ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Socialism and historical truth

A lecture delivered at the Leipzig Book Fair

சோசலிசமும் வரலாற்று உண்மையும்

லைப்சிக் புத்தகக் கண்காட்சியில் வழங்கப்பட்ட உரை

இந்த விரிவுரையானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த்தால், மார்ச் 13, 2015 அன்று லைப்சிக் புத்தகக் கண்காட்சியின் ஒரு பாகமாக 450 பேர் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் ஒரு கூட்டத்தில் வழங்கப்பட்டது. இந்த உரையானது ரஷ்யப் புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் ஜேர்மன் பதிப்பின் வெளியீட்டிற்கு அறிமுக உரையாக அமைந்தது.

லைப்சிக்கில் உரையாற்றுவதற்கு வாய்ப்பு கிடைப்பது என்பது ஒரு மிகப் பெரிய கௌரவமாகும். லைப்சிக் புத்தக கண்காட்சியில், ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலின் ஜேர்மன் மொழிப் பதிப்பு மெஹ்ரிங் பதிப்பகத்தால் வெளியிடப்படுவது பெரும் சாதனையாகும். சோசலிச சமத்துவக் கட்சியில் (Partei für Soziale Gleichheit) உள்ள எனது தோழர்களுக்கு மிகவும் நன்றி உடையவனாக இருக்கிறேன், குறிப்பாக பீட்டர் சுவார்ட்ஸ் மற்றும் அண்ட்ரீயா றைற்மானுக்கு இந்த தொகுதியை மொழிபெயர்த்து தொகுத்து தந்ததில் அவர்களின் அளப்பரிய பெரும் பணிக்காக நான் பெரிதும் நன்றி உடையவனாக இருக்கிறேன். 450 பக்கங்களுக்கு மேற்பட்ட ஒரு புத்தகம் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்தில் அமெரிக்க பதிப்பிலிருந்து ஜேர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்பது நம்புவதற்கரிய விஷயமாகும்.

எனக்கு கிடைத்த மொழிபெயர்ப்பாளர், நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை மட்டுமல்ல, அதற்கு மிகவும் துல்லியத்தைக் கொடுத்தது மட்டுமல்லாமல், ஆங்கிலத்தில் நான் சாதித்து இருக்கக்கூடியதைக் காட்டிலும் ஜேர்மனில் பெரும் இலக்கிய உணர்திறனுடன் வெளிக்கொண்டு வந்திருக்க கிடைத்திருப்பது எனது நல்வாய்ப்பு என்பேன். எவ்வாறாயினும், எனது புத்தகத்தின் உள்ளடக்கமானது அண்டிரியாவின் வேலையை ஏதோ ஒருவகையில் இலகுவாக்கி இருக்கலாம். புத்தகம் இந்த நாட்டில் நிகழ்ந்த விடயங்களை கையாளவதால் அண்டிரியா இந்த அமெரிக்க பதிப்பை அதன் மூல மொழிக்கு மொழிபெயர்த்திருக்கின்றார் எனக் கூறலாம்.

லியோன் ட்ரொட்ஸ்கியை பாதுகார்  (In Defense of Leon Trotsky) என்னும் நூலின் முதல் ஜேர்மன் பதிப்பை வெளியிட்ட வெகு விரைவிலேயே, கடைசியாக மார்ச் 2011ல் புத்தக கண்காட்சியின் பொழுது நான் இங்கே இருந்தேன். அந்த நூல், உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கிறவாறு, இயன் தாட்சர், ஜெவ்றி ஸ்வைன் மற்றும் றொபேர்ட் சேர்வீஸ் ஆகியோரால் எழுதப்பட்ட மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்களில் லியோன் ட்ரொட்ஸ்கியை நோக்கி இயக்கப்பட்ட திரித்தல்கள், அரைகுறை உண்மைகள் மற்றும் பகிரங்கமான பொய்கள் ஆகியவற்றை அம்பலப்படுத்தும் கட்டுரைகள் மற்றும் உரைகளின் தொகுப்பைக் கொண்டிருக்கிறது.

2011 ஆரம்பத்தில் எனது நூலான லியோன் ட்ரொட்ஸ்கியை பாதுகார் வெளிவருவதற்கு முன்னர் சுஹெர்காம்ப் (Suhrkamp) பதிப்பகத்தால் திட்டமிடப்பட்ட வெளியீடான சேர்வீஸ் இனால் எழுதப்பட்ட ட்ரொஸ்கியின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தின் ஜேர்மன் பதிப்பு வெளிவந்திருக்க வேண்டும். எவ்வாறாயினும், கௌரவமிக்க வெளியீட்டகத்திற்கு சேர்வீஸ் இன் புத்தகத்துடன் உள்ள தொடர்பை எதிர்த்து, மதிப்புமிக்க பதினான்கு வரலாற்று ஆசிரியர்களால் கையெழுத்திடப்பட்டு, வெளியிடப்பட்ட பகிரங்க கடிதத்தால் சுஹெர்காம்ப் இன் நிகழ்ச்சிநிரல் சிக்கலுக்கு உள்ளாகியது. வரலாற்றாசிரியர்களின் எதிர்ப்பின் பாதிப்பானது, தகுதிபெற்ற இதழான அமெரிக்க வரலாற்றுக் கண்ணோட்டம் (American Historical Review), சேர்வீஸ் பற்றிய எனது விமர்சனத்தை ஏகமனதாக அங்கீகரித்து வெளியிட்டது மற்றும் அவரது வாழ்க்கை வரலாற்றை “தாறுமாறான வேலை” என்று கண்டனம் செய்ததால் மேலும் அது தீவிரமடைந்தது.

கல்விசார் இதழில் பொதுவாக பயன்படுத்தப்படும் வகையான மொழி இதுவல்ல. றொபேர்ட் சேர்வீஸின் தொழில்சார்ந்த புகழுக்கு அழிவுகரமான மற்றும் மிகவும் தகுதிவாய்ந்த அடி கொடுக்கப்பட்டிருந்தது, குறைந்தபட்சம், வரலாற்றாளர்கள் உண்மை நிகழ்வுகளை தேர்வு செய்வதில், முன்வைப்பதில் மற்றும் விளக்குவதில் நீண்டகாலமாக நிலைநாட்டப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வரும், ஆனால் இப்பொழுது அதிகரித்த அளவில் மீறப்படும் —தொழில்முறை ரீதியான தாரதரங்களை— வரலாற்றாளர்கள் புத்திஜீவிதரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அவதானிக்க கடமைப்பட்டவர்கள் என்ற பின்நவீனத்திற்கு முந்தைய கண்ணோட்டத்தை இன்னும் உறுதியாக பற்றிப்பிடித்திருக்கும் கொள்கைப்பிடிப்பான அறிஞர்களின் கண்முன் நடந்தது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம்தாழ்த்தி சுஹெர்காம்ப் இறுதியில் சேர்வீஸ் இனால் எழுதப்பட்ட ட்ரொஸ்கியின் வாழ்க்கை வரலாறு நூலை வெளியிட்டது. ஆனால் அது கெய்ன் (பழைய வேதாகமத்தில் சகோதரனான ஆபல் இனை கொன்றவர்) இன் சின்னத்தை அதன் மேலட்டையில் தாங்கியவாறு புத்தக கடைக்கு வந்து சேர்ந்தது.

ட்ரொட்ஸ்கியை பாதுகார் நூலின் முதல் பதிப்பில் உள்ளடங்கி இருக்கும் கட்டுரைகளும் உரைகளும் 2009க்கும் 2011க்கும் இடையில் எழுதப்பட்டன. இரண்டாவது பதிப்பில் முதலாவது பதிப்பால் உருவாக்கப்பட்ட சர்ச்சைகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக எழுதப்பட்ட கூடுதல் விஷயங்கள் உள்ளடங்கியுள்ளன. அது வரலாற்றை பொய்மைப்படுத்துதலுக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடுக்கப்பட்ட போராட்டத்தின் எழுத்துபூர்வமான பதிவுக்குறிப்பின் ஒரு பகுதியை மட்டும் கொண்டிருக்கிறது. எனது புதிய நூலின் வெளியீடு, சோசலிசத்திற்கான தற்காலத்திய போராட்டம் என்பது, வரலாற்று உண்மைக்கான போராட்டத்துடன் எந்த அளவிற்கு பிணைந்துள்ளது என்பதை காட்டுகிறது.

ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் கொண்டிருக்கும் பதினைந்து கட்டுரைகள் மற்றும் உரைகள் 1995க்கும் 2014க்கும் இடையில் எழுதப்பட்டவை. ஆயினும், இது இந்த புத்தகத்தை, நூல் திரட்டு என்று கூறுவதை நிராகரிப்பதற்கு என்னை இட்டுச்செல்வது வெறும் எழுத்தாளின் பெருமை பற்றிய விஷயம் அல்ல. அவை ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டவை என்பது ஒருபுறம் இருக்க, நூல் திரட்டு என்பது நூல்தொகுப்பு என்று பொருள்பட்டாலும், நூல் திரட்டில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடாத விடயங்கள் கையாளப்படுகின்றது. ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும், நியாயமாகவே, ஒரு தனியொரு, உட்புறமாய் ஒத்ததன்மை உடையதான படைப்பு, அதன் பதினைந்து அத்தியாயங்கள், 1989க்கும் 1991க்கும் இடையில், கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு இவற்றுக்குப் பின்னர் எழுந்த வரலாற்று, தத்துவார்த்த அரசியல் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதற்காக கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக எழுதப்பட்டவை.

இந்த ஆட்சிகளின் திடீர் மறைவானது இருபதாம் நூற்றாண்டின் முழுப்போக்கை பற்றியும் அடிப்படையான கேள்ளவிகளை எழுப்பியது. பெரும்பாலும் இந்த நூற்றாண்டின் ஒவ்வொரு பிரதான நிகழ்வும், தீவிர சர்ச்சைக்குரியதன் குவிமையமாகியது. மோதல்கள், நிகழ்வுகளை பற்றி எவ்வாறு விளக்கமளிப்பது என்பது மட்டுமல்லாமல், உண்மைகளை முன்வைக்கும் விதத்தின் மீதாகவும் எழுந்தது. இருபதாம் நூற்றாண்டின் நிகழ்வுகள் அனைத்திலும் 1917 ரஷ்ய புரட்சியானது மிக வெறித்தனமான சச்சரவின் கருப்பொருளாக இருந்தது. இது ஏனெனில், இருபதாம் நூற்றாண்டில் இந்த புரட்சியானது மத்திய இடத்தை எடுத்துக்கொண்டதால் ஆகும். உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த பழமொழி ஜேர்மனில் உள்ளது. “Sag mir, wer deine Freunde sind, und Ich sage dir, wer du bist.” [“உங்கள் நண்பர்கள் யார் என்று சொல்லுங்கள், நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை சொல்லுகின்றேன்.”] இருபதாம் நூற்றாண்டு வரலாற்றாளர்களைப் பார்த்து அதேவிதத்தில் ஒருவர் பின்வருமாறு கூற முடியும்: “Zeig mir, was sie über der Russischen Revolution schreiben, und Ich sage ihnen, ob sie überhaupt Historiker sind.” [ரஷ்ய புரட்சி பற்றி என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று காட்டுங்கள், நீங்கள் வரலாற்றாளர் என்று கருதப்பட முடியுமா என்பதைக் கூறுகிறேன் என்று.]

1989க்கு முன்னர், சோவியத் ஒன்றியத்தின் கசப்பான பாசிச மற்றும் நவ பாசிச பகைவர்கள் தவிர, அனைவரும் 1917ல் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை போல்ஷிவிக் தலைமையில் தூக்கி எறிந்தது, உலக வரலாற்றிலும் இருபதாம் நூற்றாண்டிலும் ஒரு முக்கிய மைல்கல்லை பிரதிநித்துவம் செய்ததது என்பதை உறுதிப்படுத்தினர். 1917ல் பெட்ரோகிராடில் நடந்த சம்பவங்களை அவரது கண்ணால் கண்ட சாட்சியாய் அறிக்கைக்கு ஜோன் ரீட் எடுத்துக் கொண்ட தலைப்பான உலகை உலுப்பிய பத்து நாட்கள் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி அதன் முன்னணிப் படைகளாலும் பகைவர்களாலும் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒரு மதிப்பீட்டை பிரதிபலித்தது. அக்டோபர் புரட்சியின் பிரமாண்டமான தாக்கம் —சோவியத் ஒன்றியத்தின் அசாதாரணமான பொருளாதார உருமாற்றத்தில் விளக்கிக்காட்டிய வகையில் மட்டுமல்லாமல், சக்தி மிக்க உந்துவிசை என்ற வகையில் உலகம் முழுவதிலும் உள்ள பலநூறு மில்லியன் கணக்கான மக்களின் மத்தியில் புரட்சிகர சமூக மற்றும் அரசியல் நனவை அபிவிருத்தி செய்வதில் சக்தி மிக்க தூண்டலாகவும் இருந்ததானது— இருபதாம் நூற்றாண்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சூழலின் மையக் கூறை உள்ளடக்கியிருந்தது.

1991ல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது, அக்டோபர் புரட்சியுடனும் முழு சோவியத் வரலாற்றுடனும் கல்வித்துறைசார்பாக சகோதரத்துவம் கொண்டோர் அனைவராலும் செய்யப்பட்ட மதிப்பீட்டில், துரிதமான ஒரு அசாதாரண மாற்றத்திற்கு வழி வகுத்தது. 1991க்கு முன்னால், சோவியத் ஒன்றியத்தின் முடிவை முன்கூட்டிப் பார்த்த தனி வரலாற்றாளர் ஒருவரும் காணக்கிடைத்ததில்லை. ஸ்ராலினிச ஆட்சியின் கொள்கைகள் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு வழிவகுக்கும் என்ற ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் எச்சரிக்கைகள், “ட்ரொட்ஸ்கிச” குறுங்குழுவாதிகளின் பைத்தியகாரத்தனமான பிதற்றல்கள் என ஒதுக்கித்தள்ளப்பட்டன அல்லது சர்வசாதாரணமாய் அலட்சியம் செய்யப்பட்டன. 1985ல் கோர்பச்சேவ் ஆட்சிக்கு வந்து அவரது பெரஸ்துரோய்கா வேலைத்திட்டத்தை முன்னெடுத்த போதிலும் கூட, சோவியத் ஒன்றியத்தின் தொழில்முறை சார்ந்த வரலாற்றாளர்கள் அவர்கள் இடதாக இருந்தாலும் வலதாக இருந்தாலும் சரி, ஒருபுறம் இருக்கட்டும், சோவியத் ஒன்றியத்தின் அடிப்படை ஸ்திரத்தன்மை பற்றி முதலாளித்துவ அரசாங்கங்களாலும் அவற்றின் முகவாண்மைகளாலும் கூட கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. அனைத்துலகக் குழு மட்டுமே 1986ல் செய்ததுபோல, சோவியத் தொழிலாள வர்க்கத்தால் சவால்செய்ய முடியாது போனால், கோர்பச்சேவின் பெரஸ்துரொய்கா முதலாளித்துவ மீட்சிக்கும், சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கும் இட்டுச்செல்லும் என்ற, அதன் முன்கணிப்பில், தன்னந்தனியாய் முற்றிலும் உறுதியாய் நின்றது.

