World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Tamil detainees in Sri Lanka appeal for support for their release

இலங்கையில் தமிழ் கைதிகள் தமது விடுதலைக்கு கரம் நீட்டுமாறு கோருகின்றனர்

By Vilani Peiris
23 March 2001

Use this version to print

இலங்கையில் இரண்டு வருடங்களுக்கு மேலாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெருந்தோட்டப் பகுதியைச் சேர்ந்த ஆறு தமிழ் இளைஞர்கள் அவர்களின் விடுதலைக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சோசலிச சமத்துவக் கட்சிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். இந்த அறுவரும் கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜரான போது வழக்கு விசாரணை மேலும் 11 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அறுவரும் கையொப்பமிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "எங்களைப் பாதுகாப்பதில் நீங்கள் உறுதியாக நிற்பீர்கள் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். 1998 முதல் நாங்கள் பிணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு நிலைமையில், எங்களுடைய வழக்கு நீண்ட காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டமை, இலங்கை அரசாங்கம் எங்கள் மீது அநீதியான முறையில் திணித்த ஒன்றாகும்.

"மலையக அரசியல் கட்சிகளின் (தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகள்) அலுவலகங்களுக்கு உதவிகோரி நாம் வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் இதைக் கணக்கெடுக்காதது ஏன் என்பது புரியவில்லை... எங்களது சுதந்திரத்தை உறுதி செய்துகொள்ள நீதிமன்றத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறியோம். ஆதலால் எங்கள் சார்பாக அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உங்களை வேண்டுகிறோம்."

1998ம் ஆண்டு இலங்கையில் மத்திய மலையகப் பிரதேசமான அட்டனுக்கு அருகாமையில் உள்ள தேயிலைத் தொழிற்சாலை மீதான குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த ஆறு இளைஞர்களும் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் "தமிழீழ விடுதலைப் புலி (LTTE) சந்தேக நபர்களாக" தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு சித்திரவதைகளுக்கும் விசாரணைகளுக்கும் உள்ளாகினர். 1999 ஜூலையில், எந்த விளக்கமும் இன்றி, முதலில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை விலக்கிக் கொண்டு, பொலிசார் தொடர்பற்ற ஒரு தொகை குண்டுத் தாக்குதல்களுக்கான குற்றச்சாட்டுக்களை இப்போது சுமத்தியுள்ளனர்.

இந்த அறுவரும் இக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர். அவர்கள் எவராலும் எழுதவோ வாசிக்கவோ முடியாத சிங்கள மொழியில் எழுதப்பட்டதும், சித்திரவதைகளின் மூலம் பெறப்பட்டதுமான ஒப்புதல் வாக்குமூலங்களே இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாகும். இந்த வழக்கு தற்போது ஆறு வெவ்வேறான சந்தர்ப்பங்களில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26ம் திகதி நீதிபதி "கடமை விடுமுறையில்" சமூகமளிக்காத அதே வேளை வழக்கின் பிரதான சாட்சியின் இருப்பிடமே தெரியவில்லை. பெப்பிரவரி 15ம் திகதி புதிதாக நியமனம் பெற்ற நீதிபதி வழக்கை 2002 ஜனவரி 16ம் திகதி வரை ஒத்திவைத்தார்.

இந்த ஆறு கைதிகளது பெயர்கள் வருமாறு: சுப்பு உதயகுமார், பிச்சமுத்து சந்திரன், அருணாசலம் யோகேஸ்வரன், சோலமலை லோகநாதன், பொன்னையா சரவணக்குமார், சாமிமுத்து பெனடிக்ட்.

இவர்கள் இப்போது இலங்கையின் தலைநகரமான கொழும்புக்கு தெற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மோசமான களுத்துறைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 1997 டிசம்பரிலும், மீண்டும் 2000 ஜனவரியிலும், சிறைச்சாலையினுள் உள்ள நிலைமைகளுக்கு எதிராக தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை சிறை அதிகாரிகள் வன்முறையின் மூலம் ஒடுக்கினார்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஐந்து பேர்வரை கொல்லப்பட்டதோடு டசின் கணக்கானோர் காயமடைந்தனர்.

300க்கும் மேற்பட்ட தமிழ் கைதிகள் பயங்கரமான நிலைமைகளின் கீழ் இந்த சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலை கட்டிடத்துக்குள்ளான நிலைமைகள் மிகவும் மோசம் அடைந்து வருவதாக சில கைதிகள் மனித உரிமை அமைப்பு ஒன்றுக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். மேல் மாடியின் 'டி' வகுப்பின் மலசலம் அடித் தளத்துக்கு கசிவதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். பல வாட்டுகளுக்கு மின் வெளிச்சம் கிடையாது. உறவினர்களால் அனுப்பப்படும் கடிதங்கள் மிகவும் தாமதமாகவே அவர்களை வந்தடைகின்றது.

