World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஆப்கானிஸ்தான்

A humanitarian catastrophe in the making in Afghanistan

ஆப்கானிஸ்தானில் ஒரு மனிதாபிமான பேராபத்து உருவாகின்றது

By our Correspondents
25 September 2001

Use this version to print

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளதும் இராணுவத் தாக்குதல் தயாரிப்புகள் எந்த வகையிலானதாக இருந்த போதிலும், இரு தசாப்தங்களுக்கும் மேலான உள்நாட்டுப் போர், வரட்சி, நஷ்டம் மற்றும் நீண்டகாலப் பொருளாதாரப் பின்னடைவு போன்றவற்றால் அழிவுக்குள்ளாகியுள்ள இந்த பிற்படுத்தப்பட்ட நாட்டில் மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்கனவே அம்பலத்துக்கு வந்துள்ளன.

ஏறத்தாள மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் அயல்நாடான பாகிஸ்தானிலும் ஈராக்கிலும் எந்தவித அடிப்படைவசதிகளும் அற்ற அகதிமுகாம்களில் வாழ்கின்றனர். ஆப்கானின் சொந்த மதிப்பீட்டின்படி ஒரு மில்லியன் மக்கள் "உள்ளூர் இடம்பெயர் அகதிகளாக" தமது சொந்த நாட்டில் உணவு மற்றும் தங்குமிட வசதிகளின்றி உள்ளனர். கிராமங்களுக்குள் சிக்குண்டுள்ளவர்கள், அடிப்படை வசதிகளின்றியும் தப்பிச் செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் கூட இல்லாத நிலைமையில் தவிப்பதாக் பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தற்போது அமெரிக்க இராணுவ தாக்குதல்களின் பயனாகத் தோன்றியுள்ள பேராபத்துகளும் முஸ்லிம் அடிப்படை வாதிகளான தலிபான் ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் எதிரிகளான வடக்கு கூட்டணிக்கும் (Northern Alliance) இடையில் உக்கிரமடைந்துள்ள சண்டையும் ஆயிரக்கணக்கான மக்களை தெருவில் தள்ளியுள்ளன. ஈரானும் பாகிஸ்தானும் தமது எல்லைகளை மூடியுள்ள போதிலும் 10,000 க்கும் அதிகமான அகதிகள் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளனர். ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துக்கொண்டிருப்பதாகவும் -இந்த தொகை முரண்பாடுகள் விஸ்தரிக்கப்படும் போது திட்டவட்டமாக அதிகரிக்கலாம் என உதவி முகவர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிவரும் தகவல்கள், நகரங்கள் காலியாகிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் தூதரகம் (United Nations High Commission for Refugees- UNHCR) தலிபான் தலைமையகம் அமைந்துள்ள தென்பகுதி நகரான கந்தகாரின் அரைவாசிப் பகுதி காலியாகியுள்ளதாக குறிப்பிடுகின்றது. காபூல் ஜலலாபாத் நகரங்கள் வெறிச்சோடியுள்ளன.

யூ.என்.ஐ.சீ.எப் பேச்சாளரான கோடன் வைஸ் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திலிருந்து பின்வருமாறு எச்சரித்தார்: "நாம் நடப்பவை என்ன என்பதையிட்டு மிக மிக குறுகிய சித்திரத்தையே கொண்டுள்ளதோடு எங்களுடைய தகவல் வழிகள் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பெண்களும் பிள்ளைகளும் உணவு, வைத்திய வசதியின்றியும் தகுந்த ஆடைகளின்றியும் அலைந்து திரிகின்றார்கள். தெருவில் பெண்கள் பிரசவித்து மரணிக்கிறார்கள். புதிதாகப் பிறந்த சிசுக்களை உறவினர்கள் எடுத்துச் செல்கின்றார்கள். பிள்ளைகள் பலவீனமடைந்தும் நோயுற்றும் கந்தல் உடைகளுடனும் பட்டினியில் வாடுகின்றனர்."