1991க்குப் பின்னர் சோவியத் வரலாறு பற்றிய அவர்களது மதிப்பிடலில் ஏற்பட்ட விலகல் பற்றிய அதிதீவிரத் தன்மையை மதிப்பீடு செய்வதில், சோவியத் வரலாற்றாளர்களின் 1991க்கு முந்தைய குறுந்தூர பார்வையை நினைவு கூருவது அவசியமானதாகும். கிட்டத்தட்ட ஒரே இரவிலேயே, சோவியத் ஒன்றியத்தின் நிரந்தரத்தன்மையில் இருந்த அவர்களுடைய நீண்டகால நம்பிக்கையானது, அதன் கலைப்பு அக்டோபர் புரட்சியிலிருந்து தோன்றிய அரசின் தவிர்க்கவியலா தலைவிதியைத் தவிர வேறொன்றுமில்லை என்று நம்பும்படி உருமாற்றம் ஆனது. புதிய கருத்தொற்றுமையின் படி, சோவியத் ஒன்றியமானது ஆரம்பத்திலிருந்தே வெற்றிபெறமுடியாத ஒன்றென்று விதிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 1917 இல் லெனினை பெட்ரோகிராட்டிலுள்ள பின்லாந்து நிலையத்திற்கு கொண்டுவந்த வரலாற்றின் புகையிரதம், மின்ஸ்க் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் முடிவடையும் இருப்புப்பாதை வழியே அதன் மரணப் பயணத்தை தொடர்ந்தது, அந்த மின்ஸ்க்கில்தான் 1991 டிசம்பரில் போரிஸ் யெல்ட்சின் (Boris Yeltsin), லியோனிட் கிராவ்சுக் (Leonid Kravchuk) மற்றும் ஸ்டாலிஸ்லாவ் ஷுஷ்கேவிச் (Stanislau Shushkevich) சோவியத் ஒன்றியத்தை கலைப்பதற்கான உடன்பாட்டில் கையொப்பமிட்டனர்.

சோவியத் வரலாறு பற்றிய மறுவிளக்கமானது —மற்றும் அதிலிருந்து பின்தொடர்ந்த, நவீன வரலாற்றின் முழுப் போக்கும்— முதலாளித்துவ வெற்றிவாதம் மற்றும் குட்டி முதலாளித்துவ நம்பிக்கையின்மைவாதம், மற்றும் ஒரேயடியான மனவுறுதி குலைவு இவற்றின் உறவாடலால் ஆதிக்கம் செய்யப்பட்டிருந்த 1991க்கு முந்தைய அரசியல் சூழலால் கடுமையாக செல்வாக்கு செலுத்தப்பட்டிருந்தது. கல்வியாளர்களின் ஒரு கணிசமான பகுதி, 1991க்கு முன்னர், தங்களது பிற்போக்கு நோக்கங்களை கட்டுப்படுத்திக்கொள்ளவோ அல்லது தங்களுக்குள்ளேயோ வைத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக உணர்ந்திருந்தவர்கள், உரத்துக்கத்தும் பாணியில், மார்க்சிச விரோத மற்றும் கம்யூனிச விரோத வசைமாரிகளுடன், இப்பொழுது அதை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். பெரும்பாலும் பேரளவிலான, மற்றொரு, கல்வியாளர்களின் பகுதி, தங்களின் ஆரம்பகால இடதுசாரி அனுதாபங்களுக்குள் உறைந்துகிடந்தமை, இப்பொழுது திடீரென்று காலாவதியாகிப்போய்விட்டது. புத்திஜீவிதரீதியாய் கோழைத்தனமான முன்னாள் இடது மற்றும் போலி இடது நடுத்தர வர்க்க தட்டினுக்குள்ளேதான், பின்நவீனத்துவ மார்க்சிச விரோத கசப்பு உணர்வு கொண்ட மற்றும் அதிகமான அகநிலை பகுத்தறிவின்மைவாதம் அதன் மிகவும் அர்ப்பணிப்புக்கொண்ட பார்வையாளர்களைக் கண்டுகொண்டது.

ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலில் உள்ள கட்டுரைகளும் உரைகளும் சோவியத் ஒன்றியம் கலைந்து போனதன் பின்னர் எழுந்த முக்கிய வரலாற்று, அரசியல், மெய்யியல்-தத்துவார்த்த விஷயங்களுக்கு மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச பதிலை பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்த பணிக்காக அனைத்துலகக் குழு தன்னை நன்றாக தயாரிப்பு செய்திருந்தது. அக்டோபர் புரட்சியிலிருந்து எழுந்த அரசின் தன்மை பற்றி உண்மையில் புரிந்து வைத்திருந்த முதலாளித்துவ கல்வியாளர்கள் மீதாக அளவிடமுடியாத சாதகத்தை அது கொண்டிருந்தது. ட்ரொட்ஸ்கிச இயக்கமானது அரைநூற்றாண்டிற்கும் மேலாக “ரஷ்ய பிரச்சினை” பற்றி விவாதித்து வந்திருக்கின்றது. 1936ல் வெளியிடப்பட்டாலும் ட்ரொட்ஸ்கியின் காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி (The Revolution Betrayed), என்ற நூல் சோவியத் ஒன்றியம் பற்றிய உறுதியான பகுப்பாய்வை இன்னும் கொண்டிருக்கிறது. சோவியத் ஒன்றியம் ஒரு உருக்குலைந்த தொழிலாளர் அரசு என்ற ட்ரொட்ஸ்கியின் ஆய்வின் அடிப்படையில், நான்காம் அகிலத்தால், சோவியத் ஒன்றியத்தின் வரலாற்று அபிவிருத்தியின் பல்வேறு கட்டங்களின் ஊடாக அதன் பரிணாமத்தை புரிந்துகொள்ள முடிந்திருந்தது. அது சோவியத் ஒன்றியம், ஒன்றில் “அரசு முதலாளித்துவ” அல்லது அது சோசலிசத்தை அடைந்துவிட்டது என்று தவறாக அறிவிக்கும் அல்லது சோசலிசத்தை அடையும் தறுவாயில் இருக்கிறது என்று கூறும் சோவியத் சமூகம் பற்றிய விமர்சனரீதியான தத்துவங்களை ஆய்வுக்கு உட்படுத்தியது.

புரூனோ ரிசியின் [Bruno Rizzi] உலகை அதிகாரத்துவமயமாக்கல் (Bureaucratization of the World) இல் மற்றும் ஜேம்ஸ் பேர்ன்ஹாமின் நிர்வகிக்கும் மேலாண்மைப் புரட்சி (Managerial Revolution) ஆகிய புத்தகங்களில் கூறுவது போல ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஒருவித புதியவகை சுரண்டல் சமுதாயத்தின் ஒரு வரலாற்று தலைமை என்று விளக்கும் அல்லது உதாரணத்திற்கு, (Milovan Djilas) மிலோவான் டிஜிலாஸ் ஆல் முன்வைக்கப்பட்டதுபோல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை ஒரு புதிய வர்க்கமாக கூட விளக்கமளித்த வலதுசாரி தத்துவங்களை நான்காம் அகிலம் நிராகரித்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவம், சோவியத் சமூகத்திற்குள்ளே உள்ள ஒரு ஒட்டுண்ணி எதிர்ப்புரட்சிகர சக்தி என்ற ட்ரொட்ஸ்கியின் ஆய்வை நிராகரித்த — கிரெம்ளின் ஆட்சியையும் உலகம் முழுவதிலும் உள்ள அதனோடு இணைந்த கட்சிகளையும் சோசலிசத்தை அடைவதற்கான மைய சக்தி என்று காட்டுவதற்கு விழைந்த, மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் ஆல் தலைமைதாங்கப்பட்ட, ஒரு போக்குக்கு எதிரான போராட்டத்தில் 1953ல் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது.

சோவியத் ஒன்றியம் பற்றிய ட்ரொட்ஸ்கிச ஆய்வின் முக்கிய அம்சங்கள்: 1) ஸ்ராலினிச சீரழிவின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மூலங்கள் பற்றிய விரிவான விளக்கம்; 2) சோவியத் அரசின் உள் முரண்பாடுகளுக்கும் மற்றும் அதிகாரத்துவத்தின் சமூக தொழிற்பாட்டின் தத்துவார்த்த உட்பார்வை; 3) ”தனியொருநாட்டில் சோசலிசம்” என்ற பதாகையின் கீழ் ஸ்ராலினால் 1924ல் முன்கொண்டுவரப்பட்ட, தேசிய பொருளாதார தன்னிறைவு எனும் வேலைத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தவியலாத்தன்மை; மற்றும் 4) முதலாளித்துவ அமைப்பை உலகரீதியாய் தூக்கி வீசுவதற்கு சோவியத் ஒன்றியத்தின் மீது தவிர்க்கமுடியாமல் தங்கி இருந்தமை.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் காரணத்தை பற்றிய வரலாற்று ரீதியாக அடித்தளமான மற்றும் சர்வதேசிய ரீதியாக ஆய்வு செய்யப்பட்டதிலிருந்து, அனைத்துலகக் குழுவானது சோவியத் ஒன்றியத்தின் முடிவை சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் ஒரு வரலாற்று நெருக்கடியின், அதாவது ஒரு அரசியல் தலைமை நெருக்கடி மற்றும் வரலாற்று முன்னோக்கு நெருக்கடியின் மிக அதீத வெளிப்பாடு என புரிந்துகொண்டது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, உலக நிகழ்வுகளில் இருந்து தனித்து நிகழ்ந்த சம்பவம் அல்ல. அது மார்க்சிசத்தின் திவாலை எடுத்துக்காட்டியது என்ற வெற்றிவாகை கூற்றுக்கள் இரண்டு அடிப்படையான விமர்சனரீதியான ஆய்வினால் தோல்விகண்டது.

