இஸ்ரேல் லெபனானுடன் போரை தீவிரப்படுத்துகிறது, நாசர் மருத்துவமனை அட்டூழியங்கள் பற்றிய விவரங்கள் வெளிவருகையில், ரஃபா படையெடுப்புக்கு அது திட்டமிடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

தெற்கு லெபனானில் உள்ள மர்ஜயோனில் இருந்து அல் ஜசீராவின் செய்தியாளர் ஜீனா கோட்ரின், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான மோதல் “அதிக தீவிர மோதலின் வெவ்வேறு கட்டத்திற்குள் நுழைகிறது” என்று மதிப்பிட்டு அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.

புதனன்று, “இஸ்ரேல் ஒரே நாளில் மிக அதிக எண்ணிக்கையிலான தாக்குதல்களை நடத்தியது,” என்று அவர் எழுதுகிறார். வியாழன் அதிகாலை வரை, ஜெட் போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகளைக் கொண்டு 40 தனித்தனி இலக்குகளைத் தொடர்ந்து தாக்கியது. தெற்கு லெபனானை மட்டும் இலக்கு கொள்ளாமல், நாட்டின் கிழக்குப் பகுதியையும் அது இலக்கு வைத்து தாக்கியது.

ஏப்ரல் 25, 2024 அன்று தெற்கு லெபனானின் திரி கிராமத்தில் உள்ள ஹிஸ்புல்லா நடத்தும் அல்-மஹ்தி பள்ளியின் பின்புறத்தில் நடந்த இறுதி ஊர்வலம். ஹனின் நகரில் ஒரு வீட்டின் மீது இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட 10 வயது சிறுமியின் சவப்பெட்டியை சுமந்து செல்லும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பியபடி செல்கின்றனர். [AP Photo/Mohammed Zaatari]

இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் காலெண்ட் நிருபர்களிடம், “தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தளபதிகளில் பாதிப்பேர் அகற்றப்பட்டுவிட்டனர்... மீதமுள்ள பாதிப்பேர், தெற்கு லெபனானில் [IDF] இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு ஒளிந்து கொண்டு நடவடிக்கைகளை கைவிட்டுள்ளனர்” என்று கூறினார்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் ஓர் உத்தியோகபூர்வ அறிக்கையானது, இந்த தாக்குதல்கள் எந்தவொரு குறிப்பிட்ட தாக்குதலுக்கும் பதிலடியாக நடத்தப்படவில்லை. மாறாக, “எல்லைப் பகுதியில், அந்த அமைப்பின் உள்கட்டமைப்பை அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக” இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விவரித்தது.

அக்டோபர் 7ம் தேதிக்குப் பின், தொடங்கிய சமீபத்திய சண்டையில் இருந்து கிட்டத்தட்ட 250 ஹிஸ்புல்லா போராளிகளும், 70க்கும் மேற்பட்ட லெபனிய குடிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 90,000 க்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சுமார் 100 தெற்கு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து குண்டுவீச்சு அச்சுறுத்தலின் கீழ் மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன.

நோர்வே அகதிகள் கவுன்சிலின் பொதுச் செயலாளர் ஜோன் எகிலாண்ட் கடந்த வியாழனன்று, லெபனானுக்கு விஜயம் செய்து “முழுச் சமூகங்களும் துன்புறுவதாகவும்”, லெபனானில் பதட்டங்கள் “வெடிக்கும் விளிம்பில் உள்ளன” என்றும் எச்சரித்தார். இது “இப்படியே தொடர முடியாது” என்றும் குறிப்பிட்டார்.

“பாதுகாப்பான இடத்தைத் தேடி தெற்கு கிராமங்களை விட்டு வெளியேறும் மக்கள் நெரிசலான தங்குமிடங்களுக்குள் செல்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு உதவ எங்களிடம் போதுமான நிதி இல்லை. ஒரு வித விரக்தி உணர்வு உள்ளது...

