பட்டிருந்தவர்களாய் இருந்தனர். பலரும் பெட்ரோகிராட் பகுதியை ஜார்ந்தவர்களாய் இருந்தனர்... பிப்ரவரி 23-26 காலத்தில் சிப்பாய்களுக்கும் கூட்டத்தாருக்கும் இடையில், இரண்டு தரப்புக்கும் பொதுவாக உள்ள நலன்கள் குறித்தும், மக்களின் (இதில் சிப்பாய்களின் குடும்பங்களும் இடம்பெறும்) மீது இழைக்கப்படும் பொதுவான அநீதிகள் மற்றும் சிரமங்கள் குறித்தும் மற்றும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பொதுவாக உள்ள விருப்பம் குறித்தும் நினைவூட்டுபவையாக நடந்த நூற்றுக்கணக்கான உரையாடல்கள் நடந்தேறின. கூட்டத்தின் மீது சுடுகின்ற அனுபவம் அவர்களை மோசமாய் தொந்தரவு செய்தது. நிகழ்வுகள் குறித்த சூடான விவாதங்கள் பல பிரிவுகளிலும் நடந்து கொண்டிருந்தன. [10]

சகோதரத்துவத்துடன் பழகும் நிகழ்முறை இராணுவ ஒழுங்கில் தனது வேலையைக் காட்டியிருந்தது. ஜார் முதல் லெனின் வரை ஆவணப்படத்திற்கு மக்ஸ் ஈஸ்ட்மன் வழங்கிய அற்புதமான வருணனையை மேற்கோளிட்டுக் காட்டுவோமாயின்: “வரலாற்றில் முதல்முறையாக ஜாரின் சிப்பாய்கள் அவருக்கு தோல்வியை கொடுத்னர். அவர்கள் ரைபிள்களை பயன்படுத்தி ஒழுங்கை மீட்பதற்குப் பதிலாக, வீதிகளில் இருந்த மக்களுடன் கைகோர்த்து ஒழுங்கின்மையை பூர்த்தி செய்தனர்.”

தன்னியல்பு”, மார்க்சிசம், மற்றும் வர்க்க நனவு

புரட்சி பற்றிய பிந்தைய விவரிப்புகளில், நினைவிதழ் ஆசிரியர்களும், பத்திரிகையாளர்களும் மற்றும் வரலாற்றாசிரியர்களும் பிப்ரவரி எழுச்சியையும் போல்ஷிவிக் தலைமையிலான அக்டோபர் எழுச்சியையும் ஒப்பிட்டு முரண்பாடுகளை கூறியுள்ளனர். நனவான தலைமையை சிறுமைப்படுத்துவதும், அரசியல்ரீதியாய் நனவானதொரு தலைமை இருப்பதென்பது புரட்சிகர நடவடிக்கையின் தார்மீக புனிதத்தை விலக்கி விடுவதாக மறைமுகமாய்க் கூறுவது அல்லது திட்டவட்டம் செய்வதும் தான் பெரும்பாலும் இந்த ஒப்பீட்டின் நோக்கமாய் இருந்து வந்திருக்கிறது. ஒரு தலைமை இருப்பதென்பது, நிகழ்வுகளின் இயல்பான மற்றும் முறையான ஓட்டத்தை இடையூறு செய்கின்ற அரசியல் சதியுடன் அடையாளப்படுத்தப்படுகிறது.

”தன்னியல்பான” என்ற வார்த்தையானது பரந்த மக்கள் அரசியல்நனவு இல்லாமல் மேலோட்டமான ஜனநாயக உள்ளுணர்வுகளுக்கு சற்று மேலானதொன்றின் படி செயல்படுகின்ற ஒரு ஆனந்தமான நிலையைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்று உண்மையின் ஒரு விடயமாய், இந்த நனவற்ற ”தன்னியல்பு” குறித்த கருத்தாக்கமானது 1917 பிப்ரவரி புரட்சியை புதிர்படுத்துகிறது, திரிக்கிறது, பொய்மைப்படுத்துகிறது. ரஷ்ய தொழிலாள வர்க்கமும் பாரிய சிப்பாய் படையும் - இவர்களில் பலரும் விவசாய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்- அவர்களின் நடவடிக்கைகளது விளைவுகளை தெளிவாக முன்கணித்திருக்கவில்லை; அதேபோல அவர்களது நடவடிக்கைகள் ஒரு செதுக்கிச்செய்த புரட்சிகர மூலோபாயத்தால் வழிநடத்தப்பட்டிருக்கவும் இல்லை என்பது உண்மைதான்.

ஆயினும் பரந்த உழைக்கும் மக்கள் போதுமான மட்டத்திற்கு பல தசாப்த கால நேரடியான மற்றும் மரபுவழியான அனுபவத்தின் மூலமாக உருவாக்கப்பட்டிருந்த சமூக மற்றும் அரசியல் நனவினை கொண்டிருந்தனர், இது பிப்ரவரியின் நிகழ்வுகளை மதிப்பிடுவதற்கும், முடிவுகளை தேற்றம் செய்வதற்கும் முடிவெடுப்பதற்கும்  அவர்களுக்கு வழிவகை தந்தது.

அவர்களின் சிந்தனையானது படுபயங்கரமான ஒடுக்குமுறையின் சுமையின் கீழே அபிவிருத்தி கண்டிருந்த ஒரு கலாச்சாரத்தின் ஆழமான பாதிப்பைக் கொண்டிருந்தது, அது சமூக மற்றும் தனிமனித துயரங்களின் வடுக்களை சுமந்திருந்தது, தீரமான சுய-தியாகத்தின் மலைக்க வைக்கும் உதாரணங்களால் உத்வேகமளிக்கப்பட்டிருந்தது.

1920 இல், போல்ஷிவிசத்தின் மூலங்களை திறனாய்வு செய்த லெனின், தொழிலாள வர்க்கத்தில் ஆழமான வேர்களையும் ஒடுக்கப்பட்ட பரந்த மக்கள் மீது செல்வாக்கு செலுத்துகின்ற திறனையும் கொண்ட ஒரு சோசலிச அரசியல் கலாச்சாரத்தையும் இயக்கத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு நடத்தப்பட்ட நெடிய போராட்டத்திற்கு புகழ்மாலை சூட்டினார்.

ஒரு அரை நூற்றாண்டு காலத்திற்கு -சுமாராக சென்ற நூற்றாண்டின் நாற்பதுகள் முதல் தொன்னூறுகள் வரை- ரஷ்யாவில் முற்போக்கு சிந்தனையானது, அது மிகவும் கொடூரமான மற்றும் பிற்போக்குத்தனமான ஜாரிசத்தினால் ஒடுக்கப்பட்டு வந்திருந்த நிலையில், ஒரு சரியான புரட்சிகரத் தத்துவத்திற்காக ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தது என்பதுடன் இந்த விடயத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் எழுந்திருந்த ஒவ்வொரு “இறுதியான வார்த்தை”யையும் முழுசிரத்தையுடனும் முழுமையுடனும் பின்தொடர்ந்தது. ரஷ்யா ஒரே சரியான புரட்சிகர தத்துவமான மார்க்சிசத்தை, இணைசொல்ல முடியாத சித்திரவதை மற்றும் தியாகம், இணைசொல்ல முடியாத புரட்சிகர தீரச்செயல்கள் ஆகியவற்றின் அரைநூற்றாண்டு காலப் பாதையில் அது அனுபவித்திருந்த வேதனை, நம்பமுடியாத ஆற்றல், அர்ப்பணிப்பான தேடல், ஐரோப்பிய அனுபவத்தின் மீதான ஆய்வு, நடைமுறை சோதனை, ஏமாற்றம், சரிபார்ப்பு, மற்றும் ஒப்பீடு ஆகியவற்றின் மூலமாய் சாதித்தது. ஜாரிசத்தின் காரணத்தால் விளைந்திருந்த அரசியல்ரீதியான மக்கள் வெளியேறல்களின் நன்மையால், புரட்சிகர ரஷ்யாவானது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், வேறெந்த நாடும் கொண்டிராத மட்டத்திற்கு சர்வதேசத் தொடர்புகள் மற்றும் உலகப் புரட்சிகர இயக்கத்தின் வடிவங்கள் மற்றும் தத்துவங்கள் குறித்த அற்புதமான விபரங்களின் ஒரு செல்வத்தைப் பெற்றது.[11]

பிப்ரவரி புரட்சிக்கு முன்வந்த 35 ஆண்டுகளின் சமயத்தில், ரஷ்யாவில் தொழிலாள வர்க்க இயக்கமானது சோசலிஸ்ட் அமைப்புகளுடனான நெருக்கமான மற்றும் தொடர்ச்சியான இடையுறவில் அபிவிருத்தி கண்டது. இந்த அமைப்புகள், அவற்றின் துண்டறிக்கைகள், செய்தித்தாள்கள், உரைகள், பள்ளிகள், மற்றும் சட்டபூர்வ மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் சமூக, கலாச்சார மற்றும் புத்திஜீவித வாழ்க்கையில் ஒரு செறிவான பாத்திரத்தை ஆற்றின.

1880 களின் தொடக்கம் முதலாய், 1905 எழுச்சியின் வழியே, பிப்ரவரி புரட்சியின் வெடிப்பு வரையிலும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை அனுபவம் அனைத்திலும் வியாபித்திருந்த இந்த சோசலிச மற்றும் மார்க்சிச பிரசன்னத்தை அகற்றிப் பார்ப்பது சாத்தியமில்லாததாகும். பிளெக்கானோவ், ஆக்ஸல்ராட் மற்றும் போட்ரிஸோவ் ஆகியோரது முன்னோடியான வேலைகள் வீணாகியிருக்கவில்லை. புரட்சிகர இயக்கத்தின் காரியாளர்களின் விடாமுயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தொழிலாள வர்க்கத்தின் சமூக அனுபவத்திற்கும் மார்க்சிச தத்துவத்திற்கும் இடையிலான இந்த பலதசாப்த காலத்து அசாதாரணமான சம்பாஷணை தான், 1917 பிப்ரவரியில் பரந்த மக்களின் “தன்னியல்பான” நனவாக சொல்லப்பட்டதன் மிக உயர்ந்த புத்திஜீவித்தன மற்றும் அரசியல் மட்டத்திற்கு உருக்கொடுத்து ஊட்டம்கொடுத்திருந்தது.

