காஸா இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை பிரெஞ்சு பொலிஸ் அரசு தடைசெய்வதற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டு!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

இஸ்ரேலிய அரசின் இனப்படுகொலைக்கு எதிராக காஸாவைப் பாதுகாக்கும் ஒற்றுமை வெளிப்பாடுகளை குற்றகரமாக்குவதற்கான பிரெஞ்சு அரசின் முயற்சியை சோசலிச சமத்துவக் கட்சி (PES – Parti de l’égalité socialiste) சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் செய்கிறது. இனப்படுகொலைக்கு எதிராக பேசுபவர்கள் மீது, சிறைத்தண்டனைகள், பொது நடவடிக்கைகள், தடைகள் மற்றும் அதிவலது வன்முறை ஆகியவற்றைக் கொண்டு திட்டமிட்டு அச்சுறுத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

பாரிஸ் நகரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் போராட்டக்காரர் ஒருவர் பாலஸ்தீன கொடியை ஏந்தி போராட்டம் நடத்துகிறார். [AP Photo/Thibault Camus]

தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) தொழிற்சங்க நிர்வாகி ஜோன்-போல் டெலெஸ்கோவிற்கு (Jean-Paul Delescaut) ஓராண்டு தடை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அடிபணியா பிரான்ஸ் (LFI - La France Insoumise) கட்சியின் ஜோன்-லூக் மெலோன்சோன் டெலெஸ்கோவைப் பாதுகாப்பதற்கான அவரது கூட்டங்கள் தடைசெய்யப்பட்டதைக் கண்டதுடன், சயன்ஸ்-போ (Science-Po) பல்கலைக்கழகத்தில் அவர் ஒரு கூட்டம் நடத்திய போது அதிவலது குண்டர்கள் தள்ளிவிட்டு மோதினார்கள். ஐரோப்பியத் தேர்தல்களில் LFI கட்சி வேட்பாளரான ரீமா ஹசன் (Rima Hassan) மற்றும் மொரேனோவாத நிரந்தரப் புரட்சி (Révolution Permanente - RP) குழுவின் அனாஸ் காசிப் (Anasse Kazib) ஆகிய இருவரும் “பயங்கரவாதத்திற்கு மன்னிப்பு” என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

இது இறுதியில் தொழிலாள வர்க்கத்தை இலக்கு வைத்து, திட்டமிட்ட ஒடுக்குமுறை மற்றும் அவதூறுப் பிரச்சாரமாகும். மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள் மற்றும் பட்டினியால் வாடும் காஸா மக்களுக்கு உணவு வினியோகங்கள் ஆகியவற்றில் நிராயுதபாணியான பல பத்தாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் திட்டமிட்டு கொல்லப்படுவதற்கு எதிராக, பிரான்சிலும் வெளிநாடுகளிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பின் எந்தவொரு வெளிப்பாட்டையும் மவுனமாக்க அது முனைகிறது. 

தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) இன் ஸ்ராலினிச அதிகாரத்துவம், அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியின் ஜனரஞ்சகவாதம், மற்றும் போலி-இடது RP குழு ஆகியவற்றுடன் சோசலிச சமத்துவக் கட்சியானது (PES) சமரசப்படுத்தவியலாத அரசியல் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. ஆயினும், அது பிரெஞ்சு பொலிஸ் அரசுக்கு எதிராக கோட்பாட்டளவில் அவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது. பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளின் ஆதரவுடன் காஸாவில் நடத்தப்பட்டுவரும் இனப்படுகொலையை எதிர்க்கவும், அதன் சொந்த ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், தொழிலாள வர்க்கம் இந்த அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிராக விழிப்பூட்டப்பட்டு அணிதிரட்டப்பட வேண்டும். 