“மார்க்சிசத்தின் தோல்வி” தத்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு முன்னரான அரைநூற்றாண்டில் சோவியத் ஆட்சியின் கொள்கைகள் எந்தவகையிலாவது மார்க்சிச தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதை விளக்கிக்காட்ட அப்பட்டமாக தவறிவிட்டார்கள். உண்மையில், “மார்க்சிசத்தின் தோல்வி” தத்துவவியலார்கள், ஸ்ராலினிசம் அதன் தத்துவத்திலும் நடைமுறையிலும், மார்க்சிசத்தை மறுத்தது என்று விளக்கிக் காட்டிய, ட்ரொட்ஸ்கியின் படைப்புகள் தொடங்கி, மார்க்சிச இலக்கியத்தின் பரந்த பகுதியை சாதாரணமாய் அலட்சியம் செய்தனர்.

இரண்டாவதாக, சோவியத் ஆட்சியின் மார்க்சிசம், மார்க்சிசமல்லாத அல்லது மார்க்சிச எதிர்ப்பு கொள்கைகளின் குணாம்சம் பற்றி ஒருவர் ஒருகணம் ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்தாலும் கூட, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, 1980களின் முடிவு வரையில் பல பத்தாண்டுகளாக மில்லியன் கணக்கான உறுப்பினர்களை கொண்டிருந்த அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புக்கள் ஆகிய அனைத்து பாரம்பரிய தொழிலாள வர்க்க அமைப்புக்களில் ஏற்பட்ட ஒரு உலக ரீதியான நிலைமுறிவிற்கிடையில், இடம்பெற்றது என்ற உண்மை அப்படியே இருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது மார்க்சிச வேலைத்திட்டம் என்று கூறப்படுவதின் விளைவு என்றால், உலகம் முழுவதிலும் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் கடுமையான மார்க்சிச எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ ஆதரவு சமூக ஜனநாயகக் கட்சிகள் உண்மையில் அடுத்தடுத்து பொறிந்துபோனதை ஒருவர் எப்படி விளக்குவது.

அமெரிக்காவில் உள்ள பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான AFL-CIO ஆனது, குளிர்யுத்த காலத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான போராட்டத்திலும், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் அமைப்புக்களில் அனைத்து வகையான இடதுசாரி செல்வாக்கிற்கு எதிரான போராட்டத்திலும், மத்திய உளவுத்துறை முகவாண்மை (சிஐஏ) உடன் மிக நெருங்கி வேலைசெய்வதில் பெரும்வளங்களை அர்ப்பணித்தது. 1990களின் போக்கில் சோவியத் ஒன்றியத்தை போலவே திடீரென்று, ஏஎப்எல்-சிஐஒ, தொழிற்சங்கவாத உள்ளடக்கத்தில் பொறிந்துபோனது. அப்போது முதல், அது கிட்டத்தட்ட மொத்த அரசியல் அதிகாரம் மற்றும் செல்வாக்கு மொத்தத்தையும் இழந்தது. கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பின்னர், அது அதன் உறுப்பினர்களின் கணிசமான பகுதியை இழந்திருக்கிறது. இது ஏதாவதொரு வடிவில், உலகம் முழுவதிலும் உள்ள பழைய தொழிலாளர் அமைப்புக்களின் அனுபவமாக இருந்து வருகிறது.

தொழிலாள வர்க்கம் எதிர்கொண்ட உலக அளவிலான நெருக்கடியின் உள்ளடக்கத்துக்குள்ளே பார்த்தால், சோவியத் ஒன்றியத்தின் முழுவரலாறு மற்றும் அதன் பொறிவின் விளைவு பற்றிய ஒரு மீள்பார்வை, 1991 சம்பவங்களுக்குப் பின்னர், ஒரு அத்தியாவசிய மற்றும் தவிர்க்க முடியாத அரசியற்பணி என அனைத்துலகக் குழுவால் பார்க்கப்பட்டது. அக்டோபர் புரட்சியின் மிகமுக்கியமான வரலாற்று முக்கியத்துவத்தினை எடுத்துக்கொண்டால், சோவியத் ஒன்றியத்தின் இறுதி நிலைமுறிவு குழப்பத்தை மட்டும் உருவாக்கவில்லை, தொழிலாள வர்க்கத்தின் பரந்த பகுதியினர் மத்தியில் நோக்குநிலை தவறலையும் உருவாக்கியது. குழப்பத்தை மேலும் மோசமாக்குவதற்கு, ஆளும் வர்க்கமானது, ஊடகத்திற்குள்ளே உள்ள மற்றும் புத்திஜீவிதரீதியாக மிகவும் சீழிந்துபோன கல்வியாளர்களின் மத்தியிலும் உள்ள அதன் அனைத்து வளங்களையும் அணிதிரட்டும் என்பது எதிர்பார்க்கப்பட்டிருந்ததுதான். தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வரலாற்றை புரிந்துகொள்வதிலிருந்து அதனைத் தடுப்பதற்கு அதன் பாரிய பொய்மைப்படுத்தல் மற்றும் தவறான தகவல்கள் எனும் ஆயுதங்களை அது களத்தில் இறக்கும்.

ட்ரொட்ஸ்கிச இயக்கமானது வரலாற்றைப் பொய்மைப்படுத்துலுக்கு எதிரான போராட்டத்தில் போதுமான அனுபவத்தை ஏற்கனவே பெற்றிருந்தது. பொய்களை மறுத்தலும் அம்பலப்படுத்தலும் அக்டோபர் புரட்சியை ஸ்ராலினிசம் காட்டிக் கொடுத்தற்கு எதிரான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பலபத்தாண்டுகால போராட்டத்தின் பிரதான வடிவமாக இருந்தது என்று அதனைக்கூற முடியும். அரசியல் அதிகாரத்தை ஸ்ராலினிச அதிகாரத்துவம் அபகரித்துக்கொண்டதில் வரலாற்றை பற்றிய பொய்கள் முக்கிய பாத்திரங்களை ஆற்றின. சோவியத் ஒன்றியத்திலும் சர்வதேச ரீதியாகவும், அக்டோபர் புரட்சியின் இணைத்தலைவர் மற்றும் செஞ்சேனையைக் கட்டி எழுப்பியவரும் அதன் தலைவருமான ட்ரொட்ஸ்கியின் முக்கிய கௌரவத்தை அழித்தொழிக்க முனைந்து, ஸ்ராலினும் அவரது எடுபிடிகளும் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ட்ரொட்ஸ்கியை லெனினுக்கு எதிரான சமரசம்செய்யமுடியாத கன்னைவாத எதிராளி என்று முன்வைக்கும் பொருட்டு, 1917க்கு முந்தைய ரஷ்ய சமூக ஜனநாயக இயக்கத்தின் வரலாற்றை அவர்கள் பொய்மைப்படுத்தினர். அவரை விவசாயிகளின் பகைவராக சித்தரித்துக் காட்டும் பொருட்டு, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளை அவர்கள் தவறாக எடுத்துக்காட்டினர். 1930களின் அளவில் பொய்கள் பூதாகரமான பரிமாணங்களை பாவனை செய்தன. ட்ரொட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும், சோவியத்திற்கு எதிரான நாசகாரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியைக் கொண்டுவருவதில் நோக்கங்கொண்டுள்ள ஏகாதிபத்திய கையாள் எனவும் சித்திரித்துக் காட்டப்பட்டனர். இந்தப் பொய்கள், 1936-ல் ஸ்ராலினால் தொடுக்கப்பட்ட, நூறாயிரக் கணக்கான புரட்சிகர சோசலிஸ்டுகளை - சோவியத் ஒன்றியத்திற்குள்ளே தொழிலாளர்கள் மத்தியிலும் மார்க்சிச புத்திஜீவித் தட்டிலும் இருந்த மிக அரசியல் நனவான கூறுகளை சரீர ரீதியாய் ஒழித்துக் கட்டுவதில் முடிந்த, மாஸ்கோ பொய்புனைவு வழக்குகளுக்கும் மாபெரும் பயங்கரத்திற்கும் அடிப்படையாய் இருந்தன. 1936-39 வரையிலான பேரளவிலான கொலைகள் பத்தாண்டுகளுக்கும் முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட, வரலாற்றை பொய்மைப்படுத்தல் நிகழ்ச்சிப்கோக்கின் முடிவான உற்பத்திப்பொருளாக இருந்தன. “இரத்தம் தோய்ந்த நீதிமன்ற போலிவழக்குகள் தயாரிப்பு, “சிறிய” வரலாற்று திரித்தல்கள் மற்றும் மேற்கோள்களை “அப்பாவித்தனமாக” பொய்மைப்படுத்துதல் ஆகியவற்றில் அதன் தொடக்கத்தை கொண்டிருந்தது என்பது போட்டியிடமுடியாத வரலாற்று உண்மையாக தொடர்ந்தும் இருக்கிறது” என்று 1937இல் ட்ரொட்ஸ்கி எழுதினார்.

