World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : துருக்கி

Turkey: "War against terrorism" emboldens fascists and the military

துருக்கி: ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்'' பாசிசத்தையும் இராணுவத்தையும் ஊக்குவிக்கின்றது

By Justus Leicht
29 September 2001

Use this version to print

நியூயோர்க், வாஷிங்டன் மீது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக துருக்கி மக்கள் தமது உண்மையான ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கையில், துருக்கி அரசாங்கம் தனது மகிழ்ச்சியையும், சிடுமூஞ்சித்தனத்தையும் மூடிமறைக்கின்றது. ''ஜனநாயக சீர்திருத்தவாதிகள்'' என பரவலாக கூறப்படும் துருக்கி பிரதமர் Ahmet Necdet Sezer, மற்றும் அவருடைய சமூக ஜனநாயக பிரதமரான Bulent Ecevit உம், அனைத்து செய்தித் துறைகளுக்கும் விடுத்த செய்தியில், ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்'' மற்றும் அதற்கு எதிரான தாக்குதல் என்பவை குர்திஸ்தான் பிரிவினைவாதத்திற்கு எதிராக அங்காராவால் மேற்கொள்ளப்படும் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதாக மிகவும் உற்சாகமாக கூறினர். எதிர்காலத்தில் உயர்ந்த ஜனநாயகம், மனித நேயம் போன்றவற்றை கவனத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு துருக்கி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்படாது என அவர்கள் கருதுகிறார்கள்.

ANAP எனும் பழமைவாத (தாய் நாட்டுக்கான கட்சி) கட்சியின் பிரதி ஜனாதிபதியான Mesut Yilmaz, அவர் அண்மையில் தனது பதவியை அரசாங்கத்தில் ஒரு ''லிபரல்'' அரசியல் வாதியாக உயர்த்திக் கொண்டு, பலம்வாய்ந்த இராணுவ அதிகாரிகளுடன் பிரச்சனைப்பட்டுக் கொண்டார். அவர் ''துருக்கி, பயங்கரவாதத்திற்கு எதிரான உண்மையான போராட்டத்தை செய்கின்றது என்பதை இந்த உலகம் நம்ப வேண்டும். அமெரிக்காவில் நடைபெற்ற இந்த பயங்கரவாதத் தாக்குதலானது உலகம் உண்மையை உணர்ந்து கொள்ளவதற்கான நல்லதொரு வாய்ப்பாகும்'' எனத் தெரிவித்தார்.

கடந்த நிகழ்வுகளை மீட்டுப் பார்த்தால், 15 வருடத்தில் தென்- கிழக்கு மாகாணத்தில் குர்திஸ்தான் தேசியவாதிகளுக்கு- PKK (Workers Party of Kurdistan) எதிராக துருக்கி அரசால் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் 30.000 கொரிலாக்களும், இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். அத்துடன் பல ஆயிரக்கணக்கான குர்திஸ்தான் அப்பாவி மக்களான பெண்கள், குழந்தைகள் மேலும் வயோதிபர் என பாதுகாப்பு படைகளால் கொலைக் கூடங்களில் கொன்றொழிக்கப்பட்டனர். அத்துடன் பெருவாரியான மக்கள் அரசின் சித்திரவதை முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கே நூற்றுக் கணக்கானோர் தாங்கொணா கொடிய சித்திரவதைகளுக்கு ஆளாகினர். அதைவிடவும் ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளாத ஆயிரக் கணக்கானோர் பல வருடங்களாக, யுகங்களாக கடும் சிறையில், மனிதாபிமானமற்ற நிலையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இத்துடன் 3000 க்கும் அதிகமான கிராமங்கள் இராணுவத்தால் எரிக்கப்பட்டுள்ளன.

இரண்டு சகாப்தங்களாக அரசின் யுத்தத்தால் நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியில் பேச்சுரிமை, பத்திரிகைச் சுதந்திரம், பகிரங்கமாக கூட்டம் கூடுவது போன்ற அனைத்து உரிமைகளும் ஒடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு படையினரால் நாளாந்தம் சிறைப் பிடிக்கப் படுவதும், வீடுகளுக்குள் புகுந்து தேடுதலும் நடைபெறுகின்றன.

