World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை

Sri Lankan rupee plunges following currency free float

நாணயத்தை சுதந்திரமாக மிதக்க விட்டதைத் தொடர்ந்து இலங்கை ரூபா தலை மூழ்கிப் போகிறது

By K. Ratnayake
10 February 2001

Use this version to print

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கம் நாட்டின் வளர்ச்சி கண்டு வரும் சென்மதி நிலுவை பற்றாக்குறை நெருக்கடியை தவிர்த்து, வெளிநாட்டு கையிருப்புகள் கரைந்து போவதை தடுக்கும் ஒரு முயற்சியில் ரூபாவை மிதக்கவிடச் செய்தது. அன்று தொடக்கம் நாணயம் ஆழமாக வீழ்ச்சி கண்டு போனதோடு அரசாங்கத்தை சந்தை சீர்திருத்தங்களை உக்கிரமாக்கும் படியும் செலவீனங்களை வெட்டிச் சரிக்கும் படியும் நாட்டின் நீண்டு வரும் உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவுகாண பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறும் நெருக்கிக் கொண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஜனவரி 23ம் திகதி நடைமுறையில் இருந்து வந்த நிர்வகிக்கப்பட்ட செலாவணி விகித கட்டுப்பாட்டுக்கு முடிவுகட்டி ரூபாவை சுதந்திரமாக மிதக்க விடுவதாக அறிவித்தது. தவிர்க்க முடியாத சமயங்களில் மட்டும் அது தலையிடும் என்பதை மத்திய வங்கி காட்டிக் கொண்டது. வெளிநாட்டு நாணய கையிருப்புக்கள் கரைந்து போவதைத் தடுக்கும் நடவடிக்கையாக மத்திய வங்கி ஒரு தொகை நாணய நடவடிக்கைகளையும் அறிவித்தது. இதில் வெளிநாட்டு ஏற்றுமதி வருமானம் மூலம் கிடைக்கும் சம்பாத்தியத்தை வெளியே அனுப்புவதற்கான 90 நாள் காலக்கெடுவும் அடங்கும். அத்தோடு வர்த்தக வங்கிகளின் கடன் வட்டி வீதத்தை 20ல் இருந்து 23 வீதமாக உயர்த்தியது.

எவ்வாறெனினும் இரண்டு நாட்களுள் ரூபா ஒரு கட்டத்தில் படுமோசமாக வீழ்ச்சி கண்டது. அமெரிக்க டாலருக்கு 85 ரூபாய்களாக விளங்கிய ரூபா ஒரு கட்டத்தில் 99 ரூபாய்களை எட்டியது. இது 17 சதவீத ரூபா மதிப்பிறக்கமாகும். இந்த வீழ்ச்சியின் ஒரு கட்டத்தில் மத்திய வங்கி எச்சரிக்கை விடுக்கத் தள்ளப்பட்டது. ஊகக்காரர்களுக்கு எதிராக தலையீடு நடாத்தி, ரூபாவைக் காக்க மத்திய வங்கி தள்ளப்படும் என அது எச்சரித்தது. கடந்த வார இறுதியில் இந்த வீதம் குறைந்த பட்சம் தற்காலிகமாகவேனும் ஸ்திரப்பட்டது. அமெரிக்க டாலர் 89-90 ரூபாய்களாக விளங்கியது.