உதவி நிறுவனங்கள் (Aid agencies) பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்குமான எல்லையில் வெள்ளமாக வரவிருக்கும் அகதிகளை எதிர்பார்த்து உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை சேகரித்து வருகின்றன. மாசுபடிந்த ஆப்கானிஸ்தானின் அகதி முகாம் வாழ்வு மிகவும் அவலமானாதாக உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானுக்குள்ளேயே நாட்டின் இருபது மில்லியன் மக்கள் பட்டினி, நோய் என்பவற்றை எதிர்கொண்டுள்ளனர். உதவி நிறுவனங்கள்-பெண்கள் பிள்ளைகளை கொண்ட ஏறத்தாள 7.5 மில்லியன் மக்கள் சவாலை எதிர்கொண்டுள்ளதாக எச்சரிக்கின்றன.

அன்மையில் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் "நான்கு கோணங்கள்" எனும் நிகழ்கால சம்பவங்கள் பற்றிய நிகழ்ச்சி, ஆப்கானிஸ்தான் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் தொடர்ந்தும் தங்களுக்கான உணவை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு பேட்டி வழங்கிய பாகிஸ்தானுக்குள் புதிதாக நுழைந்துள்ள அகதிகள், நாட்டின் உள்நாட்டுப் போரையும் மூன்றாண்டு கால வரட்சியையும் சுட்டிக் காட்டினர். முதலாவதாக தெளிவுபடுத்திய ஒருவர், போருக்கு மத்தியிலும் தங்கள் வாழ்வுக்கும் மீளமைப்புக்கும் அவசியமான வளங்களைக் கொண்டிருந்ததாகவும் "இப்போது" "எம்மிடம் ஒன்றுமே இல்லை" எனவும் குறிப்பிட்டார். இன்னுமொருவர் அக்குழுவிற்கு தண்ணீர் கூட இல்லாமல் ஜீவிக்க முடியாதுள்ளதென தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அகதி முகாம்களின் நிலைமை பயங்கரமானதாக உள்ளது. இவ்வாண்டின் முற்பகுதியில், ஹேரட் நகருக்கு அருகாமையில் உள்ள அகதி முகாம் ஒன்றில் கிட்டத்தட்ட 500 பேர் இறந்துபோனதாக உதவி நிறுவனங்கள் அறிவித்திருந்தன. இவர்களில் அநேகமானோர் போதியளவு உடை, இருப்பிடம், உணவு, மருந்து இன்றி கடுங்குளிரால் பாதிப்புற்ற சிறுவர்களாகும்.

தற்போது எதிர்க் கட்சியான வடக்கு கூட்டணியின் நிர்வாகத்தின் கீழுள்ள பகுதிகளுக்கு தப்பியோடிய அகதிகளுக்கும் எந்த விமோசனமும் கிடையாது. எதிரணியின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சிட் பள்ளத்தாக்கில் உள்ள அனோபா முகாமில் 6000 அகதிகள் பழைய நிலைமையிலேயே வாழ்கின்றார்கள். அதன் முகாமையாளர் மொகமட் டாரிக், தம்மிடம் "800 பேருக்கு மட்டுமே கூடார வசதிகள் உள்ளதாகவும் ஏனையோர் இடம்பெயர் கூடாரங்களில் வரப்போகும் குளிர் காலத்தையும் எதிர்கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், உணவுப் பற்றாக்குறை அவர்களை கொட்டைகள், விதைகள், பழங்கள் என்பவற்றை உட்கொள்ளத் தள்ளியுள்ளதால் தோல்வியாதிகளாலும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றார்.

அமெரிக்கா இன்னமும் முதல் குண்டை வீசாவிட்டாலும் அதன் போர் முயற்சியின் முதல் பலிகடாவாக ஆப்கானிஸ்தானுக்கான உதவி திட்டங்கள் இருந்து கொண்டுள்ளன. நியூயோக்கும் வாஷிங்டனும் தாக்கப்பட்ட அடுத்தநாள் செப்டம்பர் 12ம் திகதி, ஐ.நா. உலக உணவுத் திட்டம் (WFP) நாட்டுக்குள் உணவு விநியோகத்தை நிறுத்தி விட்டதாக அறிவித்தது -ஒரு மதிப்பீட்டனிபடி நான்கு மில்லியன் ஆப்கானிஸ்தானியர்கள் அவர்களின் அடிப்படை உணவுத் திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுபவர்கள்.

