World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை

Sri Lankan government ally suspected in murder of BBC's Jaffna correspondent

யாழ்ப்பாண பீ.பீ.சி. நிருபர் கொலை:

இலங்கை அரசாங்கத்தின் சகாக்கள் மீது சந்தேகம்

By Our Correspondent
28 October 2000

Use this version to print

இனங்காண முடியாத துப்பாக்கி நபர்களால் அக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்ப்பாண வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல பத்திரிகையாளரான மயில்வாகனம் நிமலராஜனின் (36 வயது) இறுதிச் சடங்குகளில் 4000க்கும் அதிகமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

நிமலராஜன் பீ.பீ.சி.யின் சிங்கள, தமிழ் சேவைகளதும் கொழும்பு தமிழ் தினசரியான வீரகேசரி, ராவய (வார இதழ்) பத்திரிகைகளதும் யாழ்ப்பாண நிருபராக செயற்பட்டவர். அவர் வட இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் விளங்கினார்.

நிமலராஜனின் கொலைகாரர்கள் இரவு 10 மணியளவில் வீட்டில் நுழைந்து, 65 வயது தந்தையான சங்கரப்பிள்ளை மயில்வாகனத்தின் தொண்டையை வெட்டினர். இந்த வெட்டுக்காயத்தினால் தந்தை இறக்காத போதும் பத்திரிகையாளரை தலையில் சுட்டனர். இதனால் அவர் உயிரிழந்தார். வீட்டினுள் ஒரு கைக்குண்டை வெடிக்க வைத்ததன் மூலம் கொலையாளிகள் நிமலராஜனின் தாயார் லில்லி மயில்வாகனத்தையும் (65வயது) ஜெகதாஸ் பிரசன்னாவையும் (11 வயது) படுகாயம் அடையச் செய்தனர்.

கொழும்பு பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் சுதந்திர வெகுஜன தொடர்பு சாதன இயக்கமும் (FMM) அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து இக்கொலையை கண்டனம் செய்துள்ளன. வவுனியாவில் உள்ள பத்திரிகையாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் அக்டோபர் 24ம் திகதி ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடாத்தினர். இதற்கு மறுநாள் கொழும்பு பத்திரிகையாளர் சங்கமும் ஏனைய அமைப்புக்களும் கொழும்பு கோட்டை புகையிர நிலையத்துக்கு எதிரில் நிமலராஜன் கொலையை கண்டனம் செய்யும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.

நியூயோர்க்கிலுள்ள பத்திரிகையாளர்களை காக்கும் கமிட்டி (CPJ) இந்தப் படுகொலையை கண்டனம் செய்து வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தது: "பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து சுயாதீனமான செய்திகளைப் பெற்றுக்கொள்வதற்கான சில மூலங்களில் நிமலராஜன் ஒன்றாக விளங்கினார்" என்றது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு நீண்ட உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டுள்ள பொதுஜன முன்னணி அரசாங்கம் (PA) வடக்கு-கிழக்கு யுத்த பிராந்தியங்களில் இருந்து தணிக்கை செய்யப்படாத எந்த ஒரு செய்தியும் வெளிவருவதை தடுக்க கண்டிப்பான தணிக்கை விதிகளை அமுல் செய்துள்ளது. அரசாங்கத்தினால் பொறுக்கி எடுக்கப்பட்ட ஒரு சில பத்திரிகையாளர்கள் கோஷ்டியே இடைக்கிடையே இப்பிராந்தியங்களுக்கு கூட்டிச் செல்லப்படுகின்றது. சுதந்திர வெகுஜனத் தொடர்புச் சாதன இயக்கத்தையும் (FMM) ராவய பத்திரிகையையும் சேர்ந்த பத்திரிகையாளர்கள் நிமலராஜனின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்க பொதுஜன முன்னணி அரசாங்கம் மறுத்துவிட்டது. இதனால் அவர்கள் யாழ்ப்பாணம் செல்வது சாத்தியமின்றிப் போனது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் தமிழர்களுக்கு எதிரான அரச அடக்குமுறையை அம்பலப்படுத்தி வந்ததன் காரணமாக நிமலராஜன் கொல்லப்பட்டார் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது. செம்மணியில் இருந்த மாபெரும் மனிதப் புதைகுழிகள் பற்றிய தகவல்களை முதலில் வெளியுலகுக்கு கொணர்ந்த பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். இப்புதை குழிகளில் 1990 களின் நடுப்பகுதிகளில் 'காணமல்போன' 600 தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.

பொதுஜன முன்னணியின் ஒரு சகாவான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) இக்கொலைக்கு பொறுப்பாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் ஏற்கனவே எழுந்துள்ளன. தனக்கென ஒரு ஆயுதக் குண்டர் கும்பலைக் கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்பாணக் குடாநாட்டில் உள்ள ஆயுதப் படைகளுடன் நெருக்கமாக செயற்படுகின்றது. இப்பகுதிகளில் இராணுவச் சட்டங்களை அமுல் செய்வதில் இக்குழு துணைபோகின்றது.