அங்காரா, ஐரோப்பிய நாடுகளிடம் PKK வின் முக்கிய தலைவர்கள் உட்பட மாவோவாத DHKP-C (Revolutionary People's Liberation Party and Front) ஐ சேர்ந்த தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய குழுக்களையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. துருக்கி, மனித நேயம் மற்றும் சிறுபான்மையினருக்கான பாதுகாப்புக்கள் போன்ற எதையும் மேம்படுத்த முதலே ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இணைந்து கொள்வதற்கு பிரயாசைப்படுகிறது. Turkish Daily News எனும் ஆங்கிலப் பத்திரிகை செப்டம்பர் 17 ல், பெயர் வெளியிடப்படாத ''ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் இராஜதந்திரிகள்'' துருக்கியின் கோரிக்கைக்கு இசைந்துள்ளதற்கான செய்தியை வெளியிட்டது.

Reuters செய்தி ஸ்தாபனத்துக்கு துருக்கியின் மனித உரிமைச் சங்கத்தை சேர்ந்த Yavuz Önen ஆல் கொடுக்கப்பட்ட பேட்டியில் அவர் எச்சரித்ததாவது, ''பயங்கரவாதத்துக்கு எதிரான சண்டை என்பது இன்று ஒரு உலக அரங்கம் முழுவதிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவமாகி உள்ளது. அதாவது நாங்கள் பயங்கரவாதம் (ஆபத்து) எல்லாவற்றையும் விட மிகவும் முன்னணியில் இருப்பதாக கூறவில்லையா? நீங்கள் சுதந்திரத்தை பரவலாக்க விரும்பினால், நீங்கள் அபாயகரமான சூழலை உருவாக்குகின்றீர்கள்'' என்ற விவாதத்தை இராணுவம் பயன்படுத்தும்.

இதுவரையிலும் துருக்கியின் இராணுவம் பகிரங்கமான கருத்துத்தெரிப்பதை தவிர்த்து வந்துள்ளது. அவர்களுடைய நிலைப்பாடு MHP (Nationalist Movement Party) தேசிய இயக்க கட்சி (அல்லது இதை சாம்பல் நிற ஒநாய் என்றும் கூறலாம்) ஆல் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது. அவர்கள் பாதுகாப்பு அமைச்சு போன்ற மற்றும் ஏனைய பதவிகளையும் தற்போதைய அரசாங்கத்தில் வைத்துள்ளனர். அவர்கள் துருக்கி, ஐரோப்பிய ஒன்றியத்துள் இணைவதற்காக மாற்றப்படவேண்டிய ஒரு சில அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களுக்கு தடையாக உள்ளனர். அவ்வாறு திருத்தப்படவேண்டிய சட்டங்கள் மரண தண்டனையை இல்லாதொழிப்பது, குர்திஸ்தான் மொழியை கல்வியிலும், செய்தித் துறையிலும் அங்கீகரிப்பது, மற்றும் சுதந்திரமான எண்ணங்களை அனுமதிப்பது போன்றவையாகும்.

MHP மரண தண்டனையை, ''பயங்கரவாத நடவடிக்கைகள்'' (பயங்கரவாத சட்டங்கள் மட்டும் அல்ல) என்பதினூடு அமுல்படுத்த வேண்டும் என்பதன் நோக்கம் PKK வின் தலைவரான Abdullah Öcalan க்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகவாகும்.

குர்திஸ்தான் மொழி மீதான கட்டுப்பாடு மிகச்சிறிய அளவிலேதான் மாற்றமடைந்துள்ளது. பத்திரிகைச் சுதந்திரம், மாற்றுக் கருத்துச் சுதந்திரம் போன்றவற்றின் மீதான கட்டுப்பாடு மிகவும் மோசமாக இருக்கின்றது. மாற்றங்கள் சம்பந்தமாக அவற்றிற்கு பொறுப்பான கமிட்டி ''அரசாங்கத்தின் அடிப்படைக்கும், பொதுஜன ஒழுங்கு, பிராந்தியங்கள் மற்றும் தேசிய ஒழுமைப்பாட்டுக்கும், மேலும் தேசிய பாதுகாப்புக்கும்'' எதிரான வானொலி, தொலைக்காட்சி போன்றவை தடைசெய்யப்பட்டிருக்கும் என அறிவித்து உள்ளது.