பிப்ரவரி இயக்கத்தை ஒழுங்கமைத்து இயக்குவதிலும் அதனை எதேச்சாதிகாரத்தை தூக்கிவீசுவதற்காய் வழிநடத்திச் செல்வதிலும் மிகவும் வர்க்க நனவான தொழிலாளர்கள் வகித்த நேரடியான மற்றும் இன்றியமையாத பாத்திரத்தை கவனத்துக்குரிய வரலாற்று ஆய்வுகள் நிரூபணம் செய்திருக்கின்றன. ”பிப்ரவரி புரட்சிக்கு யார் தலைமை கொடுத்தார்கள்” என்ற கேள்விக்கு ட்ரொட்ஸ்கி அளித்த பதில் முழுவதும் சரியானது: “அநேகமான பகுதிக்கு லெனினின் கட்சியால் கல்வியூட்டப்பட்ட நனவான மற்றும் புடம்போட்ட தொழிலாளர்கள்”.[12] ஆயினும் ட்ரொட்ஸ்கி அவசரமாய் இதனையும் சேர்த்துக் கொண்டார்: ”இந்தத் தலைமையானது கிளர்ச்சியின் வெற்றியை உத்தரவாதம் செய்யுமளவுக்கு போதுமானதாய் நிரூபணமானது, ஆயினும் புரட்சியின் தலைமையை பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையின் கரங்களில் உடனடியாக ஒப்படைக்கும் அளவுக்குப் போதுமானதாய் அது இருக்கவில்லை.”[13]

இரட்டை அதிகாரத்தின்உதயம்

பிப்ரவரி 27, திங்கட்கிழமை மதியத்திற்குள்ளாக எல்லாம், 1613 முதலாக ரஷ்யாவை ஆட்சி செய்திருந்த ரோமனோவ்களின் அரசவம்ச ஆட்சியானது தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களது பாரிய இயக்கத்தினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தது. பழைய ஆட்சி அழிக்கப்பட, எதேச்சாதிகாரத்தை பிரதியிட இருப்பது எது என்ற அரசியல் கேள்வி உடனடியாய் எழுந்தது. ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் குழப்பமான மற்றும் மிரட்சி கண்டிருந்த அரசியல் பிரதிநிதிகள் தாரைட் அரண்மனையில் ஒன்றுகூடினர். அவர்கள் அரசின் நாடாளுமன்றத்தின் தற்காலிகக் குழுவை உருவாக்கினர், அது வெகுவிரைவில் இடைக்கால அரசாங்கமாக தன்னை அமைத்துக் கொண்டது. புரட்சியை முடிந்த அளவு சீக்கிரமாய் கட்டுக்குள் கொண்டுவருவதும், செல்வந்தர்கள் மற்றும் தனியார் உடைமையாளர்களது சடத்துவ நலன்களுக்கு சேதாரம் எதனையும் முடிந்த அளவுக்கு மட்டுப்படுத்துவதும், அத்துடன் ஏகாதிபத்திய போரில் ரஷ்யாவின் பங்கேற்பைத் தொடர்வதுமே வெகுஜன இயக்கத்தால் மிரட்சி கண்டிருந்த முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான கவலையாக இருந்தது.

அதேசமயத்தில், அதே கட்டிடத்திற்குள்ளாக, மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பரந்த புரட்சிகர மக்களது நலன்களை பாதுகாப்பதற்கும் முன்னெடுப்பதற்குமாய் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களது பிரதிநிதிகள் சோவியத்தில் ஒன்றுகூடியிருந்தனர். தொழிலாளர்’ அதிகாரத்தின் இந்த உண்மையான மற்றும் ஆற்றல்மிக்க சாதனத்தை உருவாக்குவதில், ரஷ்ய தொழிலாள வர்க்கமானது 1905 புரட்சியின் அனுபவத்தில் இருந்து தேற்றம் செய்து கொண்டிருந்தது. ஆயினும் 1905 இல் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் சோவியத் —லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில்— தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்தின் களம் இறுதி உச்சகட்ட வாரங்களில் தான் எழுந்தது என்றால், பெட்ரோகிராட் சோவியத், 1917 புரட்சியின் முதல் வாரத்திலேயே உயிர்பெற்று விட்டிருந்தது.

ரஷ்ய சமூகத்திற்குள்ளாக இருந்த வர்க்கப் பிளவுகள், ஜாரிச எதேச்சாதிகாரம் தூக்கிவீசப்பட்டதன் மூலமாக இன்னும் தீர்க்கப்பட்டு விடாதிருந்த நிலையில், அது இரட்டை அதிகார ஆட்சியில் வெளிப்பாடு கண்டது. இரண்டு சமரசப்படுத்த முடியாத குரோத சக்திகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற இரண்டு போட்டி அரசாங்க அதிகாரங்கள் இருந்தமையானது ஸ்திரமின்மை உட்பொதிந்ததாய் இருந்தது. இந்த பிரத்தியேக நிகழ்வுப்போக்கின் அரசியல் அர்த்தத்தை விளக்கிய ட்ரொட்ஸ்கி எழுதினார்: “இறையாண்மை உடைவு கண்டிருப்பதானது ஒரு உள்நாட்டுப் போருக்குக் குறையாத ஒன்றுக்கு கட்டியம் கூறுகிறது.”[14]

அடுத்த எட்டு மாதங்களுக்கு, புரட்சியின் அபிவிருத்தியானது முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கும் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களது பிரதிநிதிகள் சோவியத்திற்கும் இடையிலான மோதலின் மூலமாக முன்னேறிச் சென்றது. இந்தப் போராட்டத்தின் முடிவானது வெறுமனே போட்டி சக்திகளின் வலு குறித்த ஏதோவொரு கணிதக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட இயன்றிருக்குமாயின், இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு எட்டு மாதங்கள் அவசியப்பட்டிருக்காது.

ஆரம்பம் தொட்டே முதலாளித்துவ இடைக்கால அரசாங்கமானது அடிப்படையில் வலுவற்றே இருந்தது. அதன் அதிகாரமானது கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக சோவியத்தின் அரசியல் தலைவர்களிடம் இருந்து —பிரதானமாய் மென்ஷிவிக் மற்றும் சமூக புரட்சிகரக் கட்சிகளிடம் இருந்து— அது பெற்ற ஆதரவை ஜார்ந்ததாக இருந்தது. ரஷ்யாவின் புரட்சியானது ஒரு தனித்துவமான முதலாளித்துவ ஜனநாயக தன்மையைக் கொண்டிருந்தது என்றும், முதலாளித்துவத்தை சோசலிச ரீதியாக தூக்கிவீசுவது திட்டநிரலில் இல்லை என்றும், ஆகவே தொழிலாள வர்க்கம் மற்றும் பாரிய வறுமைப்பட்ட விவசாயிகளது பிரதிநிதியாய் இருந்த சோவியத், அதிகாரத்தை தனது சொந்தக் கரங்களில் எடுக்க முடியாது என்றும் அவை வலியுறுத்தின.

வெற்றிகரமான பிப்ரவரி புரட்சியை தொடர்ந்து வந்த முதல் வாரங்களின்போது, சோவியத்தின் செயல் கமிட்டியின் ஆமோதிப்பு சவால் செய்யப்படவில்லை. போல்ஷிவிக் கட்சியுமே கூட —லெனின் இன்னும் ரஷ்யாவுக்கு வெளியில் தான் இருந்தார், தலைமை காமனேவ் மற்றும் ஸ்ராலினின் கரங்களில் தான் இருந்தது— செயல் கமிட்டி இடைக்கால அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவுக்கு, ஆகவே போரில் ரஷ்யாவின் பங்கேற்பு தொடர்வதற்கு இணங்கி இருந்தது. ஏப்ரல் 4 அன்று லெனின் ரஷ்யா திரும்பும் வரை, இந்த அரசியல் தகவமைவு நிலை தான் தொடர இருந்தது.

பெட்ரோகிராட்டுக்கு லெனின் திரும்புதல்

ரஷ்யாவுக்கு லெனின் திரும்பியதும், பெட்ரோகிராட்டில் உள்ள ஃபின்லாந்து இரயில் நிலையத்தில் அவர் வந்துசேர்ந்ததும், உலக வரலாற்றின் மிகவும் பரபரப்பான அத்தியாயங்களில் ஒன்றாக இருக்கிறது. புரட்சியின் வெடிப்பானது அவரை சுவிட்சர்லாந்தில், சூரிச்சின் பழைய நகர்ப் பகுதியில் Spiegelgasse இல் இருந்த ஒரு சிறிய இரண்டாம் தளக் குடியிருப்பில் வாழக் கண்டது. சூரிச்சின் மத்திய இரயில் நிலையத்தில் (Hauptbahnhof) இருந்து பெட்ரோகிராட்டுக்கு லெனின் பயணம் செய்ய நேர்ந்த சூழ்நிலைகள் புரட்சியின் பாதையில் ஒரு மிகப்பெரும் அரசியல் பிரச்சினையாக எழ இருந்தன. போர் நிலைமைகளின் கீழ், நிலவழிப்பாதை அடைபட்டிருந்த சுவிட்சர்லாந்தில் இருந்து ரஷ்யாவுக்கு வேகமாக திரும்புவதற்கான சாத்தியத்திற்கு அவர் ஜேர்மனியின் வழியாக பயணம் செய்வது அவசியமாக இருந்தது. ரஷ்யாவுடன் போர் நடத்திக் கொண்டிருந்த ஒரு நாட்டின் வழியாக பயணம் செய்யும் தனது முடிவுக்கு எதிராக பிற்போக்குத்தனமான பேரினவாதிகள் கூச்சல் போடுவார்கள் என்பதை லெனின் மிக நன்றாகப் புரிந்து வைத்திருந்தார். ஆனால் காலம் தான் இன்றியமையாத சாரமாய் இருந்தது. அவர் இல்லாத சமயத்தில், போல்ஷிவிக் கட்சியானது, இடைக்கால அரசாங்கத்துடன் ஒரு சமரசப்பட்ட நிலையை பின்பற்றிக் கொண்டிருந்த சோவியத்தின் மென்ஷிவிக் தலைவர்களது சுற்றுவட்டத்திற்குள்ளாக இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. லெனின் எந்த நிலைமைகளின் படி அவர் ஜேர்மனியின் வழியாக பயணம் செய்யவிருக்கிறார் என்பதை பேச்சுவார்த்தை நடத்தினார், அவருக்கும் ஜேர்மன் அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான எந்த தொடர்பின் சாத்தியத்தையும் முன்கூட்டி இல்லாதுசெய்கின்ற ஒரு “முற்றிலும் அடைக்கப்பட்ட தொடர்வண்டி” (“sealed train”) சம்பந்தமாய் அவர் வலியுறுத்தினார்.