சோவியத்திற்கு பிந்தைய வரலாற்றை பற்றிய அரசியல் நோக்கம்கொண்ட பொய்கூறலின் அலைக்கு, அனைத்துலகக் குழு இந்த துன்பகரமான கடந்தகால அறிவை கொண்டு பதிலளித்தது. ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் என்பதில் உள்ளடங்கியுள்ள கட்டுரைகளும் விரிவுரைகளும் சோவியத் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க அம்சங்களை நேரடியாக பொய்மைப்படுத்திய அல்லது திரித்த, அல்லது மார்க்சிச தத்துவம் மற்றும் நடைமுறையின் முக்கிய கூறுகளை தவறாகப் பிரிதிநிதித்துவம் செய்த முதலாளித்துவ கல்வியாளர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் அல்லது கட்டுரைகளுக்கு பதிலளிப்பதற்காக எழுதப்பட்டன. எனது நூல், முதலாளித்துவ கல்வியியல் புலத்தின் பரந்த பகுதியினரின் அறிவார்ந்த தரங்களிலும் மற்றும் புத்திஜீவித நேர்மையிலும் இருந்த பயங்கரமான அரித்தழிப்பை ஆவணப்படுத்தியிருக்கிறது என நான் நம்புகிறேன்.

வரலாற்றை பொய்மைப்படுத்தலை அம்பலப்படுத்தல் ஒரு தவிர்க்கமுடியாத அரசியல் பொறுப்பாக இருக்கும் அதேவேளை, நானும் கூட பொய்களை மறுதலிப்பதை ஒரு நேரிய உள்ளடக்கத்தில் முன்வைக்க முயன்றிருக்கிறேன்: அதாவது, இருபதாம் நூற்றாண்டின் துன்பியல் அனுபவத்தால் முறையாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பது மற்றும் விஷயங்களை தெளிவூட்டுவது. இந்த கேள்விகளுக்கு முதலாளித்துவ கல்வியாளர்களால் வழங்கப்பட்ட விடைகள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் மற்றும் பெரும்பாலும் தவறானதாகவும் இருந்தன என்பதால், இக்கேள்விகள் தாமே நியாயமற்றவை என்று அர்த்தப்படுத்தாது.

முதலாவது அத்தியாயம் இருபதாம் நூற்றாண்டு வரலாற்றின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றினை எதிர்கொள்கிறது. அக்டோபர் 1917ல் ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்பட்டது, எந்த குறிப்பிடத்தக்க சமூக அடித்தளமும் அரசியல் ஆதரவும் இல்லாத சிறு குழுவான சதிகாரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு அல்லது சதி ஆக இருந்ததா? அல்லது அது போல்ஷிவிக் கட்சி வேலைத்திட்டத்தையும் வழிகாட்டலையும் வழங்கிய உண்மையான, தொழிலாள வர்க்கத்தின் பரந்த புரட்சிகர இயக்கத்தின் விளைபொருளா? மனசாட்சி உள்ள அறிஞர்களால் —அத்தகையோர் காணக்கிடைப்பதற்கு நன்றி கூறவேண்டும்— மேற்கொள்ளப்பட்ட சீரிய ஆய்வின் அடிப்படையில், முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் தூக்கி வீசப்பட்டது ஒரு வெகுஜன புரட்சிகர எழுச்சியின் விளைபொருள் என்பதை பலமாய் ஆதரிக்கும் சான்றை நான் அளித்துள்ளேன். போல்ஷிவிக் கட்சி 1917ல் விரைந்து வளர்ச்சிபெற்றது, அரசியல் சூழல் பற்றிய அதன் ஆய்வானது, நிகழ்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டதால் ஆகும் மற்றும் அதன் வேலைத்திட்டம் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பகுதியின் உணர்வுகளையும் தேவைகளையும் தெளிவாக வெளிப்படுத்தியதால் ஆகும்.

சோவியத் ஆட்சியானது, ஒரு உண்மையான புரட்சிகர இயக்கத்தின் விளைபொருளாக இருந்தது என ஒருவர் ஏற்றுக் கொண்டால், ஒரு கேள்வியை இன்னும் கேட்டாக வேண்டும்: சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச சீரழிவு தவிர்க்க முடியாததா? சோவியத் ஒன்றியத்தை இறுதியில் கலைப்புக்கு இட்டுச்சென்ற, அதிகாரத்துவ சீரழிவுக்கு ஒரு மாற்று இருந்ததா? சோசலிசத்தை அடைவதற்கான எந்த முயற்சியும் கட்டாயம் தோல்வியில் முடியும், ஏனெனில் முதலாளித்துவ அடித்தளத்தில் அல்லாது தவிர்ந்த பொருளாதாரரீதியாக செல்தகைமை உடைய சமூகம் சாத்தியமில்லாதது என்ற வகையினதா? நான் இந்தக் கேள்விகளுக்கு விடையிறுக்க முயற்சிப்பது, இருபத்தோராம் நூற்றாண்டில் புரட்சிகள், இருபதாம் நூற்றாண்டில் நடந்த புரட்சிகளை விடவும் சிறப்பாக நிகழும் என்று நம்பிக்கை கொண்ட மீளுறுதிகளை வழங்குவதால் அல்ல. மாறாக, 1920களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச கொள்கை பற்றிய முக்கிய விஷயங்கள் மீதாக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளே நடத்தப்பட்ட தீவிர போராட்டத்தை சான்றுடன் குறிப்பிடும் ஆவணங்களை நான் மேற்கோள் காட்டுகிறேன். 1923ல் ஸ்தாபிக்கப்பட்டு, டரொட்ஸ்கியால் தலைமை தாங்கப்பட்ட இடது எதிர்ப்பு, ஸ்ராலின் தலைமையின் கீழ் நிகழ்ந்ததை விட, முற்றிலும் வேறுபட்ட பரிணாமத்தை சாத்தியமாக்கி இருக்கும் வேறுவிதமான கொள்கைகளுக்காக போராடியது.