அமெரிக்காவின் கூட்டாளி

துருக்கி அரசாங்கம் இந்த யுத்த நடவடிக்கைகளில் முற்றாகவே அமெரிக்காவின் பின்னே நின்று கொண்டு, துருக்கி வாஷிங்டனின் ஒரு மிக முக்கியமான கூட்டாளி என்கிறது. அங்காரா மேலும் NATO உடன்படிக்கையின் ஐந்தாவது சரத்தை இதற்காக புகழ்ந்துரைக்கிறது. அதாவது அமெரிக்காவுடனான தமது கூட்டை காட்டுவதற்கான இச்சரத்து 1998 ல் துருக்கியால் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் விளைவால் உருவாக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

துருக்கியை சேர்ந்த தென்கிழக்கு பகுதி மக்களின் பயத்திற்கும் வெறுப்புக்கும் உள்ளான துருக்கியின் விசேடபிரிவினர் தமது கெரில்லா அனுபவத்தினை தற்போது ஆப்கானிஸ்தானின் எதிர்க்குழுவான வடக்கு கூட்டுக்கு பயிற்சியளிக்கு இறங்கிவிட்டனர். துருக்கி தனது பிராந்தியத்துக்கு மேலாக பறக்கும் உரிமையையும் அமெரிக்காவுக்கும், அத்துடன் Incirlik எனும் விமானத் தளத்தையும், (இது ஈராக்குக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்க, பிரித்தானிய போர் விமானங்கள் வந்திறங்கிய இடமும், மேலும் புதிய யுத்த நடவடிக்கைகளுக்கென வரையறுக்கப்பட்ட ஒரு இடமுமாகும்.) கொடுத்து உதவியுள்ளது. அதேசமயம் துருக்கி அரசாங்கம், குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள Malatya, Diyarbakir போன்ற இராணுவ விமானத் தளங்களை அமெரிக்கா பாவிப்பதை நிராகரிக்கின்றபோதும் இது தொடர்பான வதந்திகள் தொடர்ச்சியாக இருக்கிறன.

துருக்கியின் Daily News பத்திரிகையைச் சேர்ந்த மிகவும் ஒரு பிரபல்யமான எழுத்தாளரான Mehmet Ali Birand செப்டம்பர் 22 ல், ''நீங்கள் ஈராக்கைப் பற்றி குறிப்பிடுகையில், முதலில் நினைவிற்கு வருவது துருக்கிதான். ஈராக்குக்கு எதிரான ஒவ்வொரு தாக்குதலிலும் துருக்கியின் ஆதரவு நடவடிக்கை அவர்களுக்கு தேவைப்பட்டது அல்லது பிரச்சார வகையான ஆதரவாவது தேவைப்பட்டது.'' என எழுதினார். அவர் மேலும் ''சிரியாவால் கட்டுப்படுத்தப்படும் லெபனானில் உள்ள Bekaa மலைப்பகுதி கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அங்கே இப்பொழுதும் இராணுவ குழுக்கள் பயிற்சி எடுத்தபடி உள்ளனர். இக் குழுக்களுக்கான பாதுகாப்பை சிரியா வழங்குவதாகவும், அதற்கு எதிராக அமெரிக்கா அவர்களை வெளியேறி விடும்படி எச்சரிக்கை விடுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புஷ் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒரு உத்தியோகஸ்தர், Bekaa மலைப்பகுதியைப் பற்றி ஏனையோரை விடவும் துருக்கிக்கு மிகவும் நன்றாகவே தெரியும் எனவும், PKK அங்கே பல ஆண்டுகளாக பயிற்சி எடுத்து, அங்கிருந்து அவர்கள் வளர்த்தெடுக்கப்பட்டனர். அப்பிராந்தியத்தை விட்டு அந்த பயங்கரவாதிகளை வெளியேற்றுவது மிகவும் முக்கியம் என தெரிவித்ததாக'' குறிப்பிட்டார்.

