World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Freed Tamil detainees speak:

"The conditions in Sri Lanka were exposed before the international community"

விடுதலை செய்யப்பட்ட தமிழ் கைதிகள் பேசுகிறார்கள்:

"இலங்கையில் உள்ள நிலைமைகள் அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தப்பட்டன"

By Vilani Peiris
3 September 2001

Use this version to print

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் பெறுபேறாக கடந்த மாதம் விடுதலையான நான்கு தமிழ் கைதிகள் தங்களுடைய அனுபவங்களைப் பற்றி உலக சோசலிச வலைத் தளத்துக்கு பேட்டியளித்தனர். இவர்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) உறுப்பினர்கள் எனவும் அட்டன் பிரதேசத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேலாக விசாரணைகள் எதுவுமின்றி சிறைவைக்கப்பட்டிருந்தனர். பொலிசாரின் சித்திரவதைகள் மூலம் கறந்துகொள்ளப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் மாத்திரமே இவர்களுக்கு எதிரான ஒரே சாட்சியாகும்.

சுப்பு உதயகுமார், 29, சாமிமுத்து பெனடிக்ட், 27, பிச்சமுத்து சந்திரன், 27, சோலமலை லோகநாதன், 33, ஆகியோரே இந்த நால்வருமாவர். மேலும் இருவர் -அருணாசலம் யோகேஸ்வரன், பொன்னையா சரவனகுமார்- இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதோடு சோ.ச.க. அவர்களின் உடனடியான நிபந்தனையற்ற விடுதலைக்காக தமது பிரச்சாரத்தை தொடர்கின்றது.

அவர்கள் ஊக்கத்துடனும் திடசங்கட்பத்துடனும் பேசுகையில் குறிப்பிட்டதாவது: "நாம் மீண்டும் பொலிசிலும் சிறையிலும் தடுத்து வைக்கப்பட்டு ஒரு கடும் சோதனையிலிருந்து விடுதலையானதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாம் இப்போது பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் மக்களுடனும் இருக்கிறோம். நாம் உயிருடன் வெளியே வருவோம் என எதிர்பார்க்கவில்லை. நாங்கள் பொலிஸ் காவலின்போது மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளானதோடு சிறைச்சாலைகளில் இரண்டு கொலைத் தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்தோம். சிறைச்சாலையினுள் ஏனைய கைதிகள் கொல்லப்பட்டபோது நாங்கள் தப்பிக்கொள்ளக் கூடியதாக இருந்தது. எவ்வாறெனினும் இறுதியாக பொதுஜன முன்னணி அரசாங்கம் எங்களை விடுதலை செய்யத் தள்ளப்பட்டது. இது உலக சோசலிச வலைத் தளத்தினதும் சோசலிச சமத்துவக் கட்சியினதும் பிரச்சாரத்தின் ஒரு பெறுபேறாகும்."

இந்த நால்வரும் எவ்வாறு கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் என்பதை தெளிவுபடுத்தினர்: "1998 ஜூன் 6ம் திகதி சந்திரனை பொலிஸ் நிலையத்துக்கு வருமாரு கூறி அங்கு அவரைக் கைது செய்தனர். இதே காரணத்துக்காக ஜூன் 11ம் திகதியும் 12ம் திகதியும் பொலிஸ் நிலையம் சென்ற உதயகுமார் மீண்டும் வீடு திரும்பினார். ஆனால் நள்ளிரவு 11.30 அல்லது 12 மணி அளவில் அவரது வீட்டுக்கு வாகனத்தில் விரைந்த பொலிசார் அவரைக் கைது செய்தனர். ஏனையவர்களும் அதே தினம் கைதுசெய்யப்பட்டார்கள்.

"பின்னர் நாங்கள் அனைவரும் கண்டி விசேடப் புலனாய்வுப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டோம். அங்கு நாங்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டோம். நாள் முழுதும் எங்களது கைகளும் கால்களும் மேசையோடு இணைத்துக் கட்டப்பட்டிருந்தன. அன்று எங்களுக்கு சாப்பாடு கிடையாது. உப பொலிஸ் பரீட்சகர் ரபாய்டீனும் சார்ஜன்ட் தென்னகோன் மற்றும் பொன்சேகாவும் கண்டி பொலிஸ் நிலையத்தில் இருந்த ஏனையவர்களும் எங்களைத் தாக்கியது எனக்கு ஞாபகத்தில் உள்ளது. இரண்டு நாட்களின் பின்னர் 6 டைப் செய்யப்பட்ட தாள்களில் (ஒரு அறிக்கை) கையொப்பமிடுமாறு பலாத்காரம் செய்தனர். அவர்கள் மேலும் சித்திரவதைக்கு உட்படுத்துவதால் நாம் கையொப்பமிடத் தள்ளப்பட்டோம். பின்னர் தனித் தனியான பொலிஸ் நிலையங்களில் வைக்கப்பட்டோம்.