இத்திட்டத்தின் பேச்சாளரான காலெட் மன்சூர் (Khaled Mansour) கிராமப்புறங்களுக்கு விநியோகப் பொருட்களைக் கொண்டு செல்லப் போதியளவு போக்குவரத்து வசதியில்லை எனக் குறிப்பிட்ட அதே வேளை இது ஒரு அரசியல் தீர்மானம் என்பதையும் தெளிவுபடுத்தினார் -அது இப்பொருட்கள் தலிபான்களுக்கோ அல்லது அதன் இராணுவத்துக்கோ கிடைத்து விடக் கூடாதென்பதை உறுதிப்படுத்திக்கொள்வதை குறிக்கோளாகக் கொண்டதாகும். "உணவுகள் திசை திருப்பப்படுவதை எம்மால் அனுமதிக்க முடியாது எனவும் பொருட்கள் யாருக்குத் தேவையோ அந்த மக்களே அதைப் பெற்றுக்கொள்கின்றார்கள் என்பதையும் உறுதிப்படுத்த தாம் கடமைப்பட்டுள்ளதாகவும்" அவர் தெரிவித்தார். அரச சார்பற்ற அமைப்புகள் எதிர்த்த போதிலும், டபிள்யூ.எப்.பீ. உணவு விநியோகத்தை மீள ஆரம்பிக்கவில்லை.

ஆப்கானிஸ்தான் நகர்களுக்குள் இன்னும் மூன்று வாரங்களுக்கு மட்டுமே டபிள்யூ.எப்.பீ. உணவு இருப்பில் உள்ளது. மன்சூர் விளைவுகளை நன்கு புரிந்து கொண்டுள்ளார். "நாம் பஞ்சத்துக்கு முந்திய நிலைமைகளில் இருக்கின்றோம். நீண்ட காலத்துக்கு தாக்குப்பிடிக்கும் நிலையில் ஆப்கானிஸ்தான் இல்லை. மக்கள் பட்டினியால் வாடுவார்கள் என நான் அஞ்சுகிறேன்," என அவர் குறிப்பிட்டார். "கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.... சென்றமுறை நான் அங்கிருந்தேன். நான் மக்கள் வெட்டுக்கிளிகளையும் மிருகத் தீவனங்களையும் புற்களையும் சாப்பிடுவதைக் கண்டேன். மக்கள் கிடைக்கக் கூடிய எதனையாவது கொண்டு ஜீவிக்க முயல்கின்றார்கள். முன்று ஆண்டுகளுக்கு முந்திய வரட்சியின் காரணமாக மக்கள் தமது சேமிப்பை எல்லாம் இழந்து விட்டனர். ஓராண்டுக்குப் பின்னர் தமது வீடுகளையும் விற்றுத் தள்ளினர்."

தலிபான் தன்பங்குக்கு அனைத்து சர்வதேச உதவி பனியாளர்களையும் அவர்களது பாதுகாப்புக்கு தாம் உத்தரவாதம் வழங்க முடியாதெனக் கூறி நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ள அதேவேளை, எஞ்சியுள்ள தேசிய உதவிப் பணியாளர்களுக்கும் தொலைத் தொடர்பு உபகரணங்களை உபயோகிப்பதை தடை செய்துள்ளது. கடந்த திங்கட் கிழமை நாட்டினுள் ஐ.நா. தொலைத்தொடர்பு இணைப்பை இழுத்து மூடி, கந்தகாரில் உள்ள ஐ.நா. அலுவலகத்தையும் கைப்பற்றியது. 1400 தொன் கொண்ட உலக உணவுத் திட்டத்தின் உணவு இருப்பையும் கைப்பற்றியது. ஐ.நா. பேச்சாளரான ஸ்ரெபான் பன்டரின் (Stephanie Bunder) கருத்துப்படி: "ஒரு சில நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் அநேகமான ஐ.நா. நடவடிக்கைகள் சீர்குலைந்து அல்லது நிறுத்தப்பட்டுள்ளன."