“மக்கள் தங்கள் வீடுகளுக்கும் வேலைகளுக்கும் திரும்ப வேண்டும், விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கும், குழந்தைகள் தங்கள் பள்ளிகளுக்கும் திரும்ப வேண்டும். குடும்பங்களும் குழந்தைகளும் இங்கே ஒரு பிராந்திய நெருக்கடியின் மையத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

ஒரு பெரிய மற்றும் மிகவும் அழிவுகரமான போரை முன்னறிவிக்கும் ஆரம்ப மோதல்களின் விளைவுகள் இவை. கடந்த வியாழனன்று, இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்சின் Ravit Hecht, இஸ்ரேலிய அரசாங்கம் “ரஃபா மீதான நடவடிக்கைக்குப் பின்னர், அதன் கால அளவு யாருக்கும் தெரியாது, இராணுவம் வடக்கில் ஹிஸ்புல்லாவை எல்லையில் இருந்து விரட்ட இன்னும் கணிசமான தாக்குதலுக்கு களமிறங்கும்” என்று சமிக்ஞை செய்வதாக எழுதினார்.

“முதலில் ரஃபா, பின்னர் ஹிஸ்புல்லா, பின்னர் ஈரான்” என்று ஒரு அரசாங்க மந்திரி கூறியதாக அவர் மேற்கோளிட்டார்.

ஜெருசலேம் போஸ்டின் அவி அலோன் புதனன்று உற்சாகமாக எழுதுகையில், “இஸ்ரேல் ஏற்கனவே வடக்கில் போரில் ஈடுபட்டுள்ளது. அதற்கு லெபனானுடன் போரை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது.” “இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளிலுள்ள இஸ்ரேலிய உயிர்களுக்கு ஈரானிய ஆட்சியின் அச்சுறுத்தலுக்கு இஸ்ரேல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், லெபனானில் ஈரானிய திறன்களை இஸ்ரேல் இறுதியாக அழிப்பதன் மூலமாக மட்டுமே அது செய்யப்பட முடியும்” என்று குறிப்பிட்டார்.

“காஸா போர் எப்படி நியாயமான போராக இருக்கிறதோ, அதேபோல் லெபனானில் தவிர்க்க முடியாத போரும் நடக்கிறது. இது உண்மையில் ஒரே யுத்தம் வெவ்வேறு முனைகளில் நடைபெறுகிறது” என்று குறிப்பிட்டார்.

Foreign Affairs பத்திரிகையில் புதனன்று வெளிவந்த மஹா யஹ்யாவின் ஒரு நீண்ட கட்டுரையானது, வெளிப்படையான கவலையுடன், “இஸ்ரேலின் அடுத்த போர் முனை? ஈரான், ஹிஸ்புல்லா மற்றும் லெபனானில் வரவிருக்கும் போர்” என்று கேள்வி எழுப்பியது. 

“ஷியா போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவை எதிர்கொள்ள இஸ்ரேல் இப்போது அதன் வடக்கில் 100,000 துருப்புக்களை நிறுத்தியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். மேலும் “ஏப்ரல் 21ம் தேதி இஸ்ரேலின் அவசரக்கால போர் மந்திரிசபையின் உறுப்பினரான பென்னி காண்ட்ஸ், லெபனானுடனான இஸ்ரேலின் எல்லை இப்பொழுது அதன் ‘செயல்பாட்டு போர்முனையாகவும்’ அதன் ‘மிகப் பெரிய, மிக அவசரமான சவால்’”என்றும் அறிவித்தார்.

