From the 25th Anniversary Plenum of the National Committee of the Socialist  Workers Party From the 25th Anniversary Plenum of the National Committee of the Socialist  Workers Party
WSWS : Tamil : நூலகம்  

 

 


Use this version to print | Send this link by email | Email the author

1953 நவம்பர் 13 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அமெரிக்க சோசலிசத் தொழிலாளர் கட்சியால் எழுதப்பட்ட பகிரங்கக் கடிதமானது ட்ரொட்ஸ்கிச வரலாற்றில், இயக்க மைய நிகழ்ச்சியாக இருந்தது. பகிரங்கக் கடிதமானது, நான்காம் அகிலத்தின் அப்போதைய பொதுச் செயலாளரான, மைக்கல் பப்லோவால் முன்வைக்கப்பட்ட அந்த முன்னோக்குகளின் ஒட்டுமொத்த திருத்தலுக்கு எதிராக புரட்சிகர ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தைப் பாதுகாப்பதற்காக சோசலிசத் தொழிலாளர் கட்சியால் அணிதிரட்டும் அழைப்பாக இருந்தது.

அது எமது இயக்கமாகிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை நிறுவுதற்கு வழிவகுத்தது, அது, அது முதற்கொண்டு சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்துடனும் உலக சோசலிசப் புரட்சி வேலைத் திட்டத்தைப் பாதுகாத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தலுடன் அடையாளப்படுத்தி வந்திருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் புரட்சிகர இயக்கங்கள் (பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ் முதலியன) ஸ்ராலினிசத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டமை, ஆட்டம் கண்ட முதலாளித்துவ அமைப்பு தாமே தப்பிப் பிழைக்கவும் நிலைநிறுத்திக் கொள்ளவும் அனுமதித்தது. இந்தக் காலக்கட்டத்தில் ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து முறித்துக் கொண்ட எண்ணிறைந்த போக்குகளில் பப்லோவாதம் மிக முக்கியமானதாக இருந்தது.

ஒவ்வொன்றும் அதன் சொந்த வழியில், தோன்றிக் கொண்டிருந்த புதிய முதலாளித்துவ சமநிலைக்கு இயைந்து போயின, அச்சமநிலை பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தத்தினால் (உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் வர்த்தகம் மற்றும் சுங்கவரிகளுக்கான பொது உடன்பாடு ஆகியவற்றுக்கு வழிவகுத்தது) மட்டுமல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் இடையிலான குளிர் யுத்த பதட்டத்தினாலும் பண்பிட்டுக் காட்டப்பட்டது.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகர கட்சிகளைக் கட்டுவதற்கான போராட்டத்தை, ட்ரொட்ஸ்கிச வேலைத் திட்டத்தின் மீது தொடர்ந்து தளப்படுத்துவதற்குப் பதிலாக, முதலாளித்துவத்திற்கு பிரதான எதிரியாக ஸ்ராலினிச அதிகாரத்துவம் இருந்தது என்றும் வெகுஜனங்களிலிருந்து வரும் அழுத்தத்தின் கீழ், ஸ்ராலினிசம் புரட்சிகரப் பாத்திரத்தை ஆற்ற முடியும் என்றும் பப்லோ ஒரு தத்துவத்தைக் கண்டுபிடித்தார்.

பப்லோவின்படி, அனைத்து ட்ரொட்ஸ்கிச இயக்கங்களும் செய்யக்கூடியது, ஸ்ராலினிஸ்டுகளை இடது புறத்திற்கு தள்ள அழுத்தம் கொடுத்து உதவுதல் அல்லது ஸ்ராலினிச அணிகளுக்குள் நுழையவும் கூட செய்தலாக இருந்தது. பப்லோவைப் பொறுத்தவரை, உலக சோசலிசப் புரட்சியானது தொழிலாள வர்க்கத்தின் தலைமையை வென்றெடுப்பதற்கான புரட்சிகர ட்ரொட்ஸ்கிச கட்சிகளின் திறனில் இனியும் தங்கி இருப்பதில்லை மாறாக ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான மோதலின் "புறநிலை" நிகழ்ச்சிப் போக்கில் தங்கி இருந்தது.

இவ்வாறு பப்லோவாதத்தின் அத்தியாவசிய தர்க்கமானது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தையே கலைத்தலாக இருந்தது. அதனால்தான் பப்லோவாதத்தின் உள் அரிப்பானது (சிதைவானது), ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைப் பொறுத்தவரை, தசாப்தகால ஸ்ராலினிச மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையைவிட மிக அதிகமான அழிவுகரமானதாக இருந்தது.

முற்றிலும் பதிவுவாத வகையில், பப்லோ பேரார்வத்துடன், இந்த மோதல் மூலம், ஒரு 'போர்-புரட்சி' என்று அதனை அவர் குறித்ததில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஏகாதிபத்தியத்தை வென்றுவரும் மற்றும் கிழக்கு ஐரோப்பா போன்ற ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளை நிறுவும் அவை நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும் என்று அறிவித்தார்.

யதார்த்தத்தில் பப்லோவின் முன்னோக்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் பற்றி, சிறப்பாக வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளிலும் ஐக்கிய அமெரிக்க அரசுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் பற்றிய ஒரு ஆழமான அவநம்பிக்கை வாதத்தையும் ஐயுறவு வாதத்தையும் வெளிப்படுத்துகின்றது.

பப்லோவும் அவரைப் பின்பற்றியவர்களும் ஸ்ராலினிசத்திற்கு அவர்களது அடிபணிதல் மூலம் புதிய ஏகாதிபத்திய அமைப்பாக்கத்திற்கு தங்களைக் அடிபணியச் செய்தார்கள். அனைத்துலகக் குழுவுடன் பப்லோவாதிகள் பிளவுபட்ட பின்னர், பப்லோவாதிகளின் அடிபணிதல் ஒவ்வொரு நாட்டிலும் வெகுஜன இயக்கத்தில் மேலாதிக்கம் செய்யும் இயக்கங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று பகிரங்கமாக முன்மொழிந்தார்.

இது பப்லோவாதிகளுக்கு, ஸ்ராலினிசத்தையும் சமூக ஜனநாயகத்தையும் மட்டுமல்லாமல், 'ஏகாதிபத்திய எதிர்ப்பு' மற்றும் 'புரட்சிகர' என்று தங்களைத்தாங்களே பகட்டாரவாரமாய் விளம்பரப்படுத்திக்கொள்ளும் ஒவ்வொரு முதலாளித்துவ தேசியவாத இயக்கத்தையும் முன்னிலைப்படுத்துவதற்கு மேடை அமைத்துக் கொடுத்தது. அத்தகைய இயக்கங்கள் இன்று எங்கிருக்கின்றன? விடை அளிக்கப்படுவதற்காக இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது.

உலகப் பொருளாதாரத்தில் உற்பத்தி பூகோளமயமாதலை எதிர்கொள்ளும்பொழுது 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற அவர்களின் முன்னோக்கின் திவாலுடன் மோதலுற்று, ஸ்ராலினிச அதிகாரத்துவமானது முதலாளித்துவத்தை மீளமைத்ததன் மூலம் சோவியத் ஒன்றியம் உள்பட தொழிலாளர் அரசுகளின் கடைசி எச்சங்களையும் அழித்து விட்டிருக்கின்றது.

முதலாளித்துவ FLN ஆட்சியின் கடைசிப் பிற்போக்கு வாரிசுகளான, அல்ஜீரிய படைத்தளபதிகள், நூறாயிரக்கணக்கான இளைஞர்களின், தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் இரத்தத்தில் கைகளை நனைத்தனர். இனவாத இஸ்ரேல் அரசின் ஆணைகளின் பேரில் அரபாத்தும் பிஎல்ஓ-வும் தங்களின் சொந்தத் தொழிலாளர்களைக் கண்காணித்தனர். காஸ்ட்ரோ கியூபத் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஏகாதிபத்திய சுரண்டலுக்கு உத்திரவாதமானவராக இருக்கிறார்.

தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகரக் கட்சிகளைக் கட்டுவதற்கு பதிலீடாக பப்லோ பார்த்த அனைத்து இயக்கங்களும் ஏகாதிபத்தியத்தின் நேரடி முகவாண்மைகளாக (ஏஜன்டுகளாக) இன்று வெளிப்படுகின்றன.

ட்ரொட்ஸ்கிச இயக்கம் பப்லோவாதத்திற்கு பெரும் விலை கொடுக்க வேண்டி இருந்தது. நான்காம் அகிலத்தின் பெரும்பான்மைப் பகுதிகள் பப்லோவுடன் சென்றன. குறிப்பாக, இலங்கையில், லங்கா சமசமாஜக் கட்சி பப்லோவுடன் சேர்ந்தமை மற்றும் சிறிலங்கா முதலாளித்துவ வர்க்கத்திற்கும் சிங்கள பேரினவாதம் போன்ற அவர்களின் ஆட்சி வழிமுறைகளுக்கும் இயைந்து போகும் ஒரு நிகழ்ச்சிப் போக்கை ஆரம்பித்தது

லங்கா சமசமாஜக் கட்சியானது அதன் சொந்த மரபுகளையும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அது ஐக்கியம் கொண்டிருந்த இந்திய போல்ஷிவிக் லெனினிசக் கட்சியின் மரபுகளையும் சிறிது சிறிதாகக் கைவிட்டது. முக்கியமாக, இலங்கையில் உள்ள தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக மற்றும் மொழி உரிமைகளைப் பாதுகாத்தலைக் கைவிட்டது.

பப்லோவாத அகிலமானது இந்த சீரழிவிற்குத் தலைமை தாங்கியதுடன் லங்கா சமசமாஜக் கட்சியினை திருமதி பண்டாரநாயக்காவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் மேலும் மேலும் நெருங்கிச் செல்லுவதற்கு விமர்சனமற்ற முறையில் அனுமதித்தது. அதனைச் செய்வதில், லங்கா சமசமாஜக் கட்சியானது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வெகுஜன இயக்கத்தை மேலாதிக்கம் செய்யும் அந்த கட்சிகளுக்கு தங்களை கீழ்ப்படுத்திக் கொள்ளும் பப்லோவாதக் கொள்கையைத்தான் முன்னெடுத்தது.

லங்கா சமசமாஜக் கட்சியின் குற்றத்தனமான பாதை செயலூக்கத்துடன் பப்லோவாதிகளால் மூடிமறைக்கப்பட்டது. அது நேரடியாக மாபெரும் காட்டிக் கொடுப்புக்கு வழி வகுத்தது, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று தன்னை அழைத்துக் கொண்ட ஒரு கட்சி முதன்முதலாக வெகுஜனங்களை பகிரங்கமாகக் காட்டிக் கொடுத்தது மற்றும் ஒரு முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் சேர்ந்தது. லங்கா சமசமாஜக் கட்சி பகிரங்கமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பேரினவாத முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் சேர்ந்து காட்டிக் கொடுத்ததானது தமிழ் இளைஞர்கள் முதலாளித்துவ தமிழ் தேசிய இயக்கத்தை நோக்கி திரும்பியது நேரடிக் காரணியாக இருந்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்தக் காட்டிக் கொடுப்பை அதன் போக்கின் ஒவ்வொரு அடியிலும் எதிர்த்துப் போராடியது. இந்தப் போராட்டத்தின் விளைவே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (இப்பொழுது, சிறிலங்காவில் உள்ள சோசலிச சமத்துவ கட்சி) ஸ்தாபிதம் ஆகும். இந்த மாபெரும் காட்டிக் கொடுப்பிற்கும் மற்றும் பின்னர் பப்லோவாத அணிகளில் தொடர்ந்து இருந்த லங்கா சமசமாஜக் கட்சி (புரட்சிகர) யின் சீரழிந்த இடைநிலை வாதத்திற்கும் (மத்தியவாதத்திற்கும்) எதிராகப் போராடி இருந்த அந்த சக்திகளில் இருந்து அது உருவாக்கப்பட்டது.