ஒரு பின்தங்கிய வறுமை நிறைந்த நாடு

பெரும் வல்லரசு போட்டியாளர்கள் முக்கிய மத்திய ஆசிய பிராந்தியம் மீதான கட்டுப்பாட்டுக்கு நீண்டகாலமாக முயற்சித்து வந்த போதிலும், ஆப்கானிஸ்தான் உலகில் உள்ள மிகவும் பின்தங்கிய வறிய நாடாகும். அதன் சமூக பொருளாதார சீரழிவு 1979ல் சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு தொடக்கம் இடம்பெற்ற நீண்ட யுத்தத்துடன் இணைந்து கொண்டுள்ளது -முதலாவது சோவியத் யூனியனின் பின்னணியினாலான அரசாங்கத்துக்கும் அமெரிக்காவும் பாகிஸ்தானும் நிதி வழங்கிய இஸ்லாமிய முஜாஹிதீன் ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலானது. அடுத்தது 1992ல் காபூல் அரசாங்கம் கவிழ்ந்ததை தொடர்ந்து சாதி, மொழி மற்றும் மத அடிப்படையிலான பலவித குழுக்களுக்கிடையிலானது.

1996ல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளான தலிபான், அமெரிக்காவின் மறைமுக ஆதரவுடனும் பாகிஸ்தானின் பக்கபலத்துடனும் காபூலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு தற்போது நாட்டின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். ரஷ்யா, ஈரான், மற்றும் இந்தியாவின் ஆதரவை பெறும் வடக்கு கூட்டணி உட்பட்ட எதிர்கட்சிகளின் அவநம்பிக்கையான கூட்டணி, மத்திய ஆசிய நாடுகளான தஜிகிஸ்தான், டேக்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள, நாட்டின் 5 சதவீத பரப்பையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

ஆப்கானிஸ்தான் பல தசாப்தங்களாக பொருளாதார உதவிகளை பெரிதும் நம்பியிருந்தது. 1980 பதுகளின் கடைப்பகுதியில் சோவியத் குடியரசிலிருந்து பெற்ற பங்களிப்புகள் நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் 40 சதவீதத்தை இட்டு நிரப்பியது. 1986-7 களில் வெளிநாட்டு வர்த்தக மாற்றங்களுக்கு கிழக்கு பகுதி நாடுகள் 70 சதவீதம் உதவின. ஆனால் இந்தத் திட்டங்கள் 1991ல் சோவியத் யூனியனின் கலைக்கப்பட்டதை அடுத்து சீக்கிரமாக வீழ்ச்சியடைந்தன. அண்மைக்காலங்களில் தலிபானுக்கெதிராக அமெரிக்க நிர்ப்பந்தத்தினாலான பொருளதாரத் தடைகளின் தாக்கங்களால் ஐ.நா. மற்றும் ஐரோப்பிய யூனியனிடமிருந்தும் கிடைத்த நிதி உதவிகள் கணிசமானளவு வீழ்ச்சியுற்றன.

சோவியத் ஆக்கிரமிப்புக்கு முன்னரே நாட்டின் 12 சதவீதமான விவசாய நிலங்களில் 67 சதவீத ஆப்கானிய தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். தொடர்ச்சியான போரினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. 1990களின் முதல் அரைப்பகுதியில் பாரம்பரிய விவசாய பொருட்களான கோதுமை, பழவகை, மற்றும் விதை உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. அத்துடன் அபின் உற்பத்தி நிலச் செய்கையில் 50 சதவீத அதிகரிப்பு காணப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் பாரம்பரிய பொருளாதாரம் போதை மருந்து, கடத்தல் என்பவற்றால் பதிலீடு செய்யப்படுகின்றது. 1999ல் இந்நாடு உலகில் பெரும் அபின் உற்பத்தியாளராக இருந்ததோடு இந்த அபின் வர்த்தகத்தில் ஒரு மில்லியன் ஆப்கானியர்கள் ஈடுபட்டிருந்தனர். இவ்வாண்டின் ஆரம்பத்தில் கடுமையான ஐ.நா. பொருளாதாரத் தடைகளை தவிர்க்கும் முயற்சியாக அபின் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த தலிபான் ஆட்சியும் அபின் செய்கைக்கு தடை விதித்தது.