இந்தக் கட்டுப்படுத்தப்படாத ரூபா வர்த்தகப் பற்றாக்குறையை குறைத்து, ஏற்றுமதிகளை 10 சதவீதத்தினால் அதிகரிக்கும் எனவும் இதன் மூலம் இவ்வாண்டு இறுதியில் நாட்டின் சென்மதி நிலுவையை உபரி நிலைக்கு கொணரும் எனவும் மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. எவ்வாறெனினும் தனிப்பட்ட ஆய்வாளர்கள் இதையிட்டு பெரிதும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். உயர்ந்த வட்டி வீதமும் நுகர்ச்சி மீதான பணமதிப்பிறக்கத்தின் தாக்கங்களும் யுத்தத்தின் பெரும் செலவீனமும் அமெரிக்க பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் இலங்கையில் ஒரு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் என இவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத் தொடர்பு சாதனங்கள், பல வர்த்தகர்கள் ரூபா மீதான இந்தக் கட்டுப்பாட்டை நீக்கியதை வரவேற்பதாக செய்திகள் வெளியிட்டன. இலங்கை வணிக கழகத்தின் தலைவர் (Ceylon chamber of commerce) சந்திர ஜயரத்ன கூறியதாவது: "இது ஒழுங்கு முறையாக அமுல் செய்யப்படின் இதனால் இறுதியில் இலாபம் காண்போர் தனியார் துறையினரே" என்றார். ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமைப் பணிப்பாளர் இதையிட்டு கருத்து தெரிவிக்கையில் இது "அனாவசியமான விரயங்களை தடுத்து" "ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும்" என்றார்.

ஏனையோர் இதையிட்டு இந்தளவுக்கு ஆர்வம் காட்டாததோடு இந்த நிலையற்ற நாணய மாற்று வீதத்தினால் உருவாகியுள்ள தடுமாற்றத்தையிட்டு முறைப்பட்டுக் கொண்டனர். கொழும்பு பங்கு முதல் சந்தை தொடர்ந்து ஸ்தம்பித்து போயுள்ளது. பங்கு முதல் சந்தை தரகர் ஒருவர் இதையிட்டு தொடர்பு சாதனத்துக்கு கருத்து வெளியிட்ட போது "நாம் செத்து மடிந்து போன ஒரு பங்குச் சந்தையில் விளையாடிக் கொண்டுள்ளோம்" என்றார். மத்திய வங்கியின் மூலதன, நாணய கட்டுப்பாடுகளும் வர்த்தகர்களிடம் இருந்து எதிர்ப்புகளை தூண்டிவிட்டுள்ளது.

ரூபாவின் ஈடாட்டம் கண்ட நிலையும் ரூபாவை மிதக்க விடுவது என்ற தீர்மானமும் நாட்டின் பொருளாதார, அரசியல் நெருக்கடியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. கடந்த ஆண்டு இறுதியில் இலங்கையின் வெளிநாட்டு வைப்புகள் 950 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அல்லது ஆறு வாரங்களுக்கான இறக்குமதிகளை மட்டும் ஈடு செய்யக் கூடியதாக வீழ்ச்சி கண்டது. இது ஒரு 45 சதவீத வீழ்ச்சியாகும். முக்கியமாக எண்ணெய் விலை அதிகரிப்பு, இராணுவ செலவினத்தின் பிரமாண்டமான அதிகரிப்பு காரணமாக இது ஏற்பட்டது.

கடந்த ஆண்டில் இலங்கை இராணுவம் விரகி முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு முகாம் உட்பட ஒரு தொகை பெரும் தோல்விகளை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கண்டது. மேலும் தோல்விகளை தவிர்க்கும் பொருட்டு பொதுஜன முன்னணி அரசாங்கம் பெருமளவு பணத்தை அள்ளி வீசியது. புதிய இராணுவ விமானங்கள், ரோந்து படகுகள், பீரங்கிகள், பல்குழல் ஏவுகணைகள் என்பவற்றை கொள்வனவு செய்தது. பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் 52.43 பில்லியன் ரூபாய்களிலிருந்து 83 பில்லியன் ரூபாய்களாக -50 சத வீதத்தினால் அதிகரித்தது.