அக்டோபர் புரட்சிக்கும் அதற்குப் பின்னரான சர்ச்சைகளில் தேவைப்படுவது பொய்களை மறுதலிப்பதும் சரிபார்க்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் வரலாற்று யதார்த்தத்தை மீளக் கட்டுதல் எனில், சோவியத் மற்றும் இருபதாம் நூற்றாண்டு வரலாற்றின் ஒவ்வொரு மாணவருக்கும் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களைப் படிப்பது தேவைப்படும். ஆயினும், மாபெரும் அரசியல் வேறுபாடுகள் உண்மை நிகழ்வுகள் மீதான போராட்டத்தில் மட்டும் சம்பந்தப்படவில்லை, சடரீதியான நலன்கள் மீதானதிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நன்கு அறிந்த ஒரு பழமொழி கூறுகிறது: “திரிகோணகணித மூலசூத்திரங்கள் சடரீதியான நலன்கள் மீது ஆதிக்கத்தை செலுத்தமுயலுமானால், அவற்றை நிராகரிக்க முயற்சி செய்ய வேண்டும்.” அரசியல் பிற்போக்குத்தனத்தின் சக்திகள், உண்மையானது, அவர்களின் நலன்களுடன் மேல்வந்து மோதுகின்றது என்று உணர்ந்தால், தங்கள் சக்திக்கு முடிந்த அளவுக்கு அதனை மதிப்பிழக்க வைக்க அனைத்தையும் செய்வர். ட்ரொட்ஸ்கி ஒருமுறை எழுதியவாறு, பொய்யானது முதலாளித்துவ சமுதாயத்திற்கு அடித்தளத்தை அமைப்பதற்கான ஒரு கருத்தியல் சீமெந்தாக இருக்கிறது மற்றும் பகிரங்கமாக உடன்பட்ட சுதந்திரம் மற்றும் சமத்துவம் பற்றிய இலட்சியங்களுக்கும் ஒடுக்குமுறை மற்றும் சமத்துவமின்மையின் சமூக யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளிகளை நிரப்புகிறது. முரண்பாடுகள் கூர்மை அடைய அடைய பொய்கள் பேரளவினதாகிறது.

அதிதீவிர முரண்பாடுகள் கொண்ட இந்த காலகட்டத்தில், வரலாற்று உண்மையை தீர்மானிப்பது முதலாளித்துவ புத்திஜீவித வாழ்க்கையில் உள்ள பிற்போக்கான அதி ஆபத்தான போக்குகளின் வெளிப்பாட்டால் பரந்த அளவில் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது. வரலாற்றையும் அரசியலையும் பற்றி பொய் கூறல் இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கவில்லை. மாறாக அது அண்மைய தசாப்தங்களில், உலகம் முழுவதிலும் உள்ள பல்கலைக் கழக புத்திஜீவித வாழ்க்கையில் பின்நவீனத்துவம் ஒரு மேலாதிக்கப்போக்காக தோன்றியதுடன் வெளிப்பட்டது, மெய்யியலின் அடித்தளத்தில் உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வேறுபாட்டை தடமில்லாமல் அழித்தலின் ஊடாக வரலாற்றை பொய்மைப்படுத்துவதை சட்டரீதியானதாக்க, புத்திஜீவிதரீதியாக நியாயப்படுத்தும் முயற்சி ஒன்று அங்கு இருக்கிறது. இந்த காரணத்தினால்தான் ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் கணிசமான அளவுக்கு பின் நவீனத்துவ தத்துவத்தை அலசுகிறது. தனது மூலத்திற்கும், பரிணாமத்திற்கும், அகநிலை கருத்துவாத பகுத்தறிவின்மை வாதத்தை (subjective idealist irrationalism) தத்துவார்த்த ரீதியாக அடித்தளமாக கொண்டுள்ள பின்நவீனத்துவ தத்துவம், அரசியல் ரீதியாக சோசலிசத்தின் மீது குரோதமாய் உள்ளது, மற்றும் சமூகரீதியாய் ஆளும் வர்க்கம் மற்றும் கணிசமான நடுத்தர வர்க்க பகுதியின் சடரீதியான நலன்களில் வேரூன்றி உள்ளது.

ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலில் பின்நவீனத்துவம் பற்றிய விமர்சன ஆய்வு, பிரெஞ்சு மெய்யியலாளர் பிரான்சுவா லியோத்தார் (Francois Lyotard) மற்றும் அமெரிக்க மெய்யியலாளர் ரிச்சார்ட் ரோர்ட்டி (Richard Rorty) மீது கவனத்தை செலுத்துமாறு அழைக்கிறது. நான் இப்பொழுது லைப்சிக்கில் பேசுகின்றமையால், ஜேர்மனியில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக் கழகத்தில் கிழக்கு ஐரோப்பிய ஆய்வுகள் துறையின் தலைவரான பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி (Jörg Baberowski) இன் எழுத்துக்கள் மீதாக கவனத்தை திருப்புமாறு கோருவதன் மூலம் ஜேர்மன் மூடநம்பிக்கையாளர்களை கவனியாது விட்டதை சரிப்படுத்திக்கொள்ள வேண்டும் என நம்புகிறேன். அவரது ஆய்வுகள் பின்நவீனத்திற்கும் அரசியல் பிற்போக்கு, உண்மை நிகழ்வு சான்றுகளை மற்றும் அறிவார்ந்த நேர்மையின் மிக அடிப்படை தரஅளவீடை எரிச்சலுடன் அவமதிப்பது இவற்றுக்கு இடையிலான தொடர்பில், அதன் மிகத் தீவிர வடிவத்தில், அது ஒரு உதாரணமாக விளங்குவதை தவிர அவரது எழுத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும் நூலிற்கான முன்னுரையில் “அதன் பிரதிநிதித்துவம் இல்லாமல் அங்கு யதார்த்தம் இல்லை” என்ற அவரது சுய வலியுறுத்தலை மேற்கோள்காட்டி, பார்பெரோவ்ஸ்கியின் சுருக்கமான குறிப்பை சேர்த்திருக்கிறேன். வரலாறு பற்றிய பார்பெரோவ்ஸ்கியின் கருத்துருவை ஒரு வகையில் விரிவான விவரத்துடன் ஆய்வு செய்வது பொருத்தமானதாக மட்டும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

2001ல் பார்பெரோவ்ஸ்கி வரலாறு என்பது எப்போதும் நிகழ்காலமே என்ற முரணான தலைப்பை தாங்கி வந்திருந்த புத்தகத்திற்கு கட்டுரை எழுதி இருந்தார். இது உண்மையாக இருக்குமேயானால் நிகழ்காலத்தின் தோற்றத்தைப் பற்றி ஒன்றும் கூறமுடியாததால், மொத்தத்தில் வரலாற்றைப் படிக்க வேண்டிய தேவையே இல்லை. உண்மையில் பார்பெரோவ்ஸ்கி கடந்த காலத்தைப் பற்றிய ஆய்விலிருந்து எதையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற கருத்துருக்கு எதிராக மூர்க்கமாக வாதிடுகிறார். “கடந்தகாலத்திலிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள முடியும் என்பது கடந்துபோன காலத்திற்குரிய ஒரு அவநம்பிக்கை ஆகும், அது அதனுடைய கௌரவத்தை இழந்துவிட்டது.”

கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான வேறுபாட்டை தடமின்றி அழித்தல் சம்பவங்களை அதன் பரந்த உள்ளடக்கத்திலிருந்து பிரித்தெடுப்பது மற்றும் ஒருவரின் தனிப்பண்புகளை வடிவமைத்த, இறுதி ஆய்வில், அவர்களின் வாழ்க்கைகளின் போக்கை தீர்மானம் செய்த, உண்மையான சூழலில் பங்கேற்ற தனிநபர்களை அச்சூழலில் இருந்து அகற்றுவது ஒரு தாக்கத்தை கட்டாயம் கொண்டிருக்கும்.