ஜூன் 15ம் திகதி கொழும்பில் உள்ள பொலிஸ் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டோம். அங்கு மூன்று மாதம் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம். அவர்கள் பெற்றோலில் நனைக்கப்பட்ட ஒரு சொப்பிங் பேக்கை எங்கள் தலையைச் சுற்றி கட்டியபின் அடித்தனர். ஒரு இரும்புத் தடியில் எங்களைத் தொங்கவிட்டனர். தலையை தண்ணீர் தாங்கிகளில் அமிழ்த்தினர். தலையில் வலி ஏற்படும் வரை கால் விரல்களில் தாக்கினர். மேலும் ஒரு சித்திரவதை முறையான தலையில் பாரமான புத்தகங்களை அடுக்கி வைத்து தாக்குவது எங்களுக்கு உள் காயங்களை ஏற்படுத்தியுள்ளது. எங்களது மர்ம உறுப்புக்கள் லாச்சிக்குள் திணிக்கப்பட்டு நசுக்கப்பட்டன.

இந்த முழு சித்திரவதைகளின் போதும் எங்களை நிர்வானமாகவே வைத்திருந்தனர். நாங்கள் எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதிலையே சொல்ல வேண்டியிருந்தது. 'இல்லை' என சொல்வது தடை செய்யப்பட்டிருந்தது. நினைத்தபோதெல்லாம் நாம் தாக்கப்பட்டோம் -அதி காலையில், நள்ளிரவு நேரங்களில், சாப்பிடும் போது. அவர்கள் (பொலிஸ்) இரவில் குடித்திருந்தால் சித்திரவதைகள் மிகவும் கடுமையானதாக இருக்கும். எங்களுக்கு போதுமானளவு உணவு கிடைப்பதில்லை. சில நேரங்களில் மேலதிக உணவுக்காக கெஞ்ச வேண்டியும் இருக்கும்.

"1998 செப்டம்பர் 3ம் திகதி எங்களை 3 அல்லது 4 டைப் செய்யப்பட்ட தாள்களில் கையொப்பமிடுமாறு கேட்டனர். நாங்கள் எல்லா சித்திரவதைகளையும் தாங்கிக் கொண்டு, மாலை 5 மணிவரை நிராகரித்த போதும் இறுதியாக கையொப்பம் வைத்தோம். ஏனென்றால் இரவு நேரங்களில் குடித்துவிட்டு வந்து எங்களை கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்படுத்துவார்கள் என்பது தெரியும். எங்களது வாக்குமூலங்கள் எனக் கூறி இந்த ஆவனங்களையே சாட்சிக்காக நீதிமன்றத்தில் முன்வைத்தனர். செப்டம்பர் 4ம் திகதி எங்களை மீண்டும் அட்டனுக்கு அழைத்துச் சென்றார்கள். தனது இல்லத்துக்கு போகும் வழியில் எங்களை சந்தித்த மேலதிக நீதவான் இராஜேந்திரன் எங்களைப் பார்க்காமல் கூட தடுத்து வைப்பதற்கான உத்தரவை வழங்கினார்.

"அன்று முதல் மூன்று வருடங்களாக சிறையில் வாடினோம். நாங்கள் சித்திரவதைகளின் காரணமாக கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோம். உதயகுமாரின் ஆண் உறுப்பில் இரத்தம் வடிந்ததால் அவர் ஐந்து நாட்கள் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் அநுமதிக்கப்பட்டிருந்தார். சரவனகுமார் களுத்துறை ஆஸ்பத்திரியில் அநுமதிக்கப்பட்டு மனநோய்க்கு சிகிச்சை பெற்றார். இப்பொழுதும் கூட எங்களுக்கு மூச்செடுப்பது சிரமமாக உள்ளது. வாசிக்கும் போது ஒருமுனைப் படுத்தி வாசிக்க முடியாதுள்ள அதே வேளை அவையவங்கள் சரியாக இயக்கவுமில்லை."

நால்வரும் சிறைச்சாலை வாழக்கையைப் பற்றி விளக்கினர்.