இராணுவ கொள்வனவுகள் நாட்டின் மேலதிக எரிபொருள் செலவான 400 மில்லியன் டாலர்களுடன் சேர்ந்து வர்த்தகப் பற்றாக்குறையை 1.3 பில்லியன் டாலர்களாக உயர்த்தியது. 2000 ஆண்டுக்கான சென்மதி நிலுவைப் பற்றாக்குறை 516 மில்லியன் டாலர்களாகியது. கடந்த ஜூனில் இருந்து மத்திய வங்கி நான்கு குட்டி பணமதிப்பிறக்கத்தைச் செய்தது. இது மொத்தத்தில் 10 சதவீதமாக விளங்கியதோடு ரூபாவை 2001 ஜூனில் மிதக்க விடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பொருளாதார நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்ததால் பொதுஜன முன்னணி அரசாங்கம் இந்த திட்டத்தை 6 மாதங்களுக்கு முன்னரே நடைமுறைக்கிடத் தள்ளப்பட்டது.

சர்வதேச நாணய நிதியம் (IMF) சில காலமாக ரூபாவை கட்டுப்பாடின்றிச் செய்யும்படி நெருக்கி வந்தது. இந்த ரூபாவை மிதக்கவிடும் தீர்மானம் அறிவிக்கப்பட்ட சமயம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவர் ஜெரமி கார்ட்டர் தலைமையிலான ஒரு தூதுக் குழு இலங்கையில் இருந்து வந்தது. இந்த தீர்மானத்தை பாராட்டும் வகையில் ச.நா.நி. வெளியிட்ட அறிக்கை கூறியதாவது: "புதிய செலாவணி ஏற்பாடுகள் பரந்த சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு அமையச் செய்யப்பட்டது. பிடியைத் தளர்த்துவது என்ற மத்திய வங்கியின் தீர்மானம் காலோசிதமானது அத்தோடு சந்தையால் பெரிதும் வரவேற்கப்பட்டதாகும்."

அரசாங்கத்துக்கு ச.நா.நி. (IMF) நிதிகள் பெரிதும் அவசியப்படுகின்றது. இராணுவக் கொள்வனவுகளின் பேரில் பெறப்பட்ட உயர்ந்த மட்ட பகிரங்க கடன்கள் நிதிச் சந்தையை காய்ந்து போகச் செய்துள்ளது. சமீப மாதங்களில் ஒரு திரவ நெருக்கடியை (Liquidity crisis) சிருஷ்டித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு வட்டி வீதத்தை 13 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக அதிகரிக்கத் தள்ளியது. ச.நா.நி. உதவியும் கடன்களும் இல்லாமல் அரசாங்கம் புதிய வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிப்பது சங்கடமானது. நாட்டின் வெளிநாட்டு இருப்புகளை அதிகரிக்கவும் ஏனைய மூலங்களில் இருந்து மேலும் கடன்களை பெறவும் இது அவசியம்.

தொடர்பு சாதனங்களின்படி இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 450-500 மில்லியன் டாலர் கடன்களை பெற பேரம் பேசி வருகின்றது. அத்தோடு ஒரு ச.நா.நி. தூதுக்குழு அரசாங்க நிதியங்களை மீளாய்வு செய்ய இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. தற்சமயம் நாட்டின் நிதிச் சந்தைகளில் குழப்பமான மெளனம் நிலவுகின்றது. இது மார்ச் மாதமளவில் ச.நா.நி. கடன் வழங்கும் என்பதையும் மத்திய வங்கி ரூபாவை ஸ்திரம் அடையச் செய்யும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

எவ்வாறெனினும் ச.நா.நி. கடன் நிபந்தனைகள் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தும். இலங்கையிலுள்ள ச.நா.நி. ன் பிரதம பிரதிநிதியான கலாநிதி நடீம் உல்ஹக் கடந்த வாரம் டெயிலி மிரர் பத்திரிகைக்கு கூறியதாவது: அடுத்த வரவு செலவுத் திட்டம் "மேலும் ஸ்திரப்பாட்டை உண்டு பண்ணும் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் பிரதிபலிக்கும். தற்போதைய மூலதனச் செலவீனங்களைக் குறைந்தது வளர்ச்சிக்கான சாத்தியங்களை மேலும் அதிகரிக்கும் அடிப்படை சீர்திருத்தங்களை அறிவிக்கும்" என்றது.