இம்மாத தொடக்கத்தில், “இஸ்ரேலிய இராணுவம் லெபனானுடனான மோதலுக்கான அதன் தயாரிப்புக்களை கோடிட்டுக் காட்டி, ‘பாதுகாப்பில் இருந்து தாக்குதலுக்கு மாறுவதற்கான தயார்நிலை’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அப்போதிருந்து, லெபனானில் அதன் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இஸ்ரேல் லெபனானை தாக்குகிறதா என்பது இனி ஒரு விஷயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் எப்பொழுது என்பதுதான் விஷயமாக இருக்கும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்தகைய போர் பிராந்தியத்தின் மோதல்களில் உருகிவிடும் என்று யஹ்யா எச்சரித்தார்:

“ஒரு முழுமையான பிராந்திய விரிவாக்கம் நிச்சயமாக ஈராக், ஜோர்டான் மற்றும் சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஈரானின் கூட்டாளிகளால் அதிக தாக்குதல்களைத் தூண்டும். இத்தகைய தாக்குதல்கள், அதையொட்டி, அமெரிக்காவிடம் இருந்து மேலும் ஆபத்தான பதிலடித்த தாக்குதலை கோரும்... அப்பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்குள் விழும் ராக்கெட்டுகளின் குறியீடானது, இஸ்ரேலிய வான்வெளியை பாதுகாப்பதன் மூலம் மட்டுமல்லாமல், இஸ்ரேலின் எதிரிகளை நேரடியாக தாக்குவதன் மூலமாகவும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய சக்திகளை இராணுவரீதியில் மேலும் கூடுதலாக ஈடுபட தூண்டும்.”

லெபனானிலும் அதற்கு அப்பாலும் நடந்துவரும் தீவிரமான போர், காஸா மற்றும் மேற்குக் கரையில் போர், அடக்குமுறை மற்றும் இனச் சுத்திகரிப்பு ஆகியவற்றின் தீவிரத்துடன் தொடர்புடையது.

ஹாரெட்ஸ் தகவல்படி, “இஸ்ரேலிய இராணுவம் அதன் படைகள் ரஃபாவில் வரவிருக்கும் நடவடிக்கைக்கான தயாரிப்புகளை முடித்துவிட்டதாகவும், லெபனானில் அதுபோன்றவொரு நடவடிக்கைக்கான தேதி அமைச்சரவையால் தீர்மானிக்கப்பட இருப்பதாகவும் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளது.” இஸ்ரேலின் போர் மற்றும் பாதுகாப்பு மந்திரிசபைகள் இரண்டும் வியாழனன்று டெல் அவிவில் கூடி இதற்கான திட்டங்களை விவாதித்துள்ளன.

இஸ்ரேலின் நஹால் காலாட்படை பிரிகேட் காஸாவிலிருந்து தாக்குதலுக்கு பயிற்சி பெறுவதற்காக திரும்பப் பெறப்பட்டதாகவும், 162 வது டிவிஷனின் எஞ்சிய பகுதிகளுடன் அனுமதிக்கப்பட்டதாகவும் டைம்ஸ் ஆப் இஸ்ரேல் தெரிவிக்கிறது. காஸா அருகே ஒன்பது புதிய இராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1.5 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் வசிக்கும் நகரான ரபாவுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அல் ஜசீரா பத்திரிகையாளர் ஹானி மஹ்மூத், நகரத்தின் மீது “தாக்குதல் ட்ரோன்களின் அதிகரிப்பு” இருப்பதாக விவரித்தார். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெல்ஜிய உதவிப் பணியாளர் அப்துல்லா நபான் மற்றும் அவருடைய ஏழு வயது மகன் ஜமால் ஆகியோரும் அடங்குவர். 25 பேர் வசிக்கும் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், இடம்பெயர்ந்த அகதிகள் உட்பட மேலும் ஐவர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய இனப்படுகொலையில் கொல்லப்பட்ட அல்லது ஊனமுற்ற காஸாவின் இரண்டு சதவீத குழந்தைகளுடன் சேர்த்து, அன்றைய தினம் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் இரண்டு குழந்தைகள் அடங்குவர்.

ஜெனினைச் சேர்ந்த மற்றொரு குழந்தையான 16 வயதான கலீட் ராயித் அரூக், மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் மார்பில் சுடப்பட்டு கொல்லப்பட்டார். நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, இஸ்ரேலிய படைகள் “கற்களை வீசிய” “பயங்கரவாதிகள்” என்று கூறி, பல இளைஞர்களுக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் கையெறி குண்டுகள் மற்றும் நேரடி துப்பாக்கிச் சூடுகளை நடத்தின.