"முதலாவதாக நாங்கள் கண்டி போகம்பரைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். பின்னர் அரசியல் கைதிகள் தனியாக வைக்கப்பட்டனர். ஆனால் அதன் பிறகு எங்களை தீர்ப்பளிக்கப்பட்ட கொலைக் குற்றவாளிகளோடு வைத்திருந்தனர். அவர்கள் கழுவி முடிக்கும் வரை அல்லது ஏனைய வேலைகளை முடிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டியிருந்தது. சில சந்தர்ப்பங்களில் கழிவறைக்குள் சென்றால் மேல் மாடியில் உள்ள கழிவறையின் வாளி நிறைந்து எங்கள் மீது வடியும். ஆனால் அங்கு நீர் பற்றாக்குறையால் எங்களால் கழுவிக்கொள்ளவும் முடியாது.

"களுத்துறைச் சிறைச்சாலை நிலைமைகள் மிகவும் மோசமானதாகும். அது ஒரு நரகம். மேல் மாடி கழிவரையின் கழிவுகள் கீழ் மாடிக்கு கசியும். நாற்றம் தாங்கமுடியாது. அங்கு பெருந் தொகையான மூட்டைப் பூச்சிகள் இருந்தன. D வாட்டு 35 பேருக்கு மாத்திரமே கட்டப்பட்டது ஆனால் அது 74 கைதிகளால் நிரம்பி வழிகிறது. இதே போல் D2 வாட்டில் 30 பேர் மாத்திரமே இருக்க முடியும். அதில் 46 கைதிகள் இருந்தார்கள். ஏனைய வாட்டுகளிலும் இதே நிலைமையே காணப்பட்டது.

"சில வாட்டுகளில் சுவர்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளன. சிறை அதிகாரிகள் 40-50 பேரைக் கொன்று தள்ளுவதாக அடிக்கடி கத்துவார்கள். பழைய சுவர்கள் கைதிகளின் மேல் இடிந்து விழுந்துவிட்டதாக சொல்லிவிடலாம் எனவும் அவர்கள் சொல்வார்கள்.

"களுத்துறைச் சிறைச்சாலையில் மருந்து பற்றாக்குறை அதிகம் நிலவுகிறது. காய்ச்சல், தடிமன், தலைவலி, வயிற்றுவலி உட்பட குருதி அழுத்தத்துக்கும் கூட அஸ்பிரின் அல்லது விட்டமின் B வில்லைகளையே கொடுப்பார்கள். முதலில் எங்களுக்கு வெளியில் மருந்துகளை வாங்கக் கூடியதாக இருந்தது பின்னர் சிறை அதிகாரி அதை தடை செய்துவிட்டார்.

சிறைச்சாலை காவலர்களால் இருவர் கொல்லப்பட்டனர்

"கடந்த வருடம் ஜனவரி மாதம் இடம்பெற்ற களுத்துறைச் சிறைச்சாலை காவலர்களின் திட்டமிட்டப்பட்ட தாக்குதலால் இருவர் கொல்லப்பட்டு 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிலர் மோசமான நிலையில் இருந்தனர். நிராயுதபானிகளான கைதிகள் மீது தொடுக்கப்பட்ட இந்த மிலேச்சத் தாக்குதல் இரண்டு மாதங்களுக்கு மேலாக இருந்து கொண்டிருந்த அரசியல் கைதிகளின் எதிர்ப்பை தகர்ப்பதற்காவே இடம்பெற்றது.

"முதல் நாள் தாக்குதலைப் பற்றி எமக்கு ஒன்றுமே தெரியாது. அது எங்களுக்குத் தெரியாத வாட்டு ஒன்றிலேயே நடந்தது. அவர்களுக்கு (சிறை அதிகாரிகள்) F வாட்டில் இடம்பெற்ற கைதிகளின் உண்ணாவிரதத்தை கலைப்பது அவசியமாகி இருந்தது. அப்போது அங்கு ஜேசுதாசன் என்ற கைதி கொல்லப்பட்டார். எங்களுக்கு மாலை வானொலி செய்தியின் ஊடாகவே அதுபற்றி தெரியவந்தது.

"அடுத்த நாள் ஜனவரி 7ம் திகதி, சம்பவத்தைப் பற்றி சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் கேட்டோம். ஆனால் சிறை அதிகாரி குலதுங்க கமகே வாட்டுக்கு முன் வந்து 'சார்ஜ்' எனக் கத்தினார். கொழும்பில் இருந்து வந்த உத்தியோகத்தர்களுடன் களுத்துறைச் சிறையின் காவலாளிகளும் சேர்ந்து துப்பாக்கி சகிதம் வாட்டுக்குள் நுழைந்து எங்களை தாக்கத் தொடங்கினார்கள். ஸ்ரீகுமார் உண்ணாவிரதத்தில் இருந்தார். அவர் முன்நிலையில் வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். பள்ளிகுமாரை வாளால் வெட்டினர். கிட்டத்தட்ட 10 காவலாளிகள் கன்னக்குமாரை இரும்புக் கம்பிகளால் தாக்கினர். அதன் பின்னர் அவர் மனநிலை பாதிக்கப்பட்டார். குனசேகரத்தின் கால் உடைந்தது. மனித உரிமை அமைப்புகள் எங்களைப் பார்வையிட்டு அறிக்கைகளைப் பெற்றுக்கொண்ட போதிலும் எந்தப் பெறுபேறுகளும் கிடையாது.