ச.நா.நி. யின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, அரசாங்கம் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை வெட்ட வேண்டும் என்பதாகும். இது கடந்த ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 9.7 வீதமாக விளங்கியது. இது இராணுவச் செலவுகளை வெட்டித் தள்ளுவதைக் குறிக்கும். யுத்தம் நிறுத்தப்பட்டு,. பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வு எட்டப்படும் நிலையில் மட்டுமே இது சாத்தியமாகும். கொழும்பு இராஜதந்திரி ஒருவர் ஏ.எப்.பீ. செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: "அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதற்கான ஒரு உந்து காரணியாக பொருளாதாரச் சித்திரம் இருந்து கொண்டுள்ளது" என்றுள்ளார்.

ஒரு தனியார் ஆய்வு நிறுவனமான மார்கா நிறுவனத்தினால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை யுத்தம் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தியுள்ள காய்வனவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்த யுத்தம் 60000 உயிர்களை பலிகொண்டுள்ளதோடு இன்னும் பலரை அங்கவீனர்கள் அல்லது அகதிகள் ஆக்கியுள்ளது. 1983-1998ம் ஆண்டுகளில் அரசாங்கத்துக்கான நேரடி யுத்தச் செலவு 295 பில்லியன் ரூபாக்கள். மேலதிக இராணுவச் செலவீனம் 213 பில்லியன் ரூபாய். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட மற்றொரு 40 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டது. இதே காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) இராணுவச் செலவீனம் 42 பில்லியன் ரூபாய்கள் என மார்கா நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.

ஒரு தீர்வை எட்டும் வகையில் பொதுஜன முன்னணி அரசாங்கத்தையும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியையும் ஒன்றிணைந்து செயற்படச் செய்யும் விதத்திலான ஒரு தொகை இராஜதந்திர நடவடிக்கைகளை கடந்த ஆண்டு அவை தரிசித்தன. கடந்த வாரமே நோர்வேயின் சிறப்பு தூதுவரான எறிக் சொல்ஹெயிம் அரசாங்கத்துடனும் எதிர்க்கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடனும் இறுதி சுற்று பேச்சுவார்த்தைகளை நடாத்தியதன் பின்னர் கொழும்பில் இருந்து புறப்பட்டார். சகல பெரும் வல்லரசுகளும் 17 வருட கால மோதுதல்களை ஒரு முடிவுக்கு கொணர நெருக்கி வருகின்றன. இது இந்தியத் துணைக் கண்டத்தின் வேறு பகுதிகளில் ஈடாட்டம் கண்ட நிலைமையை சிருஷ்டிக்க இடைவிடாது அச்சுறுத்திக் கொண்டுள்ளது.

யுத்தம் வெளிநாட்டு முதலீடுகளை கவருவதற்கு ஒரு தடையாகிவிட்டதால் இலங்கையில் உள்ள பெரும் வர்த்தக நிறுவனங்களில் சில பகுதியினரும் பொதுஜன முன்னணியையும் யூ.என்.பி.யையும் யுத்தத்தை முடிவுக்கு கொணரும்படி நெருக்கி வருகின்றனர். அனைத்து பெரும் வர்த்தக, நிதி அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்யும் வர்த்தக பொதுமன்றத்தின் (Business Forum) தலைவர்கள் பெப்பிரவரி 19ம் திகதி ஜனாதிபதியை சந்திக்கவும் ஒரு தீர்வுக்கான தமது அழைப்பை புதுப்பிக்கவும் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறெனினும் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான எந்த ஒரு கொடுக்கல் வாங்கலையும் கடுமையாக எதிர்க்கும் சிங்கள தீவிரவாதக் குழுக்களின் நெருக்குவாரங்களுக்கும் முகம் கொடுத்துள்ளது.