மார்ச் 3ம் திகதி சோசலிச சமத்துவக் கட்சி ஹட்டனில் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தின் போது, கைதிகளின் உறவினர்கள் கட்சியின் பிரச்சாரத்துக்கு ஆதரவை வழங்கிய அதேவேளை, வழக்கு தொடர்பான சோ.ச.க.வின் அறிக்கையை தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் விநியோகிப்பதிலும் பங்குகொண்டார்கள். தடுத்து வைப்பு பற்றியும் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களைப் பற்றியும் WSWS நிருபர்களிடம் பலர் உரையாடினர்.

கடந்த ஜூன் மாதம் தனது மனைவி இறந்ததற்கான முக்கிய காரணம், மகன் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட ஆழ்ந்த துயரமே என சந்திரனின் தந்தை விளக்கினார். துக்கத்தில் ஆழ்ந்த உதயகுமாரின் மூத்த சகோதரி 1999 மே மாதம் காலமான அதேவேளை, சரவணகுமார் கைது செய்யப்பட்டதன் காரணமாக அவரின் தாயார் மனநோயாளியாகி உள்ளார். குடும்பத்தின் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாமல் யோகேஸ்வரனின் சகோதரன் கடந்த டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

58 வயதான ஓய்வுபெற்ற கள அலுவலரும் சரவணகுமாரின் தந்தையுமான பொன்னையா தனது குடும்பத்துக்கு தற்போது எந்த வருமானமும் கிடையாது எனக் குறிப்பிட்டார். 1998 ஜூன் மாதம் அவரது மகன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் (UPF) தலைவரும், அன்றைய பிரதி அமைச்சருமான பி.சந்திரசேகரனை சந்தித்த பொன்னையா தனது மகனின் கைது தொடர்பாக முறையிட்டார். இதே காரணத்துக்காக அவர் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் (CWC) தலைவருமான ஆறுமுகம் தொண்டமானையும் சந்தித்தார். இந்த அனைத்துக்கும் பின்னர் சரவணகுமாருக்காக ஒரு வழக்கறிஞரை மாத்திரம் ஆஜராகுமாறு சந்திரசேகரன் வேண்டிக் கொண்டார்.

தனது மகனை விசாரணைக்குட்படுத்த வேண்டும் எனக் கூறி நள்ளிரவு பொலிசார் கைது செய்ததாக 66 வயதான உதயகுமாரின் தந்தை குறிப்பிட்டார். அடுத்த நாள் தனது மகன் திரும்பி வராததால், அவருக்கு என்ன நடந்தது என்பதை பொலிசில் விசாரிக்க முயன்ற போதும், எந்தப் பிரயோசனமும் கிட்டவில்லை. அவர் பத்திரிகையின் மூலமாக மாத்திரமே தனது மகன் கொழும்பில் பொலிஸ் கட்டுப்பாட்டில் உள்ளார் என அறிந்து கொண்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரை உதயகுமாரின் தந்தை சந்தித்தபோது அவர்கள் அவரை திட்டி பேசி குறிப்பிட்டதாவது: "அவன் எதுவுமே செய்யவில்லை என நீ சொல்கின்றாய். ஆனால் பொலிசும் பத்திரிகைகளும் அவர்கள் ஆயுதம் வைத்திருந்ததாக குறிப்பிடுகின்றன. யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்பது எமக்கு எப்படித் தெரியும்? அவர்கள் உண்மையைத் தெரிந்து கொள்வதற்காக எந்த கவலையும் அடையவில்லை.

66 வயதான சந்திரனின் தந்தையான பிச்சமுத்து சுருக்கமாக குறிப்பிட்டதாவது: "எங்களது அற்ப வருமானத்தில் எங்கள் குடும்பத்தால் வாழமுடியாத அதேவேளை, சில சந்தர்ப்பங்களில் எங்களுக்கு சாப்பாட்டுக்குக் கூட பணம் கிடையாது. எனது மகனைப் பார்ப்பதற்கும் கூட நாங்கள் பணம் செலவு செய்ய வேண்டும்." அவர் தேசியத் தொழிலாளர் சங்கத்தின் அதிகாரிகளை சந்தித்தபோது, இது பெருந்தோட்டம் சம்பந்தமான பிரச்சினை அல்ல எனக் கூறி எதையும் செய்வதற்கு மறுத்துவிட்டனர்.