ரஷ்யாவில் புரட்சி வெடிக்கின்ற செய்தியை லெனின் பெற்ற தருணத்தில் இருந்தே, இடைக்கால அரசாங்கத்திற்கு ஒரு சமரசமற்ற புரட்சிகர எதிர்ப்பின் கொள்கையை அவர் வகுக்கத் தொடங்கினார். புரட்சிக்கு அவரளித்த ஆரம்பகட்ட பதிலிறுப்பு தொலைதூரத்தில் இருந்தான கடிதங்கள் என்று அறியப்படும் விரிவான வருணனைகளின் ஒரு வரிசையில் பதியப்பட்டிருக்கின்றன.

புரட்சியின் முதல் நாட்களில் லெனின் முன்னெடுத்த கொள்கைகள் ஏகாதிபத்திய போரின் மீதான அவரின் பகுப்பாய்வை அடிப்படையாக கொண்டிருந்தன என்பதுடன், அவை 1915 செப்டம்பரில் சிம்மர்வால்ட் மாநாட்டில் எந்த புரட்சிகர போர்-எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் தொடர்ச்சிக்காக போராடியிருந்தாரோ அதன் ஒரு தொடர்ச்சியாக இருந்தன. ஏகாதிபத்திய போரானது சோசலிச புரட்சிக்கு இட்டுச் செல்லும் என்று அங்கு லெனின் வலியுறுத்தியிருந்தார். “ஏகாதிபத்திய போரை ஒரு உள்நாட்டு போராய் மாற்றுங்கள்” என்று அவர் முன்னெடுத்த முழக்கமானது இந்த முன்னோக்கின் வேலைத்திட்டரீதியான ஒரு ஸ்தூலமாக்கலாய் இருந்தது. ஜாரிச எதேச்சாதிகாரத்தை தூக்கிவீசுவதை தனது இந்தப் பகுப்பாய்வுக்கான ஒரு ஊர்ஜிதப்படுத்தலாக லெனின் கண்டார். ரஷ்யாவிலான இந்த எழுச்சி ஒரு சுய-எல்லைக்குள்ளான தேசிய நிகழ்வாக இருக்கவில்லை, மாறாக ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியின், ஆகவே உலக சோசலிசப் புரட்சியின் தொடக்கத்தின் முதல் கட்டமாய் இருந்தது.

ரஷ்ய நிகழ்வுகளை உலகப் போரின் சர்வதேச கட்டமைப்பிற்குள்ளாக இருத்தி லெனின் செய்த பகுப்பாய்வானது அவரை சோவியத்தின் மென்ஷிவிக் தலைவர்களுடன் மட்டுமல்ல, பெட்ரோகிராடில் இருந்த போல்ஷிவிக் கட்சி தலைமையின் கணிசமான பிரிவுகளுடன் கூட மோதலில் நிறுத்தியது. ஜார் தூக்கிவீசப்பட்டதன் மூலமாக போரில் ரஷ்யாவின் பங்கேற்பின் அரசியல் தன்மை மாறிவிட்டிருந்ததாக மென்ஷிவிக் தலைவர்கள் வாதிட்டனர். அது தேச தற்காப்புக்கான நியாயமான ஜனநாயகப் போராக மாறியிருந்தது என்றனர்.

சிம்மர்வால்ட் மாநாட்டில் லெனின் போராடியிருந்த சமரசமற்ற போர்-எதிர்ப்பு நிலைப்பாட்டை மறுதிட்டவட்டம் செய்வதும், ஏகாதிபத்திய போரை ஒரு உள்நாட்டுப் போராக மாற்றுவதற்கு அவர் விடுத்த அழைப்பை மீண்டும் வலியுறுத்துவதுமே, பெட்ரோகிராட் அமைப்பின் கீழ்-மட்டத் தலைவர்களால் வகுக்கப்பட்டதாய் இருந்த போல்ஷிவிக் கட்சியின் ஆரம்பகட்ட பதிலிறுப்பாய் இருந்தது. ஆயினும் சைபீரியாவில் நாடுகடத்தப்பட்டு வாழ்ந்திருந்த மூத்த தலைவர்கள் பெட்ரோகிராட்டுக்கு அதிகமாய் வர வர, கட்சியின் அரசியல் நிலைப்பாடு மாறியது.

மார்ச் மத்தியில் பெட்ரோகிராட்டில் காமனேவும் ஸ்ராலினும் வந்துசேர்ந்தமையானது ஏறக்குறைய உடனடியாக கொள்கையிலான ஒரு அதிரடியான மாற்றத்திற்கு இட்டுச்சென்றது. காமனேவ், ஸ்ராலினின் ஆதரவுடன், போரைத் தொடர்வதை நியாயப்படுத்துகின்ற ஒரு தற்காப்பு நிலைப்பாட்டை கையிலெடுத்து, மார்ச் 15 அன்று போல்ஷிவிக் பத்திரிகையான பிராவ்தாவில் வெளியிட்ட ஒரு அறிக்கை பின்வருமாறு அறிவித்தது: “இராணுவத்திற்கு எதிராய் இராணுவம் நிற்கும்போது, அவர்களில் ஒரு தரப்பை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வீட்டுக்குப் போகச் செல்வதென்பது அத்தனை கொள்கைகளிலும் மிகவும் குருட்டுத்தனமானதாய் இருக்கும்... ஒரு சுதந்திரமான மக்கள் அதன் நிலையில் விடாப்பிடியான உறுதியுடன் தொடர்ந்து நின்று, தோட்டாவுக்கு தோட்டாவை பதிலாய் தரும்.” [15]

ஏப்ரல் ஆய்வுகள்

லெனின் ரஷ்யா திரும்பியது குறித்த ஒரு தெளிந்த வருணனையை சுகானோவ் விட்டுச் சென்றிருக்கிறார். ஊர்திரும்பும் தங்கள் தலைவருக்காக போல்ஷிவிக் கட்சி ஒரு பிரம்மாண்டமான வரவேற்பை ஏற்பாடு செய்திருந்தது. லெனினின் புரட்சிகர நடவடிக்கையின் ஆண்டுகள் அவருக்கு பெட்ரோகிராட்டின் முன்னேறிய தொழிலாளர்கள் மத்தியில் செறிந்த கவுரவத்தை பெற்றுத் தந்திருந்தது என்பதை உணர்ந்திருந்த சோவியத் தலைவர்கள் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள கடமைப்பட்டிருந்ததாக உணர்ந்தனர். லெனின் புகையிரதத்தில் இருந்து இறங்கியதும், அவரது கரங்களில் சிவப்பு ரோஜாக்களின் ஒரு அழகிய பூங்கொத்து கொடுக்கப்பட்டது, அது அவரது ஒட்டுமொத்த உடை வண்ணத்திற்கு ஒருவகையில் மாறுபட்டதான வண்ணமானதாக இருந்தது. அங்கே ஜோர்ஜியாவைச் சேர்ந்த மென்ஷிவிக்கான Nikolai Chkheidze இன் தலைமையில் களையிழந்த முகங்களுடனான சோவியத் தலைவர்களின் ஒரு குழு ஒன்றை அவர் சந்தித்தார். முகத்தில் ஒரு புன்னகை உறைந்தநிலையில் இருக்க, பதட்டத்துடன் இருந்த அந்த தலைவரின் உத்தியோகபூர்வ வரவேற்பில், இடதுகளின் ஐக்கியம் (unity of the left) கெடுவதை தவிர்ப்பதற்கு லெனினுக்கு விண்ணப்பம் வைப்பதும் இடம்பெற்றிருந்தது. சோவியத் தலைவரின் பிரசங்கத்திற்கு, தனக்கு சம்பந்தமில்லாத ஒன்றைப் போல, லெனின் காது கொடுத்ததாகவே தெரியவில்லை என சுகானோவ் நினைவுகூர்ந்தார். கூரையை பார்வையால் மேய்ந்தார்; பார்வையாளர்களில் தெரிந்த முகங்களை கணக்கெடுத்தார்; கையில் இன்னும் பிடித்துக் கொண்டிருந்த பூங்கொத்து பூக்களை சரிசெய்தார். Chkheidze தன்னுடைய கவலைததும்பிய கருத்துக்களை நிறைவுசெய்த உடனேயே, லெனின் தனது இடிகளை இறக்க ஆரம்பித்தார்:

அன்பார்ந்த தோழர்களே, சிப்பாய்களே, மாலுமிகளே மற்றும் தொழிலாளர்களே! வெற்றிகரமான ரஷ்ய புரட்சிக்காக உங்களை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்வதிலும், உலக பாட்டாளி வர்க்க இராணுவத்தின் முன்னணிப்படையாக உங்களை வாழ்த்துவதிலும் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்... இந்த கொள்ளையிடும் ஏகாதிபத்திய போரானது ஐரோப்பா முழுமையிலும் உள்நாட்டுப் போரின் தொடக்கமாக இருக்கிறது... நமது தோழரான கார்ல் லீப்னெக்ட் அழைப்பு கொடுத்த உடனேயே மக்கள் தங்களது சொந்த முதலாளித்துவ சுரண்டல்தாரர்களுக்கு எதிராக தங்கள் ஆயுதங்களை திருப்புகின்ற நேரம் வெகுதூரத்தில் இல்லை.... உலக சோசலிசப் புரட்சி ஏற்கனவே விடிந்து விட்டது. ஜேர்மனி கொதித்துக் கொண்டிருக்கிறது.. இப்போது எந்தத் தேதியிலும் ஒட்டுமொத்த ஐரோப்பிய முதலாளித்துவமும் நொருங்க கூடும். உங்களால் சாதிக்கப்பட்ட ரஷ்ய புரட்சியானது ஒரு புதிய சகாப்தத்திற்கு பாதை தயாரித்து திறந்து விட்டிருக்கிறது: உலகளாவிய சோசலிச புரட்சி நீடூழி வாழ்க! [16]

லெனினின் வார்த்தைகள் ஏற்படுத்திய மலைப்பூட்டிய தாக்கம் குறித்து சுகானோவ் பதிவுசெய்கிறார்:

அனைத்தும் மிக சுவாரஸ்யமானதாய் இருந்தது! புரட்சியின் வழக்கமான சுவாரஸ்யமின்மைகளால் முழுமையாக விழுங்கப்பட்டிருந்த எங்கள் அனைவரின் கண்களுக்கும் முன்பாய், திடீரென்று, ஒரு பிரகாசமான, கண்கூசச் செய்கின்ற, விந்தையான கலங்கரை விளக்கம் தோன்றி, நாங்கள் “வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த” ஒவ்வொன்றையுமே மங்கச் செய்து விட்டது. நேரே புகையிரதத்தில் இருந்து வந்த லெனினின் குரலானது “வெளியில் இருந்தான ஒரு குரலாய்” இருந்தது. புரட்சியில், அது முரண்பாடு இல்லை என்று நிச்சயமாய் சொல்ல முடியும், ஆனால் புதுமையான, கடுமையான, ஏதோவொருவிதத்தில் காதைச் செவிடாக்கத்தக்கதான ஒரு இசைக்குறிப்பு எங்களுக்குள் கதவை உடைத்து உள்ளே நுழைந்து விட்டிருந்தது.[17]

லெனினின் வார்த்தைகளுக்கு தனது சொந்த எதிர்வினை என்னவாய் இருந்தது என்பதை நினைவுகூர்ந்த சுகானோவ், ”உலக சோசலிச புரட்சியின் தொடக்கத்தை அங்கீகரிப்பதிலும், உலகப் போருக்கும் ஏகாதிபத்திய அமைப்புமுறையின் பொறிவுக்கும் இடையிலான முறிக்கமுடியாத தொடர்பை நிறுவிக் காட்டுவதிலும்... லெனின் மற்றவர்களைக் காட்டிலும் நூறு மடங்கு சரியானவராய் இருந்தார்” என்று தான் உணர்ந்ததை ஒப்புக்கொண்டார்.[18] ஆனாலும், மென்ஷிவிக்குகளில் மிகவும் இடதுசாரியாக இருந்த கூறுகளிடையே கூட பண்புநலனாய் இருந்த அரசியல் இருதலை நிலையின் சிகரமாய் இருந்த சுகானோவ், லெனினின் முன்னோக்கு எத்தனை சரியாய் இருந்தபோதும், அதனை நடைமுறை புரட்சிகர நடவடிக்கையாக மாற்றுவதற்கான எந்த சாத்தியத்தையும் காண முடியாதவராய் இருந்தார்.

லெனின் பின்லாந்து இரயில் நிலைய வரவேற்பில் இருந்து பழைய தோழர்களுடனான ஒரு குறுகியநேர இரவு உணவுக்கு சென்றார், பின் அங்கிருந்து ஒரு கூட்டத்திற்கு சென்று, அங்கே அவர் வழங்கிய சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த ஒரு உரையறிக்கையில், அபிவிருத்தி கண்ட வடிவத்தில் வரலாற்றில் ’ஏப்ரல் ஆய்வறிக்கை’களாய் பதிவாக இருந்த ஒன்றின் வெளிவரையை அவர் வழங்கினார். ஒரு சோசலிசப் புரட்சியின் அடிப்படையில் மட்டுமே ஜனநாயக புரட்சியானது பாதுகாக்கப்பட முடியும், பூர்த்தியடைய முடியும் என்றும், அதற்கு ஏகாதிபத்திய போரின் மறுதலிப்பும், முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் தூக்கிவீசப்படுவதும், மற்றும் அரசு அதிகாரம் சோவியத்துகளுக்கு மாற்றப்படுவதும் அவசியமாக இருந்தது என்றும் விளக்கினார்.

கட்சியின் உறுப்பினராக இல்லாத போதிலும் கூட எப்படியோ அனுமதி பெற்று கூட்டத்திற்குள் நுழைந்து விட்டிருந்த சுகானோவ், அந்த அறிக்கையை இவ்வாறு விவரித்தார்:

தான் வந்த சீலிட்ட புகையிரதத்தில் இருந்து அப்போதுதான் இறங்கியிருந்த லெனின், தனது ஒட்டுமொத்த வகுத்தளிப்பை, உலக சோசலிசப் புரட்சியில் தனது அத்தனை வேலைத்திட்டம் மற்றும் தந்திரோபாயத்தை, விலாவாரியாய் விவரிப்பதற்கு எதிர்பார்த்தார் என்று நான் நினைக்கவில்லை. இந்த உரை அநேகமாய் பெருமளவுக்கு ஒரு மேம்படுத்தலாய் இருக்கலாம், என்பதால் அதில் எந்த தனித்துவமான அடர்த்தியோ அல்லது செதுக்கப்பட்ட திட்டமோ இல்லாதிருந்தது. ஆயினும் உரையின் ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு கூறும், ஒவ்வொரு சிந்தனையும் அற்புதமாய் செதுக்கப்பட்டதாய் இருந்தது; இந்த சிந்தனைகள் லெனின் மனதை நீண்டநாட்களாய் முழுமையாக ஆக்கிரமித்திருந்தன என்பதும் அவரால் அவைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் பாதுகாக்கப்பட்டிருந்துள்ளன என்பதும் தெளிவானது. மலைப்பூட்டும் வார்த்தைச் செல்வங்கள், அடிப்படையான மூளை-உழைப்பின் மூலம் மட்டுமே எட்டத்தக்க வரையறைகள், தெளிவுவிளக்கங்கள், மற்றும் இணை (விளக்க) சிந்தனைகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தமான மலைப்பூட்டும் மடிப்புகளில் இது எடுத்துக்காட்டப்பட்டது.

உலகப் போரின் விளைவாய் வெடிக்கத் தயாராய் இருந்த உலகளாவிய சோசலிச புரட்சியில் இருந்துதான் லெனின் தொடங்கினார் என்பது உண்மையே. போரில் வெளிப்பட்டிருந்த ஏகாதிபத்திய போரின் நெருக்கடியானது சோசலிசத்தின் மூலமாக மட்டுமே தீர்க்கப்பட முடியும். ஏகாதிபத்திய போரானது... அது ஒரு உள்நாட்டுப் போராக மாறுவதைத் தடுக்க முடியாது என்பதோடு, ஒரு உள்நாட்டுப் போரின் மூலமாக, ஒரு உலகளாவிய சோசலிசப் புரட்சியின் மூலமாக மட்டுமே உண்மையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட முடியும். [19]

லெனினின் அரசியல் வேலைத்திட்டமானது —இது அவரது மூலோபாயம் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்துடன் ஒரேவரிசையில் நிற்பதை குறித்தது— பிரதானமாய், தேசியரீதியாக தீர்மானமாகின்ற சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் ரஷ்யாவில் இருந்த நிலை மீதான ஒரு மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவில்லை. தொழிலாள வர்க்கம் முகம்கொடுத்த அடிப்படையான கேள்வி, ஒரு தேசிய அரசாக, ரஷ்யா, சோசலிசத்துக்கான ஒரு உருமாற்றத்தை அனுமதிக்குமளவுக்கான முதலாளித்துவ அபிவிருத்தி மட்டத்தை எட்டி விட்டிருந்ததா என்பதாக இருக்கவில்லை. மாறாக ரஷ்ய தொழிலாள வர்க்கமானது, அதன் தலைவிதி ஏகாதிபத்திய போருக்கும் அதன் தோற்றமூலமாய் இருந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்துடன் பிரிக்கவியலாமல் பிணைந்ததாய் இருக்கின்ற ஒரு வரலாற்று சூழ்நிலைக்கு முகம்கொடுத்திருந்தது.