இதே சமயம் ரூபா மிதக்க விடப்பட்டமை வேலையின்மையாலும் பணவீக்கத்தினாலும் பெரிதும் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர், கிராமப்புற ஏழைகளிடையேயான விரக்தியை உக்கிரமாக்கும். விலைவாசிகள் ஏற்கனவே அதிகரித்துவிட்டன. ஜனவரி மாதத்துக்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 104.5 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. 2797.5 விலைச் சுட்டெண்களாகியுள்ள இந்த அதிகரிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து ஒரு 16.2 சதவீத அதிகரிப்பாகும். அரிசி, சீனி, பருப்பு, பால்மா, மருந்து பொருட்களின் விலைகள் 15-30 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. கையிருப்பு முடிவடைந்ததுதான் தாமதம் இப்பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபை எதிர்வரும் மார்ச் மாதத்தில் இருந்து மின்கட்டணங்களை 25 சதவீதத்தினால் அதிகரிக்க உள்ளது. ஷெல் எரிவாயு கம்பனி கைத்தொழில் எரிவாயு விலையை 35 சதவீதத்தினால் கூட்டியுள்ளது. ஐலண்ட் பத்திரிகைக்கு நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்த அறிக்கையின்படி மண்ணெண்ணை விலையை 40 வீதத்தினாலும் டீசல் விலையை 20 சதவீதத்தினாலும் உயர்த்த பிரேரிக்கப்பட்டுள்ளது. இவை போக்குவரத்து கட்டணங்களை மேலும் அதிகரிக்கும். சகல மருந்து வகைகளும், கருவிகளும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் சுகாதார சேவையும் ஆஸ்பத்திரிகளும் ரூபாவின் மதிப்பிறக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

சனத்தொகையில் அரைவாசிப் பங்கினர் அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு திட்டத்தில் தங்கியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் அவர்கள் மாதாந்தம் ரூபா 750-1000 க்கும் இடையே பெறுகின்றனர். உத்தியோகபூர்வமான தகவல்களின்படி வடக்கு- கிழக்கு யுத்த பிராந்தியங்களைத் தவிர 25 சதவீதமான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இதில் யுத்த பிராந்தியங்களில் உள்ள மக்களும் சேர்க்கப்படுமிடத்து இப்புள்ளி விபரம் பிரமாண்டமான முறையில் அதிகரிக்கும்.

விலைவாசி உயர்வைத் தொடர்ந்து தொழிலாளர்களிடையே வளர்ச்சி கண்டுவரும் அதிருப்தியை எதிர்கொண்ட அரசாங்கச் சார்பு தொழிற்சங்கத் தலைவர்கள் சம்பளத்தை அதிகரிக்கும்படி கோர கடந்த வாரம் ஜனாதிபதியைச் சந்தித்தனர். சமீபத்தில் எந்த விதமான சம்பள உயர்வும் வழங்குவதற்கு இல்லை என குமாரதுங்க கைவிரித்ததைத் தொடர்ந்து இத்தலைவர்கள் வெறுங்கையுடன் திரும்பினர். ஜனாதிபதி இந்த விடயத்தை தனது சுதந்திர தின விழா உரையிலும் வலியுறுத்தினார். "மேலும் மேலும் வழங்கும்படி கோருவதற்கு இது நேரம் அல்ல. நாம் அனைவரும் கொடுப்பதற்கான காலம் இதுவே" என அவர் தெரிவித்தார்.

எந்த ஒரு சம்பள உயர்வும் அனைத்துலக கடன்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை குறைக்கும் என்பதை குமாரதுங்க நன்கு அறிவார். அரசாங்கம் அடிப்படை பண்டங்கள் மீது விலைக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தி வருகின்றது. தனியார்மயத்தை அதிகரிக்கும்படியும் சமூக சேவைகளை வெட்டும்படியும் தனிப்பட்ட தொழில் கொள்வோரின் நலன்களின் பேரில் நாட்டின் தொழிற்சட்டங்களை மாற்றியமைக்கும்படியும் ச.நா.நி. வலியுறுத்தி வருகின்றது. இவை சட்டமாக்கப்படின் இந்நடவடிக்கைகள் வேலையின்மையையும் வறுமையையும் பெருமளவில் உக்கிரம் அடையச் செய்யும்.