இலங்கையில் போராட்டமானது, பப்லோவாத மற்றும் சந்தர்ப்பவாதத்தின் ஏனைய அனைத்து வடிவங்களுக்கும் எதிரான அனைத்துலகக் குழுவின் ஐம்பது ஆண்டுக்கால சர்வதேசப் போராட்டத்துடன் முற்றிலும் கட்டுண்டிருந்தது மற்றும் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளின் பொழுது, பப்லோவாதிகள் இயைந்துபோன ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுடன் சேர்ந்து போருக்குப் பிந்தைய முதலாளித்துவ சமநிலை பொறிந்து போனதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஒடுக்கப்பட்ட நாடுகளில், முதலாளித்துவ தேசிய இயக்கங்கள், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அங்கியின் வாலின் பின்னே சூழ்ச்சி நடவடிக்கைகளைச் செய்யக் கூடியதாக இனியும் இல்லை, இப்பொழுது ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளர்களாகவே பகிரங்கமாக வெளிக்கிளம்புகின்றன.

பப்லோவாதத்தின் வேலைத்திட்டம் மட்டுமல்ல இந்த அனைத்துவிதமான இயக்கங்களின் வேலைத்திட்டமும் அப்பட்டமாக திவால் என்று இப்பொழுது நிரூபிக்கப்பட்டிருக்கின்றன மற்றும் உலக சோசலிசப் புரட்சி முன்னோக்குகளை பாதுகாக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டம் சரியென நிலைநாட்டி இருக்கிறது.

ஆயினும், ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதம் இவற்றின் பிற்போக்கு முகவாண்மைகளால் உலகத் தொழிலாள வர்க்கமானது கடந்த எழுபது ஆண்டுகளாக மேலாதிக்கம் செய்யப்பட்டமை கசப்பான மரபுரிமைப் பண்பை விட்டுச்சென்றிருக்கிறது. அது தொழிலாள வர்க்கத்தில் மார்க்சிச மற்றும் சோசலிச நனவினை படுபயங்கரமாய் அழிப்பதற்கு வழிவகுத்திருக்கிறது. சோசலிசம் பற்றிய கருத்து ஸ்ராலினிசத்துடன் அடையாளம் காணப்படும் அந்த மட்டத்திற்கு, சோசலிசம் பற்றிய கருத்தே இன்று பல தொழிலாளர்களுக்கு அந்நியமானதாக இருக்கின்றது.

அனைத்துலகக் குழுவானது சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திடையே மார்க்சிச கலாச்சாரத்தை மீளக் கட்டி எழுப்பதற்கு இப்பொழுது போராட வேண்டி இருக்கின்றது. தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்களை மார்க்சிஸ்டுகளாகப் பயிற்றுவித்துக் கொள்ள வரலாற்றின் படிப்பினைகளைக் கட்டாயம் கற்க வேண்டும். அந்தப் படிப்பினைகள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுடன் பிணைந்து இருக்கின்றன. இதுதான் உலக சோசலிச வலைத் தளத்தின் இலக்காகும் மற்றும் இதனால்தான் எமது இயக்கத்தின் ஸ்தாபகப் பத்திரமான, பகிரங்கக் கடிதத்தை நாம் வெளியிடுகின்றோம்.

அனைத்து ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கும்!

அன்புள்ள நண்பர்களே!

அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட 25வது ஆண்டு நிறைவு நாளில் சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசியக்குழுவின் நிறைபேரவை (Plenum) உலகம் முழுவதிலும் உள்ள மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அனைவருக்கும் புரட்சிகர சோசலிச வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினரால் இயற்றப்பட்ட ஜனநாயக விரோத சட்டங்களால் சோசலிச தொழிலாளர் கட்சியானது (Socialist Workers Party), சமுக ஜனநாயகவாதிகளின் இரண்டாம் அகிலத்தாலும் ஸ்ராலினிஸ்டுகளின் மூன்றாம் அகிலத்தாலும் காட்டிக் கொடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் நிறைவேற்றுதற்கும் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட சோசலிச புரட்சியின் உலக கட்சியான நான்காம் அகிலத்தில் இணையாமல் இருந்தாலும் --நமது தியாகத் தலைவரின் வழிகாட்டுதலில் உருவான உலக ரீதியான அமைப்பின் நலன்களில் அக்கறை கொள்கின்றோம்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் முன்னோடி ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினர் கிரெம்ளினால் அடக்கி ஒடுக்கப்பட்ட கொள்கைகளை உலக மக்களின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதற்கூடாக ஸ்ராலினிஸ்டுகளின் அரச நிர்வாக எந்திரத்தின் மூலம் ட்ரொட்ஸ்கியை கடுமையாக அடக்கி ஒடுக்கி தனிமைப்படுத்தியதை முறியடித்ததுடன் நான்காம் அகிலத்தை அமைப்பதற்கான அடிப்படையை அமைத்தனர். அதன் பின்னர் ட்ரொட்ஸ்கி நாடு கடத்தப்பட்டார். அதிலிருந்து அவரது மரணம்வரை ட்ரொட்ஸ்கிக்கும் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சிக்குமிடையே நெருக்கமான நம்பிக்கையான நட்புறவு நீடித்தது.

பல்வேறு நாடுகளில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சிகளை உருவாக்குவதற்கு கூட்டு முயற்சிகள் உட்பட முறையான ஒத்துழைப்பு ஏற்பட்டது. இதனுடைய இறுதிக்கட்ட நடவடிக்கைதான் 1938-ம் ஆண்டு நான்காம் அகிலம் உருவாக்கப்பட்டதாகும். அப்போது ட்ரொட்ஸ்கி அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் ஒத்துழைப்புடன் எழுதியதுதான் இடைமருவு வேலைத்திட்டம் (Transitional Program). இது ட்ரொட்ஸ்கி கேட்டுக்கொண்டதற்கிணங்க அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் இயக்க உருவாக்க மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எந்த அளவிற்கு ட்ரொட்ஸ்கிக்கும் அமெரிக்க சோசலிச தொழிலாளர் இயக்கத்திற்கும் இடையே நெருக்கம் இருந்தது என்பதற்கு பேர்ன்ஹாம் மற்றும் சட்மன் ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட குட்டி முதலாளித்துவ எதிர்ப்பிற்கு எதிராக மரபுவழி ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை பாதுகாப்பதற்கான போராட்டம் தொடர்பானவற்றை 1939-40ம் ஆண்டு கட்சி ஆவணங்களில் இருந்து தெரிந்துகொள்ளலாம். இது, இதனைத்தொடர்ந்த 13 ஆண்டுகளில் நான்காம் அகிலத்தின் வளர்ச்சியில் முக்கிய ஆதிக்கத்தை கொண்டிருந்தது.

ஸ்ராலினது இரகசிய போலீஸ் கைக்கூலிகள் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்த பின்னர் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி, ட்ரொட்ஸ்கியின் தத்துவங்களை காப்பதிலும், பரப்புவதிலும் முன்னணியில் நின்றது. நாங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டமை தேர்வினால் அல்லாது தேவையினாலாகும். இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், பல நாடுகளில் மரபுவழி ட்ரொட்ஸ்கிச அணியினர் தலைமறைவாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். குறிப்பாக நாஜிக்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஐரோப்பிய நாடுகளில் கூடுதலாக தலைமறைவாக இருக்கவேண்டியிருந்தது. இலத்தீன் அமெரிக்க நாடுகள், கனடா, இங்கிலாந்து, இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் இருந்த ட்ரொட்ஸ்கிசவாதிகளுடன் இணைந்து எங்களால் முடிந்தவரை கடுமை நிறைந்த போர்க் கால ஆண்டுகளில் மரபுவழி ட்ரொட்ஸ்கிச சித்தாந்தங்களை காப்பாற்றி வந்தோம்.

ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாகியிருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள் போர் முடிந்ததும், பகிரங்கமாக வெளிப்பட்டு நான்காம் அகிலத்தை அமைப்பு ரீதியில் சீரமைக்கத் தொடங்கினர். நான்காம் அகிலத்தில் நாங்கள் உறுப்பினர் ஆவதை அமெரிக்க சட்டங்கள் தடுக்கப்பட்டதிலிருந்து ட்ரொட்ஸ்கியின் இயக்கத்தை அவர்விட்டுச் சென்ற உயர்ந்த பாரம்பரியத்தை நிலைநாட்டும் திறமை மிக்க தலைமை உருவாகும் என்று நம்பினோம். ஐரோப்பிய நாடுகளில் நான்காம் அகிலத்திற்கு தலைமை ஏற்ற இளம் புதிய தலைவர்களுக்கு ஆதரவும், முழு நம்பிக்கையும் கிடைக்கவேண்டுமென்று விரும்பினோம். ஐரோப்பிய தோழர்கள் தங்களது பிழையான போக்குகளைத் தாமே திருத்திக்கொள்ள ஈடுபட்ட நேரத்தில், எங்களது செல்லும் திசை நியாயப்படுத்தப்பட்டதாக உணர்ந்தோம். எவ்வாறிருந்தபோதிலும் நாம் ஏனையோருடன் சேர்ந்து இந்த தலைமையினை கடும் விமர்சனத்திலிருந்து சுதந்திரமாய் விட்டது அதுவே நான்காம் அகிலத்தின் நிர்வாகத்தினுள் ட்ரொட்ஸ்கிச அடிப்படை வேலைத்திட்டத்தைக் கைவிட்ட, கட்டுப்படுத்தமுடியாத இரகசிய தனிப்பட்ட கன்னை (பிரிவு) வலுப்படுத்திக்கொள்வதற்கான வழி திறந்து விட உதவியது என்பதை நாம் இப்போது ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

பப்லோவை மையமாகக் கொண்டிருந்த இந்தக் கன்னை, பல நாடுகளில் நனவாகவும் திட்டமிட்டும் வரலாற்று ரீதியாக உருவாக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிச போராளிகளை குழப்பத்திற்குள்ளாக்கி சீர்குலைத்து வருகின்றதுடன், நான்காம் அகிலத்தை கலைத்துவிடுவதற்கும் முயன்று வருகின்றது.

ட்ரொட்ஸ்கிச முன்னோக்கு

இதனைத் தெளிவுபடுத்துவதற்காக உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஸ்தாபிக்கப்பட்ட அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் தருகின்றோம்:

(1) முதலாளித்துவம் மரணப் பிடியிலிருக்கும்போது, உலக நாகரீகத்தை, மோசமாகிவரும் பொருளாதார மந்த நிலைகள், உலகப்போர்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான பாசிசத்தின் வெளிப்பாடுகளால் ஒழித்துக்கட்ட அச்சுறுத்துகின்றது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு இந்த ஆபத்தின் தன்மையின் சாத்தியப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.