ஒரு அக்கறை கொண்ட வரலாற்றாளன் —அவன் கடந்தகாலத்தை படித்திருப்பதால்— அவரது காலத்து அரசியல், கருத்தியல், சமூக மற்றும் கலாச்சார செல்வாக்கின் கீழ் அவரது வேலையைச் செய்கிறார். அனைத்து முக்கியமான வரலாற்றுப் படைப்புகளும் நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையிலான உரையாடலை சம்பந்தப்படுத்தி இருக்கும். ஆனால் அறிஞர் தனது ஆய்வுக்கான கருப்பொருள்களை அவை அவரது நிகழ்காலத்தவை என எடுத்துக்கொண்டால் வரலாற்றில் பயிற்சிபெற முடியாது. ஜூலியஸ் சீசர், ஜேன் டா’ஆர்க் (Jeanne d’Arc) மற்றும் மார்ட்டின் லூதர் வாழ்ந்த காலம், அது பல அடிப்படை வழிகளில், எமது சொந்த ஒன்றிலிருந்து வேறுபட்டிருந்தது. பிரபுத்துவ சமூகத்தின் பெரும் பிரெஞ்சு வரலாற்றாளர் மார்க் ப்லோக் (Marc Bloch) தனது புத்தகமான வரலாற்றாளனின் கைவினைப் பொருள் (The Historian’s Craft) என்பதில் பின்வருமாறு எழுதுகிறார்:

ஒரு வார்த்தையில் கூறுவதானால், வரலாற்று நிகழ்வுப்போக்கை அது நிகழ்ந்த நேரத்திலிருந்து பிரித்து புரிந்துகொள்ள முடியாது. இது எமது சொந்த மற்றும் ஏனைய அனைவரினதும் ஒவ்வொரு பரிணாமக் கட்டத்திலும் உண்மை ஆகும். ஒரு பழைய அரபு பழமொழி கூறுவது போல், ‘மனிதர்கள் அவர்களின் தந்தையரை விட அதிகமாக அவர்களின் காலங்களையே ஒத்திருக்கிறார்கள்’.

கடந்தகாலத்தை மறுஉருவாக்கி பார்ப்பதற்கு தேவைப்படுவது, வேறொருவரில் புகுந்து கற்பனையாக அவரின் அனுபவத்தை அனுபவிப்பது மற்றும் கற்பனையுணர்வு மட்டுமல்ல, புத்திஜீவித விழிப்பும் பொறுமையும் தேவைப்படும். தொழில்முறை வரலாற்றாளர்கள் நூலகங்களின் ஆவணக்காப்பகங்களிலும், உயிரியலார்களும் வேதியியலார்களும் சோதனைச்சாலைகளிலும் அதே அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடனும் கட்டாயம் வேலை செய்ய வேண்டும். ரஷ்ய புரட்சி பற்றிய அருமையான அமெரிக்க வரலாற்றாளர்களுள் ஒருவரான, காலம்சென்ற லியோபோல்ட் ஹைய்ம்சன் (1927-2010), அவரது கடைசி புத்தகமான ரஷ்யாவின் புரட்சிகர அனுபவம்,1905-1917 என்ற புத்தகத்திற்கான முன்னுரையில் எழுதியதாவது:

... எந்தவொரு உண்மையான மூல மற்றும் முக்கியமான வரலாற்றுப் படைப்பின் முக்கியத்துவத்தின் மூல ஆதாரவளமாக இருப்பது முதலும் முக்கியமாக, தனது ஆய்வின்பால் அதன் ஆசிரியர் கவனத்தை குவியச்செய்ய, எவ்விதமான முதல்நிலை ஆதார வளங்களை அவர், மூலமாக தேர்வுசெய்கிறார் என்பதிலிருந்தே கண்டறியப்படலாம். அதன் அத்தியாவசிய மதிப்பு இறுதியில் இந்த வளங்கள் எந்த அளவு துல்லியமாகவும் உட்பார்வையுடனும் ஊடுருவி ஆய்வு செய்யப்பட வேண்டியவை என்பதின் மீது சார்ந்திருக்கிறது என்பதையும் இதனுடன் நான் சேர்க்கவேண்டும்.

ஆனால் பார்பெரோவ்ஸ்கி, முதல்நிலை ஆதார வளங்களை நனவாக ஆய்வுசெய்வதன் மூலம் மற்றும் அவர்களின் கவனமான விளக்கப்படுத்தல் மூலம், எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு துல்லியமாக கடந்தகாலத்தை மீளக்கட்டியமைப்பதற்கு விழையும் வரலாற்றாளர்களை ஏளனம் செய்கிறார். அவர் எழுதுகிறார்:

கடந்தகாலத்தை அது இருந்ததுபோல் காட்டுவது என்ற கூற்று ஒரு பிரமையாக இருக்குமாறு வெளிப்படுகிறது. ஆவணங்களில் வரலாற்றாளர்கள் சந்திக்க நேர்வது கடந்தகாலம் அல்ல, மாறாக நிகழ்காலத்தினுள் தப்பியிருக்கும் கடந்தகாலத்தின் ஒரு பகுதியாகும். வரலாற்றாளர்களின் குறிக்கோள்கள் ஆவணங்களையும் ஆதாரவளங்களையும் பேசும்படி செய்தாகவேண்டும். அவற்றுக்காக அவர்கள் பேசக் கூடாது. கடந்தகாலம் என்பது கட்டியமைக்ககூடிய ஒன்று. அதன் யதார்த்தம் என்பது வரலாற்றாளர்களின் நலன்களாலும் கேள்விகளாலும் தீர்மானிக்கப்படும்.

ஆவணக்காப்பகங்களில் இருந்து பெறப்படும் ஆவணங்கள் உயிரோடுள்ள வரலாற்றாளர்களால் கட்டாயம் ஆராயப்படவும் விளக்கப்படவும் வேண்டியதுதான். ஆனால் ஒரு ஆவணத்தை ஒரு வரலாற்றாளர் விளக்கிக் கூறுகையில், அவர் தனது கற்பனையை அனுமதிக்கக்கூடாது, அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் ஒருபுறம் இருக்கட்டும், இயற்கையாக இருக்குமாறு விடவேண்டும். அத்தகைய புத்திஜீவித சுய ஒழுக்க திறமை அற்ற பார்பெரோவ்ஸ்கி, முறையான ஆய்வை நிராகரிக்கிறார், ரஷ்ய புரட்சி பற்றிய விளக்கத்தை அகநிலையாக கட்டியமைக்கிறார், அது அவரது தனிப்பட்ட கம்யூனிச எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடுகளைத் தவிர வெறொன்றுமில்லை.

அவ்வாறே, வரலாறு எப்பொழுதுமே நிகழ்காலம்தான் என்பதில் ரஷ்ய புரட்சி பற்றிய கட்டுரையை பின்வரும் கூற்றில் காண்கிறோம்:

ஒழுங்கை மறுப்பதிலிருந்து சமூக-ஜனநாயகமயப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறைக்கு இட்டுச்சென்ற, கிளர்ச்சியிலிருந்து வேலை நிறுத்தத்திற்கு செல்லும் இயற்கையான உருமாற்றம் என்பது, ரஷ்யாவில் தற்செயலான நிகழ்வுப்போக்கு என்பதற்கு மேலாக ஒருபோதும் இருந்ததில்லை. இனஅழிப்பு படுகொலைகள், புரட்சிக்கான ரஷ்ய பாதையின் சாராம்சத்தின் அடையாளக் குறியீடாக உள்ளது.

வரலாற்று சான்று பற்றி முற்றிலும் அக்கறையற்ற ஒரு நபரே இந்த வாக்கியத்தை எழுதக்கூடும். 1905ல் அங்கு பெரும் அளவிலான வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. 1912ல் லினா தங்கச் சுரங்கங்களில் சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு வேலைநிறுத்த நடவடிக்கையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. இது 1914ல் உலகப் போர் வெடிக்கும் வரை நீடித்தது. மேலும், இன அழிப்பு படுகொலையை ரஷ்யப் புரட்சியின் “சாராம்சம்” என்று சித்தரிப்பது யதார்த்தம் சார்ந்திருக்கிறது எனக்காட்டுகிறது. ரஷ்யாவில் யூத எதிர்ப்பு படுகொலை நிகழ்ச்சி பற்றி பல விவரமான ஆய்வுகள் இருந்திருக்கின்றன. இவற்றில் மிக இழிவான நிகழ்வுகள் 1881-84,1903-06, மற்றும் 1917-22ல் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட இந்த திகிலூட்டும் சம்பவங்களுக்கும் மக்கள் எதிர்ப்பை ஒடுக்குவதற்கான ஜாரிச முயற்சிகளுக்கும் இடையிலான தொடர்பு, பல்வேறு அறிவார்ந்த ஆய்வுகளில் மறுத்தற்கியலாத வகையில் நிறுவப்பட்டிருக்கிறது.