ட்ரொட்ஸ்கி ரஷ்யா திரும்புகிறார்

லெனின் தனது சொந்த கட்சிக்குள்ளாக இருந்த எதிர்ப்பை வென்று விட்டதும், போல்ஷிவிக்குகளால், மென்ஷிவிக்குகள் மற்றும் சமூகப் புரட்சியாளர்களது அரசியல் செல்வாக்குக்கு எதிரான போராட்டத்தை அபிவிருத்தி செய்ய முடிந்தது. இந்த முயற்சிகள் மே மாதம் ட்ரொட்ஸ்கி திரும்பியதன் மூலம் பரந்த அளவில் வலுப்படுத்தப்பட்டன. நியூயோர்க்கில் இருந்து ரஷ்யாவுக்கு ட்ரொட்ஸ்கி பயணம் செய்த படகை கனடாவின், ஹாலிஃபாக்ஸில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் மறித்து, ட்ரொட்ஸ்கியை போர்க் கைதிகள் முகாமில் ஒரு மாதம் அடைத்து வைத்திருந்ததன் காரணமாக, பெட்ரோகிராடுக்கு அவர் வருவது தாமதப்படுத்தப்பட்டு விட்டிருந்தது. ட்ரொட்ஸ்கியை சட்டவிரோதமாக பிடித்து வைத்ததற்கு எதிராக ரஷ்யாவில் போராட்டங்கள் எழுந்ததையடுத்து பிரிட்டிஷார் அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க இடைக்கால அரசாங்கம் தள்ளப்பட்டது.

ஆயினும் இடைக்கால அரசாங்கமும் சரி, சோவியத்தின் தலைவர்களும் சரி ட்ரொட்ஸ்கி திரும்பி விட்டதை அறிந்து மகிழ்ச்சி கொள்ளவில்லை. தொழிலாள வர்க்கம் தீவிரப்படுவது பெருகிச் செல்வதன் மீதான ஒரு மட்டுப்படுத்தும் தாக்கமாக அவர் நிரூபணமாவார் என்பதான நம்பிக்கைகளை சிலர் வளர்த்துக் கொண்டிருந்தனர். சுகானோவ் நினைவுகூர்ந்தார்: “அவர் அப்போதும் போல்ஷிவிக் கட்சிக்கு வெளியில் தான் இருந்தார் என்ற நிலையில், அவர் ’லெனினை விடவும் மோசமானவர்’ என்ற எண்ணத்தை ஊட்டும் எண்ணற்ற ஊகங்கள் அவரைப் பற்றி உலாவிக் கொண்டிருந்தன.” [20]

இப்போது லெனினுடன் இருந்த ஆரம்பகட்ட கருத்துவேறுபாடுகள் எல்லாம் தீர்க்கப்பட்டு விட்டிருந்த நிலையில், ட்ரொட்ஸ்கி போல்ஷிவிக் கட்சியில் நுழைந்தார், அங்கு அவர் லெனினுக்கு அடுத்தபடியான ஒரு தலைமையான பாத்திரத்தை உடனடியாக ஏற்றார். பெட்ரோகிராட் பிராந்தியங்களுக்கு-இடையிலான குழுவில் (mezhrayontsi) செயலூக்கத்துடன் இயங்கிக் கொண்டிருந்த ட்ரொட்ஸ்கியின் நெருக்கமான அரசியல் கூட்டாளிகள் பலரும் அவரது தலைமையை பின்பற்றி போல்ஷ்விக்குகளுடன் இணைந்து, அக்டோபர் புரட்சியிலும், உள்நாட்டுப் போரிலும் மற்றும் சோவியத் அரசாங்கத்திலும் முக்கிய பாத்திரங்களை வகிக்கச் சென்றனர். சந்தேகமே வேண்டாம், mezhrayontsi இன் இந்த ஆகச்சிறந்த பிரதிநிதிகளில் 1930களில் உயிர்பிழைத்திருந்தவர்களில் அநேகம் பேரை ஸ்ராலின் இறுதியில் கொன்று விட்டார்.

பிப்ரவரி புரட்சியால் தட்டியெழுப்பப்பட்டிருந்த நம்பிக்கைகளில் எதனையும் இடைக்கால அரசாங்கத்தால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இடைக்கால அரசாங்கமானது, தனது சொந்த ஏகாதிபத்திய அபிலாசைகளை தியாகம் செய்ய விருப்பமின்றியும், பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சார்ந்திருந்த நிலையிலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மறுத்தது. பரந்த மக்களின் மனோநிலைக்கு எதிரானவிதத்தில், கெரென்ஸ்கி அரசாங்கமானது ஜூனில் தொடக்கிய தாக்குதல் நடவடிக்கைகள் பேரழிவானவையாய் முடிந்தன. சோவியத் தலைவர்கள் இடைக்கால அரசாங்கத்துடன் முறித்துக் கொண்டு அதிகாரத்தை தங்கள் சொந்தக் கரங்களில் எடுக்க வேண்டும் என்று கோரி போல்ஷிவிக் கட்சி நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு பெருகியது. போல்ஷிவிக் கட்சியின் செல்வாக்கு பெருகிச் சென்ற நிலையில், லெனினை அவதூறு செய்வதற்கும் மதிப்பிழக்க செய்வதற்கும் இடைக்கால அரசாங்கமும், முதலாளித்துவ ஊடகங்களும் மற்றும் முன்னணி மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களும் செய்த முயற்சிகள் மேலும் மேலும் வெறிகொண்டவையாயின.

பாரிய அரசாங்க-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒடுக்கப்பட்டதை -”ஜூலை நாட்கள்”- தொடர்ந்து போல்ஷிவிக் கட்சிக்கு எதிராய், குறிப்பாக லெனினுக்கு எதிராய் ஒரு ஆவேசமான பிரச்சாரம் நடைபெற்றது. அவர் ரஷ்யா திரும்புவதற்கு ஜேர்மனி வழியாய் பயணம் செய்ய வேண்டியிருந்தது என்ற உண்மையானது லெனின் படுகொலை செய்யப்படுவதற்கு அவசியமான அரசியல் சூழ்நிலைகளுக்கு தயாரிப்பு செய்கின்ற நோக்கத்துடனான ஒரு அவதூறுப் பிரச்சாரத்திற்கு எண்ணெய்வார்ப்பதற்காய் பிடித்துக் கொள்ளப்பட்டது.

அரசும் புரட்சியும்

இடைக்கால அரசாங்கம் ஜூலை 7 அன்று லெனினை கைது செய்ய உத்தரவிட்டது. தான் பிடிபட்டால் சிறைக்கு செல்லும் முன்பாக தன்னைக் கொன்று விடுவார்கள் என்பதை நன்கறிந்து வைத்திருந்த லெனின் தலைமறைவானார். பெட்ரோகிராடில் இருந்து நிர்ப்பந்தமாய் தலைமறைவாக்கப்பட்டிருந்த அடுத்த இரண்டு மாத காலத்தின் சமயத்தில், அவர் அரசும் புரட்சியும் என்ற நூலை எழுதினார். அந்தப் புத்தகத்திற்கு முன்னுரையில் அவர் இந்த விளக்கத்தை எழுதினார்:

அரசு என்ற கேள்வி இப்போது தத்துவார்த்தரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் குறிப்பான முக்கியத்துவத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய போரானது ஏகபோக முதலாளித்துவத்தை அரசு-ஏகபோக முதலாளித்துவமாக உருமாற்றும் நிகழ்முறையை தீவிரத்துடன் முடுக்கி விட்டிருக்கிறது தீவிரப்படுத்தியிருக்கிறது.... நீடித்த போரின் முன்கண்டிராத பயங்கரங்களும் துயரங்களும் மக்களின் நிலையை தாங்கமுடியாததாக ஆக்கிக் கொண்டிருப்பதோடு அவர்களது கோபத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது. உலக பாட்டாளி வர்க்கப் புரட்சியானது தெளிவுபட முதிர்ந்து கொண்டிருக்கிறது. அரசுடனான அதன் உறவு தொடர்பான கேள்வி நடைமுறை முக்கியத்துவத்தை பெற்றுக் கொண்டிருக்கிறது. [21]

இந்த குறிப்பிடத்தக்க படைப்பில், லெனின், “வரலாற்று அகழ்வாய்வு” இல் அமைந்த ஒரு பயிற்சியாக அவர் குறிப்பிட்டதை மேற்கொண்டு, ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தின் மீது அதிகாரத்தையும் மேலாதிக்கத்தையும் பராமரிப்பதற்காக பிரயோகிக்கின்ற ஒரு வர்க்க ஆட்சியின் ஒரு சாதனமாக அரசின் தன்மை குறித்த மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் கற்பித்த பாடங்களை மறுஸ்தாபகம் செய்தார். அரசு என்ற ஒன்று இருப்பதே வர்க்க குரோதங்கள் இருப்பதிலும் அவற்றின் சமரசப்படுத்தவியலாத தன்மையிலும் இருந்தே எழுகிறது. அரசு என்பது “வர்க்கங்களின் நல்லிணக்கத்திற்கான” ஒரு அங்கம் என்பதாகக் காட்சியளிக்கும் வகையில் மார்க்சை “திருத்தல்செய்கின்ற” முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் மீது லெனின் தாக்கினார்.[22]

அரசும் புரட்சியும் என்ற நூலை லெனின் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாய்க் கருதினார், ஒருவேளை தான் அகால மரணமடைய நேர்ந்தால், இதனை வெளியிடுவதற்கு சிறப்புக் கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பாக அறிவுறுத்தினார்.

ஆனால் லெனின் உயிர்தப்பியிருந்தார். செப்டம்பருக்குள்ளாக, அரசியல் சூழ்நிலையானது தீவிரமாக இடது நோக்கி நகரத் தொடங்கியது. ஜெனரல் கோர்னிலோவ் மூலமான ஒரு எதிர்ப்புரட்சிகர ஆட்சிக்கவிழ்ப்பு அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்த சோவியத் தலைவர்கள், பரந்த மக்களை அணிதிரட்டுகின்ற மற்றும் அவர்களை ஆயுதபாணியாக்குகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். ஜூலை முதலாக சிறையில் இருந்து வந்திருந்த ட்ரொட்ஸ்கி விடுதலை செய்யப்பட்டார். பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கு —இதனை ஒழுங்கமைப்பதில் போல்ஷிவிக்குகள் ஒரு இன்றியமையாத பாத்திரம் வகித்தனர்— முகம்கொடுத்த நிலையில் கோர்னிலோவின் சிப்பாய்கள் அவரை விட்டு ஓடினர், முயற்சி செய்த ஆட்சிக்கவிழ்ப்பு நிலைகுலைந்து போனது.

"அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே

ஆட்சிக்கவிழ்ப்பை முன்னெடுப்பதில் கோர்னிலோவுடன் இரகசிய சதியில் ஈடுபட்டிருந்த கெரென்ஸ்கி அரசியல்ரீதியாய் மதிப்பிழந்து போயிருந்தார். லெனின் இன்னும் தலைமறைவாய் இருந்த நிலையில், “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே” என்ற சுலோகத்தை முன்னெடுத்த போல்ஷிவிக் கட்சியானது வெகுஜன ஆதரவில் ஒரு பாரிய அதிகரிப்பை அனுபவித்தது. இடைக்கால அரசாங்கத்துடன் முறித்துக் கொள்வதற்கும் அரசு அதிகாரம் சோவியத்துகளுக்கு மாற்றப்படுவதற்கு ஒப்புதலளிப்பதற்கும் இன்னும் மறுத்து வந்த மென்ஷிவிக்குகளை விட்டு தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் விலகின.

செப்டம்பரில், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்த நிலையிலும், அத்துடன் ரஷ்யாவெங்கிலும் பொதுவாக விவசாயிகள் கிளர்ச்சியில் இறங்கியிருந்த நிலையிலும், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு கிளர்ச்சியை ஒழுங்கமைப்பதற்கான ஸ்தூலமான தயாரிப்புகளை தொடங்குவதற்காக போல்ஷிவிக் கட்சியின் மத்திய குழுவை லெனின் அழைத்தார். அக்டோபர் 10 அன்று, மத்திய குழுவின் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக லெனின் பெட்ரோகிராடுக்குள் நுழைந்திருந்தார், இக்குழுவில் கிளர்ச்சிக்கு ஆதரவாய் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இடைக்கால அரசாங்கத்தைத் தூக்கியெறிவதற்கு உண்மையில் முயற்சி செய்வதற்கு எதிராய் கணிசமான எதிர்ப்பும், கிளர்ச்சிக்கான ஒரு மூலோபாயத் திட்டத்தை வகுக்கும் விடயத்திலான கருத்துவேறுபாடும் கட்சிக்குள்ளாய் நிலவியது.

போல்ஷிவிக்-தலைமையிலான கிளர்ச்சி குறித்த ஒரு விரிவான திறனாய்வு இந்த உரையின் எல்லைக்குள் சாத்தியமில்லாதது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இட்டுச் சென்ற நாட்களில் போல்ஷிவிக்கின் தலைமைக்குள்ளாக எழுந்த முக்கியமான கருத்துவேறுபாடுகளை கவனமாக ஆய்வு செய்வது அதற்கு அவசியமானதாகும். ட்ரொட்ஸ்கியின் அக்டோபரது படிப்பினைகள் மற்றும் அவரது ரஷ்ய புரட்சியின் வரலாறு ஆகியவை போல்ஷிவிக் கட்சிக்குள் எழுந்த மோதல்கள் குறித்தும் அவற்றின் அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் குறித்துமான விவரிப்புகளை வழங்குகின்றன. புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கில் புறநிலை மற்றும் அகநிலைக் கூறுகள் இடையிலான பரிவர்த்தனையை புரிந்து கொள்வதில் இவை இன்றளவும் விஞ்சவியலாதவையாக தொடர்ந்தும் திகழ்கின்றன.

ஆயினும் அக்டோபர் புரட்சி தொடர்பான ஒரு அதிமுக்கிய விடயம் கூறியாகப்பட வேண்டியிருக்கிறது. அக்டோபரில் இடைக்கால அரசாங்கம் தூக்கியெறியப்பட்டமையானது எந்த கணிசமான மக்கள் ஆதரவும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட ஒரு சதியாலோசனைக் கவிழ்ப்பு என்பதான கூற்று கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்திற்கு போல்ஷிவிக்குகளின் அரசியல் எதிரிகளாலும் பிற்போக்கான வரலாற்றாசிரியர்களாலும் முடிவற்று கூறப்பட்டு வந்திருக்கிறது; எண்ணற்ற வடிவங்களில் மறுவடிவம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. தனது அரசாங்கம் ஒரு படுபயங்கரமான மற்றும் குற்றவியல் சதிக்கு பலியானதாக கெரென்ஸ்கியே —இவரே 1970 வரை உயிர்வாழ்ந்தார், ஆகவே அரைநூற்றாண்டுக்கும் மேல் அவர் உயிர்பிழைத்து வாழ முடிந்திருந்தது— 89 ஆம் வயதில் அவர் மரணமடையும் வரையில், தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருந்தார்.

போல்ஷிவிக்குகள் எவ்வாறு வெற்றி பெற்றார்கள்

அக்டோபர் புரட்சியை மக்கள் ஆதரவற்ற ஒரு ஆட்சிக்கவிழ்ப்பாக சிறுமைப்படுத்துவதென்பது ஏராளமான அறிஞர்களது ஆய்வுகளின் மூலமாக மறுதலிக்கப்பட்டிருக்கிறது, இவற்றில் அமெரிக்க வரலாற்றாசிரியரான அலெக்ஸாண்டர் ரபினோவிட்ச்சின் படைப்புகள் மிகவும் திறம்பட்டவையும் கவனத்திற்குரியவையும் ஆகும். ரஷ்ய புரட்சி குறித்த அவரது ஆயுட்காலம் முழுமையான ஆய்வின் மூன்றாம் தொகுதியாக 2007 இல் வெளியான அதிகாரத்தில் போல்ஷிவிக்குகள் (The Bolsheviks in Power) புத்தகத்திற்கு அவர் எழுதிய முன்னுரையில், பேராசிரியர் ரபினோவிட்ச் பின்வருமாறு எழுதினார்:

போல்ஷிவிக்குகள் அதிகாரத்துக்கு வருகின்றனர் (The Bolsheviks Come to Power) மற்றும் அதனுடன் புரட்சிக்கான முகவுரை (Prelude to Revolution) ஆகியவை அக்டோபர் புரட்சி என்பது லெனின் தலைமையில் புரட்சிவெறியர்களின் ஒரு சிறிய, ஐக்கியப்பட்ட குழுவினால் மிகத்திறமையாக வழிநடத்தப்பட்ட ஒரு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு அதிகமான வேறொன்றுமில்லை என்பதாக நிலவி வருகின்ற மேற்கத்திய கருத்துகளை சவால் செய்தது. 1917 இல், பெட்ரோகிராட்டில் இருந்த போல்ஷிவிக் கட்சி ஒரு வெகுஜன அரசியல் கட்சியாக தன்னை உருமாற்றிக் கொண்டது என்பதையும், லெனினுக்குப் பின்னால் அடிபிறழாமல் நடக்கின்ற ஒற்றைக்கல் இயக்கமாக இல்லாமல், அதன் தலைமையானது இடது, மத்திய மற்றும் ஓரளவுக்கான வலது அணிகளாக பிளவுபட்டிருந்தது, புரட்சிகர மூலோபாயத்திற்கும் தந்திரோபாயத்திற்கும் உருக்கொடுப்பதில் அவை ஒவ்வொன்றும் உதவின என்பதையும் கண்டேன். 1917 பிப்ரவரியில் ஜார் தூக்கிவீசப்பட்டதற்குப் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கட்சியின் போராட்டத்தில் அது வெற்றிபெற்றதற்கான காரணங்களாய் அமைப்புரீதியான நெகிழ்வுத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் வெகுஜன அபிலாசைகளுக்கு பதிலிறுக்கும் தன்மை ஆகியவற்றுடன் தொழிற்சாலை தொழிலாளர்களுடனும், பெட்ரோகிராட் இராணுவச் சாவடி சிப்பாய்களுடனும் மற்றும் பால்டிக் கப்பல்வரிசை மாலுமிகளுடனுமான அதன் நீண்ட, கவனமாய் வளர்த்தெடுக்கப்பட்ட தொடர்புகளும் இருந்தன என்பதையும் நான் கண்டேன். ஆக, பெட்ரோகிராட்டிலான அக்டோபர் புரட்சி என்பது ஒரு இராணுவ நடவடிக்கையைக் காட்டிலும் அதிகமானதாய், வெகுஜன அரசியல் கலாச்சாரத்திலும், பிப்ரவரி புரட்சியின் முடிவுகளின் மீது எழுந்திருந்த பரவலான அதிருப்திகளிலும், அந்த பொருட்சூழலில், உடனடியான அமைதி, ரொட்டி மற்றும் விவசாயிகளுக்கு நிலம் ஆகியவற்றுக்கு போல்ஷிவிக்குகள் அளித்த வாக்குறுதிகளுக்கு காந்தம் போன்று தோன்றிய ஈர்ப்பிலும், அத்துடன் பலகட்சி சோவியத்துகள் மூலமாக செயல்பாட்டில் இருந்த சாமானியர்நிலை ஜனநாயகத்திலும் வேரூன்றியிருந்த ஒரு படிப்படியான நிகழ்முறையாக இருந்தது என்ற முடிவுக்கு நான் வந்தேன். [23]

பேராசிரியர் ரபினோவிட்ச் மென்ஷிவிக் தலைவர்களுடன் தனிப்பட்ட நெருக்கமான தொடர்புகள் கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் வளர்ந்து வந்தவராய் இருந்தார். பெட்ரோகிராட் சோவியத்தில் மென்ஷிவிக் கன்னையின் தலைவராய் இருந்த இராக்லி செரடெலி உடன் அவருக்கு தனிப்பட்ட வகையில் பரிச்சயம் இருந்தது. இந்த விடயங்களின் மென்ஷிவிக் தரப்பு கதைகளை அவர் பலமுறைகள் கேட்டிருந்தார். ஆனாலும் பேராசிரியர் ரபினோவிட்ச்சின் சொந்த விஞ்ஞானபூர்வ ஆய்வானது 1917 இல் மென்ஷிவிக்குகள் தோல்வியடைந்ததற்கு அவர்களால் கூறப்பட்டிருந்த விளக்கங்களுடன் முரண்படுகின்ற முடிவுகளுக்கு அவரை இட்டுச் சென்றிருந்தது.