(2) இத்தகைய படுபாதாளத்தை நோக்கிய சரிவானது, உலக அளவில் முதலாளித்துவத்தை திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தால் மாற்றீடு செய்வதன் மூலம் மட்டுமே தவிர்க்கப்பட முடியும், மற்றும் இவ்வாறு அதன் ஆரம்ப காலங்களில் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட திருகுப் புரி வடிவிலான முன்னேற்றத்தைத் தொடருதலை அது புதுப்பிக்கும்.

(3) இத்தகைய பணி சமுதாயத்தின் ஒரேயொரு உண்மையான புரட்சிகர வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின் தலைமையினால் தான் சாத்தியமாகும். ஆனால் தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொள்வதற்கு சமூக சக்திகளுக்கு இடையிலான உலக உறவுகளின் நிலைமை முன்னொருபோதும் இல்லாதவாறு சாதகமாக இருக்கின்றபோதிலும், தொழிலாள வர்க்கமானது ஒரு தலைமை நெருக்கடியை எதிர்நோக்குகின்றது.

(4) சர்வதேச அளவில் இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், ஒவ்வொரு நாட்டிலும், லெனின் உருவாக்கிய பாணியிலான புரட்சிகர சோசலிச கட்சிகளை அமைக்கவேண்டும். இவை ஜனநாயகத்தையும், மத்தியத்துவத்தையும் இயங்கியல் ரீதியாக ஒன்றிணைக்கும் ஒரு போராடக்கூடிய கட்சியாக இருக்கவேண்டும். அதாவது முடிவுகளை எடுப்பதில் ஜனநாயக ரீதியானதாகவும், நடைமுறைப்படுத்துவதில் மத்தியத்துவமும், தலைமையை கட்சியின் அங்கத்தவர்கள் கட்டுப்படுத்தக் கூடியதாகவும், அம்முடிவுகளை மிகவும் கட்டுப்பாடான முறையில் கட்சியின் அங்கத்தவர்கள் நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.

(5) இந்தக் குறிக்கோள் நிறைவேறுவதற்கு தடைக் கல்லாக இருப்பது ஸ்ராலினிசம்தான். 1917 அக்டோபரில் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி தொழிலாளர்களை ஸ்ராலினிசம் தன் பக்கம் ஈர்த்த பின்னர், அவர்களது நம்பிக்கையைச் சிதைக்கின்ற வகையில் ஸ்ராலினிசம் செயல்பட்டு, தொழிலாளர்களை சமுக ஜனநாயகத்தின் பிடியில் சிக்கச் செய்ததுடன், பின்னர் மந்த நிலைக்கு கொண்டு சென்றது, அல்லது திரும்பவும் முதலாளித்துவத்தின் நப்பாசைகளில் வீழ்த்திவிட்டது. இத்தகைய துரோக நடவடிக்கைகளின் நேரடியான பலன்களான பாசிசத்தின் வளர்ச்சியும், அல்லது மன்னராட்சிகள் ஆதரவு சக்திகளின் வெளிப்பாடுகளின் மூலமும், மற்றும் முதலாளித்துவம் தோற்றுவிக்கும் புதிதான போர்கள் மூலமும் தொழிலாள வர்க்கம் விலையை செலுத்துகின்றது. எனவேதான், நான்காம் அகிலம் ஸ்ராலினிசத்திற்கு எதிராக, சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஸ்ராலினிசத்தை புரட்சிகர முறையில் தூக்கி வீசுவதை தனது முக்கிய கடமைகளுள் ஒன்றாக ஆரம்பத்தில் இருந்தே வகுத்துக்கொண்டது.

(6) நான்காம் அகிலத்தின் பல பிரிவுகளும், கட்சிகளும், அதற்கு ஆதரவான குழுக்களும் தங்களது தந்திரோபாய செயல்பாட்டில் ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவ கைக்கூலிகளையும் (தேசியவாத குழுக்கள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவம்) எதிர்த்துப் போராடுவது மிக முக்கியமாக இருந்ததுடன், அதேநேரத்தில் ஸ்ராலினிசத்திற்கு அடிபணிந்துவிடாமலும், ஏகாதிபத்தியத்திற்கும் அடிபணியாது இறுதி ஆய்வுகளில் ஏகாதிபத்தியத்தின் குட்டி முதலாளித்துவ கைக்கூலியான ஸ்ராலினிசத்திற்கு எதிராக எவ்வாறு போராடுவதென்பதைத் தெரிந்திருக்கவேண்டியிருந்தது.

ட்ரொட்ஸ்கியால் உருவாக்கப்பட்ட இந்த அடிப்படைக் கோட்பாடுகள் அதிகரித்துவரும் சிக்கலான மற்றும் எளிதில் மாறுபடுகின்ற இன்றைய உலகின் அரசியலின் மத்தியில் தனது செல்தகைமையை இன்னும் கொண்டிருக்கின்றன. உண்மையில் ட்ரொட்ஸ்கி முன்கூட்டிப் பார்த்தவாறு எல்லா வகையிலும் புரட்சிகர சூழ்நிலைகளுக்கான சந்தர்ப்பங்கள் உருவாவதுடன், அந்த நேரத்தின் வாழும் யதார்த்தத்துடன் தொடர்பற்றதாகவும், ஏதோ தொலைதூரத்துக்கு உரியதாக ஒரு நேரத்தில் தோற்றமளித்தவை இப்பொழுதுதான் முற்றும் சரியானதாக வந்திருக்கின்றது. உண்மை என்னவெனில் அரசியல் ஆய்விலும், அரசியல் நடைமுறை செயல்பாட்டின் போக்கைத் தீர்மானிப்பதிலும் இந்தக் கோட்பாடுகள் அதிகரிக்கும் பலத்துடன் இப்பொழுது முக்கியமானதாகின்றன.

பப்லோவின் திருத்தல்வாதம்

இந்தக் கொள்கைகள் பப்லோவால் கைவிடப்பட்டிருக்கின்றன. புதிய காட்டுமிராண்டித்தனத்தின் அபாயத்தை வலியுறுத்துவதற்கு மாறாக, சோசலிசத்தை நோக்கிய பாதை ''பின்நோக்கி செல்லமுடியாதது'' எனக் கூறிய பப்லோ, இருந்தும் நமது தலைமுறையிலோ அல்லது வரவிருக்கும் சில தலைமுறைகளிலோ சோசலிசம் வருவதை அவர் பார்க்கவில்லை. அதற்கு பதிலாக ''எழுச்சியுறும்'' புரட்சிர அலைகளினால் ஒரு ''உருக்குலைந்த'' அதாவது ஸ்ராலினிச வடிவிலான தொழிலாளர் அரசுகள் உருவாகி இவை ''பல நூற்றாண்டுகளுக்கு'' நீடிக்கும் என்ற கருத்துருவை முன்னெடுத்திருக்கிறார்.

இது தொழிலாள வர்க்கத்தின் ஆற்றல் பற்றிய அவரது அதிஉயர் ஐயுறவுவாதத்தை வெளிப்படுத்துவதுடன், சுயாதீனமான புரட்சிகர சோசலிச கட்சிகளை கட்டுவதற்கான போராட்டம் பற்றி பின்னர் அவர் குரல் கொடுத்திருப்பதை அது முற்றாக எள்ளி நகையாடுகிறது. சுயாதீனமான புரட்சிகர சோசலிச கட்சிகளை கட்டுவதை சகல தந்திரோபாய முறைகளிலும் முக்கியமாக முன்வைப்பதைவிட்டு ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் மூலம் இது சாத்தியமாகும் என அவர் கருதுகின்றார். அல்லது ஸ்ராலினிசத்தின் ஒரு பிரிவாவது தன்னை திருத்திக்கொண்டு, அழுத்தங்களுக்கு அடிபணிந்து ட்ரொட்ஸ்கிசத்தின் ''கருத்துக்களையும்'' ''வேலைத்திட்டத்தையும்'' ஏற்றுக்கொள்ளும் என குறிப்பிட்டார். பிரான்சு போன்ற நாடுகளில் உள்ள ஸ்ராலினிச முகாமில் உள்ள தொழிலாளர்களை அணுகுவதற்கான தந்திரோபாய நடவடிக்கைளில் தேவைப்படும் இராஜதந்திரத்தின் பாவனையின் கீழ், அவர் இப்பொழுது ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புக்களை மூடிமறைக்கிறார்.

இந்தப் போக்கின் சீரழிவான வேலைகளின் காரணமாக ட்ரொட்ஸ்கிச அணிகளில் இருந்து ஸ்ராலினிச முகாமிற்கு சீரிய விட்டோடல்களுக்கு வழிவகுத்திருக்கின்றது. இலங்கை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஸ்ராலினிசத்திற்கு ஆதரவாக பிளவு ஏற்பட்டிருப்பது, ஸ்ராலினிசம் தொடர்பாக பப்லோ உருவாக்கியுள்ள பிரமைகளின் துயரம்தோய்ந்த விளைவுகள் பற்றி எங்கும் உள்ள அனைத்து ட்ரொட்ஸ்கிஸ்டுகளும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பப்லோவின் திருத்தல்வாதம் பற்றிய விரிவான ஆய்வை மற்றொரு ஆவணத்தில் நாம் முன்வைக்கின்றோம். இந்தக் கடிதத்தில், பப்லோ எந்த அளவிற்கு ஸ்ராலினிசத்துடன் சமரசவாதத்தில் சென்றிருக்கிறார் என்பதையும், இந்நடவடிக்கைகள் நான்காம் அகிலத்தின் இருப்பிற்கே பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் தீர்க்கமான செயல் புலத்தில் காட்டும் சில அண்மைய சோதனைகளுக்கு எம்மை நாம் மட்டுப்படுத்திக்கொள்வோம்.

ஸ்ராலினின் மரணத்திற்குப் பின்னர், சோவியத் யூனியனில் கிரெம்ளின் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இவற்றில் எந்த சலுகையும் அரசியல் தன்மை கொண்டவை அல்ல. இந்த சலுகைகள், தகாவழி பற்றிய அதிகாரத்துவத்தை, மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சூழ்ச்சி நடவடிக்கையைத் தவிர வேறொன்றுமில்லை மற்றும் ஸ்ராலினுக்குப் பின்னர் மற்றொருவர் அதிகாரத்துவத்தின் சார்பில் ஆட்சிக்கு வருவதற்கு ஏற்பாடு என்று பண்பிடுவதற்குப் பதிலாக, பப்லோவாத கன்னை (பிரிவு) இத்தகைய சலுகைகளை நல்ல விடயங்களாக எடுத்துக்கொண்டு, அவற்றை அரசியல் சலுகைகளாக வண்ணம்பூசி, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் தொழிலாளர்களுடன் ''அதிகாரம் பகிர்ந்து கொள்ளப்படலின்" சாத்தியம் பற்றி முன்னிலைப்படுத்தவும் கூட செய்தது. (Fourth International January-February, 1953, p. 13.)