புரட்சிகர வேலைநிறுத்தங்கள் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் சோவியத்தின் தோற்றம் இவற்றின் அழுத்தத்தின் கீழ் —குறிப்பிடத்தகுந்த அரசியல் சலுகைகளை செய்ய ஆட்சியாளர்கள் நிர்பந்திக்கப்பட்ட நாட்களுக்கு சற்றே அடுத்து, 1905ல் ஒடிசாவில் நடந்த இன அழிப்பு அரசாங்க அதிகாரிகள் மற்றும் போலீஸ் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது. யூத இன அழிப்பு படுகொலை மற்றும் சோசலிச எதிர்ப்பு எதிர்ப்புரட்சிக்கும் இடையிலான தொடர்பை —சாரிச ஆவணங்களை மேற்கோள்காட்டி— தெளிவாக நிலைநாட்டும், எண்ணற்ற ஆய்வு ஆவணங்களை மேற்கோள் காட்டுவதற்கு காலம் என்னை அனுமதிக்காது. அவற்றை ஆய்வு செய்த இந்த ஆவணங்களுடன் பார்பெரோவ்ஸ்கிக்கு பரிச்சயமில்லை என்பதை நம்புவது சாத்தியமில்லை. ஆனால் அவர் அவற்றை அலட்சியம் செய்வதற்கு தேர்வு செய்தார், ஏனெனில் அவை அகநிலையாக குறிப்பிடப்பட்ட அவரது விளக்கத்திற்கு முரண்படுகிறது. இந்த விஷயத்தில், புறநிலை உண்மையை புரிந்துகொள்ளும் சாத்தியத்தை பின்நவீனத்துவவாதம் நிராகரித்து, வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட வரலாற்று பொய்மைப்படுத்துலுக்கு ஒரு கருத்தியல் மூடுதிரையாக சேவை செய்கிறது.

புறநிலை யதார்த்தத்தை பார்பெரோவ்ஸ்கி உருக்குலைப்பது, ரஷ்ய புரட்சியை தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி என்று அடையாளப்படுத்தி இருக்கும் வரலாற்றாளர்களை அவர் நிராகரிப்பதில், குறிப்பாக தெளிவான வகையில் வெளிப்படுத்துகிறது. அவர் எழுதுகிறார்:

கூலி உழைப்பாளர்களின் வளர்ச்சியிலிருந்து, தொழிலாள வர்க்கத்தை கட்டும் அதேவேளை, தங்களின் அனுபவங்களையும் அடையாளங்களையும் நிராகரிக்கும், வரலாற்றாளர்கள் மீது ஒருவர் முழக்கமிட விரும்புவது “தொழிலாள வர்க்கம் ஒழிக” என்பதைத்தான். புரட்சியின் எதிர்ப்புக்களில் தாமே எழுந்தது, தொழிலாள வர்க்கம் அல்ல. மற்றும், 1991 இறுதியில்போல், தனது மதிநுட்பமற்ற வாசகர்களை நம்பவைக்க முயற்சிக்கும் பேர்ன்ட் பொன்வெட்ச் (Bernd Bonwetsch) கூறுவதுபோல, அங்கு தொழிலாளர் இயக்கத்தையும் இடது புத்திஜீவிகளையும் இணைத்தல் கூட இருந்ததில்லை.

இந்த எதிர்பாரா வெடிப்பானது, அதன் அனைத்து அறியாமை மற்றும் அபத்தத்திலும் பார்பெரோவ்ஸ்கியின் எழுத்தின் கீழே உள்ள பிற்போக்கு அரசியல் நிகழ்ச்சிநிரலை அம்பலப்படுத்துகிறது. அவர், வார்த்தையின் எந்த சட்டபூர்வமான அர்த்தத்திலும், ஒரு வரலாற்றாளர் அல்ல. வரலாற்றிற்கும் பிரச்சாரத்திற்கும் இடையிலான வேறுபாட்டை தடமின்றி அழிக்கும் அவர், அவரது வலதுசாரி அரசியல் நிகழ்ச்சிநிரலின் பேரில், வரலாற்றுச்சான்றை அலட்சியம் செய்கிறார் மற்றும் பொய்மைப்படுத்துகிறார். பார்பெரோவ்ஸ்கியின் வார்த்தைகள் தேர்வானது, அவரது எழுத்தில் உயிர்க்கும் அரசியல் உள்கருத்தை வாசகர்கள் இனங்காணமுடியாத, மிகவும் வேறுபட்ட மணத்தைக் கொண்டிருக்கிறது:

போல்ஷிவிக் கட்சியை வெகுஜனங்கள் பின்பற்றவில்லை; அது தொழிலாளர்களது நலனையோ அல்லது விவசாயிகளது நலனையோ பிரதிநிதித்துவம் செய்யவில்லை; பேரரசின் சுற்றுவட்டத்தில் ஆதரவையும் பெற்றிருக்கவில்லை. அது ரஷ்ய மற்றும் யூத தொழில்முறைசார்ந்த புரட்சியாளர்களின் கட்சியாக இருந்தது. அவர்கள் விடுவிக்க விரும்பிய மக்களுடனும் தொடர்புபட்டிருக்காத அதேவேளை, பேரரசின் சுற்றுவட்டத்திற்குள் வேரூன்றி இராத மக்களுடனும் தொடர்புபட்டிருக்கவில்லை என அவர் எழுதுகின்றார்

இங்கு ஜேர்மனியில், போல்ஷிவிசத்தின் இந்த வரைவிலக்கணத்தின் அரசியல் உள்ளடக்கத்தை விளக்குவது தேவையில்லை என நான் நம்புகிறேன். எவ்வாறாயினும், வரலாற்று உண்மையை அவ்வாறு இழிவுபடுத்திக் காட்சிக்குட்படுத்திய படைப்புக்களின், இந்த வார்த்தைகளை எழுதிய மனிதன், பேர்லினில் ஹம்போல்ட் பல்கலைக் கழகத்தில் முன்னணி கல்வியாளர் பதவியை வகிக்க முடிவது, ஒரு ஆழமான புத்திஜீவித நெருக்கடியின் ஒரு அறிகுறி என்பதை நான் குறிப்பிடுவேன்.

இருபதாம் நூற்றாண்டில்தான் “பெரும் பொய்” மக்களை நோக்குநிலை தவறச்செய்ய, அவர்களின் முக்கிய கல்வித்துறையை கீழறுக்க மற்றும் அவர்களுடைய எதிர்ப்பின் ஆற்றலைக் குறைக்க, அரசியல் பிற்போக்கு சக்திகளால் பயன்படுத்தப்பட்ட, நன்கு தெரிந்த பரந்த அரசியல் கருவியாக தோன்றியது. இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றை திட்டமிட்டு முறையாக பொய்மைப்படுத்தும் வடிவமாக இன்று அதிகார மேலாண்மை பெற்றிருக்கும், “பெரும் பொய்க்கு” எதிரான போராட்டம், புத்திஜீவித ரீதியாக, அரசியல் ரீதியாக மற்றும் பொருளாதா ரீதியாக திவாலாகி இருப்பதுபோல, நெருக்கடிக்கு ஆளாகியுள்ள முதலாளித்துவத்திற்கு எதிரான மனிதகுலத்தின் வளர்ந்துவரும் முற்போக்கான போராட்டத்தின் அத்தியாவசிய கூறாக இருக்கிறது. தான் தப்பி இருப்பதற்காக பொய்களை நம்பி இருக்கும் ஒரு அமைப்புமுறை அழிவுக்கு விதிக்கப்பட்டுள்ளது. வரலாற்று உண்மைக்கான இந்தப் போராட்டம் ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் இருந்து ஊக்கம் பெறும். “வாய்மையே வெல்லும்! அதனைத் தொடர்வோம் என பறைசாற்றுவோம், அது வெல்லும்!”

டேவிட் நோர்த்
17 மார்ச் 2015