இரு தசாப்தங்களுக்கு மேலாக ஆப்கானிஸ்தானின் கைத்தொழில் பெரும் அழிவைக் கண்டுள்ளது. சோவியத் ஆக்கிரமிப்புக்கு முன்னர் 220 அரசாங்கத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகள் இருந்தன. இங்கு ஆப்கானிஸ்தான் தொழிற் படையில் 11 சதவீதமானவர்கள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். 1999 அளவில் எஞ்சியிருந்த நான்கு சீமெந்து தொழிற்சாலைகளில் ஒரே ஒரு தொழிற்சாலையும் ஆடை தொழிற்சாலையில் 10 சதவீதமானவையும் மட்டுமே இயங்கி வந்தன. நாட்டின் வருடாந்த மொத்த தேசிய உற்பத்தி 800 அமெரிக்க டொலர்கள் மட்டுமே ஆகும்.

உள்நாட்டுப் போருக்கு முன்பே பெரிதும் சீர்குலைந்திருந்த அடிப்படை சுகாதார சேவைகள் தற்போது கையளவில் மட்டுமே எஞ்சியுள்ளன. 7357 பேர்களுக்கு ஒரே ஒரு வைத்தியர் மட்டுமே உள்ளார். உலகத்திலேயே மிகக் குறைந்தளவு ஆயுட்காலத்தைக் கொண்ட -ஆண்களுக்கு 46 வயது ஆயுட்காலமும் பெண்களுக்கு 45 வயது ஆயுட்காலத்தையும் மிக உயர்ந்த சிசு மரண வீதத்தையும் கொண்ட ஒரு நாடாக இது உள்ளது. பிறக்கும் 1000 குழந்தைகளில் 250 பேர் இறப்புக்குள்ளாகின்றனர். அயல் நாடான பாகிஸ்தானிலும் பார்க்க 3 மடங்கும் பிரித்தானியாவுடன் ஒப்பிடுகையில் 100 மடங்கும் அதிகமான சிசு மரண வீதம் கொண்ட நாடாகவும் இது விளங்குகின்றது.

அங்கு தொற்று நோய் பரவும் ஆபத்தும் இருந்துகொண்டுள்ளது. கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation) பிரதிநிதி ஹிலாரி பொவர் இது வரை 5000 கொலரா நோயாளர்கள் இருப்பதாகவும் 100 பேர் கொலராவால் இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். "தற்போதைய தகவல் பெறமுடியாத சூழ்நிலையில் குறிப்பிடக் கூடிய ஒரே ஒரு விடயம் இது மாத்திரமாகும்."

ஆப்கானிஸ்தான் உலகில் கல்வியறிவற்ற முதியோர்களை அதிகளவில் கொண்ட நாடாகும் -53 வீதம் ஆண்களும் 85 வீதம் பெண்களும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் தொழில் செய்வதை தடுத்தல், எட்டு வயதிற்கு மேற்பட்ட பெண்பிள்ளைகளை பாடசாலை செல்லவிடாது தடுப்பது உட்பட்ட பெண்களுக்கு எதிரான தலிபானின் பிற்போக்கு சமூக நடவடிக்கைகள் பெரும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு இட்டுச்சென்றுள்ளன. இதற்கும் மேலாக நீண்டகால போர் காரணமாக ஏறத்தாள 2000 பாடசாலை கட்டிடங்கள் அழிந்துபோயுள்ளன. 600 ஆரம்ப இடைத்தர பாடசாலைகள் மட்டுமே தற்போது இயங்கிவருகின்றன.