பப்லோ வழிபாட்டின் முக்கியமான மதகுருவான கிளார்க்கால் (Clarke) இந்த ''அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளல்'' என்ற கருத்து மிகவும் வெளிப்படையாக பரப்பப்பட்டது. இது மறைமுகமாக பப்லோவால் சமயக் கொள்கைபோல் அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் ஒரு முக்கிய கேள்விக்கு நோக்கி இட்டுச்சென்றது. அதாவது, ஸ்ராலினிச ஆட்சிகளின் கலைப்பானது, ''பின்னோக்கி செல்லாவிட்டாலும், இதுகாறும் உள்ள தமது நிலையைப் பாதுகாத்துக்கொள்ள முயலும் பிரிவுகளுக்கிடையே ஒரு பலாத்காரமான அதிகாரத்துவ போராட்டங்களை உருவாக்குவதுடன், அவர்களின் பல பிரிவுகள் மக்களின் பலமான அழுத்தங்களுக்கு இழுக்கப்படும் வடிவத்தை எடுக்குமா?'' என பப்லோ கேட்கிறார். (Fourth International, March-April, 1953, p. 39.)

இச் செயல் திட்டம், மரபுவழி ட்ரொட்ஸ்கிச வேலைத் திட்டமான ஒரு அரசியல் புரட்சி மூலம் கிரெம்ளின் அதிகாரத்துவத்தை தூக்கி வீசுதல் என்ற வேலைத்திட்டத்திற்கு ஒரு புதிய உள்ளடக்கத்தை வழங்கியது. அதாவது இந்த திருத்தல்வாத நிலைப்பாடானது ட்ரொட்ஸ்கிசத்தின் ''வேலைத்திட்டமும்'', ''கருத்துக்களும்'' அதிகாரத்துவத்திற்குள் வடிகட்டப்பட்டு ஊடுருவிக் கலக்கும், அல்லது அதன் தீர்க்கமான ஒரு பகுதி இவ்வாறு முன்கூட்டிப் பார்க்கமுடியாத ஸ்ராலினிசத்தை ''தூக்கிவீசும்'' என்பதாகும்.

கிழக்கு ஜேர்மனியில் ஸ்ராலினிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்திய அரசாங்கத்திற்கு எதிராக, ஜூன் மாதம் தொழிலாளர்கள் திரண்டெழுந்தமை ஜேர்மனியின் வரலாற்றில் நடந்த மாபெரும் போராட்டங்களுள் ஒன்றாகும். சோவியத் யூனியனில் ஸ்ராலினிஸ்டுகள் தங்களது, அதிகாரத்தைப் பறித்துக்கொண்டு அதனை வலுப்படுத்திக் கொண்ட பின்னர், அதற்கு எதிராக பாட்டாளி மக்கள் முதல் தடவையாக வெளிப்படுத்திய எழுச்சி இதுவேதான். பப்லோ இந்த சகாப்த காலகட்டத்தின் நிகழ்ச்சி பற்றி எவ்வாறு பதிலளித்தார் என்பதைப் பார்ப்போம்?

கிழக்கு ஜேர்மன் தொழிலாளர்களின் புரட்சிகர அரசியல் அபிலாஷைகளை தெளிவாகக் குரல்கொடுப்பதற்குப் பதிலாக, பப்லோ, கிழக்கு ஜேர்மன் எழுச்சியை ரஷ்ய படைகள் மூலம் ஸ்ராலினிச கொடுங்கோலர்கள் ஒடுக்கியதை மூடிமறைத்தார். (''ஜேர்மனியின் நிகழ்ச்சிகளின் ஆழமான அர்த்தத்தை சோவியத் தலைவர்களோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளோ, இதர ''மக்கள் ஜனநாயகங்களின்" தலைவர்களோ பொய்மைப்படுத்தவோ அல்லது அலட்சியப்படுத்தவோ இனியும் முடியாது போனது. மேலும் கொந்தளிப்பு ஏற்பட்டுவிடாது தவிர்க்கும் வகையிலும், பரந்துபட்ட மக்களிடம் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொள்ளும் ஆபத்து நேர்வை தவிர்க்கும் வகையிலும், இன்னும் அதிக தாராளமாக மற்றும் உண்மையான சலுகைகளைக் கொண்ட பாதை வழியே தொடர்வதற்கு அவர்கள் கடப்பாடு கொண்டிருக்கின்றனர். இப்பொழுது முதல் அவர்களால் இதை பாதிவழியில் நிறுத்திக்கொள்ள முடியவில்லை. அவர்கள் உடனடியான எதிர்காலத்தில் பாரிய வெடிப்புகள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளவும், இயலுமானால் ஒரு 'கடுமையான முறையில்' தற்போதை நிலைமையில் இருந்து மக்களால் சகித்துக்கொள்ளக்கூடிய ஒரு நிலைமைக்கு ஒரு சில சலுகைகளை வழங்க கடைமைப்பட்டனர்.") (Statement of the International Secretariat of the Fourth International published in The Militant July 6..)

ஸ்ராலினிச அரசாங்கங்களை தாங்கிப் பிடித்திருந்த ஒரே சக்தியான சோவியத் துருப்புக்களை ஜேர்மனியில் இருந்து விலக்கிக்கொள்ள வேண்டுமென்று, கோரிக்கைவிடுப்பதற்கு பதிலாக, பப்லோ பிரமைகளை ஊட்டினார். கிரெம்ளினின் இராணுவ அதிகாரிகளிடம் இருந்து "உண்மையான மேலும் அதிக அளவிலான, சலுகைகள்" வரும் என்ற ஒரு பொய் தோற்றத்தை பப்லோ தொழிலாளர் மத்தியில் உருவாக்கினார். இதன் மூலம் கிரெம்ளின் தலைவர்களது பயங்கர நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் பப்லோ செயல்பட்டார். கிளர்ச்சியில் ஈடுபடும் தொழிலாளர்களை "பாசிஸ்டுகள்" மற்றும் ''அமெரிக்க ஏகாதிபத்திய ஏஜெண்டுகள்'' என முத்திரை குத்தவும், அவர்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறை அலையைத் திறந்து விடவும் அந்த நிகழ்வுகளின் ஆழமான அர்த்தத்தை பழியார்ந்த முறையில் பொய்மைப்படுத்துதற்கும் அது மேற்செல்லுகையில், மொஸ்கோ இதைவிட சிறந்த ஆதரவை வேண்டி இருந்திருக்கக் கூடுமோ?

பிரெஞ்சுப் பொது வேலைநிறுத்தம்

பிரான்சில் வரலாறு காணாத மிகப்பெரிய வேலை நிறுத்தம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகியது. இதை தொழிலாளர்களே, தங்களது தலைவர்களுக்கு எதிராக ஆரம்பித்ததால் தொழிலாளர்கள் அரசியல் ஆதிக்கத்தை பெறுவதற்கு சாதகமான சூழ்நிலை அப்போது உருவாயிற்று. தொழிலாளர் தவிர பிரெஞ்சு விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். அவர்கள் முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராக தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அன்றைய தினம் உத்தியோகபூர்வாமான தலைமையான சமூக ஜனநாயவாதிகளும் ஸ்ராலினிஸ்டுகளும் தொழிலாளர் வர்க்கத்தினதும் விவசாயிகளினதும் இந்த இயக்கத்தை காட்டிக்கொடுத்து, பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை தவிர்க்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தனர். அந்த காட்டிக்கொடுப்பினைப் போன்ற ஒன்றை தற்போதைய வரலாற்றிலே காண்பது கடினமாகும்.

இந்த பாரிய நிகழ்ச்சிகளுக்கு பப்லோவாதிகள் எவ்வாறு பிரதிபலித்தனர் என்பதை பார்ப்போம். சமூக ஜனநாயகவாதிகளின் செயல்பாட்டை தவறான காரணங்களை வைத்துக்கொண்டு துரோகம் என்று வர்ணித்தார்கள். ஸ்ராலினிஸ்டுகள் முதுகின் பின்னால், சமூக ஜனநாயக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்ற அடிப்படையில் இது ஒரு காட்டிக்கொடுப்பு என பப்லோவாதிகள் விமர்சனம் செய்தனர். எவ்வாறிருந்தபோதும், இக்காட்டிக்கொடுப்பு ஒரு இரண்டாம் பட்சமானதுதான் ஏனென்றால், தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வருகின்ற வழியை முட்டுக்கட்டை போட்டு பப்லோவாதிகள் தடுத்துவிட்டார்கள். இந்த வகையில் ஸ்ராலினிஸ்டுகளின் துரோகச் செயலில் அவர்களும் பங்கெடுத்துக்கொண்டதால் தமது காட்டிக்கொடுப்பை மறைத்துக்கொண்டனர். ஸ்ராலினிஸ்டுகளின் எதிர்ப்புரட்சிக் கொள்கைகளின் மீது அவர்கள் கண்டுபிடித்த விமர்சனம், ஸ்ராலினிஸ்டுகளிடம் ஒரு ''கொள்கை'' இல்லை என்பதாகும்.

இது ஒரு பொய். ஸ்ராலினிஸ்டுகளிடம் கொள்கை எதுவும் இல்லாமல் இல்லை. அவர்களது கொள்கை, கிரெம்ளினின் வெளிநாட்டு கொள்கையை அவர்கள் விரும்பியபடி பாதுகாத்துக்கொள்வதும், அதன் மூலம் பலவீனமான பிரெஞ்சு முதலாளித்துவத்துவத்திற்கு உதவுவதுமாகும். இதுமட்டுமல்லாது, ஸ்ராலினிஸ்டுகளின் செயல்பாட்டை துரோகம் என்று வர்ணிக்க பப்லோ மறுத்துவிட்டார். அவர் அக்காட்டிக்கொடுப்பை ''ஸ்ராலினிஸ்டுகளின் செயல்பாடு ஒரு தடை போடுவது போன்ற சாதாரண நடவடிக்கை'' எனவும், ஆனால் முக்கியமாக ஸ்ராலினிச தலைமையின் தகைமை, வேலைநிறுத்தக் காலங்களில் போன்று மக்களின் அழுத்தங்கள் பலமாக வரும்போது ஒரு பாரம்பரிய இயக்கத்தினுடைய தலைமையின் காட்டிக்கொடுப்பு ஒரு 'தடை'!, என வர்ணித்தார். ("Political Note No. 1")

ஸ்ராலினிசத்தோடு சமரச போக்கில் செல்ல விரும்புகின்ற ஒரு தலைவர், பழைய ட்ரொட்ஸ்கிச கொள்கையை கைவிட்டுவிட்டார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். அப்படியிருந்தும் இத்தகைய நடவடிக்கைகளை நான்காம் அகிலத்தின் பேரிலேயே அவர் செய்தார். எவ்வாறிருந்தபோதிலும் பப்லோ அதற்கு அப்பாலும் சென்றுவிட்டார்.

இழிபுகழ்பெற்ற துண்டுப்பிரசுரம்

பப்லோவின் ஆதரவாளர்களால் பிரான்சில் பாரிசில் உள்ள ரெனோல்ட் (Renault) தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தத்தில், CGT தொழிற்சங்கத்தின் ஸ்ராலினிச தலைமை (CGT- பிரான்சின் பெரிய தொழிற்சங்க கூட்டு) ''தொழிலாளர்கள் விரும்பாத எந்த கோரிக்கையையும் முன்வைக்காததில்'' சரியாக இருந்தது என்று துண்டு பிரசுரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. உண்மை என்னவென்றால் தொழிலாளர்கள், தங்களுக்கென ஒரு தொழிலாளர், விவசாயிகள் அரசாங்கம் அமைந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தபோது இவ் அறிக்கை விடப்பட்டிருந்தது.