அக்டோபர் புரட்சிக்கு முதலாளித்துவ-ஏகாதிபத்திய பதிலிறுப்பு

அக்டோபர் புரட்சியின் உடனடிப் பிந்தைய காலத்தில், ரஷ்ய முதலாளித்துவ வர்க்கமோ அல்லது சர்வதேச முதலாளித்துவ வர்க்கமோ பெட்ரோகிராட் நிகழ்வுகளின் அரசியல்ரீதியான வீச்சை தெளிவாகப் புரிந்திருக்கவில்லை. போல்ஷிவிக் வெற்றி என்பது ஒரு கொடுங்கனவு அதிலிருந்து விரைவில் எழுந்து விடலாம் என்பது போலத்தான் ஆளும் உயரடுக்கினர் எதிர்வினையாற்றினார்கள். நவம்பர் 9 அன்று (வாஷிங்டன் நேரப்படி), இடைக்கால அரசாங்கம் தூக்கியெறியப்பட்டு 48 மணி நேரம் கூட முடிந்திராத நிலையில், நியூயோர்க் டைம்ஸ், “போல்ஷிவிக்குகளின் ஆட்சி குறைந்தகாலமே நீடிக்குமென வாஷிங்டன் மற்றும் தூதரக அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்” என்று செய்தி வெளியிட்டது. டைம்ஸின் செய்தி தனது வாசகர்களுக்கு பின்வருமாறு உறுதியளித்தது:

பெட்ரோகிராட்டில் இருந்து வருகின்ற செய்தி வெளியீடுகள் காட்டுகின்ற அளவுக்கு ரஷ்ய நிலைமை இருண்டிருப்பதாக இங்கே நம்பவில்லை. பெட்ரோகிராட் அரசாங்கத்தின் மீது போல்ஷிவிக் புரட்சிகர இராணுவ கமிட்டி கொண்டிருக்கும் இப்போதைய கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கவியலாது என்ற கருத்தில் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் ரஷ்ய தூதரக அதிகாரிகளும் உடன்படுகின்றனர்.... இது தவறான விளைவை அல்லாமல் நல்ல விளைவையே கொண்டுவரும், ஏனென்றால் நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு ஒரு வலிமையான மனிதர் மேலெழுந்து வருவதற்கான சந்தர்ப்பத்தை இது வசதிசெய்து தந்திருக்கிறது.

ஆனால் ஜனாதிபதி வூட்ரோ வில்சனின் அரசாங்கம் எதிர்பார்த்த ஒரு வலிமையான மனிதர் அங்கே எழுந்து வரவில்லை, அத்துடன் ஒரு வாரத்துக்குள்ளாகவே, புரட்சி விரைவிலேயே இரத்தக்குளத்தில் மூழ்கடிக்கப்பட்டு விடும் என்பதான நம்பிக்கை போய் கடுங்கோபம் வந்திருந்தது. டைம்ஸ் “போல்ஷிவிக்” என்ற தலைப்பில் நவம்பர் 16 அன்று வெளியிட்ட ஒரு தலையங்கத்தில், புரட்சியாளர்களை எச்சரிக்கை உணர்வின்றி அலட்சியமாகக் கையாண்டதற்காகவும், கோர்னிலோவ் ஆட்சிக்கவிழ்ப்பில் இருந்து பின்வாங்கியதற்காகவும் கெரென்ஸ்கியை கண்டனம் செய்தது. வன்மம் கொதிக்க, அந்தத் தலையங்கம் தொடர்ந்து எழுதியது:

ஆயினும், கெரென்ஸ்கி தோற்றுவிட்டிருந்தாலும் கூட, போல்ஷிவிக்குகளின் அழிவுகரமான கரங்களில் இருந்து அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கான வலிமையுடன் வேறொருவர் வரலாம். இன்னும் சொன்னால், அவர்களால் நிரந்தரமாக அதைத் தக்கவைக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் பரிதாபகரமான வகையில் அறியாமை கொண்ட, அறிவாழமற்ற மனிதர்களாவர், தங்களுக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கும் மிகப் பரந்த சக்திகள் குறித்த கொஞ்சமும் புரிதலில்லாத அரசியல் சிறுபிள்ளைகளாவர், வார்த்தைஜாலத்தை தவிர்த்து புகழ்பெறுவதற்கு வேறெந்த ஒற்றைத் தகுதியும் கூட இல்லாத மனிதர்களாவர்; நீண்டகாலத்திற்கு அவர்களை அப்படியே விட்டுவிட்டால் கூட அவர்களது திறமையின்மையே அவர்களை அழித்து விடும், அவர்களினும் மோசமானவர்களே அவர்களைப் பிரதியீடு செய்வார்கள் என்பது ஒருபக்கம் இருந்தாலும் கூட. இதுதான் பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறாய் இருந்தது, வார்த்தைஜாலம் மிக்க திறமையற்றவர்கள் மற்றும் அறியாமைகொண்டவர்களின் கலவை மாறிய கலவையால் ஆன பல வண்ண அரசாங்கங்கள் வந்துபோகும், இறுதியாக திறமையின்மையும் அறியாமையும் அவர்கள் ஒட்டுமொத்தத்தையும் அழித்துப்போடும் வரையிலும்.

நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் அது எதன் சார்பாக பேசியதோ அந்த சர்வதேச முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகள் ஆகியவற்றின் கோபத்தைத் தூண்டுகின்ற வகையில், இடைக்கால அரசாங்கத்தை தூக்கிவீசியதற்குப் பிந்தைய மணித்தியாலங்கள் மற்றும் நாட்களில் போல்ஷிவிக்குகள் அப்படி என்ன செய்து விட்டிருந்தார்கள்? முதலாவதாய், போல்ஷிவிக்குகள் அமைதி உருவாக்கும் ஒரு தீர்ப்பை வெளியிட்டிருந்தார்கள், சேர்க்கைகள் மற்றும் இழப்பீடுகள் இல்லாமல் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தைகளை தொடக்குவதற்கு போரிடும் தரப்புகள் அனைத்திற்கும் அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். இரண்டாவதாய், புதிய சோவியத் அரசாங்கமானது நிலம் குறித்த ஒரு உத்தரவை வெளியிட்டது, அதில் “நிலம் தனியார் வசமிருப்பது என்றென்றைக்குமாய் ஒழிக்கப்பட வேண்டும்; நிலம் வாங்கப்பட முடியாது, விற்கப்பட முடியாது, குத்தகைக்கு விடப்பட முடியாது, அடகு வைக்கப்பட முடியாது அல்லது வேறு எந்த வகையிலும் அந்நியப்படுத்தப்பட முடியாது.”[24]


உலக வரலாற்றில் அக்டோபர் புரட்சிக்கான இடம்

இவ்வாறாய், உலக வரலாற்றின் மாபெரும் சோசலிசப் புரட்சியானது தொடங்கியது. முன்னதாய் மற்ற புரட்சிகள் வந்திருந்தன: 1640-49 ஆங்கிலேயப் புரட்சி, 1776-83 அமெரிக்கப் புரட்சி, 1789-94 பிரெஞ்சுப் புரட்சி மற்றும் 1861-65 இரண்டாவது அமெரிக்கப் புரட்சி ஆகியவை. இவை எவையுமே அவை பிரகடனம் செய்திருந்த இலட்சியங்களை எட்டி விடவில்லை அல்லது எட்டுவதற்கு நெருக்கமாகக் கூட வரவில்லை என்பதால், மனிதகுலத்தின் வரலாற்று வளர்ச்சியிலான மைல்கற்களாக அவற்றின் முக்கியத்துவம் குறைந்துபோய் விடுவதில்லை. ஒரு மேம்பட்ட உலகத்தைப் பின்தொடர்ந்து கடந்தகாலத் தலைமுறைகள் செய்திருக்கக் கூடிய தியாகங்களை மதிப்பிழக்கச் செய்வதற்கு பின்நவீனத்துவவாதிகள் செய்கின்ற முயற்சிகளைப் போன்ற புத்திஜீவித்தனரீதியாக வெறுப்புக்குரியது வேறொன்றுமில்லை. இத்தகைய குட்டி-முதலாளித்துவ சிடுமூஞ்சித்தன செயல்பாடுகளில், மார்க்சிச சோசலிஸ்டுகளுக்கு எந்தவிதமான அனுதாபமும் தோன்றுவதற்கில்லை. முந்தைய வரலாற்று சகாப்தங்களை சேர்ந்த புரட்சியாளர்களின் முயற்சிகளில் இருந்த வரலாற்றால் தீர்மானிக்கப்பட்டதாய் இருந்த வரம்புகளை உணர்ந்து கொள்கின்ற அதேநேரத்தில், அவர்களுக்கு உரிய மதிப்பை நாம் அவர்களுக்கு செலுத்துகிறோம்.

உலக வரலாற்றிலான ஒரு நிகழ்வாக, ரஷ்ய புரட்சி என்பது, அநீதி மற்றும் மனித துயரத்தின் காரணங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு முடிவுகட்டுவதற்கு மனிதகுலம் மேற்கொண்ட மிக உயர்ந்த ஆயினும் விஞ்சப்படாத முயற்சியைக் குறிக்கிறது. இணைசொல்ல முடியாத அளவுக்கு மனித நனவை புறநிலை அவசியத்துடன் ஒருசேர நிறுத்துவதை அக்டோபர் புரட்சி சாதித்தது. அதன் அரசியல் தலைவர்களது முடிவுகளிலும் நடவடிக்கைகளிலும் மட்டும் இது வெளிப்பாடு காணவில்லை. அக்டோபர் புரட்சியின் நிகழ்வுகளை, அதன் தலைவர்களது —அவர்களில் மிகவும் மகத்தானவரினுடையது என்றாலும்— நடவடிக்கைகளைக் கொண்டு காண்பதென்பது, புரட்சியின் முக்கியத்துவத்தை தவறவிடுவதாகி விடும். ஒரு புரட்சியில், பரந்த மக்களே வரலாறு படைக்கின்றனர்.