அக்டோபர் 7, காஸா எழுச்சிக்கு மூன்று நாட்களுக்குப் பின்னர், அவர் ஒரு அறிக்கையை விநியோகித்ததன் அடிப்படையில் டெலெஸ்கோவிற்கு தண்டனை வழங்கப்பட்டது. இஸ்ரேலின் 16 ஆண்டுகால ஆக்கிரமிப்பு மற்றும் காஸா மீதான முற்றுகை சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தொடர்ச்சியான தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, இந்த அறிக்கை கூறியது: “சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கொடூரங்கள் குவிந்துள்ளன. சனிக்கிழமை [அக்டோபர் 7] முதல், அவர்கள் தூண்டிய பதிலடியை பெற்று வருகின்றனர்.” 

இந்த அறிக்கையானது காஸா எழுச்சி மீதான “தார்மீக கண்டனத்தைக் குறைக்கும்” என்றும், பிரான்சில் யூத-எதிர்ப்பை ஊக்குவிக்கும் என்றும் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன, இது முக்கியமாக பிரான்சின் பிராந்தியங்களுக்குள் “இந்த மோதலை பரவலடையச் செய்வதை” ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறினர். 

எவ்வாறிருப்பினும், இஸ்ரேலிய அரசுக்கு ஆயுதமளிக்கும் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன், காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலைதான் கண்டனத்தின் இலக்காக இருக்க வேண்டும். 

பாலஸ்தீனியர்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் காஸா இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பே பிரான்சில் யூத-எதிர்ப்பின் பிரதான காரணம் என்ற வாதத்தைப் பொறுத்த வரையில், இது ஒரு அரசியல் மற்றும் வரலாற்று பொய்யாகும். மரின் லு பென்னின் (Marine Le Pen) தேசிய பேரணி (le Rassemblement national -RN)  அல்லது எரிக் சிமோரின் (Eric Zemmour) மீள்வெற்றிகொள்ளல் (Reconquête) கட்சி போன்ற அதிவலதுசாரி சக்திகளை உத்தியோகபூர்வமாக ஊக்குவிப்பதே அதன் பிரதான ஆதார நோக்கமாக உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது விச்சி பிரெஞ்சு ஆட்சியானது யூதர்களை நாடு கடத்தியதை சிமோர் பகிரங்கமாக பாதுகாத்து வந்துள்ள அதேவேளையில், யூத இனப்படுகொலையை (Holocaust) வரலாற்றின் ஒரு வெறும் “அம்சம்” என்று அற்பமாக சித்தரித்த லு பென்னின் தந்தை ஜோன்-மரி லு பென்னால் (Jean-Marie Le Pen) தேசிய பேரணி கட்சி ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. 

அரசியல் ஸ்தாபகமானது இந்த சக்திகளை உத்தியோகபூர்வ அரசியலில் ஒருங்கிணைத்து பாசிசத்தின் மரபியத்தை நெறிப்படுத்தியுள்ளது. 2018 இல் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான பாரிய “மஞ்சள் சீருடை” போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்த கலகம் ஒடுக்கும் பொலிஸுக்கு உத்தரவிட்ட அதேவேளையில், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் விச்சி சர்வாதிகாரி மார்ஷல் பிலிப் பெத்தானை ஒரு “மாபெரும் சிப்பாய்” என்று புகழ்ந்தார். அவர் இப்போது உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்புவது பற்றி விவாதித்து வருகிறார். அங்கு நேட்டோ சக்திகள் நவ-நாஜி அசோவ் பட்டாலியன் போன்ற அதிதீவிர வலதுசாரி பிரிவுகளை ரஷ்யாவை எதிர்த்துப் போராடுவதற்கு முற்றுமுழுதாக ஆயுதம் ஏந்த வைத்துள்ளன. 

காஸாவில் இஸ்ரேலிய நடவடிக்கைகளால் எரியூட்டப்பட்ட, பிரான்சில் யூத-எதிர்ப்பின் எழுச்சிக்கு எதிரான போராட்டத்திற்கு, யூதர்கள் மற்றும் முஸ்லீம்கள்  உட்பட பல்வேறு பின்னணிகளைக் கொண்ட தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவது அவசியமாகும். காஸாவில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் அதில் பிரெஞ்சு அரசு உடந்தையாக இருப்பது இரண்டையும் எதிர்ப்பதற்கு இந்த ஐக்கியம் இன்றியமையாததாகும். யூத-எதிர்ப்புக்கு எதிரான போராட்டத்தை பிரெஞ்சு பொலிஸ் அரச இயந்திரத்திடம் விட்டுவிட முடியாது, அதன் அரசியல் அனுதாபங்கள் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகளுடன் உள்ளன மற்றும் காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை கழுத்தை நெரிக்க முயற்சிக்கிறது.