ஆப்கானிஸ்தானின் உள்ளமைப்பு அழிவுக்குள்ளாகிக் கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் இதுவரை தமது அகதிமுகாம்களில் உள்ள இரண்டு மில்லியன் அகதிகளில் சிலரை பலாத்காரமாக மீளக் குடியமர அனுப்பியுள்ளது. இவ்வாறான பெருமளவிலான மீள்குடியேற்றங்கள் அகதிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக யூ.என்.எச்.சி.ஆர் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். குறைந்த பட்சம் ஒரு பாகிஸ்தான் பொலிஸ் ஆப்கானிஸ்தான் அகதி ஒருவரை தலையில் போத்தலால் அடித்து பொலிஸ் காரில் இருந்து அவரை தள்ளிவிட்டதால் செத்துப்போனதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் அகதிகளின் இருப்பிடமான நசீர் பாக் முகாமின் தலைவரான முகமட் சாகின் ஜபார்கிலின் கூற்றுப்படி; அங்குள்ளவர்களில் 80 சதவீதமானவர்கள் பாதுகாப்பின்மை காரணமாக ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. 1980ல் பாகிஸ்தான் நசீர்பாக் அகதி முகாமை "காட்சியறை" முகாமொன்றாக காட்டியது என ஜபார்கில் குறிப்பிட்டார். "நாம் சோவியத்துக்களோடு போராடுகையில் ஜனாதிபதி காட்டர் இங்கு வந்தார், உப ஜனாதிபதி புஷ்சும் இங்கு வந்தார். இங்கிருந்த அகதிகள் "உலக வீரர்களாக" அழைக்கப்பட்டனர். ஆனால் அந்தக் காலம் இப்போது போய்விட்டது. தற்போது அரசாங்கம் எம்மை வெளியேற்றுவதையே விரும்புகிறது.

அமெரிக்காவின் யுத்தத் தயாரிப்புகளுக்கு முண்டு கொடுக்கும் மேற்குலக சக்திகள், ஒரு சில ஆப்கானிஸ்தான் அகதிகளை தவிர, நாட்டினுள் சிக்கிக் கொண்டுள்ள அல்லது உலகின் வறிய நாடுகளின் வரிசையில் உள்ள பாகிஸ்தானிலும் ஈரானிலும் பரவிக் கிடக்கும் முகாம்களில் சிக்குண்டுள்ள பெரும்பாலான அகதிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.

சகல தொடர்பு சாதனங்களும் ஆப்கானில் யுத்தம் ஒன்றுக்கான அமெரிக்க நிர்வாகத்தின் தயாரிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. ஆப்கானிஸ்தான் மக்களின் நிலைமை பற்றி மிகக் குறைந்த கவனமே செலுத்தப்படுகின்றது. 1999ல் யூகோஸ்லாவியாவுக்கு எதிரான நேட்டோ குண்டு வீச்சின்போது, அதனை நியாயப்படுத்துவதற்காக கொசோவா அகதிகள் பற்றிய நெஞ்சை உறுத்தும் புகைப்படங்கள் சிடுமூஞ்சித்தனமாக பயன்படுத்தப்பட்ட போதிலும் யுத்தத்துக்கான மனிதாபிமான போர்வை, சேர்பிய பொது மக்களுக்கு எதிரான அக்கிரமங்களில் இருந்து அல்லது அதன் உட்கட்மைப்பின் பெரும்பகுதியை தரைமட்டமாக்குவதில் இருந்து அமெரிக்காவை அதன் கூட்டாளிகளையும் தடுப்பதற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் இது உலகின் மிகவும் பலவீனமுற்ற ஒரு நாட்டுக்கு எதிரான அமெரிக்காவின் போர் வெறியை எடுத்துக்காட்டும் ஓர் சமிக்கையாகும். வாஷிங்டன் லண்டன் வேறு நாடுகளிலுள்ள பெருந்தலைகள் இந்த மனிதாபிமான விடயம் குறித்து வாயளவிலேனும் கூட எந்த ஒரு சேவையையுமே செய்ய வில்லை.