சமீபத்தில் இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில் ஈ.பீ.டீ.பி. யாழ் மாவட்டத்தில் 4 ஆசனங்களை மட்டுமே வெற்றிகொள்ள முடிந்தது. முன்னர் அது 9 ஆசனங்களை கொண்டிருந்தது. பாராளுமன்றத்தில் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு ஈடாட்டம் கண்ட பெரும்பான்மையை வழங்குவதற்கு பதிலுபகாரமாக இந்த அரசியல் குழு வடமாகாண புனர்வாழ்வு அமைச்சை பெற்றுள்ளது. இதன் மூலம் இக்கட்சி தனது அங்கத்தவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் ஏதேனும் வசதிவாய்ப்புக்களை சுரண்டிக் கொள்ளும்.

போட்டி அரசியல் கட்சியான தமிழர் விடுதலை கூட்டணி (TULF) இந்த கொலையை ஈ.பீ.டீ.பீ.யே செய்தது எனக் காட்டும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. நிமலராஜன் கொலை செய்யப்பட்டதற்கான உடனடிக் காரணம் ஊர்காவற்துறையிலும் அதை அண்டிய தீவுகளிலும் யாழ்ப்பாணத்திலும் வாக்குச்சீட்டு மோசடிகளில் ஈ.பீ.டீ.பி. ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டியதேயாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணி பேச்சாளர் குறிப்பிட்டு இருந்தார். "இதை ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு" எனக் கூறி ஈ.பீ.டி.பி. தனது தேர்தல் மோசடிகளை மறுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கம் "இது தானா யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு" என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு துண்டுப்பிரசுரத்தில் ஈ.பீ.டீ.பி.யை நேரடியாகக் குற்றம் சாட்டியது. "புனர்வாழ்வு (வடக்கு) அமைச்சு பதவியை பெற்ற கட்சி மக்களுக்கு கொலையை பரிசாக வழங்கியுள்ளது" என அது குறிப்பிட்டுள்ளது. நிமலராஜன் இலங்கை இராணுவத்தினரால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை மூடிமறைப்பதற்காவும் அக்குழுவின் அராஜக ஆட்சியை ஸ்தாபிதம் செய்யவுமே கொலை செய்யப்பட்டுள்ளார்".

அக்டோபர் 10 தேர்தலை தொடர்ந்து நிமலராஜன் தாம் ஈ.பீ.டீ.பி.யின் கசப்பைத் தேடிக்கொண்டுள்ளதாக தமது சகாக்களிடம் கூறியுள்ளார். அது யாழ்ப்பாணத்தில் அதிக அளவில் வாக்குகள் வெல்லமுடியாது போனதற்கு நிமலராஜனை பொறுப்பாளியாக கொண்டது. பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதன் பின்னர் தாம் தமது பாதுகாப்பையிட்டு கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்தப் பத்திரிகையாளர் பெரிதும் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் வசித்து வந்ததார் இதனால் கொலையாளிகள் அவரது வீட்டுக்குள் நுழைவதும் கொலையின் பின்னர் தப்பித்துச் செல்வதும் சாதாரண விடயமாக இருக்கவில்லை. இப்பிராந்தியம் இராணுவக் காவலரண்களால் கடும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அத்தோடு இக்கொலை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இடம்பெற்றுள்ளது. அவை அனைத்தும் சிக்கலான தன்மையை எடுத்துக்காட்டுவதோடு பாதுகாப்பு படையினர் இதில் நெருக்கமாக தொடர்புபட்டு இருப்பதற்கான சாத்தியத்தையும் காட்டுகின்றது.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இக்கொலை சம்பந்தமாக உடனடி விசாரணைக்கு உத்தரவிட்ட போதிலும் குற்றவாளிகள் இனங்காணப்படுவார்கள் என்பதற்கான சாத்தியம் பெரிதும் அருகிக் காணப்படுகின்றது. இதற்கு முன்னர் யாழ்ப்பாணப் பத்திரிகை நிறுவனங்கள் உடல்ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகிய போதிலும் இதில் சம்பந்தப்பட்ட காடையர்கள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உதயன் பத்திரிகை அலுவலகம் குண்டுவீச்சுக்கு இலக்காணதோடு இதில் ஈ.பீ.டீ.பி. சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. வட இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் என்ற விதத்தில் நிமலராஜன் இக்குண்டுத் தாக்குதலுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடாத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த குண்டுவீச்சு தொடர்பாக எவருக்கும் எதிராக குற்றம் சாட்டப்படவில்லை.

நிமலராஜனை எவர் கொலை செய்து இருந்தாலும் அதை திட்டவட்டமான அரசியல் இலக்குடனேயே செய்துள்ளனர். அவரின் கொலை சிங்கள தீவிரவாத கட்சிகளாலும், அவற்றின் தமிழர் எதிர்ப்பு வெறியினாலும், நாட்டின் வடக்கு -கிழக்கில் இடம்பெற்ற உக்கிரமான யுத்தத்தினாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்ட தேர்தல் பிரச்சார இயக்கத்தை தொடர்ந்து இடம் பெற்றது. ஒரு பிரபல்யமான பத்திரிகையாளரின் திட்டமிட்ட படுகொலையானது அரசாங்கத்தையும் இராணுவத்தையும் எதிர்ப்போரை அல்லது தமிழ் சிறுபான்மையினரின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக நின்று வருபவர்களை பயமுறுத்துவதற்கென்றே திட்டமிடப்பட்டதாகும்.