இன்று பொலிஸ் அடக்குமுறையின் இலக்காக இருப்பவர்கள், யூத-எதிர்ப்புக்கு முறையிடும் அதிதீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் அல்ல, மாறாக இனப்படுகொலை மற்றும் இன வெறுப்புக்கு விரோதமான இடதுசாரி வாக்காளர்களிடமிருந்து மில்லியன் கணக்கான வாக்குகளைப் பெற்ற சக்திகளாகும். 

2022 ஜனாதிபதித் தேர்தல்களில், மெலோன்சோன் 8 மில்லியன் வாக்குகளைப் பெற்றார். அவைகள் பெரும்பாலும் பிரதான பிரெஞ்சு நகரங்களில் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களில் குவிந்திருந்தன. அங்கு வாக்காளர்கள் மக்ரோன் மற்றும் லு பென் இருவருக்கும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த முயன்றனர். டெலஸ்கோவுடன் ஒற்றுமை காட்டும் அவரது இரண்டு கூட்டங்கள் லீல் நகரத்தில் தடை செய்யப்பட்ட பின்னர், மெலோன்சோன் பாரிஸில் அரசியல் ஆய்வுகள் பயிலகத்தில் (Sciences-Po) ஒரு கூட்டம் நடத்தினார். அவர் கூட்டத்திற்கு நடந்து சென்றபோது, பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தொழிற்சங்க அதிதீவிர வலதுசாரிகள் மற்றும் நெமெசிஸ் (Némésis) குழுக்களின் மாணவர்கள் அவரது ஆடையைப் பிடித்து, அவர் “ஹமாஸுக்கு உடந்தையாக இருந்தார்” என்று கூச்சலிட்டனர். 

Sciences-Po இல், மெலோன்சோன் அவரது கூட்டங்கள் மீதான தடைகளை விமர்சித்தார். “தாங்கள் போராடுவதற்கு முன்னரே விட்டுக்கொடுப்பவர்களின் அளப்பரிய கோழைத்தனம்” மற்றும் “அழுத்தத்திற்கு அடிபணிந்து மண்டியிட்டவர்கள்” என்று கண்டனம் செய்தார். 

LFI கட்சியின் ஐரோப்பிய வேட்பாளராகப் போட்டியிடும் பாலஸ்தீனியத்தை பிறப்பாகக் கொண்ட வழக்கறிஞரான ரிமா ஹாசனிடம் பயங்கரவாதத்திற்கு மன்னிப்பு அளிக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். ஏனெனில் அவர், “நதியிலிருந்து கடல் வரை, நாங்கள் அனைத்து பாலஸ்தீனியர்களையும் விடுவிக்க விரும்புகிறோம்“ என்று ட்வீட் செய்துள்ளார். காஸா மீது வீசப்படும் வெடிகுண்டில் தனது பெயரை எழுதி இஸ்ரேலிய துருப்புக்கள் அனுப்பிய புகைப்படத்தை மறு ட்வீட் செய்த அவர், “உலகிலேயே மிகவும் ஒழுக்கக்கேடான இராணுவம் இஸ்ரேலிடம் உள்ளது” என்றும் அதில் கூறியுள்ளார்.

ஒரு இரயில்வே தொழிற்சங்க அதிகாரியும் மொரேனோவாத RP அமைப்பின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான அனாஸ் காசிப் கடந்த வாரம் பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் கீழ்கண்டவாறு அறிவித்தார்: “பாலஸ்தீனத்திற்கான எனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தும் ஒரு அறிக்கையை நான் படித்தேன், விசாரணை முழுவதும் 7 பக்க கேள்விகளை எதிர்கொண்டு அமைதியாக இருக்க முடிவு செய்தேன்... எனது வாழ்க்கை மற்றும் நான் ஈடுபட்டுள்ள அமைப்புகள் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது.  இந்த நடைமுறை மிகவும் அரசியல் சார்ந்தது மற்றும் ஏற்கனவே நேர்காணல் செய்யப்பட்ட அல்லது வரும் வாரங்களில் நேர்காணல் செய்யப்படும் பல டசின் நபர்களைப் பற்றி எங்களிடம் கூறப்பட்டுள்ளது” என்றார். 