இடைக்கால அரசாங்கத்தை தூக்கிவீசுவதில் தொழிலாள வர்க்கம் சமூக-பொருளாதார அபிவிருத்தியின் விதிகள் குறித்த ஆழமான விழிப்புடன் செயல்பட்டது. ட்ரொட்ஸ்கி எழுதினார், “சிந்தனைகள் ஒரு புறநிலை நிகழ்வுப்போக்குக்கு பொருந்தியமைந்து அந்த நிகழ்வுப்போக்கில் தாக்கம் ஏற்படுத்தி அதனை வழிநடத்துவதை சாத்தியமாக்குமானால், அவை விஞ்ஞானபூர்வமானவை ஆகின்றன.”[25] இந்த அடிப்படையான அர்த்தத்தில், மில்லியன் கணக்கான மக்களின் சிந்தனைகளும் நடைமுறையும் விஞ்ஞானத்தின் மட்டத்திற்கு உயர்ந்தது. விஞ்ஞான தத்துவம் பரந்த மக்களைப் பற்றியதில் அது ஒரு சடவாத சக்தியாக உருமாற்றம் பெற்றது. தொழிலாள வர்க்கமானது சமூக-பொருளாதார உறவுகளின் ஒரு காலாவதியான அமைப்புமுறையை ஒழிப்பதற்கும், முதலாளித்துவ சந்தையின் அராஜகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், பொருளாதார வாழ்க்கையை ஒழுங்கமைப்பதில் நனவான திட்டமிடலை அறிமுகப்படுத்துவதற்குமாய் இறங்கியது. 1920கள் மற்றும் 1930களில், அமெரிக்க புத்திஜீவி அடுக்கு இன்னும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு உறுதிபூண்டும் முதலாளித்துவ சமுதாயத்தை நோக்கிய ஒரு விமர்சனபூர்வ மனோபாவத்தை ஏற்கும் திறன்படைத்ததாயும் இருந்த ஒரு சமயத்தில், அப்போது “சோவியத் பரிசோதனை” என்பதாக அழைக்கப்பட்ட ஒன்றின் வரலாற்று முக்கியத்துவம் பரவலாய் அங்கீகரிக்கப்பட்டது.

1931 இல், அமெரிக்காவின் தாராளவாத மெய்யியலாளரான ஜோன் டுவி, சோவியத் ஒன்றியம் குறித்த பல புத்தகங்களுக்கு New Republic இல் ஒரு மதிப்பாய்வை எழுதினார். டுவி குறிப்பிட்டார், “ரஷ்யா அமெரிக்காவுக்கு ஒரு சவாலாய் நிற்கிறது என்றால், அதற்கு இது அது என ஏதோவொரு காரணமல்ல, நாம் நமது எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கக் கூடிய தொழில்நுட்ப எந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த சமூக எந்திரமும் நம்மிடம் இல்லை என்பதே அதன் காரணமாகும்.” அத்துடன் “மனித விருப்பத்திற்கு இணங்கிச் செல்லும்படியானதாய் மனித சமூகத்தின் அபிவிருத்தியை ஆக்கும் வகையில் சமூக இயல்நிகழ்வானது கட்டுப்படுத்தவியலும் திறம்பெற்றதாகும்” என்ற மார்க்சிச முன்மொழிவுக்கு அனுதாபத்தையும் அவர் வெளிப்படுத்தினார். அந்நாளின் பிரபலமான தாராளவாதியான ஜோர்ஜ் எஸ். கவுண்ட்ஸ் எழுதிய அமெரிக்காவுக்கு சோவியத்தின் சவால் என்ற புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருந்த முதலாளித்துவத்தின் மீதான பின்வரும் விமர்சனத்திற்கு டுவி அனுதாபத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

தொழிற்துறை சமூகமானது அதன் இப்போதைய வடிவத்தில் ஆன்மாவும் இல்லாத உள்முக முக்கியத்துவமும் இல்லாத ஒரு அரக்கனாய் உள்ளது. அது கடந்த காலத்தின் எளிமையான கலாச்சாரங்களை அழிப்பதில் வெற்றிகண்டிருந்தபோதும், தனது பேர்சொல்லத்தக்க தன்னுடைய சொந்த கலாச்சாரம் ஒன்றை உருவாக்கத் தவறியிருக்கிறது.... இந்த தார்மீகக் குழப்பநிலை என்பது ஒரு இடைமருவல் சகாப்தத்தின் தற்காலிக சீரின்மையா அல்லது தனியார் இலாபத்திற்காக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தவிர்க்கவியலாத விளைபொருளா என்பது நமது காலத்தின் மிகவும் அதிமுக்கிய கேள்விகளில் ஒன்றாகும்.[26]

1917 அக்டோபர் புரட்சி முதல், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது வரை, ரஷ்ய புரட்சிக்கு நேர்ந்த கதியானது இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான மற்றும் சிக்கலான வரலாற்று அனுபவமாகும். ஆயினும் அது கையாண்ட பிரச்சினைகள் இன்னும் நிலவுவது மட்டுமல்ல, முன்னெப்போதையும்விட மிகவும் கூர்மைப்பட்ட நிலையிலும் இருக்கின்றன. 1917 ரஷ்ய புரட்சிக்கு நூறு ஆண்டுகளுக்கு பின்னர், முதலாளித்துவமானது அழிவை நோக்கி சாய்வு கண்டு கொண்டிருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடியானது, பேராசிரியர் கவுண்ட்ஸ் கூறியதைப் போல, “இடைமருவல் சகாப்தத்தின் தற்காலிக சீரின்மையாக” இருக்கவில்லை என்பது தெளிவு. மனிதகுலத்தின் உற்பத்தி சக்திகளும் இயற்கை வளங்களும் தனியார் உடைமைகளாய் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு பெருநிறுவன இலாபம் மற்றும் தனியார் செல்வத்தின் நலன்களின் பேரில் மனிதகுலத்தின் மிகப்பெரும் பரந்த மக்களை மிருகத்தனமாய் சுரண்டுகின்ற பொருளாதார ஒழுங்கமைப்பின் வரலாற்றுரீதியாக காலாவதியான இந்த வடிவம் இருப்பதானது மனித முன்னேற்றத்திற்கான பிரதான முட்டுக்கட்டையாக மட்டும் இருக்கவில்லை. ஒரு ஒற்றை முக்கிய சமூக பிரச்சினையையும் கூட முதலாளித்துவத்தின் கட்டமைப்புக்குள்ளாக தீர்த்து விட முடியாது. உண்மையில், முதலாளித்துவத்தின் தர்க்கமும் தேசிய-அரசு அமைப்புமுறையும் —இதுவே ஏகாதிபத்திய புவியரசியலுக்கான அடிப்படையை உருவாக்குகிறது— இந்தமுறை அணு ஆயுதங்களைக் கொண்டு போரிடப்படக் கூடியதாய் இருக்கும் இன்னுமொரு உலகளாவிய போருக்கு தவிர்க்கவியலாமல் இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. உலக சோசலிசத்திற்கான நனவான போராட்டத்தை புதுப்பிப்பதை தவிர்த்த வேறு எதுவொன்றாலும் இந்த பேரழிவை தடுத்துநிறுத்த முடியாது. எல்லாவற்றுக்கும் மேல், ரஷ்ய புரட்சியை கற்பது இதற்கு அவசியமாக இருக்கிறது.

----

Notes:

1. Marx-Engels Collected Works, Volume 39 (New York: 1983), pp. 62-65

2. The Permanent Revolution (London: 1971), p. 155

3. Lenin Collected Works Volume 5 (Moscow: 1961), p. 369

4. Lenin Collected Works Volume 14 (Moscow: 1977), p. 325

5. “The Class, the Party, and the Leadership,” in The Spanish Revolution 1931-39 (New York: 1973), p. 360

6. The Lessons of October in The Challenge of the Left Opposition (New York: 1975), p. 227

7. Lenin, Collected Works Volume 23, p.253

8. The Russian Revolution 1917 by N.N. Sukhanov, edited, abridged and translated by Joel Carmichael (New York: 1962), Volume 1, p. 5

9. The Russian Revolution, 1917 by Rex A. Wade (Cambridge: 2000), p. 31

10. Ibid, p. 39

11. Lenin Collected Works, Volume 23, pp. 25-26

12. History of the Russian Revolution (Ann Arbor: MI, 1957), p. 152

13. Ibid

14. The History of the Russian Revolution (Ann Arbor: 1961), p. 208

15. War Against War by R. Craig Nation (Durham and London: 1989), p. 175

16. Sukhanov, Volume 1, p. 273

17. Ibid, pp. 273-74

18. Ibid p. 274

19. Ibid, p. 281

20. Sukhanov, Volume II, p. 360

21. Lenin Collected Works, Volume 25 (Moscow: 1977), p. 388

22. Ibid, p. 392

23. The Bolsheviks in Power: The First Year of Soviet Rule in Petrograd, by Alexander Rabinowitch (Bloomington and Indianapolis: 2007), pp. ix-x

24. Quoted in The Russian Revolution in 1917, p. 243

25. History of the Russian Revolution, p. 151

26. Cited in John Dewey, Volume 6: 1931-1932, Essays, Reviews and Miscellany (Carbondale and Edwardsville, 1989), p. 266