ஸ்ராலினிஸ்டுகளின் தலைமையிலுள்ள தொழிற்சங்கங்களை கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து மனம்போன போக்கில் பிரித்தது, ஒரு எந்திரரீதியில் சிந்திக்கும் அல்லது ஸ்ராலினிஸ்டுகளை மூடிமறைக்கும் ஒரு திட்டமிட்ட வடிவத்துக்கான ஆதாரமா?. வேலைநிறுத்தத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் முன்னோக்குகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்ளுகின்றபோது "அதாவது தொழிற்சங்கம் தொடர்பான இந்தப் புள்ளி இரண்டாம் பட்சமானது" என்று பப்லோவாதிகள் தமது பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தனர். "இப்புள்ளியின் மீது செய்யப்பட்ட விமர்சனமானது CGT-க்குப் பொருத்தமானதல்ல, அது ஒரு தொழிற்சங்க அமைப்பு, அது முதலும் முடிவாகவும் அவ்வாறே இயங்கியாக வேண்டும், ஆனால் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் அவர்களின் பங்கு இவ் இயக்கத்தின் ஆழமான அரசியல் முக்கியத்துவத்தையும் அவ் விளைவுகளையும் எடுத்துக்காட்டுவதாக இருந்தது''. (Leaflet "To the Workers' Organizations and to the Workers of Renault," dated Sept. 3, 1953. Signed by Frank, Mestre, and Privas.)

இந்த அறிக்கையில், முதலாளித்துவம் மரணப்பிடியிலிருக்கும்போது தொழிற்சங்கங்களின் கடமைகள் என்ன, என்பது தொடர்பாக ட்ரொட்ஸ்கி எமக்கு போதித்த தத்துவங்கள் அனைத்தும் கைவிட்டுவிடப்பட்டதை நாங்கள் காணக்கூடியதாக உள்ளது.

பிரான்சின் சமூக நெருக்கடியில் இந்த வேலைநிறுத்தம் மிகவும் முக்கியமான கட்டம் (!), "பரந்த வர்க்கப் போராட்டத்திற்கு ஒரு முன்செயல் எனவும் அங்கு நாட்டை முதலாளித்துவ அழிவிலிருந்து பாதுகாக்கவும், சோசலிசத்திற்கான பாதையை திறந்து விடுவதற்கும் வேண்டி தொழிலாள வர்க்க அதிகாரம் தொடர்பான பிரச்சனை முன்வைக்கப்பட வேண்டும் என்பதை தொழிலாளர்களுக்கு விளக்குவதற்குப் பதிலாக தொழிற்சங்க மட்டத்தில் வெறுமனே தன்னை அடித்தளமாக கொண்டிருந்ததற்காகவும்", பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி பொது வேலை நிறுத்தம் தொடர்பாக ஒரு "நிலைப்பாட்டை எடுக்க தவறிவிட்டது" என அப் பப்லோவாத பிரசுரம் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை "விமர்சித்தது". ரெனோல்ட் தொழிலாளர்கள் பப்பலோவாதிகளை நம்பவேண்டுமானால், பிரான்சின் வரலாற்றில் பாரிய பொது வேலைநிறுத்தத்தில் திட்டமிட்டு காட்டிக்கொடுத்ததற்கு காரணம் துரோக பிரான்சின் ஸ்ராலினிஸ்டுகளின் தொழிற்சங்கவாதத்திற்கு அடிபணிந்த குற்றம்தான் காரணமாகும் என்பதாகும்.

CGT இன் நிலைப்பாடு பற்றிய பப்லோவின் அங்கீகாரமானது மிகவும் அரிதாகவே நம்பத்தக்கதாக இருக்கின்றது, இருந்தும் இது தப்பமுடியாதபடி ஒருவரின் முன் அப்பட்டமாக கிடக்கின்றது. பிரான்ஸ் ஒருபோதும் கண்டிராத மிகப் பெரிய பொது வேலைநிறுத்தத்தை பப்லோ கிண்டலாக ''சரியென'' குறிப்பிட்டு, இது அரசியலிருந்து தொழிற்சங்கங்களை தனிமைப்படுத்தும் Samuel Gompers (அமெரிக்க தொழிற்சங்க கூட்டமைப்பை 1884ல் உருவாக்கியவர்) இன் முதலாளித்துவ கொள்கையின் பிரெஞ்சு வடிவம் என குறிப்பிடுகின்றார். இது 1953ம் ஆண்டில் அவர் கூறுகின்ற கருத்து!

CGT தலைவர்களைப் பொறுத்தவரை, தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் அரசாங்கம் அமைய வேண்டும் என்பது உட்பட, புறநிலைரீதியான தேவைகளுக்கு உடன்பாடான அரசியல் கோரிக்கைகளை முன்னெடுப்பது தவறு என்றால், அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) தற்போதைய Gompers இன் தொழிற்சங்கத்தை ஒரு தொழிற் கட்சியை அமைக்க வேண்டும் என்று ஏன் கோருகிறது? அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் அரசாங்கத்தினை அதிகாரத்தில் இருத்துவதற்கான ஒரு தொழிற் கட்சியை உருவாக்க வேண்டும் என்று ஏன் கோரிக்கை எழுப்பவேண்டும்?

CGT தலைமை அதிக அளவில் அரசியலைக் கொண்டிருக்கவேண்டும் என நம்மை நினைவூட்டுவோமாயின், பப்லோவின் சரி என்று ஆராயாது ஏற்றுக் கொள்ளல் இன்னும் புதிரான வெளிச்சத்தில் காட்சி அளிக்கிறது. அதாவது கிரெம்ளினின் மிக சாடையான சமிக்கைகளில், அர்த்தமற்ற அரசியல் சாகசம் இருந்தபோதும், அது தொழிலாளர்களை வெளியே இறக்குவதற்கு தயாரித்திருக்கிறது. உதாரணத்திற்கு, கடந்த வருடத்தில் Anti-Ridgway ஆர்ப்பாட்டங்களால் முன்முயற்சிக்கப்பட்ட சம்பவங்களில் அதன் பங்கை நினைவு கூருவோம். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டுக்லோ (Duclos) கைது செய்யப்பட்டதை கண்டித்து வேலை நிறுத்தம் செய்யவேண்டுமென்று கோரிக்கை விடுவதற்கு இந்த ஸ்ராலினிச தொழிற்சங்க தலைமைகள் தயங்கவில்லை.

உண்மை என்னவென்றால், பொது வேலைநிறுத்தத்தில் CGT தலைமை தமது அதிக அளவிலான அரசியல் தன்மைகளை வெளிப்படுத்திக்காட்டினர். தமது கடந்தகால அனுபவங்களுடனும் அரசியலில் இரட்டை வேடம் போடுவதின் மூலமாகவும் தொழிலாளர்களை மட்டம் தட்டி, அவர்களது முன்னெடுப்புக்களை தடுத்து தொழிலாளர்களின் அரசியல் கோரிக்கைகளை உடைப்பதில் முன்நின்றனர். ஸ்ராலினிச தொழிற்சங்க தலைமை நனவுபூர்வமாக காட்டிக்கொடுத்தது. இந்த காட்டிக்கொடுப்பை பப்லோ ''சரியான செயல்பாடு'' என வர்ணிக்கிறார்.

ஆனால் இருந்தும் கூட இது விஷயத்தை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. ரெனோல்ட் தொழிற்சாலை வேலை நிறுத்தத்தின்போது உண்மையான புரட்சிக்காரர்களாக செயல்பட்ட பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகளை கண்டிப்பதுதான் பப்லோவாதிகளின் அறிக்கையின் பிரதான நோக்கங்களுள் ஒன்றாக இருந்தது. "நான்காம் அகிலத்திலிருந்தும், அதன் பிரெஞ்சு பிரிவிலிருந்தும், ஓர் ஆண்டிற்கு முன்னர் வெளியேற்றப்பட்டுவிட்ட" இரண்டு தோழர்களின் பெயர் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது. கட்டுப்பாடின்மை காரணமாகவும், சிறப்பாக கடந்த வேலைநிறுத்த இயக்கத்தின்போது, அது பின்பற்றிய நோக்குநிலைக்காகவும், அந்த "குழு" நீக்கப்பட்டது, PCI (நான்காம் அகிலத்தின் பிரெஞ்சுப் பகுதி) ஆல் உண்மையில் பாதுகாக்கப்பட்டதற்கு எதிராக இருந்தது என்று அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் குறிப்பிடுகின்ற "குழு" பப்லோ தன்னிச்சையாகவும், சட்ட விரோதமாகவும், நான்காம் அகிலத்தின் பிரெஞ்சு பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்ட பெரும்பாலான உறுப்பினர்களை குறிக்கும். ட்ரொட்ஸ்கிச போராளிகளை ஸ்ராலினிஸ்டுகள் என குறிப்பிட்டு, தொழிலாள வர்க்கத்தை தீவிரமயமாக்குவதை வெறுக்கத்தக்க ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பு என்ற துரோக நடவடிக்கை ஒன்றையும் முன்னர் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கம் கேள்விப்பட்டிருக்கின்றதா? ரெனோல்ட் தொழிற்சாலையில் தொழிற்சங்க இயக்கத்தில் பணியாற்றும் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீது ஸ்ராலினிஸ்டுகள் கூறிய அவதூறுகளை விசாரித்த தொழிலாளர் நடுவர் மன்றம் (ஷ்ஷீக்ஷீளீமீக்ஷீs' tக்ஷீவீதீuஸீணீறீ) அவற்றைத் தள்ளுபடி செய்ததை அடுத்து, பப்லோ இத்தோழர்களை ஸ்ராலினிஸ்டுகளின் முன்னர் கண்டனம் செய்தார் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அமெரிக்க பப்லோவாதிகள்

இதுபோன்ற சர்வதேச சம்பவங்கள் ஸ்ராலினிசத்தோடு, பப்லோவாதிகள் சமரசம் செய்துகொண்டதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. சர்வதேச அளவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினர் செயல்பாடு குறித்து சில கூடுதல் உண்மைகளை பகிரங்க ஆய்வு செய்யவிரும்புகின்றோம். கடந்த ஒன்றரை வருடங்களாக அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி, கொக்கரான் மற்றும் கிளார்க் (Cochran, Clarke) தலைமையில் இயங்கும் குழுவினர் செய்துவரும் திருத்தல் வேலைகளுக்கு எதிராக போராடி வருகிறது. இந்த போராட்டம் நமது கட்சி வரலாற்றிலேயே மிகவும் கடுமையானதாகும். தற்போதைய முரண்பாட்டின் அடித்தளமும் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்த நேரத்திலும், முடிவுற்ற காலத்திலும், நமக்கும் பேர்ன்ஹாம், சட்மன் (Burnham-Shachtman) குழுவிற்கும், மொறோ-- கோல்ட்மன் (Morrow-Goldman) குழுவிற்கும் இடையில் தோன்றிய முரண்பாட்டின் அடித்தளமும் ஒன்றாகும். அந்த இரண்டு குழுக்களும் நமது அடிப்படை முன்னோக்கை திருத்தவும், கைவிடவும் முயன்றன. இதனுள் உள்ளடங்கியிருந்தது அமெரிக்க புரட்சியின் முன்னோக்கும், புரட்சிக் கட்சியின் பங்கும் தன்மையும், அதன் அமைப்பின் முறையும், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினது முன்னோக்கு தொடர்பானதுமாகும்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் சக்திவாய்ந்த அதிகாரத்துவம் தனது ஆதிக்கத்தை அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தின் மத்தியில் நிலைநாட்டிக் கொண்டது. இந்த அதிகாரத்துவம் அதிகமாக வசதிபடைத்த மற்றும் பிற்போக்குத்தனமான தொழிலாள வர்க்கத்தில் தங்கியிருந்தது. இந்த புதிய வசதியான பிரிவானது சிமிளி இனை உருவாக்கிய தலைமுறையை சேர்ந்த முன்னாள் போர்க்குணம் மிக்க வர்க்கப் போராட்டங்களை செய்த தொழிலாளர் பிரிவுகளிலிருந்து கூடியளவில் அணிதிரட்டிக்கொண்டது.