அரூக்கின் ஒன்றுவிட்ட சகோதரர் மஜீத் அர்காவி, AFP செய்தி ஸ்தாபனத்திடம், “அவர் முதுகைத் தாக்கிய துப்பாக்கி ரவை, அவரது மார்பு வழியாக வெளியேறியது ... அவர்கள் அவரை கொடூரமான முறையில் படுகொலை செய்தனர்.” கூறினார்,

Nablus க்கு கிழக்கே Beit Furik நகரில் மற்றொரு பாலஸ்தீனிய சிறுவன், இஸ்ரேலியர்களால் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

இதற்கிடையில் கான் யூனிஸின் நாசர் மருத்துவமனையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளிவந்துள்ளன, அங்கு மூன்று பாரிய புதைகுழிகளில் கிட்டத்தட்ட 400 பாலஸ்தீனியர்கள் இறந்து கிடந்தனர். தொடர்ந்து ஆறு நாட்களாக சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

பாலஸ்தீனிய சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, மோசமாக சிதைந்துள்ள அல்லது சிதைக்கப்பட்டுள்ள இந்த சடலங்களில் ஒரு சிறுபகுதியினர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் இருந்த நோயாளிகளைக் கொன்றது உட்பட சித்திரவதை மற்றும் கள மரணதண்டனைகளுக்கான சான்றுகள் உள்ளன என்று துறைத் தலைவர் யமென் அபு சுலைமான் வியாழக்கிழமை தெரிவித்தார். பத்து சடலங்களின் கைகள் கட்டப்பட்டிருந்தன, மேலும் பலருக்கு மருத்துவக் குழாய்கள் இணைக்கப்பட்டிருந்தன. உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.

பாலஸ்தீனிய சிவில் பாதுகாப்பு உறுப்பினர் முகமது முகியர் கருத்து தெரிவிக்கையில், “உயிருடன் புதைக்கப்பட்டதாக நாங்கள் நினைக்கும் நபர்களுக்கு சுமார் 20 உடல்களுக்கு தடயவியல் பரிசோதனை தேவை” என்று கூறினார்.

இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “இஸ்ரேல் பொதுமக்களை பாரிய புதைகுழிகளில் புதைப்பதாக குற்றம் சாட்டுவதற்கான எந்தவொரு முயற்சியும் முற்றிலும் தவறானது மற்றும் இஸ்ரேலை சட்டவிரோதமாக்குவதை நோக்கமாகக் கொண்ட தவறான தகவல் பிரச்சாரத்தை உருவாக்கியுள்ளது. இந்த கல்லறை சில மாதங்களுக்கு முன்பு கசான்களால் தோண்டப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாழனன்று வெளியிடப்பட்ட ஒரு சிவில் பாதுகாப்பு அறிக்கையில், “இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பொதுச் செயலாளருக்கு” அது வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஐ.நா ஆதரித்துள்ளது. இந்த வெளிப்படுத்தல்களால் ஐரோப்பிய ஒன்றியம் சங்கடமடைந்துள்ள போதிலும், அமெரிக்கா வெட்கமின்றி இஸ்ரேலை ஆதரிப்பதால், அது பாதுகாப்பாக உள்ளது.

அதற்கு பதிலாக, இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க அழைப்பு விடுத்ததன் மூலமாக, போருக்கான அனைத்து பொறுப்புகளையும் ஹமாஸின் கால்களில் வைத்து, ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவற்றின் கூட்டாளிகளில் பதினெட்டு பேர் கையெழுத்திட்ட ஒரு கிளர்ச்சியூட்டும் சிடுமூஞ்சித்தனமான பகிரங்க கடிதத்தை வெளியிடுவதற்கு அமெரிக்கா தலைமை தாங்கியுள்ளது. ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி கருத்து தெரிவிக்கையில், “அவர்கள் அதைச் செய்தால், இந்த நெருக்கடி முடிவுக்கு வந்துவிடும்,” என்றார்.

Loading