ஏனைய கைதிகளைப் பற்றி கேட்டபோது அவர்கள் குறிப்பிட்டதாவது: "அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (Privention of Terrorism Act- PTA) கீழேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். தமிழீழ விடுலைப் புலிகளின் (LTTE) உறுப்பினர் என்பது அனைவருக்குமான ஒரு பொதுக் குற்றச்சாட்டாகும். அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஒத்தி வைப்பதால், அறு ஏழு வருடங்களாக சிறையில் வாடும் கைதிகளும் அங்கு உள்ளனர். குணசேகரன் அங்கு ஆறு வருடங்களாக இருக்கின்றார். அவிஸ்சாவெல்லையைச் சேர்ந்த வீராசாமியும் ஆறு வருடங்களாக அங்கு இருக்கின்றார். மொத்தத்தில் அங்கு கிட்டத்தட்ட 600 கைதிகள் உள்ளனர்."

இலங்கையினுள் அரசியல் கட்சியாகவும் இயங்கிவரும் தோட்டப்புற தொழிற்சங்க தலைமைகளின் நடவடிக்கைகளை இந்த நால்வரும் கடுமையாக விமர்சித்தனர்.

"1999 டிசம்பர் 1ம் திகதி நாங்கள் ஒரு உண்ணாவிரதத்தை ஆரம்பித்தோம். அதிகாரிகள் எங்களை விடுதலை செய்யவேண்டும் இல்லையேல் வழக்குப் பதிவு செய்யவேண்டும் எனக் கோரினோம். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்த முயற்சித்த போதும் நாங்கள் தொடர்ந்தோம். மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி.சந்திரசேகரன் எங்களை பார்வையிட்டார். அவர் சட்டமா அதிபருடனான ஒரு கலந்துரையாடலின் பின்னர் 15 நாட்களுக்குள் பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி கொடுத்தார். சிறைச்சாலை நிலைமைகளை அபிவிருத்தி செய்ய தலையிடுவதாகவும் அவர் மேலும் வாக்குறுதி அளித்தார். ஆகவே நாங்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தினோம். ஆனால் அவர் எதனையும் செய்யவில்லை."

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசைப் பற்றியும் அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமானைப் பற்றியும் கேட்டபோது உதயகுமார் குறிப்பிட்டதாவது: "1994ல் என்னை முதலாவதாக கைதுசெய்த போது நான் ஒரு விடுதலைப் புலி சந்தேக நபராக கைதுசெய்யப்பட்டுள்ளதால் தன்னால் (தொண்டமான்) எதையும் செய்ய முடியாது என எனது பெற்றோரிடம் கூறியுள்ளார். எனவே இந்த முறை எனது பெற்றோர்கள் அவரை தொடர்புகொள்ளவில்லை. ஆனால் ஏனைய பெற்றோர்கள் அவரிடம் சென்றுள்ளார்கள். தாம் தொழிற்சங்கத்தில் உள்ள வேறு ஒருவருக்கு வழக்கை பாரம் கொடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்த நபர் 1,000 ரூபாய் கேட்டதால் பெற்றோர்கள் இ.தொ.கா.விடம் ஆதரவு கோருவதை நிறுத்திக் கொண்டார்கள்.

"இதுதான் இ.தொ.கா.வின் வழமையான நடவடிக்கை. தொண்டமானைச் சந்திப்பதற்கு, கீழ் மாடியில் உள்ளவருக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டும். இறுதியாக நீங்கள் தொண்டமானைச் சந்தித்தாலும் அவர் எதையும் செய்யப் போவதில்லை. பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் தொடர்ச்சியாக இந்த நிலைமைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக" அவர் குறிப்பிட்டார்.

யுத்தம் தொடர்பாக அவரது கருத்தைக் கேட்டபோது உதயகுமார் பின்வருமாறு தெரிவித்தார்: "நாங்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என குற்றம் சாட்டப்பட்டிருந்தோம். யுத்தம் தொழிலாளர்களையும் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளையும் நசுக்குவதற்கான ஒரு ஆயுதமாகும். விடுதலைப் புலிகளால் முதலாளித்துவ அரசாங்கத்துடனும் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்துவதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. விடுதலைப் புலிகளும் ஒரு முதலாளித்துவ வேலைத்திட்டத்தையே கொண்டுள்ளனர்."