அரச அடக்குமுறைக்கான திட்டம்

உண்மையில் அரச அடக்குமுறைக்கான திட்டம், இது எவ்வகையிலும் அதில் சம்பந்தப்பட்ட வர்களுக்காகவோ அல்லது இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுக்கான ஒரு அச்சுறுத்தலாகவோ இருக்கப் போவதில்லை, மாறாக இது துருக்கி தொழிலாள வர்க்கத்திற்கு எதிரானது ஆகும்.

சில பயங்கரவாத நடவடிக்கைகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் துருக்கியில் கடந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்டன. விசேடமாக 1991 லும் 1995 லும் Hisbollah இயக்கம் குர்திஸ்தான் பகுதி மக்களையும், அவற்றில் சிறப்பாக PKK வின் உத்தியோக பூர்வமான, அல்லது பகுதி உத்தியோகபூர்வமான வட்டாரத்துக்குள்ளேயும் பயங்கரவாத நடவடிக்கைகளையும், கொலைகார பிரச்சாரத்தையும் மேற்கொண்டது. ஒரு சில தகவல்களின் பிரகாரம், இடதுசாரி பிரிவுகள் அல்லது குர்திஸ்தான் பத்திரிகையாளர்களால் கொடுக்கப்பட்ட செய்திகள் மட்டுமன்றி துருக்கி பாராளுமன்றத்தைச் சேர்ந்த விசாரணைக் குழு சமர்பித்த சான்றுகளின் பிரகாரம் Hisbollah வை கட்டியமைத்தது, அதற்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுத்தது துருக்கியின் ஒரு பகுதி இராணுவமாகும். இப்போது PKK சரணடைந்தபின்னர் Hisbollah திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.

துருக்கியின் தேசியவாத பத்திரிகைகள் ஒரு மிகைப்படுத்திய வகையில் Osama bin Laden, Abdullah Öcalan போன்றவர்களின் நடவடிக்கைகளை ஒரேமாதிரியாக அடையாளம் காண்கின்றன. துருக்கி அரசு, PKK வுக்கும், குர்திஸ்தான் தேசியவாதத்துக்கும் பயப்படுவதற்கு எதுவுமில்லை என்று கூறுவதில் உண்மை இருக்கிறது. PKK நியூயோர்க், வாஷிங்டனில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை மிகவும் கடுமையாகத் கண்டித்ததுடன், ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு எழுச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு மாறாக அமெரிக்காவுடனும், துருக்கியுடனும் இணைந்து இயங்க ஒத்துழைக்குமாறு இடைவிடாது கேட்டுக்கொள்கிறது.

மாவோவாத DHKC யும் துருக்கியின் அரசகட்டுமானங்களுக்கு உண்மையான அச்சுறுத்தலை கொடுக்காது. இந்த இயக்கம் பெரிய நகரங்களிலுள்ள பின்தங்கிய பகுதியினரிடையேயும், பல்கலைக் கழகங்களிலும் ஒரு கணிசமான செல்வாக்கை கொண்டுள்ளது. இது துருக்கி தேசியவாதத்துடன் தன்னை இணைத்துக்கொண்டும், ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு கோசங்களை சில படுபிற்போக்கான ஸ்ராலினிச, தலைமை வழிபாட்டினையும் சேர்ந்து முழங்குகின்றனர். இந்த இயக்கம் அண்மையில், இளவேனில் காலத்திலும், செப்டம்பரிலும் இரு தற்கொலை தாக்குதல்களை செய்ததினூடு கவனத்திற்கு உரியதாகிற்று. மேலும் இவை அமெரிக்காவுக்கு மீதான தாக்குதலுகள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இடம் பெற்றிருந்தன.

இத் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் சிறைச்சாலையில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட மனித நேயமற்ற செயல்கள், மேலும் சிறைக்கூடங்களில் தனிமைப்படுத்துவதற்காக எதிராக போராடி சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அவர்களுடைய தோழர்களுக்காக ஒரு பதில் தாக்குதலாக நடாத்தப்பட்டது எனக் கூறப்பட்டது. கடந்த டிசம்பர் மாதத்தில் சிறைச் சாலையில் ஏற்பட்ட கைகலப்பில் பாதுகாவல் படையினரால் 20 கைதிகள் கொலை செய்யப்பட்டனர். மேலும் 35 கைதிகள் தாமாகவே உண்ணாவிரதமிருந்து இறந்தனர்.