பாட்டாளி வர்க்க முன்னணிப் படையின் மீது இத்தகைய புதிய தொழிலாளர் அதிகாரத்துவத்தின் குட்டி முதலாளித்துவ கருத்தியலின் அழுத்தத்தை கொக்கிரானிசம் பிரதிநிதித்துவப்படுத்தியது. தொழிலாளர்களின் செயலற்ற, ஒப்பீட்டளவில் திருப்தியுற்ற தட்டினரின் மனோநிலைகளும் போக்குகளும் எமது சொந்த இயக்கத்தினுள் வெளி அழுத்தத்தை கடத்தும் சக்திமிக்க தொழிற்பாடாக செயல்பட்டது. ''பழைய ட்ரொஸ்கிசத்தை தூக்கிவீசு'' என்ற கொக்கிரானிசத்தின் கோசம் இந்த மனோநிலையை வெளிப்படுத்துகின்றது. கொக்கிரானிச பிரிவானது சக்திவாய்ந்த அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தன்மையை இப்போது வாய்ப்பு வளமில்லாததாக நோக்கியது. அமெரிக்க பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் புதிய போராடும் படைப்பிரிவுகளை உருவாக்கும் மூலக்கூறு நிகழ்ச்சிப்போக்கினை எடுத்துக்காட்டும் மார்க்சிச ஆய்வுகளை ''குறுங்குழு வாதம்'' எனக் குறிப்பிட்டது.

அவர்களைப் பொறுத்தவரையில் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் உள்ள முற்போக்கான பிரிவுகள் என குறிப்பிடக்கூடியது ஸ்ராலினிசமும் அதனைச் சூழ்ந்த தட்டுகளும் அல்லது ''நவீனமயமாக்கப்பட்ட'' தொழிற்சங்க அதிகாரத்துவமுமாகும். ஏனைய தொழிலாள வர்க்க பிரிவினரை அவர்கள் ஒரு அணுக்குண்டு தாக்குதலால் மட்டுமே தட்டி எழுப்ப முடியும் என நோக்கினர். சுருக்கமாக அவர்களது நிலைப்பாட்டை குறிப்பிடுவதானால், அவர்கள் அமெரிக்க புரட்சியின் முன்னோக்கிலும், புரட்சிக் கட்சியின் பாத்திரத்திலும் நம்பிக்கை இழந்துள்ளனர், குறிப்பாக சோசலிச தொழிலாளர் கட்சி மீது நம்பிக்கை இழந்தேவிட்டனர்.

கொக்கிரானிசத்தின் தன்மைகள்

நீடித்த யுத்தத்திற்கு சாத்தியப்பாட்டினை விட அதிகமான அழுத்தம் இருப்பது எமது உலக இயக்கத்தின் எல்லா பிரிவினருக்கும் தமது கடுமையான, சிக்கலான சொந்த அனுபவங்கள் மூலம் நன்றாக தெரிந்திருக்கும். அத்துடன் அமெரிக்காவில் எமது இயக்கத்தின் மீது இது விரைவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் உங்களுக்கு தெரியும். ஆனால் மிகவும் சிக்கலான நிலைமைகளின் கீழ் தோழர்களுக்கு உறுதியை வழங்குவது எமது இயக்கத்தின் சரியான கோட்பாடுகள் மீதான அசையாத நம்பிக்கையாகும். அதாவது தமது வாழ்க்கையின் அர்த்தம் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று கடமையை முன்கொண்டு செல்வதும், நாம் என்ன செய்கின்றோம் என்பதில்தான் மனித சமுதாயத்தின் தலைவிதி தங்கியுள்ளது என்பதை விளங்கிக்கொள்வதும், தற்போதைய நிலைமை எவ்வாறாக இருந்தாலும் வரலாற்று அபிவிருத்தியின் முக்கிய திசையில் போராடும் லெனினிச கட்சிகளை உருவாக்குவதிலும் தான் மற்றும் இப்படியான கட்சிதான் மனித சமுதாயத்தின் நெருக்கடியை வெற்றிகரமான சோசலிச புரட்சி மூலம் தீர்க்கும் என்பதை உறுதியாக நம்பவேண்டும்.

கொக்கிரானிசம், இந்த பாரம்பரிய ட்ரொட்ஸ்கிச உலக நோக்கை ஐயுறவுவாதத்தாலும், தத்துவார்த்த வார்த்தை ஜாலங்களாலும், பத்திரிகைத்துறை எதிர்பார்ப்புகளாலும் பிரதியீடு செய்வதாகும். அதனால்தான் 1939-40களில் எவ்வாறு குட்டிமுதலாளித்துவ எதிர்ப்புக்கு எதிரான போராட்டம் அவசியமானதோ, அதேபோல் சோசலிச தொழிலாளர் கழகத்தினால் செய்யப்பட்ட இப்போராட்டமும் தவிர்க்கமுடியாததாகும்.

இப்போராட்டத்தின்போது கொக்கிரானிசவாதிகள் பின்வரும் தன்மைகளை எடுத்துக்காட்டினர்.

(1) கட்சி பாரம்பரியத்திற்கும், வரலாற்று நோக்கத்திற்கும் அவமரியாதையை உருவாக்குவது. அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினர் கடந்த 25-ஆண்டுகளாக நிலைநாட்டி வந்த பாரம்பரியத்தை அவதூறு செய்ய, எள்ளி நகையாட மற்றும் கரிபூச எந்தவொரு சந்தர்ப்பத்தையும் தவறவிடவில்லை.

(2) மார்க்சிச அடிப்படை கொள்கைகளுக்குப் பதிலாக, கட்சி ''ஆட்சிக்கு'' எதிரான கொள்கையற்ற சேர்க்கைகளை பதிலீடு செய்யும் ஒரு போக்கு. இவ்வாறு கொக்கிரானிச கன்னை முரண்பட்ட சக்திகளை உள்ளடக்கியுள்ளது. பிரதானமாக நியூயோர்க்கை மையமாகக் கொண்ட ஒரு குழு அமெரிக்க ஸ்ராலினிச இயக்கத்தினுள் ''நுழைவு'' தந்திரோபாயத்திற்கு சாதகமாக இருக்கிறது. பழமைவாத தொழிற்சங்க சக்திகளை உள்ளடக்கிய, டிட்ரோயிட்டை பிரதானமாக மையமாகக் கொண்ட இன்னொரு குழு ஸ்ராலினிஸ்டுகளை நோக்கி திரும்புவதால் சிறிதே பயன்கிடைக்கும் என்று கருதுகின்றது. அது அதன் திருத்தல்வாதக் கண்ணோட்டத்தை புதிய தொழிலாளர் அதிகாரத்துவத்தின் நீடித்த அதிகாரம் மற்றும் நிலைத்ததன்மையை மிகை மதிப்பீடு செய்வதன் மீது தளப்படுத்தி இருக்கிறது.

கொக்கிரான் வாதத்திற்கு களைப்படைந்துபோன தனிநபர்களும் கூட ஈர்க்கப்பட்டார்கள், இந்த மனிதர்கள் தற்போதைய நெருக்கடிகளை தாங்காது, தற்போதைய சாதகமான சூழ்நிலைமைகளின் அழுத்தத்திற்கு நின்று பிடிக்க முடியாதவர்கள், மற்றும் இயங்குவதிலிருந்து ஓய்வுபெறும் வாத வகையில் நம்பத்தக்க நியாயப்படுத்தலைத் தேடிக்கொண்டிருப்பவர்கள். இந்த கொள்கை கோட்பாடற்ற கூட்டை உறுதியாக இணைப்பது என்னவென்றால், மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவர்களுக்குள்ள பொதுவான குரோதம்தான்.

(3) எமது பிரதான களத்தில் இருந்து கட்சியை விலகச்செய்யும் ஒரு போக்கு, அமெரிக்காவில், பரந்த அளவிலான உற்பத்தியைச் செய்யும் தொழிற்சாலைகளில் உள்ள அரசியல் ரீதியாய் விழிப்படையாத தொழிலாளர்களாக இருந்தாக வேண்டும். உண்மையில் கொக்கிரானிசவாதிகள், இடைமருவு முழக்கங்களின் வேலைத்திட்டத்தையும் இந்தத் தொழிலாளர்களை நோக்கி ஒரு பாலமாக சோசலிசத் தொழிலாளர் கட்சி பயன்படுத்தி இருக்கின்ற கோரிக்கைகளையும் கைவிட்டனர் மற்றும் இந்தப் போக்கைத் தொடரும் பெரும்பான்மையானது, தொழிலாளர்களின் பிற்போக்குத் தன்மைக்குத் தன்னை மாற்றி அமைத்துக் கொண்டது என விவாதித்தது.

(4) மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதற்கு முன்னர், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தீவிரமான எதிர்ப்பில், அமெரிக்க தொழிலாள வர்க்கம் முன்வரும் அனைத்து சாத்தியங்களும் முடியாது என நம்பச்செய்தல்.

(5) ''இடது'' ஸ்ராலினிசத்தை கோட்பாடாய் உருவாக்கும் ஒட்டு மொத்த பரிசோதனை, ஸ்ராலினிஸ்டுகள் இனியும் "காட்டிக்கொடுத்துவிட முடியாது", ஸ்ராலினிசம் ஒரு புரட்சிகர பக்கத்தையும் உள்ளடக்கியுள்ளது, அது ஸ்ராலினிஸ்டுகள் அமெரிக்காவில் புரட்சிக்கு தலைமை ஏற்கும் சாத்தியத்தை செய்யும், அந்த நிகழ்ச்சிப் போக்கில் அவர்கள் ட்ரொட்ஸ்கிச "கருத்துக்களை" உள்வாங்குவர், எனவே இறுதியில் புரட்சியானது "அதுதாமே சரியாகும்" என்ற எல்லை கடந்த நம்பிக்கையை உள்வாங்கியிருக்கிறது.

(6) புதிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப ஸ்ராலினிசத்திற்கு அடிபணிகின்றனர். பெறியாவின் (Berea) வீழ்ச்சியையும், சோவியத் யூனியனில் அதற்கு பின்னர் நடைபெற்ற களை எடுப்புக்களையும் பற்றிய பப்லோவின் விளக்கத்தில் ஸ்ராலினிசத்திற்கு சமரசத்தின் அவர்களது ஆதரவும் பாதுகாப்பும் காணப்படுகின்றது. பிரெஞ்சு பொதுவேலை நிறுத்தத்திலும் கிழக்கு ஜேர்மன் தொழிலாளர்களின் மாபெரும் எழுச்சியிலும் ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர தன்மையை மூடிமறைக்கும் பப்லோவின் விளக்கங்களை அவர்கள் திரும்ப திரும்ப கூறுகின்றனர். அமெரிக்க ஜனநாயகக் கட்சி நோக்கிய அமெரிக்க ஸ்ராலினிசத்தின் திருப்பத்தை ''இடது திருப்பத்தின்'' உள்ளேயான, வெறும் ''வலது ஊசலாட்டம்'' என விளக்கம் தருகின்றனர்.