1994ல் கைது செய்யப்பட்ட யோகேஸ்வரன் இதே குற்றச்சாட்டுகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரது வழக்கறிஞரின் வலியுறுத்தல் காரணமாக குற்றவாளி என ஒப்புக்கொண்டு, ரூபா 6,000 குற்றப் பணம் செலுத்தி விடுதலையானார். அவரது தந்தையான அருணாச்சலம் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி ஆகிய இரண்டும் முன்னைய குற்றச்சாட்டில் தொங்கிக் கொண்டு எதையும் செய்ய மறுத்ததாக விளக்கினார். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அவருக்கு கூறியதாவது: "அவன் புலி இயக்கத்தின் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ளான். எங்களால் எதுவுமே செய்யமுடியாது" என்பதாகும்.

ஹட்டன் அறுவரையும் விடுலை செய்யக் கோரி சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்ட புதிய கண்டனக் கடிதங்களின் பிரதிகளை சோ.ச.க. பெற்றுக் கொண்டுள்ளது.

கொழும்பு பல்கலைக் கழகத்தின் வரலாறு, அரசியல் விஞ்ஞானத் துறை பேராசிரியர் ஜோர்ஜ் கூரே எழுதியதாவது: "இந்தக் கைதிகளின் தடுப்புக்காவல் காலம் மேலும் ஒரு வருடம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். பயங்கரவாதத் தடைச் சட்ட சரத்துக்களை அரசாங்கம் தமிழ் தொழிலாளர்களை விசாரணையின்றி நீண்ட காலம் தடுத்து வைக்கப் பயன்படுத்துகிறது என்பது இந்த வழக்கில் இருந்து தெளிவாகின்றது. இது அவர்களின் அடிப்படை மனித உரிமைகளும், அடிப்படை உரிமைகளும் அடியோடு மீறப்பட்டுள்ளதை காட்டுகின்றது. தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக இனவாத யுத்தம் ஒன்றை நடாத்தும் அதே வேளை, அதிகாரிகள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை நாசம் செய்வதற்கு யுத்தத்தினை சாட்டாக்கி கொண்டுள்ளார்கள்."

சமூக சேவைகளுக்கான நிலையத்தின் அருட் தந்தை எஸ்.மரியா அந்தோனி எழுதியதாவது: "இந்த அறுவருக்கும் எதிரான வழக்கு ஒழிவு மறைவு அற்ற ஒடுக்குமுறையாகும். பலாத்காரமான முறையில் குற்ற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆகவே நான், சமுக சேவைகளுக்கான நிலையத்தின் சார்பில் அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு உங்களிடம் வேண்டுகின்றேன்."

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சி.ஜயதுங்க எழுதியதாவது: "பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களின் கீழ் சந்தேக நபர்களை தடுத்து வைத்து அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை நாசம் செய்வதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கும் அதே வேளை அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோருகின்றேன்."

அறுவரின் விடுதலையைக் கோரி மூன்று தோட்டத் தொழிலாளர்களும் சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள். பி.இராசையா மற்றும் கே.கணபதிபிள்ளை ஆகியோர் நோர்வூட் பிளான்டேசன், நோர்வூட் தோட்ட மேல் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆர்.முனியான்டி ஹட்டனுக்கு அருகாமையில் உள்ள டன்பார் தோட்டத்தைச் சேர்ந்தவர்.

இலங்கையிலும் அனைத்துலகிலும் உள்ள எமது அனைத்து வாசகர்களையும் ஹட்டன் அறுவரையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யக் கோரி இலங்கை சட்டமா அதிபருக்கு கண்டனக் கடிதங்களை அனுப்பி வைக்குமாறு நாம் வேண்டுகிறோம்.

The Attorney General
Attorney General's Department
Colombo 12
Sri Lanka
Fax: 0094-1-436421

உங்கள் ஆட்சேப கடிதங்களில் பின்வரும் வழக்கு இலக்கங்களையும் குறிப்பிடவும்.

கண்டி உயர் நீதிமன்றம்: NJ -1290/99, NJ 1291/99, 1292/99 and NJ 1295/99

பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பி வைக்கவும்:

Socialist Equality Party
No 90
1st Maligakanda Lane
Colombo 10
Sri Lanka
Fax: 0094-75-354832

உலக சோசலிச வலைத் தளம்

மின்னஞ்சல்: editor@wsws.org