அரசின் கண்களில் ''அரசியல் இஸ்லாம்'' என்று கூறப்படுவதே முக்கிய பிரச்சனையாகவுள்ளது. துருக்கியில் இருக்கும் அனைத்து வலதுசாரி, பழமைவாதக் கட்சிகளும் சமயவாத கருத்துக்களையும் மற்றும் உணர்ச்சி பிரவாகங்களையும் பரப்பிக் கொண்டிருக்கையில், அவைகளுக்குள் தடை செய்யப்பட்ட இரு கட்சிகளான FP கட்சியின் வழியில் வந்த, முன்னைய ஸ்தான்புல் நகரத்தின் உயர் நகரபிதாவான Tayip Erdogan என்பவரால் வழிநடத்தப்படும் AKP (நீதிக்கும், அபிவிருத்திக்குமான கட்சி), முன்னாள் FP கட்சியின் தலைவரான Recai Kutan ஆல் வழிநடத்தப்படும் SP (சமாதானத்திற்கான கட்சி) போன்றவையை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பிரதானமாக Tayip Erdogan என்பவர் தொடர்பு சாதனங்களால் இம்மாதத்தில் ஒரு முக்கியமானவராக கருதப்பட்டுள்ளார். கருத்துக் கணிப்புகளுக்கு மத்தியில் இவருடைய கட்சி மிகவும் ஒரு வலுவானதாக விளங்குகிறது. அத்துடன் இதுதான் ஒரேயொரு இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியாக இருப்பதுடன், அது துருக்கி பாராளுமன்றத்தில் கலந்து கொள்வதற்கு 10 வீதமான பெறுபேறுகளையும் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்கப்படுகின்றது. அவர் ''Anatolian முதலாளித்துவம்'' என்று கூறப்படும் ஒரு ''இஸ்லாமிய முதலாளித்துவத்தை'' பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் அவர் லிபரல்வாத சுதந்திர சந்தையை இணைத்துக் கொண்ட ஒரு சமூக, தேசியவாத வார்த்தையாலங்களுடன் தன்னை அரசு ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதுடன், அதேசமயம் ஏனைய மதவாத பிரிவினர்களுடன் அணைந்துகொண்டு தன்னை Laicism உடன் அடையாளப்படுத்திக் காட்டுகின்றார். இக்கட்சியின் தலைவர் தன்னை ANAP கட்சியின் இறந்துபோன உயர் அதிகாரியான Turgut Özal யையும், அதேபோன்று ஜேர்மன் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் Helmut Kohl போன்றோரையே மிகவும் முன்மாதிரியான பேர்வழிகளாக கொண்டிருப்பதாக கூறுவதால் ''பயங்கரவாதம்'' பற்றிய விடயத்தில் அதனுடைய தொடர்பை ஏற்றுக்கொள்வது மிகவும் ஒரு கடினமான விடயமே.

''சமூக வெடிப்புக்கான'' ஒரு எச்சரிக்கை

துருக்கி மற்றும் அதனது மேற்கத்தைய சகாக்களின் உண்மையான பயங்கள் இவ்விடயத்தில் வேறு மாதிரியானவை. ஜேர்மன் பத்திரிகையான Süddeutsche Zeitung செப்டம்பர் 17 ல், ''அமெரிக்க எதிர்ப்பு உணர்ச்சிகளையே தீவிரவாத இஸ்லாம் அதிகமாக பரப்புகிறது. (IMF) சர்வதேச நாணய நிதியத்தின் மிகவும் இறுக்கமான விதி முறைகள்தான், யுத்தத்தினால் அவதிப்படும் இந் நாடுகளின் போக்குகளை மோசமாக மாற்றி விட்டிருக்கின்றன.'' என கருத்து வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் 15.7 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவி வழங்கலுக்காக 15 சீர்திருத்த அறிவித்தல்களை முன்வைத்துள்ளது. அவற்றில் 7 ஏற்கனவே நடைமுறைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளன. மேலும் அவற்றில் 6 அறிவித்தல்கள் அமைச்சர்களின் கவுன்சில் அல்லது பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படவுள்ளன.