(7) கட்சி அமைப்பு தொடர்பான பிரச்சினைகளில் லெனினிச மரபுகளை அவமதிக்கின்றனர். சிறிது காலம் கட்சியில் ''இரட்டை அதிகாரத்தை'' அவர்கள் நிறுவ முயன்றார்கள். 1953 ம் ஆண்டு நிறைபேரவையில் (Plenum) அந்த முயற்சி கட்சியின் அறுதிப்பெரும்பான்மையால் நிராகரிக்கப்பட்டபோது, அவர்கள் பெரும்பான்மை விதிக்கும் நிறைபேரவையால் தீர்மானிக்கப்பட்ட அரசியல் வழிக்கு கட்டுப்படுவதாகவும் எழுத்தில் உடன்பட்டனர். பின்னர், அவர்கள் உடன்பாட்டை முறித்துக் கொண்டனர், கட்சி நடவடிக்கைகள் பற்றிய அவர்களின் கன்னைவாத நாசவேலையை, முன்னொருபோதும் இல்லாதவாறு மிகவும் மனக் கொந்தளிப்பு மற்றும் மிகையுணர்ச்சிக் கோளாறு அடிப்படையில் புதுப்பித்தனர்.

நாங்கள் மேலே எடுத்துக்காட்டிய தன்மைகளைக் கொண்ட கொக்கிரானிசவாதிகள் எப்போதுமே, அமெரிக்க சோசலிசத் தொழிலாளர் கட்சியில் ஒரு வலுவிழந்த செல்வாக்கு இல்லாத குழுவாகத்தான் செயல்பட்டிருக்கிறார்கள். கட்சித் தலைமையின் முதுகின் பின்னால் பப்லோ, இந்தக் குழுவினருக்கு எவ்வளவோ ஊக்குவிப்புக்களையும், உதவிகளையும் செய்தும் அவர்கள் ஒரு ஐயுறவுவாதத்தின் பலமற்ற மற்றும் நோய்வாய்ப்பட்ட வெளிப்பாடாகவே இருக்க முடிந்தது. பப்லோ இரகசியமாக இவ்வாறு செயல்பட்டு வருவது நமது கட்சியின் மே மாத நிறை பேரவையில் (Plenum) அம்பலப்படுத்தப்பட்டதுடன், இப்போது கட்சியின் நிதிநிலையை சீர்குலைக்கவும், கட்சிப் பணிகளில் குந்தகம் விளைவிக்கவும் அவர் நேரடியாகவே நாசவேலைகளை செய்து வருவதுடன், நமது கட்சியின் உடைவிற்கும் தயாரிப்பு செய்கின்றார். கட்சியின் 25வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் நியூயோர்க் கொண்டாட்டங்களை பகிஸ்கரிக்க ஒழுங்கு செய்ததில் பப்லோ - கொக்கிரான் கன்னை, கட்சி விசுவாசத்திற்கு எதிராக செயல்படும் போக்கு அம்பலத்திற்கு வந்தது. இந்த ஆண்டு விழாவானது நியூயோர்க் நகரசபை தேர்தல் பிரசாரத்தை தூண்டிவிடும் ஊர்வலத்துடன் ஒன்றிணைந்திருந்தது.

இந்த துரோகத்தனமான, வேலைநிறுத்த உடைப்பு நடவடிக்கை, செயல்முறை அளவில், 25 ஆண்டுகளாக அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நடத்தி வந்த போராட்டத்திற்கு எதிரான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கையைக் கொண்டிருந்தது. அதேநேரத்தில் 1928 அக்டோபரில் அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிசத்திற்கு முன்முயற்சி எடுத்த கருவினரை வெளியேற்றிய ஸ்ராலினிஸ்டுகளுக்கு புறநிலைரீதியான உதவி கொண்ட ஒரு நடவடிக்கையாக இருந்தது.

திட்டமிட்ட இந்த பகிஸ்கரிப்பு கூட்டம், செயலளவில், நியூயோர்க் நகரசபை தேர்தலில் சோசலிச தொழிலாளர் கட்சியின் பிரச்சார இயக்கத்திற்கு எதிரான ஒரு சான்று விளக்கமாகும். இந்த துரோகத்தனமான கட்சி விரோத நடவடிக்கையில் கலந்துகொண்ட அனைவரும், நீண்ட காலமாக தயாரித்து வந்திருந்த பிளவை ஐயத்திற்கிடமில்லாமல் நிறைவுபடுத்தினர் மற்றும் நமது கட்சியில் உறுப்பாண்மைக்கான அனைத்து உரிமையையும் இழந்தனர்.

இச்சம்பவத்தை சாதாரணமாக பதிவுசெய்தால், சோசலிச தொழிலாளர் கட்சியின் 25வது ஆண்டு நிறைவு நிறைபேரவை, இந்த துரோகத்தனமான, வேலைநிறுத்த நடவடிக்கையில் கலந்து கொண்ட அல்லது அந்த உண்மை மூலம் அதனைக் கைவிட மறுத்த பப்லோ-கொக்ரான் கன்னையை சேர்ந்தவர்கள் அனைவரும் தங்களை அதன் மூலம் சோசலிசத் தொழிலாளர் கட்சியின் அணிகளுக்கு வெளியே வைத்தது என்று அறிவித்தது மற்றும் பகிஷ்கரிப்பை ஒழுங்கு செய்த தேசிய குழு உறுப்பினர்களை தற்காலிக நீக்கம் செய்தது.

கம்யூனிச அகிலத்தின் வழிமுறைகள்

சோசலிச தொழிலாளர் கட்சி, தலைமைக்கு ஒருவிதமாகவும் அவேளை கொக்ரானிச போக்குடன் இரகசியமாக ஒத்துழைப்பது ட்ரொட்ஸ்கிசத்தின் மரபுக்கு அந்நியமானதாகும். ஆனால் இது ஸ்ராலினிசத்தின் மரபைச் சேர்ந்த நடவடிக்கையாகும். கிரெம்ளினால் பயன்படுத்தப்பட்ட இத்தகைய சூழ்ச்சித்திறங்கள் கம்யூனிச அகிலத்தை கெடுப்பதற்கு கருவிகளாகி இருந்தன, நம்மில் பலருக்கு 1923-முதல் 28-வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான தனிப்பட்ட அனுபவமும் உண்டு.

இந்த வழியில் இயங்குவது பப்லோவின் பங்கைப் பொறுத்தவரை ஒரு தனிமைப்பட்ட மனமாறாட்டம் அல்ல என்பதற்கு இந்த ஆதாரம் இப்பொழுது தீர்க்கமானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக தொடர்ச்சியான பாணி வெளிப்படையாக இருந்தது. நான்காம் அகிலத்தின் ஐரோப்பிய பிரிவைச் சார்ந்த முன்னணி நபரும் தலைசிறந்த தலைவருமான ஒருவருக்கு, பப்லோவிடமிருந்து கிடைத்த ஒரு கட்டளையாகும். அந்தக் கட்டளையில், "கம்யூனிச அகிலத்தின் நான்கு சர்வதேச காங்கிரசுகளின் பெரும்பான்மை முடிவிற்கு ஏற்ப, அகிலத்தின் கட்டுப்பாட்டை காக்கின்ற" ஒருவராக தன்னை நடத்தவேண்டும் என்று பப்லோ கட்டளையிட்டிருந்தார். இந்த இறுதி எச்சரிக்கை மூலம் பப்லோ தனது கட்டளைக்கு பணிய மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பயமுறுத்தியிருந்தார்.

பப்லோ, "பெரும்பான்மை" என்று குறிப்பிடுவது, தனக்குத்தானே பணிவடக்க முத்திரை குத்திக் கொண்ட தன்னையும் தன்னுடைய திருத்தல்வாத புதுமைகளால் மெய்மறந்து நிற்கும் சிறிய குழுவினரையும்தான். பப்லோவின் இந்த புதிய நிலைப்பாடு, ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படை வேலைத் திட்டத்திற்கு பலாத்காரமான முரண்பாடாகும். உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பல பகுதிகளில் விவாதிக்கப்பட இருந்ததன் ஆரம்பமாக மட்டுமே அது இருக்கிறது. ஆனால் பப்லோவின் இந்தக் கருத்துக்களுக்கு ட்ரொட்ஸ்கிச அமைப்பு ஒன்றுகூட ஆதரவு தெரிவித்திருக்கவில்லை, அது நான்காம் அகிலத்தின் உத்தியோகபூர்வமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.

இது சம்மந்தமாக நமக்கு கிடைத்திருக்கின்ற முதல் தகவல்களின்படி உலக இயக்கத்தினுள் தனது திருத்தல்வாத நோக்கினைத் திணிக்கும் பப்லோவின் சர்வாதிகார முயற்சிக்கு எந்தவொரு விவாதமோ அல்லது வாக்கெடுப்போ இல்லாது அவரது திருத்தல்வாத கருத்துக்களை தன்னிச்சையான நடவடிக்கை என்று வர்ணித்துள்ளன. நான்காம் அகிலம் பப்லோவின் கருத்துக்களை மிகப் பெரும்பான்மையினரால் நிராகரிக்கும் என்பது உறுதி என்று கோடிட்டுக் காட்டும் தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.

பப்லோவின் திருத்தல்வாத அரசியல் நிலைப்பாட்டை விமர்சிக்கவேண்டாம் என நான்காம் அகிலத்தின் பிரிவு ஒன்றின் தலைவருக்கு எதேச்சதிகார முறையில் பப்லோ கோரிக்கை விடுத்திருப்பது தவறானது. ஆனால், அத்தோடு பப்லோ நிற்கவில்லை. இந்தத் தலைவரை வாயடைக்க மற்றும் அது தொடர்பாக முயற்சித்த அதேவேளை, அனைத்து அங்கத்தவர்களும் அவரது அனுபவம், அறிவு மற்றும் உள்பார்வையைப் பெற்றுக்கொள்ளவும் கூடிய சுதந்திரமான கலந்துரையாடலில் அவரைப் பங்குகொள்ளாது தடுக்க முயன்றார். பப்லோ அமைப்பு ரீதியாக தலையீடு செய்ய மேற்சென்றதுடன், அப்பகுதியின் தலைமை மீது ஒரு போரை நடத்த சிறுபான்மை திருத்தல்வாத கன்னையை உருப்படுத்த முயற்சித்தார். இந்த நடைமுறை ஸ்ராலினிசத்தின் செல்வாக்கின் கீழ் சீரழிந்த அகிலத்தின் ஒழுங்கற்ற நடைமுறையாகும். இதைவிட வேறுவிடயங்கள் ஒன்றுமில்லையானால், நான்காம் அகிலத்தை அதனது உள் ஊழல்களில் இருந்து பாதுகாப்பதற்கு பப்பலோவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்ட போராடுதல் அவசியமானதாகும்.