இளம் தமிழர்கள் முகம் கொடுக்கும் நிலைமைகளைப் பற்றி பேசும் போது உதயகுமார் பின்வருமாறு குறிப்பிட்டார்: "ஏனையப் பிராந்தியங்களோடு ஒப்பிடுகையில் பெருந்தோட்டக் கல்வி மிகவும் பின்தங்கியதாகும். பெருந்தோட்டப் பாடசாலைகளில் வசதிகள் கிடையாது. இளம் வயதிலேயே சிறுவர்கள் தாம் ஒடுக்கப்படுவதை உணர்கிறார்கள். பல சிறுவர்களுக்கு மனநோய் உள்ளது.

"பாடசாலையை விட்டு வெளியேறியவுடன் தோட்டப்புறத்தில் வேலைகிடைப்பது நிச்சயமான ஒன்றல்ல. தனியார் மயமாக்கலின் (பெருந்தோட்டங்கள்) பின்னர் நீங்கள் சித்தி பெற்றிருந்தாலும் கூட வேலை வாய்ப்பு கிடையாது. சில தோட்டங்கள் வேறு வியாபாரங்களுக்காக விற்றுத்தள்ளப்பட்டுள்ளன. இலாபமடையக் கூடிய தோட்டங்கள் மாத்திரமே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஐந்து அல்லது பத்து வருடங்களில் பெருந்தோட்டங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கப் போவதில்லை. பெரும்பாலான தோட்டப்புற இளைஞர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாததால் அவர்களால் வெளிப் பிரதேசங்களில் தொழில் தேடிக்கொள்வது முடியாத காரியமாகும்.

"எங்களுடைய சொந்த கதையும் கூட பிரச்சினைகளை வெளிக்கொணர்கிறது. லோகநாதன் பல்கலைக் கழகத்துக்கான முதல் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார். இறுதி பரீட்சைக்கான தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போதே அவர் முதலாவதாக கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கல்வி முடிந்து விட்டது. அவருக்கு தொழில் கிடையாது. சந்திரன் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றிருந்த போதும் அவரால் பொருத்தமான ஒரு தொழிலை தேடிக்கொள்ள முடியவில்லை. நான் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரத்தை சிறையில் இருந்து எழுதியபோதும் சித்தி பெறவில்லை. நாங்கள் கைது செய்யப்படும் போது எல்லோரும் தொழிலாளர்களாகவே வேலைசெய்து கொண்டிருந்தோம். பெனடிக்ட் சாதாரணத் தரம் முடித்தவுடன் அருட் தந்தையாவதற்கு தீர்மானித்திருந்திருந்த போதும் அவர் கைது செய்யப்பட்டார்.

தன்னுடைய விடுதலையைப் பற்றி பேசும்போது உதயகுமார் குறிப்பிட்டதாவது: "மூன்று வருடங்களின் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களம் எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்ளத் தள்ளப்பட்டது. சோ.ச.க.வும் உலக சோசலிச வலைத் தளமும் முன்னெடுத்த பிரச்சாரத்தின் காரணமாகவே எங்களுடைய விடுதலை சாத்தியமாகியது. பிரச்சாரத்தின் முக்கியத்துவம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உலக சோசலிச வலைத் தளம் ஒரு அனைத்துலக பிரச்சாரத்தை மேற்கொண்ட போது, அது இலங்கையின் நிலைமைகளை அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தியது. எங்களை விடுதலை செய்வதற்கான பிரச்சாரம் மக்களின் நனவை அபிவிருத்தி செய்தது.

"ஏனைய அமைப்புகளுக்கும் சோ.ச.க.வுக்கும் இடையிலான வித்தியாசம் இதுவாகும்: சோ.ச.க. தொழிலாளர்களதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் அவசியங்களில் இருந்து பிரச்சினைகளை அணுகியது. ஆகவே சோ.ச.க. ஜனநாயக உரிமைகளின் பேரில் முழுமையாக போராடுகின்றது."

இந்த நால்வரும் பிரச்சாரத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர். "எங்களது விடுதலைக்காக அர்ப்பனிப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சோ.ச.க.வுக்கும் உலக சோசலிச வலைத் தளத்துக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அதே போல் எந்த அறிமுகமும் இன்றி எங்களுடைய ஜனநாயக உரிமைகளுக்காக நின்றுவந்த அனைவருக்கும் விசேட நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.