பெப்ரவரி மாதத்திலிருந்து, முதலீட்டு வங்கி, மத்திய வங்கியின் நிறைவேற்றுக் குழுவால் கைப்பற்றப்பட்டதையடுத்து, அங்கு தனியார்மயமாக்கலை சாத்தியமாக்கியுள்ளதுடன், சமூக வசதிகளுக்கான பட்ஜெட் போன்றவை அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அத்துடன் சீனி, புகையிலை போன்றவற்றிற்கான மானியங்கள் வெட்டப்பட்டுள்ளன. அரச ஒப்பந்தங்கள் தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயான உறவுகளின் அடித்தளத்தில் அல்லாது, செலவின் அளவினை கருத்திற் கொண்டு வழங்கப்படுகின்றது.

தொழிலாளியின் உண்மையான சம்பளம் 50 வீதத்துக்கும் அதிகமாக குறைக்கப்பட்டும், மேலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக 90 $. ஜ பெற்றுக்கொள்ள அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். துருக்கி தொழிற் சங்கங்களின் தாய் அமைப்பான Türk Is ஐ சேர்ந்த ஒரு பேச்சாளர், '' இப்படியான ஒரு வருமானத்தில், சாதாரண வாழ்க்கையைக் கூட இங்கே எவராலும் கொண்டு செல்ல முடியாது.'' எனத் தெரிவித்தார். ஜேர்மன் பத்திரிகையான Frankfurter Rundschau யூலை 13ல், ''விலை ஏற்றம், இது குறைவாக சம்பளம் பெறும் மில்லியன் கணக்கானவர்களை மட்டும் அல்ல சிறிய வர்த்தகர்களையும் கூட மோசமான அளவு பாதித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

ஒரு ஆசிரியருக்கான சம்பளம் 250 மில்லியன் லீரா (424 ஜேர்மன் மார்க்). இச் சம்பளத்தில், ஒரு தனியாள் அதுவும் வீட்டு வாடகை இல்லாதிருந்தால் மட்டுமே ஓரளவுக்கு இது போதுமானதாகும், அல்லது இது ஒரு குடும்பத்தை பாராமரிப்பதற்கு போதுமானதல்ல. எனவே அனேகமான துருக்கி தொழிலாளர்கள் உயிர் வாழ்வதற்கான தமது போராட்டத்தில் இரண்டு அல்லது மூன்று தொழில்களையே செய்கின்றனர். அவ்வாறான வேலைகளும் கூட தற்போதைய நெருக்கடியால், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் 500.000 கணக்கான தொழில்கள் அழித்தொழிக்கப்பட்டு வங்குரோத்து அடைந்திருப்பதால் மிகவும் கடினமாகி உள்ளன.''

அப் பத்திரிகை மேலும் குறிப்பிடுவதாவது, ''மக்களின் விரக்தி ஒர் எல்லையடையலாம் எனவும், இது துருக்கி இராணுவம் நடவடிக்கை எடுக்கவைக்கும் நிலையடைந்துள்ளது. அண்மையில் தேசிய பாதுகாப்பு சபையின் முன்னணி ஜெனரல்களின் கூட்டத்தில் இடம் பெற்ற இரகசிய பேச்சு ஒன்றை இஸ்தான்புல் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. இப் பத்திரிகை மேலும், பெருகிக் கொண்டு போகும் ஏழ்மையானது பாரிய மக்கள் மத்தியில் ஒரு பெரிய ''சமூக கொந்தளிப்பை'' உண்டு பண்ணும் என எச்சரிக்கை செய்திருந்தது. ஸ்தான்புல் பொலிஸ் அறிக்கைகளின் படி, வழிப்பறி கொள்ளைகள் கடந்த மூன்று மாதங்களில் பத்து மடங்காக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கின்றன. மறுபக்கத்தில், இந் நெருக்கடிகள் நடைபெற்றதற்கான அடையாளங்கள் எவற்றையும் உயர் தட்டினரிடையே காண முடியவில்லை.''