இந்த தந்திரோபாயங்கள் ஒரு தெளிவான நோக்கத்தைக் கொண்டது. இவை பப்லோவாத சிறுபான்மையால் உருவாக்கப்பட்ட சதி கவிழ்ப்புக்கான தயாரிப்பின் ஒரு பாகமாகும். பப்லோவின் நிர்வாக கட்டுப்பாட்டைப் பிரயோகித்து, அவர்கள் அவரது திருத்தல்வாத நிலைப்பாட்டைத் திணிப்பதற்கு நம்பிக்கை கொண்டனர், எங்கெங்கு அது எதிர்க்கப்பட்டதோ அங்கு பிளவுகளாலும் வெளியேற்றல்களாலும் பதில் கொடுத்தனர்.

இப்போது தெளிவாகியிருப்பதுபோல், இந்த ஸ்ராலினிச அமைப்பு ரீதியான போக்கானது, ஒன்றரை ஆண்டிற்கு முன்னரே நான்காம் அகிலத்தின் பிரெஞ்சு பகுதியின் பெரும்பான்மைக்கு எதிரான பப்லோவின் சீர்குலைவுப் பிரச்சாரத்தில் அவரது நிர்வாகக் கட்டுப்பாட்டை கொடூரமாய் துஷ்பிரயோகம் செய்வதுடன் ஆரம்பமானது.

சர்வதேச செயலகத்தின் (International Secretariat) கட்டளைப்படி, பிரெஞ்சு பகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையினர், கட்சியின் அரசியல் மற்றும் பிரச்சார பணிகளை வழிநடத்துவதற்கான அதன் உரிமைகளை செயற்படுத்த முடியாதவாறு தடுக்கப்பட்டனர். பதிலாக, அரசியல் குழுவும் பத்திரிகையும், அகிலத்தின் கருவியான "சமமான ஆணைக் குழுவின்'' (parity commission) மூலம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.

அந்த நேரத்தில் பெரும்பான்மையினரை சிறுபான்மையினரால் வீழ்த்தும் இத்தகைய ஏதேச்சதிகார நடவடிக்கையை மிகவும் கடுமையாக ஆட்சேபித்தோம். இந்த நடவடிக்கை பற்றி நாம் கேள்விப்பட்டதும், நாம் பப்லோவிற்கு எமது எதிர்ப்பை தெரிவித்தோம். ஆயினும், மிகவும் தீவிரமான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டோம், என்ற பிழையை இப்போது நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். இதில் சம்மந்தப்பட்ட உண்மையான பிரச்சினைகளை போதுமான அளவிற்கு நாம் அப்போது புரிந்துகொள்ளாத காரணத்தினால்தான் அந்த தவறு நேர்ந்தது. பப்லோவிற்கும் பிரெஞ்சு பகுதிக்குமிடையில் தோன்றிய கருத்து வேறுபாடுகள் தந்திரோபாயங்கள் தொடர்பானவை என்று நாம் அப்போது நினைத்தோம், இது பப்லோ பக்கம் பக்கசார்பு எடுப்பதற்கு எம்மை இட்டுச்சென்றது. பப்லோவின் நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக சந்தேக உணர்வு இருந்தபோதும், பல மாதங்கள் நடந்த சீர்குலைவு கோஷ்டி மோதல்களின் பின்னர் பெரும்பான்மையினர் வெளியேற்றப்பட்டனர்.

ஆனால், அடிப்படையில் இந்த வேறுபாடுகள் பண்பில் வேலைத்திட்ட ரீதியானதாக இருந்தன. அடிப்படை கொள்கைகள் சம்மந்தப்பட்டதாகும். பெரும்பான்மை பிரெஞ்சு தோழர்கள் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நம்மைவிட தெளிவாகப் பார்த்தனர். அவர்களது கட்சியின் 8வது மாநாடு, ''நான்காவது அகிலத்தின் எதிர்காலத்தை மற்றும் அதன் இருப்பையே கூட மரண ஆபத்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது" என்று அறிவித்தது. "கோழைத்தனமான மற்றும் குட்டி முதலாளித்துவ பதிவுவாதத்திலிருந்து பிறந்த கருத்துருக்கள், தலைமைக்குள்ளே காணப்படுகின்றது. அகிலத்தின் முக்கிய பலவீனம், அது மற்றைய பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுதான். இது கணநேரத்தில் தனிநபர் ஆட்சிமுறையை நிறுவுதற்கு துணைதந்து ஊக்குவித்தது. அத்தனிநபர் ஆட்சி அதனையும் அதன் ஜனநாயக விரோத வழிமுறைகளையும், ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் மீதான திருத்தல் வாதத்தின் மீதும் மார்க்சிச முறைகளை கைவிடுதல் மீதும் தளப்படுத்தி இருந்தது." (La Verite, லா வெரிற்றே- உண்மை Sept 18, 1952.)

முழுமையான பிரெஞ்சு நிலவரமும், அடுத்தடுத்த அபிவிருத்திகளின் பின்னணியில் மீள ஆராயப்படவேண்டும். அண்மையில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தின்போது பிரெஞ்சு பகுதியின் பெரும்பான்மை செயல்பட்ட விதம், அவர்கள் மரபுவழி ட்ரொட்ஸ்கிச அடிப்படைக் கோட்பாடுகளை எப்படி உயர்த்திப் பிடிப்பது என்பதை அறிந்திருந்தனர் என்பதை மிகவும் தீர்க்கமான வழியில் விளக்கிக் காட்டியது. நான்காம் அகிலத்தின் பிரெஞ்சு பகுதி நியாயமற்ற முறையில் தூக்கியெறியப்பட்டது. பிரெஞ்சு பெரும்பான்மையினர் லா வெரிற்றே (La Verite) பத்திரிகையின் பக்கம் அணிதிரண்டு நின்றனர். அவர்கள் பிரான்சின் உண்மையான ட்ரொட்ஸ்கிஸ்டுகள். எனவே, அவர்கள் சோசலிச தொழிலாளர் கட்சியால் பகிரங்கமாக அங்கீகரிக்கப்பட்டார்கள்.

குறிப்பாக அதிர்ச்சி ஊட்டுவது எதுவெனில், நான்காம் அகிலத்தின் சீனப் பகுதியின் அரசியல் நிலைப்பாடு பற்றி பப்லோ அவதூறு புரியும் வகையில் தவறான தகவல்களை தந்திருக்கிறார். அவர்கள் ''குறுங்குழுவாதிகள்'' எனவும் ''புரட்சியிலிருந்து ஓடிவிட்டவர்கள்'' என்றெல்லாம் பப்லோ கன்னையால் சித்தரிக்கப்பட்டனர்.

பப்லோ கன்னையால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கருத்துப்பதிவிற்கு நேர்மாறாக, சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் சீன பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான புரட்சிகர பிரதிநிதிகளாக செயல்பட்டனர். லெனினது போல்ஷிவிக்குகள் சோவியத் யூனியனில் ஸ்ராலினிஸ்டுகளால் மரணதண்டனை விதிக்கப்படுவதற்கு தனிமைப்படுத்தப்பட்டது போலும், 1918 புரட்சியின் ரோசா லுக்சம்பேர்க்கும் கார்ல் லீப்னெக்டும் கொலை செய்யப்படுவதற்காக ஜேர்மனியின் நோஸ்கைகளாலும் ஷைடமான்களாலும் தனிமைப்படுத்தப்பட்டது போலும், சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீது எந்த தவறும் இல்லாவிட்டாலும், மா-ஓ வின் ஆட்சி அவர்களை தனிமைப்படுத்தி பழிவாங்கியது. ஆனால் ஸ்ராலினிசத்துடனான பப்லோவின் சமரசம் எமது சீன தோழர்களின் கொள்கை வழிப்பட்ட நிலைப்பாட்டின் மீது சேறு வீசுவதுடன், அவரை மா-ஓ வின் அரசினுடன் தவிர்க்கமுடியாதவாறு ஒன்றிணைத்துக் காட்டுகின்றது.

என்ன செய்யவேண்டும்

சுருக்கமாக சொல்வதென்றால், பப்லோவின் திருத்தல்வாதத்திற்கும் மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் மிக ஆழமானவை. எனவே, அரசியல் ரீதியிலோ அல்லது அமைப்பு அடிப்படையிலோ எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை. பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை உண்மையில் பிரதிபலிக்கும் ஜனநாயக முறையிலான முடிவுகளை அனுமதிக்கபோவதில்லை என்பதை பப்லோ கன்னை நிரூபித்துள்ளது. தங்களது கிரிமினல் கொள்கைக்கு முழுமையாக அடிபணிய வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். நான்காம் அகிலத்திலிருந்து மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அனைவரையும் விரட்டிவிட அல்லது வாய்மூடப்பண்ண மற்றும் கைவிலங்கிட அவர்கள் உறுதி கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது திட்டம் ஸ்ராலினிசத்துடனான சமரசத்தை சிறிதுசிறிதாக உள்ளே புகுத்தவேண்டும் மற்றும் அதேபோல சிறிது சிறிதான பாணியில், என்ன நடக்கிறது என்று அறிய வருகின்றவர்களை மற்றும் ஆட்சேபனைகளை எழுப்புகின்றவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். இதுதான் பப்லோவாத சூத்திரப்படுத்தல்களின் பலவற்றுக்கும் இராஜதந்திர மழுப்புதல்களுக்குமான விளக்கமாகும். இதுவரை பப்லோ கன்னை இந்த கோட்பாடற்ற மற்றும் மாக்கியவெல்லிய சூழ்ச்சிகளுடன் ஓரளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றது. ஆனால், மாற்றத்தின் பண்புரீதியான தருணம் வந்துவிட்டது. அரசியல் பிரச்சினைகள் சூழ்ச்சி நடவடிக்கைகள் மூலம் முறிக்கப்பட்டிருக்கின்றன மற்றும் போராட்டம் இப்பொழுது ஒரு திட்டவட்டமான சச்சரவு ஆகிவிட்டது.

நான்காம் அகிலத்தின் பகுதிகளுக்கு நாம் கூறும் ஆலோசனை என்னவென்றால், செயல்படவேண்டிய, மற்றும் தீர்மானகரமாக செயல்படவேண்டிய வேளை வந்துவிட்டது என்பதுதான். நாம், நான்காம் அகிலத்தின் கீழ்மட்ட அணிகளுக்கு, வெளியில் நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையிலிருந்து ஆலோசனை வழங்குகின்றோம். நான்காம் அகிலத்தில் உள்ள பெரும்பான்மையினராகிய மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள், பப்லோ அதிகாரத்தை தட்டிப்பறித்ததை எதிர்த்து தங்களது உறுதியை நிலைநாட்டும் நேரம் வந்துவிட்டது.

பப்லோவையும் அவரது கையாட்களையும் பதவியிலிருந்து அகற்றுவதன் மூலமாக நான்காம் அகிலத்தின் விவகாரங்களை நிர்வகித்தலைப் பாதுகாக்க வேண்டியுள்ளதுடன், மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தை உயர்த்திப் பிடிப்பது எப்படி என்பதைத் தாங்கள் அறிவர் என்று செயலில் நிரூபித்த காரியாளர்களை அந்த இடத்தில் மாற்றீடு செய்வோம் மற்றும் இயக்கத்தை அரசியல் ரீதியில் மற்றும் அமைப்பு ரீதியில் இருவகையிலும் சரியான பாதையில் வைப்போம்.

தோழமை ட்ரொட்ஸ்கிச வாழ்த்துக்களுடன்,

சோசலிசத் தொழிலாளர் கட்சியின் தேசியக் குழு