டெலெஸ்கோ மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் காசிப் மீதான குற்றச்சாட்டுகள் எரிக் சிமோர் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் ஆவணங்களை மறு-ட்வீட் செய்யும் ஒரு அதிவலது இளைஞர் குழுவான பிரெஞ்சு யூத இளைஞர் (French Jewish Youth – JFI) குழுவால் கொண்டு வரப்பட்டன. விசாரணையில் இருந்து காசிப் விடுவிக்கப்பட்ட பிறகு, JFI ஒரு ட்வீட்டில், “இது ஆரம்பம் @AnasseKazib. நாங்கள் எப்போதும் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம்” என்று அவரை மிரட்டியது.

காஸா இனப்படுகொலைக்கு பெரும் எதிர்ப்பு உள்ள பிரான்சிலோ அல்லது ஐரோப்பா முழுவதிலும் இத்தகைய அதிவலது அமைப்புகளுக்கு பரந்த ஆதரவு இல்லை. இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்திற்கு தீவிரமாக அணிதிரட்டப்படாததால் தான், இந்த அமைப்புக்கள் பொலிஸ் அரசோடு கூட்டு சேர்ந்து இந்த அரசியல் மிரட்டல் கொள்கையை மட்டுமே அவர்களால் பின்தொடர முடிகிறது. இதனால்தான், காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும், சியோனிச மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கு எதிரான எதிர்ப்பை நசுக்குவதற்கான அனைத்து அரசு முயற்சிகளையும் எதிர்த்துக் குரல்கொடுத்தும் போராடுவதும் இன்றியமையாததாக இருக்கிறது. 

LFI அல்லது CGT அதிகாரத்துவமானது அத்தகைய இயக்கத்தைத் தொடங்கும் வரை தொழிலாளர்கள் காத்திருக்க முடியாது, அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். உண்மையில், மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு  எதிரான —பெருவாரியான மக்கள் எதிர்ப்புக்கு முன்னால் எந்தவொரு நாடாளுமன்ற வாக்கெடுப்பும் இன்றி அவர் திணித்த ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக— கடந்த ஆண்டு ஒரு பாரிய வேலைநிறுத்த இயக்கத்தை தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் முடக்கின. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை குறைத்த பின்னர், மக்ரோன் இப்போது மீண்டும் மக்களின் விருப்பத்தை அவமதிப்பதுடன், மீண்டும் ஒரு இனப்படுகொலையை ஆதரிக்கிறார். 

இனப்படுகொலைக்கு எதிரான வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும், மேலும் இனப்படுகொலைக்கு எதிராக வளர்ந்து வரும் சர்வதேச எதிர்ப்பு இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும். இனப்படுகொலைக்கு எதிராக பேசியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் தொழிலாளர்களும் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் பொலிஸ் ஒடுக்குமுறையைக் கொண்டு அச்சுறுத்தப்பட்டவர்களும் இதில் உள்ளடங்குவர். 

எல்லாவற்றிற்கும் மேலாக, இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச புரட்சிகர மார்க்சிச தலைமையை கட்டியெழுப்ப வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது  இந்த ஆண்டு இந்த தலைப்பில் அதன் சர்வதேச இணையவழி மே தினப் பேரணியை நடத்தவிருக்கிறது. சோசலிச சமத்துவக் கட்சியானது வாசகர்களை wsws.org/mayday இல் பதிவு செய்து கொள்ளுமாறும், இந்த இணையவழிப் பேரணியைப் பரவலாக ஊக்குவிக்குமாறும் அழைப்பு விடுக்கிறது.  

Loading