அவற்றிலிருந்து இந்நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளது. அரச கணக்கெடுப்பு நிறுவனத்தின் படி, இவ்வருடத்தின் இரண்டாவது கால்பகுதியில், நாட்டின் தேசிய மொத்த உற்பத்தி 11.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. துருக்கியின் பொருளாதார அமைச்சரான Kemal Dervis இவ்வருடத்தில் எதிர்பார்த்தைவிட இது இரண்டு மடங்கு அதிகமானதாகும்.

அபிவிருத்திக்கான தடயங்கள் நேர்மாறாகவே உள்ளன. அமெரிக்காவின் திருப்பி அறவிடும் கொள்கை, அதாவது இதுவரையில் துருக்கியின் சரியாக அறியப்படாத பொருளாதாரப் பெறுபேறுகளால் தேசிய உற்பத்தியில் 10 வீதத்துக்கும் அதிகமான வீழ்ச்சியை இது ஓரே நாளில், செப்டம்பர் 17 ல் ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஸ்தான்புல் பங்குச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக துருக்கியின் நாணயம் மிகக் குறைந்த புள்ளிகளை இவ் வருடத்தில் பெற்றுக் கொண்டுள்ளது. Kemal Dervis யின் உறுதிப்படுத்தும் வேலைத் திட்டங்களான உல்லாசப் பிரயாணம் மற்றும் ஏற்றுமதி போன்றவைகள் மிகவும் நேர் எதிரான விளைவுகளையே தற்போது நடைபெறும் யுத்த தயாரிப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் Kemal Dervis அவருடைய "சீர்திருத்த வேலைத் திட்டத்தை'' எப்படியும் பேணுவதில் உறுதியாக உள்ளார்.

Kemal Dervis வேலைத் திட்டம் நடைமுறைக்கிட்டு அரை ஆண்டுகள் பூர்த்தியாகிய நிலையில், சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் துருக்கி பிரதமர் Ahmet Necdet Sezer ரையும் இராணுவத்தையும் தம்முடன் இணைந்து வேலை செய்யுமாறு வற்புறுத்துகின்றன. இதைப் பற்றி துருக்கியின் செய்தித்துறை பெருமையடித்துக் கொள்கையில், வெளிநாட்டு செய்தித்துறை, ஊழல் மற்றும் அரசின் பொருளாதார ஒட்டுண்ணித்தன்மைக்கு எதிரான ஒரு சுமுகமான வழிமுறை இதுவே என்கிறது. துருக்கியைச் சேர்ந்த Hürriyet எனும் PKK வினுடைய வலதுசாரி பத்திரிகை முதல் கொண்டு பழமைவாத பத்திரிகையான Frankfurter Allgemeine Zeitung, அதேபோன்று பாரம்பரிய லிபரல்வாத பத்திரிகையான Frankfurter Rundschau போன்றவை ஜேர்மனியில் Kemal Dervis ஐ அவரை ''புதுப்பிப்பவர்'', இவர் துருக்கி அரசை ஒரு நவீன ஜனநாயகத்துக்கு இட்டுச் செல்கிறார் என்றெல்லாம் புகழ்கின்றன.

இப்பொழுது இந்த உண்மையான ''சீர்திருத்த வேலைத் திட்டம்'' எதுவென தெளிவாகத் தெரிகிறது. அனைத்துப் பொருளாதார பிரிவுகளின் சீர்குலைவும் மிகவும் தவிர்க்கமுடியாத வகையில் பாரிய ஏழ்மையையே தோற்றுவிக்கும். உத்தியோக பூர்வமான அரசியலால் வழங்கப்படும் ஒரே பதில் என்னவெனில் தொடர்ச்சியாக அதையே செய்! என்பதாகும். ''பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம்'' என அழைக்கப்படுவதில் உண்மையான நடவடிக்கை யாதெனில், உழைக்கும் மக்களுக்கு எதிரான வங்கிகளினதும், நிறுவனங்களினதும் போராட்டத்தில் ஜனநாயக கட்டுப்பாடுகளை விடுவிப்பதில்தான் தங்கியுள்ளது.